Showing posts with label பொதுக்காலம் 34 வாரம்-B. Show all posts
Showing posts with label பொதுக்காலம் 34 வாரம்-B. Show all posts

Friday, November 25, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (26-11-2022)

 

பொதுக்காலம் 34ஆம் வாரம் - சனி

முதல் வாசகம்

இனி இரவே இராது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது ஒளி வீசுவார்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 22: 1-7

வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆற்றை எனக்குக் காட்டினார். அது பளிங்குபோல் ஒளிர்ந்தது. அது கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிருந்து புறப்பட்டு, நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது. ஆற்றின் இரு மருங்கும் வாழ்வு தரும் மரம் இருந்தது. மாதத்துக்கு ஒரு முறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை கனிகள் தரும். அதன் இலைகள் மக்களினங்களைக் குணப்படுத்தக் கூடியவை. சாபத்துக்கு உள்ளானது எதுவும் நகரில் இராது. கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருக்கும் அரியணை அங்கு இருக்கும். கடவுளின் பணியாளர்கள் அவரை வழிபடுவார்கள்; அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும். இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது ஒளி வீசுவார்; அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள்.

பின்னர் அந்த வானதூதர் என்னிடம், “இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை. விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு, இறைவாக்கினரைத் தூண்டியெழுப்பும் கடவுளாகிய ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பினார். இதோ! நான் விரைவில் வருகிறேன்” என்றார். இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 95: 1-2. 3-5. 6-7 (பல்லவி: 1 கொரி 16: 22; திவெ 22: 20b)

பல்லவி: மாரனாத்தா! ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.

1
வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
2
நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். - பல்லவி

3
ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்.
4
பூவுலகின் ஆழ் பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன; மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன.
5
கடலும் அவருடையதே; அவரே அதைப் படைத்தார்; உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின. - பல்லவி

6
வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம்.
7
அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 36

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு, எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 34-36

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப் போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார் மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


மானிட மகன் முன் நிற்க வல்லவர்களா நாம்?


ஒரு தனியார் வங்கியில் வேலைபார்க்கும் கணக்காளர் தன்னுடைய பணியில் மிகவும் நேர்மையுள்ளவராய் இருந்தார். அவருடன் பணிபுரியும் ஒருசிலர் பொய் கணக்குகள் எழுதி பிறர்  பணத்தை 

தங்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்திக்கொண்டனர். இவரையும் செய்யத் தூண்டினர். இவரோ தன் நேர்மையைக் காத்துவந்தார். மற்றவர்களைத் தட்டிக் கேட்டார். இவ்வங்கியில் ஒரு சில தவறுகள் நடக்கின்றன என்பதைப் பற்றி முகம் தெரியாத நபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அரசு சோதனை நடத்தத் தீர்மானித்தது. தவறு செய்தவர்கள் மனம் கலங்கியது. சோதனையில் மாட்டிக்கொண்டனர்.தங்களுடைய தவறான செயல்களால் தங்களுக்கே வலை விரித்துக் கொண்டனர். ஆனால் நேர்மையானவரோ எவ்வித பயமும் கலக்கமுமின்றி தைரியமாக இருந்தார்.பிரச்சினையை துணிந்து எதிர்கொண்டைர்.பிறர் முன் நல்லவராய் விளங்கினார்.


இன்றைய நற்செய்தியில் "நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்" என்று இயேசு சீடர்களிடத்தில் கூறுகிறார். இவ்வுலகக் கவலையினால் உள்ளம் மந்தமடையாதவாறு எச்சரிக்கையாய் இருக்கச் சொல்கிறார். இவ்வார்த்தைகளைத் தியானிக்கின்ற நாம் நமது உள்ளம் எதைக்குறித்து கவலை கொள்கிறது என சோதித்து அறிய வேண்டும்.


இவ்வுலகம் நமக்குப் பல இன்பங்களைத் தருகிறது. பணம் அதனால் விளைகின்ற ஆடம்பர வாழ்க்கை, பகட்டு,  மனதைத் திசை திருப்பும் அறிவியல் கண்டுபிடிப்புகள் ,மது, போதை மருந்துகள் போன்றவைகள் நமக்கு இன்பங்களைத் தந்தாலும் உண்மையான மகிழ்ச்சியைத் தருவதில்லை.  நிறைவைத் தருவதில்லை.மாறாக வாழ்வின் திசையை மாற்றுகிறது. பேராசையைத் தூண்டுகிறது. நல்லவற்றிலிருந்து நம் பாதையை மாற்றி தேவையற்றவைப் பற்றி யோசிக்கவைத்து நம் கவலைகளை அதிகரிக்கிறது. இக்கவலைகளில் மூழ்கிக்கிடக்கும் நாம் வாழ்வின் எதார்த்தங்களைப் புரிந்து கொள்ள இயலாமல் மீண்டும் மீண்டும் உலக மாயைகளில் சிக்கிக் கொள்கிறோம். இவை நம் ஆன்மீக வாழ்வை மழுங்கடிக்கிறது. 


