Friday, June 27, 2025

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

 

 

முதல் வாசகம்


தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15


அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்க கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள் முன் தரை மட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, ``என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம்மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டு வருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்'' என்றார். ``நீ சொன்னபடியே செய்'' என்று அவர்கள் பதில் அளித்தார்கள். அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, ``விரைவாக மூன்று மரக்கால் நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு'' என்றார். ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடிச் சென்று, ஒரு நல்ல இளங்கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான். பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும் பொழுது அவர்கள் அருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். பின்பு அவர்கள் அவரை நோக்கி, `` உன் மனைவி சாரா எங்கே?'' என்று கேட்க, அவர், ``அதோ கூடாரத்தில் இருக்கிறாள்'' என்று பதில் கூறினார். அப்பொழுது ஆண்டவர், ``நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்'' என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆபிரகாமும் சாராவும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தனர். சாராவுக்கு மாதவிடாய் நின்று போயிருந்தது. எனவே, சாரா தமக்குள் சிரித்து, ``நானோ கிழவி; என் தலைவரோ வயது முதிர்ந்தவர். எனக்கா இன்பம்?'' என்றாள். அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, `` `நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க, எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா' என்று சொல்லி சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்? ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ! இளவேனிற் காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நான் உன்னிடம் மீண்டும் வருவேன். அப்பொழுது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்'' என்று சொன்னார். சாராவோ, ``நான் சிரிக்கவில்லை'' என்று சொல்லி மறுத்தார். ஏனெனில் அச்சம் அவரை ஆட்கொண்டது. அதற்கு ஆண்டவர், ``இல்லை, நீ சிரித்தாய்'' என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

லூக் 1: 47. 48-49. 50,53. 54-55

பல்லவி: ஆண்டவர் தம் இரக்கத்தை என்றும் நினைவில் கொண்டுள்ளார்.


47 ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.

என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. -பல்லவி


48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.

இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.

தூயவர் என்பதே அவரது பெயர். -பல்லவி


50 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

53 பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். -பல்லவி


54-55 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும்

அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்;

தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.


மத்தேயு 8:5-17


பொதுக்காலம் 12 வாரம் சனி

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-17


அக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். ``ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்'' என்றார். இயேசு அவரிடம், ``நான் வந்து அவனைக் குணமாக்குவேன்'' என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, ``ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் `செல்க' என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் `வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து `இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்'' என்றார். இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்'' என்றார். பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, ``நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்'' என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான். இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார். பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு, `அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


மரியாளின் மாசற்ற இதயம்


பொதுக்காலம் 12ஆம் வாரம்

28.06.2024 - சனிக் கிழமை 

பிறப்பில் எல்லோருடைய இதயமும் தூய்மையானது தான். வாழ்க்கை நகர்கின்ற போது இதயம் மாசுபடிந்ததாக மாறிவிடுகிறது. என் இதயம் கறை படிந்ததற்கு என்னை குறை சொல்வதா! என்னை சூழ்ந்து இருப்பவர்களை குறை சொல்வதா! காலத்தினுடைய மாற்றங்களை குறை சொல்வதா! யாரை குறை சொல்வது?

வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்று போல் இருப்பதில்லை. சிலருக்கு வாழ்க்கை கசப்பையும், சிலருக்கு வாழ்க்கை இனிமையும், சிலருக்கு வாழ்க்கை பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறது. இயற்கை எல்லோருக்கும் சமமாக தான் இருக்கிறது. 

இயற்கையை ஒருபோதும் குறை சொல்ல முடியாது. ஆனால், இயற்கையை நாம் மாசுபடுத்துகின்ற போது இயற்கை அதன் விளைவுகளை நம்மீது திணிக்க தான் செய்யும். 

நம்முடைய உடல் கடவுள் வாழக்கூடிய ஆலயமாக தூய்மையானதாக இருக்க வேண்டும். ஆனால், அந்த தூய்மையை நாம் வெளியிலிருந்து ஏற்றுக் கொள்ளக்கூடிய அல்லது நமக்குள் எழக்கூடிய தவறான சிந்தனைகளால், நம்முடைய நடத்தைகளால் மாசுப்படுத்தி விடுகிறோம். 

இன்று அன்னை மரியாவினுடைய மாசற்ற இதய விழாவை நினைவு கூறுகிறோம். அன்னை மரியாவும் எல்லோரும் வாழ்ந்த அதே சமூகத்தில் தான் வாழ்ந்தார் எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட வாழ்க்கை சூழல் தான் அவருக்கும் கொடுக்கப்பட்டது ஆனால் அவரால் மட்டும் எப்படி தூய்மை நிறைந்த இதயத்தோடு வாழ முடிந்தது? 

கடவுள் ஆள் பார்த்து செயல்படுவதில்லை எல்லோர் மேலும் அருளை பொழிகிறார். பொழியப்பட்ட அருளை உள்ளத்தில் இருத்தி தியானித்தால் வாழ்வு நலமானதாக மாறும். 

அன்னை மரியாள் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த எல்லா நிகழ்வுகளையும் இதயத்தில் இருத்தி சிந்தித்தார். வாழ்க்கையினுடைய புரியாத புதிர் தொடங்கி தன் மகனின் இறப்பு, இறப்பிற்குப் பின் வாழ்க்கை என எல்லாவற்றிலும் நடந்த நினைவுகள் அவரை காயப்படுத்தியது, ஆனால் அவர் கலங்கவில்லை. 

