Showing posts with label திருவருகைக்காலம் IV. Show all posts
Showing posts with label திருவருகைக்காலம் IV. Show all posts

Friday, December 23, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (24-12-2022)

 

திருவருகைக் கால வார நாள்கள் - டிசம்பர் 24

இன்று மாலையில் நடைபெறும் திருப்பலியில் கிறிஸ்து பிறப்பு திருவிழிப்புத் திருப்பலி வாசகங்களைப் பயன்படுத்தவும்.
முதல் வாசகம்

தாவீதின் அரசு ஆண்டவர்முன் என்றென்றும் உறுதியாக இருக்கும்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-5, 8b-12, 16

தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, “பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது” என்று கூறினார். அதற்கு நாத்தான், “நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்; ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்று அரசரிடம் சொன்னார்.

அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: “நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்:

நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாயா? என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்ற இடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்வேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்து வாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப் போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார்.

உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில் கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 89: 1-2. 3-4. 26,28 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன்.

1
ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
2
உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது. - பல்லவி

3
நீர் உரைத்தது: ‛நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4
உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.’ - பல்லவி

26
‛நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான்.
28
அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விடிவிண்மீனே, முடிவிலா ஒளியின் சுடரே, நீதியின் கதிரவனே, இருளிலும் மரண நிழலிலும் அவதிப்படுவோரைச் சுடர்வீசி ஒளிர்விக்க வந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 67-79

அக்காலத்தில்

திருமுழுக்கு யோவானின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார். தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்; நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார். அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார். இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய். இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


வாக்குறுதிகளின் இறைவன் நம்மைத் தேடி வருகிறார்! 


 நண்பர்கள் இருவர் தங்களிடையே உரையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது இருவரும் தங்கள் வாழ்நாள் முழுதும் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக துன்பத்தில் துணையிருக்க வேண்டும் என்றும் வாக்குறுதி கொடுத்துக்கொண்டனர். நாட்கள் செல்லச் செல்ல அவர்கள்  தங்களுடைய போக்கை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தார். புதிய நண்பர்கள், புதிய பணியிடங்கள், புதிய வாழ்க்கை முறைகள், பண வசதிகள், திருமண வாழ்க்கை  என ஒவ்வொன்றாக மாற மாற இவர்தான் தன் நண்பன் என்பதையே மறந்து போனார்கள். இருவரின் வாக்குறுதிகளும் மறைந்து போயின. 


 மனிதருக்கு மனிதன் தரும் வாக்குறுதிகளின் தன்மை இதுதான். பெரும்பாலும் அவை உறுதியற்றவை. நிலையற்றவை. மறைந்து விடுபவை. ஏன் இறைசந்நிதியில் திருமண வாக்குறுதிகள் கொடுத்து பல வருடங்கள் ஒன்றாக இணைந்து வாழ்ந்து பிள்ளைகள் பெற்றெடுத்த தம்பியர் தங்கள் வாக்குறுதிகளில் நிலையாக இல்லாமல் சிதறிப் போவதை நாம் கண்களால் காண்கிறோம் அன்றோ. 


ஆனால் நம் தந்தை கடவுள் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவராக உள்ளார். தம் ஒரே மகன் இயேசுவை இவ்வுலக மீட்புக்காக அவர் கையளித்த செயல் அவர் வாக்குகளை நிறைவேற்றும் தேவன் என்பதை உணர்த்தும் உச்சகட்ட அடையாளமாகத் திகழ்கிறது. இதைத்தான் இன்றைய இரு வாசகங்களும் நமக்கு எடுத்துரைக்கின்றன. முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா மூலமாக தாவீதின்  அறியணையை நிலைநிறுத்துகிறார். அதே போல நற்செய்தியில் சக்கரியா மூதாதையருக்கு கடவுள் தந்த வாக்குறுதியை நிறைவேற்றியதை எண்ணி அவரைப் போற்றி புகழ்கிறார்.  


