Tuesday, December 6, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (07-12-2022)

 

திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - புதன்


முதல் வாசகம்

எல்லாம் வல்ல ஆண்டவர் “சோர்வுற்றவருக்கு” வலிமை அளிக்கின்றார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 25-31

‘யாருக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? எனக்கு நிகரானவர் யார்?’ என்கிறார் தூயவர். உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள்; அவற்றைப் படைத்தவர் யார்? வான் படையை எண்ணிக்கை வாரியாய் வெளிக்கொணர்ந்து ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ? அவர் ஆற்றல்மிக்கவராயும் வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால் அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை.

“என் வழி ஆண்டவருக்கு மறைவாய் உள்ளது; என் நீதி என் கடவுளுக்குப் புலப்படவில்லை” என்று யாக்கோபே, நீ சொல்வது ஏன்? இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்? உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா? ஆண்டவரே என்றும் உள்ள கடவுள்; அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்; அவர் சோர்ந்து போகார்; களைப்படையார்; அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது. அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார். இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 8,10 (பல்லவி: 1a)

பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

1
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! - பல்லவி

3
அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4
அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். - பல்லவி

8
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
10
அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, ஆண்டவர் தம் மக்களை மீட்க வருகிறார். அவரை எதிர்கொள்ள ஆயத்தமாயிருப்பவர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

அக்காலத்தில்

இயேசு கூறியது: “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது.” என்றார்

ஆண்டவரின் அருள்வாக்கு.


புதிய ஆற்றலைப் பெற வேண்டுமா?  ஆண்டவரை நம்புவோம். 


தினமும் தொலைக்காட்சியில் ஆற்றல் பெறுவதற்கான பல விளம்பரங்களை நாம் காண்கிறோம். Horlics,  Boost, Glucon -D என பலவிதமான சத்துப்பான விளம்பரங்கள் என்ன?  பற்கள் வலிமையாய் இருந்தால் உடலும் ஆற்றல் வாய்ந்ததாய் இருக்கும் என்ற வாசகங்களுடன்  பற்பசை விளம்பரங்கள் எத்தனை? தலைமுடி வலிமையாக இருக்க ஷாம்பு விளம்பரங்கள் எத்தனை எத்தனை? இன்னும் நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். நாமும் இவை அனைத்தையும் நம்பி வாங்கி உபயோகிக்கிறோம். ஆனால் விளம்பரங்களில் சொல்லப்பட்டது போன்ற ஆற்றலைப் பெறுகிறோமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.


நம் உடலுக்குத் தேவையான புதிய ஆற்றல்களைப் பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் நாம், நமது  ஆன்மா புதிய ஆற்றல் பெற முயற்சி எடுக்கிறோமா? 

இன்றைய வாசகங்கள் நம்மை இதைக்குறித்து சிந்திக்க அழைக்கின்றன.


முதல் வாசகத்தில் ஆண்டவரை நம்புவோர் புதிய ஆற்றலைப் பெறுவர் எனக் கூறுகிறது. அந்த ஆண்டவர் எப்படிப்பட்டவர் என்பதை இருவாசகங்களும் விளக்குகின்றன. முதல் வாசகமானது ஆண்டவரை வலிமை மிக்கவராக, ஆற்றல் வாய்ந்தவராக, அனைத்தையும் படைத்தவராக, உலகையே இயக்குபவராக, களைப்படையாதவராக, யாரோடும் ஒப்பிடப்பட முடியாத அளவுக்கு தன்னிகரற்றவராக, நீதியுள்ளவராக விளங்குகிறார் என்பதை எடுத்தியம்புகிறது. 


அதே போல நற்செய்தி வாசகம் மனுவுருவான ஆண்டவர் இயேசு  கனிவும் மனத்தாழ்மையும் கொண்டு சுமைகளால் சோர்ந்தவரை இளைப்பாற்றுபவராக இருக்கிறார் எனச் சுட்டிக்காட்டுகிறது.


இத்தகைய ஆண்டவரை நம்பி அவரை நம் உள்ளத்தில் ஏற்றால் நாம் புதிய ஆற்றல் பெறாமல் போகமுடியுமா? அழிந்து போகும் பொருட்கள் மேலும் மனிதர்கள் மேலும் கொண்டுள்ள நம்பிக்கை நம்மை ஆற்றல் இழக்கச் செய்யும். ஆனால் ஆற்றல் மிக்க ஆண்டவரோ நாம் ஆற்றலுடன் வாழ வழிவகுப்பார்.


நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் இவ்வுலகம் சார்ந்த பொருட்கள் மீதும் அழியக்கூடியவை மீதும்  நம்முடைய ஆற்றல் இருக்கின்றது என நம்பாமல்,  உடலுக்கும் ஆன்மாவிற்கும் வலுவை வழங்கும் ஆண்டவரின் வார்த்தையில் ஆற்றல் உள்ளது என முழுமையாக நம்புவோம் . திருவருகைக் காலத்தில் ஆண்டவர் இயேசுவின்  இரண்டாம் வருகைக்காகவும் பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுவதற்காகவும் ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கின்ற வேளையில்,  கடவுள் தரும் ஆற்றலை முழுமையாக நம்பி அனைத்து சவால்களையும் முறியடித்து ஆண்டவர் இயேசுவில் அகமகிழ முயற்சி செய்வோம். இறைவன் காட்டும் வழியில் ஆண்டவரின் பதம் நடந்து ஆண்டவர் வருகைக்காக எந்நாளும் நம்மை முழுமையாக ஆயத்தப்படுத்துவோம். அப்பொழுது நாம் கடவுளின் பார்வையில் ஆசீர் பெற்ற மக்களாக  மாறுகிறோம்.


 இறைவேண்டல்

ஆற்றலும் வல்லமையும் நிறைந்த இறைவா! எமது ஆற்றல் உம்மிடமே உள்ளது  என்பதை முழுமையாக உணர்ந்து,  சாட்சியமுள்ள வாழ்க்கை வாழ்ந்திட இந்த திருவருகை தயாரிப்பு காலத்திலே எங்களை வழிநடத்துவீராக. ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...