Showing posts with label வியாழன். Show all posts
Showing posts with label வியாழன். Show all posts

Wednesday, January 25, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (26-01-2023)

புனிதர்கள் திமொத்தேயு, தீத்து - ஆயர்கள்

நினைவு


முதல் வாசகம்

வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-8

என் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு, கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசு அருளும் வாழ்வு பற்றிய வாக்குறுதிக்கு ஏற்ப அவருடைய திருத்தூதனான பவுல் எழுதுவது:

தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக! என் முன்னோரைப் போன்று தூய்மையான மனச்சான்றுடன் கடவுளுக்குப் பணியாற்றும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவு கூருகின்றேன். உன் கண்ணீரை நினைவிற்கொண்டு உன்னைக் காண ஏங்குகின்றேன்; கண்டால் என் மகிழ்ச்சி நிறைவடையும். வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி லோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன்.

உன்மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன். கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்.

எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

நற்செய்தியைப் பறைசாற்றும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-5

அனைவருக்கும் பொதுவான விசுவாச அடிப்படையில் என் உண்மைப் பிள்ளை தீத்துவுக்கு, கடவுளின் பணியாளனும் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதனுமாகிய பவுல் எழுதுவது:

தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் மீட்பராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் நம்பிக்கை கொள்ளவும் நிலைவாழ்வை எதிர்நோக்கி இறைப்பற்றுக்கு இசைந்த உண்மை அறிவைப் பெறவும் நான் திருத்தூதனாய் இருக்கிறேன். இந்நிலைவாழ்வை, பொய் கூறாத கடவுள், காலங்கள் தொடங்கும் முன்னே வாக்களித்தார். ஏற்ற காலத்தில் நற்செய்தியைப் பறைசாற்றியதன் வாயிலாகத் தம் செய்தியை வெளிப்படுத்தினார். இந்நற்செய்தியைப் பறைசாற்றும் பணி நம் மீட்பராம் கடவுள் இட்ட கட்டளைப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நான் உனக்குப் பணித்தபடியே கிரேத்துத் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்கு செய்து, நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 96: 1-2a. 2b-3. 7-8a. 10 (பல்லவி: 3a)

பல்லவி: பிற இனத்தார்க்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்.
2a
ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். - பல்லவி

2b
அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.
3
பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். - பல்லவி

7
மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
8a
ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். - பல்லவி

10
வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். - பல்லவி

அல்லது


பதிலுரைப் பாடல்

திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 6a)

பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.

1
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2
ஏனெனில், அவரே கடல்கள்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி

3
ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4ab
கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி

5
இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 4: 18-19 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-9

அக்காலத்தில்

ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.

அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே.

வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு


அல்லது  


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 119: 105

அல்லேலூயா, அல்லேலூயா! என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 21-25

அக்காலத்தில்

இயேசு மக்களிடம், “விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின்மீது வைப்பதற்காக அல்லவா? வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார். மேலும் அவர், “நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும்.

ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்” என்று அவர்களிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



 நற்செய்தியின் சுடர்களாவோம்!

இன்று நம் தாய் திருஅவையோடு இணைந்து புனித திமோத்தி மற்றும் தீத்து ஆகியோருடைய விழாவை நாம் கொண்டாடுகிறோம். இருவருமே கிறிஸ்தவ மறை பரப்புப் பணியில் தங்களுக்குரிய பங்கை சிறப்பாக அளித்திருக்கிறார்கள் என்பது கிறிப்பிடத்தக்கது.