கடவுள் என்னை ஏமாற்றி விட்டார் என்று சொல்லி கடவுளுக்கு எதிராக திரும்பவும் இல்லை. கடவுள் கொடுத்தார் கடவுள் எடுத்துக் கொண்டார் என்ற மனநிலை அன்னை மரியாவிடம் இருந்ததனால் எல்லா சூழ்நிலைகளிலும் அவருடைய இதயம் தூய்மையை இழக்காமல் இருந்தது.

பல வியாகுலங்களை தாங்கிய போதிலும் அந்த இதயம் மாசுபடாமல் இருந்தது.

வரலாற்றுப் பின்னணி 

1917 ஆம் ஆண்டு மரியன்னை பாத்திமாவில் காட்சி கொடுத்த பிறகு, இந்த பக்தி முயற்சி சிறப்பாக வளர்ந்தது. 1917 ஜூன் 13 ஆம் தேதி புதன் கிழமை காட்சியில், மரியன்னையின் தூய இதயம் முட்களால் ஊடுருவப்பட்டு இருப்பதை லூசியா கண்டார்.

1944ல் திருத்தந்தை 12ம் பயஸ் மரியாளின் மாசற்ற இதய விழாவை திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைத்து, ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடுமாறு அறிவித்தார். 1969இல் திருத்தந்தை 6ஆம் பவுல், இயேசுவின் தூய இதய பெருவிழாவுக்கு அடுத்த நாளில் மரியாளின் மாசற்ற இதயத்தை நினைவுகூரும் வகையில் இந்த திருநாளை மாற்றி அமைத்தார்.

மாசற்ற இதய படத்தின் விளக்கம்

எரியும் நெருப்பு - இயேசுவின், மக்களின் மீதான அன்பு

ஊடுருவிய வாள் - 7 வியாகுலங்கள்

மலர் - அன்னையின் தூய்மை

இதயம் - தாய்க்குரிய அன்பு


அருட்பணி. சைமன் ஆல்டஸ்
தூத்துக்குடி மறைமாவட்டம்

Thursday, June 26, 2025

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (27-06-2025)

 இதயத்தில் அன்பு...
இயேசுவின் தூய்மைமிகு இதய பெருவிழா

27.06.2025 - வெள்ளிக் கிழமை





 

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 11-16


தலைவராகிய ஆண்டவர் கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக்காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வதுபோல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன். மக்களினங்களினின்று அவற்றை வெளிக்கொணர்ந்து, நாடுகளினின்று கூட்டிச்சேர்த்து, அவற்றின் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவேன். அவற்றை இஸ்ரயேலின் மலைகளிலும் ஓடையோரங்களிலும் நாட்டின் எல்லாக் குடியிருப்புகளிலும் மேய்ப்பேன். நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன். இஸ்ரயேலின் மலையுச்சிகளில் அவற்றின் மேய்ச்சல் நிலம் இருக்கும். அங்கே வளமான மேய்ச்சல் நிலத்தில் அவை இளைப்பாறும். இஸ்ரயேலின் மலைகளின்மேல் செழிப்பான மேய்ச்சல் நிலத்தில் அவை மேயும். நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டு வருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப் போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3ய. 3b-4. 5. 6

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.


1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்;

அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.

3ய அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். -பல்லவி


3b தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;

4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,

நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;

உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி


5 என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்;

என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;

எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -பல்லவி


6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்

உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்;

நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி



இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5b-11


சகோதரர் சகோதரிகளே, நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்த காலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார். ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய்த் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப் பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ? நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ! அதுமட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவு கொண்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


லூக்கா 15:3-7

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 3-7


அக்காலத்தில் இயேசு பரிசேயர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: ``உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக்கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்' என்பார். அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.''


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


இதயத்தில் அன்பு...

இயேசுவின் தூய்மைமிகு இதய பெருவிழா

27.06.2025 - வெள்ளிக் கிழமை


"விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்; ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்" - நீதிமொழிகள் 4:23

இதயம் இருக்குதா, உன் இதயம் எல்லாம் கல்லு என்ற வார்த்தைகள் இதயமற்ற, அன்பற்ற மனிதர்களை பார்த்து சொல்லக்கூடியவை.

இதயம் கனிந்து இருக்க வேண்டும். கனியாத இதயம் கல் போன்றது. 

இன்று பல சமயங்களில் நாம் இதயமற்ற இரக்கமற்ற மனிதர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இரக்கத்தோடு வாழ்வதனால் என்ன பயன்? அன்பு செய்வதனால் என்ன பயன்? என்ற கேள்விகள் பல தருணங்களில் கேட்கப்பட்டு கொண்டிருக்கிறது. (சில அன்புக்குரிய நபர்கள் ஏற்படுத்திய காயங்களினால் இக்கேள்விகள் எழுகிறது).

நம்முடைய இதயம் யாராவது ஒருவர் அமரக்கூடிய சிம்மாசனமாக இருக்கிறது, ஆனால் அந்த சிம்மாசனத்தின் இருக்கை என்பது தற்காலிகமானதாக இருக்கிறது. இதயத்தில் நிரந்தரமான இடம் யாருக்கும் நாம் கொடுப்பதில்லை, யாரும் நிரந்தரமாக அங்கு தங்குவதும் இல்லை. (சிலர் ஏற்படுத்திய காயங்களினால் சிலருக்கு இடமில்லாமல் போகிறது).

சில இதயங்கள் காயப்பட்டு போகின்றது, சில இதயங்கள் காயப்படுத்துகின்றது. 

இன்று இயேசுவின் தூய்மைமிகு இதய பெருவிழாவை கொண்டாடுகிறோம். இந்த இயேசுவின் இதயம் எல்லோருக்குமானது, பாகுபாடுகளைக் கடந்த இதயம், கனிவும் மனத் தாழ்மையும் உடைய இதயம், இழப்புகளை, எதிர்ப்புகளை சந்தித்தவர்களை தாங்கும் இதயம். இவ்வாறாக இயேசுவின் இதயம் பல பண்புகளை கொண்டுள்ளது. 