திருவருகைக் காலத்தைத் தொடங்கப்போகிறோம். ஒவ்வொரு ஆண்டும் திருவருகைக் காலத்தைத் தொடங்கும் முன்பு மனம் மாற வேண்டும். இயேசுவை உள்ளத்தில் ஏற்க வேண்டும்.அதற்காக ஆயத்தப்படுத்த வேண்டும் என்று நாம் சிந்திப்பதுண்டு. ஆனால் இவ்வுல மாயை என்ற கண்ணியில் சிக்கிக்கொண்டுள்ளதால் பலமுறை இயேசுவை நம் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு அவர் முன் வல்லவராய் நிற்கத் தகுதியை இழந்தவர்களாகவே நாம் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நம்மைத் தேடி வரும் இறைவனை எதிர் கொள்ளத் தயங்குகிறோம்.இதிலிருந்து வெளிவர நாம் இறைவன் விரும்பும் நேர்மை, உண்மை, நீதி, அன்பு இவற்றைக் கொண்டவர்களாய் இறைவேண்டலுடன் எப்போதும் அவரை எதிர் கொண்டு அவர்முன் வல்லவராய் நிற்க முயற்சி செய்ய வேண்டும். உலக மாயைகளிலும், கேளிக்கைகளிலும் நாம் கொண்டுள்ள நாட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க  நம்மால் இயன்ற முயற்சிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். எத்துன்பம் வந்தாலும் விழிப்பாய் இருந்து இறைவேண்டல் செய்வதைத் தொடரவேண்டும்.



அவ்வாறு நாம் முயலுகின்ற போது 

நம்முயற்சிகளை இறைவன் நிறைவாக ஆசிர்வதிப்பார். முதல்வாசகத்தில் நாம் வாசிப்பதைப் போல நம் மீது அவருடைய ஒளியை வீசச்செய்வார்.நம் வாழ்வு கனிதரும்  என்பதில் ஐயமில்லை.நம் நெற்றியில் மட்டுமல்ல நம் வாழ்விலும் இறைவனின் பெயர் பொறிக்கப்படும்.


மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராகும் படி நம்மையே நாம் தயார் செய்ய விழைவோமா? தேவையற்ற கவலை என்னும் சூழ்ச்சியிலிருந்து முழுமையாக விடுபட விழிப்பாய் இருந்து மன்றாடுவோமா?


 இறைவேண்டல் 

அன்பு இறைவா மீட்பின் கடவுளே! இயேசுவே

உலகக் கவர்ச்சிகளிலும் கலவைகளிலும் மழுங்கிக் கிடக்கும் எம் ஆன்மீக வாழ்வை உம்மிடம் ஒப்படைக்கிறோம். அவற்றிலிருந்து மீண்டு நாங்கள் ஒவ்வொரு நாளும் எம்மைத்தேடி வரும் உம்மை எதிர்கொண்டு உம் முன் வல்லவர்களாய் நிற்க எங்களையே ஆயத்தப்படுத்த வரம் தாரும். ஆமென்.



அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்



♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Thursday, November 24, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (25-11-2022)

 

பொதுக்காலம் 34ஆம் வாரம் - வெள்ளி

முதல் வாசகம்

புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 20: 1-4, 11- 21: 2

வானதூதர் ஒருவர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். படுகுழியின் திறவுகோலும் முரட்டுச் சங்கிலியும் அவர் கையில் இருந்தன. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பட்ட அரக்கப் பாம்பை அவர் பிடித்தார். அதுவே தொடக்கத்தில் இருந்த பாம்பு. வானதூதர் ஆயிரம் ஆண்டுகளுக்கு அதைக் கட்டிவைத்தார்; பின்னர் அதைப் படுகுழியில் தள்ளி, குழியை அடைத்து, முத்திரையிட்டார்; இவ்வாறு அந்த ஆயிரம் ஆண்டுகள் முடியும்வரை நாடுகளை அது ஏமாற்றாதவாறு செய்தார். இதன்பின் சிறிது காலத்துக்கு அது கட்டவிழ்த்து விடப்பட வேண்டும்.

பின்பு நான் அரியணைகளைக் கண்டேன். தீர்ப்பளிக்கும் அதிகாரம் பெற்றிருந்த சிலர் அவற்றின்மீது வீற்றிருந்தனர். கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததற்காகத் தலை கொடுத்தவர்களின் ஆன்மாக்களையும் கண்டேன். அவர்கள் அந்த விலங்கையோ அதன் சிலையையோ வணங்கியதில்லை; அதற்குரிய குறியைத் தங்கள் நெற்றியிலோ கையிலோ இட்டுக்கொண்டதும் இல்லை. அவர்கள் மீண்டும் உயிர் பெற்று, ஆயிரம் ஆண்டுகள் கிறிஸ்துவோடு ஆட்சி புரிந்தார்கள்.

பின்பு பெரிய, வெண்மையான ஓர் அரியணையைக் கண்டேன். அதில் ஒருவர் வீற்றிருந்தார். அவர் முன்னிலையில் மண்ணகமும் விண்ணகமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. இறந்தோருள் சிறியோர், பெரியோர் ஆகிய அனைவரும் அந்த அரியணைமுன் நிற்கக் கண்டேன். அப்பொழுது நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. வேறொரு நூலும் திறந்துவைக்கப்பட்டது. அது வாழ்வின் நூல். இறந்தோரின் செயல்கள் அந்நூல்களில் எழுதப்பட்டிருந்தன. அவற்றுக்கு ஏற்ப அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் கடல் தன்னகத்தே இருந்த இறந்தோரை வெளியேற்றியது. அதுபோலச் சாவும், பாதாளமும் தம்மகத்தே இருந்த இறந்தோரை வெளியேற்றின. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பத் தீர்ப்பு வழங்கப்பட்டது. சாவும் பாதாளமும் நெருப்பு ஏரியில் எறியப்பட்டன. இந்த நெருப்பு ஏரியே இரண்டாம் சாவு.

வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாதோர் நெருப்பு ஏரியில் எறியப்பட்டார்கள். பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற்போயிற்று.

அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்துகொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 84: 2. 3. 4-5a,7a (பல்லவி: திவெ 21: 3)

பல்லவி: இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது.

2
என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள்ள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. - பல்லவி

3
படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. - பல்லவி

4
உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள்.
5a
உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர்.
7a
அவர்கள் நடந்து செல்கையில் மேலும் மேலும் வலிமை பெறுகின்றார்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 28

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 29-33

அக்காலத்தில்

இயேசு ஓர் உவமை சொன்னார்: “அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள். அவை தளிர்விடும்போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக் காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர் 

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு 

சிவகங்கை மறைமாவட்டம்

இன்றைய வாசகங்கள்(25.11.2022) 

ஆண்டின் 34ஆம் வாரம் வெள்ளி

மு.வா: திவெ: 20: 1-4,11 - 21: 2

ப.பா: திபா: 84: 2. 3. 4-5,7

ந.வா: லூக்: 21: 29-33


 காலத்தின் அறிகுறிகளின் படி வாழ்வோமா!


மனிதர்களாய் பிறந்த நாம் ஒவ்வொருவரும் காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப வாழ அழைக்கப்பட்டுள்ளோம். ''இயேசு, 'விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். 

ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா' என்றார்'' (லூக்கா 21:33) எந்த வார்த்தைகளுக்கு ஏற்ப இறைவார்த்தையின் ஒளியில் காலத்தின் அறிகுறிகளின் படி வாழும் பொழுது, நிச்சயமாக நம்முடைய வாழ்வை கடவுளுக்கு உகந்த வாழ்வாக வாழமுடியும். நான் இறையில் படித்துக் கொண்டு இருக்கின்ற பொழுது எங்களுக்கு இறையியல் எடுத்த பேராசிரியர்களில் ஒருவர் அடிக்கடி "இறையியல் என்பது சமூக பொருளாதார ஆன்மீக அரசியல் போன்றவற்றை பகுப்பாய்வு செய்து இறைவார்த்தையின் ஒளியில் நம் வாழ்வை அமைத்துக் கொள்வதே ஆகும் " என்று அடிக்கடி கூறுவார். அப்பொழுது எனக்குப் புரியவில்லை. நான் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டு பங்குத்தளத்திற்கு பணி செய்ய வந்த போதுதான் அதனுடைய ஆழமான பொருள் புரிந்தது. ஒவ்வொரு பங்கும் ஒவ்வொரு சூழலை கொண்டிருக்கும். அதேபோல நம்முடைய வாழ்க்கை அனுபவங்களும் ஒவ்வொரு சூழலை கொண்டிருக்கும். அவற்றையெல்லாம் அறிந்து இறைவார்த்தையின் ஒளியில் நம்பிக்கையோடு பயணிப்பதே வாழ்வில் வெற்றியைத் தரும் என்பதை நான் புரிந்து கொண்டேன்.


இந்நாளில் நம் ஆண்டவர் இயேசு நற்செய்தியின் வழியாக காலத்தின் அறிகுறிகளை அறிந்து வாழ அழைப்பு விடுக்கிறார். நாம் வாழும் இந்த உலகத்தில் எத்தனையோ இயற்கைச் சீற்றங்கள், பேராபத்துகள், பாதிப்புகள் வருகின்றன. ஆனால் இவையெல்லாம் நமக்கு சொல்வது நாம் கடவுளின் வருகைக்காக எந்நாளும் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதேயாகும். மனிதர் என்பவர் பல்வேறு சோதனைகளுக்கும் இடையூறுகளுக்கும் உள்ளாவது இயல்புதான். ஆனால் அவற்றில் மூழ்கி விடாமல் நாம் செய்கின்ற ஒவ்வொரு தவற்றிலும் அனுபவங்களைக் கற்றுக் கொண்டு இறைவார்த்தையின் பாதையில் பயணிக்க அழைக்கப்பட்டுள்ளோம்.


தாவீதின் வாழ்க்கையை நாம் ஆய்வு செய்து பார்த்தோம் என்றால் நாம் அவரின் வாழ்விலிருந்து மனமாற்றத்தில் நிலைத்திருப்பது எப்படி என்பதை பற்றி அறிந்துகொள்ள முடியும். அவர் தன்னுடைய பலவீனத்தின் காரணமாக உடல் சார்ந்த இன்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். எனவே ஒரு உயிரை கூட எடுக்க முன்வந்தார். பிறகு இது தவறு என்று இறைவாக்கினர் நாத்தான் வழியாக அறிந்த பிறகு தன்னை முற்றிலும் வெறுமையாக்கி தான் செய்த பாவத்திற்காக மனம் வருந்தினார். தண்டனையைப் பெற்று கடவுளுடைய மன்னிப்பைப் பெற்றபிறகு புனிதமான வாழ்வை மீண்டும் தொடங்கினார். இதுதான் நாம் செய்கிற. தவற்றிலிருந்து புதிய அனுபவத்தை பெற்றுக் கொள்வது. எனவே கடவுள் நம்முடைய அன்றாட வாழ்விலேயே பல்வேறு அறிகுறிகள் வழியாக மனம் மாறுவதற்கு அழைப்பு விடுக்கிறார். அதனைப் புரிந்து கொண்டு மனம் மாறி தூயவர்களாக வாழும் பொழுது, நிச்சயமாக கடவுளின் அளப்பரிய இரக்கத்தை பெற்று மீட்பினைச் சுவைக்க முடியும்.