புனித திமோத்தி பவுலடியாரின் இரண்டாம் மறைபரப்பு பயணத்தின் போது அவருடைய சீடராக இருந்து உடனுழைத்தவர். கிறிஸ்தவ நம்பிக்கை பரவ ஆரம்பித்த முதல் நூற்றாண்டிலேயே வாழ்ந்தவர். பவுலடியாரின் வழிநடத்துதலின் படி பணி செய்தவர். புனித பவுல் எழுதிய திருமுகங்களில் இரண்டு இவருக்காக எழுதப்பட்டவை. இவரும் மறைபரப்பு பணிக்காக சிறை தண்டனை போன்ற துன்பங்களை ஏற்றுள்ளார் என திருஅவை பாரம்பரியம் கூறுகிறது. திமோத்தேயு என்ற பெயருக்கு கடவுளைப் போற்றுபவர் என்பது பொருள்.

புனித தீத்து பவுலின் மூன்றாம் மறைபரப்பு பயணத்தில் இணைந்து கொண்டவர். இவர் புற இன கிறிஸ்தவராவார். இவர் பவுலின் போதனைகள் வழியாக ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்றுக்கொண்டவர். பவுலோடு இணைந்து பணியாற்றியவர். இவர் ஆயராக இருந்தபோது இவரை வழிநடத்த புனித பவுல் இவருக்காக திருமடல் எழுதினார். பவுலடியாரின் கடிதங்களில் 13 தடவை இவருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு விளக்கை பிறர் பயன்பெறும் பொருட்டு விளக்குத் தண்டில் வைக்க வேண்டும் என்பதையும் நாம் பெற்றுக்கொண்டதை நம்மிடம் உள்ளதை பிறக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் கூறுகிறார். இன்று நாம் விழாக் கொண்டாடும் இவ்விரு புனிதர்களுமே தாங்கள் பெற்றுக்கொண்ட நற்செய்தி ஒளியை உயர்த்திப் பிடித்து பிறரும் அவ்வொளியில் மகிழ வழிவகுத்தனர் என்பதே உண்மை. தங்களிடமிருந்த நம்பிக்கையை பிறருக்கும் தந்து இறையருளைப் பகிர்ந்ததால் இன்றும் நாம் அவர்களைப் புகழ்கிறோம். நாமும் நாம் பெற்றுக்கொண்ட நற்செய்தி ஒளியை பிறர் முன் ஒளிர்விப்போம்.

 இறைவேண்டல்
அன்புத் தந்தையே இறைவா! நற்செய்தியின் ஒளிச்சுடர்களாய் புனிதர்களான திமோத்தேயு மற்றும் தீத்து ஒளிர்ந்ததைப் போல நாங்களும் விளங்க வரமருளும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Wednesday, January 18, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (19-01-2023)

 

பொதுக்காலம் 2ஆம் வாரம் - வியாழன்


முதல் வாசகம்

இயேசு தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்து, எக்காலத்திற்குமே பலியை நிறைவேற்றினார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 7: 25- 8: 6

சகோதரர் சகோதரிகளே,

இயேசு தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்துபேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்.

இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார். இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர். ஏனைய தலைமைக் குருக்கள் செய்வதுபோல, முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும், பின்னர் மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலி செலுத்தத் தேவையில்லை. ஏனெனில் தம்மைத்தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒரு முறைக்குள் செய்து முடித்தார். திருச்சட்டப்படி வலுவற்ற மனிதர்கள் குருக்களாக ஏற்படுத்தப்படுகிறார்கள். ஆனால் அத்திருச்சட்டத்திற்குப் பின்னர், ஆணையிட்டுக் கூறப்பட்ட வாக்கின் மூலம் என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார்.

இத்தகைய தலைமைக் குரு நமக்கு வாய்த்துள்ளார் என்பதே இதுகாறும் நாம் கூறியவற்றின் தலையாய கருத்து. இவர் விண்ணகத்தில் பெருமைமிகு கடவுளுடைய அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். அங்கே மனிதரால் அல்ல, ஆண்டவராலே அமைக்கப்பட்ட உண்மையான கூடாரமாகிய தூயகத்தில் ஊழியம் செய்கிறார்.

