Showing posts with label பொதுக்காலம் 17 வாரம். Show all posts
Showing posts with label பொதுக்காலம் 17 வாரம். Show all posts

Friday, July 30, 2021

17th Ordinary Week Saturday - பொதுக்காலம் 17ஆம் வாரம் - சனி

 பொதுக்காலம் 17ஆம் வாரம் - சனி 



Download pdf 

முதல் வாசகம்

யூபிலி ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப் பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும்.

லேவியர் நூலிலிருந்து வாசகம் 25: 1, 8-17


ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயிடம் கூறியது: தொடர்ந்து வரும் ஏழு ஓய்வுஆண்டுகளை - ஏழேழு ஆண்டுகளாக - ஏழுமுறை எண்ணிக்கையிட்டு அவை நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆகும். ஏழாம் மாதம் பத்தாம் நாள் எக்காள ஒலி எழட்டும்; பாவக் கழுவாய் நிறைவேற்றும் அந்த நாளில் உங்கள் நாடெங்கும் எக்காளம் முழங்கச் செய்யுங்கள். ஐம்பதாம் ஆண்டைத் தூயதாக்கி, நாட்டில் வாழ்வோருக்கு எல்லாம் தன்னுரிமை அறிவியுங்கள். அது உங்கள் யூபிலி ஆண்டு - அந்த ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப் பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும். ஐம்பதாம் ஆண்டு உங்களுக்கு யூபிலி ஆண்டு; அந்த ஆண்டு பயிரிட வேண்டாம்; தானாய் விளைந்ததை அறுக்க வேண்டாம். கிளை நறுக்காத திராட்சைக் கொடியினின்று கனி சேர்க்கவும் வேண்டாம்; ஏனெனில், அந்த ஆண்டு யூபிலி ஆண்டு; அது உங்களுக்குத் தூயது. நிலத்தினின்று அவ்வப்போது கிடைக்கும் பலனை உண்ணுங்கள். அந்த யூபிலி ஆண்டில் அவரவர் தம் காணியாட்சிக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். உங்களுக்குள் ஒருவனுக்கு நிலத்தை விற்கவோ அவனிடத்தில் வாங்கவோ செய்யும்பொழுது ஒருவரை ஒருவர் ஏமாற்றாதிருங்கள். யூபிலி ஆண்டிற்குப் பின், ஆண்டுகளைக் கணக்கிட்டு அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாங்கலாம். பயன்படுத்தும் ஆண்டுகளுக்கு ஏற்ப அவன் அதை உனக்கு விற்கவேண்டும். பலனைப் பயன்படுத்தும் ஆண்டுகள் எண்ணிக்கை மிகுந்திருந்தால் விலையை உயர்த்த வேண்டும்; குறைந்திருந்தால் விலையைக் குறைக்க வேண்டும். ஏனெனில், பயனுள்ள ஆண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே அவன் விற்கிறான். உங்களுள் எவரும் தம் இனத்தாரை ஏமாற்றலாகாது. கடவுளுக்கு அஞ்சி நடங்கள்! ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி 


பதிலுரைப் பாடல்           திபா 67: 1-2. 4. 6-7 

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.


1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!

2 உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். - பல்லவி

4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி

6 நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.

7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி       மத் 5: 10

அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


ஏரோது யோவானின் தலையை வெட்டச் செய்தான். யோவானுடைய சீடர் வந்து இயேசுவிடம் அறிவித்தனர்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-12


அக்காலத்தில், குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப் பற்றிய செய்தியைக் கேள்வியுற்றான். அவன் தன் ஊழியரிடம், “இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்” என்று கூறினான். ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவின் பொருட்டு யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் அவனிடம், “நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல” என்று சொல்லி வந்தார். ஏரோது அவரைக் கொலை செய்ய விரும்பினான்; ஆயினும் மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான். ஏரோதின் பிறந்த நாளில் ஏரோதியாளின் மகள் அவையினர் நடுவில் நடனம் ஆடி ஏரோதை அகமகிழச் செய்தாள். அதனால் அவள் எதைக் கேட்டாலும் அளிப்பதாக அவன் ஒரு வாக்குறுதியை ஆணையிட்டு அறிவித்தான். அவள் தன் தாய் சொல்லிக் கொடுத்தபடியே, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்” என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் வருந்தினான்; ஆனாலும் தான் விருந்தினர்முன் ஆணையிட்டதால் அதை அவளுக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான்; ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்; அவருடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வரச் செய்து அதைச் சிறுமியிடம் கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள். யோவானுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்; பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர்.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ் 


Thursday, July 29, 2021

17th Ordinary Week Friday - பொதுக்காலம் 17ஆம் வாரம் - வெள்ளி

 பொதுக்காலம் 17ஆம் வாரம் - வெள்ளி 



Download pdf 

முதல் வாசகம்


சபையாய்க் கூடி ஓய்வு நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள்.