விண்ணகத்தந்தையின் பிள்ளைகளாகிய நாமும் அவரைப் போல உடன்டிக்கையில் நிலையானவர்களாக, கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வாறு வாழும் போது உறவு நிலைக்கும்.  அமைதி பெருகும். வாழ்வு செழிக்கும். கடவுள் நம்மோடு வாழ்ந்திடுவார்.


 இறைவேண்டல் 

வாக்குமாறா தேவனே!  உம்மைப்போல் வாக்குமாறாதவர்களாக வாழ்ந்து விடியலைக் காண எமக்கருள் செய்யும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Thursday, December 22, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (23-12-2022)

 

திருவருகைக் கால வார நாள்கள் - டிசம்பர் 23



முதல் வாசகம்

ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.

இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4; 4: 5-6

படைகளின் ஆண்டவர் கூறியது: “இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்குமுன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்” என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆனால், அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப்போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார். அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர்போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப்போல் அவர்களைப் புடமிடுவார். அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக் காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும்.

இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன். நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 25: 4-5ab. 8-9. 10,14 (பல்லவி: லூக் 21:28)

பல்லவி: தலைநிமிர்ந்து நில்லுங்கள் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.

4
ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5ab
உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; - பல்லவி

8
ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9
எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். - பல்லவி

10
ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.
14
ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்; - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் அனைவர்க்கும் அரசரே, திருச்சபையின் மூலைக்கல்லே, மண்ணிலிருந்து நீர் உருவாக்கிய மனிதனை மீட்க வாரும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

திருமுழுக்கு யோவானின் பிறப்பு.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66

எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, “வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்” என்றார். அவர்கள் அவரிடம், “உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே” என்று சொல்லி, “குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?” என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, “இக்குழந்தையின் பெயர் யோவான்” என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, “இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?” என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அருள்வாக்கு.


நமது பிறப்பை சிறப்பாக்குவோம்! 

கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு மிக அருகில் நாம் இருக்கிறோம். இன்றைய நாளில் நமது சிந்தனைக்காக யோவானின் பிறப்பு நிகழ்வு தரப்பட்டுள்ளது. இந்நிகழ்வில்  மூன்று முக்கியமான சிந்தனைகளை நமது பிறப்போடும் நாம் ஒப்பிட்டு பார்க்கலாம். 


முதலாவதாக யோவான் பிறந்தவுடன் அக்கம் பக்கத்திலுள்ளோர் கடவுள் முதிர்ந்த வயதில் சக்கரியாவுக்கும் எலிசபெத்துக்கும் கடவுள் இரக்கம் காட்டியுள்ளார் என்று எண்ணி அவர்களோடு மகிழ்ந்தனர் என நாம் வாசிக்கிறோம். குழந்தைப் பேறு என்பது கடவுளின் இரக்கத்தின் வெளிப்பாடு. இன்றைய சமூகத்தில் எத்தனை பேர் பிள்ளைப் பேறுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். அவ்வாறிருக்க நாம் அனைவருமே நம் பெற்றோர்களுக்கு கடவுளுடைய  இரக்கத்தின் அடையாளமாக பிறந்தவர்கள் என்பதே உண்மை. இந்த உண்மையை நாம் உணர்ந்து வாழ்வோமெனில் நம்முடைய பிறப்பும் யோவானின் பிறப்பைப் போல சிறப்புடையதாய் இருக்கும் .


