Showing posts with label புதன். Show all posts
Showing posts with label புதன். Show all posts

Tuesday, January 10, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (11-01-2023)

பொதுக்காலம் முதல் வாரம் - புதன்


முதல் வாசகம்

இயேசு மக்கள் பாவங்களுக்குக் கழுவாய் ஆகும்படி எல்லாவற்றிலும் எல்லாரைப் போல் ஆகவேண்டியதாயிற்று

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18

ஊனும் இரத்தமும் கொண்ட பிள்ளைகளைப்போல் கிறிஸ்துவும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்துவிட்டார். வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார்.

ஏனெனில் அவர் வானதூதருக்குத் துணை நிற்கவில்லை. மாறாக, ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்பது கண்கூடு. ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும் நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆகவேண்டிய தாயிற்று. இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 105: 1-2. 3-4. 6-7. 8-9 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.

அல்லது: அல்லேலூயா.

1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
2
அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! - பல்லவி

3
அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!
4
ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! - பல்லவி

6
அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!
7
அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. - பல்லவி

8
அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.
9
ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! "என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு பல்வேறு பிணிகளால் வருந்தியவரைக் குணப்படுத்தினார்.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39

இயேசுவும் சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.

சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.

மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.

இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், “எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள். அதற்கு அவர், “நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடு முழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிப் பேய்களை ஓட்டி வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நமது அன்பு பரவுகிறதா? 

ஒரு அரசு அதிகாரி நீதியுடனும் நேர்மையுடனும் நற்காரியங்களும் அதிக சீர்திருத்த செயல்பாடுகளையும் செய்து வந்தார். அதனாலேயே அவர் அடிக்கடி பணியிடம் மாற்றப்பட்டார். ஆனால் அவர் செல்லும் போதெல்லாம் மனமகிழ்ச்சியுடன் செல்வார் செல்லுமிடமில்லாம் நற்காரியங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நிறைந்தவராய்.


நதி ஓரிடத்தில் தேங்கியிருந்தால் அதன் நோக்கம் நிறைவுறாது. அதுபோலத்தான் அன்பு ஓரிடத்தில் தேங்கியிருந்தால் அதில் பலனில்லை. இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களிடம்  வேறு பகுதிகளுக்கெல்லாம் சென்று தன்னுடைய பணியை செய்யவேண்டுமெனவும்  அதற்காகவே அவர் வந்ததாகவும் கூறுகிறார். இயேசு அன்பு நிறைந்தவர். நன்மைகள் செய்ய வேண்டுமென்ற ஆர்வமுடையவர். சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் அனைவரும் கடவுளின் அன்பையும் அருளையும் பெற வேண்டுமென்று விரும்பியவர். பாவிகளும், பிற இனத்தவரும், வரி தண்டுபவர்களும் கூட கடவுளுடைய இரக்கத்தைப் பெற வேண்டும் என எண்ணியவர். எனவேதான் அவர் நாடோடி போல ஊர் ஊராகவும், தெருக்கள்தோறும் அலைந்து தன் உடல்  களைப்பை கூட பொருட்படுத்தாமல் பணி செய்தார் என விவிலியத்தில் நாம் வாசிக்கிறோம். 


பொதுவாக பணியிட மாற்றங்கள் தரப்படும்  போது நம்மில் பலர் அதனை விரும்புவதில்லை. தெரியாத இடம்,அறியாத நபர்கள்,  என அனைத்தையும் எண்ணி பயப்படுகிறோம். ஆனால் கொஞ்சம் மாற்றி யோசித்துப் பார்த்தால், புதிய ஊர், புதிய உறவுகள் நட்புகள் கிடைப்பதோடு நம்முடைய அன்பைக் காட்டவும்  நற்காரியங்களைச் செய்யவும் நமக்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்கள் அவை. இயேசு ஒரே இடத்தில் தெரிந்தவர்களுக்கு மட்டும் பணி செய்திருந்தால் மற்ற ஊரில் உள்ள மக்களுக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்காது. தன் அன்பைத் தேக்கி வைக்கமால்  பலருக்கு பகிர்ந்த அன்னை தெரசா கன்னியர் மடத்தின் அறையிலிருந்து வெளியேறி தெருக்களில் அலைந்து தேவையில் உள்ளோரைத் தேடி உதவியால்தான் நாம் அனைவரும் இன்று அவரை அறிகிறோம். 


