Showing posts with label திங்கள். Show all posts
Showing posts with label திங்கள். Show all posts

Sunday, January 29, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (30-01-2023)

 

பொதுக்காலம் 4ஆம் வாரம் - திங்கள்





முதல் வாசகம்

நம்பிக்கையினாலேயே நீதித்தலைவர்கள் அரசுகளை வென்றார்கள்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 32-40

சகோதரர் சகோதரிகளே,

கிதியோன், பாராக்கு, சிம்சோன், இப்தாகு, தாவீது, சாமுவேல் ஆகியோர் பற்றியும், இறைவாக்கினர் பற்றியும் எடுத்துரைக்க எனக்கு நேரமில்லை. நம்பிக்கையினாலேயே இவர்கள் அரசுகளை வென்றார்கள்; நேர்மையாகச் செயல்பட்டார்கள்; கடவுள் வாக்களித்தவற்றைப் பெற்றார்கள்; சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்; தீயின் கொடுமையைத் தணித்தார்கள்; வாள்முனைக்குத் தப்பினார்கள்; வலுவற்றவராய் இருந்தும் வலிமை பெற்றார்கள்; போரில் வீரம் காட்டினார்கள்; மாற்றார் படைகளை முறியடித்தார்கள்.

பெண்கள் இறந்த தம் உறவினரை உயிர்த்தெழுந்தவராய்ப் பெற்றுக்கொண்டார்கள். உயிர்த்தெழுந்து சிறப்புறும் பொருட்டு, சிலர் விடுதலை பெற மறுத்து, வதையுண்டு மடிந்தனர். வேறு சிலர் ஏளனங்களுக்கும் கசையடிகளுக்கும் ஆளாயினர்; விலங்கிடப்பட்டுச் சிறையில்கூட அடைக்கப்பட்டனர். சிலர் கல்லெறிபட்டனர்; இரண்டாக அறுக்கப்பட்டனர்; வாளுக்கு இரையாகி மடிந்தனர்; செம்மறியின் தோலையும் வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு அலைந்து திரிந்தனர்; வறுமையுற்று வாடினர்; துன்புறுத்தப்பட்டனர்; கொடுமைக்கு உள்ளாயினர். அவர்களை ஏற்க இவ்வுலகுக்குத் தகுதியில்லாமல் போயிற்று. மலைகளிலும் குகைகளிலும் நிலவெடிப்புகளிலும் பாலைவெளிகளிலும் அவர்கள் அலைந்து திரிந்தார்கள்.

இவர்கள் அனைவரும் தம் நம்பிக்கையினாலே நற்சான்று பெற்றார்கள். ஆயினும் கடவுள் வாக்களித்ததை அவர்கள் பெறவில்லை. ஏனெனில், நம்மோடு இணைந்துதான் அவர்கள் நிறைவுபெற முடியும் என்பதைக் கடவுள் கருத்தில் கொண்டு, நமக்காகச் சிறந்த திட்டம் ஒன்றை வகுத்திருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 31: 19-20a,20bc. 21. 22. 23 (பல்லவி: 24 காண்க)

பல்லவி: ஆண்டவரை நம்புவோரே, உங்கள் உள்ளம் உறுதி கொள்வதாக.

19
உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி!
20a
மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! - பல்லவி

20bc
நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! - பல்லவி

21
ஆண்டவர் போற்றி! போற்றி! ஏனெனில், முற்றுகையிடப்பட்ட நகரினில், அவர் தம் பேரன்பை வியத்தகு முறையில் எனக்கு விளங்கச் செய்தார். - பல்லவி

22
நானோ, கலக்கமுற்ற நிலையில் ‘உமது பார்வையினின்று விலக்கப்பட்டேன்’ என்று சொல்லிக்கொண்டேன்; ஆனால், நான் உம்மிடம் உதவிக்காக வேண்டினபோது, நீர் என் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தீர். - பல்லவி

23
ஆண்டவரின் அடியார்களே, அவரிடம் அன்பு கொள்ளுங்கள்; ஆண்டவர் பற்றுறுதியுடையோரைப் பாதுகாக்கின்றார்; ஆனால், இறுமாப்புடன் நடப்போர்க்கு அவர் முழுமையாய்ப் பதிலடி கொடுக்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-20

அக்காலத்தில்

இயேசுவும் அவர் சீடரும் கடலுக்கு அக்கரையில் இருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகை விட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால் கூடக் கட்டிவைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்.

அவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு, ஓடிவந்து அவரைப் பணிந்து, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்” என்று உரத்த குரலில் கத்தினார். ஏனெனில் இயேசு அவரிடம், “தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ” என்று சொல்லியிருந்தார். அவர் அம்மனிதரிடம், “உம் பெயர் என்ன?” என்று கேட்க அவர், “என் பெயர் ‘இலேகியோன்', ஏனெனில் நாங்கள் பலர்” என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாம் என்று அவரை வருந்தி வேண்டினார்.

