Showing posts with label வெள்ளி. Show all posts
Showing posts with label வெள்ளி. Show all posts

Thursday, June 26, 2025

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (27-06-2025)

 இதயத்தில் அன்பு...
இயேசுவின் தூய்மைமிகு இதய பெருவிழா

27.06.2025 - வெள்ளிக் கிழமை





 

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 11-16


தலைவராகிய ஆண்டவர் கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக்காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வதுபோல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன். மக்களினங்களினின்று அவற்றை வெளிக்கொணர்ந்து, நாடுகளினின்று கூட்டிச்சேர்த்து, அவற்றின் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவேன். அவற்றை இஸ்ரயேலின் மலைகளிலும் ஓடையோரங்களிலும் நாட்டின் எல்லாக் குடியிருப்புகளிலும் மேய்ப்பேன். நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன். இஸ்ரயேலின் மலையுச்சிகளில் அவற்றின் மேய்ச்சல் நிலம் இருக்கும். அங்கே வளமான மேய்ச்சல் நிலத்தில் அவை இளைப்பாறும். இஸ்ரயேலின் மலைகளின்மேல் செழிப்பான மேய்ச்சல் நிலத்தில் அவை மேயும். நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டு வருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப் போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3ய. 3b-4. 5. 6

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.


1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்;

அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.

3ய அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். -பல்லவி


3b தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;

4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,

நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;

உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி


5 என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்;

என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;

எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -பல்லவி


6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்

உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்;

நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி



இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5b-11


சகோதரர் சகோதரிகளே, நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்த காலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார். ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய்த் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப் பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ? நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ! அதுமட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவு கொண்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


லூக்கா 15:3-7

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 3-7


அக்காலத்தில் இயேசு பரிசேயர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: ``உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக்கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்' என்பார். அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.''


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


இதயத்தில் அன்பு...

இயேசுவின் தூய்மைமிகு இதய பெருவிழா

27.06.2025 - வெள்ளிக் கிழமை


"விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்; ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்" - நீதிமொழிகள் 4:23

இதயம் இருக்குதா, உன் இதயம் எல்லாம் கல்லு என்ற வார்த்தைகள் இதயமற்ற, அன்பற்ற மனிதர்களை பார்த்து சொல்லக்கூடியவை.

இதயம் கனிந்து இருக்க வேண்டும். கனியாத இதயம் கல் போன்றது. 

இன்று பல சமயங்களில் நாம் இதயமற்ற இரக்கமற்ற மனிதர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இரக்கத்தோடு வாழ்வதனால் என்ன பயன்? அன்பு செய்வதனால் என்ன பயன்? என்ற கேள்விகள் பல தருணங்களில் கேட்கப்பட்டு கொண்டிருக்கிறது. (சில அன்புக்குரிய நபர்கள் ஏற்படுத்திய காயங்களினால் இக்கேள்விகள் எழுகிறது).

நம்முடைய இதயம் யாராவது ஒருவர் அமரக்கூடிய சிம்மாசனமாக இருக்கிறது, ஆனால் அந்த சிம்மாசனத்தின் இருக்கை என்பது தற்காலிகமானதாக இருக்கிறது. இதயத்தில் நிரந்தரமான இடம் யாருக்கும் நாம் கொடுப்பதில்லை, யாரும் நிரந்தரமாக அங்கு தங்குவதும் இல்லை. (சிலர் ஏற்படுத்திய காயங்களினால் சிலருக்கு இடமில்லாமல் போகிறது).

சில இதயங்கள் காயப்பட்டு போகின்றது, சில இதயங்கள் காயப்படுத்துகின்றது. 

இன்று இயேசுவின் தூய்மைமிகு இதய பெருவிழாவை கொண்டாடுகிறோம். இந்த இயேசுவின் இதயம் எல்லோருக்குமானது, பாகுபாடுகளைக் கடந்த இதயம், கனிவும் மனத் தாழ்மையும் உடைய இதயம், இழப்புகளை, எதிர்ப்புகளை சந்தித்தவர்களை தாங்கும் இதயம். இவ்வாறாக இயேசுவின் இதயம் பல பண்புகளை கொண்டுள்ளது. 

இறுதியில் அந்த இதயமும் காயப்பட்டு தான் இருக்கின்றது. எங்கு அதிகமாக அன்பு இருக்கிறதோ, எங்கு அதிகமான கனிவு இருக்கிறதோ அங்கு காயங்கள் அதிகம். இயேசுவின் வாழ்க்கையிலும் அது விதிவிலக்கு அல்ல. 

