Showing posts with label பொதுக்காலம் 32 வாரம்-B. Show all posts
Showing posts with label பொதுக்காலம் 32 வாரம்-B. Show all posts

Friday, November 11, 2022

கத்தோலிக்க தூதன் மின்னிதழ் -12-11-2022

 

கத்தோலிக்க தூதன் மின்னிதழ் -12-11-2022

 பதிவிறக்கம் PDF கிளிக் செய்யவும்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (12-11-2022)

 பொதுக்காலம் 32ஆம் வாரம் - சனி


முதல் வாசகம்

நீர் நம்பிக்கைக்கு உரியவர்.
திருத்தூதர் யோவான் எழுதிய மூன்றாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5-8
அன்பார்ந்தவரே, நீர் சகோதரர்களுக்கு, அதுவும் அறிமுகமில்லாச் சகோதரர்களுக்குச் செய்தவற்றையெல்லாம் பார்க்கும்போது நீர் நம்பிக்கைக்கு உரியவர் என்பது தெளிவாகிறது. அவர்கள் திருச்சபையின் முன்னிலையில் உமது அன்பைக் குறித்துச் சான்று பகர்ந்தார்கள். எனவே நீர் அவர்களைக் கடவுளுக்கு உகந்த முறையில் வழியனுப்பி வைத்தால் நல்லது. ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவுக்காகப் பயணம் மேற்கொண்டவர்கள். பிற மக்களிடமிருந்து அவர்கள் வழியில் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. இத்தகையோருக்கு உதவுவது நமது கடமை. இவ்வாறு, உண்மைக்காக உழைக்கும் அவர்களின் உடன் உழைப்பாளர் ஆகிறோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 112: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.
1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். - பல்லவி
3 சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.
4 இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். - பல்லவி
5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.
6 எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 தெச 2: 14
அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்


தாம் தேர்ந்துகொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா?
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8
அக்காலத்தில்
மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். “ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.
அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை.
பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்."
பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

மானிட மகன் வரும்போது நம்பிக்கையைக் காண்பாரோ?
நம்பிக்கை அல்லது விசுவாசம் பற்றி நம் திருஅவை நமக்கு போதித்துக்கொண்டே இருக்கிறது. நற்செய்தியில் பல இடங்களில் இயேசு நம்பிக்கை அவசியமெனக் கூறுகிறார். கடுகளவு நம்பிக்கை கூட மலையைப் பெயர்க்கும் என்று நம்பிக்கையின் பலத்தைக் கூறுகிறார். இயேசு செய்த பல குணமளிக்கும் செயல்கள் எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டவையே. "உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று " என்று தன்னுடைய வல்லமையை பாராட்டி பேசாமல் தன்னை அண்டி வந்தவரின் நம்பிக்கையை பெரிதுபடுத்திக் கூறுகிறார் இயேசு. கனானேயப் பெண், நூற்றுவர் தலைவன், பெரும்பாடு பட்ட பெண் என பலர் நம்பிக்கைக்கு உதாரணமாய் விவிலியத்தில் கூறப்பட்டுள்ளனர். அவ்வாறிருக்க இன்று இயேசு தம்முடைய இரண்டாம் வருகையின் போது நம்பிக்கையைக் காண முடியுமா என்ற கேள்வியை நம் முன் வைக்கிறார். இக்கேள்வி சற்று வருத்தத்திற்குரியது. வேதனைக்குரியது என்றே கூறலாம்.

நம்மிலே பலருக்கு நம்பிக்கை என்றால் என்ன? கோவிலுக்கு செல்வதும், தேவைக்காக வேண்டுவதும் மட்டுமா? நாம் கேட்டவுடன் நமது தேவைகள் நிறைவேறிவிட்டால் கடவுள் இருக்கிறார். இல்லாவிட்டால் கடவுளே இல்லை. செபிப்பது வீண் என்று எண்ணுபவர்கள் நம்மிலே பலர் உள்ளனர்.
வளர்ந்து வரும் அறிவியல் உலகம் கடவுளைத் தவிர மற்ற அனைத்தையும் ஞாபகப்படுத்தி மனிதரைக் கவர்வதை நம்மால் மறுக்க முடியாது. இன்றைய இளம் தலைமுறையினர் ஆலயம் என்றால் என்ன? எனக் கேட்கும் அளவுக்கு பிறவற்றில் அமோக வளர்ச்சியும் ஆன்மீகத்தில் வளர்ச்சியின்மையும் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை.

இதன் அடிப்படையில் மானிட மகன் வரும் போது நம்பிக்கையை காண்பது அரிது என்ற பதிலே கிடைக்கிறது. ஆயினும் இந்த நிலையை நம்மால் மாற்ற இயலும் நாம் நம் நம்பிக்கையை ஆழப்படுத்தி எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்ந்தால்.

கடவுளை தினமும் தொழுது தேவைக்காக மட்டும் அவரை நாடாமல் அவரை நம்பி அனைத்தையும் செய்யும் போது நமது நம்பிக்கை ஆழப்படுகிறது. இன்பத்தில் இறைவனுக்கு நன்றி கூறுவது நம்பிக்கை. துன்பத்திலும் நமது தேவைகள் நிறைவேறா காலத்திலும் பொறுமையோடும் தளரா மனத்தோடும் இறைவேண்டல் செய்வதும் நம்பிக்கை. அதையும் தாண்டி நாம் எதிர்பார்த்தது நடக்காத போதும் அவை எதிர்மறையாக நடந்தேறும் போதும் இறை சித்தம் என ஏற்றுக்கொள்வதே சிறந்த நம்பிக்கை. இந்த நம்பிக்கை ஆன்மீக வாழ்வுக்கு மட்டுமல்ல நம் அன்றாட வாழ்க்கையை வெற்றியோடு நகர்த்தவும் நிச்சயம் உதவும்.