அங்கே மலைப் பகுதியில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. “நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்” என்று தீய ஆவிகள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.

பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.

அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடுகூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


எனது உறைவிடம் எது? 


உறைவிடம் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. தன்னுடைய உறைவிடத்தில் தான் ஒரு மனிதன் தன்னையே தானாக உணர்கிறான். சுதந்திரத்தை அனுபவிக்கிறான். அமைதியைக் காண்கிறான். இத்தகைய உறைவிடத்தை தூய்மையாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகிறது. மாறாக இவ்வுறைவிடத்தை அசுத்தமாகவும் நேர்த்தியாகவும் நாம் வைக்காத போது நமக்குள்ளாகவே ஒருவித சஞ்சல உணர்வுகளை நாம் உணர்கிறோம். அல்லவா?


அதேபோல நமது ஆன்மாவும் நமக்கு ஒரு உறைவிடம். இவ்வுறைவிடத்தை தூய்மையாகவும் நேர்த்தியாகவும் நாம் வைத்திருந்தால்தான் நம் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பல சமயங்களில் இவ்வுறைவிடத்தை நாம் கவனித்துக்கொள்ளாமல் தேவையற்றவற்றை உள்நுழைய அனுமதித்து விடுகிறோம். 


இன்றைய நற்செய்தி வாசகத்தில் தீய ஆவி பிடித்தவரை இயேசு குணமாக்குகிறார் என்பதை நாம் வாசிக்கிறோம். அத்தீய ஆவி பிடித்தவரைப் பற்றி கூறும் போது "கல்லறையே அவரது உறைவிடம் " என்ற வார்த்தை தரப்பட்டடுள்ளது. கல்லறை என்பது நாம் அறிந்தவாறே இறந்த உடல்களை அடக்கம் செய்யும் இடம். அங்கே தூய்மை இல்லை. பயம் நிறைந்திருக்கும். அச்சம் கலந்த அமைதிதான் இருக்கும். யாரும் இவ்விடத்தை விரும்புவதில்லை. 


 நம் அன்றாட வாழ்க்கை சூழல்களில் நாமே நம் வாழ்க்கையை கல்லறை போன்று மாற்றிவிடுகிறோம். நம்முடைய சுயநலம், பாவமோகங்கள், மாயக்கவர்ச்சிகள், பகை, பேராசை போன்றவற்றை நம்மை ஆட்கொள்ளவைத்து நம் ஆன்மா என்ற உறைவிடத்தை கல்லறை போல மாற்றி அதிலேயே நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 


நம் ஆன்மா என்ற உறைவிடத்தில் வாழ விரும்பும் இயேசுவை நாம் கண்டு கொண்டு இத்தகைய அசுத்த ஆவிகளை வெளியேறச் செய்தால் நம் ஆன்மா கடவுளின் உறைவிடமாகும். கடவுள் நம் உறைவிடமாவார். நமது உறைவிடத்தை தூய்மையாக நேர்த்தியாக அமைத்துக்கொள்ள நாம் தயாரா? இயேசுவை அணுகிச் செல்வோம்.


 இறைவேண்டல் 

அன்பு இறைவா  எங்கள் உள்ளமாம் உறைவிடத்திலுள்ள தீயவற்றை நீக்கி உமது உறைவிடமாக்கும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Sunday, January 22, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (23-01-2023)

 

பொதுக்காலம் 3ஆம் வாரம் - திங்கள்



முதல் வாசகம்

பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்த கிறிஸ்து, மீண்டும் ஒரு முறை தோன்றுவார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 15, 24-28

சகோதரர் சகோதரிகளே,

இயேசு புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராய் இருக்கிறார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட, என்றும் நிலைக்கும், உரிமைப் பேற்றைப் பெறுவதற்கென்று இந்த உடன்படிக்கை உண்டானது. இது ஒரு சாவின்மூலம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சாவு முந்திய உடன்படிக்கையை மீறிச் செய்த குற்றங்களிலிருந்து மீட்பு அளிக்கிறது. அதனால்தான் கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார். தலைமைக் குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார்.

மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கென உள்ள நியதி. அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒரு முறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3ab. 3cd-4. 5-6 (பல்லவி: 1a)

பல்லவி: அவரது வியத்தகு செயல்களுக்காய், புதியதோர் பாடல் பாடுங்கள்.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

2
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3ab
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி

3cd
உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி

5
யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.
6
ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி, கொம்பினை ஊதி, ஆர்ப்பரித்துப் பாடுங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

சாத்தானின் அழிவு.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30

அக்காலத்தில்

எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும் “பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.