இரண்டாவதாக யோவான் எனப் பெயரிட வேண்டும் என்ற சொன்னவுடன் சக்கரியாவின் நா கட்டவிழ்ந்தது. அவர் இறைவனைப் போற்றி புகழ்ந்தார் என வாசிக்கிறோம். சக்கரியா இறைவனின் வாக்குறுதியை நம்பாததால் அவர் பேச்சிழந்தார். குறித்த காலத்தில் எல்லாம் நிறைவேறியதைக் கண்டு அவர் கடவுளை நம்பியதோடல்லாமல் அவர் சொன்னபடியே தன் குழந்தைக்கு பெயரிட விழைந்தார். அவருடைய நாவு கட்டவிழ்ந்தது. நாமும் நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் கடவுளால்  வாக்குறுதிகளாகத் தரப்பட்டவர்களே. அதை நாம் மெய்ப்பிக்கும் விதமாக வாழும் போது நமது பிறப்பும் சிறப்படையுமன்றோ.


மூன்றாவதாக இந்த நிகழ்வுகளையெல்லாம் கண்டவர்கள் அச்சம் கொண்டனர் என வாசிக்கிறோம். இங்கே அச்சம் என்பது இறைவனின் செயல்களைக் கண்டு வரக்கூடிய ஒரு வியப்பு கலந்த உணர்வு. நமது வாழ்வும் செயல்முறைகளும் பிறருக்கு இறைவன் பால் இத்தகைய அச்சத்தையும் வியப்பையும் உருவாக்குகிறதா என சிந்தித்து வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் நமது பிறப்பும் சிறப்படையும். 


 நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கடவுள் இரக்கத்தின் அடையாளமாக இருக்கிறார் என்பதை முழுமையாக உணர்வோம். தன்னுடைய ஒரே மகனை இந்த உலகிற்கு குழந்தையாக அனுப்பியதன் மூலம் கடவுளின் இரக்கத்தையும்  அன்பையும் நம்மால்  அறிய முடிகிறது. எனவே நம்முடைய வாழ்க்கையில் கடவுள் செய்த இரக்கச் செயல்களை எண்ணி நன்றி கூறுவோம். சக்கரியாவின் நா கட்ட அவிழ்ந்தவுடன் கடவுளைப் புகழ்ந்தது போல நாமும் கடவுள் செய்த நன்மைகள் அனைத்தையும் எண்ணிப் பார்த்து ஒவ்வொரு நாளும் அவரைப் போற்றிப் புகழ முயற்சி செய்வோம். இறுதியாக யோவானின் பிறப்பை குறித்து மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தார்கள். கடவுளின் வியத்தகு  செயல்களை எண்ணி அவருக்கு அஞ்சி கீழ்ப்படியும் பிள்ளைகளாக வாழ முயற்சி செய்வோம்.

அப்படி வாழுகிற பொழுது நம்முடைய பிறப்புக்கு முழுமையைக் கொடுத்து கடவுளின் ஆசிரால் நிறைவைப் பெற முடியும். அதற்கு தேவையான அருளை இந்த நாளில் சிறப்பாக மன்றாடுவோம்.


 இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா! நீர் எங்களுக்கு செய்துள்ள வியத்தகு நன்மைகளை  எண்ணி பார்த்து உமக்கு புகழ் சாற்றிட வரம் தாரும்.  இறையச்சத்தோடு எங்கள் வாழ்வை நேரிய முறையில் உமது திருவுளப்படி வாழ்ந்து எமது பிறப்பை சிறப்பாக்க அருளைத் தாரும். ஆமென்.



அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Wednesday, December 21, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (22-12-2022)

 

திருவருகைக் கால வார நாள்கள் - டிசம்பர் 22



முதல் வாசகம்

சாமுவேலின் பிறப்புக்காக அவரது தாய் அன்னா நன்றி செலுத்துகிறார்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 24-28

அந்நாள்களில்

சாமுவேல் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல் பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள். பின் அவர் கூறியது: “என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.” அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

1 சாமு 2: 1. 4-5. 6-7. 8ab (பல்லவி: 1a)

பல்லவி: என் மீட்பரான ஆண்டவரில் என் இதயம் மகிழ்கின்றது.