இறுதியில் அந்த இதயமும் காயப்பட்டு தான் இருக்கின்றது. எங்கு அதிகமாக அன்பு இருக்கிறதோ, எங்கு அதிகமான கனிவு இருக்கிறதோ அங்கு காயங்கள் அதிகம். இயேசுவின் வாழ்க்கையிலும் அது விதிவிலக்கு அல்ல. 

ஆனால் இயேசுவின் இதயம் காயப்பட்டாலும் மற்றவர்களின் காயங்களுக்கு கட்டு போடக்கூடிய இதயமாக தான் இருந்தது, இருக்கிறது, இன்னும் இருக்கும். 

மாற்கு நற்செய்தி 19: 31-37இல், படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.

இரத்தத்தாலும் சதையாலும் சூழப்பட்ட இதயமாக இயேசுவின் இதயம் இருக்கிறது. அவருடைய இதயம் பலருக்காக குத்தப்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த காயங்களுக்கு மருந்து எது? அன்பு ஒன்றே மருந்து. அந்த அன்பை நாம் எப்படி செலுத்தப் போகிறோம்? இயேசுவின் காயங்களை எப்படி குணப்படுத்த போகிறோம்?

மற்றவரின் இதயத்தை புண்படுத்தாத போது, மற்றவரின் காயங்களுக்கு கட்டுப் போடும்போது நான் இயேசுவின் காயங்களுக்கு மருந்திடுகிறோம். 

நம் கனிவு நிறைந்த இதயம் பல காயங்களுக்கு மருந்தாகட்டும்.

காயப்படுத்தும் இதயமாக அல்ல, மற்றவரின் காயங்களுக்கு கட்டுப்போடும் இதயமாக நம் இதயம் மாற வேண்டும்.

இயேசுவின் திரு இதயத்திலிருந்து பொங்கி வழியும் அன்பு நம் இதயத்திலும் பொங்கி வழிய வேண்டும்.


அருட்பணி. சைமன் ஆல்டஸ்

தூத்துக்குடி மறைமாவட்டம்

Wednesday, June 25, 2025

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (26-06-2025)

                                    பொதுக்காலம் 12 வாரம் வியாழன் 

 


முதல் வாசகம்

தொடக்க நூலிலிருந்து வாசகம் 16: 1-12,15-16

அந்நாள்களில் ஆபிராமின் மனைவி சாராய்க்கு மகப்பேறு இல்லை. சாராய்க்கு ஆகார் என்ற எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள். சாராய் ஆபிராமிடம், ``ஆண்டவர் என்னைப் பிள்ளை பெறாதபடி செய்துவிட்டார். நீர் என் பணிப்பெண்ணிடம் உறவு கொள்ளும். ஒருவேளை அவள் எனக்காகப் பிள்ளை பெற்றுத் தரக்கூடும்'' என்றார். ஆபிராம் சாராயின் சொல்லைக் கேட்டார். ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்த பின், அவர் மனைவி சாராய் எகிப்தியப் பணிப்பெண் ஆகாரைத் தம் கணவருக்கு மனைவியாகக் கொடுத்தார். அவர் ஆகாருடன் உறவு கொண்டபின் அவள் கருவுற்றாள். தான் கருவுற்றிருப்பதைக் கண்டதும் தன் தலைவியை அவள் ஏளனத்துடன் நோக்கினாள். அப்பொழுது சாராய் ஆபிராமிடம், ``எனக்கு இழைக்கப்பட்ட தீங்கு உம்மேல் இருக்கட்டும். நீர் தழுவும்படி நானே கொடுத்த என் பணிப்பெண், அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதைக் கண்டதிலிருந்து என்னை ஏளனமாக நோக்குகிறாள். ஆண்டவரே எனக்கும் உமக்கும் நீதி வழங்கட்டும்'' என்றார். ஆபிராம் சாராயிடம், ``உன் பணிப்பெண் உன் அதிகாரத்தின்கீழ் இருக்கின்றாள். உனக்கு நல்லதாகப் படுவதை அவளுக்குச் செய்'' என்றார். இதற்குப் பின் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார். ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள். ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அந்த ஊற்று சூருக்குச் செல்லும் வழியில் இருந்தது. அவர் அவளை நோக்கி, ``சாராயின் பணிப்பெண் ஆகார், நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?'' என்று கேட்டார். அதற்கு அவள், ``என் தலைவி சாராயிடமிருந்து நான் தப்பி ஓடுகிறேன்'' என்றாள். ஆண்டவரின் தூதர் அவளிடம், ``நீ உன் தலைவியிடம் திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட'' என்றார். பின்பு ஆண்டவரின் தூதர் அவளிடம், ``உன் வழிமரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப் பெருகச் செய்வேன்'' என்றார். மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம், ``இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு `இஸ்மயேல்' எனப் பெயரிடுவாய். ஏனெனில் உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார். ஆனால் அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லாரையும் அவன் எதிர்ப்பான். எல்லாரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்'' என்றார். ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் `இஸ்மயேல்' என்று பெயரிட்டார். ஆகார் ஆபிராமுக்கு இஸ்மயேலைப் பெற்றெடுத்த பொழுது அவருக்கு வயது எண்பத்தாறு.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்
திபா 106: 1-2. 3-4. 4-5
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்!