ஆனால் இயேசுவின் இதயம் காயப்பட்டாலும் மற்றவர்களின் காயங்களுக்கு கட்டு போடக்கூடிய இதயமாக தான் இருந்தது, இருக்கிறது, இன்னும் இருக்கும். 

மாற்கு நற்செய்தி 19: 31-37இல், படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.

இரத்தத்தாலும் சதையாலும் சூழப்பட்ட இதயமாக இயேசுவின் இதயம் இருக்கிறது. அவருடைய இதயம் பலருக்காக குத்தப்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த காயங்களுக்கு மருந்து எது? அன்பு ஒன்றே மருந்து. அந்த அன்பை நாம் எப்படி செலுத்தப் போகிறோம்? இயேசுவின் காயங்களை எப்படி குணப்படுத்த போகிறோம்?

மற்றவரின் இதயத்தை புண்படுத்தாத போது, மற்றவரின் காயங்களுக்கு கட்டுப் போடும்போது நான் இயேசுவின் காயங்களுக்கு மருந்திடுகிறோம். 

நம் கனிவு நிறைந்த இதயம் பல காயங்களுக்கு மருந்தாகட்டும்.

காயப்படுத்தும் இதயமாக அல்ல, மற்றவரின் காயங்களுக்கு கட்டுப்போடும் இதயமாக நம் இதயம் மாற வேண்டும்.

இயேசுவின் திரு இதயத்திலிருந்து பொங்கி வழியும் அன்பு நம் இதயத்திலும் பொங்கி வழிய வேண்டும்.


அருட்பணி. சைமன் ஆல்டஸ்

தூத்துக்குடி மறைமாவட்டம்

Thursday, January 26, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (27-01-2023)

 

பொதுக்காலம் 3ஆம் வாரம் - வெள்ளி

முதல் வாசகம்

பெரிய போராட்டத்தையே மன உறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள்; எனவே எதிர்நோக்கை இழந்துவிடாதீர்!

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 32-39

சகோதரர் சகோதரிகளே,

முன்னைய நாள்களை நினைவுகூருங்கள். நீங்கள் ஒளி பெற்றபின் உங்களுக்கு நேரிட்ட துன்பம் நிறைந்த போராட்டத்தை மன உறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள். சில வேளைகளில், நீங்கள் இகழ்ச்சிக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி, வேடிக்கைப் பொருளானீர்கள். வேறு சில வேளைகளில், இந்நிலைக்கு ஆளானோரின் துன்பங்களில் பங்கு பெற்றீர்கள். கைதிகளுக்குப் பரிவிரக்கம் காட்டினீர்கள். உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டபோதும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள். ஏனெனில் சிறந்த, நிலையான உடைமைகள் உங்களுக்கு உள்ளன என்பதை அறிவீர்கள்.

உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டு விடாதீர்கள். இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மன உறுதி தேவை. இன்னும், “மிக மிகக் குறுகிய காலமே இருக்கிறது; வர இருக்கிறவர் வந்துவிடுவார், காலம் தாழ்த்தமாட்டார். நேர்மையுடன் நடக்கும் என் அடியார், நம்பிக்கையினால் வாழ்வு அடைவார். எவராவது பின்வாங்கிச் செல்வார் என்றால் அவரில் நான் மகிழ்ச்சியுறேன்.”

நாமோ பின்வாங்கிச் சென்று அழிவுறுவோர் அல்ல. மாறாக, நம்பிக்கையையும் வாழ்வையும் காத்துக்கொள்வோர் ஆவோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 37: 3-4. 5-6. 23-24. 39-40 (பல்லவி: 39a)

பல்லவி: ஆண்டவரிடமிருந்தே மீட்பு நேர்மையாளருக்கு வருகின்றது.

3
ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ்.
4
ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். - பல்லவி

5
உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.
6
உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். - பல்லவி

23
தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார்.
24
அவர்கள் விழுந்தாலும் வீழ்ந்துகிடக்க மாட்டார்கள்; ஆண்டவர் அவர்களைத் தம் கையால் தூக்கி நிறுத்துவார். - பல்லவி

39
நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே.
40
ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.” அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 26-34

அக்காலத்தில்

இயேசு கூட்டத்தை நோக்கி, “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன்பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது” என்று கூறினார்.

மேலும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும் விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்” என்று கூறினார்.

அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 இறையாட்சியின் வித்துக்களா நாம்?