இச்சிந்தனைகள் நமக்குத் தரும் செய்தி என்ன? நம்முடைய அன்பும் நற்செயல்களும் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ, சில மனிதர்களுக்கு மட்டுமோ இல்லாமல் பல இடங்களுக்கும் பல மனிதர்களுக்கும் சென்று அடைய வேண்டும். அதற்கு நாம் நம்முடைய சுயநலனைக் களைந்து பயணிக்க வேண்டும். நம்முடைய எண்ணங்களும், பார்வையும் பரந்து விரிந்தவையாக இருக்க வேண்டும். இதனால் நாம் துன்பம் அடைய நேரிட்டாலும், நம்மைப் போல் துன்பப்படுபவர்களை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அதைக் கருதி நம் அன்பைப் பகிர வேண்டும்.  இத்தகைய அன்பு வாழ்வு வாழ இறைவனிடம் வரம் கேட்போம்.


 இறைவேண்டல் 

அன்பு இறைவா!

செல்லும் இடமெல்லாம் அன்பை வழங்கி நன்மைகள் செய்து கொண்டே சென்ற இயேசுவைப் போல நாங்களும் எம் அன்பை எமது நற்செயல்கள் மூலம் பலருக்கும் வழங்க அருள் தாரும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Tuesday, January 3, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (04-01-2023)

 

சனவரி 4



முதல் வாசகம்

கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-10

பிள்ளைகளே, எவரும் உங்களை நெறிதவறச்செய்ய விடாதீர்கள். கிறிஸ்து நேர்மையாளராய் இருப்பதுபோல், நேர்மையாய்ச் செயல்படுபவர் நேர்மையாளராய் இருக்கின்றார். பாவம் செய்து வருகிறவர் அலகையைச் சார்ந்தவர்; ஏனெனில் தொடக்கத்திலிருந்தே அலகை பாவம் செய்து வருகிறது. ஆகவே அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் தோன்றினார்.

கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை; ஏனெனில் கடவுளின் இயல்பு அவரிடம் இருக்கிறது. கடவுளிடமிருந்து பிறந்தவராயிருப்பதால் அவரால் பாவம் செய்ய இயலாது. நேர்மையாய்ச் செயல்படாதவரும், தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதவரும் கடவுளிடமிருந்து வந்தவர்களல்ல. இதனால் கடவுளின் பிள்ளைகள் யாரென்றும் அலகையின் பிள்ளைகள் யாரென்றும் புலப்படும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 7-8. 9 (பல்லவி: 3b)

பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

7
கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!
8
ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். - பல்லவி

9
ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 1: 1-2

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மெசியாவைக் கண்டோம்.

 யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 35-42

அக்காலத்தில்

யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் பெத்தானியாவில் நின்றுகொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, “இதோ! கடவுளின் செம்மறி!” என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.

இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, “என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். ‘ரபி’ என்னும் எபிரேயச் சொல்லுக்குப் ‘போதகர்’ என்பது பொருள். அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள்” என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.

யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, “மெசியாவைக் கண்டோம்” என்றார். ‘மெசியா’ என்றால் ‘அருள்பொழிவு பெற்றவர்’ என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, “நீ யோவானின் மகன் சீமோன். இனி ‘கேபா’ எனப்படுவாய்” என்றார். ‘கேபா’ என்றால் ‘பாறை’ என்பது பொருள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நாம் யாரைச் சார்ந்துள்ளோம்?


ஒருமுறை நான் கோவிலுக்குச் சென்ற போது ஒரு தாய் தன் குழந்தையைக் கண்டித்துக்கொண்டிருந்தார். அந்தக் குழந்தை சேட்டை செய்ததால் அத்தாய் அக்குழந்தையைப் பார்த்து " நீ இயேசப்பா பிள்ளையா அல்லது சாத்தான் பிள்ளையா? " எனக் கேட்டார். உடனே அக்குழந்தை "இயேசப்பா பிள்ளை "என்றது. அப்போது தாய் "நீ இயேசப்பா பிள்ளை என்றால் என் பேச்சைக் கேள் " என்று சொல்லி அக்குழந்தையை அமைதிப்படுத்தி தன் அருகே வைத்துக்கொண்டார். இந்நிகழ்வு சற்று வேடிக்கையாக இருந்தாலும் ஆழ்ந்த உண்மையை நமக்குக் கற்பிக்கிறது. 