1
ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது! ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன். - பல்லவி

4
வலியோரின் வில்கள் உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்!
5
நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர்; பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார் ஆகியுள்ளனர்! மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ, தனியள் ஆகின்றாள்! - பல்லவி

6
ஆண்டவர் கொல்கிறார்; உயிரும் தருகின்றார்; பாதாளத்தில் தள்ளுகின்றார்; உயர்த்துகின்றார்;
7
ஆண்டவர் ஏழையாக்குகின்றார்; செல்வராக்குகின்றார்; தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார்! - பல்லவி

8ab
புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்! குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்! உயர் குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் அனைவர்க்கும் அரசரே, திருச்சபையின் மூலைக்கல்லே, மண்ணிலிருந்து நீர் உருவாக்கிய மனிதனை மீட்க வாரும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 46-56

மரியா கூறியது: “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.”

மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


"தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார் நம் இறைவன்!" 


ஒரு ஊரில் பெண் குழந்தை வேண்டாம் என்று ஒரு குடும்பம் இருந்தது. ஆனால் அவர்களுக்கு தொடர்ந்து மூன்று  பெண் குழந்தைகள் பிறந்தன. எனவே அந்தக் குழந்தைகளை எப்படியாவது கள்ளிப்பால் ஊற்றி கொல்லலாம் என்றுகூட நினைத்தனர். ஆனால் தங்கள் குழந்தைகளைக் கொல்வதற்கு எப்படி பெற்றவர்களுக்கு மனது வரும். இவர்களைச் சிறப்பாக வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் படிக்க வைத்தனர். அந்த மூன்று பெண் குழந்தைகளும் சிறப்பாகப் படித்து பிற்காலத்தில் மூன்று பேருமே அரசு வேலைக்குச் சென்றனர். தங்களுடைய பெற்றோருக்கு மிகப்பெரிய வீட்டைக் கட்டிக் குடியேற வைத்தனர். அதற்கு மிக முக்கியமான காரணம் பெற்றோர்களின் நல்ல மனநிலை. தொடக்கத்தில் அவர்களுக்கு பெண் குழந்தைகளைக் குறித்து எதிர்மறையான மனநிலை இருந்தாலும் அதன் பிறகு அவர்கள் தன் குழந்தைகளை அன்பு செய்தனர். அன்பு செய்ததன் விளைவாக அந்த மூன்று பெண் குழந்தைகளும் மிக உயர்ந்த இடத்திற்கு சென்றனர்.


நம்மைப் படைத்த கடவுளும் நம்மை அன்பு செய்வது நேரடியாக வெளிப்படாது. மாறாக நாம் தாழ்வுற்று துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது அதிலிருந்து வெளியேறி வாழ்வில் முன்னேற வழிகாட்டுவதன் வழியாக கடவுளின் அன்பை முழுமையாகச் சுவைக்க முடியும். இன்றைய திருவழிபாட்டு வாசகங்களில் இரண்டு பெண்கள் கடவுளின் அன்பைசுவைத்ததை பற்றிஅறிய வருகின்றோம்.


முதல் வாசகத்தில் குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்திய அன்னா கடவுளின் ஆசீர்வாதத்தால் சாமுவேலை குழந்தையாகப் பெற்றார். எனவே தன் மகனைக் கடவுளுக்கு அர்ப்பணித்தார். அக்காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் இல்லை என்றால் அது சாபம் என மக்கள்   குற்றம் சாட்டினார். எனவே அன்னா பற்பல வசை மொழிகளுக்கு  நேரிட்டிருக்கலாம். ஆனால் அன்னா இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். இறுதியிலே கடவுள் குழந்தை பாக்கியத்தைக் கொடுத்து அன்னாவை பெருமைப்பட உயர்த்தினார்.


இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஏழைப் பெண்ணான கன்னி மரியாவை கடவுள் தன் மகன் இந்த உலகத்தில் பிறப்பதற்காகத் தெரிவு செய்ததன் வழியாக அவர் உயர்த்தப்பட்டார். அன்னை மரியாள்ஒரு ஏழைப்பெண்.யூத சமூகத்தில் பெண்கள் அடையாளம் தெரியாதவர்களாக  ஒடுக்கப்பட்டார்கள். இப்படிப்பட்ட சூழலில் யூத இனமும் இந்த உலகமும் தன் மகன் வழியாக மீட்கப் பெற ஒரு பெண்ணைத்தான் கடவுள் தேர்ந்தெடுத்தார். எனவேதான் அன்னை மரியா கடவுளிடமிருந்து பெற்ற அன்பை உணர்ந்தவராய் அவருக்கு நன்றி கூறும் விதமாக மகிழ்ச்சிப் பாடல் பாடினார். அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கிறோம். 


அன்னை மரியா, 'ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.

என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.

ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்' '' (லூக்கா 1:47-48) என்று பாடியதற்கு காரணம் யூத சமூகம் பெண்ணை அடிமை போல தாழ்த்தி ஒடுக்கியதே. ஆனால் கடவுள் அன்னை மரியாளை உயர்த்தியதால், இந்தப் பாடல் வழியாகக் கடவுளை புகழ்ந்தார்.


மேலும் இந்தப் பாடலானது புகழ்ச்சி நிறைந்ததாகவும் நீதி நெறிகளை வெளிப்படுத்தும் புரட்சிக் கீதமாகவும்  இருக்கின்றது. எனவே கடவுள் இந்த இரு பெண்களையும் தன்னுடைய ஆசீர்வாதத்தால் நிரப்பி,  இவர்கள்  பெற்றெடுத்த குழந்தைகளின் வழியாக இவ்வுலக மக்கள் மீட்பின் வாழ்வைப் பெற்றுக் கொள்ள   கருவிகளாகப் பயன்படுத்தினார்.


எனவே சமூகத்தில் தாழ்நிலையில் உள்ளவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் உரிமை இழந்தவர்களையும் அன்போடு ஏற்று, அவர்கள் புதுவாழ்வு பெற உதவி செய்வோம். மனிதமும் மனிதநேயமும் இந்த மண்ணில் மலர நாம் உதவி செய்வோம். அப்பொழுது நிச்சயமாக கடவுள் இந்த உலகிற்கு  கொண்டுவந்த இறையாட்சியின் மீட்பை அனைவரும் சுவைத்திட வழிகாட்ட முடியும். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா! தாழ்நிலையில் இருப்பவர்களை உயர்த்தி மகிழ்வு கண்டவரே! இந்த சமூகத்தில் எத்தனையோ நபர்கள் தங்கள் வாழ்வை இழந்து அடையாளம் தெரியாமல் வாழ்கின்றனர். அவர்களும் வாழ்வில் முன்னேற அவர்களுக்காக  உழைக்கும் நல்ல மனநிலையை எங்களுக்குத்  தாரும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Tuesday, December 20, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (21-12-2022)

 

திருவருகைக் கால வார நாள்கள் - டிசம்பர் 21



முதல் வாசகம்

இதோ, மலைகள்மேல் தாவி என் அன்பர் வருகின்றார்.

இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 2: 8-14

தலைவி கூறியது: என் காதலர் குரல் கேட்கின்றது; இதோ, அவர் வந்துவிட்டார்; மலைகள்மேல் தாவி வருகின்றார்; குன்றுகளைத் தாண்டி வருகின்றார். என் காதலர் கலைமானுக்கு அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர். இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்; பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்; பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார். என் காதலர் என்னிடம் கூறுகின்றார்: “விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா. இதோ, கார்காலம் கடந்துவிட்டது. மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது. நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன; பாடிமகிழும் பருவம் வந்துற்றது; காட்டுப்புறா கூவும் குரலதுவோ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது. அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன; திராட்சை மலர்கள் மணம் தருகின்றன; விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா."

