Tuesday, September 6, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (7-09-2022)

 

பொதுக்காலம் 23ஆம் வாரம் - புதன்




முதல் வாசகம்

மணமானோர் மணவிலக்குக்கு தேடக்கூடாது; மணமாகாதோர் திருமணம் செய்துகொள்ள வழி தேடக்கூடாது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 25-31

சகோதரர் சகோதரிகளே,

மணமாகாதவர்களைக் குறித்துப் பார்ப்போம். இவர்களைப் பற்றிய ஆண்டவரின் கட்டளை எதுவும் என்னிடம் இல்லை. எனினும், ஆண்டவரின் இரக்கத்தால் நம்பிக்கைக்குரியவனாய் இருக்கும் நான் என் கருத்தைச் சொல்கிறேன். மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன். மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள் மணவிலக்குக்கு வழி தேடக் கூடாது; மனைவியுடன் இணைக்கப்படாதவர்கள் திருமணம் செய்து கொள்ள வழி தேடக் கூடாது. நீங்கள் திருமணம் செய்து கொண்டால் அது பாவமல்ல. இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் அதுவும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர். நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

அன்பர்களே, நான் சொல்வது இதுவே: இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர்போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 45: 10-11. 13-14. 15-16 (பல்லவி: 10a)

பல்லவி: கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேளாய்!

10
கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு.
11
உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! - பல்லவி

13
அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள்.
14
பல வண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்; கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள். - பல்லவி

15
மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர்.
16
உம் தந்தையரின் அரியணையில் உம் மைந்தரே வீற்றிருப்பர்; அவர்களை நீர் உலகுக்கெல்லாம் இளவரசர் ஆக்கிடுவீர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 6: 23ab

அல்லேலூயா, அல்லேலூயா! துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



ஏழைகளே நீங்கள் பேறு பெற்றோர்; செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு!

 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 20-26

அக்காலத்தில்

இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: “ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.

மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்து வந்தனர்.

ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள். மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