இத்தனை சிறிய விதையிலிருந்து எத்தனை பெரிய மரம் வந்தது என்கிறது ஒரு அழகான பாடல் வரிகள். சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் ஒவ்வொரு விதையும் அதிலிருந்து வளர்கின்ற செடியோ அல்லது மரமோ, கொடியோ விசித்திரமானதே. இவ்வாறு ஒரு விதை வளர்ந்து மரமாக உருமாற பல சோதனைகளைக் கடக்க வேண்டியுள்ளது. 


"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."(யோவான் 12:24) என்ற இறைவார்த்தைக்கேற்ப

விதையானது முளைத்து வளர்வதற்கு அது மடிவது மிக அவசியம். அது மடியும் போது தான் புதிய முளை தோன்றும். அவ்வாறு தோன்றிய முளை தரையை முட்டி முளைப்பதற்குள் கற்களையும் முட்களையும் தாண்டி, வளைந்து கொடுத்து வெளிவர வேண்டும். வெளிவந்த பின்னரும் மாறுகின்ற தட்பவெப்ப நிலை, வளமை, வறட்சி என அனைத்தையும் சகித்துக்கொண்டு வளர வேண்டும். இத்தனை கடினப்பாடுகளுக்கிடையிலும் அதன் வேரும் ஆழமாக வளர்ந்து பூமியில் தன்னை நிலைநிறுத்த வேண்டும். பின் தான் அவ்விதை மரமாகவோ செடியாகவோ உருமாற முடியும்.


இன்றைய நற்செய்தியில் இறையாட்சி கடுகுவிதைக்கு ஒப்பிடப்படுகிறது. சிறிய கடுகு விதையானது நாம் மேற்கூறிய எல்லா சோதனைகளையும் கடந்து மரமாக உருவெடுக்கும் போது பறவைகள் தங்குமளவிற்கு பெரியதாகவும் பயனுள்ளதாகவும் மாறுகிறது.

இது நமக்குச் சுட்டிக் காட்டும் செய்தி என்னவென்றால் இறையாட்சிக்காக நாம் உழைக்கும் போது நாமும் இத்தகைய இன்னல்களையும் இடையூறுகளையும் சந்திக்க நேரிடும் என்பதே. இருப்பினும் அவற்றை சகித்துக் கொண்டு நாம் தொடர்ந்து உழைக்கும் போது நிச்சயமாக நாம் இறையாட்சியின் வித்துக்களாய் வாழ முடியும். இறைவனை நம் மூலம் பலர் உணர முடியும். 


இன்றைய முதல் வாசகத்தின் மூலம் பிரச்சினைகளைக் கண்டு பின்வாங்காத மக்களாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.எத்தகைய சூழ்நிலையிலும் கிறிஸ்துவிடம் நம்பிக்கையும் நேர்மறையான எதிர் நோக்குடன் வாழும் மக்களாய் வாழ்ந்து இறையாட்சிக்காக உழைக்கும் மக்களாய்த் திகழ இறையருள் வேண்டுவோம்.


 இறைவேண்டல்

அன்பின் இறைவா! இன்னல்களையும் இடையூறுகளையும் கண்டு பின்வாங்காமல் எதிர் நோக்குடன் இறையாட்சியை உலகில் விளைவிக்கும் வித்துக்களாக வாழ அருள் தாரும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Thursday, January 19, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (20-01-2023)

 

பொதுக்காலம் 2ஆம் வாரம் - வெள்ளி


முதல் வாசகம்

இயேசு கிறிஸ்துவை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிடச் சிறப்புமிக்கது.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 8: 6b-13

சகோதரர் சகோதரிகளே,

சீரிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டு, இயேசு கிறிஸ்துவை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிடச் சிறப்புமிக்கது. முதல் உடன்படிக்கை குறையற்றதாய் இருந்திருப்பின், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடமே இருந்திருக்காது.

ஆனால், கடவுள் அவர்களது குற்றத்தை எடுத்துக் கூறிச் சொன்னது இதுவே: “இதோ, நாள்கள் வருகின்றன. அப்போது இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன்” என்கிறார் ஆண்டவர்.

‘எகிப்து நாட்டிலிருந்து அவர்களுடைய மூதாதையரைக் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது நான் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. ஏனெனில், நான் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள்; நானும் அவர்கள்மீது அக்கறை கொள்ளவில்லை’ என்கிறார் ஆண்டவர்.

‘அந்நாள்களுக்குப் பின் இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்ய இருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்’ என்கிறார் ஆண்டவர். இனிமேல் எவரும் ‘ஆண்டவரை அறிந்துகொள்ளும்’ எனத் தம் அடுத்தவருக்கோ, சகோதரர் சகோதரிகளுக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில், அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர். அவர்களது தீச்செயலை நான் இரக்கத்தோடு மன்னித்து விடுவேன். அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூர மாட்டேன்.’