உலகமே அழிந்துபோனாலும் இயேசு கூறிய ''வார்த்தைகள் ஒழியவே மாட்டா'' என்பதன் பொருள் என்ன? என சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் வார்த்தைகள் நமக்கு வாழ்வு தருகின்ற வார்த்தைகள். அந்த வார்த்தைகளின் வல்லமையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அதை யாரலும் முறியடிக்கவும் இயலாது. இந்நிலையில் உலகமே அழிந்து மாய்ந்துபோனாலும் இயேசுவின் வார்த்தைகள் ''ஒழியவே மாட்டா''. இயேசுவின் வார்த்தைகள் உண்மையானவை என்பதை இதிலிருந்து அறிகிறோம். கடவுளின் அன்பை நம்மோடு பகிர்ந்துகொள்வதற்காக இயேசு நம்மைத் தேடி இவ்வுலகிற்கு வந்தார். இயேசுவின் இரண்டாம் வருகைக்காகவும் அவரின் பிறப்பு பெருவிழாவை கொண்டாடுவதற்காகவும் நம்மையே தயார்படுத்திக் கொண்டிருக்கும் நாம் காலத்தின் அறிகுறிகளை அறிந்து உயிருள்ள இறைவார்த்தையின் ஒளியில் எந்நாளும் வாழ்ந்திட தேவையான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல் :

வல்லமையுள்ள இறைவா! எங்கள் வாழ்விலே பற்பல அனுபவங்களைக் கொடுத்து மீட்பின் கனியை சுவைக்க வழிகாட்டிக் கொண்டிருக்கிறீர். அதற்காக நன்றி செலுத்துகிறோம். தொடர்ந்து எங்கள் வாழ்வில் நீர் வெளிப்படுத்தும் அறிகுறிகளை உணர்ந்து இறைவார்த்தையின் ஒளியில் எந்நாளும் பயணித்து உமக்கு உகந்த வாழ்வு வாழ்ந்து உமது வருகைக்காக எங்களையே ஆயத்தப்படுத்தி மீட்பின் கனியை சுவைத்திட தேவையான அருளைத் தாரும்.ஆமென்.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Wednesday, November 23, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (24-11-2022)

 

பொதுக்காலம் 34ஆம் வாரம் - வியாழன்



முதல் வாசகம்

பாபிலோன் மாநகரே, நீ வீசி எறியப்படுவாய்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 18: 1-2, 21-23; 19: 1-3, 9a

சகோதரர் சகோதரிகளே,

வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். மிகுந்த அதிகாரம் கொண்டிருந்த அவருடைய மாட்சியால் மண்ணகம் ஒளிர்ந்தது. அவர் வல்லமையோடு குரலெழுப்பிப் பின் வருமாறு கத்தினார்: “வீழ்ந்தது! வீழ்ந்தது! பாபிலோன் மாநகர்! அவள் பேய்களின் உறைவிடமாக, அனைத்துத் தீய ஆவிகளின் பதுங்கிடமாக, தூய்மையற்ற பறவைகள் அனைத்தின் புகலிடமாக, தூய்மையற்ற வெறுக்கத்தக்க விலங்குகளின் இருப்பிடமாக மாறிவிட்டாள்.” பின்னர் வலிமை வாய்ந்த ஒரு வானதூதர் பெரிய எந்திரக்கல் போன்ற ஒரு கல்லைத் தூக்கிக் கடலில் எறிந்து பின்வருமாறு கூறினார்:

“பாபிலோன் மாநகரே, நீ இவ்வாறு வீசி எறியப்படுவாய்; நீ இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடுவாய். யாழை மீட்டுவோர், பாடகர், குழல் ஊதுவோர், எக்காளம் முழக்குவோர் ஆகியோர் எழுப்பும் இசை இனி உன் நடுவே எழவே எழாது; தொழில் செய்யும் கைவினைஞர் அனைவரும் இனி உன் நடுவே குடியிருக்கவே மாட்டார்கள்; எந்திரக்கல் எழுப்பும் ஒலி இனி உன் நடுவே எழவே எழாது. விளக்கின் ஒளி இனி உன்னகத்தே ஒளிரவே ஒளிராது; மணமக்களின் மங்கல ஒலி இனி உன்னகத்தே எழவே எழாது; ஏனெனில் உன் வணிகர்கள் மண்ணுலகில் பெருங்குடி மக்களாய் விளங்கினார்கள்; உன் பில்லிசூனியம் எல்லா நாடுகளையும் ஏமாற்றி விட்டது."