ஆகவே இயேசு அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: “சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது. சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு. முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.” ‘இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது’ என்று தம்மைப்பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



பிறர் பெயரைக் கெடுக்காத நல் மனம் பெற்றுக்கொள்வோம்!

உலகில் வாழும் எல்லாரும் நல்லவர்களல்ல. அதே போல எல்லாரும் தீயவர்களுமல்ல. ஒரு மனிதன் பலம்  பலவீனம் என இரண்டையுமே பெற்றிருப்பான். இதுதான் எதார்த்தம். எனவே யாரையும் ஒன்றிரண்டு செயல்களின் அடிப்படையில் நல்லவன் என்றும் தீயவன் என்றும் நாம் தீர்ப்பிட்டுவிட முடியாது. அதேபோல நமக்கு பிடித்திருந்தால் அவர்களுக்கு நற்பெயரும் பிடிக்கவில்லை என்றால் வேறுபெயரும் நாம் கொடுத்துவிட முடியாது. 


இத்தகைய வாழ்வின் எதார்த்தமான கருத்துக்களை நமக்கு வழங்குகின்றது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசு பேய்களால் பேய்களை ஓட்டுகிறார். அவரிடம் இருப்பது தீய சக்தி என பரிசேயர் விமர்சிப்பதை நாம் வாசிக்கிறோம்.


இரண்டு நாட்களுக்கு முன்பாக இயேசு இறைபணியில் ஆர்வமாய் இருந்ததை பார்த்து மக்கள் அவரை அதிகமாகப் பின்தொடர்ந்ததைக் கண்ட சிலர் அவர் மதிமயங்கி இருக்கிறார் என பெயர்கொடுத்தனர் என்பதை வாசித்தோம். அதன் தொடர்ச்சியாக இன்று பேய்பிடித்தவன் என்ற பெயரையும் பெறுகிறார் இயேசு. இயேசு ஏன் பிறரால் இவ்வாறு விமர்சிக்கப்படுகிறார் என சிந்தித்தால் பரிசேயர்களின் பொறாமை எண்ணம் தான் அடிப்படைக் காரணமாக இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. பொறாமை எண்ணம் இயேசுவின் பெயரையே கெடுக்கும் அளவுக்கு அவர்களைத் தூண்டுகிறது. ஆனால் இயேசு இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.


அன்புக்குரியவர்களே!  நம்வாழ்வில் இத்தகைய நிகழ்வுகள் பல நடந்தேறியிருக்கலாம். முதலாவதாக நமது பெயர் கெடுக்கப்பட்டிருக்கலாம். அந்நிகழ்வுகள் நமக்கு பல மனவேதனைகளைத் தந்திருக்கலாம். இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் போது இயேசுவின் மனநிலையில் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோமா?


இரண்டாவதாக பிறர் பெயரை நாம் கெடுத்திருக்கலாம். அச்செயல் வழியாக பிறரை நாம் காயப்படுத்தி இருக்கலாம். இனிமேலும் அத்தகைய எண்ணங்கள் நம்முள் எழாமல் இருக்க நம்மை பக்குவப்படுத்த நாம் தயாராக இருக்கிறோமா?  சிந்திப்போம். பிறர் பெயரைக் கெடுப்பது கொலை செய்வதற்கு சமம். அத்தகைய எண்ணங்களை அறவே களைந்திட ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம்.


 இறைவேண்டல்

அன்பு இறைவா பிறர் பெயரைக்கெடுக்கும் பரிசேய மனநிலையைக் களைய அருள்தாரும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️


Sunday, December 18, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (19-12-2022)

 

திருவருகைக் கால வார நாள்கள் - டிசம்பர் 19



முதல் வாசகம்

சிம்சோனின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.

நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 13: 2-7, 24-25

அந்நாள்களில்

சோராவைச் சார்ந்தவரும் தாண் குலத்தவருமான ஒருவர் இருந்தார். அவர் பெயர் மனோவாகு. அவர் மனைவி மலடியாய் இருந்ததால், குழந்தை பெறவில்லை. ஆண்டவரின் தூதர் அப்பெண்ணுக்குத் தோன்றி அவரிடம், “நீ மலடியாய் இருந்ததால் இதுவரை குழந்தை பெற்றெடுக்கவில்லை. ஆனால், இனி நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். இப்பொழுது கவனமாயிரு! திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே! தீட்டான எதையும் உண்ணாதே. ஏனெனில் நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். சவரக் கத்தி அவன் தலைமீது படக்கூடாது. ஏனெனில் பையன் பிறப்பிலிருந்தே கடவுளுக்கென ‘நாசீர்’ ஆக இருப்பான். அவன் இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான்” என்றார். அப்பெண் தம் கணவரிடம் வந்து கூறியது: “கடவுளின் மனிதர் என்னிடம் வந்தார். அவரது தோற்றம் கடவுளின் தூதரின் தோற்றம் போல் பெரிதும் அச்சத்திற்குரியதாக இருந்தது. அவர் எங்கிருந்து வந்தவர் என்று நான் அவரைக் கேட்கவில்லை. அவரும் எனக்குத் தம் பெயரை அறிவிக்கவில்லை. அவர் என்னிடம். ‘இதோ! நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். ஆகவே நீ திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே. தீட்டான எதையும் உண்ணாதே. ஏனெனில் பையன் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை, கடவுளுக்கென நாசீராக இருப்பான்’ என்றார்.”

