Showing posts with label திருவருகைக்காலம் II. Show all posts
Showing posts with label திருவருகைக்காலம் II. Show all posts

Friday, December 9, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (10-12-2022)

திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - சனி



முதல் வாசகம்

எலியா மீண்டும் வருவார்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-4, 9-11

இறைவாக்கினர் எலியா நெருப்புபோல் எழுந்தார்; தீவட்டிபோல் அவருடைய சொல் பற்றியெரிந்தது. மக்கள் மீது பஞ்சம் வரச் செய்தார்; தம் பற்றார்வத்தால் அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார். ஆண்டவருடைய சொல்லால் வானம் பொழிவதை நிறுத்தினார்; மும்முறை நெருப்பு விழச் செய்தார். எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்?

தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் நீர் எடுத்துக்கொள்ளப்பட்டீர். ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும் தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் குறித்த காலங்களில் நீர் கடிந்து கொள்வீர் என்று எழுதப்பட்டுள்ளது. உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோர். நாமும் வாழ்வது உறுதி.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 80: 1,2b. 14-15. 17-18 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளே, உமது முக ஒளியைக் காட்டி எம்மை மீட்டருளும்.

1
இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!
2b
உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! - பல்லவி

14
படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!
15
உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! - பல்லவி

17
உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக!
18
இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 3: 4, 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

எலியா ஏற்கெனவே வந்துவிட்டார்; அவரை மக்கள் கண்டுணரவில்லை.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 10-13

இயேசுவும் சீடர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தபோது சீடர்கள் அவரிடம், “எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?” என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, “எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிடமகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்” என்றார். திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்துகொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நம் வாழ்வுப் பாதையை சீர்ப்படுத்துவோமா?


இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு மீண்டுமாய் இறைவாக்கினர் எலியாவையும் அவருடைய மறுபிறப்பை போல கருதப்படுகிற திருமுழுக்கு யோவானையும் பற்றிக் கூறுகின்றன. முதல் வாசகமானது எலியா இறைவாக்கினரின் சிறப்பை எடுத்துக்கூறுவதாய் உள்ளது. அவர் நெருப்புக்கு ஒப்பிடப்படுகிறார். அவருடைய சொற்கள் தீவட்டிக்கு ஒப்பிடப்படுகிறது. நெருப்பு சுட்டெரிப்பதைப் போல ஆண்டவருடைய வார்த்தைகளை வல்லமையுடன் போதித்து போலி தெய்வங்களை வணங்கும் மக்களின் மனத்தைச் சுட்டெரித்து அவர்களை மனந்திருப்பச் செய்ய பெரிதும் உழைத்த இறைவாக்கினராய்த் திகழ்ந்தவர் எலியா. இறைவனிடம் கொண்டிருந்த பற்றுறுதியால் இயற்கையைக் கூட கட்டுப்படுத்தும் அளவுக்கு ஆற்றல் கொண்டிருந்தார் அவர். உண்மையான கடவுளிடமிருந்து விலகிச் சென்ற மக்களை மனம் மாறச்செய்து அவர்களின் வாழ்க்கைப் பாதையை செம்மையாக்கியவர். மனம் மாறிய தன் மகனை நோக்கி தந்தையின் மனம் திரும்பி வருவதைப் போல, கடவுள் அருளிய நாவன்மையால் பாவத்தில் வீழ்ந்து கிடந்த தன் மக்களை கடிந்து அவர்களை மனம்திருந்தச் செய்து கடவுளின் இரக்கத்தை மக்கள் பால் கொணர உழைத்தவர் தான் எலியா என அவருடைய புகழ் கூறப்பட்டுள்ளது.


திருவருகைக் காலத்தின் இரண்டாம் வாரத்தில் திருமுழுக்கு யோவானுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த திருமுழுக்கு யோவான் எலியாவின் அவதாரமாக கருதப்படுகிறார். மெசியாவாகிய இயேசுவின்  வருகைக்காக மக்களின் மனத்தை, வாழ்வுப்பாதையை சீர்படுத்தும் உன்னதமான பணியை ஏற்று அதைச் சிறப்பாகச் செய்தவர்தான் திருமுழுக்கு யோவான். எலியாவைப் போன்ற வலிமையான பேச்சாற்றலால் மெத்தனப்போக்கில் வாழ்ந்த மக்களிடம் மனமாற்றத்தைத்  தூண்டி பாவ மன்னிப்புக்கான திருமுழுக்கைப் பெறத் தூண்டியவர் அவர். ஆனால் அவர் எலியாவின் மறுபிறப்பு என்பதை மக்கள் அறிந்து கொள்ளவில்லை. ஏன் மெசியா பெத்லகேமில் பிறப்பார், தாவீதின் வழிமரபில் பிறப்பார் என்று கணிக்க முடிந்த மறைநூல் வல்லுநர்களால் கூட இவர்தம் எலியா என்பதை உணர முடியவில்லை.