சிறுபிள்ளைகளாக இருந்த போது நம்மிடமும் நம் பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள், மறைக்கல்வி ஆசிரியர்களெல்லாம் இது போல சொன்னார்கள் அல்லவா. அப்போது காது கொடுத்துக் கேட்டு நமது சின்னச் சின்ன சேட்டைகளை நாம் குறைத்தோம். இது நம் எல்லோருடைய வாழ்விலுமே நடந்தது தான். ஆனால் வயதாக ஆக தவறுகளையும் பாவச்செயல்களையும் நாம் துணிச்சலாகச் செய்கிறோமே! நம்மிடம் யாராவது " நீ கடவுளின் பிள்ளையா அல்லது அலகையின் பிள்ளையா? " எனக் கேட்டால் நமது பதில் என்னவாக இருக்கும்? தாமதம் செய்யாமல் நாம் சிந்தித்தறிய வேண்டிய விஷயம் இது.


அன்புக்குரியவர்களே இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் யோவான் பாவம் செய்வோர் அலகையிடமிருந்து வருகின்றனர் எனத் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார். ஆம். நாம் பாவம் செய்யும் போதெல்லாம் அலகையைச் சார்ந்தவர்களாக இருக்கிறோம். கடவுளைச் சார்ந்தவர்களாக நாம் இருந்தால் கடவுளின் இயல்பு நம்மிலே இருப்பதை நாம் உணர்வோம். இவ்வுணர்வே நம்மை சரியான பாதையில் வழிநடத்தும். தீய வழியை விட்டு விலகச் செய்யும். உலக மாயக் கவர்ச்சிகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.



கடவுளைச் சார்ந்து வாழ நாம் என்ன செய்ய வேண்டும்? " வந்து பாருங்கள் " என்று இயேசு தம்மைப் பின்தொடர்ந்தவர்களை நோக்கிக் கூறினார். அவர்களும் சென்றார்கள். அவரோடு அன்று தங்கினார்கள். அவர் யார் என உணர்ந்து பிறரையும் அவரிடம் கூட்டிவந்தார்கள்.

அவ்வழைப்பு நமக்கும் பொருந்தும். இயேசுவிடம் போக வேண்டும். அவரை செபத்திலும் அவருடைய வார்த்தையிலும் அனுபவித்து உணர வேண்டும்.பிறரையும் அனுபவிக்கத் தூண்ட வேண்டும். 


நாம் அடிக்கடி ஆலயம் செல்கிறோம். செபிக்கிறோம். ஆனால் "வந்து பாருங்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகளை உணர்ந்து அவரைச் சென்று பார்த்திருக்கிறோமா? இனிவரும் காலங்க கில் இயேசுவின் அழைப்பை ஏற்போம். கடவுளைச் சார்ந்தவர்களாக மாறி நம் வாழ்வால் அதை எண்பிக்க தொடர்ந்து முயல்வோம். 


 இறைவேண்டல்

அன்பு ஆண்டவரே! நாங்கள் உம்மைச் சார்ந்தவர்கள் என உலகிற்கு காட்ட எம் வாழ்வைப் புதுப்பித்தருளும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Tuesday, December 27, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-12-2022)

 

புனித மாசில்லாக் குழந்தைகள் - மறைச்சாட்சியர்

விழா


முதல் வாசகம்

இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5- 2: 2

சகோதரர் சகோதரிகளே,

நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே: கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை. நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்; உண்மைக்கேற்ப வாழாதவராவோம். மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும், அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.

ஆனால், பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர். நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யராக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும்.

என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து. நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 124: 2-3. 4-5. 7b-8 (பல்லவி: 7a)

பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்.

2
ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,
3
அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். - பல்லவி

4
அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;
5
கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். - பல்லவி

7b
கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம்.
8
ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம். ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஏரோது பெத்லகேமில் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-18

ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்” என்றார்.

யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, “எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.

ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங்கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.

அப்பொழுது “ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை” என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


மாசில்லா மனதுடையவராய் மறைசாட்சியாகத் தயாரா? 