எனவே நம்பிக்கையோடு வாழ்ந்து, பிறரையும் நம்பிக்கையோடு வாழ ஊக்கப்படுத்துவோம். மானிட மகன் காலத்தில் நம்பிக்கையை நம்மிலே கண்டு அவர் மகிழ்வுறுமாறு நம்பிக்கை வாழ்வில் வளர இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்
நம்பிக்கையின் நங்கூரமே இறைவா! நாங்கள் மனந்தளரா நம்பிக்கை வாழ்வில் வளர உதவும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்




† இன்றைய புனிதர் †
(நவம்பர் 12)

✠ புனிதர் ஜோசஃபட் குன்ட்சேவிச் ✠
(St. Josaphat Kuntsevych)

போலோஸ்க் பேராயர் மற்றும் மறைச்சாட்சி:
(Polotsk Archbishop and Martyr)

பிறப்பு: கி.பி. 1580
வோலோடிமீர், வோல்ஹைனிய வைவோடேஷிப், போலிஷ்-லித்துவானிய கூட்டமைப்பு
(Volodymyr, Volhynian Voivodeship, Polish–Lithuanian Commonwealth)

இறப்பு: நவம்பர் 12, 1623
வித்டேப்ஸ்க், போலிய-லித்துவானிய கூட்டமைப்பு
(Vitebsk, Vitebsk Voivodeship, Polish-Lithuanian Commonwealth)

ஏற்கும் சமயம்:
உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபை
(Ukrainian Greek Catholic Church)
லத்தீன் திருச்சபை
(Latin Church)
ரோமானியன் கிரேக்க கத்தோலிக்க திருச்சபை
(Romanian Greek Catholic Church)
ருத்தேனிய கத்தோலிக்க திருச்சபை
(Ruthenian Catholic Church)

முக்திபேறு பட்டம்: மே 16, 1643
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

புனிதர் பட்டம்: ஜூன் 29, 1867
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

பாதுகாவல்: உக்ரைன் (Ukraine)

நினைவுத் திருவிழா: நவம்பர் 12

“லோவன் குன்ட்சேவிச்” (Loann Kuntsevych) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் ஜோசஃபட் குன்ட்சேவிச், ஒரு “போலிஷ்-லிதுவேனியன்” (Polish-Lithuanian monk) துறவியும், புனிதர் “மகா பாசில்” (Order of Saint Basil the Great) துறவற சபையைச் சார்ந்தவரும், உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபையின் ஆயராக இருந்து திருச்சபையின் ஒற்றுமைக்காக உழைத்து மறைச்சாட்சியாக உயிர் துறந்தவரும் ஆவார்.

கி.பி. 1623ம் ஆண்டு, நவம்பர் 12ம் நாள் அவர் கிறிஸ்தவமறை விசுவாசத்துக்காக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

இவருக்கு கத்தோலிக்க திருச்சபை, புனிதர் பட்டமும் மறைச்சாட்சி பட்டமும் அளித்துள்ளது.

வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள்:
கி.பி. 1580ம் ஆண்டு, அல்லது கி.பி. 1584ம் ஆண்டு பிறந்த இவருக்கு திருமுழுக்கின்போது அளிக்கப்பட்ட பெயர் "லோவன் குன்ட்சேவிச்" ஆகும். வோல்னியா பகுதி இவர் வாழ்ந்த காலத்தில் போலிஷ் - லித்துவானிய கூட்டமைப்பின்கீழ் இருந்தது. இவர் பிறந்த நகரின் பெயர் “வொலோடிமிர்” (Volodymyr), தற்போதைய “உக்ரைன்” (Ukraine) ஆகும்.

கத்தோலிக்க திருச்சபைக்கும் மரபுவழி திருச்சபைக்கும் இடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்கான ஒரு ஒப்பந்தம் “பிரெஸ்ட் உடன்பாடு” (Union of Brest) என்று அழைக்கப்படுகிறது. இது கி.பி. 1596ம் ஆண்டில் நிகழ்ந்தது. இதன்படி, உக்ரைன் கிரேக்க மரபுவழி சபையானது, கத்தோலிக்க திருச்சபையோடு இணைய முன்வந்தது. மரபுவழி திருச்சபையில் பிறந்த லோவன் குன்ட்சேவிச், முதலில் “வில்னியஸ்” (Vilnius) நகரிலுள்ள புனிதர் “மகா பாசில்” (Order of Saint Basil the Great) துறவற சபையில் சேர்ந்தார். பின்னர் கி.பி. 1609ம் ஆண்டில் கத்தோலிக்க திருச்சபையில் குருத்துவம் பெற்றார்.