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்! என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு!
2 ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை யாரால் இயம்ப இயலும்? அவர்தம் புகழை யாரால் விளம்பக் கூடும்? -பல்லவி

3 நீதிநெறி காப்போர் பேறுபெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர் பேறுபெற்றோர்!
4 ஆண்டவரே! நீர் உம் மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை நினைவுகூரும்! -பல்லவி

4 அவர்களை நீர் விடுவிக்கும்போது எனக்கும் துணை செய்யும்!
5 நீர் தேர்ந்தெடுத்த மக்களின் நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்;
உம்முடைய மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்ளும்படிச் செய்யும்!
அப்போது, உமது உரிமைச் சொத்தான மக்களோடு உம்மைப் போற்றிட இயலும். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


மத்தேயு 7:21-29

பொதுக்காலம் 12 வாரம் வியாழன்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21-29

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?' என்பர். அதற்கு நான் அவர்களிடம், `உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்' என வெளிப்படையாக அறிவிப்பேன். ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.'' இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


 இயேசுவின் பெயரை இழிவுப்படுத்த வேண்டாம்...

பொதுக் காலம் 12ஆம் வாரம்

26.06.2025- வியாழக் கிழமை


நல்லவை இயேசுவின் பெயரால் நடைபெறுகிறது, கெட்டவை இயேசுவின் பெயரைச் சொல்லி நடைபெறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 7:21-29) "என்னை நோக்கி 'ஆண்டவரே, ஆண்டவரே' என சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்" என்கிறார் இயேசு.

பலர், "ஆண்டவரே, ஆண்டவரே உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உன் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா? என்பர். அதற்கு இயேசு உங்களை எனக்கு தெரியவே தெரியாது என்று பதில் சொல்வதாக இறைவார்த்தை பகுதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

பலர் கடவுளின் பெயரைச் சொல்லி பலவற்றை செய்கிறார்கள். ஆனால் அது கடவுளுக்கு ஏற்புடையதா? என்பது அவரவர் மனசாட்சியின் பொருட்டு கேட்கப்பட வேண்டிய கேள்வி...

நாம் செய்கிற எல்லாவற்றையும் செய்து விட்டு கடவுள் விரும்புகிறார், கடவுள் பேசுகிறார், கடவுள் எண்ணுகிறார் என்று சொல்வது பொய் பித்தலாட்டம். அது முற்றிலும் தவறானது. 

இன்று தெருவுக்கு தெரு பல கூட்டங்கள் இயேசுவின் பெயரைச் சொல்லி கூடுகின்றன. இயேசு அழைக்கிறார், இயேசு விடுவிக்கிறார் என்று சொல்லி இயேசுவின் பெயரால் பல சுரண்டல்கள் நடைபெறுகின்றன. (இயேசுவின் பெயரால் அங்கு நல்லது நடந்தால் தவறல்ல...)

இன்றைய நற்செய்தி வாசகத்தில் சொல்வது போல், "நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்" என்று வெளிப்படையாக சொல்ல வேண்டிய நாள் வரும்.

அப்போது இயேசுவின் பணியைச் செய்கிறோம், இயேசுவின் சாட்சிகளாய் இருக்கிறோம் என்று சொல்லக்கூடிய நாம் துணிந்து/நிமிர்ந்து நிற்க முடியுமா?

கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர் விண்ணரசுக்குள் செல்வர்.

இறைவார்த்தையைக் கேட்டு செயல்படும் (பாறை மீது வீட்டைக் கட்டிய) அறிவாளியாக நாம் இருக்கப் போகிறோமா? அல்லது இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படாத (மணல் மீது வீட்டைக் கட்டிய) அறிவிலியாக இருக்கப் போகிறோமா? என்பது நம் கையில் இருக்கிறது.

இயேசுவின் பெயரைச் சொல்லி பலவற்றை செய்வது எளிது. ஆனால் இயேசு விரும்பும் வாழ்க்கை வாழ்வதுதான் இயேசுவுக்கு நாம் பகரும் சான்று.

பத்துக் கட்டளைகளில் 3வது, "கடவுளின் திருப்பெயரை வீணாக சொல்லாதிருப்பாயாக". 

தேவை உள்ள இடத்தில் கடவுளின் பெயரைச் சொல்லுவோம். மற்ற இடங்களில் நம் வாழ்க்கையால் கடவுளின் பெயரை மகிமைப்படுத்துவோம்.

அருட்பணி. சைமன் ஆல்டஸ்

Monday, January 30, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

 

பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய்

முதல் வாசகம்

நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-4

சகோதரர் சகோதரிகளே,

திரண்டு வரும் மேகம்போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடைய இருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து, தளர்ந்து போகமாட்டீர்கள். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 22: 25b-26. 27,29. 30-31 (பல்லவி: 26b)

பல்லவி: ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக!

25b
உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
26
எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக! - பல்லவி

27
பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.
29
மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும், தம் உயிரைக் காத்துக் கொள்ளாதோரும் அவரை வணங்குவர். - பல்லவி

30
வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப் பற்றி அறிவிக்கப்படும்.
31
அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு ‘இதை அவரே செய்தார்’ என்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 8: 17

அல்லேலூயா, அல்லேலூயா! அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

சிறுமியே! உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43

இயேசு படகிலேறி, கடலைக் கடந்து மீண்டும் மறுகரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார்.

இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர். அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்” என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.

உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “என் மேலுடையைத் தொட்டவர் யார்?” என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், “இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘என்னைத் தொட்டவர் யார்?’ என்கிறீரே!” என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என்றார்.

அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.

அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்.

ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” என்றார். அதற்கு, ‘சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு’ என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். “இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


"நம்பிக்கை நலமளிக்கும் !" 