--------------------------------------------------------
1 கொரிந்தியர் 7: 25-31
“திருமணம் செய்துகொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர்”
நிகழ்வு
ஸ்பெயின் நாட்டில் பிறந்து, தோமிக்கன் சபையில் சேர்ந்து, பின்னாளில் புனிதராக உயர்த்தப்பட்டவர் புனித வின்சென்ட் ஃபெரர் (1350-1419). ஒருநாள் இவரிடம் ஒரு பெண்மணி வந்தார். அவர் இவரிடம், “என்னுடைய கணவர் எப்பொழுதும் என்மேல் எரிந்து எரிந்து விழுகின்றார். என்னிடம் அவர் சரியாகவே பேசுவதில்லை. இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு தாருங்கள்” என்றார்.
உடனே வின்சென்ட் ஃபெரர் அவரிடம், “ஊருக்கு வெளியே ஒரு துறவுமடம் இருக்கின்றது. அந்தத் துறவுமடத்தின் வாசலில் ஒரு துறவி இருப்பார். நீங்கள் அவரிடத்தில் சென்று, ‘இந்தத் துறவுமடத்தில் கிணறு ஒன்று இருக்கின்றதாமே! அது எங்கே இருக்கின்றது?’ என்று கேளுங்கள். அவர் அந்தக் கிணற்றைச் சுட்டிக்காட்டுவார். அது சாதாரண கிணறு கிடையாது; அதிசயக் கிணறு. அந்தக் கிணற்றிலிருந்து நீங்கள் தண்ணீர் மொண்டு கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய கணவர் வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வருவதற்குச் சிறிதுநேரத்திற்கு முன்பு, கிணற்றிலிருந்து மொண்டுசென்ற தண்ணீரை, உங்கள் வாயிற் ஊற்றிக்கொண்டு, அதை விழுங்கிவிடாமல் அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். இப்படியே சில நாள்களுக்குச் செய்து வாருங்கள். அதன்பிறகு என்ன நடக்கின்றது என்று பாருங்கள்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அந்தப் பெண்மணியும் வின்சென்ட் ஃபெரர் தன்னிடத்தில் சொன்னதுபோன்று துறவுமடத்திலிருந்த ‘அதிசயக் கிணற்றிலிருந்து’ தண்ணீர்மொண்டு வந்து, அதைத் தன்னுடைய கணவர் வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வருவதற்கு முன்பாக, வாயில் ஊற்றிக்கொண்டு பொறுமையாக இருந்தார். வேலையை முடித்துக்கொண்டு வந்த அந்தப் பெண்மணியின் கணவர், அவரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டி, அவர்மீது எரிந்துவிழுந்தார். அவரோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இப்படியே பல நாள்கள் தொடர்ந்தன.
இதனால் அந்தப் பெண்மணியின் கணவர், ‘இத்தனை நாள்களும் நான் என்னுடைய மனைவியைத் திட்டும்பொழுது, அவர் பதிலுக்கு என்னைத் திட்டுவார்! இப்பொழுது நான் அவரைத் திட்டும்பொழுதும் அவர் என்னைத் திட்டாமல், அமைதியாய் இருக்கின்றாரே! அப்படியானால் அவர் மனம்மாறியிருக்கவேண்டும்! என்னுடைய மனைவி என்னை மிகுதியாக அன்புசெய்யத் தொடங்கிவிட்டதால், நானும் அவரை மிகுதியாக அன்பு செய்வதுதான் முறை’ என்று அவர் தன் மனைவியை மிகுதியாக அன்பு செய்யத் தொடங்கினார். இதனால் அவர்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியத் தொடங்கினார்.
தன் கணவர் இவ்வளவு சீக்கிரம் மாறுவார் என்பதைக் கனவிலும் எதிர்பார்த்திராத அந்தப் பெண்மணி, ‘எல்லாவற்றும் காரணம் அற்புதக் கிணற்றிலிருந்து நான் குடித்த தண்ணீர்தான். இதற்கு வழிவகை செய்துதந்த வின்சென்ட் ஃபெரருக்கு நன்றி சொல்லிவிட்டு வருவோம்’ என்று நினைத்துக்கொண்டு அவர் வின்சென்ட் ஃபெரரிடம் சென்று நடந்த அனைத்தையும் எடுத்துச் சொன்னார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட வின்சென்ட் ஃபெரர் இறுதியாக அந்தப் பெண்மணியிடம், “நீங்கள் தண்ணீர் மொண்டு பருகினீர்களே! அது ஒன்றும் அதிசயத் தண்ணீர் கிடையாது; சாதாரண தண்ணீர்தான். உங்களுடைய கணவர் உங்களைத் திட்டும்பொழுது, உங்களுடைய வாயில் தண்ணீர் இருந்ததால், பதிலுக்கு நீங்கள் அவரைத் திட்ட முடியவில்லை. அதனால்தான் உங்களுடைய கணவர் உங்களை அன்பு செய்யத் தொடங்கிவிட்டார்” என்றார்.