திருச்சபையின் ஒற்றுமைக்காக உழைத்தல்:
துறவற சபையில் சேர்ந்தபோது அவர் லோவன் என்ற தம் பெயரை "ஜோசஃபட்" (Josaphat) என்று மாற்றிக்கொண்டார். அவருடைய வாழ்க்கைக் குறிக்கோளே திருச்சபையில் ஒற்றுமையைக் கொணர்வதாக அமைந்தது. பண்டைக்காலத் திருச்சபையின் வழிபாட்டு முறைகள், திருச்சபைத் தந்தையர்களின் படிப்பினைகள் ஆகியவற்றையும் வரலாற்றையும் ஊன்றிப் பயின்ற ஜோசஃபட், ஆண்டவர் இயேசு நிறுவிய திருச்சபையில் பேதுருவின் வாரிசாக வருகின்ற திருத்தந்தைக்கு ஒரு முக்கிய இடம் ஒன்று உண்டு என்றும், அவருடைய தலைமையின் கீழ் திருச்சபை முறையாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

கி.பி. 1617ம் ஆண்டு, ஜோசஃபட்டுக்கு ஆயர் பட்டம் வழங்கப்பட்டது. கி.பி. 1618ம் ஆண்டு, மார்ச் மாதத்தில் அவர் போலோஸ்க் என்னும் மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். ரோமத் திருச்சபையோடு உக்ரேய்ன் மரபுவழி திருச்சபையை ஒன்றுபடுத்தும் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டார். பலர் அவருடைய முயற்சியை எதிர்த்தனர்.

ஆயர் ஜோசஃபட் பல கோவில்களைப் புதுப்பித்தார். குருக்களின் கல்வியறிவை வளர்க்க அவர் ஒரு மறைக்கல்வி நூல் எழுதினார். குருக்களின் வாழ்வுக்கான நெறிகளை வழங்கினார். தமது மறைமாவட்டத்தைச் சார்ந்த நகரங்களில் மறை மன்றங்கள் நிறுவ ஏற்பாடு செய்தார். கீழை மரபுவழி சபைகளுக்கு அளவுக்கு மீறிய சலுகைகள் வழங்கியது அவருக்கு விருப்பமாக இருக்கவில்லை.

அவருடைய ஆயர் பணிக்காலம் முழுவதிலும் அவர் ஒரு துறவிக்கான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தார். பல ஒறுத்தல் முயற்சிகள் செய்து கடவுள் மட்டில் தமது பக்தியையும் மக்கள் மட்டில் தமது கரிசனையையும் வெளிப்படுத்தினார்.

எதிர்ப்பு:
கத்தோலிக்க திருச்சபைக்கும், உக்ரேனிய மரபுவழி திருச்சபைக்கும் இடையே ஒற்றுமை கொணர ஜோசஃபட் உழைத்ததற்கு நல்ல பலன் கிடைத்தது. பலர் ஒற்றுமை வழியை ஆதரித்தனர். ஆனால் சிலர் அவர் மட்டில் காழ்ப்புணர்வு கொள்ளலாயினர். அவர் உக்ரேனிய சபையை முற்றிலுமாக உரோமை மயமாக்க முயற்சி செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டினர். தம் ஆயர் பணியை நிறைவேற்றுவதற்காக அவர் மொகிலேவ் நகருக்குச் சென்றபோது அவருடைய எதிரிகள் அவரை எதிர்த்தனர். அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

ஜோசஃபட்டின் மறைச்சாட்சி மரணம்:
கி.பி. 1623ம் ஆண்டில், ஜோசஃபட்டின் எதிரிகளுள் ஒருவர் ஆயரின் இருப்பிடம் சென்று அவரை கடுமையான வார்த்தைகள் கூறி இகழ்ந்தார். இதனால் அக்குருவை அகற்றி ஓரிடத்தில் வைத்திருந்தனர். அதற்கு எதிர்வினையாக உடனே நகரத்தின் மணி ஒலிக்கப்பட்டது. மக்கள் கும்பல் ஒன்று திரண்டு வந்து, ஆயரின் இருப்பிடத்தை வன்முறையாகத் தாக்கியது. அவரை அரிவாளால் வெட்டினர். துப்பாக்கியால் சுட்டனர். அவருடைய உடல் ஆற்றில் வீசி எறியப்பட்டது. பல நாட்களுக்குப் பின் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டு, ரோமுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஜோசஃபட்டின் பக்தி வாழ்வு:
ஜோசஃபட் சிறுவயதிலிருந்தே மிகுந்த இறைபக்தி கொண்டிருந்தார். அவருக்குப் பிடித்தமான இறைவேண்டல் கீழைத் திருச்சபையின் துறவற இல்லங்களில் வழக்கமாக பயன்பட்ட ஒரு வேண்டல் ஆகும்.

"ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, பாவியாகிய என்மேல் இரக்கமாயிரும்!" என்னும் அந்த இறைவேண்டலை அவர் அடிக்கடி செபித்து வந்தார். அவர் புலால் உணவு அருந்தியதில்லை. விரதம் இருப்பதும் உடலை ஒறுப்பதும் அவரது வழக்கம். வெறும் தரையில் உறங்கினார். ஏழைகளை சந்தித்து அவர்களுக்கு உதவி செய்தார்.

திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX), ஜோசஃபட்டுக்கு கி.பி. 1867ம் ஆண்டு, ஜூன் மாதம், 29ம் நாள் புனிதர் பட்டம் வழங்கினார்.

♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Thursday, November 10, 2022

கத்தோலிக்க தூதன் மின்னிதழ் -11-11-2022

 


கத்தோலிக்க தூதன் மின்னிதழ் -11-11-2022

 பதிவிறக்கம் PDF கிளிக் செய்யவும்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️


Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (11-11-2022)

 

பொதுக்காலம் 32ஆம் வாரம் - வெள்ளி

முதல் வாசகம்



போதனையில் நிலைத்திருப்போரிடமே தந்தையும் மகனும் இருக்கிறார்கள்.