ஒவ்வொரு தலைமைக் குருவும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். எனவே பலி செலுத்துவதற்கு இவரிடமும் ஏதேனும் ஒரு பொருள் கட்டாயம் இருக்க வேண்டும். உலகிலேயே இருந்திருப்பாரென்றால் இவர் குருவாக இருந்திருக்கமாட்டார். ஏனெனில், திருச்சட்டத்தின்படி காணிக்கைகளைச் செலுத்த ஏற்கெனவே இங்குக் குருமார்கள் இருக்கிறார்கள். இவர்கள் வழிபடும் இடம் விண்ணகக் கூடாரத்தின் சாயலும் நிழலுமே. மோசே கூடாரத்தை அமைத்தபோது, “மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட முறைப்படி நீ இவற்றையெல்லாம் செய்யுமாறு கவனித்துக்கொள்” என்று கடவுள் பணித்தது இதைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், இவரோ அவர்களுடைய குருத்துவப் பணியைவிட மிக மேன்மையான குருத்துவப் பணியைப் பெற்றிருக்கிறார்.

ஏனெனில் சீரிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டு, இவரை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையை விடச் சிறப்பு மிக்கது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 40: 6-7a. 7b-8. 9. 16 (பல்லவி: 7a, 8b)

பல்லவி: என் கடவுளே, உமது திருவுளம் நிறைவேற்ற வருகின்றேன்.

6
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.
7a
எனவே, ‘இதோ வருகின்றேன்.’ - பல்லவி

7b
என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது.
8
என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். - பல்லவி

9
என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். - பல்லவி

16
உம்மைத் தேடுவோர் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்! நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர், ‘ஆண்டவர் எத்துணைப் பெரியவர்!’ என்று எப்போதும் சொல்லட்டும்! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

“இறைமகன் நீரே” என்று தீய ஆவிகள் கத்தின. இயேசு தம்மை வெளிப்படுத்த வேண்டாமெனச் சொன்னார்.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 7-12

அக்காலத்தில்

இயேசு தொழுகைக்கூடத்திலிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா, எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர். மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார்.

ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொட வேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந் தனர். தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, “இறைமகன் நீரே” என்று கத்தின. அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நமது பணி மக்கள் மையப் பணியா! 

இயேசு மக்கள் நலப்பணிக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார். தான் இறையாட்சிப் பணிசெய்த  மூன்று ஆண்டுகளில் எண்ணற்ற இறையாட்சி பணிகளைச் செய்துள்ளார். ஒரே தந்தையின் பிள்ளைகளும்  இயேசுவின் சகோதர சகோதரிகளாகிய நமக்கு அவர் முன்னுதாரணமாக இருக்கின்றார். தன்னோடு வாழக்கூடிய மக்களுக்கு பணி செய்வது வாழ்வதுதான் நம் ஆண்டவர் இயேசுவின் இயல்பாக இருந்தது. அவருடைய சொல்லும் செயலும் மக்களுக்கு நலமான வாழ்வை வழங்கியது.


இயேசு எண்ணற்ற மக்களை குணம் பெறச் செய்ததால் நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொட வேண்டுமென்று இயேசு மீது விழுந்து  கொண்டிருந்தனர் என இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். ஏராளமான மக்கள் இயேசுவின் போதனைகளையும் வல்ல செயல்களையும் கண்டும் கேள்வியுற்றும் அவரைப் பின்பற்றினர். இயேசு அவர்கள் மீது பரிவு கொண்டு நம்பியவர்களை கைவிடாமல் குணமளித்தார். இதன் வழியாக அவர்களுக்கு புது வாழ்வை வழங்கினார்.  