இதன்பின் பெருந்திரளான மக்களின் கூச்சல் போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது பின்வருமாறு முழங்கியது: “அல்லேலூயா! மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன. ஏனெனில் அவருடைய தீர்ப்புகள் உண்மை உள்ளவை, நீதியானவை. தன் பரத்தைமையால் மண்ணுலகை அழிவுக்குட்படுத்திய பேர்போன அந்த விலைமகளுக்கு அவர் தீர்ப்பு வழங்கினார்; தம் பணியாளர்களைக் கொன்றதற்காக அவளைப் பழிவாங்கினார்.” மீண்டும் அந்த மக்கள், “அல்லேலூயா! அந்த நகர் நடுவிலிருந்து புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது” என்றார்கள்.

அந்த வானதூதர் என்னிடம், “ ‘ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்’ என எழுது” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 4. 5 (பல்லவி: திவெ 19: 9a)

பல்லவி: செம்மறியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.

1
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! - பல்லவி

3
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! - பல்லவி

4
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! - பல்லவி

5
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 28

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

பிற இனத்தாரின் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-28

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கி வந்துவிட்டது என அறிந்து கொள்ளுங்கள். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்; நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும்; நாட்டுப் புறங்களில் இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே வரவேண்டாம். ஏனெனில் அவை பழிவாங்கும் நாள்கள். அப்போது மறைநூலில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும்.

அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! ஏனெனில் மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள்மீது கடவுளின் சினமும் வரும். அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள்; எல்லா நாடுகளுக்கும் சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள்; பிற இனத்தார் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்.

மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும்.

அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர் 

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு 

சிவகங்கை மறைமாவட்டம்

இன்றைய வாசகங்கள்(24.11.2022) 

ஆண்டின் 34ஆம் வாரம் வியாழன்

மு.வா: திவெ: 18: 1-2, 21-23; 19: 1-3,9

ப.பா:  திபா: 100: 1-2. 3. 4. 5

ந.வா: லூக்: 21: 20-28


 *மீட்பின் காலத்தில் தலைநிமிர்ந்து நிற்போமா!*


இன்றைய வாசகங்கள் தீமையின் அழிவையும் இறைமகன்  வழங்கும் மீட்பையும் நமக்குச் சுட்டி க்காட்டுகின்றது. இறைமகன் மீண்டும் வரும்வேளையில் உலகத்தில் நடைபெறும் மாற்றங்களையும், இயற்கைச் சீற்றங்களையும் படம் பிடித்துக் காட்டுவதாய் உள்ளது. இவ்வசனங்களை நாம் வாசிக்கும் போது நமக்குள் அச்சம் எழுவதை நாம் உணர்கிறோம்.மனம் கலங்குகிறோம். இவை அனைத்தும் இப்பொழுதே நடைபெற்றுக் கொண்டிருப்பதை உணர்கிறோம். ஆனால் ஆண்டவர் எதிர்பார்ப்பது அச்சத்தை அல்ல. நல்ல மனமாற்றத்தையே.


உலகத்தில் எப்போதுமே எதிர்மறையானவற்றிற்கிடையே போராட்டம் நடைபெறுகிறது. தீமை நன்மையை வெல்லத் துடிக்கிறது. இருள் ஒளியை ஆள நினைக்கிறது. பொய்மை உண்மையை மறைக்க எண்ணுகிறது. இப்போராட்டத்தில் தீமையானவை வெல்வது போலத் தோன்றினாலும் இறுதியில் வெல்வது நன்மையே. நீதியின் கடவுள் பொறுமையாய் இருந்தாலும் அவருடைய தீர்ப்பு நீதியாய் விளங்கும் என்பதைப் புரிந்து கொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.அவ்வேளையில் நாம் நீதியுள்ளவர்களாய், ஒளியின் மக்களாய் தலைநிமிர்ந்து நிற்கிறோமா? அல்லது மீட்பைச் சுவைக்கத் தகுதியற்றவர்களாய் இருக்கிறோமா? என நம்மை நாமே கடவுளின் கண்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.


இன்றைய முதல் வாசகம் பாபிலோனுக்கு வழங்கப்படும் தீர்ப்பு பற்றி நமக்கு விளக்குகிறது. இஸ்ரயேல் மக்கள் கடவுளின் உடன்படிக்கையிலிருந்து விலகிச் செல்லும் போது அவர்களைக் கடவுள் பக்கம் அழைத்துவர ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்ட நாடுதான் பாபிலோன்.கடவுள் தாமே அவர்களைத் தேர்தெடுத்தாலும் ,பாபிலோனியர்கள் கடவுளை மறந்து தீமையின் உச்ச கட்டத்திற்குச் சென்றதால் அவர்களின் தண்டனையும் உச்சத்தை எட்டுகிறது. நம்முடைய வாழ்விலும் பலசமயங்களில் நாம் தீமைக்கும் கடவுள் விரும்பாத அநீதிக்கும் துணைபோகும் போது கடவுள் நம்மைக் கண்டிப்பார் என்பதை மனதில் இறுத்த வேண்டும்.


இன்று நாம் காணும் இயற்கைச் சீற்றங்கள் யாவும் நம்முடைய அநீதியின் வெளிப்பாடுகளே. நன்மையை ஒதுக்கி தீமையின் குரலைக் கேட்டு சுயநலத்தோடு இயற்கையையும் சக மனிதர்களையும் நாம் காயப்படுத்தியதால் தான் இயற்கைப் பேரிடர்கள் நம்மை வாட்டுகின்றன.