அப்பெண் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சிம்சோன் எனப் பெயரிட்டார். பையன் வளர்ந்து பெரியவனானான். ஆண்டவர் அவனுக்கு ஆசி வழங்கினார். சோராவுக்கும், எசுத்தாவேலுக்குமிடையே அவன் இருக்கும்போதுதான் ஆண்டவரின் ஆவி அவனைத் தூண்டத் தொடங்கியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 71: 3-4a. 5-6ab. 16-17 (பல்லவி: 8ab காண்க)

பல்லவி: நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே.

3
என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.
4a
என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். - பல்லவி

5
என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை.
6ab
பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். - பல்லவி

16
தலைவராகிய ஆண்டவரே! உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்; உமக்கே உரிய நீதி முறைமையைப் புகழ்ந்துரைப்பேன்.
17
கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஈசாயின் குலக்கொழுந்தே, மக்களுக்கு ஓர் அருஞ் சின்னமே, எமை மீட்க எழுந்தருளும். தாமதம் செய்யாதேயும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 5-25

யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.

தம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார். குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது. அவர் தூபம் காட்டுகிற வேளையில், மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர்.

அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார். அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார். வானதூதர் அவரை நோக்கி, “செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர். அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்தமாட்டார்; தாய் வயிற்றிலிருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப் படுவார். அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார். எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார்; தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்; நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்; இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்” என்றார்.

செக்கரியா வானதூதரிடம், “இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே” என்றார். அதற்கு வானதூதர் அவரிடம், “நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்; உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன். இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்; உம்மால் பேசவே இயலாது” என்றார்.

மக்கள் செக்கரியாவுக்காகக் காத்திருந்தனர். திருக்கோவிலில் அவர் காலந்தாழ்த்துவதைக் குறித்து அவர்கள் வியப்படைந்தார்கள். அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேசமுடியாமல் இருந்தார். ஆதலால் அவர் திருக்கோவிலில் ஏதோ காட்சி கண்டிருக்க வேண்டும் என அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். அவர் அவர்களிடம் சைகைகள் வாயிலாக உரையாடி வந்தார்; பேச்சற்றே இருந்தார். அவருடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் அவர் வீடு திரும்பினார்.

அதற்குப் பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார். “மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்” என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


கடவுள் பார்வையில் நேர்மையானவர்களா நாம்


நேர்மை என்பது ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்க வேண்டிய முக்கியமான பண்பாகும். ஒரு மனிதர் நேர்மையாக வாழும் பொழுது அவர் வாழ்கின்ற காலத்தில் துன்பப்படலாம். ஆனால் அவர் இந்த மண்ணுலகத்தில் விட்டுச் செல்கின்ற மதிப்பீடு மிகச் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும். புது வாழ்வையும் புது மாற்றத்தையும் இந்த சமூகத்திற்கு கொடுக்கும். நான் ஒரு முறை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது பயணச்சீட்டு எடுப்பதற்காக என்னுடைய பாக்கெட்டிலிருந்து 500 ரூபாய் தாளை எடுத்தேன். அதை எடுக்கும் பொழுது மற்றொரு 500 ரூபாய் தாள் கீழே விழுந்தது. பேருந்தில் யாசகம் பெற்று வந்த ஒரு வயதான முதியவர் அந்த 500 ரூபாய் தாளைக் கையில் எடுத்து "ஐயா! உங்களுடைய 500 தாள் கீழே விழுந்துவிட்டது என்று கொடுத்தார்".  இந்த நிகழ்வு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அவர் நேர்மையை கண்டு மற்ற பயணிகளும் நானும் மகிழ்ந்தோம். எனவே அந்த முதியவருக்கு என்னால் முடிந்த சிறிய பங்களிப்பைக் கொடுத்து உதவி முதியோர் இல்லம் செல்ல வழிகாட்டினேன். 