“புதியதோர் உடன்படிக்கை” என்பதால், முன்னையதை அவர் பழையதாக்கிவிட்டார். பழமையானதும் நாள்பட்டதும் விரைவில் மறைய வேண்டியதே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 85: 7,9. 10-11. 12-13 (பல்லவி: 10a)

பல்லவி: பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்.

7
ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
9
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். - பல்லவி

10
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். - பல்லவி

12
நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல் விளைவை நம் நாடு நல்கும்.
13
நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 5: 19

அல்லேலூயா, அல்லேலூயா! உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தம்மிடம் இருக்கும்படி தாம் விரும்பியவர்களை அழைத்தார்.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-19

இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.

அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் - இவ்விருவருக்கும் ‘இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் - அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


இறைவன் என்னை அழைத்ததன் நோக்கம் என்ன? 

தாயின் கருவில் உருவாகும் முன்பே நான் உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் என்பது இறைவன் எரேமியா இறைவாக்கினருக்கு அளித்த அழைப்பு. இவ்வழைப்பு நம்மில் பலருடைய வாழ்க்கைக்கு உரமூட்டுவதாகவும் நம் அழைத்தல் வாழ்வை திடப்படுத்துவதாகவும் அமைகிறது என்றால் அது மிகையாகாது. திருமுழுக்கு பெற்ற நாம் அனைவருமே அழைக்கப்பட்டவர்களே. பழைய ஏற்பாட்டில் யாவே இறைவன் தன் மக்களை விடுதலையாக்க நீதித்தலைவர்களையும் இறைவாக்கினர்களையும் அரசர்களையும் அழைத்தார். புதிய ஏற்பாட்டில் ஆண்டவர் இயேசு தம் பணியைத்தொடர திருத்தூதர்ளை அழைத்தார். அதே வரிசையில் நாமும் அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வழைப்பின் நோக்கம் இன்றைய நற்செய்தியில் மிகத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவதாக "தம்மோடு இருக்க" . கடவுளோடு இணைந்திருப்பது என்பது அவரோடு செபத்தில் இணைந்திருப்பதைக் குறிக்கிறது. அவருடைய வார்த்தையில் நிலைத்திருப்பதைக் குறிக்கிறது. இது நம்மை செப வாழ்விற்கு அழைக்கிறது.


இரண்டாவதாக "அனுப்பப்படுதல்" .கடவுளோடு செபத்தில் இணைந்தால் மட்டும் போதாது. மாறாக அவரோடு உள்ள உறவை பணிவாழ்வின் மூலம் பிறருக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். 


இருத்தலும் அனுப்பப்படுதலும் அதாவது செபவாழ்வும் பணிவாழ்வும் இணைந்து இருப்பதே கடவுள் நம்மை அழைத்ததன் நோக்கம். நாம் எல்லாருமே இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளோம். கடவுளோடு செபவாழ்வில்  இணைந்து இருந்து அவருடைய பணியை நாம் செய்ய வேண்டும். இது குருக்கள் துறவியருக்கு மட்டும் தரப்பட்டுள்ள அழைப்பல்ல. கிறிஸ்தவர்களாகிய நம் அனைவருக்குமான அழைப்பு. செபவாழ்வும் பணிவாழ்வும் நம் அழைத்தலின் இருதூண்கள் என உணர்ந்து அழைத்தலுக்கேற்ற வாழ்வு வாழ முயலுவோம்.


 இறைவேண்டல் 

பெயர்சொல்லி அழைத்தவரே இறைவா நாங்கள் உம்மோடு இருந்து அவ்வனுபவத்தை பிறருக்கு பறைசாற்ற அனுப்பப்பட்டவர்கள் என உணர்ந்து வாழ வரமருளும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Thursday, January 12, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (13-01-2023)

 

பொதுக்காலம் முதல் வாரம் - வெள்ளி



முதல் வாசகம்

கடவுள் தரும் ஓய்வைப் பெறுகிறவர்கள், நம்பிக்கையுடன் இருக்கும் நாமே.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-5, 11

சகோதரர் சகோதரிகளே,

கடவுள் தரும் ஓய்வைப் பெறுவது பற்றி அவர் அளித்த வாக்குறுதி இன்னும் நிலைத்திருப்பதால், உங்களுள் எவரேனும் அதை அடையத் தவறிவிடக் கூடாது என எண்ணுகிறேன். இது குறித்து நாம் கவனமாய் இருப்போமாக. ஏனெனில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போலவே, நமக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது. ஆயினும் அவர்கள் கேட்ட செய்தி அவர்களுக்குப் பயன் அளிக்கவில்லை; ஏனெனில் கேட்டவர்கள் அச்செய்தியை நம்பிக்கையோடு கேட்கவில்லை.