இயேசுவின் வாழ்வு இரண்டு வகையான பணிகள் வழியாக மக்களுக்கு புது மாற்றத்தையும் புது வாழ்வையும் தந்தது. முதலாவதாக, தன்னுடைய போதிக்கும் பணியின் வழியாக மக்களை இறைநம்பிக்கையில் திடப்படுத்தி மீட்பின் கனிகளைச் சுவைக்க வழிகாட்டினார். இயேசுவின் வார்த்தை மக்களுக்கு உடல் மற்றும் ஆன்ம நலனைக் கொடுத்தது. இயேசுவின் பெயரால் திருமுழுக்குப் பெற்று அவரின் சீடர்களாக வாழ முன் வந்திருக்கின்ற நாம், நம்முடைய வார்த்தையால்  பிறருக்கு உடல் மற்றும் ஆன்ம நலனைகக் கொடுக்க முடிகின்றதா? என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்பட்டுள்ளோம். நம்முடைய வார்த்தை பிறருக்கு நலம் கொடுக்க வேண்டுமென்றால் இயேசுவைப் போல நம் வாழ்வு புனிதம் நிறைந்ததாகவும், நாம் எல்லோரும் சொல்வதைச் செய்பவராகவும் செய்வதைச் சொல்பவராகவும் இருக்க வேண்டும். இத்தகைய வாழ்வு வாழுகின்ற பொழுது நாம் சிறந்த  இறை பணியைச் செய்ய முடியும். எனவே நம்முடைய வார்த்தைகளைத் தூய்மையாக்கவும் அதன் மூலம் நம்முடைய வாழ்வைத் தூய்மையாக்க முன்வருவோம்.


இரண்டாவதாக இயேசு வல்ல செயல்கள் வழியாக சிறந்த ஒரு பணியினை செய்தார். இயேசுவுடைய வார்த்தையும் செயல்பாடும் உடனிருப்பும் நோயுற்றவர்களுக்கு குணமளித்தது. அதேபோல நம்முடைய வாழ்விலும் நாம் வாழக்கூடிய இடங்களில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு உளவியல் நோயால் தங்கள் வாழ்க்கையை இழந்து  சில மனிதர்கள் வாழலாம். அவர்களுக்கு நாம் நம்மாலான உடனிருப்பையும் உதவியையும் செய்கின்ற பொழுது, நாமும் குணப்படுத்துதல் பணியினைச் செய்ய முடியும். நாம் வாழுகின்ற இந்த வாழ்க்கையில் நம்முடைய வார்த்தைகளும் உடனிப்பும் நம்மைத் தேடி வருபவர்களுக்கு நலமளிகின்றதா எனச் சிந்தித்துப் பார்க்க அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் மனநிலையில் எந்நாளும் பயணித்து ஏழை, எளிய மற்றும் நோயளர்களுக்கு நம்மாலான நற்பணிகளைச் செய்திட தேவையான அருளை வேண்டுவோம். 


 இறைவேண்டல்:

வல்லமையுள்ள இயேசுவே! உம்மைப் போல நாங்கள் எம் வார்த்தையாலும் வாழ்வாலும் நலமளிக்கும் பணியினைச் செய்திடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Wednesday, January 11, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (12-01-2023)

 

பொதுக்காலம் முதல் வாரம் - வியாழன்



முதல் வாசகம்

ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-14

சகோதரர் சகோதரிகளே,

தூய ஆவியார் கூறுவது: “இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களென்றால், பாலை நிலத்தில் சோதனை நாளன்று கிளர்ச்சியின் போது இருந்ததுபோல, உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் நாற்பது ஆண்டுகள் என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். எனவே, அத்தலைமுறையினர் மீது வெறுப்புக்கொண்டு, ‘எப்போதும் இவர்களது உள்ளம் தவறுகிறது; என் வழிகளை இவர்கள் அறியாதவர்கள்; எனவே நான் சினமுற்று, “நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்” என்று ஆணையிட்டுக் கூறினேன்’ என்றார் கடவுள்.”