பாறைப் பிளவுகளில் இருப்பவளே, குன்றின் வெடிப்புகளில் இருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு எனக்கு உன் முகத்தை; எழுப்பிடு நான் கேட்க உன் குரலை. உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்.

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-17

மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.

அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: “சீயோனே, அஞ்சவேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 33: 2-3. 11-12. 20-21 (பல்லவி: திபா 1a,3a காண்க)

பல்லவி: நீதிமான்களே, புதியதொரு பாடல் ஆண்டவர்க்குப் பாடுங்கள்.

2
யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.
3
புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். - பல்லவி

11
ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.
12
ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். - பல்லவி

20
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
21
நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இம்மானுவேலே, சட்டம் இயற்றும் எம் அரசே, இறைவனாம் எம் ஆண்டவரே, எம்மை மீட்க எழுந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45

அக்காலத்தில்

மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டில் உள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது எலிசபெத்து உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


மகிழ்ச்சியும் நன்மையும் தருவதா நமது சந்திப்பு? 


இன்றைய சமூகத்தில் பலவித சந்திப்புகளை நாம் மேற்கொள்கிறோம்.

பணியின் அடிப்படையிலான  சந்தித்தல், தேவைக்காகப் பிறரைச் சந்தித்தல் , பொழுதுபோக்கிற்காகவும் நேரத்தைக் கடத்துவதற்காகவும் சந்தித்தல் போன்று பல வகைகள் அதிலே உண்டு. ஆனால் இன்று நற்செய்தியில் வாசிக்கும் சந்திப்பு வித்தியாசமானது. அதுதான் மரியா மற்றும் எலிசபெத்தின் சந்திப்பு.


தன் தேவைக்காக பிறரைச் சந்திக்கத் துடிக்கும் மனிதருக்கு நடுவில்

தேவையில் இருக்கும் ஒருவரைத் தேடிச் சந்திப்பதோடல்லாமல் உதவி செய்யும் மனம் கொண்டவராய் சந்திக்கச் செல்கிறார் மரியா. பிறரன்புக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது இச்சந்திப்பு.


தன்னைவிட வயதில் மிகச் சிறியவராய் இருந்தாலும் மரியாவுக்கு ஆண்டவர் அளித்த வாக்குறுதியை மதித்து "என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? " எனத் தன்னையே தாழ்த்தி நின்றார் எலிசபெத். தாழ்ச்சிக்கு இலக்கணமாக விளங்குகிறது இச்சந்திப்பு.


சந்திக்கின்ற போதெல்லாம் பிறரைப் பற்றி புறணி பேசுபவர்களைப் போல அல்லாமல் ஆண்டவரையும் அவர்தம் அருஞ்செயல்களையும் பற்றி பகிர்ந்து, மகிழ்ந்து,  நம்பிக்கையை ஆழப்படுத்திய சந்திப்பு தான் மரியா - எலிசபெத்தின் சந்திப்பு. 


இவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியையும், மனநிறைவையும், ஆசிரையும் பெற்று தந்தது. மரியாவின் குழப்ப மனநிலையை மாற்றுபவராக எலிசபெத்தையும், எலிசபெத்தின் முதிர்வின் காரணமான இயலாமைக்கு கைகொடுப்பவராக  மரியாவையும் மாற்றியது இந்த சந்திப்பு. நமது சந்திப்புகள் எத்தகையது எனச் சிந்திப்போம். மகிழ்ச்சியையும், இறை ஆசிரையும் நன்மையான காரியங்களையும் பகிரட்டும் நமது சந்திப்புகள். 