இந்த ஓய்வைப் பெறுகிறவர்கள் நம்பிக்கையுடன் இருக்கும் நாமே. இதைக் குறித்தே, “நான் சினமுற்று, ‘நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்’ என்று ஆணையிட்டுக் கூறினேன்” என எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் உலகம் தோன்றிய காலத்திலேயே கடவுளுடைய வேலைகள் முடிந்துவிட்டன. ஏனெனில் மறைநூலில் ஓரிடத்தில் ஏழாம் நாள் பற்றி, “கடவுள் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மேற்சொன்ன சொற்றொடரில், “அவர்கள் நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்” என்றிருக்கிறது.

ஆதலால், கீழ்ப்படியாதவர்களின் மாதிரியைப் பின்பற்றி, எவரும் வீழ்ச்சியுறாதவாறு அந்த ஓய்வைப் பெற முழு முயற்சி செய்வோமாக.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 78: 3,4bc. 6c-7. 8 (பல்லவி: 7b)

பல்லவி: இறைவனின் செயல்களை மறவாதீர்கள்.

3
நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எம் மூதாதையர் எமக்கு விரித்துரைத்தவை - இவற்றை உரைப்போம்.
4bc
வரவிருக்கும் தலைமுறைக்கு ஆண்டவரின் புகழ்மிகு, வலிமைமிகு செயல்களையும் அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம். - பல்லவி

6c
இவர்கள் தம் புதல்வர்களுக்கு ஆர்வத்துடன் கற்றுக்கொடுக்கவும்,
7
அதனால், அவர்கள் கடவுள்மீது நம்பிக்கை வைக்கவும், இறைவனின் செயல்களை மறவாதிருக்கவும், அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கவுமே. - பல்லவி

8
தங்கள் மூதாதையரைப் போல், எதிர்ப்பு மனமும், அடங்காக் குணமும் கொண்ட தலைமுறையாகவும், நேரிய உள்ளமற்றவர்களாகவும், இறைவன்மீது உண்மைப் பற்று அற்றவர்களாகவும் இராதபடி அவர் கட்டளையிட்டார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க, மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், “இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?” என உள்ளத்தில் எண்ணிக்கொண்டிருந்தனர்.

உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்? முடக்குவாதமுற்ற இவனிடம் ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்பதா? ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்பதா? எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ” என்றார்.

அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், “இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே” என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

 நல்ல நண்பர்களா நாம்!


எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தத்துவவியல் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் அருட்சகோதரர்களாகிய நாங்கள் தேனி அருகிலுள்ள கும்பக்கரை என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றிருந்தோம். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் பொழுது பாறையில் வழுக்கி என் தலையில் காயம் ஏற்பட்டது. இரத்தம் அதிகமாக வடிந்தது. நான் மயக்க நிலையை அடைந்தேன். அப்பொழுது என்னுடைய நண்பர் என்னோடு அருகிலிருந்து தன்னுடைய வார்த்தையாலும் உடனிருப்பாலும் திடப்படுத்தினார். நான் வேதனையுற்ற போது "உனக்கு எத்தீங்கும்  நேரிடாது" எனக்கூறி என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எனக்கு தையல் டபோடும் பொழுது என் தலையிலிருந்து இரத்தம் வழிந்தோடியது. அப்பொழுது அந்த இரத்தத்தை பார்த்ததும் அவருக்கும் கூட ஒருவித மயக்கம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் உடனிருப்பால் என்னை திடப்படுத்தி நான் அந்தக் காயத்திலிருந்து குணம் பெறும்வரை மிகுந்த அக்கறையோடு என்னை கவனித்துக் கொண்டார். அதேபோல தத்துவவியல் படிக்கின்ற பொழுது புரியாத பாடங்களை தன்னுடைய தனிப்பட்ட நேரத்தைக் கூட செலவழித்து எனக்குப் புரிய வைப்பார். எனக்குள் எழுத்து திறமை இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டி மாதாந்திர ஆன்மீக இதழ்களுக்கு கட்டுரை எழுத உற்சாகப்படுத்தினார். நான் தவறு செய்கின்ற பொழுது தவற்றை தவறு என சுட்டிக்காட்டி என்னை நல்வழிப்படுத்தினார். ஆன்மிகத்தில் மென்மேலும் வளர என்னை வழிகாட்டினார். எனக்கு பல வகையில் பக்கத்துணையாக இருந்து என்னுடைய குருத்துவ பயிற்சியை சிறப்பாக மேற்கொள்ள வழிகாட்டினார். இவர் எனக்கு நண்பராக கிடைத்தது கடவுள் கொடுத்த கொடையாக நினைக்கின்றேன். ஏனென்று சொன்னால் என்னுடைய  அழைத்தல் வாழ்வில் தள்ளாடிய நேரத்தில் எனக்கு துணையாக இருந்து வழிகாட்டியவர். இப்படிப்பட்ட நல்ல நண்பர்கள் நம்முடைய வாழ்க்கையில் இருக்கின்ற பொழுது நிச்சயமாக நம் வாழ்வு மகிழ்வையும் நிறைவையும் பெறும்.