அன்பர்களே, நம்பிக்கை கொள்ளாத தீய உள்ளம், வாழும் கடவுளை விட்டு விலகும். இத்தகைய தீய உள்ளம் உங்களுள் எவருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு, கடின உள்ளத்தினர் ஆகாதவாறு, ஒவ்வொரு நாளும் “இன்றே” என எண்ணி, நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள். தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த திட நம்பிக்கையை இறுதிவரை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் நாமும் கிறிஸ்துவின் பங்காளிகளாவோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 95: 6-7a. 7b-9. 10-11 (பல்லவி: 7,8 காண்க)

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாயுங்கள்.

6
வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.
7a
அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக் காக்கும் ஆடுகள். - பல்லவி

7b
இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!
8
அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9
அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். - பல்லவி

10
நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை எனக்கு வெறுப்பூட்டியதால், நான் உரைத்தது: ‘அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்; என் வழிகளை அறியாதவர்கள்'.
11
எனவே, நான் சினமுற்று, ‘நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்’ என்று ஆணையிட்டுக் கூறினேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 23

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45

ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

பிறகு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பிவிட்டார்.

ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கி வந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்துகொண்டிருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


கனிந்த உள்ளமா?

கடின உள்ளமா? நன்றி உள்ளமா?

என்னில் இருப்பது எது?


உள்ளம் பல உணர்வுகளைப் பெற்றது. அவற்றில் நல்லவற்றை பெருகச் செய்யும் போது நம் வாழ்வு செழிக்கும்.இன்றைய வாசகங்களில் நாம் மூன்று விதமான உள்ளங்களைப் பார்க்கிறோம். இவற்றை நம் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்து நம்மில் மேலோங்கி இருப்பது என ஆய்வு செய்ய நாம் அழைக்கப்படுகிறோம்.


கனிந்த உள்ளம் ......

முதல் வாசகத்தில் தந்தையாம் கடவுளின் கனிந்த உள்ளத்தைப் பார்க்கிறோம். இஸ்ரயேல் மக்களுக்கு தன் கனிந்த உள்ளத்தால் ஏராளமான கணக்கிலடங்காத நன்மைகளை அவர் செய்துள்ளார். அதே போல நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் கனிந்த உள்ளத்தைப் பார்க்கிறோம். "நீர் விரும்பினால் என்னை நலமாக்கும் " என மன்றாடிய தொழுநோயாளரின் மன்றாட்டை ஏற்று "விரும்புகிறேன் "என்று சொல்லி நலமாக்கினார் இயேசு. இது அவருடைய கனிவான உள்ளத்தை நமக்கு எடுத்தியம்புகிறது. கடவுளின் குழந்தைகளாய் இயேசுவின் சீடர்களாய் வாழ விரும்பும் நமக்கு இத்தகைய கனிவான உள்ளம் இருக்கிறதா?  நம்மை அண்டி வருவோருக்கு கடவுள் காட்டிய கனிவை நம்மால் காட்ட முடிகிறதா? சிந்திப்போம்.


கடின உள்ளம்......

இத்தகைய மனநிலைக்கு இஸ்ரயேல் மக்கள் சிறந்த உதாரணம். அவர்கள் தவறுக்கு மேல் தவறு செய்த போதும் கடவுள் அவர்களுக்கு நன்மைக்கு மேல் நன்மை செய்தார். ஆனால் அவர்களுடைய உள்ளமோ கடினமாயிற்று. பிறருடைய பார்வையில் நாம் கடின உள்ளத்தவர்களா? நமக்கு நன்மை செய்தவர்களுக்குக் கூட நாம் கடின உள்ளத்தவராய் இருந்தால், மற்றவர்களுக்கு நாம் எத்தகைய உள்ளத்தை வெளிப்படுத்தப்போகிறோம்? சிந்திப்போம். மனம்மாறுவோம்


நன்றி உள்ளம் .....

நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் தொழுநோயாளர் குணமடைந்த பின் இயேசு யாரிடமும் கூறவேண்டாம் என எச்சிரிக்கை செய்தபின்னும் மற்றவருக்கு அறிவித்து இயேசுவைப் பெருமைப்படுத்தினார். இதனால் இயேசுவைத் தேடி பலர் சென்றனர் என வாசிக்கிறோம். நன்றி நிறைந்த உள்ளம் வாழ்க்கைக்கு மிக அவசியம் என்பதை நமக்கு உணர்த்துகிறார் அவர்.


அன்புக்குரியவர்களே இம்மூவகை மனநிலைகளை நாம் சிந்திக்கும் போது கனிவான உள்ளத்தையும் நன்றி நிறைந்த உள்ளத்தையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும் எனவும் கடின உள்ளத்தை நாம் களைந்தெறிய வேண்டும் என்பதையும் கடவுள் உணர்த்துகிறார். எனவே இதற்கான வரத்தை இறைவனிடம் கேட்போம்.


 இறைவேண்டல் 

இறைவா ! கடினமான எங்கள் உள்ளத்தை அகற்றிவிட்டு உம்மை போன்ற கனிவான உள்ளத்தையும் தொழுநோயாளரிடமிருந்த நன்றி நிறைந்த உள்ளத்தையும் தருவீராக. ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Wednesday, January 4, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (05-01-2023)

 

சனவரி 5


முதல் வாசகம்

நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோம்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 11-21

அன்பிற்குரியவர்களே,

நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்த செய்தி இதுவே; நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும்.

காயினைப்போல் நீங்கள் இராதீர்கள்; அவன் தீயோனைச் சார்ந்தவன்; ஏனெனில் தன் சகோதரரைக் கொலை செய்தான். எதற்காக அவரைக் கொலை செய்தான்? ஏனெனில் அவன் செயல்கள் தீயனவாக இருந்தன. அவன் சகோதரருடைய செயல்கள் நேர்மையானவையாக இருந்தன.

சகோதரர் சகோதரிகளே, உலகம் உங்களை வெறுக்கிறதென்றால் நீங்கள் வியப்படைய வேண்டாம். நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோமென அறிந்துள்ளோம்; அன்பு கொண்டிராதோர் சாவிலேயே நிலைத்திருக்கின்றனர். தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள். எந்தக் கொலையாளியிடமும் நிலைவாழ்வு இராது என்பது உங்களுக்குத் தெரியுமே. கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்துகொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லை என்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்? பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்.

இதனால் நாம் உண்மையைச் சார்ந்தவர்கள் என அறிந்துகொள்வோம்; நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியும். ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்; அனைத்தையும் அறிபவர். அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 4. 5 (பல்லவி: 1a)

பல்லவி: அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

1
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள். - பல்லவி

3
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள். - பல்லவி

4
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ச்சிப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள். - பல்லவி

5
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில் உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்.

 யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 43-51

அக்காலத்தில்

இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, “என்னைப் பின்தொடர்ந்து வா” எனக் கூறினார். பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள்.

பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, “இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார். அதற்கு நத்தனியேல், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்!” என்று கூறினார்.

நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்து கூறினார். நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.

அதற்கு இயேசு, “உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார். மேலும் “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



 "முற்சார்பு எண்ணங்களைக் களைந்து  இயேசுவை பின்பற்றுவோம்!"


ஒரு ஊரில் புதிதாக அருட்பணி செய்வதற்காக அருள்பணியாளர் ஆயரால்  நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த அருள்பணியாளர் அந்த பங்கிற்கு செல்வதற்கு முன்பாகவே அவரைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்ல ஆரம்பித்தனர். ஆனால் அந்த அருள்பணியாளர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பிறகு மிகச் சிறப்பான பணிகளை ஆற்றலோடு செய்தார். மக்கள் எதிர்பார்த்ததை விட  ஆன்மீகம்,  சமூகம், மனித நேயம் போன்ற நிலைகளில் பங்கு மக்கள் வளர்ச்சி அடைய அதிகமான பணிகளைச் செய்தார். அவரைப் பற்றி தவறாக புரிந்து கொண்ட மக்கள் ஒரு கட்டத்தில் அவரை சரியாகப் புரிந்து கொண்டனர்.  பங்குத்தந்தையைப் புரிந்து கொண்ட மக்கள் சிறப்பான முறையில் தங்களுடைய ஒத்துழைப்பைக் கொடுத்தனர்.