 நான் பணியாற்றிய பங்கில் ஒரு குடும்பத்தை சந்தித்த பொழுது கடவுள் செய்த மாபெரும் நன்மையை நம்பிக்கை அறிக்கையாக சாட்சி பகர்ந்தனர்.  கடவுள் மீது மிகவும் பக்தி கொண்ட ஒரு தாய் கருவுற்றிருந்தார். அவர் கருவிலே சுமந்த குழந்தையை ஸ்கேன் எடுக்கும் போது  உரு குலைந்து இருப்பதாக மருத்துவர் கூறினார். தாயும் உறவினரும் மிகுந்த வருத்தப்பட்டனர். ஆனால் இந்த தாய் நம்பிக்கையை மட்டும் விடவில்லை. தொடர்ந்து இறைவனிடம் வேண்டினார். கடவுள் நிச்சயமாக தனது குழந்தைக்கு உடல் உள்ள சுகத்தை கொடுத்து ஆரோக்கியத்தோடு பிறக்க வைப்பார் என்று நம்பினார். குழந்தை பிறக்கக்கூடிய நேரம் வந்தது. மருத்துவரும் உறவினரும் தாயும் ஆச்சரியப்படும் வகையில் குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்தது. அந்த நொடி முதல் அந்த தாய் கடவுளின் நாமத்தை சொல்லி இன்று வரை புகழ்ந்து கொண்டிருக்கிறார். அற்புதமாய் பிழைக்க வைத்து சிறப்பாக பிறக்க வைத்த அந்தக் குழந்தை இப்பொழுது ஒன்பதாம் வகுப்பு மிகச் சிறப்பான முறையில் படித்து வருகிறது.


நம்முடைய ஆண்டவர் நம்புகிறவர்களை ஒருபோதும் கைவிடாத இறைவன். மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையில்தான் வாழ்க்கை நடத்துகிறோம். நம்பிக்கை இல்லை என்றால் மனித வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்காது. குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அமைதியும் இருக்க வேண்டுமென்றால் ஒருவர் மற்றவரை நம்ப வேண்டும். கடவுள் இருக்கிறார் என்று  பயணிக்கும் நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையால் பல அற்புதங்களை பெறுகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களும் கூட கொள்கைகளையும் மானுடத்தையும் நம்புகின்றனர். ஆக நம்பிக்கை இல்லாத வாழ்வு சிறப்பான வாழ்வாக இருக்காது.


இன்றைய நற்செய்தியில் நம்பிக்கை நலவாழ்வு அளித்ததைப் பற்றி நாம் அறிய வருகிறோம்.  பிற இனத்தவர் வாழும் பகுதியிலிருந்து யூதர்கள் வாழும் பகுதிக்கு இயேசு வருகிறார். பெருந்திரளான மக்கள் இயேசுவை நெருங்கி வந்தனர். அப்பொழுது இயேசு இரண்டு அற்புதங்களை செய்தார். முதலாவதாக பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண்  "நான் அவருடைய ஆடையை தொட்டாலே நலம் பெறுவேன் " என்ற நம்பிக்கையில் இயேசுவின் ஆடையை தொட்டார். நலம் பெற்றார். இரண்டாவதாக தொழுகை கூட தலைவர் தன்னுடைய மகள் இறந்து விட்டாள் என்ற செய்தியை அறிந்த பிறகும்  இயேசுவால் தன் மகளை மீண்டும் தர முடியும் என்று ஆழமாக நம்பினார். தன் மகளை உயிரோடு மீண்டும் பெற்றார். இந்த இரண்டு வல்ல செயல்களுக்கும் அடிப்படையாக இருந்தது நம்பிக்கை


நம்பிக்கை நமக்கு நலம் தருகிறது. நம்பிக்கை நமக்கு புது வாழ்வு தருகிறது. நம்பிக்கை இறை அனுபவத்தை தருகிறது. நம்பிக்கை நமக்கு வெற்றியை தருகிறது. நம்பிக்கை நமக்கு ஆற்றலை தருகிறது. நம்பிக்கை இறைவனின் இரக்கத்தை தருகிறது. நம்பிக்கை வழிகாட்டுகிறது. நம்பிக்கை வெற்றியை தருகிறது. நம்பிக்கை நாம் கேட்பதை கடவுள் கொடுப்பார் என்ற ஆழமான மனநிலையைக்  கொடுக்கிறது. நம்பிக்கையால் நாம் அனைவரும் கடவுளின் ஆற்றலைப் பெறுகிறோம்.


எனவே நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையோடு இறைவனின் கரத்தை பற்றி பிடிக்கும் பொழுது அற்புதங்களையும் அதிசயங்களையும் நாம் காண முடியும். "மகனே, உனது நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று " (மாற்: 5:34) என்று ஆண்டவர் இயேசு நம்மைப் பார்த்தும் கூறுகிறார். நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள், பலவீனங்கள், அடிமைத்தனங்கள், சுமைகள், கண்ணீர்கள் இருந்தாலும் கூட  இறைவனை ஆழமாக நம்பும் பொழுது நாம் நலம் பெற முடியும்.இயேசுவை நம்பி வரக்கூடியவர்களை இயேசு ஒருபோதும் கைவிடமாட்டார். எனவே "விசுவாசத்தை தொடங்கி வைத்த வரும் அதை நிறைவு பெற செய்பவருமானவர் இயேசு (எபி: 12:2) என்ற பவுலடியாரின் வார்த்தைக்கு ஏற்ப நம்பிக்கையோடு நம் வாழ்வில் பயணிப்போம். நம்பிக்கையில் வளருவோம்! நாளும் கடவுளின் அருள் பெற்று வாழ்வோம்.