திருத்தூதர் யோவான் எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4-9

தேர்தெடுக்கப்பட்ட பெருமாட்டியே,

தந்தையிடமிருந்து நாம் பெற்ற கட்டளைப்படி, உம்முடைய பிள்ளைகளுள் சிலர் உண்மைக்கேற்ப நடப்பது கண்டு நான் பெருமகிழ்ச்சியுற்றேன். பெருமாட்டியே, நான் இப்பொழுது உம்மிடம் கேட்டுக்கொள்வது இதுவே: ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம். இதை நான் ஒரு புதிய கட்டளையாக எழுதவில்லை. இது தொடக்கத்திலிருந்தே நமக்குள்ள கட்டளை. நாம் அவருடைய கட்டளைப்படி வாழ்வதில் அன்பு அடங்கியுள்ளது.

அந்தக் கட்டளை நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்ததுதான்; அதைக் கடைப்பிடித்து வாழுங்கள். ஏனெனில் ஏமாற்றுவோர் பலர் உலகில் தோன்றியுள்ளனர். இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களே ஏமாற்றுவோர், எதிர்க் கிறிஸ்துகள். உங்கள் உழைப்பின் பயனை இழந்துவிடாமல் முழுக் கைம்மாறு பெற்றுக்கொள்ளக் கவனமாயிருங்கள்.

கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திராமல் வரம்பு மீறிச் செல்வோர் கடவுளைக் கொண்டிருப்பதில்லை. அவர் போதனையில் நிலைத்திருப் போரிடமே தந்தையும் மகனும் இருக்கிறார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 119: 1,2. 10,11. 17,18 (பல்லவி: 1b)

பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.

1
மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
2
அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

10
முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலக விடாதேயும்.
11
உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன். - பல்லவி

17
உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன்.
18
உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 28

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 26-37

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நோவாவின் காலத்தில் நடந்தது போலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும். நோவா பேழைக்குள் சென்ற நாள் வரை எல்லாரும் திருமணம் செய்துகொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது. அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள்; வாங்கினார்கள், விற்றார்கள்; நட்டார்கள், கட்டினார்கள்.

லோத்து சோதோமை விட்டுப் போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன. மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.

அந்நாளில் வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம். லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். தம் உயிரைக் காக்க வழி தேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்.

நான் உங்களுக்குச் சொல்கிறேன்; அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்."

அவர்கள் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, இது எங்கே நிகழும்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


மானிட மகன் காலத்திற்கு நம்மைத் தயாரிப்போமா! 



கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லாரும் எதிர்பார்த்து காத்திருப்பது மானிட மகன் அதாவது மெசியாவின் இரண்டாம் வருகைக்காகவே. ஆனால் நாம் காத்திருப்பது மட்டும் போதாது. மாறாக நாம் அதற்காக நம்மைத் தயாரிப்பது அவசியம். பல நேரங்களில் நம்முடைய உலக வழக்கமான வாழ்க்கையில்  மூழ்கி இருக்கும் நாம் தயாரக இருக்க வேண்டிய நிலையை மறந்துவிடுகிறோம்.


உதாரணமாக நமது நிறுவனங்களை அரசு அலுவலர் ஆய்வு செய்ய வருவதாக வைத்துக்கொள்வோம். குறித்த தேதிக்காக நாம் காத்திருந்தால் மட்டும் போதாது. நாம் எல்லாவற்றையும் துல்லியமாக சரியாக வைத்தால் தான் ஆய்வு வெற்றியடையும். நமக்கு நற்பெயரும் கிடைக்கும். 


இன்றைய நற்செய்தியில் இயேசு மானிட மகனின் காலத்தை எதிர்கொள்ள நம்மை தயாரிக்குமாறு அழைக்கிறார். அதற்கு அவர் நோவாவின் காலத்தை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். நோவா இறைவனின் கட்டளை படி பெருமழையில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள பேழையைத் தயார் செய்தார். ஆனால் பிறரோ தங்கள் வழக்கமான பாவ மோக வாழ்க்கையை உண்பதும் குடிப்பதும் மணமுடிப்பதுமாக வாழ்ந்து கொண்டிருந்தனர். சரியான தயாரிப்பு இன்றி மழைக்கு தங்களைக் காத்துக்கொள்ளாமல் மடிந்தனர்.

இதன் மூலம் இயேசு நமக்குக் கூறுவது நாம் வரும் காலங்களை அதாவது மானிட மகனின் காலத்தை  எதிர்கொள்ள  தயாராக இருக்க வேண்டும் என்பது தான்.ஏற்படும் அறிகுறிகளை கவனித்து உணர வேண்டும் என்பதைத் தான்.


இன்றைய முதல் வாசகத்தில் யோவான் நாம் எப்போதும் தயாராக இருப்பதற்கான வழிமுறையைக் கற்று கொடுக்கிறார். அன்பு கட்டளை புதியது அல்ல அது தொடக்கத்திலிருந்து நமக்கு வழங்கப்பட்டது எனக் கூறுகிறார்.கடவுளின் கட்டளையை கடைபிடிப்பது அன்பு செய்வதற்கு சமம். அதுவே மானிட மகனின் காலத்திற்கு நம்மை தயார் செய்யும் உண்மையான வழி.மானிட மகனின் காலத்திற்கேற்றவர்களாய் 

நம்மையே தயார் செய்வோமா? 


