Showing posts with label பொதுக்காலம் 31 வாரம்-B. Show all posts
Showing posts with label பொதுக்காலம் 31 வாரம்-B. Show all posts

Friday, November 4, 2022

கத்தோலிக்க தூதன் மின்னிதழ் -05-11-2022

 



கத்தோலிக்க தூதன் மின்னிதழ் -05-11-2022

 பதிவிறக்கம் PDF கிளிக் செய்யவும்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (05-11-2022)

 

பொதுக்காலம் 31ஆம் வாரம் - சனி

முதல் வாசகம்



எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 10-19

சகோதரர் சகோதரிகளே,

என்னைப் பற்றிய அக்கறை இப்பொழுதாவது மீண்டும் உங்களிடையே எழுந்தது கண்டு ஆண்டவர் அருளால் நான் பெரிதும் மகிழ்கிறேன். நீங்கள் என்னைப் பற்றி அக்கறை கொண்டிருந்தீர்கள் என்பது உண்மைதான். ஆனால் அதைக் காட்டிக்கொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கவில்லை. எனக்கு ஏதோ குறைவாய் இருப்பதால் இவ்வாறு சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். ஏனெனில் எந்நிலையிலும் மனநிறைவோடு இருக்கக் கற்றுக்கொண்டுள்ளேன்.

எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன். எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு. ஆயினும் நான் பட்ட துன்பத்தில் நீங்கள் பங்கு கொண்டது உங்கள் நன்மனத்தைக் காட்டுகிறது.

பிலிப்பியர்களே, நான் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கின காலத்தில், மாசிதோனியாவை விட்டுச் சென்றபிறகு, உங்களைத் தவிர வேறெந்தத் திருச்சபையும் என் வரவு செலவில் பங்கேற்கவில்லை. இதை நீங்களும் அறிவீர்கள். ஏனெனில் நான் தெசலோனிக்காவில் இருந்தபோது கூட என் தேவையை நிறைவு செய்ய ஒரு முறை மட்டுமல்ல, இரு முறை உதவி அனுப்பினீர்கள். நான் உங்கள் நன்கொடைகளை நாடவில்லை; மாறாக, உங்கள் கணக்கில் நற்பயன்கள் பெருகவேண்டும் என்றே விரும்புகிறேன். நீங்கள் அனுப்பியதெல்லாம் பெற்றுக்கொண்டேன். இப்பொழுது என்னிடம் நிறையவே இருக்கிறது. நீங்கள் அனுப்பியவற்றை எப்பப்பிராதித்துவிடமிருந்து பெற்றுக்கொண்டு நிறைவுற்றிருக்கிறேன். அவை நறுமணம் வீசும் காணிக்கையும் கடவுளுக்கு ஏற்புடைய, உகந்த பலியும் ஆகும்.

என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 112: 1-2. 5-6. 8ab,9 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.

அல்லது: அல்லேலூயா.

1
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
2
அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். - பல்லவி

5
மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.
6
எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். - பல்லவி

8ab
அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது.
9
அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 8: 9

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள். மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?

எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது."

பண ஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர். அவர் அவர்களிடம் கூறியது: “நீங்கள் உங்களை மக்கள்முன் நேர்மையாளராகக் காட்டிக்கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்வது கடவுள் பார்வையில் அருவருப்பாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.



நேர்மையும் மனநிறைவும்!

செல்வந்தர் ஒருவரின் வீட்டில்  கணக்காளராக ஒருவர் பணிசெய்து வந்தார்.பல வருடங்களாக அங்கே வேலைசெய்தாலும் அவருடைய வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் இல்லை.வாடகை வீட்டில் தான் வசித்தார்.எளிமையாக வாழ்ந்தார்.தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்து சிக்கனமாகவும் தன் வருமானத்தை செலவிட்டார். தன்னுடைய மனைவியோ பிள்ளைகளோ மனநிறைவு இன்றி குறைகூறும் போது அதை அவர் சட்டை செய்வதில்லை.மாறாக தம்மை விட வாழ்வில் சிரமப்படும் எளியவர்களை நினைத்து ஆறுதல் அடைந்து கொள்வார். எத்தனையோ பேர் "இவன் பிழைக்கத் தெரியாதவன்."என்று கூறுவர். பலர்  ஆசைவார்த்தைகள் கூறி தவறாக வழிநடத்தவும் செய்வர். ஆயினும் தன்னுடைய நேர்மையைக் கைவிடவில்லை.பணம் சம்பாதிக்கவில்லை என்றாலும் நேர்மையாளர், நம்பிக்கைக்குரியவர் என்ற பெயரை சம்பாதித்தார்.


நேர்மையாளராக இருக்க இன்றைய நற்செய்தியின் வழியாக நாம் அழைக்கப்படுகிறோம்.

"மிகச் சிறியவற்றில் நம்பத்வகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத்தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்."என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுவது நம் எல்லாருடைய வாழ்வையும் அலசிப்பார்க்க நம்மை அழைக்கிறது.நாம் எல்லாருமே ஏதாவது ஒருகாரியத்திற்கு பொறுப்பாளராக இருக்கிறோம். நமக்கென்று சில வேலைகள் தரப்பட்டுள்ளன்.  "இவரிடம் இப்பணியைக் கொடுத்தால் இவர் அதை நிச்சயம் சிறப்பாகச் செய்வார்"என்ற நம்பிக்கையுடன் தான் பலவேளைகளில் நாம் பொறுப்புகளில் அமர்த்தப்படுகிறோம்.ஆனால் அதை நாம் உணர்கிறோமா ? 


பல சமயங்களில் நம் கடமைகளை நிறைவேற்ற நாம் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. சரியான திட்டங்கள் தீட்டுவதில்லை. காலத்தை வீணாக விரயம் செய்துவிட்டு இறிதியில் ஏனோதானோவென்று கடமைக்காக பணிகளைச் செய்வதும் உண்டு. இவையெல்லாம் நேர்மையற்ற மனநிலைக்கு எடுத்துக்காட்டுகள்.

சின்னச் சின்னப் பொறுப்புகளைக் கூட சிறப்பாகச் செய்யும் போது நம்முடைய நம்பகத் தன்மையையும் நேர்மையையும் கண்டு பெரிய காரியங்கள்  நம்மைத் தேடி வந்து பெருமைப்படுத்தும்.

ஆம் அன்பு சகோதர சகோதரிகளே இத்தகைய பொறுப்புள்ள நம்பத்தகுந்த நேர்மையான பணியாளர்களாக வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.இறையாட்சியைக் கட்டியெழுப்பவும் இறை இயேசிவின் இரண்டாம் வருகையை எதிர்கொள்ளவும் இப்பண்பு நமக்கு மிக மிக அவசியமாகிறது.