இவ்விருவரின் வாழ்க்கையும் நமக்குக் கூறும் செய்தி என்ன என்பதை இன்னும் சற்று ஆழமாகச் சிந்திப்போம். இருதினங்களுக்கு முன்புதான் இவர்களைப் போல துணிச்சலோடு தவறுகளைச் சுட்டிக்காட்டும் குணத்தையும் கடவுள் முன் தாழ்மையும் கொண்டு விண்ணரசில் பெரியவர்களாக வேண்டும் எனச் சிந்தித்தோம். இன்னும் ஆழமாகச் சென்று அவர்கள் இறைவனுக்காக பாதையைச் சீர்படுத்தியதைப் போல நாமும் அவருடைய வருகைக்காக நம் பாதையைச் செம்மையாக்குவதோடல்லாமல் நம்முடைய முன்மாதிரியான வாழ்க்கையால் மற்றவரின் வாழ்வுப்பாதையையும் சீர்படுத்த முயல வேண்டும். கடவுளின் பிள்ளைகளாக இயேசுவின் சீடர்களாக நமக்கு அளிக்கப்பட்டுள்ள மிகவும் சவாலான பணி இது.


இப்பணியைச் செய்ய முதலில் நாம் கடவுளோடு ஒன்றித்திருக்க வேண்டும். நம்முடைய வார்த்தைகள் கடவுளின் வார்த்தைகளாக மாற வேண்டும். பிறருக்கு ஆறுதல் அளிப்பதாக, நல்வழி காட்டுவதாக தேவைப்பட்டால்  நெருப்பு அனைத்தையும் புனிதமாக்குவதைப்போல புனிதமாக்கும் வார்த்தைகளாக மாற வேண்டும். வெறும் வார்த்தை ஜாலமாக இல்லாமல் கடவுளின் கனிவையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அவை இருக்க வேண்டும். அது கடவுளிடம் இறைவேண்டலால் ஒன்றித்திருந்தால் மட்டுமே இயலும்.


இரண்டாவதாக நம் வாழ்வுப் பாதை சீர்மிகுந்ததாக இருக்க வேண்டும். கடவுளுக்கு முன்னுரிமை அளித்து, உலக மாயைகளான பணம்,பதவி,சுயநலம்,சிற்றின்ப ஆசைகள், நேரத்தை வீணாக்கும் பொழுது போக்குகள் இவற்றை எல்லாம் விலக்கி எடுத்துக்காட்டான வாழ்வு வாழ வேண்டும். உண்மை, நீதியை நம் சொல்லும் செயலும் எடுத்தியம்ப வேண்டும்.  நம் வாழ்வு கடவுன் பால் மற்றவரையும் ஈர்க்க வேண்டும்.


இவ்வகையான நம் வாழ்வுக்கு இவ்வுலகம் அங்கீகாரம் அளிக்காது. திருமுழுக்கு யோவானை உணராத இவ்வுலகம் , இயேசுவை ஏற்றுக்கொள்ளாத இவ்வுலகம், இன்னும் பல தலைவர்களையும் நல்லவர்களையும் ஏற்றுக்கொள்ளாத இவ்வுலகம் நிச்சயம் நம்மையும் ஏற்றுக்கொள்ளாது. அவற்றைப் பொருட்படுத்தாது வாழப் பழகிக்கொள்ள வேண்டும். நம்முடைய இக்கிறிஸ்தவ வாழ்வு ஒரு எதிர்நீச்சல் தான். இதை உணர்த்தியவர்கள் தான் எலியாவும் திருமுழுக்கு யோவானும். எனவே இறைமகனின் வருகைக்காக காத்திருக்கும் நாம் நம் வாழ்வுப்பாதையை சீர்ப்படுத்தும் பணியில் முழுமுயற்சியுடன் ஈடுபடுவோம். கடவுள் நம் வாழ்வில் நிச்சயம் பயணிப்பார்.