நம்மைப் படைத்த கடவுள் நமக்கு நண்பரைப் போல இருக்கின்றார். இஸ்ராயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க கடவுள் தேர்ந்தெடுத்த மோசே, தன் நண்பனைப் போல கடவுளை சந்தித்தார். அதேபோல் இஸ்ராயேல்  மக்களை எகிப்திலிருந்து கானான் நாட்டிற்கு அழைத்து வருகின்ற பொழுது பகலில் மேகத்தூணாகவும் இரவில் நெருப்பு தூணாகவும் இருந்து வழிகாட்டினார் கடவுள். மேலும் ஒரு நண்பரைப் போல இஸ்ரயேல் மக்களின் இன்ப துன்பங்களில் உடனிருந்து அவர்களை வழிநடத்தினார்.


அதேபோல மீட்பின் கனியை தங்களுடைய பாவத்தின் பொருட்டு சுவைக்கத் தவறிய மக்களை மீட்க வேண்டும் என்ற காரணத்திற்காக தன் ஒரே மகனையே இவ்வுலகிற்கு பாவக் கழுவாயாக அனுப்பினார். ஆண்டவர் இயேசுவும் ஒரு நண்பருக்குரிய மனநிலையில் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நோயுற்ற, சமூகத்தில் புறந்தள்ளப்பட்ட மக்களை அன்பு செய்தார். அதன் வெளிப்பாடுதான் அவருடைய பல்வேறு போதனைகளும் வல்ல செயல்களும் . இயேசு ஒரு நண்பரைப் போலவே மிகச்சிறந்த இறையாட்சி பணியை செய்தார். அவர் வல்லசெயல் செய்தது தனக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல; மாறாக, புது வாழ்வை மற்றவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காக. அதே போல இயேசு நட்பிற்கு மதிப்பு அளிப்பவராக இருக்கிறார்.


இன்றைய நற்செய்தியில் இயேசு ஒரு வீட்டில் இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டு வந்தனர். மக்கள் அதிகமாக இருந்ததால் அவரை இயேசுவுக்கு முன்னால் கொண்டு வர முடியவில்லை. எனவே இயேசு இருந்த  வீட்டின் கூரையை உடைத்து திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரை படுக்கையோடு கீழே இறக்கினார்கள். இயேசு அந்த முடக்குவாதமுற்றவரின் நண்பர் நால்வரின் நம்பிக்கையைக் கண்டு "மகனே!  உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று கூறி நலம் அளித்தார்.


முடக்குவாதமுற்ற மனிதர் தன்னுடைய அடிப்படைத் தேவைகளை கூட நிவர்த்தி செய்ய முடியாதவர். அப்படிப்பட்ட அந்த மனிதரின் துன்பத்தை அறிந்து கொண்ட அவரின் நண்பர்கள் அவருக்கு நலம் அளிக்க இயேசுவிடம் கொண்டு சென்றனர். இது அந்த நண்பர் நால்வர் இயேசுவின் மீது கொண்ட ஆழமான நம்பிக்கையையும் முடக்குவாதமுற்ற அந்த நண்பரின் மீதுள்ள அன்பையும் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. என்றும் நண்பராய் இருக்கக் கூடிய ஆண்டவர் இயேசுவும் தன் அன்பினை முடக்குவாதமுற்ற  மனிதரின் பாவங்களை மன்னிப்பது வழியாக நலம் அளிக்கின்றார். முடக்குவாதமுற்ற அந்த மனிதர் உடலளவில் மட்டும் பாதிக்கப்படவில்லை; மாறாக, பாவக்கறையினால்  அவரின் ஆன்மாவும் முடக்குவாதமுற்றிருந்தது. எனவேதான் இயேசு ஒரு நண்பருக்குரிய மனநிலையில் அவரின் பாவத்தை மன்னித்து நலமளித்தார். 


