Monday, September 5, 2022

Liturgy of the Hours in Tamil - தமிழ் திருப்புகழ் மாலை

 

பொதுக்காலம் 23ஆம் வாரம் - செவ்வாய்





காலைப் புகழ்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

எழுந்தது ஞாயிறு, விடிந்தது காலை,
மிளிர்ந்தன பொருட்கள் பலநிறம் பெற்று,
ஒளிபெற்றது, உலகம் முழுதும்
விளம்பிட விழைகிறது உமதிருப் புகழை.

வல்ல தந்தையின் ஞானம் நீரே,
எல்லாம் தோன்ற வழியான வார்த்தையே
ஒளியும் எழிலும் ஒழுங்கும் பெற்றெம்
உளத்தை உம்பால் உயர்த்திடு வீரே.

ஒளியின் மக்களாம் எமக்கருள் புரிவீர்,
தெளிவுடன் நடப்போம் மிகஆர்வ முடனே;
சொல்லும் செயலும் தந்தையின் அன்பைக்
காட்டிடும் வகையில் வாழ்ந்திடு வோமே.

நாவினால் என்றும் நலமே நவில்வோம்
ஆவியில் உண்மையின் இனிமையை உணர்வோம்;
மூவொரு இறைவா மூவுல கெங்கும்,
ஓயாது ஓங்குக உம்புகழ் என்றும். ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: ஆண்டவரே, உமது நாட்டின்மீது அருள் கூர்ந்தீர்; உம் மக்களின் குற்றத்தை மன்னித்தீர்.

நமது மீட்பு அண்மையில் உள்ளது

திபா 85

இவ்வுலகிற்கு வந்த நம் மீட்பர் வழியாக இறைவன் இவ்வுலகை ஆசீர்வதித்துள்ளார்’. (ஒரிஜன்).

ஆண்டவரே, உமது நாட்டின்மீது அருள்கூர்ந்தீர்;
முன்னைய நன்னிலைக்கு யாக்கோபினரைக்
கொணர்ந்தீர்.
உம் மக்களின் குற்றத்தை மன்னித்தீர்;
அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மறைத்துவிட்டீர்.
உம் சினம் முழுவதையும் அடக்கிக்கொண்டீர்.
கடும் சீற்றம் கொள்வதை விலக்கிக்கொண்டீர்.

எம் மீட்பராம் கடவுளே!
எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்;
எங்கள்மீது உமக்குள்ள சினத்தை அகற்றியருளும்.
என்றென்றுமா எங்கள்மேல் நீர் சினங் கொள்வீர்?

தலைமுறைதோறுமா உமது கோபம் நீடிக்கும்?
உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு,
எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ?
ஆண்டவரே, உமது பேரன்பை
எங்களுக்குக் காட்டியருளும்;
உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்;
தம் மக்களுக்கு, தம் புனிதருக்கு நிறைவாழ்வை
அவர் வாக்களிக்கின்றார்;
அவர்களோ மடமைக்குத் திரும்பிச் செல்லல் ஆகாது.
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு
மெய்யாகவே அண்மையில் உள்ளது;
அதனால் நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும்.

பேரன்பும் வாக்குப்பிறழாமையும்
ஒன்றையொன்று சந்திக்கும்;
நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்;
விண்ணினின்று நீதி தாழப்பார்க்கும்.

நல்லதையே ஆண்டவர் அருள்வார்;
நல்விளைவை நம் நிலம் நல்கும்.
நீதி அவர்முன் செல்லும்;
அவர் தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, உமது நாட்டின்மீது அருள் கூர்ந்தீர்; உம் மக்களின் குற்றத்தை மன்னித்தீர்.


மு. மொ. 2: என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகிறது. விடியலில் உமக்காக விழித்திருக்கிறது.

பகைவர்மேல் வெற்றிப் பாடல்

சிறுபாடல்
எசா 26: 1-4, 7-9, 12

அதைச் சுற்றிப் பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன’. (திவெ 21:12)

நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு;
நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்;
வாயில்களைத் திறந்துவிடுங்கள்;
அவர்மீது நம்பிக்கைக் கொண்ட நேர்மையான
மக்களினம் உள்ளே வரட்டும்.

அவர்கள் மன உறுதி கொண்டவர்கள்;
உம்மீது நம்பிக்கை உடையவர்கள்;
அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர்.
ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்;
ஏனெனில், ஆண்டவர். என் ஆண்டவர்
என்றுமுள கற்பாறை!

நீதிமான்களின் நெறிகள் நோரியவை;
நீர் நேர்மையாளரின் வழியைச் செம்மையாக்குகின்றீர்.
ஆண்டவரே, உமது நீதியின் நெறியில் நடந்து,
உமக்காகக் காத்திருக்கிறோம்.
உமது திருப்பெயரும் உமது நினைவும்
எங்களுக்கு இன்பமாய் உள்ளன.

