Wednesday, July 28, 2021

17th Ordinary Week Wednesday - பொதுக்காலம் 17ஆம் வாரம் - புதன்

 பொதுக்காலம் 17ஆம் வாரம் - புதன் 

Download pdf 



முதல் வாசகம்


மோசேயின் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்ததைக் கண்டு அவரை அணுகிச் செல்ல அஞ்சினர்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 34: 29-35


மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கிச் செல்கையில், உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் தம் கைகளில் தாங்கிக் கொண்டிருந்தார். மோசே கடவுளோடு பேசியதால் அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்தது. ஆனால் மோசே அதை அறியவில்லை. ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் மோசேயைப் பார்த்தபோது, அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்ததைக் கண்டு அவரை அணுகிச் செல்ல அஞ்சினர். ஆனால் மோசே அவர்களைப் கூப்பிட்டார். ஆரோனும் மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் அவரை நோக்கி வந்தனர். மோசேயும் அவர்களிடம் பேசினார். பின்னர் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அவர் அருகில் வந்தனர். அப்போது, ஆண்டவர் சீனாய் மலையில் தமக்கு அறிவித்த அனைத்தையும் அவர் அவர்களுக்குக் கட்டளையாகக் கொடுத்தார். மோசே அவர்களோடு பேசி முடித்தபின், தம் முகத்தின் மேல் ஒரு முக்காடு போட்டுக் கொண்டார். மோசே ஆண்டவரோடு உரையாடும்படி அவர் திருமுன் செல்வதுமுதல் வெளியே வருவதுவரை முக்காட்டை எடுத்து விடுவார். அங்கிருந்து வெளியே வந்து, அவருக்குக் கட்டளையிடப் பட்டவற்றை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துக் கூறுவார். இஸ்ரயேல் மக்கள் மோசேயின் முகத்தைப் பார்க்கும்போது, மோசேயின் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருக்கும். மோசே ஆண்டவரோடு பேசச் செல்லும்வரை தம் முகத்தின் மேல் மீண்டும் முக்காடு போட்டுக் கொள்வார்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி 


பதிலுரைப் பாடல்         திபா 99: 5. 6. 7. 9 

பல்லவி: நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்.


5 நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது அரியணைமுன் தாள் பணிந்து வணங்குங்கள்; அவரே தூயவர்! - பல்லவி

6 மோசேயும் ஆரோனும் அவர்தம் குருக்கள்; அவரது பெயரால் மன்றாடுவோருள் சாமுவேலும் ஒருவர்; அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினர்; அவரும் அவர்களுக்குச் செவிசாய்த்தார். - பல்லவி

7 மேகத் தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர்கள் அவருடைய ஒழுங்குமுறைகளையும் அவர் அவர்களுக்குத் தந்த நியமங்களையும் கடைப்பிடித்தார்கள். - பல்லவி

9 நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது திருமலையில் அவரைத் தொழுங்கள். ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி    யோவா 15: 15டி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


தமக்குள்ள யாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-46


அக்காலத்தில், இயேசு மக்களை நோக்கிக் கூறியது: “ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச்செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.”


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ் 


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...