 இறைவேண்டல்

நீதியின் ஆண்டவரே!உம்மை நம்பிய அடியவர்களுக்கு வல்லமையைத் தருபவரே! நாங்களும் உம்மேல் பற்றுறுதி கொண்டு வாழ்ந்து, தேவையற்ற அனைத்தையும் வெறுத்து எம் வாழ்வுப் பாதையைச் சீரமைக்க வரம் தாரும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Thursday, December 8, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (09-12-2022)

 

திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - வெள்ளி



முதல் வாசகம்

என் கட்டளைகளுக்குச் செவிசாய்த்திரு.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48: 17-19

இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப் போலும், உன் வெற்றி கடல் அலை போலும், பாய்ந்து வந்திருக்கும். உன் வழிமரபினர் மணல் அளவாயும், உன் வழித்தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்; அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்; அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப்பட்டிராது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: யோவா 8: 12)

பல்லவி: ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.

1
நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2
ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். - பல்லவி

3
அவர் நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். - பல்லவி

4
பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.
6
நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் வரவிருக்கிறார். அவரை எதிர்கொள்ளுங்கள்; ஏனெனில், அமைதியின் அரசர் அவரே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மக்கள் திருமுழுக்கு யோவானுக்கும் செவிசாய்க்கவில்லை, மானிடமகனுக்கும் செவிசாய்க்கவில்லை.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 16-19

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: “இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, ‘நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை’ என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ ‘அவன் பேய்பிடித்தவன்’ என்கிறார்கள். மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ‘இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


விமர்சனங்களை விலக்குவோமா?


ஒரு பங்கிலே அருட்பணியாளர் ஒருவர் பணிசெய்து வந்தார். இளம் வயதினராய் இருந்தார். துடிப்புடன் செயல்பட்டார். பல புதிய வழிமுறைகளைக் கொண்டுவந்தார். அவ்வூரிலே இருந்த ஒருசில பழமை விரும்பும்  மனிதர்களுக்கு இவருடைய அணுகுமுறைகள் பிடிக்கவில்லை. எப்பொழுதும் குறைகூறிக்கொண்டே இருந்தனர். மற்றவர்களையும் அப்பணியாளருக்கு எதிராகத் தூண்டிவிட்டனர். இதனால் ஒருகட்டத்தில் மனம் உடைந்து போன அவர் இனிமேல் இம்மக்களுக்கு எதுவும் செய்யக்கூடாது எனத் தீர்மானித்தார். ஒருநாள் கடவுளின் சந்நிதியில் அமர்ந்து தியானித்துக் கொண்டிருக்கையில் அவருக்கு மனத்தெளிவு கிடைத்தது. "விமர்சனங்களுக்கு மதிப்பளித்திருந்தால் இயேசு வல்ல செயல்களைச் செய்திருக்க முடியாது. விமர்சனங்களைத் தூக்கிப் பிடித்திருந்தால் பல தலைவர்கள் தலைவர்களாய் மாறயிருக்க இயலாது. நானும் யாருடைய விமர்சனங்களையும் பொருட்படுத்தப் போவதில்லை. நற்காரியங்களைத் தொடர்ந்து செய்வேன்." அதன்பிறகு அவர் யாருடைய தேவையற்ற வார்த்தைகளுக்கும் மதிப்பளிக்கவில்லை. நாளடைவில் அவ்வாறு பேசியவர்களின் சப்தமும் அடங்கியது.


இன்றைய நற்செய்தி வாசகத்தில் இப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களை இயேசு சாடுவதைக் காண்கிறோம். இயேசுவின் இவ்வார்த்தைகள் நமக்கும் பொருந்துகிறதா எனச் சோதித்தறிவது நமது கடமை. நாம் பெரும்பாலும் பிறருடைய விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம். அவை புகழ்ச்சிக்குரியவையாகவும் நேர்மறையாகவும் இருக்கவும் வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பு. இவ்வெதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும் போது நமது மனம் சோர்ந்து விடுகிறது. நாமும் முடங்கிப் போகிறோம். இது ஒருபுறமிருக்க நாமும் பலருக்கு எதிர்மறையான விமர்சனங்களைக் கொடுத்திருக்கிறோம். நம்முடைய விமர்சனங்களால் பிறரின் நற்செயல்களைத் தடுக்கிறோம்.பிறருடைய விமர்சனங்களைப் பெரிதாக மதிப்பதால் நாம் நற்செயல்கள் செய்வதிலிருந்து தடுக்கப்படுகிறோம்.