என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகின்றது;
எனக்குள்ளிருக்கும் ஆவி
ஏக்கத்தோடு உம்மைத் தேடுகின்றது;
உம் நீதித்தீர்ப்புகள் நிலவுலகில் நிலைத்திருக்கையில்
வாழ்வோர் நேர்மையைக் கற்றுக் கொள்வர்.

ஆண்டவரே, நிறைவாழ்வை
நீர் எங்களுக்கு உரியதாக்குவர்!
ஏனெனில், எங்கள் செயல்கள் அனைத்தையும்
எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகிறது. விடியலில் உமக்காக விழித்திருக்கிறது.


மு. மொ. 3: ஆண்டவரே, உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக.

மக்களினங்கள் ஆண்டவரைப் போற்றுவர்

திபா 67

“ஆகையால் கடவுள் இந்த மீட்பைப் பிற இனத்தார்க்கு அளித்துள்ளார். அவர்கள் செவிசாய்ப்பர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும்". (திப 28:28)

இறைவா! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!
அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்;
பிற இனத்தார் அனைவரும் நீர் தரும் மீட்பை
உணர்ந்துகொள்வர்.

கடவுளே! மக்களினங்கள் உம்மைப் புகழ்வனவாக!
மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன்
பாடிடுவாராக!
ஏனெனில் நீர் மக்களினங்களை
நேர்மையுடன் ஆள்கின்றீர்;
உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர்.

கடவுளே! மக்களினங்கள் உம்மைப் புகழ்வனவாக!
மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!

நானிலம் தன் பலனை ஈந்தது;
கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.
கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக!
உலகின் கடையெல்லைவரை வாழ்வோர்
அவருக்கு அஞ்சுவாராக!
கடவுளே! மக்களினங்கள் உம்மைப் புகழ்வனவாக!
மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக.


அருள்வாக்கு

1 யோவா 4: 14-15

தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கின்றோம். இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார்.


சிறு மறுமொழி

முதல்:என் ஆண்டவரே எனக்குத் துணை: என் நம்பிக்கையை அவரில் நிலைநிறுத்துவேன்.
எல்:என் ஆண்டவரே எனக்குத் துணை: என் நம்பிக்கையை அவரில் நிலைநிறுத்துவேன்.
முதல்:அவரே எனக்குப் புகலிடம்; என்னை விடுவிப்பவர் அவரே.
எல்:என் ஆண்டவரே எனக்குத் துணை: என் நம்பிக்கையை அவரில் நிலைநிறுத்துவேன்.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:என் ஆண்டவரே எனக்குத் துணை: என் நம்பிக்கையை அவரில் நிலைநிறுத்துவேன்.

செக்கரியாவின் பாடல்

மு. மொ. : தம் தூய இறைவாக்கினர்களின் வாயினால் அவர் மொழிந்தபடியே, வல்லமையுடைய மீட்பர் ஒருவரை ஆண்டவர் நமக்காகத் தோன்றச் செய்தார்.

லூக் 1: 68-79

மெசியாவையும் அவருக்கு முன் அனுப்பப்பட்டவரையும் பற்றியது.

இஸ்ரயேலின் கடவுளாகிய
ஆண்டவரைப் போற்றுவோம்
எனெனில் அவர்தம் மக்களைத்
தேடிவந்து விடுவித்தருளினார்.

தும் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர்
நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.

அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு
அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து
விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய்,
உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.

இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு
ஒளிதரவும்,
நம்முடைய கால்களை
அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : தம் தூய இறைவாக்கினர்களின் வாயினால் அவர் மொழிந்தபடியே, வல்லமையுடைய மீட்பர் ஒருவரை ஆண்டவர் நமக்காகத் தோன்றச் செய்தார்.


மன்றாட்டுகள்

தம் இரத்தத்தை நமக்காகச் சிந்தி, கிறிஸ்து உலகின் எல்லா திசைகளிலிருந்தும் தமக்கென ஒரு புதிய மக்கள் இனத்தை ஒன்றுசோத்தார்; நாம் அவரிடம் வேண்டுவோம்.

எல்: கிறிஸ்துவே, உம் மக்களை நினைவுகூர்ந்தருளும்.

கிறிஸ்துவே, நீரே எம் அரசர், நீரே எம் மீட்பர் — நாங்கள் உமதுஆற்றலையும் அன்பையும் அறிந்து கொள்ளத் துணைபுரியும்.

கிறிஸ்துவே, நீரே எம் நம்பிக்கை, எம் துணிவு — இந்நாள் முழுவதும் எங்களுக்கு ஆதரவாயிரும்.