லேவியர் நூலிலிருந்து வாசகம் 23: 1, 4-11, 15-16, 27, 34டி-38


ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீங்கள் சபையாகக் கூடிக் குறிப்பிட்ட நாள்களில் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவரின் பண்டிகை நாள்களாவன: முதல் மாதம் பதினான்காம் நாள் மாலையில் ஆண்டவருக்கான பாஸ்கா. அந்த மாதம் பதினைந்தாம் நாள் ஆண்டவருக்கான புளிப்பற்ற அப்பப் பண்டிகை; ஏழு நாள் புளிப்பற்ற அப்பங்களை உண்பீர்கள். பண்டிகையின் முதல் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது. ஏழு நாளும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். ஏழாம் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது. ஆண்டவர் மோசேயிடம் கூறியது: இஸ்ரயேல் மக்களிடம் நீ சொல்ல வேண்டியது: நான் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் வந்து அறுவடை செய்யும்போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க் கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். உங்கள் சார்பாக ஏற்கத் தக்கதாக, குரு அந்தத் தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின்வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார். ஆரத்திப் பலியாகக் கதிர்க் கட்டினைக் கொண்டு வந்த ஓய்வு நாளின் மறு நாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும். ஏழாம் ஓய்வு நாளுக்கு மறு நாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள். அந்த ஏழாம் மாதம் பத்தாம் நாள், பாவக் கழுவாய் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் உங்களையே தாழ்த்திக் கொண்டு, ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளன்று ஆண்டவரின் கூடாரப் பெருவிழா தொடங்குகின்றது. அது ஏழு நாள்கள் தொடரும். முதல் நாள் திருப்பேரவை கூடும் நாள்; அன்று எத்தகைய வேலையையும் செய்ய வேண்டாம். ஏழு நாள்களும் ஆண்டவருக்கு நெருப்புப் பலி செலுத்துங்கள். எட்டாம் நாளன்று திருப்பேரவை கூடும்; அன்றும் ஆண்டவருக்கு நெருப்புப் பலி செலுத்துங்கள். அது நிறைவு நாள். அன்று எத்தகைய வேலையையும் செய்யலாகாது. ஓய்வு நாளில் ஆண்டவருக்குச் செலுத்தும் காணிக்கைகள், நேர்ச்சைகள், தன்னார்வப் பலிகள் தவிர, அந்தந்த நாள்களுக்கு ஏற்ப எரிபலி, உணவுப் படையல், இரத்தப் பலி, நீர்மப் படையல் முதலிய பலிகளைச் செலுத்தத் தக்கதாகவும் சபையாய்க் கூடி அந்த நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள். இவையே நீங்கள் கொண்டாட வேண்டிய விழாக்கள்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி 


பதிலுரைப் பாடல்        திபா 81: 2-3. 4-5. 9-10ய 

பல்லவி: நமது வலிமையாகிய கடவுளை மகிழ்ந்து பாடுங்கள்.


2 இன்னிசை எழுப்புங்கள்; மத்தளம் கொட்டுங்கள்; யாழும் சுரமண்டலமும் இசைத்து இனிமையாய்ப் பாடுங்கள்.

3 அமாவாசையில், பௌர்ணமியில், நமது திருவிழா நாளில் எக்காளம் ஊதுங்கள். - பல்லவி

4 இது இஸ்ரயேல் மக்களுக்குரிய விதிமுறை; யாக்கோபின் கடவுள் தந்த நீதிநெறி.

5 அவர் எகிப்துக்கு எதிராகச் சென்றபொழுது யோசேப்புக்கு அளித்த சான்று இதுவே. அப்பொழுது நான் அறியாத மொழியைக் கேட்டேன். - பல்லவி

9 உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது.