நம்முடைய வாழ்க்கையில் முற்சார்பு எண்ணத்தை  நிச்சயம் களைய வேண்டும். அப்பொழுதுதான்  வாழ்க்கையிலே வளர்ச்சி இருக்கும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் நத்தனியேல் பிலிப்பிடம் சொன்ன "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரமுடியுமோ?" என்னும் சொற்கள் நமது முற்சார்பு எண்ணங்களை ஆய்வுசெய்ய நமக்கு அழைப்பு விடுக்கின்றன.


நாசரேத் என்பது அடையாளம் காணப்படாத ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் இயேசு அந்த இடத்தில் வாழ்ந்ததன் வழியாக அந்த இடத்தை உயர்த்தினார்.  சிறிய இடமா பெரிய இடமோ எல்லா இடத்திலும் நன்மைத்தனங்கள் உண்டு என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.


பல நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் நாம் அதிகம் எதிர்பார்க்கிறோம். நமக்கு நிறைய கிடைக்க வேண்டும் என நினைக்கிறோம். சூழல் அனைத்தும் நமக்கு ஏற்றார் போல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். பணி செய்யக்கூடியவர்கள் பணி மாற்றம் பெறும்பொழுது , முற்சாற்பு எண்ணத்தோடு அந்த இடத்திற்கு செல்லக்கூடாது. அப்படி சென்றால் அந்த இடம் நமக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தராது. எதுவாக இருந்தாலும் என்னால் செய்ய முடியும் எதார்த்தங்களை ஏற்றுக் கொள்ள முடியும் என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டு நம் வாழ்க்கையில் பயணமாகும் பொழுது, வாழ்வில் வெற்றியின் கனியைச் சுவைக்க முடியும்.


ஆண்டவர் இயேசு நினைத்திருந்தால் அரச மாளிகையில் பிறந்து, அரச மாளிகையில் வளர்ந்து தன்னை உயர்ந்தவராக காண்பித்திருக்கலாம். ஆனால்  அவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்து ஒரு ஏழையைப் போல் வாழ்ந்து தான் வாழ்ந்த பகுதிக்கு பெருமை சேர்த்தார்.


நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் கூட நாம் வாழ்கின்ற இடம் சிறியதோ பெரியதோ அது பெரிதல்ல ; நாம் காணும் மனிதகர்களும் நல்லவர்களோ கெட்டவர்களோ அது நமக்குத் தேவையில்லை. நம்முடைய பார்வையை சரியாக அமைத்துக்கொண்டால் யாரோடும் வாழ இயலும். எங்கேயும் ஒளிர முடியும். முடிந்தவரை நம்மாலான நல்ல பணிகளை இறைவனுக்கு பயந்து செய்யும்பொழுது நாம் சாட்சியமுள்ள வாழ்வை வாழ முடியும். கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற முடியும்.  வாழ்வில் சாதனையாளர்களாக மாற முடியும். எனவே நம்முடைய வாழ்க்கையில் முற்சார்பு எண்ணங்களை அகற்றி சிறந்த வாழ்வை வாழ ஆண்டவர் இயேசு கொண்டிருந்த மனநிலையை நாமும் கொண்டிருக்க முயற்சி செய்வோம். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா!  எங்களுடைய அன்றாட வாழ்வில் முற்சார்பு எண்ணங்களை அகற்றி  சிறந்த வாழ்வை வாழ்ந்திட தேவையான அருளை தாரும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...