கிறிஸ்துவே நீரே எம் புகலிடம், எம் வலிமை – எமது வலுவின்மையை எதிர்த்து எங்களோடு போராடும்.

கிறிஸ்துவே, நீரே எமது மகிழ்ச்சி, எம் ஆறுதல் — ஏழை எளியவரோடும் தனிமையில் தவிப்பாரோடும் தங்கியருளும்.


ஆண்டவரின் இறைவேண்டல்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.


இறுதி மன்றாட்டு

எல்லாம் வல்ல கடவுளே! அனைத்து நலன்களும் அழகும் கொண்ட இவ்வுலகம் உமக்கே சொந்தம். இந்நாளை உமது திருப்பெயரில் மகிழ்வுடன் தொடங்கவும் எங்கள் இறையன்பு, பிறரன்புப் பணிகளால் நிறைவு செய்யவும் அருள்புரியும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்


நண்பகல் இறைவேண்டல்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

வல்ல அரசரே, உண்மைக் கடவுளே,
எல்லாக் காலச் சுழற்சியை அமைத்தீர்,
தண்ணொளியைக் காலைப் பொழுதிற்(கு) தந்தீர்,
நண்பகல் வேளையில் வெப்பம் தந்தீர்.

பற்றி எரியும் பகைமையை அணைப்பீர்,
குற்றங் குறைகளின் வெப்பம் தணிப்பீர்,
உமது காவலை உடலுக்கு அளிப்பீர்,
எமக்கு உள்ள அமைதியை அருள்வீர்.

தந்தையே, அன்பு மிகுந்த இறைவனே,
தந்தைக்கு இணையான ஒரேதிருப் புதல்வரே,
ஆறுதல் அளிக்கும் தூயநல் ஆவியாரே,
ஆண்டாண்டு காலம் புகழ்பெற்(று) ஆள்வீர்,ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.

திபா 119: 97-104

ஆண்டவரே! நான் உமது திருச்சட்டத்தை
எத்துணை அன்பு செய்கின்றேன்!
நாள் முழுவதும் அதைப்பற்றியே சிந்திக்கின்றேன்.
என் எதிரிகளைவிட என்னை
ஞானியாக்கியது உமது கட்டளை;
ஏனெனில் என்றென்றும் அது என்னோடு உள்ளது.

எனக்கு கற்பிப்போர் யாவரினும்
நான் அறிவாளியாயிருக்கின்றேன்;
ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளையே
நான் சிந்திக்கின்றேன்;
முதியோர்களை விட நான் நுண்ணறிவு பெற்றுள்ளேன்.
ஏனெனில் உம் நியமங்களைக் கடைப்பிடிக்கின்றேன்.

உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு
தீயவழி எதிலும் நான் கால் வைக்காது
பார்த்துக் கொள்கின்றேன்.
உம் நீதி நெறிகளைவிட்டு நான் விலகவில்லை;
ஏனெனில் நீர்தாமே எனக்குக் கற்றுத்தந்தீர்.

உம் சொற்கள் என் நாவுக்கு
எத்துணை இனிமையானவை!
அவை என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை.
உம் நியமங்களால் நான் நுண்ணறிவு பெறுகின்றேன்.
ஆகவே பொய்வழி அனைத்தையும்
நான் வெறுக்கின்றேன்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.


மு. மொ. 2: பண்டைக் காலத்திலேயே நீர் உமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட சபையை நினைந்தருளும்.

அழிவுற்ற ஆலயத்தைக் குறித்துப் புலம்பல்

திபா 74: 1-12

ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். (மத் 10:28).

இறைவா! ஏன் நீர் எங்களை
என்றென்றைக்குமாக ஒதுக்கிவிட்டீர்?
உமது மேய்ச்சல் நில ஆடுகள்மேல்
உமது சினம் ஏன் புகைந்தெழுகின்றது?

பண்டைக்காலத்திலேயே நீர் உமக்குச்
சொந்தமாக்கிக் கொண்ட சபையை நினைந்தருளும்;
நீர் மீட்டு உமக்கு உரிமையாக்கிக்;கொண்ட
இனத்தாரை மறந்துவிடாதேயும்
நீர் கோவில் கொண்டிருந்த
சீயோன் மலையையும் நினைவு கூர்ந்தருளும்.

நெடுநாளாய்ப் பாழடைந்து கிடக்கும்
பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவீராக!
எதிரிகள் உமது தூயகத்தில் யாவற்றையும்
பாழ்படுத்திவிட்டார்கள்.
உம்முடைய எதிரிகள் உமது திருத்தலத்தில்
வெற்றி முழக்கம் செய்கின்றார்கள்;
வெற்றிக்கு அடையாளமாகத் தங்கள் கொடிகளை
அங்கே நாட்டுகின்றார்கள்.