 இறைவேண்டல் 

அன்பு இறைவா!  உம்முடைய மகனின் காலத்திற்கு ஏற்ற மக்களாக நாங்கள் வாழும் வரத்தை எமக்குத் தாரும். ஆமென்.


 

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


† இன்றைய புனிதர் †
(நவம்பர் 11)



✠ டூர்ஸ் நகர புனிதர் மார்ட்டின் ✠
(St. Martin of Tours)

டூர்ஸ் நகர ஆயர் மற்றும் ஒப்புரவாளர்:
(Bishop of Tours and Confessor)

பிறப்பு: கி.பி. 316 அல்லது 336
சவரியா, பன்னோனியா மறைமாவட்டம் (இன்றைய ஹங்கேரி)
(Savaria, Diocese of Pannonia (Modern-day Hungary))

இறப்பு: நவம்பர் 8, 397
காந்த், கால் (இன்றைய ஃபிரான்ஸ்)
(Candes, Gaul (Modern-day France))

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூத்தரன் திருச்சபை
(Lutheranism)

நினைவுத் திருவிழா: நவம்பர் 11

சித்தரிக்கப்படும் வகை:
குதிரைமேல் அமர்ந்துகொண்டு; தம் மேற்போர்வையை இருதுண்டாக்கி; இரவலர் ஒருவரோடு பகிர்தல்; தம் மேற்போர்வையை இரண்டாகத் துண்டித்தல்; வாத்து; தீப்பற்றி எரியும் உலக உருண்டை

பாதுகாவல்:
வறுமை ஒழிப்பு; மது அடிமை ஒழிப்பு; பாரிஜா (Baħrija), மால்ட்டா (Malta); பிச்சைக்காரர்கள்; பேலி மொனாஸ்தீர் (Beli Manastir); போனஸ் ஐரெஸ் (Buenos Aires); பிராத்தீஸ்லாவா உயர்மறைமாவட்டம் (Archdiocese of Bratislava); பர்கன்லாந்து (Burgenland); குதிரைப்படை; சிறுவர் சிறுமியர் இயக்கம்; டீபர்க் (Dieburg); எடிங்கன் குதிரைவீரர் (Edingen Equestrians); ஃபொயானோ தெல்லா சியானா (Foiano della Chiana); ஃபிரான்ஸ் (France); வாத்துகள்; குதிரைகள்; விடுதி காப்பாளர்; மைன்ஸ் மறைமாவட்டம் (Diocese of Mainz); மோன்டேமாக்னோ (Montemagno); ஓல்ப் (Olpe), ஜெர்மனி; ஒரேன்ஸ் (Ourense); பியேத்ரா சான்ந்தா (Pietrasanta); திருத்தந்தையர் சுவிஸ் காவலர் (Pontifical Swiss Guards); திருந்திய மது அடிமைகள்; குதிரைப் பயணிகள்; ரோட்டன்பர்க்-ஸ்டுட்கார்ட் மறைமாவட்டம் (Diocese of Rottenburg-Stuttgart); படைவீரர்கள்; தையல்காரர்கள்; உட்ரெச்ட் நகர் (Utrecht); திராட்சை வளர்ப்போர்; திராட்சை இரசம் செய்வோர்;

டூர்ஸ் நகர புனிதர் மார்ட்டின், இன்றைய ஃபிரான்ஸ் நாட்டின் “டூர்ஸ்” (Tours) நகரத்தின் ஆயராகப் பணியாற்றியவர். டூர்ஸ் நகரில் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலம், “ஸ்பெயின்” (Spain) நாட்டில் உள்ள “கம்போஸ்டேலா சந்தியாகு” (Santiago de Compostela) நகருக்குத் திருப்பயணமாகச் செல்வோர் கட்டாயமாக சந்தித்துச் செல்லும் ஒரு சிறப்பிடமாக விளங்குகிறது.

புகழ்பெற்ற புனிதர் :
புனிதர் டூர்ஸ் நகர மார்ட்டின், மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கும் புனிதர்களுள் ஒருவர். அவரைப் பற்றித் தெரிகின்ற வரலாற்றுச் செய்திகளோடு, புனைவுகளும் பல கலந்துள்ளன.

புனிதர் மார்ட்டின் ஐரோப்பா முழுவதையும் இணைக்கின்ற ஒரு பாலமாக விளங்குகின்றார். அவர் பிறந்தது ஹங்கேரி நாட்டில். அவருடைய இளமைப் பருவம் கழிந்தது இத்தாலி நாட்டின் பவீயா நகரில். வளர்ந்த பின் அவர் பல ஆண்டுகள் ஃபிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தார். இவ்வாறு ஐரோப்பாவின் பல நாடுகளை இணைக்கும் ஒருவராக அவர் துலங்குகின்றார்.

வரலாற்றை எழுதியவர் :
புனித மார்ட்டின் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்த சுல்ப்பீசியுஸ் செவேருஸ் என்பவர் முதன்முதலாக புனித மார்ட்டினின் வாழ்க்கை வரலாற்றைச் சில புனைவுகள் சேர்த்து எழுதினார். மார்ட்டின் போர்வீரர்களின் பாதுகாவலராகக் கருதப்படுகின்றார்.