நான் பள்ளியிலே படித்துக்கொண்டிருக்கும் போது ஒருமுறை நான் பேசாமலேயே வகுப்புத் தலைவர் கரும்பலகையிலே நான் பேசியதாக என் பெயரை எழுதிவிட்டார். நான் பேசவில்லை என எவ்வளவு கூறியும் பெயரை அழிக்கவில்லை. ஆசிரியர் வகுப்பிற்கு வந்த உடன் பேசியவர்கள் பெயரை கரும்பலகையில் பார்த்துவிட்டு அனைவரையும் அழைத்து தன் கையால் கன்னத்திலே பலமாக அடித்தார். நானும் அடிவாங்கினேன். ஆனால் நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆசிரியரும் எதுவும் விசாரிக்காமல் அடித்துவிட்டார். இச்செயல் என் மனதைப் பெரிதும் பாதித்தது. வீட்டிலே அனைவரிடமும் சொல்லி அழுதேன். என்னை சமாதானம் செய்ய மூன்று நாட்கள் எடுத்தது.


தவறு செய்யாமல்  தண்டனை அனுபவிக்கும் போது நாம் மிகப் பெரிய வலியை உணர்கிறோம்.

அத்தண்டனையை ஏற்றுக்கொள்ள நம் மனம் மறுக்கிறது. அது நமக்கு மட்டுமல்ல நம்மைச் சார்ந்தவர்களுக்கும் பெரிய அதிர்ச்சியையும் துன்பத்தையும் தருவதாக இருக்கிறது என்பதே உண்மை.ஆனால் அத்தண்டனையை பிறர் நலனுக்காக நாம் ஏற்றுக்கொள்ளும் போது துன்பமாகவே இருந்தாலும் பிற்காலத்தில் நாம் உயர்த்தப்படுகிறோம்.


இன்று நாம் கொண்டாடும் மாசற்ற குழந்தைகளுடைய பெருவிழா இச்செய்தியை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

ஞானிகள் குழந்தையைப் பற்றி தெரிவிக்காததால் கோபமடைந்த ஏரோது அரசன் அப்பகுதியிலுள்ள எல்லா இரண்டு வயதுக்குட்டபட்ட ஆண் மழலைகளைக் கொன்றான். ஒன்றும் அறியாத பச்சிழங்குழந்தைகள் ஏரோதின் சுயநலத்திற்கு பலியாகின்றனர். அவர்களுடைய பெற்றோர்களும் கடுமையான வலியை தாங்க வேண்டியதாயிற்று.

தவறின்றி தண்டனை பெற்ற அந்தக்குழந்தைகள் உலகை மீட்கும் மீட்பரைக் காப்பாற்ற மறைசாட்சியராகின்றனர்.


இந்த விழாவைக் கொண்டாடும் நமக்கு மாசற்ற குழந்தைகள் கூறும் செய்தி இதுவே. நம் அன்றாட வாழ்வில் நாம் செய்யாத தவறுக்காக குற்றம் சுமத்தப்பட்டு, துன்பத்துக்கு ஆளாக நேரும்போது அதனால் பிறருக்கு நன்மை உண்டாகும் என நாம் உணர்ந்தால் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் ஏற்றுக்கொள்ளும் போது நாமும் மறைசாட்சியராகிறோம். இயேசு குழந்தையாய் இருந்த போது காப்பாற்றப்பட்டார். ஆனால் தன்னுடைய முப்பத்து மூன்றாம் வயதில் தான் செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவித்தார்.

ஆயினும் உலக மீட்பிற்காக அவர் மனமுவந்து அத்தண்டனையை ஏற்றுக்கொண்டார் அல்லவா! அவருடைய சீடர்களான நாமும் அதே மனநிலையைக் கொண்டவர்களாக வாழ முயல வேண்டும். பிறர் நலனுக்காகவும் ஆண்டவருடைய மகிமைக்காகவும் ஒருவேளை நாம் தவறாக தண்டிக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள முயலுவோம். இறைவன் நிச்சயம் உண்மையை வெளிப்படுத்தி நம்மை உயர்த்துவார். காரணமில்லாமல் நம்மை நோக்கிப் பாயும் வசைமொழிகள், தண்டனைகள், எதிர்ப்புகள் அனைத்தையும் இயேசுவைப் போல, மாசற்ற குழந்தைகளைப் போல ஏற்றுக்கொண்டு மறைசாட்சியாக வாழ இறையருள் வேண்டுவோம்.


