Showing posts with label கிறிஸ்து பிறப்பு வார நாள்கள். Show all posts
Showing posts with label கிறிஸ்து பிறப்பு வார நாள்கள். Show all posts

Saturday, January 7, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (08-01-2023)

 

ஆண்டவரின் திருக்காட்சி




பெருவிழா

முதல் வாசகம்

ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6

எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்!

பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 7-8. 10-11. 12-13 (பல்லவி: 11)

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1
கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2
அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. - பல்லவி

7
அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.
8
ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். - பல்லவி

10
தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள்.
11
எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள். எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். - பல்லவி

12
தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.
13
வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். - பல்லவி

இரண்டாம் வாசகம்

பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளர் என இப்போது வெளியாக்கப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-3a, 5-6

சகோதரர் சகோதரிகளே,

உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது.

அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 2: 2

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அரசரை வணங்க வந்திருக்கிறோம்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள்.

இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், ‘யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்’ என்று இறவாக்கினர் எழுதியுள்ளார்” என்றார்கள்.

பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்துகொண்டான். மேலும் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள்.

இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 கடவுளே வழிகாட்டுவார்! 


இன்று திருஅவையோடு இணைந்து நாம் திருகாட்சி திருவிழாவைக் கொண்டாடுகிறோம். இந்த பெருவிழா நமக்கு பல நல்ல ஆழமான நம்பிக்கையூட்டும் சிந்தனைகளைத் தருவதாய் உள்ளது. அதில் இன்று நாம் "கடவுளே வழிகாட்டுவார் " என்ற மையக்கருத்தை சிந்திக்கலாம் என விழைகிறேன். 


கடவுள் வழிகாட்டுவார். எதற்கு?  அவரை சென்று  அடைவதற்கு.கிறிஸ்தவர்களாகிய நமக்கு அடிப்படை இலக்கு என்வெனில் கடவுளை அடைவது. ஆங்கிலத்தில் "To reach God" என்போம்.கடவுளை நோக்கி நாம் ஒரு அடி எடுத்துவைத்தால் அவர் நம்மை நோக்கி ஆயிரம் அடி எடுத்து வைப்பார். ஆகவே அவரை நாட முற்படுவோம் என நாம் பல முறை கேட்டிருக்கிறோம். இன்று நாம் கொண்டாடும் விழா இதனை எண்பிப்பதாக இருக்கின்றது. 


கிழக்கு திசை ஞானிகள் காலக் குறிகளை கணித்தவர்களாக மெசியா பிறந்திருப்பதை உணர்ந்து அவரைத் தேடி அவரைக் கண்டு வணங்க தங்கள் பயணத்தை தொடர்ந்தார்கள். இப்போது போல அக்காலத்தில் பயணங்கள் எளிதல்ல. நாம் ஆழ்ந்து யோசித்தால் பயணத்திற்கு அவர்கள் எத்தனை நாட்கள் எடுத்திருப்பார்கள் , எவ்வளவு தயாரிப்புகள் செய்திருப்பார்கள் எனத் தெரியாது. ஆனால் ஆண்டவரைக் காண வேண்டும் என்ற ஒரு தாகம், அவரை வணங்கி காணிக்கை செலுத்த வேண்டும் என்ற ஆசை அவர்களை உந்தித் தள்ளியது. அவர்கள் எடுத்த முன்னெடுப்பை பூர்த்தியாக்க கடவுள் வழிகாட்டுகிறார்.


எவ்வாறு வழிகாட்டினார் என்பது நாம் அறிந்ததே. ஆம். விண்மினை அவர்கள் முன்பே அனுப்பி தன் மகனைச் சென்றடைந்து வணங்க வழிகாட்டினார். அவர்களும் சென்றார்கள்.  கண்டார்கள். வணங்கினார்கள். பரிசளித்தார்கள். அவர்கள் பாதுகாப்பாக தங்களிடம் சேர்வதற்கும் ஏரோதிடமிருந்து அவர்களைக் காப்பதற்கும் கனவின் வழியாக கடவுள் மீண்டும் வழிகாட்டினார். 


அன்புக்குரியவர்களே! இறைவனின் தரிசனத்தை நம் வாழ்வில் பெற வேண்டுமென்று நாம் விரும்புகிறோம் அல்லவா. அப்படியெனில்  அவரை நோக்கி நாம் ஒரு  அடி எடுத்து வைத்தால் போதும் , அவரைச் சென்றடையும் வழியை அவரே நமக்குக் காட்டிவிடுவார். இன்று நாம் அவரைச் சென்று அடைய இறைவார்த்தையும்,இறைவேண்டல் வழிமுறைகளும், அருட்சாதனங்களும், ஆன்மீக முதிர்ச்சிபெற்ற மூத்தோரின் வழி காட்டுதல்களும் கடவுளால் நமக்கு  வழிகாட்ட அனுப்பப்பட்ட விண்மின்களே.  இதை நாம் உணர்ந்து நம் ஆழ்மனத்திற்குள் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டால் இறைவனின் தரிசனத்தைப் பெற முடியும். கடவுள் வழி காட்டுவார். அதைக் கண்டுணர நாம் தயாரா?