இளமைப் பருவம் :
மார்ட்டின் இன்றைய ஹங்கேரி நாட்டின் பொன்னோயா மறைமாவட்டத்தில் சவாரியா (இன்று சோம்பாத்தேலி) நகரில் கி.பி. 316ம் ஆண்டு பிறந்தார். மார்ட்டினின் தந்தை ரோமைப் படையின் ஒரு பிரிவான அரசு குதிரை வீரர் அமைப்பில் மூத்த அலுவலராகச் செயலாற்றினார். அலுவல் காரணமாக அவர் வட இத்தாலியாவின் திச்சீனும் என்று அழைக்கப்பட்ட பவீயா நரில் தங்கியிருந்தார். அங்குதான் மார்ட்டின் தம் இளமைப் பருவத்தைக் கழித்தார்.

மார்ட்டினுக்குப் பத்து வயது ஆனபோது, அவர் தம் பெற்றோரின் விருப்பத்தை எதிர்த்து கிறிஸ்தவ சமயத்தைத் தழுவும்பொருட்டு திருமுழுக்குப் பெறுவதற்கான ஆயத்தநிலைக் குழுவில் சேர்ந்தார். அக்காலத்தில் ரோமப் பேரரசில் கிறிஸ்தவம் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட மதமாக மாறியிருந்தாலும் (கி.பி. 313) பெருமளவில் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. ரோமப் பேரரசின் கீழைப் பகுதியில்தான் பலர் நகரங்களில் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியிருந்தார்கள். அந்நகரங்களிலிருந்து வணிகப் பாதைகள் வழியாக, கிறிஸ்தவர்களான யூதர் மற்றும் கிரேக்கர்களால் கிறிஸ்தவம் மேலைப் பகுதிக்கும் கொண்டுவரப்பட்டது.

சமுதாயத்தில் மேல்மட்டத்தில் இருந்தோரிடம் கிறிஸ்தவம் அதிகமாகப் பரவியிருக்கவில்லை. பேரரசின் இராணுவத்தினர் நடுவே "மித்ராஸ்" (Mythras) என்னும் கடவுள் வழிபாடு பரவலாயிருந்திருக்க வேண்டும். ரோமப் பேரரசன் காண்ஸ்டண்டைன் கிறிஸ்தவத்தைத் தழுவியதும், பல பெரிய கிறிஸ்தவக் கோவில்கள் கட்டியதும் கிறிஸ்தவம் பரவ தூண்டுதலாக இருந்தாலும், கிறிஸ்தவம் ஒரு சிறுபான்மை மதமாகவே இருந்தது.

இராணுவத்தில் பதவி வகித்தவர் ஒருவரின் மகன் என்ற முறையில் மார்ட்டினுக்கு 15 வயது நிரம்பியதும் அவரும் குதிரைப்படையில் வீரனாகச் சேரவேண்டிய கட்டாயம் இருந்தது. கி.பி. 334ம் ஆண்டு அளவில் மார்ட்டின் இன்றைய ஃபிரான்ஸ் நாட்டின் அமியேன் என்னும் நகரில் (அக்காலத்தில், கால் நாட்டு சாமரோப்ரீவா நகர்) குதிரைப் போர்வீரனாகப் பாளையத்தில் தங்கியிருந்தார்.

மார்ட்டின் தம் மேலாடையை இரவலருக்குக் கொடுத்த நிகழ்ச்சி:
மார்ட்டின் ரோமப் பேரரசில் போர்வீரனாகச் சேர்ந்து, ஃபிரான்ஸின் அமியேன் நகரில் தங்கியிருந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி அவருடைய வாழ்க்கையை மாற்றி அமைக்க தூண்டுதலாயிற்று.

ஒருநாள் மார்ட்டின் குதிரைமேல் ஏறி, அமியேன் நகரின் வாயிலை நேக்கி வந்துகொண்டிருந்தார். நகர வாயிலை நெருங்கிய வேளையில், அரைகுறையாக ஆடை உடுத்திய ஓர் இரவலர் ஆங்கு குளிரில் நின்று கொண்டிருக்கக் கண்டார். உடனேயே, மார்ட்டின் தாம் போர்த்தியிருந்த மேலாடையை இரண்டாக வெட்டிக் கிழித்தார். ஒரு பாதியை அந்த இரவலரிடம் கொடுத்து போர்த்திக்கொள்ளச் சொன்னார். மறுபாதியைத் தம் தோளைச் சுற்றிப் போட்டுக் கொண்டார்.

அன்றிரவு மார்ட்டின் ஒரு கனவு கண்டார். அக்கனவில் இயேசுவின் உருவம் தெரிந்தது. மார்ட்டின் இரவலருக்குக் கொடுத்த மேலாடைத் துண்டை இயேசு தம் மீது போர்த்தியிருந்தார். அப்போது இயேசு தம்மைச் சூழ்ந்து நின்ற வானதூதர்களை நோக்கி, "இதோ இங்கே நிற்பவர்தான் மார்ட்டின். இவர் இன்னும் திருமுழுக்குப் பெறவில்லை. ஆனால் நான் போர்த்திக்கொள்வதற்குத் தன் ஆடையை வெட்டி எனக்குத் தந்தவர் இவரே" என்று கூறினார். இக்காட்சியைக் கண்ட மார்ட்டின் பெரு வியப்புற்றார்.

இந்நிகழ்ச்சி வேறொரு வடிவத்திலும் சொல்லப்படுகிறது. அதாவது, மார்ட்டின் துயில் கலைந்து எழுந்ததும் தன் மேலாடையைப் பார்த்தார். அது ஒரு பாதித் துண்டாக இல்லாமல் அதிசயமான விதத்தில் முழு உடையாக மாறிவிட்டிருந்தது.