இந்த நிகழ்வில் வருகின்ற கணவனும் மனைவியும் தொடக்கத்தில் ஒருவரை ஒருவரை திட்டிக்கொண்டும், காயப்படுத்திக்கொண்டும் தங்களுடைய இல்லற வாழ்வையே இன்னல்கள் மிகுந்ததாக மாற்றிக்கொண்டதுபோல, இன்றைப் பல தம்பதியர்கள் தங்களுடைய வாழ்க்கைத் துணையோடு நல்ல புரிதல் இல்லாமல், சண்டைபோட்டுக் கொண்டு, தங்களுடைய இல்லற வாழ்க்கையே இன்னல் மிகுந்ததாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில், இன்றைய முதல் வாசகத்தில், புனித பவுல், “திருமணம் செய்துகொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர்’ என்று சொல்கின்றாரே...! இவ்வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஆட்சியாளர்களிடமிருந்து கிறிஸ்தவர்களுக்கு வரும் இன்னல்கள் முன்னிட்டு அறிவுரை
இன்றைய முதல்வாசகத்தில் புனித பவுல், “மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது... திருமணம் செய்துகொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர்” என்று சொல்கின்றாரே, அப்படியானால் திருமணமே யாரும் செய்துகொள்ளக்கூடாதா...? திருமணத்தைக் கடவுள் புனிதப்படுத்தியது என்னாயிற்று...?’ போன்ற பல கேள்விகள் எழலாம். புனித பவுல் திருமணமே செய்துகொள்ளவேண்டாம் என்று சொல்லவில்லை. மாறாக, ஆட்சியாளர்களால் வரக்கூடிய துன்பங்கள் ஏறலாம். ஆகையால், மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது என்று குறிப்பிடுகின்றார்.
புனித பவுல் இவ்வார்த்தைகளை எழுதிய காலக்கட்டத்தில், உரோமையர்கள் கிறிஸ்தவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தார்கள். உரோமையர்களால் கிறிஸ்தவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றொரு நிலையிருந்தது. இதனால் கிறிஸ்தவர்கள் தாங்கள் இருக்கக்கூடிய நிலையிலேயே இருப்பது நல்லது என்றும், திருமண வாழ்வில் ஈடுபட்டிருப்போர் இவ்வுலகுக்குரியவற்றை நாடினால் இன்னல்தான் ஏற்படும்; அதனால் மறுவுலகுக்குரியவற்றை நாடவேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.
புனித பவுலைப் பொறுத்தளவில், மணமாகாதவரும் சரி, மணமானவரும் சரி, அவர்கள் இவ்வுலகுக்குரியவற்றை நாடாமல், மறுவுலகுக்குரியவற்றை நாடவேண்டும் என்பதாகத்தான் இருந்தது. அதற்காகத்தான் அவர் இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும் வார்த்தைகளைக் குறிப்பிடுகின்றார். ஆகையால், நாம் எந்த நிலையில் அழைக்கப்பட்டிருந்தாலும், அந்த நிலையில் இருந்துகொண்டு, கடவுளுக்கு உகந்தவற்றை நாடி, அவருக்கு உரிய மக்களாவோம்.
சிந்தனை
‘நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால், மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்’ (கொலோ 3:1) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இவ்வுலக வாழ்வுக்குரிய கவலைகளால் நம்முடைய வாழ்வை இழந்துவிடாமல், மறுவுலக வாழ்வுக்குரியவற்றை நாடி, நம் வாழ்வைக் காத்துக் கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
--------------------------------------------------------------
லூக்கா 6: 20-26
யாருக்கு இறையாட்சி உரியது?
நிகழ்வு
‘அன்னை கபிரினி’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் புனித பிரான்சிஸ் சேவியர் கபிரினி, 1900 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த புலம்பெயர்ந்தோர் நடுவில் பணிசெய்யத் தொடங்கியபொழுது, அவரிடம் தங்குவதற்கு இடமோ, கையில் பணமோ எதுவுமே இல்லை. இவர் புலம்பெயர்ந்த மக்கள் நடுவில் ஆர்வத்தோடு பணிசெய்வதைப் பார்த்துவிட்டு பெருஞ்செல்வந்தர் ஒருவர் இவரும், புலம்பெயர்ந்தோரில் இருந்த அனாதைக் குழந்தைகளும் தங்குவதற்கு இடமும், கையில் கொஞ்சம் பணமும் கொடுத்துவிட்டுப் போனார்.
இப்படி இருக்கும்பொழுது ஒருநாள் இவர், நியூயார்க்கில் ஆயராக இருந்த கோரிகன் (Corrigan) என்பவரைப் பார்க்கச் சென்றிருந்தார். காரணம் அவருடைய ஆளுகைக்குள் இவர் தங்கியிருந்தார். இவர் ஆயர் கோரிகனைப் பார்க்கச் சென்றிருந்தபொழுது ஆயர் இவரிடம், “புலம்பெயர்ந்த மக்கள் நடுவில் பணிசெய்ய வந்திருக்கும் நீங்கள், ஏதோ ஒரு செல்வந்தர் கொடுத்த இடத்தில் தங்கிக்கொண்டு, அவர் கொடுத்த கொஞ்சம் பணத்தைக் கொண்டு, காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கின்றீர்கள்...! இது எத்தனை நாள்களுக்குப் போகும்?” என்றார்.