மேற்கு வாயிலில் அமைக்கப்பட்ட மரப்பின்னல்
வேலைப்பாடுகளைக் கோடரிகளால்
அவர்கள் சிதைத்தார்கள்.
அங்கிருந்த மரவேலைப்பாடுகள் அனைத்தையும்
சிற்றுளியும் சுத்தியலும் கொண்டு தகர்த்தெறிந்தார்கள்;
அவர்கள் உமது பெயருக்குரிய உறைவிடத்தைத்
தீட்டுப்படுத்தினார்கள்.

“அடியோடு அவர்களை அழித்து விடுவோம்” என்று
தங்கள் உள்ளங்களில் அவர்கள் சொல்லிக் கொண்டு
கடவுளின் சபையார் கூடும் இடங்களையெல்லாம்
நாடெங்கும் எரித்தழித்தார்கள்.
எங்களுக்கு நீர் செய்து வந்த அருஞ்செயல்களை
இப்போது நாங்கள் காண்பதில்லை;
இறைவாக்கினரும் இலர்;
எத்துணைக்காலம் இந்நிலை நீடிக்கும் என்று
அறியக்கடியவரும் எங்களிடையே இலர்.

இறைவா! எவ்வளவு காலம் பகைவர் இகழ்ந்துரைப்பர்?
எதிரிகள் உமது பெயரை எப்போதுமா
பழித்துக்கொண்டிருப்பார்கள்?
உமது கையை என் மடக்கிக் கொள்கின்றீர்?
உமது வலக்கையை என் உமது மடியில் வைத்துள்ளீர்?
அதை நட்டி அவர்களை அழித்துவிடும்.
இறைவா! முற்காலத்திலிருந்தே நீர் எங்கள் அரசர்;
நீரே உலகெங்கும் மீட்புச் செயலைச் செய்து வருகின்றீர்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : பண்டைக் காலத்திலேயே நீர் உமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட சபையை நினைந்தருளும்.


மு. மொ. 3: ஆண்டவரே எழுந்து வாரும் உமக்காக நீரே வழக்காடும்.

திபா 74: 13-23

நீர் உமது வல்லமையால் கடலைப் பிளந்துவிட்டீர்;
நீரில் வாழும் கொடும்பாம்புகளின் தலைகளை
நசுக்கிவிட்டீர்.
லிவியத்தானின் தலைகளை நசுக்கியவர் நீரே;
அதைக் காட்டு விலங்குகளுக்கு
இரையாகக் கொடுத்தவரும் நீரே;

ஊற்றுகளையும் ஓடைகளையும்
பாய்ந்துவரச் செய்தவர் நீரே;
வற்றாது ஓடும் ஆறுகளைக்
காய்ந்து போகச் செய்தவரும் நீரே;
பகலும் உமதே: இரவும் உமதே;
கதிரவனையும் நிலவையும் தோற்றுவித்தவர் நீரே.
பூவுலகின் எல்லைகளையெல்லாம் வரையறை செய்தீர்;
கோடை மாரிக் காலங்களையும் ஏற்படுத்தினீர்.

ஆண்டவரே, உம்மை எதிரி இகழ்வதையும்
உமது பெயரை மதிகெட்ட மக்கள் பழிப்பதையும்
நினைத்துப் பாரும்!
உமக்குச் சொந்தமான புறாவின் உயிரைப்
பொல்லாத விலங்கிடம் ஒப்புவித்து விடாதேயும்!
உம் எளிய மக்களின் உயிரை
ஒருபோதும் மறந்துவிடாதேயும்!
உமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தருளும்!
நாட்டின் இருள்சூழ் இடங்களில்
கொடுமை குடிகொண்டிருக்கின்றது.

சிறுமையுற்றோர் மீண்டும் வெட்கமுறாதபடி செய்யும்;
எளியோரும் வறியோரும் உமது பெயரைப் புகழ்வராக!
இறைவா! எழுந்துவாரும், உமக்காக நீரே வழக்காடும்;
மதிகேடரால் நாடோறும் உமக்கு வரும் இகழ்ச்சியை
நினைத்துப் பாரும்.
உம்முடைய பகைவர் செய்யும் ஆரவாரத்தை
மறவாதேயும்;
உம் எதிரிகள் இடைவிடாது எழுப்பும்
அமளி மிகுந்துவிட்டது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே எழுந்து வாரும் உமக்காக நீரே வழக்காடும்.


அருள்வாக்கு

இச 15: 7-8

உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டிலுள்ள எந்த நகரிலாவது உன் சகோதரன் ஒருவன் வறியவனாய் இருந்தால், உன் வறிய சகோதரன் மட்டில் உன் உள்ளத்தைக் கடினப்படுத்தாதே, உன் கையை மூடிக்கொள்ளாதே. மாறாக, அவனுக்கு உன் கரங்களைத் தாராளமாகத் திறந்து, அவன் தேவைக்கு ஏற்ப எவ்வளவு தேவையானாலும் கடன் கொடு.