கிறிஸ்துவின் வருகைக்காக நம்மைத் தயாரிக்கும் இவ்வேளையில் நம் வாழ்வைத் திருப்பிப் பார்ப்போம். நன்மையும், ஒளியும், நீதியும் உலகில் வெற்றிபெற நம் வாழ்வுப் பாதையை மாற்றுவோம். உண்மைக்குக் குரல் கொடுப்போம். அப்போது தலைநிமிர்ந்தவர்களாய் நம்மை நெருங்கி வந்துகொண்டிருக்கும் மீட்பை நம்மால் எதிர்கொள்ள முடியும். அதற்கான வரத்தை வேண்டுவோம்.


 இறைவேண்டல்

நீதியின் தேவனே தீயவற்றை நாங்கள் விலக்கி உண்மை ஒளி நீதியின் மக்களாக நாங்கள் வாழ்ந்து தலைநிமிர்ந்து உம் மீட்பைப் பெற்றுக்கொள்ள வரம் தாரும். ஆமென்.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️


Tuesday, November 22, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (23-11-2022)

 

பொதுக்காலம் 34ஆம் வாரம் - புதன்



முதல் வாசகம்

கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக்கொண்டிருந்தார்கள்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 15: 1-4

சகோதரர் சகோதரிகளே,

யோவான் என்னும் நான் பெரியதும் வியப்புக்குரியதுமான மற்றோர் அடையாளத்தை விண்ணகத்தில் கண்டேன்: ஏழு வானதூதர்கள் ஏழு வாதைகளைக் கொண்டிருந்தார்கள். இறுதியான அந்த வாதைகளோடு கடவுளின் சீற்றம் முற்றிலும் தணியும்.

நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றையும் கண்டேன். தொடர்ந்து, விலங்கின் மீதும் அதன் சிலை மீதும் எண்ணால் குறிக்கப்பெற்ற அந்த ஆள் மீதும் வெற்றி பெற்றவர்கள், கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஏந்திய வண்ணம் கண்ணாடிக் கடல் அருகே நின்றுகொண்டிருக்கக் கண்டேன். அவர்கள் கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக் கொண்டிருந்தார்கள்:

“கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன. மக்களினங்களின் மன்னரே, உம் வழிகள் நேரியவை, உண்மையுள்ளவை. ஆண்டவரே, உமக்கு அஞ்சாதவர் யார்? உமது பெயரைப் போற்றிப் புகழாதார் யார்? நீர் ஒருவரே தூயவர், எல்லா மக்களினங்களும் உம் திருமுன் வந்து வணங்கும். ஏனெனில் உம் நீதிச் செயல்கள் வெளிப்படையாயின.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3ab. 7-8. 9 (பல்லவி: திவெ 15: 3b)

பல்லவி: எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் வியப்புக்குரியன.

1
ஆண்டவருக்கு புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

2
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3ab
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். - பல்லவி

7
கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!
8
ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். - பல்லவி

9
ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திவெ 2: 10

அல்லேலூயா, அல்லேலூயா! இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக் கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரிகள் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.

ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


மனஉறுதியைத் தருபவர் இறைவன்!


"நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்க்கையைக் காத்துக்கொள்ளுங்கள்"


கடந்த ஆண்டில்   நாம் அனைவருமே தந்தை ஸ்டேன்சாமி அவர்களைப்பற்றிய செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தோம். தமிழ்நாட்டிலே பிறந்து வடமாநிலத்திற்குச் சென்று ஆதிவாசி மக்களுடைய நல்வாழ்வுக்காய் உழைத்துக் கொண்டிருந்த இயேசு சபை குரு அவர். மதவாத அரசு அமைப்புகளால் அவதூறான பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த  கொரோனா நோய் காலத்தில் வயது முதிர்ந்தவர் என்ற கரிசனை கூட இல்லாமல் சிறையில் அவர் அடைபட்டிருந்தாலும் அவர் மனந்தளராமல் இருந்தார்  என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இறுதியில் சிறையிலேயே தன் உயிரைத் துறந்து சாட்சியம் பகர்ந்தார். எங்கிருந்து வந்தது இந்த மனத்துணிவு அவருக்கு? நிச்சயமாக அவர் பின்பற்றும் தலைவன் இயேசுவிடமிருந்து அல்லவா?


மத்தேயு நற்செய்தியில் மலைப்பொழிவிலே "நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்" (5:6) எனவும்"நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர் .ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது "(5:10) என்று இறைமகன் இயேசு கூறியதை நாம் வாசித்திருக்கிறோம். தியானித்திருக்கிறோம். இவ்வார்த்தைகள் மூலம் நமக்கு உறுதியூட்டும் இறைவன் இன்னும் அவ்வுறுதிக்கு உரமூட்டும் விதமாக தன்னைப் பின்பற்றுவதால் துன்பத்துக்குள்ளாகும் தன் சீடருக்கு அதிகாரிகள் முன் பேச நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன் என வாக்குக்கொடுப்பதோடு நின்றுவிடாமல் தலைமுடி கூட கீழே விழாது என்று கூறி நம்பிக்கை ஊட்டுவதை இன்றைய நற்செய்தியில் நாம் காண்கிறோம்.