உடனே இவர் ஆயரிடம், “இறைவனிடம் நாம் வேண்டுகின்றபொழுது ‘இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்’ என்று சொல்லித்தான் வேண்டுகின்றோமே ஒழியே, ‘நாங்கள் இறக்கும்வரைக்கும் தேவையான உணவை எங்களுக்குத் தாரும்’ என்று வேண்டுவதில்லை” என்றார். இப்படிச் சொல்லிவிட்டு இவர் ஆயரிடம் தொடர்ந்து பேசினார்: “ஆயர் அவர்களே! நான் கடவுள்மீது நம்பிக்கை வைத்து இந்தப் பணியைத் தொடங்கியிருக்கின்றேன். கடவுள் எனக்குக் தேவையானதைத் தருவார்; அந்த நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.”
கபிரினியிடமிருந்து இப்படியொரு பதில் வந்ததைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ச்சியடைந்த ஆயர், “நீங்கள் மேற்கொண்டிருக்கும் இந்தப் பணி நல்லமுறையில் நடக்க எனது வாழ்த்துகள்” என்றார். இதற்குப் பிறகு கபிரினி ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துத் தனது பணியைத் தொடங்கினார். இவர் மக்கள் நடுவில் மிகவும் ஈடுபாட்டோடும், அர்ப்பண உள்ளத்தோடும் பணிசெய்வதைப் பார்த்துவிட்டுப் பலரும் தங்களால் இயன்றை இவருக்குத் தந்து உதவினார்கள். இதனால் இவர் புலம்பெயர்ந்தோர் நடுவில் மிகச் சிறந்தமுறையில் பணிசெய்து, பின்னாளில் புனிதையாக உயர்ந்தார்.
ஆம், அன்னை கபிரினி, ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துத் தனது பணியைச் செய்து, பலருக்கும் ஒளியாய் விளங்கினார். இன்றைய நற்செய்தியில் இயேசு, ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழும் ஏழைகளை, “நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில், இறையாட்சி உங்களுக்கு உரியதே” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஏழைகள் ஏன் பேறுபெற்றோர்?
நற்செய்தியில் இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்து, “ஏழைகளே! நீங்கள் பேறுபெற்றோர்” என்கின்றார். இயேசு தம் சீடரைப் பார்த்துச் சொன்ன இவ்வார்த்தைகள், அவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஏனெனில், செல்வம் படைத்தோர்தான் கடவுளின் ஆசியைப் பெற்றோர்; அவர்கள்தான் பேறுபெற்றோர் என்ற புரிதல் மக்கள் நடுவில் இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் இயேசு “ஏழைகளே! நீங்கள் பேறுபெற்றோர்” என்று சொன்னது அவர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.
ஏழைகள் பேறுபெற்றோர் என இயேசு ஏன் சொல்கின்றார் என்று நாம் தெரிந்துகொள்ளவேண்டும். ஏழைகளிடம் பணம் கிடையாது. அதனால் அவர்கள் பணத்தைச் சார்ந்து வாழாமல், பணத்தால், செல்வத்தால் ஏற்படும் தீமைகளுக்குள்ளும் வீழ்ந்துவிடாமல், இறைவனை மட்டுமே சார்ந்து, அவரை மட்டுமே நம்பி, அவரது வழியில் நடப்பார்கள். இதனாலேயே அவர்கள் பேறுபெற்றோராக மாறுகின்றார்கள்; இறையாட்சியையும் தங்களுக்கு உரித்தாக்கிக் கொள்கின்றார்கள்.
அப்படியானால் செல்வந்தர் பேறுபெற்றோர் ஆகமுடியாதா?
ஏழைகளைப் பேறுபெற்றோர் என்று சொன்ன இயேசு, “செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு!” என்கின்றார். இயேசு இவ்வாறு சொல்லக் காரணம், செல்வர்கள் செல்வம்தாம் எல்லாம் என்று அதையே சார்ந்து வாழ்வார்கள். இதற்கு நல்லதொரு எடுத்துகாட்டுதான் இயேசு சொல்லக்கூடிய பணக்காரன், ஏழை இலாசர் உவமை (லூக் 16: 19-31). இந்த உவமையில் வருகின்ற பணக்காரன் பணத்தை மட்டுமே சார்ந்து வாழ்ந்துவந்தான்; ஆனால், இலாசரோ ஆண்டவரைச் சார்ந்து, அவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தார். இதனால் பணக்காரனுக்குப் பாதாளமும் அல்லது நரகமும் இலாசருக்கு விண்ணகமும் கிடைத்தது.
ஆகையால், நாம் பணத்தின்மீது அல்ல, படைத்தவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்து, பேறுபெற்றோர் ஆவோம்.
சிந்தனை
‘மனிதர்மீது நம்பிக்கை வைப்பதை விட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்’ (திபா 118:
😎
என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் நமக்கு இறையாட்சியை உரித்தாக்கும் ஆண்டவரிடம் தஞ்சம் புகுந்து, அவரிடம் நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்