இத்தகைய நேர்மையான பணியாளராய் விளங்க நாம் கொண்டிருக்க வேண்டிய முக்கியமான பண்பு "மன நிறைவு".மனநிறைவு என்பது அனைத்தையும் கடவுளின் கொடையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பண்பு. இருப்பது போதும் என்ற உணர்வு பேராசையிலிருந்தும் பிறரோடு நம்மைத் தாழ்வாக ஒப்பிட்டுப் பார்க்கும் குணத்திலிருந்தும் பாதுகாக்கிறது.நம் தேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது நன்றி உணர்வையும் வளர்கிறது.  இதையே நம் ஆன்றோர்கள் "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்று கூறுவர். புனித பவுல் "எனக்கு வறுமையிலும் வாழத்தெரியும். வளமையிலும் வாழத்தெரியும்" என்ற வார்த்தைகளால் மனநிறைவு என்ற சிறந்த பண்பு தன்னகத்தே உள்ளதை நீரூபிக்கிறார்.இந்த உயரிய பண்பு நலன் நம்மை குறுக்கு வழியில் சென்று தேவைகளை நிறைவேற்றலாம் என்ற சிந்தனையிலிருந்து விலக்கி நேர்மையாளராக வாழ ஊக்குவிக்கிறது. மேலும் நேர்மையளராய் வாழ்வது கடவுளின் வல்லமையாலேயே.

எனவே மனநிறைவும் நேர்மையும் கொண்ட சிறந்த பணியாளர்களாய் வாழ முயற்சிப்போம். இறையருள் வேண்டுவோம்.


 இறைவேண்டல்

அன்பு இறைவா! இருப்பதில் மனநிறைவு காணும் மக்களாக எம்மை மாற்றும்.  இதனால் நாங்கள் தேவையற்ற ஆசைகளை விலகக்கி எங்களுக்குக் கொடுக்கப்ட்ட பொறுப்புகளை நேர்மையான உள்ளத்தோடு செய்யும் நல்ல பணியாளர்களாய் வாழ அருள் தாரும். ஆமென்.




† இன்றைய புனிதர் †

(நவம்பர் 5)
✠ அருளாளர் பெர்னார்ட் லிச்டென்பெர்க் ✠
(Blessed Bernhard Lichtenberg)


கத்தோலிக்க குரு, இறையியலாளர் மற்றும் மறைசாட்சி:
(Catholic Priest, Theologian, and Martyr)

பிறப்பு: டிசம்பர் 3, 1875
ஓலாவ், புருஸ்ஸியன் சிலேசியா, புருஸ்ஸியா இராச்சியம், ஜெர்மன் பேரரசு
(Ohlau, Prussian Silesia, Kingdom of Prussia, German Empire)

இறப்பு: நவம்பர் 5, 1943 (வயது 67)
பெர்லினிலிருந்து ஜெர்மனியின் டச்சாவ் வதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டபோது
(While being transported from Berlin to Dachau concentration camp, Germany)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (ஜெர்மனி)
(Roman Catholic Church (Germany)

முக்திப்பேறு பட்டம்: ஜூன் 23, 1996
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

முக்கிய திருத்தலம்:
செயின்ட் ஹெட்விக் கதீட்ரல், பெர்லின், ஜெர்மனி
(St. Hedwig's Cathedral, Berlin, Germany)

நினைவுத் திருவிழா: நவம்பர் 5

அருளாளர் பெர்னார்ட் லிச்டென்பெர்க், ஒரு கத்தோலிக்க குருவும், இறையியலாளரும், மற்றும் மறைசாட்சியுமாவார். கத்தோலிக்க திருச்சபையினால் முக்திப்பேறு பட்டமளிக்கப்பட்ட இவருக்கு, "நாடுகளிடையே நீதிமான்" (Righteous among the Nations) என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மானிய நாட்டை சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லரும், அவரது நாஜிக்களும் ஆண்ட காலத்தில், நாஜிக்களால் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த இவர் மறைசாட்சியாக மரித்தார்.

"ஜெர்மன் பேரரசின்" (German Empire) "புருஸ்ஸியா இராச்சியத்தின்" (Kingdom of Prussia) "புருஸ்ஸியன் சிலேசியா" (Prussian Silesia) மாநிலத்தின் "ஓலாவ்" (Ohlau) எனுமிடத்தில், கி.பி. 1875ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 3ம் நாளன்று பிறந்த பெர்னார்ட் லிச்டென்பெர்க், மேற்கு ஆஸ்திரியாவின் (Western Austria) "டைரோல்" (Tyrol) மாநிலத்தின் தலைநகரான "இன்ஸ்ப்ரக்" (Innsbruck) நகரில் இறையியல் பயின்ற இவர், கி.பி. 1899ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். ஜெர்மனி (Germany) நாட்டின் தலைநகரான பெர்லின் (Berlin) நகரில், கி.பி. 1900ம் ஆண்டு, தமது மறைப்பணியை தொடங்கிய இவர், முதலாம் உலகப்போரின்போது, (World War I) இராணுவ குருவாக (Military Chaplain) சேவையாற்றினார்.

1932ம் ஆண்டில், பெர்லின் ஆயர், (Bishop of Berlin) அவரை புனித ஹெட்விக் கதீட்ரல் மறைப்பணியாளர்களின் கல்லூரியின் (Cathedral Chapter of St. Hedwig) சட்ட நியதியாக நியமித்தார்.

எரிச் மரியா ரெமார்க்ஸின் போர் எதிர்ப்பு திரைப்படமான "ஆல் க்யூட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்" (All Quiet on the Western Front) திரைப்பட பதிப்பைக் காண்பதற்கு கத்தோலிக்கர்களை அவர் ஊக்குவித்தது, ஜோசப் கோயபல்ஸின் (Joseph Goebbels) டெர் ஆங்ரிஃப் ஒரு மோசமான தாக்குதலைத் தூண்டியது. 1933ம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் இரகசிய உளவுத்துறை காவல்துறையினர் முதன்முதலாக அவரது இல்லத்தை சோதனையிட்டார்கள்.

மத்திய கட்சியில் (Centre Pary) தீவிர செயல்பாட்டாளராக விளங்கிய இவர், 1935ம் ஆண்டு, ஜெர்மன் (Jerman) அரசியல் மற்றும் இராணுவ தலைவர்களில் ஒருவரும், நாஜிக்களின் முக்கிய பிரமுகருமான "ஹெர்மன் கோரிங்" (Hermann Göring) என்பவரின் முன்னிலையில், நாஜிக்களின் சித்திரவதை முகாம்களின் கொடுமைகளை எதிர்த்து போராடச்சென்றார்.

கதீட்ரலின் புரோவோஸ்ட் என்று பெயரிடப்பட்ட, 1938 ஆம் ஆண்டில், லிச்சன்பெர்க் பேர்லின் எபிஸ்கோபட்டின் நிவாரண அலுவலகத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டார், இது யூத வம்சாவளியைச் சேர்ந்த பல கத்தோலிக்கர்களுக்கு மூன்றாம் ரைச்சிலிருந்து குடியேற உதவியது. "கதீட்ரலின் புரோவோஸ்ட்" (Provost of the Cathedral) என்ற பதவியிலமர்த்தப்பட்ட இவர், 1938ம் ஆண்டில், எபிஸ்கோபட்டின் நிவாரண அலுவலகத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டார். இது யூத வம்சாவளியைச் சேர்ந்த பல கத்தோலிக்கர்களை நாஜிக்களின் ஜெர்மனியிலிருந்து புலம்பெயர்ந்து வெளியேற குடியேற உதவியது.