முதல்:ஆண்டவரே, நீர் எளியோரின் இறைவேண்டலைக் கேட்கின்றீர்.
எல்:நீர் அவர்களுக்குச் செவிசாய்த்து அவர்களுடைய உள்ளங்களை உறுதிப்படுத்துவீர்.

இறுதி மன்றாட்டு

எல்லாம் வல்ல கடவுளே, அனைத்து மாந்தரின் மீட்பைப் பற்றிய உமது திட்டத்தை நீர் பேதுருவுக்கு வெளிப்படுத்தினீர்; எங்கள் பணிகள் உமக்கு ஏற்றனவாய் இருக்கவும் உமது அருளால் அப்பணி உமது மீட்பின் உயர்ந்த நோக்கத்தை நிறைவேற்றவும் செய்தருளும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்


மாலைப் புகழ்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

உலகை அழகுடன் அமைத்தவரே,
உலர்ந்த தரையில் விதைபல முளைத்து
இலை பூ காய் கனிஈந் திடவே
நிலத்தையும் நீரையும் பிரித்தீரே.

காயப் பட்ட எமதான்மா
கருகி விடாது அருள்பொழிவீர்;
தீயதையென் கண்ணீரால் கழுவிடுவீர்,
தீய ஈர்ப்பும் தேய்ந்திடுக.

எம்மனம் தீமையை விலக்கிடுமே,
உம்திரு கட்டளைக்குப் பணிந்திடுமே;
அருள்கொ டையால் மகிழ்ந்திடுமே,
அழியா வாழ்வையும் பெற்றிடுமே.

நேயரெம் வேண்டல் ஏற்பீர், தந்தாய்,
உயர் நிலை வீற்றிருக்கும் உம்மகனும்
அச்சம் அகற்றும் ஆவியருடன்
இச்செகம் என்றும் ஆளுகவே. ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: ஆண்டவர் தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார்.

இறைவன் தம் மக்களின் பாதுகாவலர்

திபா 125

கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கு அமைதியும் இரக்கமும் உரித்தாகுக! (கலா 6:16).

ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துள்ளோர்
சீயோன் மலைபோல் என்றும் அசையாது
நிலைத்திருப்பர்.
எருசலேமைச் சுற்றிலும் மலைகள் இருப்பதுபோல,
இப்போதும் எப்போதும்
ஆண்டவர் தம் மக்களைச் சூழ்ந்திருப்பார்.

நல்லார்க்கென ஒதுக்கப்பட்ட நாட்டில்
பொல்லாரின் ஆட்சி நிலைக்காது;
இல்லையெனில் நல்லாரும் பொல்லாதது செய்திடத்
தம் கைகளை நீட்டுவர்.

நல்லோர்க்கும் நேரிய இதயமுள்ளோர்க்கும் ஆண்டவரே
நீர் நன்மை செய்தருளும்.
கோணல் வழியில் செல்வோரைத் தீயவரோடு சேர்த்து
ஆண்டவர் இழுத்துச் செல்வார்.
இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவர் தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார்.


மு. மொ. 2: நீங்கள் சிறுபிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள்.

குழந்தையைப்போல் கடவுள்மேல் நம்பிக்கை

திபா 131

‘என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்’. (மத் 11:29)

ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை! என்
பார்வையில் செருக்கு இல்லை;
எனக்கு மிஞ்சின அரிய, பெரிய செயல்களில்
நான் ஈடுபடுவதில்லை.

மாறாக என் நெஞ்சம் நிறைவும் அமைதியும்
கொண்டுள்ளது;
தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம்
என்னகத்தே அமைதியாயுள்ளது.

இஸ்ரயேலே இப்போதும் எப்போதும்
ஆண்டவரையே எதிர்நோக்கியிரு!

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : நீங்கள் சிறுபிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள்.


மு. மொ. 3: ஆண்டவரே, நாங்கள் எங்கள் கடவுளுக்கு பணிபுரிய, எங்களை ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் ஏற்படுத்தினீர்.

மீட்படைந்தோரின் பாடல்

சிறுபாடல்
திவெ 4: 11; 5: 9, 10, 12

எங்கள் ஆண்டவரே, எங்கள் கடவுளே,
மாட்சியும் மாண்பும் வல்லமையும் பெற
நீர் தகுதி பெற்றவர்;
ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் நீரே.
உமது திருவுளப்படியே அவை உண்டாயின,
படைக்கப்பட்டன.

“ஏட்டை எடுக்கவும் அதன் முத்திரைகளை
உடைத்துப் பிரிக்கவும் தகுதி பெற்றவர் நீரே.
நீர் கொல்லப்பட்டீர்;
உமது இரத்தத்தால் குலம், மொழி, நாடு, மக்களினம்
ஆகிய அனைத்தினின்றும் மக்களைக்
கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக் கொண்டீர்.

ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும்
அவர்களை எங்கள் கடவுளுக்காக ஏற்படுத்தினீர்
அவர்கள் மண்ணுலகின்மீது ஆட்சி செலுத்துவார்கள்.”
கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும்
ஞானமும் ஆற்றலும், மாண்பும் பெருமையும்
புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் எங்கள் கடவுளுக்கு பணிபுரிய, எங்களை ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் ஏற்படுத்தினீர்.


அருள்வாக்கு

உரோ 12: 9-12

உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள். உடன் பிறப்புகள் போன்று, ஒருவருக்கொருவர் உளங்களிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களை விட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள். விடாமுயற்சியோடும் ஆர்வமிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணி புரியுங்கள். எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள் இறை வேண்டலில் நிலைத்திருங்கள்.


சிறு மறுமொழி

முதல்:ஆண்டவரே, உம் வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும்.
எல்:ஆண்டவரே, உம் வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும்.
முதல்:உமது உண்மை என்றென்றும் நீடித்திருக்கும்.
எல்:ஆண்டவரே, உம் வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும்.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:ஆண்டவரே, உம் வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும்.

கன்னிமரியாவின் பாடல்

மு. மொ. : என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.

லூக் 1: 47-55

என் ஆன்மா ஆண்டவரில் களிகூருகின்றது.

ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.

ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக்
கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

ஏனெனில் வல்லவராம் கடவுள்
எக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கிஎறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே
அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு நினைவில்கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.


மன்றாட்டுகள்

கடவுள் தம் மக்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார். அவரை அன்பு செய்பவர்களின் நம்பிக்கையை எதுவும் முறித்துவிட முடியாது; எனவே நாம் அறிக்கையிடுவோம்.

எல்: தந்தையே உம்மில் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்.

ஆண்டவராகிய கடவுளே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம் — நீர் மனிதனை எல்லா ஞானத்திலும் நுண்ணறிவிலும் செல்வந்தனாக்கினீர்.

ஆண்டவராகிய கடவுளே, ஆட்சியாளர் அனைவரின் உள்ளங்களையும் நீர் அறிவீர் — அவர்கள் தாங்கள் ஆளும் மக்களுடைய நலன்களுக்காகவே உழைப்பார்களாக.

ஆண்டவரே இந்த உலகைக் கலைகளால் மாட்சிப்படுத்த, மனிதருக்கு ஆற்றலை அளித்திருக்கிறீர் — இவற்றில் தொலைநோக்கும், உண்மையான நம்பிக்கையும் ஒளிரச் செய்யும்.

எங்களுடைய வரம்புகளுக்கு மேலாக, எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் — வலுவற்றோரை உறுதிப்படுத்தி, வீழ்ச்சியுற்றோரை எழச் செய்யும்.

தந்தையே, இறுதி நாளில் உமது மகனின் உயிருப்பில் பங்குண்டு என்று நீர் மனிதருக்கு வாக்களித்தீர் — எங்களுக்குமுன் நிலைவாழ்வின் பாதையில் சென்றவர்களை நினைவுகூர்ந்தருளும்.


ஆண்டவரின் இறைவேண்டல்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.


இறுதி மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் மாலைப்புகழ் உமது இரக்கத்தின் அரியணையின்முன் எழுவதாக. உமது அருளாசியை எம்மீது பொழிந்தருளும். இதன் வழியாக இன்றும் என்றும் உமது அருள் எமக்குத் துணையாயிருந்து எமக்கு மீட்பளிப்பதாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்


இரவு இறைவேண்டல்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

பாரினை எல்லாம் படைத்தாள் இறைவா,
காரிருள் புகஉம் கழலினைத் தொழுதோம்;
பேரருள் புரிந்து எம்மீது) இரங்கிக்
கோரிடும் எம்மைக் காத்தருள் வீரே.

கனவிலும் எமதுளம் உம்மையே நாடுக,
நினைவிலாத் துயிலிலும் உமமையே உணர்க;
நனிசேர் புதுநாள் புலரும் போதும்
இனியவும் புகழை இசைத்தேத் திடுக.

இன்பமார் வாழ்வை எமக்களித் திடுக
அன்பனல் எமக்குள் கனன்றிடச் செய்க
துன்பமும் துயரமும் தரும்கார் இருளை
உன்பெரும் ஒளியில் சுடர்போக் கிடுக.

இறைவா, எல்லாம் வல்ல தந்தாய்
மகன்வழி யாய்எமக் கிவை அருள்வாய்
ஒருபொருள் தந்தை மகன் தூய ஆவியார்
தரைதனில் ஆட்சியும் மாட்சியும் பெறுக. ஆமென்.