“நீங்கள் பேறுபெற்றோர்”

அரசரும் அவரது மகனும்:

முன்பொரு காலத்தில் ஓர் அரசர் இருந்தார். அவருக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தையே இல்லை. அதன் நிமித்தம் அவர் தன்னுடைய நாட்டில் இருந்த தலைசிறந்த மருத்துவர்களை எல்லாம் அரமணைக்கு வரவழைத்து அவர்கள் பரிந்துரைத்த மருந்துங்களை உண்டு வந்தார். 

ஒரு வழியாக அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதுவும் கால் ஊனமாகப் பிறந்ததால். அவரது மனம் சுக்கு நூறாக உடைந்து போனது. அப்போது அவருக்குப் பலரும் ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார்கள். யாவருடைய வார்த்தையும் அவருக்கு ஆறுதல் தரவில்லை. இந்நிலையில் அவரிடம் வந்த ஒரு சிற்பி, “உங்களுடைய மகன் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லுங்கள். அதைப் போன்று நான் சிற்பம் வடித்துத் தருகின்றேன். அதை பார்க்கும் உங்கள் மகன் நிச்சயம் அதைப் போல் ஆவான்” என்றார். 

சிற்பி சொன்ன யோசனை அரசருக்கு மிகவும் பிடித்துப் போனது. அதனால் அவர் தன்னுடைய மகன் எப்படி இருக்கவேண்டும் என்று சிற்பியிடம் சொல்ல, சிற்பியும் அரசர் சொன்ன தோற்றத்துடன் ஒரு சிற்பத்தை வடித்துத் தந்தார். அதை அரண்மனையின் முன்னே வைத்த அரசர் தன்னுடைய மகன் மெல்ல வளர்ந்து வந்தபோது, அவனைச் சக்கர நாற்காலியில் வைத்துக் கொண்டு, “இந்தச் சிற்பத்தில் இருப்பது நீதான். இதில் உள்ளதைப் போன்று நீ கம்பீரமாக எழுந்து நிற்கவேண்டும்” என்றார். 

இதையடுத்து வந்த நாள்களில் இளவரசன் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே தன்னுடைய உருவம் பொறிக்கப்பட்டிருந்த சிற்பத்தைச் சுற்றி சுற்றி வந்தான். சில சமயங்களில் அவன் சக்கர நாற்காலியிலிருந்து எழுந்திருக்க முயன்றபோது கீழே விழுந்தான். ஆனாலும் அவன் தன்னுடைய முயற்சியைக் கைவிடவில்லை. ஒரு நாள் அவன் சக்கர நாற்காலியிலிருந்து எழுந்துபோது, அவனால் எழ முடிந்தது. உடனே அவன் தன்னுடைய உருவம் பொறிக்கப்பட்ட சிற்பத்தை ஓடிச்சென்று கட்டிப் பிடித்துக் கொண்டான். இதையெல்லாம் தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அரசர் தான் விரும்பியது போல் தன் மகன் ஆகிவிட்டான் என்று மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார் 

ஆம், இந்த நிகழ்வில் வரும் அரசர் தன்னுடைய மகன் எப்படி இருக்கவேண்டும் என்று விரும்பினாரோ அப்படியொரு சிற்பத்தைச் செய்துவைத்து, அதில் இருப்பதைப் போன்று தன்னுடைய மகனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். கடவுளும் தன் மக்களாகிய ஒவ்வொருவரும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார். அதற்காக அவர் கொடுத்திருப்பதுதான் இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் ‘சமவெளிப் பொழிவு’. அது குறித்து நாம் சிந்திப்போம். 


திருவிவிலியப் பின்னணி:

நமது முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், தன்னுடைய ‘Jesus of Nazareth’ என்ற நூலில் இப்படியொரு செய்தியைக் குறிப்பிடுவார்: “இயேசுவின் மலைப்பொழிவு, அல்லது சமவெளிப்பொழிவு அவரது தன்னிலை விளக்கமே.” இக்கூற்று உண்மைதான் என்பதை அதை ஆழமாகப் படித்துப் பார்க்கும்போது புரிந்துகொள்ளலாம். 