இதைக்கண்ட மறைநூல் அறிஞர்கள் இயேசு பாவங்களை மன்னிப்பதைப் பார்த்து விமர்சனப்படுத்துகின்றனர். ஆனால் ஆண்டவர் இயேசு "மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்" என்பதை சுட்டிக்காட்டி மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். மன்னிப்பது நலமான வாழ்வை வழங்கும். இயேசு இறையாட்சி பணி செய்த பொழுது முடக்குவாதமுற்றவருக்கு உதவி செய்த அந்த நான்கு நண்பரைப் போல பலர் ஒத்துழைப்பும் கொடுத்தார்கள். மறைநூல் அறிஞர்களை  போன்ற எதிர்மறை கருத்துக்களை கொண்டவர்களும் இருந்தார்கள். இயேசு எதையும் கண்டு தளர்ந்து விடாமல் தனது நிலைப்பாட்டில் நிலைத்திருந்து ஒரு நண்பரைப் போல எல்லா மக்களையும் அன்பு செய்து புது வாழ்வை வழங்கினார். இப்படிப்பட்ட மனநிலையை கொண்டிருக்க தேவையான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல்

நல்ல நண்பராகிய இயேசுவே! நாங்கள் எங்கள் அன்றாட வாழ்வில் துன்பப்படுகின்ற மக்களுக்கு துணையாக இருந்து ஒரு நண்பரைப் போல அவர்களின் துயர் தீர்க்கும் நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.

Thursday, December 29, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (30-12-2022)

 

இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம்

விழா




முதல் வாசகம்

ஆண்டவருக்கு அஞ்சுகிறவன் தாய் தந்தையரை மதிக்கிறான்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 3: 2-7, 12-14a

பிள்ளைகளைவிடத் தந்தையரை ஆண்டவர் மிகுதியாக மேன்மைப் படுத்தியுள்ளார்; பிள்ளைகள்மீது அன்னையர்க்குள்ள உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளார். தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்கின்றனர். அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டிவைப்போருக்கு ஒப்பாவர். தந்தையரை மதிப்போருக்குத் தங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும்; அவர்களுடைய மன்றாட்டு கேட்கப்படும். தந்தையரை மேன்மைப்படுத்துவோர் நீடுவாழ்வர்; ஆண்டவருக்குப் பணிந்து நடப்போர் தங்கள் அன்னையர்க்கு மதிப்பு அளிப்பர். தலைவர்கள் கீழ்ப் பணியாளர்கள்போல் அவர்கள் தங்கள் பெற்றோருக்குப் பணி செய்வார்கள்.

குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு; அவரது வாழ்நாளெல்லாம் அவரது உள்ளத்தைப் புண்படுத்தாதே. அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப்பிடி; நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே. தந்தைக்குக் காட்டும் பரிவு மறக்கப்படாது. அது உன் பாவங்களுக்குக் கழுவாயாக விளங்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

ஆண்டவருக்கு உகந்த குடும்ப வாழ்க்கை.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 12-21

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கு இசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்ததுபோல நீங்களும் மன்னிக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவை அனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாய் இருங்கள்.

கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள். எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஆண்டவரைச் சார்ந்து வாழ்வோருக்கு இதுவே தகும். திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களைக் கொடுமைப்படுத்தாதீர்கள். பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரைச் சார்ந்தவர்களுக்கு இதுவே தகும்.

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறு பெற்றோர்!

1
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
2
உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர். - பல்லவி

3
உம் இல்லத்தில் உம் துணைவியார் கனி தரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப்போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். - பல்லவி

4
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5
ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

கொலோ 3: 15a, 16a

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-15, 19-23

ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்” என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்; ஏரோது இறக்கும் வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, “எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.

ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்” என்றார். எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார். ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு, அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, “ ‘நசரேயன்’ என அழைக்கப்படுவார்” என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.



குடும்பமாய் இறை உளத்திற்கு பணிவோம்! 


குடும்பம் என்பது மனிதரை  உருவாக்கும் பல்கலைக்கழகம். ஒவ்வொரு மனிதனும் குடும்பத்தில் இருந்துதான் அனைத்தையும் கற்றுக் கொள்கின்றான். ஒரு மனிதனை நல்லவனாகவும் தவறு செய்பவனாகவும் மாற்றுவது குடும்பம். எனவேதான் திருத்தந்தை "குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை "எனச் சுட்டிக்காட்டுகிறார். குடும்பம் என்ற ஒன்று  நற்செய்தி விழுமியங்களை வாழ்ந்தால் மட்டுமே இந்த அகிலத் திருஅவை நற்செய்தி விழுமியத்தின் படி வாழ முடியும்.நல்ல குடும்பமே நல்ல சமூகத்தை உருவாக்கும்.