ஜெர்மனியில் முதன்முதலில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட "நவம்பர் படுகொலை" (November Pogrom) அல்லது "கிறிஸ்டால்நாட்ச்" (Kristallnacht) படுகொலைகளின் பின்னர், லிச்சன்பெர்க், பெர்லின் நகரின் "செயிண்ட் ஹெட்விக்" தேவாலயத்தில் "வெளியே எரியும் ஜெப ஆலயமும் கடவுளின் வீடுதான்" என்று வெளிப்படையாக எச்சரித்தார். 1941ம் ஆண்டு, அக்டோபர் மாதம், தாம் கைது செய்யப்படும்வரை, லிச்சன்பெர்க் தினசரி வெஸ்பர்ஸ் சேவையில் (Vespers service) துன்புறுத்தப்பட்ட யூதர்களுக்காக பகிரங்கமாக ஜெபித்தார். ஆயர் "கொன்ராட் வான் ப்ரீசிங்" (Konrad von Preysing) பின்னர் நகரத்தின் யூத சமூகத்திற்கு உதவுவதற்கான பணியை அவரிடம் ஒப்படைத்தார்.

நோய்வாய்ப்பட்ட மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும், யூத மக்களையும், கைதுசெய்து துன்புறுத்துவதற்கும் கொலை செய்வதற்கும் எதிராக அவர் நாஜி அதிகாரிகளுக்கு நேரில் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவர்களை எதிர்த்துப் போராடினார். முதலில், நாஜிக்கள் பாதிரியாரை ஒரு தொல்லை என்று தள்ளுபடி செய்தனர். தந்தை லிச்சன்பெர்க் தனது நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்படும் அபாயத்தில் இருப்பதாக எச்சரிக்கப்பட்டார். ஆனாலும் அவர் தமது போராட்டங்களை தொடர்ந்தார்.

"டச்சாவ்" (Dachau) போன்ற சித்திரவதை முகாம்களின் துன்புறுத்தல்கள் குறித்து, சில முகாம்களுக்கு வெளியே அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தார்.

1941ம் ஆண்டில், லிச்சன்பெர்க், தன்னிச்சையான கருணைக்கொலை திட்டத்திற்கு எதிராக "ரீச்" நகரின் தலைமை மருத்துவர் (Chief Physician of the Reich), பொது சுகாதார அமைச்சர் (Minister of Public Health) "லியோனார்டோ கான்டி" (Leonardo Conti) (1900-1945) என்பவருக்கு எழுதிய கடிதத்தில் தமது எதிர்ப்பை பின்வருமாறு தெரிவித்தார்:
"நான், ஒரு மனிதனாக, ஒரு கிறிஸ்தவனாக, ஒரு பாதிரியாராக, மற்றும் ஒரு ஜேர்மனியனாக, உங்களுடைய ஆட்சியில் உங்கள் அதிகாரத்தாலும் ஒப்புதலாலும் நடைபெறும் குற்றம் - கொலைகளுக்கு நீங்கள் பதில் அளிக்கவேண்டுகிறேன். உங்களுடைய இத்தகைய பாவச் செயல்களால் ஜெர்மானிய மக்கள் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்."

நாஜி ஜெர்மனியின் சுகாதார நிறுவனங்களில் நடைபெற்ற கருணைக்கொலைகளுக்கு எதிராக கிறிஸ்தவ திருச்சபைகள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அத்தகைய செயல்கள் விரைவில் நிறுத்தப்பட்டது. முக்கிய, மிகவும் போற்றப்பட்ட மதகுருமார்கள் மற்றும் பிற எதிர்ப்பாளர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்ற நாஜி தலைவர்களின் முடிவினால், - அவர்கள் பெரிதும் அஞ்சிய எதிர்மறையான பொதுமக்களின் எதிர்பின் அடிப்படையில் விளைவுகளைக் கொண்ட ஒருநெறி - அல்லது திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்கள்.

1941ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 23ம் நாளன்று, லிச்சன்பெர்க் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். திருத்தமுடியாத குற்றவாளி என்று அவரை தீர்மானித்ததால், அவரை அவர் "டச்சாவ் சித்திரவதை முகாமுக்கு" (Dachau Concentration Camp) அனுப்பினார்கள். ஆனால், பயணத்தின் நடுவே, 1943ம் ஆண்டு, நவம்பர் மாதம், 5ம் நாளன்று, "பவேரியா"வின் (Bavaria) "ஹோஃப்" (Hof) நகரில் அவர் சரிந்து விழுந்து மரித்தார்.

(நாஜி ஜெர்மனி பற்றின சிறு குறிப்பு):
நாஜி ஜெர்மனி என்பது, அடால்ப் ஹிட்லர் மற்றும் அவரது நாஜி கட்சியின் கீழ் இருந்த ஜெர்மனி நாட்டை குறிக்க வழங்கப்படும் ஆங்கிலப் பெயராகும். ஹிட்லர், ஜெர்மனியை 1933 முதல் 1945ம் ஆண்டுவரை சர்வாதிகாரியாக ஆண்டார். இவரது ஆட்சிக்காலத்தில் ஜெர்மனி உலகின் பெரிய பாசிச சக்தியாக உருவெடுத்தது.

ஹிட்லரின் நாடுபிடிக்கும் ஆசையால் ஐரோப்பா முழுவதும் பதட்டம் நிலவியது. இது இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டது. போர் காலத்தில் இந்நாடு மனித குலத்துக்கு எதிரான குற்றச் செயல்களில் பெருமளவில் ஈடுபட்டது. நாஜி படைகள் இரண்டாம் உலகப்போரில் தோற்கடிக்கப்பட்ட பின்பு நாஜிக்களின் ஆட்சி ஜெர்மனியில் முடிவுக்கு வந்தது.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Thursday, November 3, 2022

கத்தோலிக்க தூதன் மின்னிதழ் -04-11-2022

 

கத்தோலிக்க தூதன் மின்னிதழ் -04-11-2022

 பதிவிறக்கம் PDF கிளிக் செய்யவும்


Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (04-11-2022)

 

பொதுக்காலம் 31ஆம் வாரம் - வெள்ளி

முதல் வாசகம்



மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 17- 4: 1

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் அனைவரும் என்னைப் போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள். கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே.

நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்.

ஆகவே என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, என் வாஞ்சைக்கு உரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை; அன்பர்களே, ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 122: 1-2. 4-5 (பல்லவி: 1)

பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரின் இல்லத்திற்குப் போவோம்.

1
“ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
2
எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி
4    ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல்     மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.
5
அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 யோவா 2: 5

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் என அதனால் அறிந்து கொள்ளலாம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-8

அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது.

தலைவர் அவரைக் கூப்பிட்டு, ‘உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்.

அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப்போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார். பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை கோதுமை’ என்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.

நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.



முன்மாதிரியாக வாழ்வோமா?