 இறைவேண்டல்

நம்பிக்கையின் நாயகனே இறைவா! எங்களுடைய  அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையில் வேரூன்றி சிறப்பான கிறிஸ்த வாழ்வை வாழ்ந்திட அருளைத் தாரும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Sunday, January 29, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (30-01-2023)

 

பொதுக்காலம் 4ஆம் வாரம் - திங்கள்





முதல் வாசகம்

நம்பிக்கையினாலேயே நீதித்தலைவர்கள் அரசுகளை வென்றார்கள்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 32-40

சகோதரர் சகோதரிகளே,

கிதியோன், பாராக்கு, சிம்சோன், இப்தாகு, தாவீது, சாமுவேல் ஆகியோர் பற்றியும், இறைவாக்கினர் பற்றியும் எடுத்துரைக்க எனக்கு நேரமில்லை. நம்பிக்கையினாலேயே இவர்கள் அரசுகளை வென்றார்கள்; நேர்மையாகச் செயல்பட்டார்கள்; கடவுள் வாக்களித்தவற்றைப் பெற்றார்கள்; சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்; தீயின் கொடுமையைத் தணித்தார்கள்; வாள்முனைக்குத் தப்பினார்கள்; வலுவற்றவராய் இருந்தும் வலிமை பெற்றார்கள்; போரில் வீரம் காட்டினார்கள்; மாற்றார் படைகளை முறியடித்தார்கள்.

பெண்கள் இறந்த தம் உறவினரை உயிர்த்தெழுந்தவராய்ப் பெற்றுக்கொண்டார்கள். உயிர்த்தெழுந்து சிறப்புறும் பொருட்டு, சிலர் விடுதலை பெற மறுத்து, வதையுண்டு மடிந்தனர். வேறு சிலர் ஏளனங்களுக்கும் கசையடிகளுக்கும் ஆளாயினர்; விலங்கிடப்பட்டுச் சிறையில்கூட அடைக்கப்பட்டனர். சிலர் கல்லெறிபட்டனர்; இரண்டாக அறுக்கப்பட்டனர்; வாளுக்கு இரையாகி மடிந்தனர்; செம்மறியின் தோலையும் வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு அலைந்து திரிந்தனர்; வறுமையுற்று வாடினர்; துன்புறுத்தப்பட்டனர்; கொடுமைக்கு உள்ளாயினர். அவர்களை ஏற்க இவ்வுலகுக்குத் தகுதியில்லாமல் போயிற்று. மலைகளிலும் குகைகளிலும் நிலவெடிப்புகளிலும் பாலைவெளிகளிலும் அவர்கள் அலைந்து திரிந்தார்கள்.

இவர்கள் அனைவரும் தம் நம்பிக்கையினாலே நற்சான்று பெற்றார்கள். ஆயினும் கடவுள் வாக்களித்ததை அவர்கள் பெறவில்லை. ஏனெனில், நம்மோடு இணைந்துதான் அவர்கள் நிறைவுபெற முடியும் என்பதைக் கடவுள் கருத்தில் கொண்டு, நமக்காகச் சிறந்த திட்டம் ஒன்றை வகுத்திருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 31: 19-20a,20bc. 21. 22. 23 (பல்லவி: 24 காண்க)

பல்லவி: ஆண்டவரை நம்புவோரே, உங்கள் உள்ளம் உறுதி கொள்வதாக.

19
உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி!
20a
மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! - பல்லவி

20bc
நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! - பல்லவி

21
ஆண்டவர் போற்றி! போற்றி! ஏனெனில், முற்றுகையிடப்பட்ட நகரினில், அவர் தம் பேரன்பை வியத்தகு முறையில் எனக்கு விளங்கச் செய்தார். - பல்லவி

22
நானோ, கலக்கமுற்ற நிலையில் ‘உமது பார்வையினின்று விலக்கப்பட்டேன்’ என்று சொல்லிக்கொண்டேன்; ஆனால், நான் உம்மிடம் உதவிக்காக வேண்டினபோது, நீர் என் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தீர். - பல்லவி

23
ஆண்டவரின் அடியார்களே, அவரிடம் அன்பு கொள்ளுங்கள்; ஆண்டவர் பற்றுறுதியுடையோரைப் பாதுகாக்கின்றார்; ஆனால், இறுமாப்புடன் நடப்போர்க்கு அவர் முழுமையாய்ப் பதிலடி கொடுக்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-20

அக்காலத்தில்

இயேசுவும் அவர் சீடரும் கடலுக்கு அக்கரையில் இருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகை விட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால் கூடக் கட்டிவைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்.

அவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு, ஓடிவந்து அவரைப் பணிந்து, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்” என்று உரத்த குரலில் கத்தினார். ஏனெனில் இயேசு அவரிடம், “தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ” என்று சொல்லியிருந்தார். அவர் அம்மனிதரிடம், “உம் பெயர் என்ன?” என்று கேட்க அவர், “என் பெயர் ‘இலேகியோன்', ஏனெனில் நாங்கள் பலர்” என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாம் என்று அவரை வருந்தி வேண்டினார்.

அங்கே மலைப் பகுதியில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. “நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்” என்று தீய ஆவிகள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.

பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.

அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடுகூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


எனது உறைவிடம் எது? 


உறைவிடம் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. தன்னுடைய உறைவிடத்தில் தான் ஒரு மனிதன் தன்னையே தானாக உணர்கிறான். சுதந்திரத்தை அனுபவிக்கிறான். அமைதியைக் காண்கிறான். இத்தகைய உறைவிடத்தை தூய்மையாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகிறது. மாறாக இவ்வுறைவிடத்தை அசுத்தமாகவும் நேர்த்தியாகவும் நாம் வைக்காத போது நமக்குள்ளாகவே ஒருவித சஞ்சல உணர்வுகளை நாம் உணர்கிறோம். அல்லவா?


