Monday, July 5, 2021

14th Ordinary week Tuesday - பொதுக்காலம் 14 வாரம் செவ்வாய்




 பொதுக்காலம் 14 வாரம் செவ்வாய்

 Download pdf 

முதல் வாசகம்

தொடக்க நூலிலிருந்து வாசகம் 32: 22-32

யாக்கோபு எழுந்து, தம் இரு மனைவியரையும் இரு வேலைக்காரிகளையும் புதல்வர் பதினொருவரையும் அழைத்துக் கொண்டு யாபோக்கு ஆற்றின் துறையைக் கடந்தார். அப்படி அவர்களை ஆற்றைக் கடக்கச் செய்தபோது, தமக்கிருந்த அனைத்தையும் அனுப்பி வைத்தார். யாக்கோபு மட்டும் இவ்வாறு தனித்திருக்க, ஓர் ஆடவர் பொழுது விடியுமட்டும் அவரோடு மற்போரிட்டார். யாக்கோபை வெற்றி கொள்ள முடியாது என்று கண்ட அந்த ஆடவர் அவரது தொடைச்சந்தைத் தொட்டார். யாக்கோபு அவரோடு மற்போரிடுகையில் தொடைச்சந்து இடம் விலகியது. அப்பொழுது ஆடவர் ‘என்னைப் போக விடு; பொழுது புலரப்போகிறது’ என, யாக்கோபு, “நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போக விடேன்” என்று மறுமொழி சொன்னார். ஆடவர், “உன் பெயர் என்ன?” என, அவர்: “நான் யாக்கோபு” என்றார். அப்பொழுது அவர், “உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாது, ‘இஸ்ரயேல்’ எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்” என்றார். யாக்கோபு அவரை நோக்கி, “உம் பெயரைச் சொல்லும்” என்றார். அவர், “என் பெயரை நீ கேட்பதேன்?” என்று, அந்த இடத்திலேயே அவருக்கு ஆசி வழங்கினார். அப்பொழுது யாக்கோபு, “நான் கடவுளின் முகத்தை நேரில் கண்டும் உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்று சொல்லி, அந்த இடத்திற்குப் ‘பெனியேல்’ என்று பெயரிட்டார். அவர் பெனியேலுக்கு அப்பால் சென்றவுடன் கதிரவன் தோன்றினான். தொடை விலகியதால் அவரும் நொண்டி நொண்டி நடந்தார். அதன் பொருட்டு, இஸ்ரயேலர் இந்நாள்வரை தொடைச்சந்துச் சதை நாரை உண்பதில்லை. ஏனென்றால், அந்த ஆடவர் யாக்கோபின் தொடைச்சந்துச் சதை நாரைத் தொட்டார்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல்             திபா 17: 1. 2-3. 6-7. 8,15

பல்லவி: நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன். 

1 ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும் வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.

2 உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்; உம் கண்கள் நேரியன காணட்டும்.

3 என் உள்ளத்தை ஆய்ந்தறியும்; இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்; என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்; தீமை எதையும் என்னிடம் காண மாட்டீர்; என் வாய் பிழை செய்யக் கூடாதென உறுதி கொண்டேன்.

6 இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்.

7  உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!

8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.

15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அல்லேலூயா.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 23-27

அக்காலத்தில் இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள். திடீரெனக் கடலில் பெருங் கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக் கொண்டிருந்தார். சீடர்கள் அவரிடம் வந்து, “ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். இயேசு அவர்களை நோக்கி, “நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்து கொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று. மக்கள் எல்லாரும், “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எத்தகையவரோ?” என்று வியந்தனர்.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...