விமர்சனம் கொடுப்பதை யாராலும் நிறுத்த முடியாது. அது அவர்களுடைய சுதந்திரம். ஆனால் அந்த விமர்சனங்களால் பாதிக்கப்படுவதும், அதை சட்டை செய்யாமல் இருப்பதும் நம் கையில்தான் இருக்கிறது. ஒருவர் புகழ்வதால் நாம் ஏற்றம் பெறுவதுமில்லை. ஒருவர் இகழ்வதால் நாம் தாழ்ந்து போவதுமில்லை. இவ்வுண்மையை உணர்ந்தால் நாம் மனரீதியாக சமநிலையைக் கொண்டவர்களாய் வாழ்வில் முன்னேற முடியும். அதற்கு சிறந்த முன்மாதிரி நம் இயேசு. வல்ல செயல்களைக் கண்டு மக்கள் புகழ்ந்து ஓசான்னா பாடிய போதும், இவன் பெருந்தீனிக்காரன், கடவுளைப் பழிக்கிறான் எனக் கூறப்பட்ட போதும் சமநிலையைக் காத்தார். தொடர்ந்து நல்லதை மட்டுமே துணிச்சலாய் செய்தார். 


இன்றைய முதல்வாசகத்தில் நமக்கு பயனுள்ளவற்றைக் கற்பித்து நல்வழி நடத்துவதாக கடவுள் வாக்களிக்கிறார். தேவையற்ற நம் வளர்ச்சிக்கு உதவாத விமர்சனங்களை உதறிவிட்டு கடவுளின் வார்த்தையை இறைவேண்டல், விவிலியம் மற்றும் அனுபவம் மிகுந்த நம் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட மூத்தோர்களின் அறிவுரைகளின் வழியாகக் கேட்டு அதன்படி வாழும் பொழுது எத்தகைய எதிர்ப்பும் நற்செயல்கள் புரிவதிலிருந்து நம்மைத் தடுக்க முடியாது. நம்மை வளர்ச்சியின் பாதையிலிருந்து யாராலும் தடுக்க இயலாது. இத்தகையோராய் வாழவே நம் இறைவன் விரும்புகிறார். அதற்கான வரத்தை வேண்டுவோம்.


 இறைவேண்டல்

எம்மை உம் வார்த்தைகளால் நல்வழியில் நடத்தும் இறைவா பிறருடைய வெற்று வார்த்தைகளுக்கு மதிப்பளித்து எம் வளர்ச்சியை நாங்களே முடக்கும் மனநிலையை எம்மிடமிருந்து அகற்றும். விமர்சனங்களால் நாங்களும் தாழாமல்,பிறரையும் தாழ்த்தாமல் தொடர்ந்து உம் வழியில் பயணிக்கும் அருள்தாரும் ஆமென்.



அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Wednesday, December 7, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (08-12-2022)

 

தூய கன்னி மரியாவின் அமலோற்பவம்

பெருவிழா


முதல் வாசகம்

உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 20

ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார். “உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன்.

“நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார். அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான்.

ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், “நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்.

மனிதன் தன் மனைவிக்கு ‘ஏவாள்’ என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3ab. 3c-4 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

2
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3ab
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி

3c
உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி

இரண்டாம் வாசகம்

உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-6, 11-12

சகோதரர் சகோதரிகளே,

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார். இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப்பேற்றுக்கு உரியவரானோம். இவ்வாறு கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்து பாட வேண்டுமென அவர் விரும்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 1: 28

அல்லேலூயா, அல்லேலூயா! அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்; பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.

அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார். வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார்.

பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



மாசற்ற அன்னை நம் மாசற்ற வாழ்வுக்கு உறுதுணை! 


ஒரு ஏழை மாணவி பள்ளிக்கு தினமும் அசுத்தமான நிலையில்  தான்  வருவார். கறைபடிந்த பற்கள்,கிழிந்த தூய்மையற்ற ஆடை, அருகில் செல்லும் போதே ஒருவகையான துர்நாற்றம் என பார்ப்பதற்கு மிகப் பரிதாபமாக இருப்பார்.பலர் அம்மாணவியைக் காணும் போது பயங்கரமாக கோபப்படுவதும் முகம் சுழிப்பதுமாக இருப்பார்கள். இதைக்கண்ட அம்மாணவியின் ஆசிரியை அவர் வீட்டிற்குச் சென்று அம்மாணவியின் தாயை சந்திக்க வேண்டுமென விரும்பினார். வீட்டிற்கு சென்றபோது தான் தெரிந்தது அம்மாணவி தாயற்றவர் என்று. தாய் இல்லாததால் அக்குழந்தை பராமரிக்கப்படவில்லை என உணர்ந்த ஆசிரியை ஒரு தாயாக மாறி அம்மாணவியைச் சுத்தம் செய்து, சுயமாக வேலைகள் செய்வும் கற்றுக்கொடுத்தார்.