 இறைவேண்டல் 

எல்லாம் வல்ல இறைவா! உமது வழிகாட்டுதலைப் பின்பற்றி உம்மை கண்டடைந்து வணங்க எமக்கருள்புரியும். ஆமென்.



அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Friday, January 6, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (07-01-2023)

சனவரி 7



முதல் வாசகம்

நாம் எதைக் கேட்டாலும் கடவுள் நமக்குச் செவிசாய்க்கிறார்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21

அன்பார்ந்தவர்களே,

நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இதுவே நாம் அவர்மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை. நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிசாய்க்கிறார் என்று நமக்குத் தெரியும். எனவே, நாம் அவரிடம் கேட்டவற்றைப் பெறுவோம் என்னும் உறுதி நமக்கு உண்டு.

பாவம் செய்வோர் சாவுக்குரிய பாவம் செய்யவில்லை என்று கண்டால், அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்யவேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார். சாவுக்குரிய பாவமும் உண்டு. அப்பாவத்தைச் செய்வோருக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என நான் சொல்லவில்லை. தீச்செயல் அனைத்துமே பாவம்; ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல.

கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம் செய்வதில்லை என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் கடவுளிடமிருந்து பிறந்தவர்களை அவர் பாதுகாக்கிறார். தீயோன் அவர்களைத் தீண்டுவதில்லை. நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்; ஆனால், உலகனைத்தும் தீயோனின் பிடியில் இருக்கிறது. இது நமக்குத் தெரியும்.

இறைமகன் வந்து உண்மையான இறைவனை அறிந்துகொள்ளும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். இது நமக்குத் தெரியும். நாம் உண்மையான இறைவனோடும் அவர் மகன் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கிறோம். இவரே உண்மைக் கடவுள். இவரே நிலைவாழ்வு.

பிள்ளைகளே, சிலைவழிபாட்டைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a)

பல்லவி: ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்.

அல்லது: அல்லேலூயா.

1
அல்லேலூயா, ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள். அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.
2
இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக. - பல்லவி

3
நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக.
4
ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றி அளித்து மேன்மைப் படுத்துவார். - பல்லவி

5
அவருடைய அன்பர் மேன்மை அடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக.
6a
அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்.
9b
இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. அல்லேலூயா. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு செய்த முதல் அரும் அடையாளம் கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது.

 யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

அக்காலத்தில்

கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். இயேசு அவரிடம், “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார்.

யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வை யாளரிடம் கொண்டுபோங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, “எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்த பின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று கேட்டார்.

இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 "அன்னை மரியாள் காட்டிய சமூக நீதி! "


நாம் வாழும் வாழ்க்கையில் பலர் சாதிக்கின்றனர். பலர் தங்கள் வாழ்க்கையில் சாதிக்க முடியாமல் இருக்கின்றனர். காரணம் என்னவென்றால் அதிகமாக வாய்ப்பு கொடுக்கும் பொழுது வாழ்வில் சாதிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதிகமாக வாய்ப்பு மறுக்கப்படும் பொழுது சாதிக்கக் கூடிய சூழல் சரியாக அமைவதில்லை. எனவே சமூக நீதியோடு தேவையில் இருப்பவர்களை மனதில் வைத்து சமூகப் பணியை செய்யும் பொழுது ஏழைகள் பணக்காரர்களாகவும் வாழ்வில் உயர்ந்தவர்களாகவும் மாற முடியும்.


இன்றைய நற்செய்தி வாசகத்தில் அன்னை மரியாவின் வழியாக சமூக நீதியானது வெளிப்படுகிறது. அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற சமத்துவ மனநிலையை அன்னை மரியாவினுடைய செயல் வழியாக  நாம் அறிகின்றோம்.  கானாவூர் திருமணத்தைப் பற்றி இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்த நற்செய்தி பகுதியை நாம் அதிகமாக வாசித்து தியானித்து இருக்கிறோம்.  இந்த நற்செய்தி பகுதி அன்னை மரியாள் காட்டிய சமூக நீதியை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.