அதேபோல நமது ஆன்மாவும் நமக்கு ஒரு உறைவிடம். இவ்வுறைவிடத்தை தூய்மையாகவும் நேர்த்தியாகவும் நாம் வைத்திருந்தால்தான் நம் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பல சமயங்களில் இவ்வுறைவிடத்தை நாம் கவனித்துக்கொள்ளாமல் தேவையற்றவற்றை உள்நுழைய அனுமதித்து விடுகிறோம். 


இன்றைய நற்செய்தி வாசகத்தில் தீய ஆவி பிடித்தவரை இயேசு குணமாக்குகிறார் என்பதை நாம் வாசிக்கிறோம். அத்தீய ஆவி பிடித்தவரைப் பற்றி கூறும் போது "கல்லறையே அவரது உறைவிடம் " என்ற வார்த்தை தரப்பட்டடுள்ளது. கல்லறை என்பது நாம் அறிந்தவாறே இறந்த உடல்களை அடக்கம் செய்யும் இடம். அங்கே தூய்மை இல்லை. பயம் நிறைந்திருக்கும். அச்சம் கலந்த அமைதிதான் இருக்கும். யாரும் இவ்விடத்தை விரும்புவதில்லை. 


 நம் அன்றாட வாழ்க்கை சூழல்களில் நாமே நம் வாழ்க்கையை கல்லறை போன்று மாற்றிவிடுகிறோம். நம்முடைய சுயநலம், பாவமோகங்கள், மாயக்கவர்ச்சிகள், பகை, பேராசை போன்றவற்றை நம்மை ஆட்கொள்ளவைத்து நம் ஆன்மா என்ற உறைவிடத்தை கல்லறை போல மாற்றி அதிலேயே நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 


நம் ஆன்மா என்ற உறைவிடத்தில் வாழ விரும்பும் இயேசுவை நாம் கண்டு கொண்டு இத்தகைய அசுத்த ஆவிகளை வெளியேறச் செய்தால் நம் ஆன்மா கடவுளின் உறைவிடமாகும். கடவுள் நம் உறைவிடமாவார். நமது உறைவிடத்தை தூய்மையாக நேர்த்தியாக அமைத்துக்கொள்ள நாம் தயாரா? இயேசுவை அணுகிச் செல்வோம்.


 இறைவேண்டல் 

அன்பு இறைவா  எங்கள் உள்ளமாம் உறைவிடத்திலுள்ள தீயவற்றை நீக்கி உமது உறைவிடமாக்கும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Saturday, January 28, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (29-01-2023)

 

பொதுக்காலம் 4ஆம் வாரம் - ஞாயிறு



முதல் வாசகம்

ஏழ்மையும் எளிமையும் உள்ள மக்களை உன் நடுவில் விட்டுவைப்பேன்.

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 2: 3, 3: 12-13

செப்பனியா கூறியது: நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்; நேர்மையை நாடுங்கள்; மனத் தாழ்மையைத் தேடுங்கள்; ஆண்டவரது சினத்தின் நாளில் ஒருவேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும்.

“ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்; அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள். இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள்; வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது; அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்".

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 146: 7. 8-9a. 9bc-10 (பல்லவி: மத் 5: 3)

பல்லவி: ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களதே.

அல்லது: அல்லேலூயா.

7
ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். - பல்லவி

8
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.
9a
ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். - பல்லவி

9bc
அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்துவிடுகின்றார்.
10
சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். - பல்லவி

இரண்டாம் வாசகம்

வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைக் கடவுள் தேர்ந்துகொண்டார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 26-31

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனை பேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடிமக்கள் எத்தனை பேர்?

ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்துவிட, அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார். எவரும் கடவுள் முன் பெருமை பாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார்.

அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார். எனவே மறைநூலில் எழுதியுள்ளவாறு, “பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 12a

அல்லேலூயா, அல்லேலூயா! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

எளிய உள்ளத்தோர் பேறுபெற்றோர்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12a

இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவர் அருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:

“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


 இறையாட்சியின் மதிப்பீடுகளின் படி வாழ தயாரா?


நாம் கடவுளின் பார்வையில் பேறுபெற்றவர்களாக வாழ வேண்டுமெனில் மலைப்பொழிவின் வழியாகஇயேசு நமக்கு விட்டுச் சென்றநல்ல மதிப்பீடுகளை வாழ்வாக்க முயற்சி செய்வோம். மலைப்பொழிவின் வழியாக புதிய இஸ்ரயேல் மக்களாகிய நம் ஒவ்வொருவரும் எப்படிப்பட்ட இறையாட்சி மக்களாக வாழ வேண்டும் அறிவுறுத்தும் விதமாக இயேசு பறைசாற்றியுள்ளார்.


ஆங்கில அறிஞர் ஒருவர் "இந்தியாவில் ஒரே ஒரு கிறிஸ்தவர் மட்டும் இருந்தார். அவரும் திருமுழுக்கு பெறாதவர்" என்று மகாத்மா காந்தியை பற்றி புகழ்சாற்றியுள்ளார். "இந்துக்களின் புனித புத்தகமாகிய பகவத் கீதையை நான் இழக்க நேரிட்டாலும், கிறிஸ்துவின் மலைப்பொழிவின் ஒரு பிரதி இருந்தால் எனக்குப் போதும் " என்று சொல்லும் அளவுக்கு மலைப்பொழிவு பகுதியானது மகாத்மா காந்தியின் உள்ளத்தில் இடம் பிடித்தது.


இயேசு மலைப்பொழிவின் வழியாக எட்டு பேறுகளைப் பற்றி கூறியுள்ளார். நாம் அனைவரும் எப்படிப்பட்ட இறையாட்சியின் மக்களாக வாழ வேண்டும் என்பதை மலைப்பொழிவின் வழியாக கூறியுள்ளார். அவற்றின் பொருளையும் அவை தருகின்ற அழைப்பையும் சற்று தியானிப்போம்.