அன்னையில்லா வீடு வீடல்ல.ஒரு வீடு சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது என்றால் அது கண்டிப்பாக தாயின் செயல்தான். தாய், தானும் சுத்தமாய் இருப்பாள். தன் குடும்பத்தையும் அவ்வாறே பேணுவாள். சராசரி பெண்களே இவ்வாறிருக்க, இவ்வுலகை பாவமாசிலிருந்து சுத்தீகரிக்க வந்த இறைமகனின் தாய் எவ்வளவு மாசுமறுவற்றவராய் இருந்திருப்பார்?


இன்று நாம் அன்னை மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இவ்விழா தொடக்கத்தில் பல்வேறு பெயர்களில் கொண்டாப்பட்டு வந்தாலும் 1854 ஆம் ஆண்டு டிசம்பர் 8 நாள்தான் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் ‘மரியாவின் அமலோற்பவப் பெருவிழா’ என்ற பெயரில் கொண்டாட அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். மேலும் அவர் தான் எழுதிய Ineffabilis Deus என்ற மடலில் “மனுக்குல மீட்பரான இயேசு கிறிஸ்துவின் பயன்களை முன்னிட்டு கன்னிமரி கருவான நொடிப்பொழுதிலேயே எல்லாம் வல்ல இறைவனது அருளாலும் சலுகையாலும் ஜென்மப் பாவமாசு அணுகாதவளாய்த் தோன்றினார்” என்று குறிப்பிட்டு அமலோற்பவியான கன்னி மரியா என்ற விசுவாசப் பிரகடனத்தை அறிவித்தார்.

திருத்தந்தையின் அறிவிப்பை உறுதிசெய்யும் வகையில் 1858 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகரில் பெர்னதத் என்ற பதினான்கு வயது சிறுமிக்குக் காட்சி கொடுத்த மரியா ‘நாமே அமல அற்பவம்’ என்று அறிவித்தார். அன்றிலிருந்து இன்றுவரை மரியா அமலோற்பவி என்பதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 8 நாள் மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடி வருகின்றோம். இந்த நேரத்தில் இவ்விழா உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம.

"தாய் வயிற்றில் உருவாகும் முன்னே உன்னை தேர்ந்துகொண்டேன்" என்ற கடவுளின் வார்த்தைகளை இறைவாக்கினர் எரேமியாவின் அழைத்தலில் நாம் காண்கிறோம். பல சமயங்களில் இவ்வார்த்தைகளை நம் வாழ்வோடு ஒப்பிட்டு அழைத்தலின் மேன்மையை தியானிப்பதும் உண்டு. இவ்வாறு கடவுள் தமக்கென தேர்ந்தெடுத்த ஒவ்வொருவரையும் தகுப்படுத்துகிறார்.தூய்மைப்படுத்துகிறர். இறைவாக்கினர் எசாயா இறைவார்த்தையை உரைக்குமாறு நெருப்பு கொண்டு அவர் நாவைத் தூய்மையாக்கினார் என விவிலியத்தில் நாம் வாசிக்கிறோம். அவ்வகையில் தன்னுடைய மகனை இவ்வுலகிற்கு கொணரத் தேர்ந்த்தெடுத்த அன்னை மரியாவை பாவத்திலிருந்து முழுதும் விலக்கிக் காத்தார் இறைவன். அத்தூய்மையின் அடையாளமே"அருள்நிறைந்தவரே வாழ்க"என்று வானதூதர் கூறிய வாழ்த்தொலி. இவ்வாழ்த்து அன்னையின் மாசற்ற தன்மையைச் சுட்டிக்காட்டுவதாய் அமைகிறது. அன்னை மரியாவும் தன்னுடைய மாசற்ற தன்மையை இறுதிவரைக் காத்துக்கொண்டார். "இதோ ஆண்டவருடைய அடிமை" என்று இறை உளத்திற்கு பணிந்த அவர்  தான் உருவான நாளிலிருந்து எவ்வித பாவசோதனையாலும் தூண்டப்படாதவராய் இருந்தார். 