யூத சமூகத்தில் ஒரு திருமணம் நடைபெறுகிறதென்றால் விருந்து உபசரிப்பு என்பது மிகவும் முக்கியம். விருந்து உபசரிப்பில் பற்றாக்குறை இருந்தால் நிகழ்வு நடத்துகின்ற அந்த குடும்பம் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும். அது ஒரு பக்கம். விருந்து தொடக்கத்தில் பணக்காரர்களுக்கும் படித்தவர்களுக்கும் வழங்கப்படும். இறுதியில் தான் ஏழை எளிய மக்கள் விருந்து உண்பார்கள். ஆனால் அன்னை மரியா கடைசியாக வந்த ஏழைகளுக்கும் திராட்சை இரசம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முதல் அற்புதத்தை இயேசு செய்ய வழிகாட்டினார். இது ஒரு பக்கம்.


அன்னை மரியாவின் பரிந்துரையின் பெயரில் ஆண்டவர் இயேசு கானாவூர் திருமணத்தில் முதல் அற்புதத்தை செய்தார். இந்த அற்புதம் செய்ய அன்னை மரியாள்  இயேசுவை கேட்டுக் கொண்டதற்கு காரணம் சமூக நீதியை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே. செல்வந்தர்கள் மட்டும் போதிய உணவு உண்டால் போதாது ; ஏழை எளிய மக்களும் நிறைவுள்ள உணவை உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்  அன்னை மரியாளின் மனதில் உதித்ததை நாம் உணரமுடிகிறது.தன்னுடைய புகழ்ச்சி பாடலிலே செல்வரை வெறுங்கையராய் அனுப்புவார். பசித்தோரை நலன்களால் நிரப்புவார்  என அன்றே புரட்சியை ஏற்படுத்தினார் நம் அன்னை.


நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க நாம் உழைக்க வேண்டும். படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை சமத்துவம் பேணப்பட வேண்டும். செல்வந்தர்கள் முதல் ஏழைகள் வரை சமத்துவம் பேணப்பட வேண்டும். ஏனெனில் அனைவருமே கடவுளின் பிள்ளைகள். எனவே அனைவருக்கும் சமூக நீதி சரியாக கிடைக்கும் பொழுது நாம் ஆண்டவரின் இறையாட்சி  மதிப்பீட்டிற்கு  சான்று பகர முடியும். எனவே இந்த சமூகத்தில் இருக்கும் அவல நிலைகளையும் அநீதிகளையும் முறியடித்து சமூகநீதி மண்ணில் மலர உழைக்கத் தேவையான அருளை வேண்டுவோம். அதற்கு அன்னை மரியாவின் பரிந்துரையின் வழியாக உருக்கமாக மன்றாடுவோம் .


 இறைவேண்டல்

நீதியின் தேவனே!  சமூக நீதி இம்மண்ணில் மலர நீதியின் தேவனாய் இருந்து எங்கள் ஒவ்வொருவரையும் நீதியின் பாதையில் வழிநடத்தும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Wednesday, January 4, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (05-01-2023)

 

சனவரி 5


முதல் வாசகம்

நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோம்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 11-21

அன்பிற்குரியவர்களே,

நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்த செய்தி இதுவே; நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும்.

காயினைப்போல் நீங்கள் இராதீர்கள்; அவன் தீயோனைச் சார்ந்தவன்; ஏனெனில் தன் சகோதரரைக் கொலை செய்தான். எதற்காக அவரைக் கொலை செய்தான்? ஏனெனில் அவன் செயல்கள் தீயனவாக இருந்தன. அவன் சகோதரருடைய செயல்கள் நேர்மையானவையாக இருந்தன.

சகோதரர் சகோதரிகளே, உலகம் உங்களை வெறுக்கிறதென்றால் நீங்கள் வியப்படைய வேண்டாம். நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோமென அறிந்துள்ளோம்; அன்பு கொண்டிராதோர் சாவிலேயே நிலைத்திருக்கின்றனர். தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள். எந்தக் கொலையாளியிடமும் நிலைவாழ்வு இராது என்பது உங்களுக்குத் தெரியுமே. கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்துகொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லை என்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்? பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்.

இதனால் நாம் உண்மையைச் சார்ந்தவர்கள் என அறிந்துகொள்வோம்; நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியும். ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்; அனைத்தையும் அறிபவர். அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 4. 5 (பல்லவி: 1a)

பல்லவி: அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

1
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள். - பல்லவி

3
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள். - பல்லவி

4
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ச்சிப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள். - பல்லவி

5
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில் உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்.

 யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 43-51

அக்காலத்தில்

இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, “என்னைப் பின்தொடர்ந்து வா” எனக் கூறினார். பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள்.

பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, “இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார். அதற்கு நத்தனியேல், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்!” என்று கூறினார்.

நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்து கூறினார். நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.

அதற்கு இயேசு, “உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார். மேலும் “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



 "முற்சார்பு எண்ணங்களைக் களைந்து  இயேசுவை பின்பற்றுவோம்!"


ஒரு ஊரில் புதிதாக அருட்பணி செய்வதற்காக அருள்பணியாளர் ஆயரால்  நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த அருள்பணியாளர் அந்த பங்கிற்கு செல்வதற்கு முன்பாகவே அவரைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்ல ஆரம்பித்தனர். ஆனால் அந்த அருள்பணியாளர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பிறகு மிகச் சிறப்பான பணிகளை ஆற்றலோடு செய்தார். மக்கள் எதிர்பார்த்ததை விட  ஆன்மீகம்,  சமூகம், மனித நேயம் போன்ற நிலைகளில் பங்கு மக்கள் வளர்ச்சி அடைய அதிகமான பணிகளைச் செய்தார். அவரைப் பற்றி தவறாக புரிந்து கொண்ட மக்கள் ஒரு கட்டத்தில் அவரை சரியாகப் புரிந்து கொண்டனர்.  பங்குத்தந்தையைப் புரிந்து கொண்ட மக்கள் சிறப்பான முறையில் தங்களுடைய ஒத்துழைப்பைக் கொடுத்தனர்.


நம்முடைய வாழ்க்கையில் முற்சார்பு எண்ணத்தை  நிச்சயம் களைய வேண்டும். அப்பொழுதுதான்  வாழ்க்கையிலே வளர்ச்சி இருக்கும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் நத்தனியேல் பிலிப்பிடம் சொன்ன "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரமுடியுமோ?" என்னும் சொற்கள் நமது முற்சார்பு எண்ணங்களை ஆய்வுசெய்ய நமக்கு அழைப்பு விடுக்கின்றன.


நாசரேத் என்பது அடையாளம் காணப்படாத ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் இயேசு அந்த இடத்தில் வாழ்ந்ததன் வழியாக அந்த இடத்தை உயர்த்தினார்.  சிறிய இடமா பெரிய இடமோ எல்லா இடத்திலும் நன்மைத்தனங்கள் உண்டு என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.


பல நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் நாம் அதிகம் எதிர்பார்க்கிறோம். நமக்கு நிறைய கிடைக்க வேண்டும் என நினைக்கிறோம். சூழல் அனைத்தும் நமக்கு ஏற்றார் போல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். பணி செய்யக்கூடியவர்கள் பணி மாற்றம் பெறும்பொழுது , முற்சாற்பு எண்ணத்தோடு அந்த இடத்திற்கு செல்லக்கூடாது. அப்படி சென்றால் அந்த இடம் நமக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தராது. எதுவாக இருந்தாலும் என்னால் செய்ய முடியும் எதார்த்தங்களை ஏற்றுக் கொள்ள முடியும் என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டு நம் வாழ்க்கையில் பயணமாகும் பொழுது, வாழ்வில் வெற்றியின் கனியைச் சுவைக்க முடியும்.


ஆண்டவர் இயேசு நினைத்திருந்தால் அரச மாளிகையில் பிறந்து, அரச மாளிகையில் வளர்ந்து தன்னை உயர்ந்தவராக காண்பித்திருக்கலாம். ஆனால்  அவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்து ஒரு ஏழையைப் போல் வாழ்ந்து தான் வாழ்ந்த பகுதிக்கு பெருமை சேர்த்தார்.


நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் கூட நாம் வாழ்கின்ற இடம் சிறியதோ பெரியதோ அது பெரிதல்ல ; நாம் காணும் மனிதகர்களும் நல்லவர்களோ கெட்டவர்களோ அது நமக்குத் தேவையில்லை. நம்முடைய பார்வையை சரியாக அமைத்துக்கொண்டால் யாரோடும் வாழ இயலும். எங்கேயும் ஒளிர முடியும். முடிந்தவரை நம்மாலான நல்ல பணிகளை இறைவனுக்கு பயந்து செய்யும்பொழுது நாம் சாட்சியமுள்ள வாழ்வை வாழ முடியும். கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற முடியும்.  வாழ்வில் சாதனையாளர்களாக மாற முடியும். எனவே நம்முடைய வாழ்க்கையில் முற்சார்பு எண்ணங்களை அகற்றி சிறந்த வாழ்வை வாழ ஆண்டவர் இயேசு கொண்டிருந்த மனநிலையை நாமும் கொண்டிருக்க முயற்சி செய்வோம். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா!  எங்களுடைய அன்றாட வாழ்வில் முற்சார்பு எண்ணங்களை அகற்றி  சிறந்த வாழ்வை வாழ்ந்திட தேவையான அருளை தாரும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Tuesday, January 3, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (04-01-2023)