 இறைவேண்டல் 

மாசற்ற இறைவனே!  உமது பிள்ளைகளான நாங்களும் மாசில்லா குழந்தைகளைப்போல மறைசாட்சியராய் வாழ்ந்து பிறர் நலனுக்காகவும் உமது மாட்சிக்காகவும் உழைத்திட வரமருளும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Tuesday, December 20, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (21-12-2022)

 

திருவருகைக் கால வார நாள்கள் - டிசம்பர் 21



முதல் வாசகம்

இதோ, மலைகள்மேல் தாவி என் அன்பர் வருகின்றார்.

இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 2: 8-14

தலைவி கூறியது: என் காதலர் குரல் கேட்கின்றது; இதோ, அவர் வந்துவிட்டார்; மலைகள்மேல் தாவி வருகின்றார்; குன்றுகளைத் தாண்டி வருகின்றார். என் காதலர் கலைமானுக்கு அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர். இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்; பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்; பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார். என் காதலர் என்னிடம் கூறுகின்றார்: “விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா. இதோ, கார்காலம் கடந்துவிட்டது. மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது. நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன; பாடிமகிழும் பருவம் வந்துற்றது; காட்டுப்புறா கூவும் குரலதுவோ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது. அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன; திராட்சை மலர்கள் மணம் தருகின்றன; விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா."

பாறைப் பிளவுகளில் இருப்பவளே, குன்றின் வெடிப்புகளில் இருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு எனக்கு உன் முகத்தை; எழுப்பிடு நான் கேட்க உன் குரலை. உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்.

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-17

மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.

அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: “சீயோனே, அஞ்சவேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 33: 2-3. 11-12. 20-21 (பல்லவி: திபா 1a,3a காண்க)

பல்லவி: நீதிமான்களே, புதியதொரு பாடல் ஆண்டவர்க்குப் பாடுங்கள்.

2
யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.
3
புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். - பல்லவி

11
ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.
12
ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். - பல்லவி

20
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
21
நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இம்மானுவேலே, சட்டம் இயற்றும் எம் அரசே, இறைவனாம் எம் ஆண்டவரே, எம்மை மீட்க எழுந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45

அக்காலத்தில்

மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டில் உள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது எலிசபெத்து உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


மகிழ்ச்சியும் நன்மையும் தருவதா நமது சந்திப்பு? 


இன்றைய சமூகத்தில் பலவித சந்திப்புகளை நாம் மேற்கொள்கிறோம்.

பணியின் அடிப்படையிலான  சந்தித்தல், தேவைக்காகப் பிறரைச் சந்தித்தல் , பொழுதுபோக்கிற்காகவும் நேரத்தைக் கடத்துவதற்காகவும் சந்தித்தல் போன்று பல வகைகள் அதிலே உண்டு. ஆனால் இன்று நற்செய்தியில் வாசிக்கும் சந்திப்பு வித்தியாசமானது. அதுதான் மரியா மற்றும் எலிசபெத்தின் சந்திப்பு.


தன் தேவைக்காக பிறரைச் சந்திக்கத் துடிக்கும் மனிதருக்கு நடுவில்

தேவையில் இருக்கும் ஒருவரைத் தேடிச் சந்திப்பதோடல்லாமல் உதவி செய்யும் மனம் கொண்டவராய் சந்திக்கச் செல்கிறார் மரியா. பிறரன்புக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது இச்சந்திப்பு.


தன்னைவிட வயதில் மிகச் சிறியவராய் இருந்தாலும் மரியாவுக்கு ஆண்டவர் அளித்த வாக்குறுதியை மதித்து "என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? " எனத் தன்னையே தாழ்த்தி நின்றார் எலிசபெத். தாழ்ச்சிக்கு இலக்கணமாக விளங்குகிறது இச்சந்திப்பு.