பிறருக்கு முன்மாதிரியாய் வாழ்வது என்பது மிக எளிமையான காரியமல்ல. அவ்வாறு வாழ்வதற்கு நாம் சொல்பவற்றையும் பிறர் எவ்வாறு இருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோமோ அவ்வாறே வாழ்பவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். இன்றைய முதல்வாசகத்தில் நம்மை பிறருக்கு முன்மாதிரியாக வாழ அழைக்கிறார் புனித பவுல். அதுவும் தன்னைச் சுட்டிக் காட்டி என்னைப்போல் வாழுங்கள் என்று கூறுகிறார்.

ஒரு இளைஞனும் முதியவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.அப்போது முதியவர் இளைஞனை நோக்கி இக்கால இளைஞர்கள் தவறான பாதையில் தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்வதாக குற்றம்சாட்டினார்.மேலும் அவர்களுக்கு யாரைப் பின்பற்றுவது எனத் தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை என்றும் வாதிட்டார். அதற்கு காரணம் முதியவர்கள் தங்களுக்கு சிறந்த முன்மாதிரிகளாய் இல்லாததே என்று பதிவுசெய்தார் அந்த இளைஞர்.அதைக்கேட்ட அம்முதியவர் "நீங்கள் ஏன் முன்மாதிரிகளைத் தேடுகிறீர்கள். நீங்களே முன்மாதிரிகளாய் வாழ முயலுங்கள் "என்றார். இவ்வார்த்தைகள் இளைஞனின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இயேசு நமக்குச் சிறந்த முன்மாதிரி. அவர் இறைவனோடு இணைந்திருக்கச் சொன்னார்.அவர் இறைவேண்டலில் நிலைத்திருந்தார். பாவம் செய்யாதிருக்கச் சொன்னார்.அவர் சோதனைக்கு உட்பட்டாலும் அதை வென்று காட்டினார்.பாவிகளை மன்னிக்கவும் அன்பு செய்யவும் சொன்ன அவர் சிலுவை மரணத்தின் பிடியிலும் பாவிகளை மன்னித்து அன்பு செய்தார். இன்னும் எத்தனையோ  வழிமுறைகளில் தான் போதித்தவற்றை வாழ்ந்து காட்டினார். அதனால் தான் அவரை மக்கள் கூட்டம் பின் தொடர்ந்தது. 

இயேசுவை முழுமையாகப் பின்பற்றி வாழ்ந்ததால் புனித பவுலும் என்னைப் பின்பற்றுங்கள் எனப் பெருமிதத்தோடு சொல்ல இயன்றது. 

இன்று நாம் தேடும் முன்மாதிரிகள் யார்?

நம்மில் எத்தனை பேர் மற்றவருக்கு முன்மாதிரிகளாய் இருக்கிறோம்?இயேசுவையும் அவரைப் பின்பற்றி வாழ்ந்தவர்களையும் நம் வாழ்வின் எடுத்துக்காட்டாகக் கொள்கின்றோமா? போன்ற இக்கேள்விகளை நமக்கு நாமே கேட்டுப்பார்த்து நம் வாழ்வை நெறிப்படுத்த வேண்டும். அவ்வாறு நெறிப்படுத்தும் போது ஆண்டவரோடுள்ள உறவில் நம்மால் நிலைத்திருக்க முடியும்.

மேலும் இன்றைய நற்செய்தி நம்மை முன்மதியுடையவராக வாழ அழைக்கிறது. முன்மதி தூய ஆவியார் நமக்கு அருளும் உன்னத கொடை. முன்மதியோடு நாம் வாழும் போது பல இடையூறுகளிடமிருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும். முன்மதி நம்முடைய ஆளுமையை வளர்த்து நம்மை மற்றவருக்கு முன்மாதிரியாகவும் திகழச்செய்யும். எனவே முன்மதியுடைய முன்மாதிரிகளாக வாழ முயற்சிப்போம்.அதற்கான அருளை கடவுளிடம் வேண்டுவோம்.

 இறைவேண்டல்

அன்பு இறைவா! உமது திருமகனை எங்கள் வாழ்வின் முன்மாதிரியாகப் பின்பற்றி, முன்மதியுடையவர்களாய் வாழ அருள் தாரும். இதனால் நாங்கள் எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்து பிறருக்கு முன்மாதிரிகளாய்த் திகழ்வோமாக. ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


† இன்றைய புனிதர் †
✠ புனிதர் சார்லஸ் பொரோமியோ ✠
(St. Charles Borromeo)


கர்தினால், மிலன் பேராயர்:
(Cardinal, Archbishop of Milan)

பிறப்பு: அக்டோபர் 2, 1538
அரோனா கோட்டை, மிலன் ஜமீன்
(Castle of Arona, Duchy of Milan)

இறப்பு: நவம்பர் 3, 1584 (வயது 46)
மிலன்
(Milan)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: மே 12, 1602
திருத்தந்தை எட்டாம் கிளமென்ட்
(Pope Clement VIII)

புனிதர் பட்டம்: நவம்பர் 1, 1610
திருத்தந்தை ஐந்தாம் பவுல்
(Pope Paul V)

நினைவுத் திருவிழா: நவம்பர் 4

பாதுகாவல்:
வயிற்றுப் புணால் அவதியுறுவோர்; ஆப்பிள் தோட்டம்; ஆயர்கள்; திருமுழுக்கு பெற ஆயத்தம் செய்வோரும் அவர்களுக்கு கற்பிப்போரும்; குடல் கோளாறுகள்; லம்பார்தி, இத்தாலி; மான்டெர்ரே, கலிபோர்னியா; குருமட மாணாவர்கள்; ஆன்மீக வழிகாட்டிகள்; ஆன்மீக தலைவர்கள்.

“கௌன்ட் கர்லோ பொரோமியோ டி அரோனா” (Count Carlo Borromeo di Arona) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் சார்லஸ் பொரோமியோ, மிலன் உயர்மறைமாவட்டத்தின் கர்தினால்-பேராயராக கி.பி. 1564ம் ஆண்டு முதல், 1584ம் ஆண்டு வரை பதவியில் இருந்தவர் ஆவார். புனிதர்கள் லொயோலா இஞ்ஞாசி, மற்றும் பிலிப்பு நேரி ஆகியோர் போன்று, இவரும் கத்தோலிக்க மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர் ஆவார். கத்தோலிக்க திருச்சபையினை சீர்திருத்தி, புத்துயிர் அளிக்கும் விதமாக இவர் பல காரியங்களைச் செய்தார். குறிப்பாக குருத்துவத்துக்கான பயிற்சி மடங்கள் பலவற்றை இவர் துவங்கினார். இவர், கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் என ஏற்கப்படுகின்றார்.

வாழ்க்கை சுருக்கம் :
இத்தாலியின் வடமேற்கிலுள்ள “லொம்பார்டி” (Lombardy) பிராந்தியத்தின் மிகவும் பழமையான செல்வந்தர்களான “பொரோமியோ பிரபுக்கள்” (Borromeo Noble family) குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தை, “அரோனா” (Count of Arona) எனும் நகரின் பிரபுவான “கில்பர்ட்” (Gilbert) ஆவார். இவரது தாயாரான “மார்கரெட்” (Margaret) பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். சார்லஸ், தமது பெற்றோரின் ஆறு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர் ஆவார்.