 

சனவரி 4



முதல் வாசகம்

கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-10

பிள்ளைகளே, எவரும் உங்களை நெறிதவறச்செய்ய விடாதீர்கள். கிறிஸ்து நேர்மையாளராய் இருப்பதுபோல், நேர்மையாய்ச் செயல்படுபவர் நேர்மையாளராய் இருக்கின்றார். பாவம் செய்து வருகிறவர் அலகையைச் சார்ந்தவர்; ஏனெனில் தொடக்கத்திலிருந்தே அலகை பாவம் செய்து வருகிறது. ஆகவே அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் தோன்றினார்.

கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை; ஏனெனில் கடவுளின் இயல்பு அவரிடம் இருக்கிறது. கடவுளிடமிருந்து பிறந்தவராயிருப்பதால் அவரால் பாவம் செய்ய இயலாது. நேர்மையாய்ச் செயல்படாதவரும், தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதவரும் கடவுளிடமிருந்து வந்தவர்களல்ல. இதனால் கடவுளின் பிள்ளைகள் யாரென்றும் அலகையின் பிள்ளைகள் யாரென்றும் புலப்படும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 7-8. 9 (பல்லவி: 3b)

பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

7
கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!
8
ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். - பல்லவி

9
ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 1: 1-2

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மெசியாவைக் கண்டோம்.

 யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 35-42

அக்காலத்தில்

யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் பெத்தானியாவில் நின்றுகொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, “இதோ! கடவுளின் செம்மறி!” என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.

இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, “என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். ‘ரபி’ என்னும் எபிரேயச் சொல்லுக்குப் ‘போதகர்’ என்பது பொருள். அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள்” என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.

யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, “மெசியாவைக் கண்டோம்” என்றார். ‘மெசியா’ என்றால் ‘அருள்பொழிவு பெற்றவர்’ என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, “நீ யோவானின் மகன் சீமோன். இனி ‘கேபா’ எனப்படுவாய்” என்றார். ‘கேபா’ என்றால் ‘பாறை’ என்பது பொருள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நாம் யாரைச் சார்ந்துள்ளோம்?


ஒருமுறை நான் கோவிலுக்குச் சென்ற போது ஒரு தாய் தன் குழந்தையைக் கண்டித்துக்கொண்டிருந்தார். அந்தக் குழந்தை சேட்டை செய்ததால் அத்தாய் அக்குழந்தையைப் பார்த்து " நீ இயேசப்பா பிள்ளையா அல்லது சாத்தான் பிள்ளையா? " எனக் கேட்டார். உடனே அக்குழந்தை "இயேசப்பா பிள்ளை "என்றது. அப்போது தாய் "நீ இயேசப்பா பிள்ளை என்றால் என் பேச்சைக் கேள் " என்று சொல்லி அக்குழந்தையை அமைதிப்படுத்தி தன் அருகே வைத்துக்கொண்டார். இந்நிகழ்வு சற்று வேடிக்கையாக இருந்தாலும் ஆழ்ந்த உண்மையை நமக்குக் கற்பிக்கிறது. 


சிறுபிள்ளைகளாக இருந்த போது நம்மிடமும் நம் பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள், மறைக்கல்வி ஆசிரியர்களெல்லாம் இது போல சொன்னார்கள் அல்லவா. அப்போது காது கொடுத்துக் கேட்டு நமது சின்னச் சின்ன சேட்டைகளை நாம் குறைத்தோம். இது நம் எல்லோருடைய வாழ்விலுமே நடந்தது தான். ஆனால் வயதாக ஆக தவறுகளையும் பாவச்செயல்களையும் நாம் துணிச்சலாகச் செய்கிறோமே! நம்மிடம் யாராவது " நீ கடவுளின் பிள்ளையா அல்லது அலகையின் பிள்ளையா? " எனக் கேட்டால் நமது பதில் என்னவாக இருக்கும்? தாமதம் செய்யாமல் நாம் சிந்தித்தறிய வேண்டிய விஷயம் இது.


அன்புக்குரியவர்களே இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் யோவான் பாவம் செய்வோர் அலகையிடமிருந்து வருகின்றனர் எனத் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார். ஆம். நாம் பாவம் செய்யும் போதெல்லாம் அலகையைச் சார்ந்தவர்களாக இருக்கிறோம். கடவுளைச் சார்ந்தவர்களாக நாம் இருந்தால் கடவுளின் இயல்பு நம்மிலே இருப்பதை நாம் உணர்வோம். இவ்வுணர்வே நம்மை சரியான பாதையில் வழிநடத்தும். தீய வழியை விட்டு விலகச் செய்யும். உலக மாயக் கவர்ச்சிகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.