மத்தேயு நற்செய்தியில் இடம்பெறும் மலைப்பொழிவைவிடவும், லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் சமவெளிப்பொழிவு சிறிதாக இருந்தாலும், அதில் இயேசு நேரடியாக நம்மிடம் பேசுவது போன்று இருக்கின்றது. மேலும் ஏழைகள், பட்டினியாய் இருப்போர், அழுதுகொண்டிருப்போர், வெறுத்து ஒதுக்கப்படுவோர் யாவரும்ம் இயேசுவை அப்படியே நம் கண்முன்னால் நிறுத்துகிறார்கள். இயேசு செல்வந்தராய் இருந்தும் நமக்காக ஏழையானார்; அவர் நீதிக்காக வேட்கை கொண்டார்; அவர் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டார். இப்படியெல்லாம் இயேசு இருந்தார் எனில், அவரைப் போன்று நாம் வாழ்ந்தால் நிச்சயம் பேறுபெற்றோர் ஆவோம். 

இன்றைய முதல் வாசகம், “இவ்வுலகு இப்போது இருப்பதுபோல் இராது” என்ற வார்த்தைகளோடு முடிகின்றது. அதனால் நாம் உலகப் போக்கின்படி ஒழுகாமல், இயேசுவின் வழியில் நடந்து பேறுபெற்றோர் ஆவோம். 


சிந்தனைக்கு:

கடவுள் முன்னிலையில் செல்வந்தராய் இருப்பதுதான் மிகப்பெரிய பேறு!

இயேசுதான் நமக்கு மிகப்பெரிய முன்மாதிரி. ஏனெனில், அவரே சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினர். 

இவ்வுலகில் கொடுத்து வாழ்பவர்; மறு உலகில் வாழக் கொடுத்து வைத்திருக்கின்றார். 


இறைவாக்கு:

‘கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்; அவரே ஆசி பெற்றவர்’ (நீமொ 22:9) என்கிறது நீதிமொழிகள் நூல். எனவே, நாம் கருணையும் அன்பும் நிறைந்தவர்களாய் இயேசுவின் வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம். 

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


திருப்பாடல் 45: 10-11, 13-14, 15-16 (10a)

“உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு”

இறுமாப்பும் பணிவும்:

விவசாயி ஒருவர் தன்னுடைய தோட்டத்தில் ஒரு ரோஜா செடியை நட்டு வைத்திருந்தார். கூடவே வேறு சில மலர்செடிகளையும் அவர் நட்டு வைத்திருந்தார். சில நாள்கள் கழித்து, ரோஜா செடியிலிருந்து ஒரு ரோஜா மலர் பூத்தது. அந்த ரோஜா மலருக்கு மற்ற எல்லா மலர்களையும்விடத் தானே மிகவும் அழகு என்ற இறுமாப்பு ஏற்பட்டது. அதனால் அது காற்றைக்கூடத் தன்னை முத்தமிட அனுமதிக்கவில்லை. இதனால் பொறுமையிழந்த காற்று ஓங்கி வீச, ஒய்யாரமாக இருந்த ரோஜா மலர் கீழே விழுந்து கதறத் தொடங்கியது. 

அந்த நேரம் பார்த்து விவசாயி தோட்டத்திற்குள் வந்தார். அவர் கீழே விழுந்து கிடந்த ரோஜா மலரைத் தன் கையில் எடுத்துப் பொத்தி வைத்துக் கொண்டார். இதனால் ரோஜா மலர், ‘தனக்கு என்ன ஆகப் போகிறதோ? என்று இன்னும் மிகுதியாகக் கதறியது. சிறிது நேரம் கழித்து, அது, ‘தனக்கு ஏதோவோர் ஆபத்து நடக்கப் போகிறது’ என நினைத்து, ‘இனிமேலும் கதறிப் பயனில்லை’ என்று விவசாயியின் கையில் தன்னை முழுவதும் ஒப்படைத்தது. 

சற்றுநேரம் கழித்து ரோஜா மலர், விவசாயி தன்னைக் கீழே வைத்துவிட்டதை உணர்ந்து, மெல்லக் கண் திறந்து பார்த்தது. அப்போது அது தன்னுடைய கண்களை நம்ப முடியாதவாறு, ஆண்டவரின் திருவடிகளின் காணிக்கையாக இருந்தது. அப்போதுதான் அதற்கு, இறுமாப்போடு இருந்தபோது அழிவு வந்தது என்றும், விவசாயியின் கையில் தன்னைப் பணிவோடு ஒப்படைத்தபோது உயர்வு வந்தது’ என்ற உண்மை புரிந்தது. 

ஆம், நம்முடைய வாழ்வை இறுமாப்பு அல்ல, பணிவே உணர்த்தும் அதையே இந்தக் கதை உணர்த்துகின்றது. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், “உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு” என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம். 