தனது 12ம் வயதில், மடத்தில் சேர்ந்து தனது 25ம் வயதில் குருத்துவத் அருட்பொழிவு பெற்றார். “பவியா பல்கலையில்” (University of Pavia) குடிமைச் சட்டவியல் மற்றும் திருச்சபைச் சட்டவியல் ஆகியவற்றைக் கற்று, கி.பி. 1559ம் ஆண்டும் டிசம்பர் மாதம், 6ம் நாள், முனைவர் பட்டம் பெற்றார்.

இவரது தாயாரின் சகோதரரான (தாய்மாமன்) கர்தினால் “ஜியோவன்னி ஆஞ்செலோ மெடிசி” (Giovanni Angelo Medici) 1559ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 25ம் நாள் திருத்தந்தையாகப் தேர்வுபெற்று, “நான்காம் பயஸ்” (Pope Pius IV) எனும் பெயரை ஏற்றார். புதிதாய் பதவியேற்ற திருத்தந்தை நான்காம் பயஸ், தமது மருமகனான சார்லசை ரோம் நகர் வரவழைத்து, கி.பி. 1560ம் வருடம், ஜனவரி மாதம், 13ம் நாளன்று, “ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பீடாதிபதிகளின் கல்லூரியின் உயர் பதவி உறுப்பினராக” (Protonotary Apostolic) நியமித்தார். அதன் பின்னர், பதினெட்டே நாள் கழித்து, அவர் இவரை கர்தினாலாகவும், மிலன் நகரின் பேராயராகவும் உயர்த்தினார். திருச்சபையை ஆள்வதில் திருத்தந்தைக்கு இவர் பேருதவியாய் இருந்தார். ரோம் நகரில் இருந்துகொண்டு திருச்சபைக்காக பணியாற்றினார். திருத்தந்தையர் மாநிலங்களின் அரசாங்கத்திலும் (Government of the Papal States) அதிகாரம் பெற்றிருந்த இவர், “ஃபிரான்சிஸ்கன்” (Franciscans) சபையினர், “கார்மேல் சபையின்” (Carmelites) ஆண் மற்றும் பெண் துறவியர், மற்றும் “தூய ஜான் இறையாண்மை மருத்துவ சேவை சபையினர்” (Knights of Malta) ஆகியோரின் மேற்பார்வையாளராகவும் இருந்தார்.

கி.பி. 1562-63ம் ஆண்டு காலத்தில் நடந்த “டிரன்ட் சங்கத்தின்” (Council of Trent) மூன்றாம் மற்றும் கடைசி அமர்வுகளை சார்லஸ் பொரோமியோ ஏற்பாடு செய்தார். அந்த சங்கத்தின் தீர்மானங்களை தமது மறைமாவட்டத்தில் நடைமுறைக்கு கொண்டுவந்தார். வடக்கு இத்தாலியிலுள்ள தென்மேற்கு பிராந்தியமான “லொம்பார்டியிலுள்ள” (Lombardy) “பவியா” (Pavia) எனுமிடத்தில் ஒரு கல்லூரியை நிறுவி, அதனை “தூய ஜஸ்டினா” (St. Justina of Padua) எனும் பெயரில் அர்ப்பணித்தார். இக்கல்லூரி, தற்போது “அல்மோ கொலேஜியோ பொரோமியோ” (Almo Collegio Borromeo) என்றழைக்கப்படுகின்றது.

கி.பி. 1566ம் ஆண்டு, திருத்தந்தை நான்காம் பயஸின் மரணத்தின் பின்னர், திருத்தந்தை ஐந்தாம் பயஸின் அனுமதியுடன் இவர் மிலன் நகருக்கு ஆயராக நியமிக்கப்பட்டு பணியாற்றச் சென்றார். தமது மறைமாவட்டத்தை இவர் சீர்திருத்த தொடங்கினார். இவர் செய்த முயற்சிகளால் திருச்சபை செழித்து ஓங்கியது. திருச்சபைக்கு இவர் பல நன்மைகள் செய்தார்.

நாட்டில் கொள்ளைநோய் பரவியபோது, இவர் தம் மக்களின் பாவங்களுக்காக கடவுள் மக்களைத் தண்டிக்கிறார் என்று நம்பி தம்மையே பலிபொருளாக கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தார். தவ ஊர்வலத்தின்போது தெருக்களில் வெறும் காலுடன் நடந்தார். தோளில் ஒரு சிலுவையை தூக்கிச் சென்றார். கழுத்தில் ஒரு கயிற்றை கட்டிக்கொள்வார்.

கல்லூரிகளும் குருமடங்களும் கட்டுவித்து அங்கு குருக்களுக்கு உதவியாக இருக்கும்படி சிறந்த நூல் நிலையம் ஒன்று ஏற்படுத்தினார். கொள்ளை நோய் காலத்தில் நோயாளிகளுடனும் மரண தருவாயில் இருந்தவர்களுடனும் தங்கி அவர்களுக்கு பேருதவி செய்யும்படி தமது உடைமைகளைக் கொடுத்தார்.

கி.பி. 1584ம் ஆண்டு, “மொண்டே வரல்லோ” (Monte Varallo) எனுமிடத்தில், தமது ஆண்டு தியானத்தின்போது, இடைவிடாத காய்ச்சல் மற்றும் மூப்படைதல் நோய்களில் வீழ்ந்த சார்லஸ் பொரோமியோ, மிலன் திரும்புகையில் இவரது நோய் வேகமாகவும் மோசமாகவும் அதிகரித்தது. இறுதி அருட்சாதனங்களைப் பெற்ற இவர், நவம்பர் நான்காம் தேதி, தமது 46 வயதில் அமைதியாக மரித்தார்.

நன்றி : திரு.புஷ்பராஜா


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Wednesday, November 2, 2022

கத்தோலிக்க தூதன் மின்னிதழ் -03-11-2022

 

கத்தோலிக்க தூதன் மின்னிதழ் -03-11-2022

 பதிவிறக்கம் PDF கிளிக் செய்யவும்

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (03-11-2022)

 


பொதுக்காலம் 31ஆம் வாரம் - வியாழன்

முதல் வாசகம்



எனக்கு ஆதாயமான அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 3-8

சகோதரர் சகோதரிகளே,

உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ளாமல், கடவுளின் ஆவிக்கேற்ப வழிபட்டுக் கிறிஸ்து இயேசுவைப் பெருமைப்படுத்தும் நாமே உண்மையான விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள். உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம். உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ள முடியும் என யாராவது நினைத்தால், அவரை விட மிகுதியாக நானும் நம்பிக்கை கொள்ள முடியும். நான் பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற்றவன்; இஸ்ரயேல் இனத்தவன்; பென்யமின் குலத்தவன்; எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன்; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன். திருச்சட்டத்தில் எனக்கிருந்த ஆர்வத்தால் திருச்சபையைத் துன்புறுத்தினேன். திருச்சட்டத்தின் அடிப்படையிலான நீதிநெறியைப் பொறுத்தமட்டில் குற்றமற்றவனாய் இருந்தேன்.

ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன். உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 105: 2-3. 4-5. 6-7 (பல்லவி: 3b)

பல்லவி: ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் மகிழ்வதாக!

2
அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!
3
அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! - பல்லவி

4
ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!
5
அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். - பல்லவி

6
அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!
7
அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-10

அக்காலத்தில்

வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர்.

பரிசேயரும் மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.

அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச் செல்ல மாட்டாரா?

கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்பார்.

அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற்போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?

கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.

அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


உண்மையான மனமாற்றமே ஒப்பற்ற மகிழ்ச்சி!

இருபது வருடங்களுக்கு மேலாக குடிநோயால் பாதிக்கப்ட்டு மனம்மாறிய நபர் ஒருவர் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.மிகவும் பக்தியும் ஒழுக்கமும் உள்ள குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து நல்ல கல்வித்தகுதியை பெற்றவர் அவர். ஆனால் அவருடைய இளமைப் பருவம் அவருடைய வாழ்வையே திசை திருப்பியது. தகாத நண்பர் சேர்க்கையால் குடிப்பழக்கத்திற்கு ஆளானார். அப்பழக்கம் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக அடிமைப் படுத்தியது. முதலில் நன்மதிப்பை இழந்தார். பின் தன் வேலையை இழந்தார். உறவுகளை இழந்தார். அவருடைய செல்வாக்கு குறையக் குறைய நண்பர்களும் விட்டுச் சென்றனர்.

நோய்களுக்குப் புகலிடமானார்.தன் மகனின் வாழ்க்கை கண்முன் அழிவதைக் கண்டு மனம் நொந்தத் தந்தையும் நோய்வாய்பட்டு இறந்து போனார்.யாருடைய சொல்லையும் கேளாமல் தன் குடியைத் தொடர்ந்தார் அவர். ஒருமுறை அவருடைய தாய்க்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அதிகமான இரத்தப்போக்கினால் குற்றுயிராய் இருந்த நேரத்தில் அவருடைய இரத்த வகை பெறுவதற்காக பல இடங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தன் தாய்க்கும் தனக்கும் ஒரே இரத்தவகை என்பதை அறிந்தும் கூட அவரால் இரத்தம் கொடுக்க இயலவில்லை. காரணம் மது. அன்று தான் தனக்கு பாலூட்டி வளர்த்த தன் அன்னைக்கு இரத்தம் கொடுக்க இயலாத அளவுக்கு தான் மோசமாகிப் போயிருந்த நிலையை உணர்ந்து மனம் நொந்து அழுதார். மனம் மாறினார்.வாழ்வுப்வாதையை மாற்றினார். அவருடைய குடும்பம் எல்லையற்ற மகிழ்ச்சி பெற்றது.

இன்றைய வாசகங்கள் நம்மை உண்மையான மனமாற்றத்திற்கு அழைக்கின்றன.

 மனமாற்றம் மகிழ்வைத் தரக்கூடியது. மன அமைதியை ஏற்படுத்துகிறது.ஒருவருடைய மனமாற்றம் அவருடைய பழைய பிற்போக்குடைய வாழ்வை மாற்றி, புதிய முற்போக்கு சிந்தனைகள் நிறைந்த வாழ்வை வழங்குகிறது. ஆளுமைத் திறன்களை வளர்க்கிறது. சுற்றியுள்ள பலருக்கும் நன்மை தருபவராகவும் முன்மாதிரியாகவும் திகழ வழிவகுக்கிறது. ஆம் இத்தகைய மனமாற்றத்திற்காகவே நாம் அழைக்கப்படுகிறோம். "மனம் மாறுகின்ற ஒரு பாவியால் விண்ணுலகில் ஏற்படும் மகிழ்ச்சி ஒப்பற்றது "என்ற வார்த்தைகள் நம்முடைய வாழ்வுப் பாதையை மாற்றி இறைவழியில் செலுத்த அழைக்கிறது. 

இதையே காணமற்போன ஆடு மற்றும் நாணய உவமை மூலம் இயேசு விளக்குகிறார். நமக்கு மிகவும் பிடித்தமான பொருள் காணாமல் போனால் அதைக் கண்டுபிடிக்கும் வரை மனது ஓய்வதில்லை. கண்டுபிடித்த பின் நாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இது நம் வாழ்வில் நடக்கக் கூடிய எதார்த்தமான உண்மை. அவ்வாறிருக்க, தம்மோடு இருக்க ,தன்னை அன்பு செய்ய ,தன் சாயலிலே படைக்கப்பட்ட பிள்ளைகள் ,

உலகத்தின் கவர்ச்சியால் தொலைந்து போகும் போது கடவுள் எவ்வளவு வேதனை அடைவார் என நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.நாம் தொலைந்து போன நேரங்களில்லாம் அன்போடும் இரக்கத்தோடும் நம்மை தேடும் கடவுள்  உண்மையான மனமாற்றத்துடன் நாம் திரும்பி வரும் போது நம்மைக் கண்டு ஆனந்தம் அடைகிறார். அது நாம் அடையும் மகிழ்ச்சியை விட பன்மடங்கு உயர்ந்தது

இன்றைய முதல் வாசகத்தில் கூறப்பட்டது போல உடலைச் சார்ந்த செயல்பாடுகளில் நாம் ஈடுபட்டால் உண்மையான நம்பிக்கையை இழந்து உலக மாயைகளில் நாம் தொலைந்து போக நேரிடும்.மனம் திரும்பி, கிறிஸ்துவை நம் ஒப்பற்ற செல்வமாகக் கருதி,  கடவுளிடம் திரும்பி வந்தால் விண்ணகத்தில் மகிழ்ச்சி உண்டாக நாம் காரணமாகிவிடுவோம். எனவே தொலைந்து போனாலும் கடவுளால் கண்டுபிடிக்கப்பட  விரும்புவோம். நம்முடைய மனமாற்றத்தின் மூலம் ஒப்பற்ற மகிழ்ச்சியை விண்ணகத்திலும் நாம் வாழும் மண்ணகத்திலும் ஏற்படுத்துவோம்.

 இறைவேண்டல்

தொலைந்து போன எங்களை உள்ளார்ந்த அன்போடு தேடிடும் இறைவா!  நாங்கள் உடல் சார்ந்த காரியங்களில் ஈடுபடுவதை விடுத்து உண்மையான மனமாற்றத்தால் நாங்கள் வாழும் இடங்களிலும் விண்ணகத்தில் ஒப்பற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்த வரம் தாரும் ஆமென்.