"கிறிஸ்துவின் போர்வீரன்":
இயேசுவைக் கனவில் கண்ட மார்ட்டின் உள்ளத்தில் திடம் கொண்டவரானார். தான் எப்படியாவது உடனடியாகக் கிறிஸ்தவத்தைத் தழுவ வேண்டும் என்று முடிவுசெய்தார். தமது 18ம் வயதில் மார்ட்டின் கிறிஸ்தவ திருச்சபையில் திருமுழுக்குப் பெற்றார்.

ரோமப் பேரரசின் இராணுவத் துறையில் போர்வீரனாக மார்ட்டின் மேலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அந்நாட்களில் அவர் நேரடியாக சண்டையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மாறாக, ரோமப் பேரரசனுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வீரர் குழுவின் இருந்திருக்கக் கூடும்.

ரோமப் படைகள் கால் நாட்டவரை எதிர்த்துப் போரிடவேண்டிய சூழ்நிலை எழுந்தது. இன்றைய ஜெர்மனியில் உள்ள வோர்ம்ஸ் (Worms) என்னும் நகரில் சண்டை நிகழப் போனது.

அப்பின்னணியில் கி.பி. 336ம் ஆண்டு மார்ட்டின் தாம் சண்டையில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்தார். அப்போது அவர் கூறியது: "நான் ரோமப் பேரரசனின் போர்வீரன் அல்ல, மாறாக நான் கிறிஸ்துவின் போர்வீரன். எனவே, நான் போரில் கலந்துகொள்ளப் போவதில்லை!"

மார்ட்டின் சண்டையில் பங்கேற்பதில்லை என்று கூறியது அவருடைய கோழைத்தனத்தைத்தான் காட்டுகிறது என்று ஒருசிலர் குற்றம் சாட்டவே, அவரைச் சிறையில் அடைத்தார்கள். அவர்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த மார்ட்டின், தாம் ஆயுதம் தாங்கிப் போரிட்டு யாரையும் காயப்படுத்தவோ கொல்லவோ போவதில்லை என்றும், யாதொரு ஆயுதமும் தாங்காமல் படையின் முன்னணியில் செல்லத் தயார் என்றும் சவால் விட்டார். அச்சவாலை மார்ட்டினின் படைத் தலைவர்கள் ஏற்க முன்வந்த சமயத்தில், எதிர்த்துவந்த படை சண்டைக்கான திட்டத்தைக் கைவிட்டு, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. இவ்வாறு, மார்ட்டின் ஆயுதமின்றி எதிரிகளின் படையைச் சந்திக்கப் போவதாகக் கூறியது நிறைவேறாமல் போயிற்று. ஆனால் அதிகாரிகள் மார்ட்டினுக்குப் படைப் பிரிவிலிருந்து பணிவிடுதலை கொடுத்தார்கள்.

கிறிஸ்துவின் சீடர்:
மார்ட்டின் தம் வாழ்க்கை எவ்வாறு அமையவேண்டும் என்று தீர்மானித்ததும் ஃபிரான்ஸ் நாட்டு 'தூர்' (Tours) என்னும் நகருக்குச் சென்றார். ரோமப் பேரரசில் அந்நகரத்தின் பெயர் "சேசரோடுனும்" (Caesarodunum) என்பதாகும். அங்கு புவாத்தியே நகர ஹிலரி என்னும் ஆயரின் சீடராக மார்ட்டின் சேர்ந்தார். ஹிலரி கிறிஸ்தவ சமய உண்மைகளை விளக்கி உரைப்பதில் தலைசிறந்தவராக விளங்கினார். ஒரே கடவுள் மூன்று பேராக இருக்கின்றார் என்னும் கிறிஸ்தவ உண்மையை மறுத்த ஆரியப் பிரிவினரை (Arianism) அவர் எதிர்த்தார். ஆரியுசு என்பவரின் கொள்கையைப் பின்பற்றிய ஆரியப் பிரிவினர் குறிப்பாக அரசவையில் செல்வாக்குக் கொண்டிருந்தனர்.

எனவே, புவாத்தியே நகரிலிருந்து ஹிலரி நாடுகடத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து, மார்ட்டின் இத்தாலி திரும்பினார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய, சம காலத்தவரான சுல்ப்பீசியுஸ் செவேருஸ் என்பவரின் கூற்றுப்படி, மார்ட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதிக் கொள்ளைக்காரன் ஒருவனை மனந்திருப்பினார்.

இல்லீரியா பகுதியிலிருந்து மார்ட்டின் மிலான் நகரம் வந்தபோது, அங்கு ஆட்சிசெய்த ஆரியப் பிரிவு ஆயர் அவுக்சேன்சியுஸ் மார்ட்டினை நகரிலிருந்து வெளியேற்றினார். எனவே, மார்ட்டின் அந்நகரை விட்டு அல்பேங்கா (Albenga) தீவுக்குப் போய் அங்கே தனிமையில் துறவற வாழ்க்கை வாழ்ந்தார்.

மார்ட்டின் தூர் நகரத்தின் ஆயராதல்:
கி.பி. 361ல் ஆயர் ஹிலரி மீண்டும் தம் பணித்தளமான புவாத்தியே நகருக்குத் திரும்பினார். மார்ட்டின் உடனேயே ஹிலரியிடம் சென்று, பணிபுரியலானார். புவாத்தியே நகருக்கு அருகில் துறவற இல்லம் ஒன்றைத் தொடங்கினார். அது பெனடிக்ட் சபை இல்லமாக (Ligugé Abbey) வளர்ந்தது. அதுவே ஃபிரான்ஸ் (கால்) நாட்டில் நிறுவப்பட்ட முதல் துறவியர் இல்லம் ஆகும். அந்த இல்லத்திலிருந்து அதை அடுத்த நாட்டுப் பகுதிகளில் கிறிஸ்தவம் பரவியது.