சந்திக்கின்ற போதெல்லாம் பிறரைப் பற்றி புறணி பேசுபவர்களைப் போல அல்லாமல் ஆண்டவரையும் அவர்தம் அருஞ்செயல்களையும் பற்றி பகிர்ந்து, மகிழ்ந்து,  நம்பிக்கையை ஆழப்படுத்திய சந்திப்பு தான் மரியா - எலிசபெத்தின் சந்திப்பு. 


இவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியையும், மனநிறைவையும், ஆசிரையும் பெற்று தந்தது. மரியாவின் குழப்ப மனநிலையை மாற்றுபவராக எலிசபெத்தையும், எலிசபெத்தின் முதிர்வின் காரணமான இயலாமைக்கு கைகொடுப்பவராக  மரியாவையும் மாற்றியது இந்த சந்திப்பு. நமது சந்திப்புகள் எத்தகையது எனச் சிந்திப்போம். மகிழ்ச்சியையும், இறை ஆசிரையும் நன்மையான காரியங்களையும் பகிரட்டும் நமது சந்திப்புகள். 


 இறைவேண்டல் 

அன்பு இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் நாங்கள் சந்திக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருபவர்களாகவும், பயனுள்ளவர்களாகவும் விளங்க அருள் புரியும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Tuesday, December 13, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (14-12-2022)

 

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - புதன்



முதல் வாசகம்

வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 45: 6b-8, 18, 21b-25

ஆண்டவர் கூறுவதாவது: நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை. நான் ஒளியை உண்டாக்குகிறேன்; இருளைப் படைக்கிறேன்; நல்வாழ்வை அமைப்பவன் நான்; தீமையைப் படைப்பவனும் நானே; இவை அனைத்தையும் செய்யும் ஆண்டவர் நானே. வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும்; மண்ணுலகம் வாய்திறந்து விடுதலைக் கனி வழங்கட்டும், அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும்; இவற்றைச் செய்பவர் ஆண்டவராகிய நானே.

ஏனெனில் விண்ணுலகைப் படைத்த ஆண்டவர் கூறுவது இதுவே: அவரே கடவுள்; மண்ணுலகைப் படைத்து உருவாக்கியவர் அவரே; அதை நிலைநிறுத்துபவரும் அவரே; வெறுமையாய் இருக்குமாறு படைக்காது, மக்கள் வாழுமாறு அதை உருவாக்கினார்.

ஆண்டவர் நான் அல்லவா? என்னையன்றிக் கடவுள் வேறு எவரும் இல்லை; நீதியுள்ளவரும் மீட்பு அளிப்பவருமான இறைவன் என்னையன்றி வேறு எவரும் இல்லை. மண்ணுலகின் அனைத்து எல்லை நாட்டோரே! என்னிடம் திரும்பி வாருங்கள்; விடுதலை பெறுங்கள்; ஏனெனில் நானே இறைவன்; என்னையன்றி வேறு எவருமில்லை. நான் என்மேல் ஆணையிட்டுள்ளேன்; என் வாயினின்று நீதிநிறை வாக்கு புறப்பட்டுச் சென்றது; அது வீணாகத் திரும்பி வராது; முழங்கால் அனைத்தும் எனக்குமுன் மண்டியிடும்; நா அனைத்தும் என்மேல் ஆணையிடும். ‘ஆண்டவரில் மட்டும் எனக்கு நீதியும் ஆற்றலும் உண்டு’ என்று ஒவ்வொருவனும் சொல்லி அவரிடம் வருவான்; அவருக்கு எதிராகச் சீறி எழுந்தவர் அனைவரும் வெட்கக்கேடு அடைவர். இஸ்ரயேலின் வழி மரபினர் அனைவரும் ஆண்டவரால் ஏற்புடையோராகப்பெற்று அவரைப் போற்றுவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 85: 8ab-9. 10-11. 12-13 (பல்லவி: எசா 45:8)

பல்லவி: வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்.

8ab
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
9
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். - பல்லவி

10
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். - பல்லவி

12
நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.
13
நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எசா 40: 9-10

அல்லேலூயா, அல்லேலூயா! நற்செய்தி அறிவிப்பவரே, உன் குரலை எழுப்பி, இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார் என்று முழங்கிடுவீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 19-23

அக்காலத்தில்

யோவான் தம் சீடருள் இருவரை வரவழைத்து, “வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” எனக் கேட்க ஆண்டவரிடம் அனுப்பினார். அவர்கள் அவரிடம் வந்து, “ ‘வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?’ எனக் கேட்கத் திருமுழுக்கு யோவான் எங்களை உம்மிடம் அனுப்பினார்” என்று சொன்னார்கள்.

அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை இயேசு குணமாக்கினார்; பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார். அதற்கு அவர் மறுமொழியாக, “நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்; பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


இன்றைய வாசகங்கள்(14.12.2022)  

திருவருகை காலம்-மூன்றாம் வாரம் புதன்

மு.வா: எசா: 45:6-8, 18, 21-25

ப.பா:  திபா:  85:8-9, 10-11, 12-13

ந.வா: லூக்:  07: 18-23


 இயேசுவைப் போன்று செயல்வீரர்களா நாம்? 


சொல்லும் செயலும் இணைந்து செல்வதே ஒரு மனிதனுக்கு மதிப்பையும் மரியாதையையும் உயர்த்துகின்றது.  ஆனால் நம்மில் பலருடைய வாழ்வில் சொல் முதன்மையாக இருக்கிறதே தவிர செயல்பாட்டில் பொதுவாகவே நாம் அனைவரும் சற்று பின்தங்கி விடுகிறோம். நம் சொற்கள் பல நேரங்களில் நாம் எப்படிப்பட்டவராய் இருக்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறது. நம் செயல்கள்தான் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து நாம் யார் என்பதை உலகிற்கு உணர்த்துகிறது.

நம் ஆண்டவர் இயேசுவோ சொற்களே தேவையில்லை. செயல்கள் மூலமாக நாம் யார் எனக் காட்டினால் போதும் என்ற கருத்தை நம்முன் வைக்கிறார் இன்று. 


இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுதான் மெசியாவோ?  எனக் கண்டறிய வந்த யோவானின் சீடர்களிடம்  "ஆம்.  நான்தான் மெசியா. நான் இனி செய்யப்போவதை நீங்கள் காண்பீர்கள் " என இயேசு சொல்லவில்லை. மாறாக அவரால் நிகழ்ந்த வல்ல செயல்களை, நல் அடையாளங்களைக் கூறி அவர்களுடைய மனதில் உள்ள தயக்கங்களையும் சந்தேகங்களையும் உடைத்தெறிகிறார் இயேசு. தன் செயல்களில் தன்னை எண்பித்துக்காட்டுகிறார் அவர்.


திருவருகைக்காலத்தில் கிறிஸ்துவின் வருகைக்காக நம்மையே நாம் தயாரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாம் "கிறிஸ்தவர்கள் " என்பதை நாம் எவ்வாறு எண்பித்துக் காட்டப்போகிறோம்?. நம்முடைய சொற்களாலா?  அல்லது இயேசுவைப் போன்று செயல்களாலா? 


"நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” என்று இயேசு யோவான் 13:35 ல் கூறிகிறார். இங்கே அன்பு என்ற சொல்லுக்கு இணையாக நாம் நற்செயல்கள் என்ற சொல்லை உபயோகித்துப் பார்ப்போம். ஏனென்றால் அன்பிலிருந்தே நற்செயல்கள் தோன்றுகின்றன. அவ்வாறெனில் நாம் ஒருவர் மற்றவருக்கு செய்யும் நற்செயல்களால் இயேசுவின் சீடர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் என்பதை எண்பித்துக் காட்டுகிறோம் அல்லவா! வீண்சொற்களைக் கொண்டு நான் அப்படிப்பட்டவள், என்னைப் போன்று எவனும் இருக்கமுடியாது எனச் சொல்வதை விட்டுவிட்டு நம்முடைய செயல்களால் கிறிஸ்துவை பிரதிபலித்துக் காட்ட முயல்வோம். அப்போது அனைவரும் நம்மைத் தயக்கமின்றி ஏற்றுகொள்வர் என்பது உறுதி. இயேசுவைப் போல செயல்வீரர்களாக மாற முயலுவோமா?


 இறைவேண்டல் 

அன்பு இயேசுவே!  உம்மைப் போல நாங்களும் வார்த்தை வீரர்களாயன்றி செயல் வீரர்களாய் துலங்கி உம் சீடர்கள் என்பதை எண்பித்துக்காட்ட வரமருளும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...