கடவுளைச் சார்ந்து வாழ நாம் என்ன செய்ய வேண்டும்? " வந்து பாருங்கள் " என்று இயேசு தம்மைப் பின்தொடர்ந்தவர்களை நோக்கிக் கூறினார். அவர்களும் சென்றார்கள். அவரோடு அன்று தங்கினார்கள். அவர் யார் என உணர்ந்து பிறரையும் அவரிடம் கூட்டிவந்தார்கள்.

அவ்வழைப்பு நமக்கும் பொருந்தும். இயேசுவிடம் போக வேண்டும். அவரை செபத்திலும் அவருடைய வார்த்தையிலும் அனுபவித்து உணர வேண்டும்.பிறரையும் அனுபவிக்கத் தூண்ட வேண்டும். 


நாம் அடிக்கடி ஆலயம் செல்கிறோம். செபிக்கிறோம். ஆனால் "வந்து பாருங்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகளை உணர்ந்து அவரைச் சென்று பார்த்திருக்கிறோமா? இனிவரும் காலங்க கில் இயேசுவின் அழைப்பை ஏற்போம். கடவுளைச் சார்ந்தவர்களாக மாறி நம் வாழ்வால் அதை எண்பிக்க தொடர்ந்து முயல்வோம். 


 இறைவேண்டல்

அன்பு ஆண்டவரே! நாங்கள் உம்மைச் சார்ந்தவர்கள் என உலகிற்கு காட்ட எம் வாழ்வைப் புதுப்பித்தருளும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Saturday, December 31, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (01-01-2023)

 

இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா

பெருவிழா

முதல் வாசகம்

இஸ்ரயேல் மக்கள்மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும்போது, நாம் அவர்களுக்கு ஆசி அளிப்போம்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6: 22-27

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 1a)

பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!

1
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!
2
அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். - பல்லவி

4
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி

5
கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!
7
கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக. - பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7

சகோதரர் சகோதரிகளே,

காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.

நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி ‘அப்பா, தந்தையே,’ எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 1: 1-2

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21

அக்காலத்தில்

இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.

குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



 புதிய இதயத்தோடு அன்னை மரியின் வழிநடப்போம்!


இன்று நாம்  புதிய ஆண்டின் புதிய நாளில்,  புதிய மணித்துளியில் புகுந்துள்ளோம். புதிய எண்ணங்கள், புதிய எதிர்நோக்குகள், புதிய தீர்மானங்கள், புதிய கனவுகள் .... என புதிது புதிதாய் பல புதினமிகு எதிர்பார்ப்புகள்.  ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் புதிய புதிய கனவுகளோடும் சிந்தனைகளோடும் தீர்மானங்களோடும் வாழ்வைத் தொடங்க நினைத்தாலும்,  பல நேரங்களில் நம்முடைய இதயம் மட்டும் பழைய வாழ்வைத் தாங்கி வரும் இதயமாக இருக்கின்றது. எனவே இன்றைய நாளில் புது இதயத்தோடும் புது ஆற்றலோடும் புது ஆன்மாவோடும் நம்முடைய வாழ்வைத் தொடங்க முயற்சி செய்வோம். அதற்கு நம்முடைய தாய் அன்னை மரியாவின் கரம் பிடித்து பயணத்தைத் தொடங்குவோம்.


ஆண்டின் இந்த முதல் நாளில் அன்னையாம் திருஅவை அன்னை மரியாவைக் கடவுளின் தாயாகப் போற்றிச் சிறப்பிக்கிறது. தாய்மை என்பது கடவுளின் முக்கிய பண்புகளில் ஒன்று. மனிதருக்கு உயிரளித்து, அவர்களைப் பேணிக்காத்து, வளர்த்து, மேம்படுத்தும் செயலைக் கடவுள் செய்வதால் அவரை நாம் தாய் என உரிமையோடு அழைக்கலாம்.  கடவுளின் தாய்மை வெவ்வேறு வழிகளில் வெளிப்பட்டாலும் அன்னை மரியா வழியாக அது சிறப்பான விதத்தில் உயர்வு பெற்றது.  அன்னை மரியாள் கடவுளின் தாய் என அழைக்கப்படுவதற்கு  காரணம் அவர் கடவுளின் மகனை நமக்கு ஈன்றளித்த  செயலாகும். கடவுளின் மகனாகிய இயேசு அன்னை மரியாவின் வழியாகப் பிறந்ததால் அன்னை மரியாள் கடவுளின் தாயென திரு அவையால் அழைக்கப்படுகிறார்.