திருமுழுக்கினால் பாவக்கறைகள் நீக்கப்பட்ட கடவுளின் குழந்தைகளான நாம் நம் அகத்தூய்மையை எவ்வாறு காத்துக்கொள்கிறோம் என சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம்

பல வேளைகளில் நாம் உலக மாயைகளில் சிக்கி, சுயநலம்,அன்பின்மை, பிறரை ஏற்றுக்கொள்ளாமை போன்ற பண்புகளால் நம்மையே மாசுபடுத்துகிறோம். 

மாசற்றோராகவும் தூயோராகவும் நாம் வாழவேண்டும் என்பது தந்தையின் விருப்பம் என இரண்டாம் வாசகத்தில் வாசிக்கிறோம். எனவே மாசற்ற அன்னை இறுதிவரை மாசற்றவளாய் இருந்து இறைமகனைத் தாங்கியது போல நாமும் நம்மைத் தூய்மைப் படுத்தி நம் இதயத்தால் இயேசுவைக் கருத்தரிக்கவும் அவரை நம்முடன் வாழும் அனைவருக்கும் வழங்கவும் நம்மை தயார் செய்வோம்.

இறைவேண்டலாலும்,

இறை திருஉளத்திற்குப் பணிந்து நற்காரியங்களில் ஈடுபடுவதாலும், உலக நாட்டங்களைத் தவிர்ப்பதாலும் நம் தூய்மையைக் காத்துக்கொள்ள முயல்வோம்.தவறி வீழ்ந்தாலும் மனம்மாறி அருட்சாதனங்களின் உதவியோடு மீண்டும் எழுவோம். அதற்காக இறைவேண்டல் செய்வோம்.


 இறைவேண்டல் 

தூயவரான தந்தையே! உம் மகனை கருத்தரிக்க ஏற்றவராய் அன்னை மரியாவின் மாசற்ற தன்மையைக் காத்தீர். எங்களையும் தூய்மையாக்கி அன்னை மரியாவைப் போல இயேசுவை எங்கள் இதயத்தில் சுமக்க அருள் தாரும்.

அமல உற்பவ அன்னையே மாசற்ற தாயே நாங்களும் உம்மைப் போல மாசற்றவர்களாய் வாழத் துணை செய்யும்.

ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Tuesday, December 6, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (07-12-2022)

 

திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - புதன்


முதல் வாசகம்

எல்லாம் வல்ல ஆண்டவர் “சோர்வுற்றவருக்கு” வலிமை அளிக்கின்றார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 25-31

‘யாருக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? எனக்கு நிகரானவர் யார்?’ என்கிறார் தூயவர். உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள்; அவற்றைப் படைத்தவர் யார்? வான் படையை எண்ணிக்கை வாரியாய் வெளிக்கொணர்ந்து ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ? அவர் ஆற்றல்மிக்கவராயும் வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால் அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை.

“என் வழி ஆண்டவருக்கு மறைவாய் உள்ளது; என் நீதி என் கடவுளுக்குப் புலப்படவில்லை” என்று யாக்கோபே, நீ சொல்வது ஏன்? இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்? உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா? ஆண்டவரே என்றும் உள்ள கடவுள்; அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்; அவர் சோர்ந்து போகார்; களைப்படையார்; அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது. அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார். இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 8,10 (பல்லவி: 1a)

பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

1
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! - பல்லவி

3
அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4
அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். - பல்லவி

8
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
10
அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, ஆண்டவர் தம் மக்களை மீட்க வருகிறார். அவரை எதிர்கொள்ள ஆயத்தமாயிருப்பவர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

அக்காலத்தில்

இயேசு கூறியது: “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது.” என்றார்

ஆண்டவரின் அருள்வாக்கு.


புதிய ஆற்றலைப் பெற வேண்டுமா?  ஆண்டவரை நம்புவோம். 


தினமும் தொலைக்காட்சியில் ஆற்றல் பெறுவதற்கான பல விளம்பரங்களை நாம் காண்கிறோம். Horlics,  Boost, Glucon -D என பலவிதமான சத்துப்பான விளம்பரங்கள் என்ன?  பற்கள் வலிமையாய் இருந்தால் உடலும் ஆற்றல் வாய்ந்ததாய் இருக்கும் என்ற வாசகங்களுடன்  பற்பசை விளம்பரங்கள் எத்தனை? தலைமுடி வலிமையாக இருக்க ஷாம்பு விளம்பரங்கள் எத்தனை எத்தனை? இன்னும் நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். நாமும் இவை அனைத்தையும் நம்பி வாங்கி உபயோகிக்கிறோம். ஆனால் விளம்பரங்களில் சொல்லப்பட்டது போன்ற ஆற்றலைப் பெறுகிறோமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.