† இன்றைய புனிதர் †
✠ புனிதர் மார்டின் டி போரஸ் ✠
(St. Martin de Porres)

டொமினிக்கன் சபை பொதுநிலை சகோதரர்:
(Lay brother of the Dominican Order)

பிறப்பு: டிசம்பர் 9, 1579
லிமா, காலனியாதிக்க பெரு
(Lima, Viceroyalty of Peru)

இறப்பு: நவம்பர் 3, 1639 (வயது 59)
லிமா, காலனியாதிக்க பெரு
(Lima, Viceroyalty of Peru)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)

முக்திப்பேறு பட்டம்: அக்டோபர் 29, 1837
திருத்தந்தை பதினாறாம் கிரகோரி
(Pope Gregory XVI)

புனிதர் பட்டம்: மே 6, 1962
திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்
(Pope John XXIII)

முக்கிய திருத்தலங்கள்:
சாந்தோ டொமினிகோ ஆலயம், லிமா, பெரு
(Church of Santo Dominigo, Lima, Peru)

நினைவுத் திருவிழா: நவம்பர் 3

சித்தரிக்கப்படும் வகை:
ஒரு நாய், ஒரு பூனை மற்றும் ஒரு பறவை ஒரே தட்டில் ஒன்றாக உணவு உண்பது; விளக்குமாறு, சிலுவை, ஜபமாலை, இதயம்

பாதுகாவல்:
பிலாக்ஸி மறைமாவட்டம் (Diocese of Biloxi), கருப்பு இன மக்கள், சிகை அலங்காரிகள், விடுதி காப்பாளர், கலப்பு இன மக்கள், பெரு (Peru), ஏழை மக்கள், பொது கல்வி, பொது சுகாதாரம், அரசு பள்ளிகள், பொது கல்வி, இன உறவுகள், சமூக நீதி, தொலைக்காட்சி, மெக்ஸிக்கோ (Mexico), பெருவியன் கடற்படை விமானிகள் (Peruvian Naval Aviators), வியட்நாம் (Vietnam), மிசிசிப்பி (Mississippi), ஹோட்டல் நடத்துபவர்கள் (Innkeepers), லாட்டரி, லாட்டரியில் வெற்றி பெற்றவர்கள்,

புனிதர் மார்டின் டி போரஸ், ஒரு டொமினிக்கன் சபையினைச் சேர்ந்த பொது நிலை சகோதரரும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் கலப்பு இன மக்கள், அமைதிக்காக துன்பப்படுவோர் முதலியோருக்கு பாதுகாவலராகக் கருதப்படுகின்றார். இவர் தன் வாழ்நாள் முழுதும் ஏழைகளுக்காகவே பணியாற்றினார். ஒரு அனாதை இல்லத்தையும், ஒரு குழந்தைகளுக்கான மருத்துவமனையையும் நிறுவினார். நோன்புகள், மற்றும் புலால் உணவு தவிர்த்தல், உள்ளிட்ட எளிமையான மற்றும் கடுமையான தவமுயற்சிகளைக் கொண்ட கடின வாழ்க்கை முறை வாழ்ந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு:
“ஜுவான் மார்டின் டி போரஸ் வெலாஸ்குயிஸ்” (Juan Martin de Porres Velázquez) எனும் இயற்பெயர் கொண்ட இவர், “ஸ்பேனிஷ் காலனித்துவ நிர்வாக மாவட்டமான” (Spanish Colonial Administrative District) பெருவின் (Peru) தலைநகரான லிமாவில் (Lima) கி.பி. 1579ம் ஆண்டு பிறந்தார். ஸ்பேனிஷ் பிரபுவான “டான் ஜூவான் டி போரேஸ்” (Don Juan de Porres) எனும் தந்தைக்கும், பனாமா (Panama) நாட்டில் அடிமையாக இருந்து விடுதலை பெற்ற “அனா வெலாஸ்குயிஸ்” (Ana Velázquez) என்ற ஆஃபிரிக்க இன தாய்க்கும் சட்டவிரோதமாகப் பிறந்த இவருக்கு கி.பி. 1581ல் பிறந்த “ஜுவானா” (Juana) எனும் பெயருடைய ஒரு இளைய சகோதரியும் உண்டு. தங்கை பிறந்த பிறகு, இவரது தந்தை இவர்களது குடும்பத்தை கைவிட்டு சென்றார். இவர்களுடைய தாயார், ஒரு ஆடை சலவையகத்தில் வேலை செய்து தமது குழந்தைகளை வளர்த்தார். மிகவும் வறுமையில் வாடியதாலும், இவரது தாயாரால் இவரை வளர்க்க இயலாமல் போனதாலும் ஒரு ஆரம்ப பள்ளியில் இரண்டு வருடங்கள் வேலை செய்தார். பின்னர், தமது பத்துவயதிலேயே அறுவை சிகிச்சை மருத்துவரிடமும் (Surgeon), நாவிதரிடமும் (Barber) வேலை பயில சென்றார். இளம் வயதிலேயே இரவு முழுதும் செபிக்கும் வழக்கம் இவரிடம் இருந்தது.

அப்போதைய பெரு நாட்டின் சட்டங்கள், ஆபிரிக்க இன மக்களையும், அமெரிக்க குடி மக்களையும் ஆன்மீக சபைகளில் சேருவதை தடை செய்தது. மார்டினுக்கு இருந்த ஒரே வழி, லிமா நகரிலிருந்த “தூய செபமாலை புகுநிலை டொமினிக்கன் துறவியரிடம்”, (Dominicans of Holy Rosary Priory) தம்மை தன்னார்வ தொண்டு பணியாளாக சேர்த்துக்கொள்ள வேண்டுவதேயாகும். சரீர உழைப்பை நல்கிய இவருக்கு பிரதியுபகாரமாக, துரவியரில் சீருடை அணிந்துகொள்ளவும், அவர்களுடன் வாசிக்கவும் உரிமை கிட்டியது. தனது 15ம் வயதில் லிமா நகரிலுள்ள டொமினிக்கன் சபையில் சேர விண்ணப்பித்தார். முதலில் டொமினிக்கன் சபையினரின் செபமாலை பள்ளியில் வேலையாளாகவே அனுமதிக்கப்பட்டாலும், பின்னர் பல முக்கிய பொறுப்புகளும் இவருக்கு வழங்கப்பட்டன. பின்னர் டொமினிக்கன் சபையில் சேர கடவுள் தன்னை அழைப்பதாக உணர்ந்த இவர் இச்சபையின் மூன்றாம் சபையில் சேர்ந்தார்.

தொடர்ந்து, தமது நாவிதன் பணியையும், குணமாக்கும் பணிகளையும் செய்துவந்தார். இவர், தமது செப வல்லமையால் பலரை அற்புதமாக குணமாக்கியதாக கூறப்படுகிறது. சமையலறைப் பணிகள், சலவைப் பணிகள், மற்றும் சுத்திகரிக்கும் பணிகளும் செய்தார்.

எட்டு வருடங்களின் பின்னர், மார்டின் மீது இரக்கம் கொண்ட தூய செபமாலை மடத்தின் தலைவரான “ஜுவான் டி லொரென்ஸானா” (Juan de Lorenzana) என்பவர், பெரு நாட்டின் சட்டங்களுக்கு மறைவாக மார்ட்டினை டொமினிக்கன் சபையின் மூன்றாம் நிலை துறவற பிரமாணங்களை ஏற்க வைக்க முடிவெடுத்தார்.