திருவிவிலியப் பின்னணி:

இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 45 அரசரின் திருமணப் பாடலாகும். இத்திருப்பாடல் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கின்றது. முதற்பகுதி (1-9), ஆண்டவரால் ஏற்படுத்தப்படும் அரசர் நீதியோடு ஆட்சி செய்வார் என்றும், அவர் அநீதியை வெறுப்பார் என்றும் கூறுகின்றது. இரண்டாவது பகுதி (10-17) பெரழோடு இருக்கும் அரசி அரசருக்குப் பணிந்திருக்கவேண்டும் என்ற செய்தியைக் கூறுகின்றது. 

இத்திருப்பாடலை நாம் வேறு விதமாகப் புரிந்துகொள்ள வேண்டும். கணவரான ஆண்டவருக்கு மனைவியான இஸ்ரயேல் நாடு பணிந்திருக்கவேண்டும். அப்படி ஆண்டவரின் குரலுக்கு நாட்டு மக்கள் செவிசாய்த்துப் பணிந்து நடந்தால் அவர்கள் எல்லாவிதமான ஆசிகளையும் பெறுவார்கள். இது மறுக்க முடியாத உண்மை. 

எனவே, நாம் அனைத்துலகின் அரசராம் ஆண்டவருக்கு பணிந்து நடந்து, அவரது ஆசியைப் பெறுவோம். 


சிந்தனைக்கு:

கடவுளாகிய ஆண்டவருக்கு நாம் கட்டாயத்தினால் அல்ல, அன்பால் பணிந்திருப்போம்.

  ஆண்டவர் நம்பிக்கைக்குரியவராய் இருப்பது போல், நாமும் ஆண்டவருக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருப்போம். 

தாழ்ச்சியுடைவோர் வீழ்ச்சி அடைவதில்லை. 


இறைவாக்கு:

‘ஆண்டவர் முன் உங்களைத் தாழ்த்துங்கள்; அவர் உங்களை உயர்த்துவார்’ (யாக் 4:10) என்பார் யாக்கோபு. எனவே, நாம் ஆண்டவர் முன் நம்மையே தாழ்த்தி, அவரது வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.  

 

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


-----------------------------------------

 பேறுபெற்றவர்களா நாம்!


இரு வழிப்போக்கர்கள் சாலை வழியே வரும்போது செல்வந்தர் ஒருவர் வீட்டைத்தாண்டி சென்றார்கள். அவர் செல்வந்தர் மட்டும் அல்ல சமுதாயத்தில் பெரிய அந்தஸ்து உடையவர். அரசியல்வாதியும் கூட. அந்த வழிப்போக்கர்களில் ஒருவர் மற்றவரை நோக்கி "கொடுத்து வைத்தவன். வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்கிறான்" என்று கூற மற்றவரும் ஆம் என்று தலையை ஆட்டி "நாமோ எவ்வளவு பாடுபட்டு உழைத்தாலும் கையிலும் பையிலும் எதுவும் மிச்சமில்லாமல் போய்விடுகிறது. அடுத்த ஜென்மத்திலாவது இவர்களைப்போல பிறக்க வேண்டும்" என்று தங்கள் ஆதங்கத்தைக் கொட்டிக்கொண்டிருந்த நேரத்தில் அவ்வீட்டிலிருந்து வெளியே அழுது கொண்டே வந்த ஒருவர் "இவன் நல்லாவே இருக்க மாட்டான்" என்று சாபமிட்டுக்கொண்டே சென்றார். இதைக்கண்ட அந்த இரு வழிப்போக்கர்களும் இப்போதுதானே நாம் கொடுத்து வைத்தவன் என்று பாராட்டினோம். அதற்குள் மற்றொருவர் சாபமிடுகிறானே என்று குழம்பிக்கொண்டே தங்கள் வழி தொடர்ந்தனர். 


உண்மையான பேறு எது? வசதியும் பதவியும் கேளிக்கைக் கொண்டாட்டங்களும் நம் வாழ்வில் இருந்தால் போதும் என்ற மனநிலை இன்று நம்மிடையே பரவலாக இருப்பதை நாம் காண்கிறோம். செல்வமும் அதனால் வரும் மகிழ்ச்சியுமே கடவுளின் ஆசிர்வாதம். வறுமையும் துன்பமும் கடவுளின் சாபம் என்ற எண்ணம் காலம் காலமாய் நமக்குள் குடிகொண்டிருக்கத்தான் செய்கிறது.