அல்லது

கிறிஸ்துவே ஒளியும் பகலும் நீரே
இரவின் இருளை ஈந்தீர் எனினும்
மறுமையில் நீரே ஒளியென விளங்க
தரையிலும் பேரொளி விளக்கா வீரே.

தூயவரே, ஆண்டவரே, துயிலுறு இரவிதில்
நேயமாய் எம்மைக் காத்திட வேண்டுவோம்;
எமதிளைப் பாற்றி உம்மிலே ஆகுக.
அமைதி மிகுந்த இரவினைத் தருக.

உடலின் கண்கள் உறங்கி மூடினும்
உளத்தின் கண்கள் விழித்துமை நோக்குக
உம்மை அன்பு செய்தோம் எனவே
எம்மை ஆற்ற லுடன்காத் தருள்க.

காவல் நீரே கருணைக்கண் ணோக்கிப்
பேயின் சோதனை நின்றெமைக் காப்பீர்;
செந்நீர் சிந்தி மீட்டவும் மக்களை
இன்னல் நீக்கிக் காத்தருள் வீரே.

எம்மை அன்பு செய்யும் கிறிஸ்துவே.
உம்முடன் தந்தையும் ஆவி யாரும்
இம்மையில் மறுமையில் இடையறா தென்றும்
உண்மை மாட்சியும் புகழும் பெறுக. ஆமென்.

அல்லது

போயது பொழுது புகுந்தது இரவு;
தூயரே உமது பொன்னடி தொழுவோம்;
நேயமாய் எல்லா ஏதமும் நீக்கி,
நேயரெமை ஆண்டு காத்தருள் வீரே.

கனவுகள் துயில்வழி காணுதல் வேண்டாம்
கனவிருள் பூதமும் கண்ணுறல் வேண்டாம்
சினமுறு பகைவர் முரணெலாம் வெல்வாய்
ஈனமும் உடலில் சேர்ந்திடாதருள்வாய்.

முதல்வரே தந்தாய் அருள் புரி வீரே
புதல்வரே கிறிஸ்துவே அருள்புரி வீரே
கதிரொளி வெல்லும் ஆவி யாரே
பதம் பணிந்து போற்றிடு வோமே. ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: என்னிடமிருந்து உம் முகத்தை மறைத்துக் கொள்ளாதேயும். ஏனெனில், நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.

வறட்சி நிலையில் இறைவேண்டல்

திபா 143: 1-11

“திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் ஏற்புடையவர் ஆகமுடியும் என நாம் அறிந்திருக்கிறோம்” (கலா 2:16அ).

ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்;
நீர் நம்பிக்கைக்குரியவராய் இருப்பதால்,
உமது இரக்கத்திற்காக நான் எழுப்பும்
மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்;
உமது நீதியின்படி எனக்குப் பதில் தாரும்.
தண்டனைத் தீர்ப்புக்கு உம் அடியானை இழுக்காதேயும்;
ஏனெனில் உயிர் வாழ்வோர் எவரும்
உமது திருமுன் நீதிமான் இல்லை.

எதிரி என்னைத் துரத்தினான்;
என்னைத் தரையிலிட்டு நசுக்கினான்;
என்றோ இறந்தொழிந்தவர்களைப்போல் என்னை
இருட்டில் கிடக்கச் செய்தான்.
எனவே என்னுள்ளே என் மனம் ஒடுங்கிப் போயிற்று;
என் உள்ளம் எனக்குள் சோர்ந்து போயிற்று.
பண்டைய நாள்களை நான் நினைத்துக் கொள்கின்றேன்;

உம் செயல்கள் அனைத்தையும் குறித்துச்
சிந்தனை செய்கின்றேன்;
உம் கைவினைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.
உம்மை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்;
வறண்ட நிலம் நீருக்காகத் தவிப்பதுபோல்
என் உயிர் உமக்காகத் தவிக்கின்றது.

ஆண்டவரே! விரைவாக எனக்குச் செவிசாய்த்தருளும்;
ஏனெனில் என் உள்ளம் உடைந்துவிட்டது;
என்னிடமிருந்து உம் முகத்தை
மறைத்துக்கொள்ளாதேயும்;
இல்லையெனில் படுகுழி செல்வோருள்
ஒருவராகி விடுவேன்.

உமது பேரன்பை வைகறையில்
நான் கண்டடையச் செய்யும்
ஏனெனில் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்;
நான் நடக்க வேண்டிய அந்த வழியை
எனக்குக் காட்டியருளும்;
ஏனெனில், உம்மை நோக்கி
என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.

ஆண்டவரே! என் எதிரிகளிடமிருந்து
என்னை விடுவித்தருளும்;
நான் உம்மிடம் தஞ்சம் புகுந்துள்ளேன்.
உம் திருவுளத்தை நிறைவேற்ற எனக்குக் கற்பித்தருளும்;
ஏனெனில் நீரே என் கடவுள்; உமது நலமிகு ஆவி
என்னைச் செம்மையான வழியில் நடத்துவதாக!