நம் உடலுக்குத் தேவையான புதிய ஆற்றல்களைப் பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் நாம், நமது  ஆன்மா புதிய ஆற்றல் பெற முயற்சி எடுக்கிறோமா? 

இன்றைய வாசகங்கள் நம்மை இதைக்குறித்து சிந்திக்க அழைக்கின்றன.


முதல் வாசகத்தில் ஆண்டவரை நம்புவோர் புதிய ஆற்றலைப் பெறுவர் எனக் கூறுகிறது. அந்த ஆண்டவர் எப்படிப்பட்டவர் என்பதை இருவாசகங்களும் விளக்குகின்றன. முதல் வாசகமானது ஆண்டவரை வலிமை மிக்கவராக, ஆற்றல் வாய்ந்தவராக, அனைத்தையும் படைத்தவராக, உலகையே இயக்குபவராக, களைப்படையாதவராக, யாரோடும் ஒப்பிடப்பட முடியாத அளவுக்கு தன்னிகரற்றவராக, நீதியுள்ளவராக விளங்குகிறார் என்பதை எடுத்தியம்புகிறது. 


அதே போல நற்செய்தி வாசகம் மனுவுருவான ஆண்டவர் இயேசு  கனிவும் மனத்தாழ்மையும் கொண்டு சுமைகளால் சோர்ந்தவரை இளைப்பாற்றுபவராக இருக்கிறார் எனச் சுட்டிக்காட்டுகிறது.


இத்தகைய ஆண்டவரை நம்பி அவரை நம் உள்ளத்தில் ஏற்றால் நாம் புதிய ஆற்றல் பெறாமல் போகமுடியுமா? அழிந்து போகும் பொருட்கள் மேலும் மனிதர்கள் மேலும் கொண்டுள்ள நம்பிக்கை நம்மை ஆற்றல் இழக்கச் செய்யும். ஆனால் ஆற்றல் மிக்க ஆண்டவரோ நாம் ஆற்றலுடன் வாழ வழிவகுப்பார்.


நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் இவ்வுலகம் சார்ந்த பொருட்கள் மீதும் அழியக்கூடியவை மீதும்  நம்முடைய ஆற்றல் இருக்கின்றது என நம்பாமல்,  உடலுக்கும் ஆன்மாவிற்கும் வலுவை வழங்கும் ஆண்டவரின் வார்த்தையில் ஆற்றல் உள்ளது என முழுமையாக நம்புவோம் . திருவருகைக் காலத்தில் ஆண்டவர் இயேசுவின்  இரண்டாம் வருகைக்காகவும் பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுவதற்காகவும் ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கின்ற வேளையில்,  கடவுள் தரும் ஆற்றலை முழுமையாக நம்பி அனைத்து சவால்களையும் முறியடித்து ஆண்டவர் இயேசுவில் அகமகிழ முயற்சி செய்வோம். இறைவன் காட்டும் வழியில் ஆண்டவரின் பதம் நடந்து ஆண்டவர் வருகைக்காக எந்நாளும் நம்மை முழுமையாக ஆயத்தப்படுத்துவோம். அப்பொழுது நாம் கடவுளின் பார்வையில் ஆசீர் பெற்ற மக்களாக  மாறுகிறோம்.


 இறைவேண்டல்

ஆற்றலும் வல்லமையும் நிறைந்த இறைவா! எமது ஆற்றல் உம்மிடமே உள்ளது  என்பதை முழுமையாக உணர்ந்து,  சாட்சியமுள்ள வாழ்க்கை வாழ்ந்திட இந்த திருவருகை தயாரிப்பு காலத்திலே எங்களை வழிநடத்துவீராக. ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Monday, December 5, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (06-12-2022)

 

திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - செவ்வாய்



முதல் வாசகம்

இறைவன் தம் மக்களைத் தேற்றுகிறார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-11

“ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.

குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.