மார்ட்டின் மேற்கு ஃபிரான்ஸ் பகுதிகளில் பயணமாகச் சென்று கிறிஸ்தவத்தைப் பரப்பினார். அவர் சென்ற இடங்களில் அவரைப் பற்றிய கதைகள் இன்றுவரை மக்கள் நடுவே கூறப்பட்டுவருகின்றன.

தூர் நகரத்தில் மார்ட்டின் ஆற்றிய பணியைக் கண்டு மகிழ்ந்த மக்கள் அவர் தங்கள் ஆயராகப் பதவி ஏற்க வேண்டும் என்று விரும்பினார்கள். இவ்வாறு மார்ட்டின் கி.பி. 371ம் ஆண்டில் தூர் நகரத்தின் ஆயராகப் பொறுப்பேற்றார். அப்பொறுப்பில் அவர் கிறிஸ்தவம் அல்லாத பேகனிய சமயம் சார்ந்த கோவில்களைத் தகர்த்தார். பேகனிய பழக்கவழக்கங்களை ஒழித்தார்.

கி.பி. 372ல் மார்ட்டின் தூர் நகரத்துக்கு அருகே ஒரு துறவற இல்லத்தைத் தொடங்கினார். அந்த இல்லத்திற்குச் சென்று மார்ட்டின் வாழ்ந்தார். அந்த மடம் லுவார் நதியின் மறுகரையில் தூர் நகருக்கு எதிர்ப்புறம் இருந்தது. அந்த இல்லத்திற்குப் பொறுப்பாக ஒரு மடாதிபதியும் நியமிக்கப்பட்டார். இவ்வாறு அம்மடம் ஓரளவு தன்னாட்சி கொண்டதாக விளங்கியது.

தூர் நகரத்தின் ஆயராகப் பணியாற்றிய காலத்தில் மார்ட்டின் தம் மறைமாவட்டத்தில் பங்குகளை ஏற்படுத்தினார்.

மார்ட்டினின் இரக்க குணம்:
மார்ட்டின் வாழ்ந்த காலத்தில், “ஸ்பெயின்” (Spain) மற்றும் “கால்” (Gaul) பகுதிகளில் “பிரிசில்லியன்” (Priscillian) என்பவரது கொள்கைகளை “சரகோசாவின் முதலாம் சங்கம்” (First Council of Saragossa) தடை செய்திருந்தது. ஆயினும், பிரிசிலியன் “அவிலா” (Bishop of Avila) நகரின் ஆயராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்த “இத்தாசியஸ்” (Ithacius of Ossonoba) என்பவர், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை “கிரேஷியன்” (Emperor Gratian) என்னும் ரோமப் பேரரசனின் முன் கொணர்ந்தனர். பேரரசன் கிரேஷியன், பிரிசில்லியன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிரான எழுத்துபூர்வமான உத்தரவை பிறப்பித்தார். “மிலன் பேராயர் அம்புரோஸ்” (Ambrose of Milan” மற்றும் திருத்தந்தை “முதலாம் டமாஸ்கஸ்” (Pope Damasus I) ஆகியோரின் ஆதரவைப் பெற இயலாத பிரிசில்லியன், “மேற்கத்திய ரோமப் பேரரசரான” (Western Roman Emperor) “மேக்னஸ் மேக்சிமஸ்” (Magnus Maximus) என்பவரிடம் மேல்முறையீட்டுக்கு சென்றார். அதனை விசாரித்த பேரரசர் “மேக்னஸ் மேக்சிமஸ்”, பேரரசன் “கிரேஷியனின்” (Emperor Gratian) அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

மார்ட்டின் பிரிசில்லியனின் கொள்கைகளை எதிர்த்தவர்தான் என்றாலும், “டிரையர்” (Trier) நகரில் அமைந்திருந்த பேரரசன் அவைக்கு விரைந்து சென்று, பிரிசில்லியனையும் அவர்தம் சீடர்களையும் அரசவை தண்டிப்பதோ கொலைசெய்வதோ முறையல்ல என்று பிரிசில்லியனுக்கு ஆதரவாகப் பரிந்துபேசினார். அரசனும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தாலும், மார்ட்டின் நகரை விட்டுச் சென்ற உடனேயே (கி.பி. 385) பிரிசில்லியனும் சீடர்களும் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

இதைக் கேள்விப்பட்ட மார்ட்டின் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்தார். மரண தண்டனை அளிக்கப்படுவதற்குத் தூண்டுதலாக இருந்த இத்தாசியஸ் என்னும் ஸ்பேனிஷ் ஆயரோடு தொடர்புகொள்ள அவர் மறுத்தார். இறுதியில் மன்னனின் வற்புறுத்தலுக்குப் பணிந்து அந்த ஆயரோடு தொடர்புகொண்டார்.

இறப்பு:
மார்ட்டின் மத்திய ஃபிரான்ஸின் “கால்” (Gaul) பிராந்தியமான “காண்டேஸ்-செயின்ட்-மார்ட்டின்) (Candes-Saint-Martin) என்னும் இடத்தில் கி.பி. 397ம் ஆண்டு இறந்தார்.

நன்றி : திரு.புஷ்பராஜா



♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...