கடவுள் அளித்த வாழ்வு அனைவருக்கும் சமம். அவர் அனைவரையும் சமமாகப் பார்க்கிறார். ஏற்றுக்கொள்கிறார். ஏற்றத்தாழ்வுகள் நம்மிடம் இருக்கக்கூடாது என்ற நற்செய்தியை தன் நல்வாழ்வால் போதித்து நீதிக்கும் நேர்மைக்கும் உண்மைக்கும் குரல் கொடுத்த இயேசுவின் மனஉறுதி சிலுவையில் நிலைநிறுத்தப்பட்டது.

இயேசுவின் இறப்புக்குப்பின் துவண்டு கிடந்த சீடர்களுக்கு மன உறுதியைத் தந்த இயேசு அவர்கள் அதிகாரிகள் முன் பேசுவதற்கு நாவன்மையைத்தந்தார். தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த பின்னும் அவர்கள் பின்வாங்கவில்லை.தலைவனுக்கே இக்கதியா என்று தொடக்கத்தில் அஞ்சினாலும், தலைவனின் வழியைத் துணிவுடன் தழுவினர் திருத்தூததர்கள். புனிதர்களான பேதுரு,பவுல் மற்ற திருத்தூதர்கள் அனைவரும் இதற்குச் சிறந்த உதாரணங்கள். இன்னும் நம் கண்முன்னால் இயேசுவின் பொருட்டும் அவர் விட்டுச்சென்ற நீதி, உண்மை,அன்பு,சமத்துவம்,சகோதரத்துவம் போன்ற விழுமியங்களின் பொருட்டும் மனஉறுதி காப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவராக நாம் இருக்கிறோமா?

என சிந்திக்க வேண்டியது நம் கடமை.


பல வேளைகளில் நாம் மன உறுதி இழந்தவர்களாய் இருக்கிறோம். இதனாலேயே சவால்களைச் சந்திப்பதற்குப் பதிலாக விட்டு விலகிச்செல்லும் மனிதர்களாய் நாம் மாறுகிறோம். அதிகாரிகள் அல்லது பதவியில் இருப்பவர்கள் முன் எவ்வாறு பேச வேண்டும் என்று ஒத்திகை எடுப்பவர்களாய் இருக்கிறோம். மற்றவருடைய அல்லது சமூக தேவைகளுக்காக அல்லாவிட்டாலும் நம்முடைய சொந்தத் தேவைகளுக்காக,நமக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காக கூட நம்மால் மனஉறுதியுடன் நின்று போராட இயலவில்லை. இது நாம் இயேசுவை பின்பற்றாத நிலையைத் தான் குறிக்கிறது. மனஉறுதியுடன் வாழாததால் நம் வாழ்வில் பலவற்றை நாம் இழக்கிறோம்.


இத்தகைய மனநிலையை அகற்றி இயேசு தரும் மனஉறுதியுடன் வாழமுயற்சிப்போம்.அவ்வாறு வாழும்போது துன்பங்கள் ஏற்படினும் நம்மால் துணிந்து நின்று வெல்லமுடியும். ஏனெனில் நமக்குள் இருந்து கிறிஸ்து செயல்படுவார். அதற்கான இறையருள் வேண்டுவோம்.


 இறைவேண்டல்

உறுதிதரும் தெய்வமே!

மன உறுதியை இழந்த மனிதர்களாய் வாழாமல், சவால்களின் சமயங்களில் நீர் தரும் ஞானத்தோடும் நாவன்மையோடும் தீமையை வென்றிட அருள் தாரும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்

♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Sunday, November 20, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (22-11-2022)

 

பொதுக்காலம் 34ஆம் வாரம் - செவ்வாய்



முதல் வாசகம்

உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 14: 14-20

சகோதரர் சகோதரிகளே,

யோவான் என்னும் நான் ஒரு வெண் மேகத்தைக் கண்டேன். அதன்மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் வீற்றிருந்தார். அவரது தலையில் பொன் முடியும் கையில் கூர்மையான அரிவாளும் காணப்பட்டன.

மற்றொரு வானதூதர் கோவிலிலிருந்து வெளியே வந்து, மேகத்தின்மீது வீற்றிருந்தவரை நோக்கி, “உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது; மண்ணுலகம் என்னும் பயிர் முற்றிவிட்டது” என்று உரத்த குரலில் கத்தினார். உடனே மேகத்தின்மீது வீற்றிருந்தவர் மண்ணுலகெங்கும் தமது அரிவாளை வீசி அறுவடை செய்தார்.

மற்றொரு வானதூதரும் விண்ணகத்தில் உள்ள கோவிலிலிருந்து வெளியே வந்தார். அவரிடமும் கூர்மையான அரிவாள் ஒன்று இருந்தது. நெருப்பின் மேல் அதிகாரம் கொண்டிருந்த இன்னுமொரு வானதூதர் பலிபீடத்திலிருந்து வெளியே வந்தார். அவர் கூர்மையான அரிவாளை வைத்திருந்தவரிடம், “உமது கூர்மையான அரிவாளை எடுத்து மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்திடும்; ஏனெனில் திராட்சை கனிந்துவிட்டது” என்று உரத்த குரலில் கூறினார். ஆகவே அந்த வானதூதர் மண்ணுலகின் மீது தம் அரிவாளை வீசி மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்தார்; கடவுளின் சீற்றம் என்னும் பெரிய பிழிவுக் குழியில் அவற்றைப் போட்டார். நகருக்கு வெளியே இருந்த அந்தப் பிழிவுக் குழியில் அவை மிதிக்கப்பட்டன. அந்தப் பிழிவுக் குழியிலிருந்து இரத்த வெள்ளம் ஏறத்தாழ இரண்டு மீட்டர் ஆழம், முந்நூறு கிலோ மீட்டர் தொலைக்குப் பாய்ந்தோடியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 96: 10. 11-12. 13 (பல்லவி: 13b)

பல்லவி: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர் வருகின்றார்.