நம்முடைய வாழ்வு நேர்மையுள்ள வாழ்வாக கடவுளுக்கும் பிற மனிதருக்கும் முன்னால் இருக்கும் பொழுது நிச்சயமாக கடவுளின் ஆசீர்வாதம் நிறைவாக நமக்கு கிடைக்கும். இன்றைய நற்செய்தியில் சக்கரியா மற்றும் எலிசபெத் என்ற தம்பதியர்களை பற்றி வாசிக்கிறோம். இவர்கள் இருவரும் நேர்மையுள்ள வாழ்வுக்குச் சான்றாக வாழ்ந்தனர். இவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் ஒரு தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றால் அவர்கள் கடவுளின் சாபத்தை பெற்றவர்களாக கடத்தப்பட்டனர். இவர்களும் பல்வேறு விமர்சனங்களுக்கும் துன்பங்களுக்கும் குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால் உள்ளாகினர். ஆனால் கடவுள் அவர்களை கைவிடாமல் அவர்களின் நேர்மையான வாழ்விற்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக குழந்தை பாக்கியத்தை கொடுத்தார். அக்குழந்தையை இந்த உலகை மீட்க வந்த ஆண்டவர் இயேசுவினுடைய வழியை  ஆயத்தப்படுத்தும் குழந்தையாக கடவுள் பயன்படுத்தினார்.


நம்முடைய வாழ்வில் நேர்மைத் தன்மையோடு வாழும் பொழுது நிச்சயமாக கடவுளுடைய கைமாறு உண்டு. இதற்குச் சான்றாக பழைய ஏற்பாட்டில் நோவாவும் அவருடைய குடும்பத்தினரும் இருக்கின்றனர். நோவா வாழ்ந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் கடவுளுக்கு எதிராக தீச்செயல்களைச் செய்தனர். ஆனால் நோவா தீச்செயல்கள் செய்ய சூழல் இருந்தும் நேர்மையோடு வாழ்ந்து கடவுளுக்கு சான்று பகர்ந்தார். எனவே வெள்ளத்தால் மனிதர்களை அழிக்க நினைத்த கடவுள் நோவாவின் நேர்மைத்தனத்தை முன்னிட்டு அவரையும் அவரின் குடும்பத்தாரையும் மீட்டார். இது நோவாவிற்கு  நேர்மைக்கு கிடைத்தப் பரிசாக இருக்கின்றது.


அதேபோலதான் சக்கரியா மற்றும் எலிசபெத் இவர்களின் மகன் திருமுழுக்கு யோவான் நேர்மைக்கு சான்று பகர்பவராக இருந்தார். திருமுழுக்கு யோவானின் செயல்களின்  பொருட்டு அனைவரும் இவரை மெசியா எனக் கருதினார். இவர் நினைத்திருந்தால் தான்தான்  மெசியா என மக்களை ஏமாற்றி இருக்கலாம். ஆனால் அவர் உண்மையோடும் நேர்மையோடும் தன்னுடைய அழைப்பிற்கேற்ற பணியினை செய்தார். இயேசுவின் வழியை ஆயத்தப்படுத்தி இயேசு வந்த பிறகு உலகின் பாவங்களை மீட்கும் செம்மறி என  அவரை இவ்வுலகிற்கு  சுட்டிக்காட்டினார். தன் வாழ்நாள் முழுவதும் நேர்மையோடு வாழ்ந்து உண்மையை உண்மை என உரக்கச் சொல்லி மிகப்பெரிய சான்று வாழ்வு வாழ்ந்தார். அவர் நேர்மையோடு உண்மைக்குச் சான்று பகர்ந்ததால் அவரின் தலை வெட்டப்பட்டாலும் அவரின் மதிப்பீடு இன்றளவும் உயிரோடு தான் இருக்கின்றது. எனவே நேர்மையோடு வாழ்பவர்களுக்கு எப்பொழுதும்  குறை இருக்காது. ஏனெனில் நம்மைப் படைத்த கடவுள் நேர்மையுள்ளவர் உண்மையானவர். 


நான் என்னுடைய பணித்தளத்திலே வீடுகளை சந்திக்கும் பொழுது குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளை பார்க்கும் சூழல் ஏற்படும். நான் அவர்களோடு பேசும்பொழுது "எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபித்துக் கொள்ளுங்கள்" எனக் கண்ணீரோடு  கூறுவர். நான் அவர்களுக்கு சொல்லும் செய்தி இதுதான் "சக்கரியா மற்றும் எலிசபெத் போன்று கடவுளுக்கும் பிற மனிதர்களுக்கும் நேர்மையோடும் உண்மையோடும் இருங்கள். அவர்கள் கொண்டிருந்த இறை நம்பிக்கையில் நிலைத்திருங்கள். நிச்சயம் கடவுள் உங்கள் மீது கருணை கொண்டு குழந்தை பாக்கியத்தைக் கொடுப்பார். உங்கள் வழியாக அவரே உண்மையான கடவுள் என்பதைச் சான்று பகர்வார்" எனக்கூறி அவர்களை சான்று உள்ள மக்களாக வாழ வழிகாட்டுவேன். இத்தகைய மனநிலை தான் ஒவ்வொரு கிறிஸ்தவர் இடத்திலும் இருக்க வேண்டும்.


கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட நம்மையே ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சக்கரியா மற்றும் எலிசபெத் கொண்டிருந்த அதே நம்பிக்கையையும் நேர்மையும் உண்மையும் நிறைந்த வாழ்வையும் வாழ்வாக்க அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வாறு வாழுகின்ற பொழுது பாலன் இயேசு நமக்கு நிறைவான மகிழ்ச்சியையும் அருளையும் கொடுப்பார். அவர் இரக்கத்தையும் பரிவையும் அன்பையும் நம்மால் முழுமையாகச் சுவைக்க முடியும். அத்தகைய நேர்மையுள்ள மனநிலையைப் பெற்றுக்கொள்ள தேவையான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல்

நேர்மையின் இறைவனே! நீ கொடுத்த வாழ்விற்காக நன்றி செலுத்துகின்றோம். எங்களுடைய அன்றாட வாழ்வில் எந்நாளும் நேர்மைக்கும் உண்மைக்கும் சான்று பகரத் தேவையான அருளைத் தாரும். அதற்குத் திருமுழுக்கு யோவானிடம் இருந்த அந்த மனநிலையையும் நோவாவுக்கு இருந்த அந்த மனநிலையையும் சக்கரியா மற்றும் எலிசபெத்துக்கு இருந்த அந்த மனநிலையையும் உம் திருமகன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் இருந்த அந்த மனநிலையையும் தந்து எங்களை உமக்கேற்ற பிள்ளைகளாக உருமாற்றும். ஆமென்.



அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Sunday, December 11, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (12-12-2022)

 

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - திங்கள்



முதல் வாசகம்

யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 24: 2-7, 15-17a

அந்நாள்களில்

பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே, குலம் குலமாகப் பாளையம் இறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின் ஆவி அவர்மேல் இறங்கியது. அவர் திருஉரையாகக் கூறியது: “பெகோர் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி! கடவுளின் வார்த்தைகளைக் கேட்கிறவனின், பேராற்றல் வாய்ந்தவரின் காட்சியைக் கண்டு கீழே விழுந்தும் கண் மூடாதவனின் திருமொழி! யாக்கோபே! உன் கூடாரங்களும், இஸ்ரயேலே! உன் இருப்பிடங்களும் எத்துணை அழகு வாய்ந்தவை! அவை விரிந்து கிடக்கும் பள்ளத்தாக்குகள் போன்றவை; ஆண்டவர் நட்ட அகில் மரங்கள் போன்றவை; நீர் அருகிலுள்ள கேதுரு மரங்கள் போன்றவை.

அவனுடைய நீர்க்கால்களிலிருந்து தண்ணீர் ஓடும்; அவனது விதை நீர்த்திரளின்மேல் இருக்கும்; அவனுடைய அரசன் ஆகாகைவிடப் பெரியவன்; அவனது அரசு உயர்த்தப்படும்.”

பிலயாம் திருஉரையாகக் கூறியது: “பெகோரின் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி! கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதர் அளித்த அறிவைப் பெற்று பேராற்றல் உடையவரின் காட்சி கண்டு கீழே வீழ்ந்தும் கண் மூடப்படாதவனின் திருமொழி! நான் அவரைக் காண்பேன்; ஆனால் இப்போதன்று; நான் அவரைப் பார்ப்பேன்; ஆனால் அண்மையிலன்று; யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 25: 4-5ab. 6,7bc. 8-9 (பல்லவி: 4b)

பல்லவி: ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.

4
ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்;
5ab
உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். - பல்லவி

6
ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.
7bc
உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். - பல்லவி

8
ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9
எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 85: 7

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யோவானின் திருமுழுக்கு எங்கிருந்து வந்தது?

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 23-27

அக்காலத்தில்

இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன். யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?” என்று அவர் கேட்டார்.

அவர்கள், “ ‘விண்ணகத்திலிருந்து வந்தது’ என்போமானால், ‘பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை’ எனக் கேட்பார். ‘மனிதரிடமிருந்து’ என்போமானால், மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்சவேண்டியிருக்கிறது. ஏனெனில் அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர்” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். எனவே அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலுரைத்தார்கள். அவரும் அவர்களிடம், “எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Sunday, December 4, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (05-12-2022)

திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - திங்கள்


முதல் வாசகம்

கடவுளே வந்து உங்களை விடுவிப்பார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 1-10

பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக்குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்; லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப்படும்; கர்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்; ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள்.

தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.”

அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்; குள்ளநரி தங்கும் வளைகள் எங்கும் கோரையும் நாணலும் முளைத்து நிற்கும்.

அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்; அது ‘தூய வழி’ என்று பெயர் பெறும். தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க் கடந்து செல்லார்; அவ்வழி வரும் பேதையரும் வழி தவறிச் செல்லார். அங்கே சிங்கம் இராது; அவ்வழியில் கொடிய விலங்குகள் செல்வதில்லை, காணப்படுவதுமில்லை; மீட்படைந்தவர்களே அவ்வழியில் நடப்பார்கள். ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர்; அவர்கள் முகம் என்றும் உள்ள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்; துன்பமும் துயரமும் பறந்தோடும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 85: 8ab-9. 10-11. 12-13 (பல்லவி: எசா 35: 4d)

பல்லவி: இதோ நம் இறைவன் வந்து நம்மை விடுவிப்பார்.

8ab
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
9
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். - பல்லவி

10
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். - பல்லவி

12
நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.
13
நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, மாநிலத்தின் ஆண்டவராம் அரசர் வருவார், அவரே நமது அடிமைத்தனத்தின் நுகத்தடியை அகற்றிடுவார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இன்று புதுமையானவற்றைக் கண்டோம்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-26

ஒரு நாள் இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது, கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்திருந்த பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள். பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார்.

அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலோடு சுமந்துகொண்டு வந்து, அவரை உள்ளே கொண்டுபோய் இயேசுமுன் வைக்க வழி தேடினர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை உள்ளே கொண்டு போக அவர்களால் முடியவில்லை. எனவே அவர்கள் கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து அவ்வழியாய் மக்கள் நடுவில் அவரைக் கட்டிலோடு இயேசுவுக்கு முன் இறக்கினார்கள். அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

இதனைக் கேட்ட மறைநூல் அறிஞரும் பரிசேயரும், “கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் மட்டுமன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?” என்று எண்ணிக்கொண்டனர்.

அவர்களின் எண்ணங்களை உய்த்துணர்ந்த இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறதென்ன? ‘உம் பாவங்கள் உமக்கு மன்னிக்கப்பட்டன’ என்பதா, அல்லது ‘எழுந்து நடக்கவும்’ என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உமக்குச் சொல்கிறேன்: நீர் எழுந்து உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு உமது வீட்டுக்குப் போம்!” என்றார். உடனே அவர் அவர்கள் முன்பாக எழுந்து, தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போனார்.

இதைக் கண்ட யாவரும் மெய்ம்மறந்தவராய்க் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், “இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!” என்று பேசிக்கொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.  


நம் நம்பிக்கையின் ஆழத்தை சோதித்தறிவோமா?

மூளைவளர்ச்சி இல்லாத பெண் பிள்ளைகள் நான்கு பேரை ஒரு அருட்சகோதரி,டெல்லியில் தேசிய அளவிலே நடைபெற இருந்த சிறப்பு ஒலிம்பிக்  ஓட்டப்போட்டிக்காக பயிற்றுவித்துக்கொண்டிருந்தார். அவர்கள் செல்ல வேண்டிய நாள் வந்த போது பயிற்சி அளித்த அந்த சகோதரி அவர்களுடன் செல்ல இயலாத காரணத்தால் அவர்களை மனதளவில் நன்கு தயார் செய்ய வேண்டும் என விரும்பினார். அப்போது அவர்கள் நால்வரையும் அழைத்து ஒரு கேள்வி கேட்டார். "உங்களுக்குள் இருந்து யார் ஓடப்போகிறார்?" என்பதுதான் அக்கேள்வி. அடுத்த நிமிடமே அந்நான்கு மாணவிகளுமே "இயேசப்பா" என்று பதிலளித்தனர். உடனே அந்த சகோதரி "நீங்கள் தான் பதக்கம் வெல்வீர்கள்" என்று வாழ்த்தி அனுப்பினார். அந்த நால்வருள் ஒரு மாணவி தங்கப் பதக்கம் வென்று, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற போட்டிக்குத் தகுதி பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றதாகவும் தன் பகிர்விலே கூறினார். உண்மையான நம்பிக்கை நம்மிடமிருந்து பிறருக்கும் கடந்து சென்று இயேசுவை அனுபவிக்கச் செய்யும் என தான் உணர்ந்து கொண்டதாகத் தெரிவித்தார் அச்சகோதரி.