ஏழையரின் உள்ளதோர் என்ற வார்த்தையின் பொருள் இறைவன் மீது நாம் கொண்டிருக்கக்கூடிய தாழ்மையான சார்பு மனநிலையை சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது. நமக்கு எவ்வளவு பணம், புகழ், பட்டம், பதவி இருந்தாலும் அனைத்தும் இறைவனுக்கு முன்னால் ஒன்றும் இல்லை; இறைவன் மட்டுமே எல்லாவற்றிற்கும் உயர்ந்தவர் என ஆழமாக உணரும் பொழுது நாம் பேறுபெற்றவர்களாக மாறுகிறோம். எனவே இறைவனின் அருளின் மீது தாழ்மையான சார்பு மனநிலையை கொண்டிருக்க நாம் முயற்சி செய்வோம்.


 துயருறுவோர் பேறுபெற்றோர் என்பதன் பொருள் இந்த சமூக கட்டமைப்பின் வழியாக மக்கள் படும் அடிமை நிலையைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது. கடவுள் துன்பப்படுபவர்களின் சார்பாக இருக்கின்றார். நம் வாழ்வில் துன்பம் வரும் பொழுது கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை முற்றிலும் நம்ப வேண்டும். அப்பொழுது நிச்சயமாக நாம் பேறுபெற்றவர்களாக வாழ முடியும்.


கனிவுடையோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது கடவுள் முன் சிறியவர்களாகவும் கனிவு உள்ளவர்களாகவும் வாழ்பவர்களுக்கு இறைவன் நன்மை செய்வார் என்பதை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. ஞானிகளுக்கும் வலிமையானவர்களுக்கும் நன்மை கிடைப்பதை விட கடவுள் முன்பாக வாழும் சிறியவர்களுக்கும் எளியவர்களுக்கும் கனிவு நிறைந்தவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்பதை மிகத் தெளிவாக ஆண்டவர் இயேசு எடுத்துரைத்துள்ளார்.


நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது நீதியின் படி இறைவனின் திட்டத்தை ஏற்று நடப்பதை சுட்டிக் காட்டுகிறது. புனித சூசையப்பர் இறைவனின் திட்டத்தை ஏற்று நடந்தது போல நாமும் நடக்க அழைக்கப்படுகிறோம். இறைவனின் திட்டத்தின்படி வாழும் பொழுது நிச்சயமாக நாம் நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டவர்களாக வாழ முடியும். அதன் வழியாக பேறுபெற்றவர்களாக மாற முடியும்.


இரக்கமுடையோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது தாராள மனப்பான்மை, மன்னித்தல், துன்புறுவோருக்கு இரக்கம், குணமளிக்கும் பண்பு போன்ற மதிப்பீடுகளை வாழ்வாக்குவதாகும். நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இரக்க குணம் உள்ளவர்களாக இருக்கும் பொழுது பேறுபெற்ற மக்களாக மாறுகிறோம். 


தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது நம்முடைய தார்மீக நேர்மைத்தனத்தை சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது. கடவுளுக்கு முன்பாக தூய்மையோடும் நேர்மையோடும் கண்ணியத்தோடும் வாழும்பொழுது நாம் பேறுபெற்ற மக்களாக மாறுகிறோம். இதைத்தான் திருத்தூதர் பவுல் " உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள்" பிலிப்பியர் 4:8 என கூறியுள்ளார். எனவே நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தூய்மை நிறைந்தவர்களாக வாழ முயற்சி செய்வோம்.


அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது தனி மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள உறவுகளின் அமைதியை சுட்டிக்காட்டும் விதமாக இருக்கின்றது. எனவே தனிப்பட்ட முறையிலே நம்முடைய உடல் உள்ளம் ஆன்மா ஆழ்மன அமைதியை பெற்றிட நம்மோடும் நல்லுறவோடு இருக்க வேண்டும். நம்மை நாம் மதிக்க வேண்டும். கடவுள் கொடுத்த இந்த உடல் அமைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். கடவுள் நமக்கு கொடுத்த வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். கடவுள் நமக்கு கொடுத்த கொடைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறாக ஏற்றுக் கொள்ளும் பொழுது நாம் அனைவரும் கடவுளோடு நல்லுறவு கொள்ள முடியும். கடவுளோடு நல்லுறவு கொள்பவர்கள் நிச்சயமாக பிறரோடும் நல்லுறவு கொள்ள முடியும். அப்பொழுது நிச்சயமாக இறைவன் தருகின்ற அமைதியை நாம் பெற்று பேறுபெற்ற மக்களாக நாம் மாற முடியும்.


இறுதியாக நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது நாம் நீதியின் பால் வாழக்கூடிய மக்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நாம் நீதி நெறியோடு வாழும் பொழுது அதிகமான துன்பங்களையும் சவால்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ள நேரிடும். ஆனால் அவற்றைக் கண்டு கலங்காமல் துணிவோடு நீதியின் பால் செயல்படும் பொழுது பேறுபெற்ற மக்களாக நாம் வாழ முடியும். 


எனவே கடவுளுடைய இறையாட்சியின் மதிப்பீடுகளின் படி நாம் வாழ மேற்கூறப்பட்ட எட்டு மலைப்பொழிவின் போதனைகளையும் நாம் வாழ்வாக்க முயற்சி செய்வோம். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் பேறுபெற்ற மக்களாக வாழ்ந்திடவும் மலைப்பொழிவின் வாழ்வியல் மதிப்பீடுகளை வாழ்வாக்கி இறையாட்சியின் தூதுவர்களாக மாறிடவும் தேவையான அருளை தாரும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...