நம்முடைய மனித வாழ்வில் தாய் என்பவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். கடவுள்  நம்முடைய தாய் தந்தையின் வழியாகத்தான்  நம்மோடு  வாழ்கிறார். நம்முடைய தாய் நமக்காக பற்பல தியாகங்கள் செய்யக்கூடியவராக இருக்கின்றார். நாம் நம் தாயின் கருப்பையில் உதயமான அந்த நிமிடம் முதல் நம்மை முழுமையாக அன்பு செய்யக்கூடியவராக நம் தாய் இருக்கிறார். அவருக்கு பிடித்த உணவுகளையும் கொண்டாட்டங்களையும் பயணங்களையும் நமக்காக தியாகம் செய்கிறார். அவருக்கு பிடிக்காத உணவுகளையும் மருந்துகளையும் சூழலையும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார். அதற்குக் காரணம் நம்மீது அவர் கொண்டிருக்க கூடிய அன்பு தான்.  எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் நம் தாயை அன்போடும் பாசத்தோடும் அரவணைக்க வேண்டும்.  தாயின் அன்பும் அரவணைப்பும் பாசமும் நம்முடைய மனித வாழ்வில் முழுமையை  அடைவதற்கு முக்கியமான காரணிகளாக இருக்கின்றன. தாயின் அன்பும் அரவணைப்பும் பாசமும் யாருக்கு போதுமானதாக கிடைக்கவில்லையோ,  அவர்கள் வாழ்வு சிறப்பாக அமையாத வாழ்வாக இருக்கின்றது.  அந்த அளவுக்கு தாயின் அன்பும் பாசமும் ஒரு மனிதருக்கு தேவை.


எனவே தான் வாக்காக இருந்த இறைவன் மனுவுருவெடுத்து நம்மைப் போல பிறக்க இறைவன் திருவுளம் கொண்ட பொழுது, குழந்தையை சிறப்பாக பெற்று வளர்த்து மீட்பு திட்டத்திற்கு கையளிக்க அன்னை மரியாவை  பயன்படுத்தினார். கடவுளையே கருவில் தாங்கும் அளவுக்கு அன்னை மரியாள் கடவுளின் ஆசீரைப் பெற்றார். கடவுள் அன்னை மரியாளை பெண்களுக்குள் ஆசீர்  பெற்றவராக வழிநடத்தினார்.


நம் அனைவருக்கும் தாயாக  இருந்து   வழிநடத்தும் அன்னை மரியாள்  "இறைமகன் இயேசுவின் தாயாக இருக்கின்றார் " என்பது நம்முடைய கத்தோலிக்க திருஅவையின் நம்பிக்கையாக இருக்கின்றது.  


புனித மரியா - இறைவனின் தாய் என்ற நம்பிக்கை கோட்பாடு நெஸ்தோரியனிசம் என்ற தப்பறை  கொள்கையின் விளைவாக திரு அவையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  கடவுள், இயேசு, தூய ஆவி, மூவொரு இறைவன், அன்னை மரியாள் போன்ற ஒவ்வொருவரையும்  பற்றியும் தவறான தப்பறை கொள்கைகள் ஒவ்வொன்றாக வெளிவந்தது.  "இயேசு படைக்கப்பட்ட பொருள் மட்டுமே. மனித இயல்பு உடையவரே.  அவரிடம் இறை இயல்பு என்பது இல்லை. எனவே மரியா இயேசுவின் தாய் மட்டுமே ; இறைவனின் தாய் அல்ல என்ற தவறான கொள்கையை வெளியிடப்பட்டது. இது நெஸ்தோரியனிசம் தப்பறை எனப்படுகிறது . இவருடைய கூற்றுக்கு மறுப்பு தெரிவித்து முழுமையான விளக்கம் கொடுக்க எபேசு நகரிலே திருச்சங்கம் கூடியது.


எபேசு திருச்சங்கமானது கி.பி. 431,  ஜீன் 22 இல் கூடியது.  இந்த சங்கத்தில் " இறைவனின் தாய் " என்னும் தெயோதோக்கோஸ் என்ற கிரேக்க சொல்லை திருஅவை பயன்படுத்தியது. இந்த சங்கம் "இம்மானுவேல் உண்மையிலேயே கடவுள் ; மரியா  கடவுளிடமிருந்து பிறந்த வார்த்தையானவரை ஊனுடலில் ஈன்றெடுத்தார்.  எவரொருவர் இதை ஏற்றுக் கொள்ளவில்லையோ,  அவர் சபிக்கப்பட்டவராவார் " என்றும் சங்கம் தெளிவுபடுத்தியது. 