“உரக்கக் கூறு” என்றது ஒரு குரல்; “எதை நான் உரக்கக் கூற வேண்டும்?” என்றேன். மானிடர் அனைவரும் புல்லே ஆவர்; அவர்களின் மேன்மை வயல்வெளிப் பூவே! ஆண்டவரின் ஆவி இறங்கி வரவே, புல் உலர்ந்து போம்; பூ வதங்கி விழும்; உண்மையில் மானிடர் புல்லே ஆவர்! புல் உலர்ந்து போம்; பூ வதங்கி விழும்; நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.

சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! ‘இதோ உன் கடவுள்’ என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்றுசேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 96: 1-2. 3,10. 11-12. 13 (பல்லவி: எசா 40: 10a)

பல்லவி: இதோ நம் கடவுள் ஆற்றலுடன் வருகின்றார்.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2
ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். - பல்லவி

3
பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.
10
வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ‘ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.’ - பல்லவி

11
விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12
வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். - பல்லவி

13
ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; இதோ அவர் நம்மை மீட்க வரவிருக்கிறார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

சிறியோருள் ஒருவர்கூட நெறிதவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 12-14

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு, வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா? அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


தேற்றிடும் கடவுளிடம் திரும்பிச் செல்வோம்! 


ஆறுதலும் தேறுதலும் ஒரு மனிதனுக்கு வாழ்வில் மிக மிக அவசியமானது. துன்ப துயர நேரத்தில் நம்மைத் தேற்றிட நம் மனப்புண்களை ஆற்றிட யாராவது முன்வந்தால் அவர்களை நம் வாழ்நாளின் இறுதி வரை மிகப்பெரிய இடத்தில் வைத்திருப்போம் அல்லவா. மனிதர்களின் ஆற்றுப்படுத்துதலுக்கு இத்தகைய பலனும் மதிப்பும் உண்டெனில் இறைவன் நம்மைத் தேற்றும் போது நாம் அடையும் அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் எல்லையே இல்லை எனலாம். இதை நாம் உணர்கிறோமா?  அல்லது அவரிடமிருந்து விலகிச் செல்கிறோமா?

இன்றைய இரு வாசகங்களும் நமக்கு நம்மைத் தேற்றிடும் இறைவனின் பாசத்தையும் அவர் நம்மைத் தேடித் தேடி அன்பு செய்கிறார் என்ற உறுதியையும் தருவனவாக இருக்கின்றன. முதல் வாசகத்தில்   பாவங்களை எல்லாம் மன்னித்து தன் மக்களுக்கு ஆறுதல் வழங்கும் இறைவனை நாம் காண்கிறோம். "இதோ உன் கடவுள் " என பிறர் முன் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய சொல்கிறார் இறைவன். இதன் பொருள் என்ன? எப்போதும் எல்லா காலத்திலும் தன் மக்களைத் தேற்றிடும் தெய்வமாக அவர் உடனிருக்கிறார் என்பதே அதன் பொருள்.

இன்றைய நற்செய்தியிலும் தன்னிடமுள்ள நூறு ஆடுகளில்  வழி தவறிச் சென்ற ஆட்டினை தேடிச் சென்று மீட்டு மகிழ்ந்து களிகூறும் நல்ல ஆயனுக்கு விண்ணகத்தந்தை ஒப்பிடப்படுகிறார். தன் மக்களுள் ஒருவரும் நெறி தவறக் கூடாது என்று என்னும் நம் தந்தை அவ்வாறு நெறிதவறினாலும் கூட அவராகவே அன்போடு தேடி வந்து மன்னித்து தேற்றுகிறார் . என்னே நம் தந்தையின் அன்பு!

நாம் கொண்டாடப் போகின்ற கிறிஸ்து பிறப்பு விழாவின் உண்மைப் பொருளை இப்பகுதி ஆழமாகக் கூறுகிறது. ஆம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையிலிருந்து நெறிதவறி தொலைந்து போன ஆட்டைப் போன்று வாழ்ந்த இஸ்ரயேல் மக்களைத் தேடி வந்த விண்ணக இறைவனின் மண்ணக அவதார விழா இது. இத்தகைய கடவுளின் தேறுதலையும் ஆறுதலையும் இன்னும் அதிகமாக உணர நாம் செய்ய வேண்டியது என்ன ? . அவரிடம் திரும்பிச் செல்வது தானே. நாம் திரும்பிச் செல்ல நினைத்த மறுகணத்தில் அவர் நம்மை கண்டடைந்து விடுவாரன்றோ! இதை உணர்வோம். அவரிடமே திரும்புவோம்.


 இறைவேண்டல் 

தேற்றிடும் தெய்வமே!எம்மைத் தேடிவந்து மீட்டருளும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...