இன்று திருஅவையோடு இணைந்து நாம் திருக்குடும்பவிழாவைக் கொண்டாடுகிறோம்.யோசேப்புவை  குடும்பத்தலைவராகவும் மரியாவை குடும்பத் தலைவியாகவும் இவர்களின் புதல்வனாக இயேசுவையும் உள்ளடக்கிய, நம் குடும்பங்களைப் போன்ற ஒரு சாதாரண குடும்பம்தான் அது. 2000 வருடங்களுக்கு முன்  பாலஸ்தீன நாட்டில் நாசரேத்து ஊரில் வாழ்ந்த மிகச் சாதாரணமான ஒரு குடும்பம்  "திரு "என்ற அடைமொழியோடு அழைக்கப்படுவதேன்? இறைமகன் இயேசு பிறந்ததால் மட்டுமா? இல்லை இறைமகன் இயேசு பிறப்பதற்கு ஏற்ப தன்னை தயாரித்ததாலா?  இன்னும் ஆழமாக யோசித்தால் நமக்கு  "இறை திருஉளத்தை வாழ்வாக்கியதால் " என்ற விடை நமக்குக் கிடைக்கிறது. 


யோசேப்பு, மரியா, இயேசு என மூவரும் போட்டி போட்டுக்கொண்டல்லவா இறைசித்தத்திற்கு பணிந்தார்கள்."இதோ ஆண்டவனின் அடிமை "எனமொழிந்து கன்னியாக இறைமகனை கருவிலே தாங்கி ஆண்டவனுக்கு பணிந்தாள் மரியா. கனவிலே இறைசித்தத்தை உணர்ந்து அதை வெறும் கனவென்று உதாசீனப்படுத்தாமல் சொன்னவற்றை எல்லாம் செய்தார் யோசேப்பு. இறைமகன் என்ற நிலையைப் பற்றிக்கொள்ளாமல் மனிதனாய்ப் பிறந்து விண்ணகத் தந்தையின் புதல்வனாய் மட்டும் அல்லாமல் தன் மண்ணகப் பெற்றோரையும் இறைசித்தத்திற்கேற்ப மதித்து பணிந்து வாழ்ந்தார் இயேசு. இதனால்தானே இக்குடும்பம் திருக்குடும்பமானது.


இறைதிருஉளம் இவர்களுக்கு மகிழ்ச்சியான சொகுசான வாழ்க்கையைத் தரவில்லை. வறுமை, துன்பம்,பிரச்சினைகளுக்கு பஞ்சமில்லை இவர்கள் வாழ்வில். அத்தனையும் ஏற்றுக்கொண்டார்கள் இறைவனைப் பணிந்து.

இறைசித்தத்திற்கு பணிந்ததால் இத்திருக்குடும்பத்தில் ஒருவர் மற்றவர் மீது கொண்டுள்ள அன்பு, புரிதல், விட்டுக்கொடுத்தல், மன்னித்தல் போன்ற அத்தனை பண்புகளும் முழுமை அடைந்தன.


 நம்முடைய குடும்பங்களை திருக்குடும்பத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்போமா ?இறைசித்தம் நம் குடும்பங்களில் மேலோங்கி நிற்கிறதா? நம்மிடைய உள்ள அன்பு, புரிதல், விட்டுக்கொடுத்தல், மன்னித்தல் போன்ற பண்புகள் முழுமையடைகிறதா?

ஆம் என்றால் இந்நிலை தொடர செபிப்போம். இல்லை என்றால் இனிமேல் திருக்குடும்பமாக மாற முயலுவோம். 


கணவன், மனைவி, பிள்ளைகள் கொண்டது மட்டும் குடும்பமல்ல. திருஅவை ஒரு குடும்பம். அன்பியம் ஒரு குடும்பம். பக்த சபைகளும் குடும்பங்களே. பங்கு ஒரு குடும்பம். துறவற த்தார் சேர்ந்து வாழும் குழுமங்களும் குடும்பங்களே. மூவொரு இறைவனை அடித்தளமாகவும், திருக்குடும்பத்தை முன்மாதிரியாகவும் கொண்டு நாம் அனைவரும் குடும்பமாக இறைதிருஉளத்தை நிறைவேற்ற ஒவ்வொருநாளும் முயற்சி செய்யத் தயாராவோம்.


 இறைவேண்டல் 

அன்பு இறைவா! திருக்குடும்பத்தை முன்மாதிரியாக எங்கள் குடும்பங்களில் இறைச்சித்தத்திற்கு பணிந்து வாழ வரமருளும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️


Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...