ஆண்டவர் இயேசுகிறிஸ்து அதற்கு எதிர்மறையான கூற்றை இன்று நற்செய்தியின் மூலம் கூறுகிறார். ஏழைகளே, பட்டினியாய் இருப்போரே, துன்புறுவோரே நீங்கள் அனைவரும் பேறுபெற்றவர்கள் எனக்கூறும் இயேசு, செல்வர்களே, உண்டு கொழுத்திருப்போரே, இன்புறுவோரே உங்களுக்கு ஐயோ கேடு என்ற கடுமையான மொழிகளை உதிர்க்கிறார்.இதன் உண்மையான பொருள் என்ன? இயேசு உண்ணக்கூடாது என்றோ, செல்வம் சேர்க்கக் கூடாது என்றோ,மகிழ்ச்சியாய் இருக்கக் கூடாது என்றோ சொல்லவில்லை. 


நம்மைப் படைத்த கடவுளுக்கு அவருடைய பிள்ளைகள் மகிழ்வுடனும் நிறைவுடனும் வாழ வேண்டும் என்பதே விருப்பம். ஆனால் அந்த மகிழ்விலும் இன்பத்திலும் அதிக ஈடுபாடு காட்டி அதற்கு காரணமான அந்த கடவுளையும் ,இவை எதுவுமின்றி அல்லலுறும் எழை எளியவர்களையும் நாம் மறந்தோமெனில் அதைவிடக் கேடானது உலகில் ஏதுமில்லை என்பதே இயேசுவின் போதனை. இயேசு கூறிய "செல்வந்தனும் ஏழை இலாசரும்" என்ற உவமை இயேசுவின் இப்போதனையை நமக்கு இன்னும் தெள்ளத்தெளிவாக விளக்குகிறது. 


மேலும் இயேசு பேறுபேற்றோர் எனச்சுட்டிக்காட்டும் ஏழைகளும் துன்புறுவோரும் யார்  ? அவர்கள் இருக்கின்றதில் நிறைவு கொள்பவர்கள். இருக்கும் போதும் இல்லாதபோதும் கடவுளை சார்ந்து இருப்பவர்கள். துன்பத்தில் இருக்கின்ற அவர்கள் பிறரின் துன்பத்தில் தோள் கொடுப்பார்கள். ஆம். இத்தகைய பேறுபெற்றோர் போல வாழவே இயேசு நம்மை இன்று அழைக்கிறார்.


இன்றைய முதல் வாசகத்திலும் புனித பவுல் இச்செய்தியை இன்னும் ஆழமாக, "உலகச் செல்வத்தை பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவராக இருக்கட்டும்" என்று கூறி இருக்கின்ற நிலையில் கடவுளுக்கு அன்பு செய்து வாழ நம்மை அழைக்கிறார்.


"பற்றற்றான் பற்றினைப் பற்றுக" என்ற திருக்குறள் கூறுவதைப் போல இவ்வுலகில் நமக்கு கொடுக்கப்பட்ட செல்வங்களிலும் இன்பங்களிலும் அதிக ஈடுபாடு கொள்ளாமல் எளிய மனத்தோராய் இறைவனைப் பற்றி வாழ்வதே நமக்கு? கிடைக்கும் உண்மையான பேறு என்பதை உணர்ந்து வாழும் வரத்தை இறைவனிடம் இறைஞ்சுவோம்.


 இறைவேண்டல்

பேறுபெற்றவர்களாக வாழ எங்களை அழைத்த இறைவா! உலக இன்பங்கள் செல்வச் செழிப்புகள் எல்லாம் நிலையற்றவை என்பதை உணர்ந்து அவற்றில் அதிக ஈடுபாடு கொள்ளாமல், நாங்கள் இருக்கின்ற நிலையில், இருப்பதில் நிறைவு கொண்டவர்களாய், இன்பத்திலும் துன்பத்திலும், வறுமையிலும் செழுமையிலும் உம்மைச் சார்ந்து வாழும் வரம் தாரும்.? அதுவே எங்களை பேறுபெற்ற நிலைக்கு உயர்த்தும் என்ற உள்ளார்ந்த உணர்வைத் தாரும். ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Join with us 👇

Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A

Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076

Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283

WhatsApp: https://chat.whatsapp.com/G5K3erwXGiJ4VWuBVUvCnz

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...