அன்னை மரியாள் இறைவனின் தாய் என்பதை அதிகாரப்பூர்வமான நம்பிக்கை கோட்பாடாக திரு அவை அழைத்ததன் நோக்கம் இயேசுவின் இறைத்தன்மையையும் அன்னை மரியாவை கடவுள் தன்னுடைய ஒரே மகனின் தாயாக உயர்த்தியதையும் கொண்டாடும் விதமாக அமைகின்றது.   அன்னை மரியாள் இறைவனாகிய இயேசுவின் தாய் மட்டுமல்ல ; நம் ஒவ்வொருவரின் தாயாகவும் இருக்கிறார். இந்த தாயை இந்த புதிய புத்தாண்டிலே கரம்பிடித்து நடப்போம். அன்னை மரியா கொண்டிருந்த நல்ல மதிப்பீடுகளை நம்முடைய வாழ்வாக மாற்றிக் கொள்வோம். அப்படி வாழுகிற பொழுது இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற மூன்று ஆசிர்வாதங்களை நம்முடைய வாழ்க்கையிலே பெற்றுக் கொள்ள முடியும்.


ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!  என்பது முதல் ஆசீர்வாதம். அன்னை மரியாள் இறைவனுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்ததால் மனுக்குலத்திற்கு  ஆசீர்வாதமாய் மாறினார். நாமும் இறைவனின் திருவுளப்படி வாழும்பொழுது கடவுளின் ஆசிர்வாதத்தை பெறக்கூடிய மக்களாக மாறுகிறோம். அன்னை மரியாவை கடவுள் காத்ததை போல நம்மையும் கடவுள் காப்பார்.


ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன் மீது அருள்பொழிவாராக! என்ற ஆசிர்வாதமான இறைவார்த்தை கடவுளின் அருள் எப்பொழுது நமக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது. அன்னை மரியாவை கபிரியேல் வானதூதர் ' அருள்மிக பெற்ற மரியே வாழ்க' என வாழ்த்தினார்.  அன்னை மரியா கடவுளின் அருளால் முற்றிலும் நிரப்பப்பட்டிருந்தார். ஏனெனில் அவர் கடவுளோடு இணைந்திருந்தார்.  இப்புதிய ஆண்டிலே நம் தாய் அன்னை மரியாவை போல கடவுளோடு இணைந்திருக்கும் பொழுது, இந்த ஆண்டு முழுவதும் நாம் கடவுளின் அருளை நிறைவாக பெற முடியும். அதற்கு நிச்சயமாக இறைவனின் தாயாகிய நம்  அன்னை மரியாள் கரம் பிடித்து உதவி செய்வார்.


ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக என்ற ஆசீர்வாதமான இறைவார்த்தை நமக்கு இந்த புதிய ஆண்டிலே நிறைவான அமைதியும் சமாதானமும் உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது. அன்னை மரியாவுக்கு எவ்வளவோ கலக்கமும் சோதனைகளும் வந்த பொழுதும் அவர் கடவுளை முழுமையாக பற்றி பிடித்ததால்,  அவருக்கு நிறைவான அமைதி கிடைத்தது.  இந்த புதிய ஆண்டில் நம்முடைய வாழ்விலும் எதிர்கொள்ள  இருக்கக்கூடிய அமைதியற்ற சூழல் சண்டை சச்சரவுகள் பிரச்சனைகள் போன்றவற்றையெல்லாம் அன்னை மரியாவின் வழித் துணையோடு ஏற்று  இறைவன் பக்கம் திரும்பும் பொழுது நம்முடைய வாழ்வில் அமைதியைப் பெற முடியும்.


எனவே இறைவனின் தாயாகிய நம் அன்னை மரியாவை முழுமையாக பற்றி பிடித்து இறைவார்த்தையின் ஒளியிலும் வழியிலும் நடக்க முயற்சி செய்வோம். அப்பொழுது இந்த புதிய ஆண்டு முழுவதும் கடவுளுடைய அளப்பெரிய பாதுகாப்பையும் அருளையும் அவர் தருகின்ற அமைதியையும் நிறைவாக பெற முடியும். அதற்கு தேவையான அருளை புதிய ஆண்டிலே அன்னை மரியாவின் பரிந்துரையின் வழியாக பெற்றுக் கொள்வோம்.


 இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா!  அன்னை மரியாவின் பரிந்துரையின் வழியாக இப்புதிய ஆண்டிலே ஆசிர்வாதமான வாழ்வை வாழவும் உம்மோடு எந்நாளும் பயணிக்கவும் சாட்சியமுள்ள வாழ்வு வாழவும் அருளைத் தாரும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...