10
வேற்றினத்தாரிடையே கூறுங்கள்; ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். - பல்லவி

11
விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12
வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். - பல்லவி

13
ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திவெ 2: 10

அல்லேலூயா, அல்லேலூயா! இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கோவிலின் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இடிக்கப்படும்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-11

அக்காலத்தில்

கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். இயேசு, “இவற்றை யெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார்.

அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்’ என்றும், ‘காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது” என்றார்.

மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: “நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளைநோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


இறைவனை வரவேற்க நம்மைத் தயார் செய்வோம்! 


பொதுக்காலத்தின் இறுதி வாரத்தில் நாம் இருக்கிறோம். திருவருகைக் காலத்திற்கு நம்மையே தயார் செய்யும்விதமாக இந்த வாரம் முழுதும் நாம் சிந்திக்கின்ற வாசகங்கள் அனைத்தும் நமக்கு உதவுவதாய் உள்ளன. மானிட மகனின் வருகையை எதிர்கொள்ளவும் அவர் வரும் போது  நம்மைச் சுற்றி ஏற்படும் அடையாளங்களைப் புரிந்து கொண்டு நம் வாழ்வைச் சீரமைத்துக் கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.


 இன்றைய நற்செய்தி நமக்குக் கூறும் செய்தியும் இதுவே.மானிட மகனின் வருகை நாம் நினையாத நேரத்தில் இருந்தாலும் அது நிகழும் முன்பு பல அடையாளங்களும் அறிகுறிகளும் உண்டாகும்.அவை நமக்குத் தரப்படுவது எதற்காக? நாம் கறிஸ்துவின் வருகைக்காக நமது மீட்புக்காக நம்மையே சரியான விதத்தில் தகுதியான முறையில் தயார் படுத்திக் கொள்வதற்காக.இதை நாம் புரிந்து கொண்டு நம் வாழ்வின் பாதையை சீரமைக்க வேண்டும். 


இன்று தாய் திருஅவையோடு இணைந்து புனித செசிலியாவின் விழாவை நாம் கொண்டாடுகிறோம். இவர் பாடகர்குழுவின் பாதுகாவலியாகத் திகழ்கிறார்.இதற்கு காரணம் அவர் சிறுவயதிலிருந்தே இசையில் தேர்ச்சி பெற்று இறைவனைப் பாடி புகழ்வதில் ஆர்வமுள்ளவராய் இருந்தார். உரோமையில் வேதகலாபனை காலத்தில் வாழ்ந்த இவர், இறைவன்பால் அதிக பற்றுள்ளவராய் இருந்தார். சிறுவயதுமுதலே தன் கன்னிமையை கடவுளுக்கு அர்ப்பணம் செய்திருந்தார். விருப்பமில்லாமல் கட்டாய்த்தின் பேரில் வலேரியன் என்னும் இறையச்சமில்லாதவரை மணமுடித்தார். ஆயினும் தன்னுடைய உறுதியான நிலைப்பாட்டால் தன் கணவரையும் நம்பிக்கையாளராக மாற்றினார். அதன் விளைவாக வலேரியனின் சகோதரனும் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவரானார். தூய உள்ளத்தோடு கிறிஸ்துவுக்கு பணிபுரிந்தனர் இவர்கள் மூவரும். 


தன்னுடைய நம்பிக்கை வாழ்வால் உரோமை மன்னரை கடவுளாக வழிபட்ட பலருடைய மனங்களை கிறிஸ்துவின் பால் திருப்பினார். அவரும் மன்னர்களையும் சிலைகளையும் வணங்க மறுத்தார்.  இதற்காக மரண தண்டனை பெற்றார். மூச்சு திணறி இறக்க வேண்டுமென்பதே அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை. அதிகப்படியான நெருப்பு மூட்டப்பட்டு புகை மூட்டப்பட்ட போதும் செசிலியா இறக்கவில்லை. இறுதியில் தலை வெட்டப்பட்டது. தான் இறக்கும் தருவாயிலும் கூட இறைவனுக்கு புகழ் பாடிக்கொண்டேதான் இறந்தார். இறைவனுக்கு சாட்சியானார். 


இறைவருகைக்காக தயாரிக்க அழைக்கப்பட்டுள்ள நமக்கெல்லாம் இப்புனிதையின் வாழ்க்கை பெரும் உந்துதலாக அமைகிறது. இவர் எப்போதும் தயார் நிலையில் இருந்து தன் வாழ்வை செம்மைப்படுத்தியதோடு பிறரையும் ஊக்குவித்தார் .அதுபோல நாமும் இறைவருகைக்கு நம்மை தயார் செய்வோம். இறைவனை எப்போதும் பாடிப் புகழ்வோம்.


 இறைவேண்டல் 

அன்பு இறைவா!  உம்மை வரவேற்க எங்கள் வாழ்வை சீர்படுத்திக்கொள்ளவும் புனித செசிலியாவைப் போல நம்பிக்கை வாழ்வால் உமக்கு புகழ்சாற்றவும் வரமருளும். ஆமென்


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்

♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...