 இறைவேண்டல் 

அன்பு இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் நாங்கள் சந்திக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருபவர்களாகவும், பயனுள்ளவர்களாகவும் விளங்க அருள் புரியும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Monday, December 19, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (20-12-2022)

 

திருவருகைக் கால வார நாள்கள் - டிசம்பர் 20



முதல் வாசகம்

இதோ, கன்னிப் பெண் கருத்தாங்குவார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14

அந்நாள்களில்

ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: “உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்” என்றார். அதற்கு ஆகாசு, “நான் கேட்கமாட்டேன். ஆண்டவரைச் சோதிக்கமாட்டேன்” என்றார். அதற்கு எசாயா: “தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கன்னிப் பெண் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 7c,10b காண்க)

பல்லவி: ஆண்டவர் எழுந்தருள்வார்; மாட்சிமிகு மன்னர் இவரே.

1
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2
ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி

3
ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4ab
கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி

5
இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வானக அரசின் வாயிலைத் திறக்கும் தாவீதின் திறவுகோல் நீரே. இருளிலே இருக்கும் கைதிகள் தளையைக் களைந்திட எழுந்தருள்வீரே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு மரியா கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.

அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார். வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார்.

பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


கடவுளின் அருளை கண்டடைந்தவர்களா நாம்! 


கிறிஸ்துவின் பிறப்புக்காக நம்மையே நாம் தயாரிக்கும் வேளையில்  கடவுளின் அருளை கண்டடையும் மக்களாக வாழ இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை அழைக்கின்றது.  உலகின் பெரும்பகுதி நீரால் நிறைந்துள்ளதைப் போல, எல்லா இடமும் நுழையும் காற்றை போல, பூமிக்கு கூரையாய் விளங்கும் ஆகாயம் போல கடவுளின் அருளானது எங்கும் எல்லா இடங்களிலும் கொட்டிக்கிடக்கின்றது. ஆனால் நாம்தான் அவ்வருள் நம்மைச் சூழ்ந்துள்ளதை பல நேரங்களில் உணராமல் இருக்கிறோம். அவ்வருளை கண்டடைய நாம் முற்படவேண்டாமா?


"மரியா"  கடவுளின் அருளை கண்டடைந்ததற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறார். வானதூதர் மரியாவை வாழ்த்தும் போது "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்" என்று வாழ்த்தினார் என நாம் வாசிக்கிறோம். எப்படி அவரால் கடவுளின் அருளை கண்டடைய முடிந்தது?

* கடவுளால் எல்லாம் முடியும் என்று   நம்பியதால் 

* ஆண்டவருடைய அடிமை என்ற அவருடைய தாழ்ச்சி நிறைந்த வாழ்வால் 

* உமது சொற்படியே நிகழட்டும் இறை விருப்பத்தை துணிச்சலுடன் ஏற்றுக்கொண்ட மனப்பாங்கால்


ஆம்.  கடவுளின் அருளை நாமும் கண்டடைய வேண்டுமென விரும்பினால் நாமும் இறைநம்பிக்கையில் வளர வேண்டும். நம்மையே கடவுளின் முன்னிலையில் தாழ்த்தி நம்முடைய வெறுமையை உணரவேண்டும். நம்முடைய விருப்பத்தை விட கடவுளின் திட்டத்தை உணர்ந்தவர்களாய் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் எப்போதும் நம்மச் சூழ்ந்துள்ள கடவுளின் அருளை நம்மால் கண்டடைய முடியும். அவ்வருள் இன்ப துன்ப நேரங்களில் நம்மை சரியாக வழிநடத்தும்.

கடவுளின் அருளைக்  கண்டடைய விடாமல் நம்மைத் தடுக்கும் நம்பிக்கையின்மை, தாழ்ச்சியின்மை மற்றும் நம் விருப்பத்தையே முதன்மைப்படுத்தி வாழும் நிலைகளைக் களைவோம். 

 இறைவேண்டல் 

அருளின் ஊற்றே இறைவா! 

அன்னை மரியாவைப் போல நம்பிக்கையோடும், தாழ்ச்சியோடும், இறைசித்தத்திற்கும் பணிந்து உமது அருளைக் கண்டடைய வரமருளும். ஆமென்



அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...