ஆம் இன்றைய வாசகங்கள் நாம் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் ஆழத்தை  சோதித்தறிய நம்மை அழைக்கிறது. நற்செய்தி வாசகத்தில் நாம்  மனதை நெகிழச் செய்யும் நிகழ்வு ஒன்றை வாசிக்கிறோம். பிறர் நலனுக்காக நாம் நம்பிக்கையோடு செய்யும் இறைவேண்டலும் முயற்சிகளும் நிறைவான பலனைத் தருகிறது என்பதை அந்நிகழ்வு மிகத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது. 

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவரை கட்டிலோடு  சுமந்து வந்த நால்வரும் இயேசுவைப் பற்றியும் அவர் ஆற்றிய அருள் அடையாளங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்பார்கள். நம்பிக்கையும் கொண்டிருப்பார்கள். அந்த நம்பிக்கையை தங்களோடு வைத்துக் கொள்ளாமல் படுக்கையிலிருந்த தம் அயலாருக்கும் அளித்து அவரை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். கூரையைப் பிரித்து அவரை கீழிறக்கினார்கள் என வாசிக்கிறோம். அப்படியென்றால் அவர்களின் ஆழமான நம்பிக்கையை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். நம்முடைய நம்பிக்கை இந்த அளவுக்கு ஆழமானதா என ஆராயவும் வேண்டும். நலம்பெற்ற மனிதரும்  இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்டதால்தான் தன்னைத் தூக்கி வந்த மனிதர்களின் முயற்சிகளுக்கு இசைவு அளித்தார். அத்தோடு நின்று விடாமல் "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என மொழிந்த இயேசுவின் வார்த்தைகளை நம்பி ஏற்றுக்கொண்டார். நலம் பெற்றார். 

கடவுள் மேல் உண்மையான, ஆழமான நம்பிக்கையை நாம் கொண்டிருக்கும் பொழுது அந்நம்பிக்கை நம்மோடு நின்றுவிடாது. அது மற்றவர்களின் நம்பிக்கையையும் மிகுதிப்படுத்தும். அவர்கள் வாழ்வையும் முன்னேற்றும். இத்தகைய நம்பிக்கையில் தான் நாம் திருப்பலியிலும், நம்முடைய தனிப்பட்ட இறைவேண்டலிலும் பிறருக்காக மன்றாடுகிறோம். பிறர் நோய்வாய்ப்படும் போதோ அல்லது பிரச்சனைகளில் இருக்கும் போதோ "உங்களுக்காக ஜெபிக்கிறேன்" என கூறுகிறோம்.பிறரும் நம்மிடம் "எனக்காக ஜெபியுங்கள்" என கேட்கிறார்கள். இவ்வாறு செய்வதால் கடவுளிடம் நாம் கொண்டுள்ள நம்பிக்கையில் நாமும் வளர்வதோடு பிறரும் வளரத் துணை செய்கிறோம். இதுதான் ஆழமான நம்பிக்கையின் அடையாளம்.


இன்றைய முதல் வாசகம் மெசியாவின் வருகையின் போது சோர்ந்த உள்ளங்களெல்லாம் தேற்றப்படும், நோய்பிணிகளெல்லாம் நலமாகும் என்ற கருத்தினைக் கூறுகிறது. மெசியா வந்து தீமைகளைப் பழிதீர்ப்பார். நன்மைகளால் தம் மக்களை நிரப்புவார் என்ற ஆழமான நம்பிக்கையுடன் அவருக்காக இஸ்ரயேல் மக்கள் காத்திருந்தனர். வரவிருக்கும் மெசியா தங்கள் மனமாற்றத்தை ஏற்றுக்கொண்டு பாவங்களை மன்னித்து மீட்பளிப்பார் என எதிர்நோக்கியிருந்தனர்.

திருவருகைக் காலத்தில் ஆண்டவர் இயேசுவின் பிறப்புக்காகவும் அவரின் இரண்டாம் வருகைக்காகவும் நம்மையே தயார் செய்யும் நாமும் இஸ்ரயேல் மக்களிடமிருந்த அதே நம்பிக்கையைக் கொண்டவர்களாய் நம்பிக்கையில் நாளும் வளர்வோம்.ஒருவருக்கொருவர் நம்பிக்கையூட்டுவோம். நம் நம்பிக்கையை ஆழப்படுத்துவோம்.

 இறைவேண்டல் 

நம்பிக்கையால் எமக்கு நலமளிக்கும் இறைவா! எம் நம்பிக்கையின்மையைப் போக்கும். நாங்கள் உம்மீது ஆழமான நம்பிக்கை கொள்ளவும், மற்றவரையும் உம்மீது  நம்பிக்கை கொள்ளத் தூண்டவும் இதனால் உம்மக்கள் நாங்கள் ஒருசேர நம்பிக்கையோடு உம்மை வரவேற்கவும் அருள் தாரும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...