24 வயதான மார்ட்டின், கி.பி. 1603ம் ஆண்டு, டொமினிக்கன் சபை பொது நிலை சகோதரராக பிரமாணங்களை ஏற்றார். ஆனால், தமது தந்தையின் தலையீடினால்தான் தமது அந்தஸ்து உயர்கிறதோ எனும் ஐயம் காரணமாக, இவர் பலமுறை இதனை மறுத்து வந்திருக்கிறார். அத்துடன், இதன் காரணமாகவே அவர் ஒரு குருத்துவ அருட்பொழிவை இறுதிவரை மறுத்துவந்தார்.

அவரது பள்ளி கடனில் மூழ்கும்போதெல்லாம், அங்குள்ள துறவியரிடம், “நான் ஒரு தரித்திரம் பீடித்த “முலெட்டோ” (Mulatto) (நீக்ரோவுக்கும் வெள்ளையருக்கும் பிறந்தவர்), என்னை விற்றுவிடுங்கள்” என்று கெஞ்சுவார்.

மார்ட்டின், அர்ச்சிஸ்ட்ட நற்கருணையின்பால் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஒருநாளிரவு, திருப்பலி பீடத்தின் படியின்மீது முழங்கால்படியிட்டு நற்கருணையின் முன்னர் செபித்துக்கொண்டிருந்தவேளை, அவர் நின்றிருந்த படிக்கட்டில் தீ பற்றிக்கொண்டது. தீயினால் ஏற்பட்ட அத்துணை குழப்பத்திலும் சந்ததியிலும், தம்மைச் சுற்றி நடப்பவற்றை அறியாதவராக தாம் இருந்த இடத்திலேயே இருந்தார்.

34 வயதான மார்டின், பொதுநிலை சகோதரருக்கான துறவற சீருடைகள் கொடுக்கப்பட்டதும், நோயுற்றவர்களுக்கு சேவை செய்யும் மருந்தகத்தின் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். சுமார் இருபத்தைந்து வருடங்கள், இவர் இறக்கும்வரை இச்சுகாதார மையத்திலேயே இருந்தார். நோயாளிகளுக்கு சேவையாற்றுவதில் அக்கறை கொண்டிருந்தார். நோயாளிகளின் தேவையுணர்ந்து அவர்களுக்கு சேவை செய்யும் கடின பணிக்குத் தேவையான நல்லொழுக்கமும் பொறுமையும் அவரிடமிருந்ததை அவருடைய மேலதிகாரிகள் கவனித்தனர். பள்ளிக்கு வெளியே இருந்து அழைத்துவரப்படும் நோயாளிகளையும் கவனித்தார். அவர்களை குணப்படுத்தினார். ஒரு குடுவை தண்ணீர் மூலம் அவர் நோயாளிகளை குணப்படுத்தினார். வேறுபாடுகளேயில்லாமல் ஸ்பேனிஷ் பிரபுக்களுக்கும், அண்மையில் ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைகளுக்கும் மருத்துவ சேவை புரிந்தார். ஒருநாள், உடல் முழுதும் புண்ணான, ஏறக்குறைய நிர்வாண நிலையிலிருந்த ஒரு பிச்சைக்காரன் தமது இரு கைகளையும் நீட்டினார். மார்டின் அவரை உடனே தமது படுக்கைக்கு கொண்டு சென்றார். இதனைக் கண்ட இவரது சகாவான ஒரு சகோதரர் மார்டினை கடிந்துகொண்டார். அவருக்கு பதிலளித்த மார்டின், “என் அன்பு சகோதரா, இரக்கமே தூய்மைக்குத் தகுதியானது” என்றார்.

அக்காலத்தில், ஒருமுறை லிமா நகரில் தொற்று நோய் பரவியதால் இவரின் பணி மிகவும் கடுமையாக இருந்தது. செபமாலை பள்ளியின் மடத்தில் சுமார் அறுபது துறவியர் இருந்தனர். அனைவரும் நோய்வாய்ப்பட்டிருந்தனர். துரதிர்ஷ்டவசமாக, அவர்களிருந்த அறைகள் மூடி பூட்டப்பட்டிருந்தன. வெளியே வர இயலாத அவர்களுக்கு எவராலும் மருத்துவம் பார்க்க இயலவில்லை. ஆனால், மார்டினோ, பூட்டியிருந்த கதவுகளை ஊடுருவிச் சென்று நோயுற்ற துறவியருக்கு மருத்துவம் செய்தார். இதுபோல் பலமுறை அதிசயங்கள் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.

புலால் உணவைத் தவிர்த்த மார்டின், பள்ளி நிர்வாகம் தர இயலாதவற்றை வாங்குவதற்காக தர்மம் (பிச்சை) எடுத்து வாங்கி வருவார். சாதரணமாக, தாம் பிச்சை எடுத்து வரும் பொருட்களைக் கொண்டு, தினமும் சுமார் 160 பேருக்கு உணவு வழங்குவார். குறிப்பிட்ட ஒரு சிறு தொகையை ஏழை மக்களுக்கும் வழங்குவார். அவரது தினசரி பணிகளான சமையலறைப் பணிகள், சலவைப் பணிகள், மற்றும் மருத்துவமனைப் பணிகளுடன், அவரை உயரே காற்றில் தூக்கிய பரவச அனுபவங்கள், அவர் செபிக்கும் அறையை நிரப்பிய வெளிச்சம், ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் அதிசயங்கள் நிகழ்த்துவது, உடனடி குணப்படுத்துதல், மிருகங்களுடனான பரஸ்பர ஒத்துணர்வு ஆகியவற்றுடன் அவரது வாழ்க்கை ஒரு அசாதாரண பரிசாக விளங்கியது. கைவிடப்பட்ட சிறுவர்களுக்காகவும், அனாதைகளுக்காகவும் லிமா நகரில் ஒரு இல்லத்தை நிறுவினார்.

இறப்பும் புனிதர் பட்டமளிப்பும்:
இவர், டொமினிக்கன் பொதுநிலையினரும், புனிதர்களுமான "புனிதர் ரோஸ்” (St. Rose of Lima), மற்றும் புனிதர் “ஜுவான் மசியாஸ்” (St. Juan Macías) ஆகியோரின் நண்பராவார். இவர் லிமாவில் கி.பி. 1639ம் ஆண்டு, நவம்பர் மாதம், 3ம் நாள் இறந்தார். இவருக்கு இறுதி வணக்கம் செலுத்த இவரின் உடல் மக்களுக்காக வைக்கப்பட்டு இவர் இருந்த மடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. இவரால் பல புதுமைகள் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டதால், இவரின் புனிதர் பட்ட நடவடிக்கைகள் இவர் இறந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு துவங்கப்பட்டது. இவருக்கு கி.பி. 1837ல் திருத்தந்தை ஆறாம் கிரகோரியால் அருளாளர் பட்டமும், 1962ம் ஆண்டு, மே மாதம், ஆறாம் தேதி, திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானால் புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது.

இவரது நினைவுத் திருவிழா, நவம்பர் மாதம், 3ம் நாள் ஆகும்.

நன்றி : திரு.புஷ்பராஜா


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...