ஆண்டவரே! உமது பெயரின் பொருட்டு
என் உயிரைக் காத்தருளும்!
உமது நீதியின் பொருட்டு
என்னை நெருக்கடியினின்று விடுவித்தருளும்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : என்னிடமிருந்து உம் முகத்தை மறைத்துக் கொள்ளாதேயும். ஏனெனில், நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.


அருள்வாக்கு

1 பேது 5: 8-9அ

அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள்.


சிறு மறுமொழி

முதல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
முதல்:உண்மையின் ஆண்டவராகிய கடவுளே, எம்மை மீட்டவர் நீரே.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.

சிமியோன் பாடல்

மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.

லூக் 2: 29-32

கிறிஸ்துவே உலகின் ஒளியும் இஸ்ரயேலின் மாட்சியுமாயிருக்கிறார்.

ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை
இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.

எனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு
நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
என் கண்கள் கண்டுகொண்டன.

இம்மீட்பே பிற இனத்தாருக்கு
வெளிப்பாடு அருளும் ஒளி;
இதுவே உம் மக்களாகிய இஸ்ரையேலுக்குப் பெருமை.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.


இறுதி மன்றாட்டு

ஆண்டவரே, உமது இரக்கத்தால் இவ்விரவின் இருளை விரட்டியருளும். உமது பணியாளர்கள் அமைதியில் உறங்கவும் உமது திருப்பெயரில் மகிழ்வுடன் விழித்தெழுந்து புதிய நாளின் ஒளியைக் காணவும் கருணை கூர்ந்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


ஆசியுரை

ஆண்டவர் நமக்கு ஓர் அமைதியான இரவையும் நிறைவான முடிவையும் தந்தருள்வாராக. ஆமென்.


தூய மரியாவுக்குப் பாடல்

வாழ்க அரசியே, தயைமிகு அன்னையே
வாழ்வே, இனிமையே, தஞ்சமே வாழ்க.

தாயகம் இழந்த ஏவையின் மக்கள்
தாயே என்றுமைக் கூவி அழைத்தோம்.

கண்ணீர்க் கணவாய் நின்றும்மை நோக்கிக்
கதறியே அழுதோம், பெருமூச்செறிந்தோம்.

அதலால் எமக்காய்ப் பரிந்துரைப் பவரே
அன்புடன் எம்மைக் கடைக்கண் பாரீர்.

உம்திரு வயிற்றின் கனியாம் இயேசுவே
இம்மை வாழ்வின் இறுதியில் காட்டுவீர்.

கருணையின் உருவே தாய்மையின் கனிவே
இனிமையின் அன்னை மரியா போற்றி! ஆமென்.

அல்லது

மண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே
விண்ணகம் செல்லத் திறந்த வாயிலே
தண் கடல் மீதொளிர் விண்மீன் நீரே

வீழ்ச்சி நின்றெழ முயன்றிடும் மக்களை
ஆட்சி செய்து அவர்க்குதவிடுவீர்.

இயற்கை வியப்புற இறைவனை ஈன்றீர்
ஈன்ற பின்னரும் கன்னியாய் நின்றீர்

வானவன் கபிரியேல் வாழ்த்துரை ஏற்றீர்
ஈனப் பாவிகள் எமக்கு இரங்குவீர். ஆமென்.

அல்லது

வானகம் ஆளும் அரசியே வாழ்க
வானவர் அனைவரின் தலைவியே வாழ்க
எஸ்ஸேயின் வேரே உலகில் பேரொளி
உதயம் ஆகிய வாயிலே வாழ்க.

மாட்சி மிகுந்த கன்னியே மகிழ்க.
ஆட்சி தகைமையின் தாயே மகிழ்க.
எழில்மிகு நாயகி இயேசுவை வேண்டி
பொழிந்திடும் அருளை விடைபெறும் எம்மேல். ஆமென்

அல்லது

கடவுளின் அன்னையே கன்னி மரியே
அடைக்கலம் நீரென அணுகி வந்தோம்;
கடைக்கண் பார்த்து எம்தேவையில் எல்லாம்
எடுத்தெறி யாமல் எம்வேண்டல் ஏற்பீர்

இடுக்கண் இடர்கள் அனைத்திலும் இருந்து
இடைவிடாது எம்மைக் காத்திடு வீரே
பெண்களுக் குள் நீர் பேறுபெற் றீரே!
விண்ணக மாட்சியில் விளங்கும் தாயே. ஆமென்.



♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Join with us 👇

Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A

Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076

Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283

WhatsApp: https://chat.whatsapp.com/G5K3erwXGiJ4VWuBVUvCnz



No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...