10ய உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்து வந்த கடவுளாகிய ஆண்டவர் நானே. - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி     1 பேது 1: 25

அல்லேலூயா, அல்லேலூயா! “நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.” இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


இவர் தச்சருடைய மகன் அல்லவா? எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது?

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58


அக்காலத்தில், இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ் 


Wednesday, July 28, 2021

17th Ordinary Week Thursday - பொதுக்காலம் 17ஆம் வாரம் - வியாழன்

 பொதுக்காலம் 17ஆம் வாரம் - வியாழன் 


Download pdf 

முதல் வாசகம்


விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 40: 16-21, 34-38


அந்நாள்களில் ஆண்டவர் கட்டளையிட்டபடியெல்லாம் மோசே செயல்பட்டார். இரண்டாம் ஆண்டில், முதல் மாதம், முதல் தேதியன்று திருஉறைவிடம் எழுப்பப்பட்டது. மோசே திருஉறைவிடத்தை எழுப்பினார்; பாதப் பொருத்துகளை வைத்து அதன்மேல் சட்டங்களைப் பொருத்தினார், குறுக்குச் சட்டங்களையும் பொருத்தினார்; தூண்களையும் நிறுத்தினார். திருஉறைவிடத்தின்மேல் அவர் கூடாரத்தை விரித்தார்; அதற்குமேல் கூடார மேல்விரிப்பை அமைத்தார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது. உடன்படிக்கைப் பலகையை அவர் எடுத்து, அதைப் பேழையில் வைத்தார். தண்டுகளைப் பேழையில் செருகினார். இரக்கத்தின் இருக்கையைப் பேழையின்மேல் வைத்தார். திருஉறைவிடத்தினுள் பேழை எடுத்துச் செல்லப்பட்டது. திருத்தூயகத் திரை தொங்கவிடப்பட்டு, உடன்படிக்கைப் பேழை மறைக்கப்பட்டது. இதையும் ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார். பின்பு, மேகம் சந்திப்புக் கூடாரத்தை மூடிற்று; ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று. சந்திப்புக் கூடாரத்தின் மேலே மேகம் நின்றிருந்ததாலும், ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பியதாலும் மோசே உள்ளே நுழைய முடியாமல் போயிற்று. இஸ்ரயேல் மக்கள் தங்கள் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், மேகம் திருஉறைவிடத்தை விட்டு எழும்பும் போதெல்லாம் புறப்பட்டுச் செல்வார்கள். மேகம் எழும்பாதிருக்கும் போதோ, அது மேலே எழும்பும் நாள் வரை, அவர்கள் புறப்பட மாட்டார்கள். ஏனெனில் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் திருஉறைவிடத்தின்மேல் பகலில் ஆண்டவரின் மேகம் இருப்பதையும், இரவிலோ அதில் நெருப்பு இருப்பதையும் இஸ்ரயேல் வீட்டார் காண்பார்கள்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி 


பதிலுரைப் பாடல்     திபா 84: 2. 3. 4-5, 7. 10

பல்லவி: ஆண்டவரே! உம் உறைவிடம் எத்துணை அருமையானது!


2 என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது  உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை

மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. -பல்லவி

3 படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. -பல்லவி

4 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.

5 உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர்.

7 அவர்கள் நடந்து செல்கையில் மேலும் மேலும் வலிமை பெறுகின்றார்கள். -பல்லவி

10 வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும், என் கடவுளது இல்லத்தின் வாயிற் காவலனாய் இருப்பதே இனிமையானது. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 47-53


அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: “விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.” 

“இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?” என்று இயேசு கேட்க, அவர்கள்,  “ஆம்” என்றார்கள். பின்பு அவர், “ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்” என்று அவர்களிடம் கூறினார். இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ் 


17th Ordinary Week Wednesday - பொதுக்காலம் 17ஆம் வாரம் - புதன்

 பொதுக்காலம் 17ஆம் வாரம் - புதன் 

Download pdf 



முதல் வாசகம்


மோசேயின் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்ததைக் கண்டு அவரை அணுகிச் செல்ல அஞ்சினர்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 34: 29-35


மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கிச் செல்கையில், உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் தம் கைகளில் தாங்கிக் கொண்டிருந்தார். மோசே கடவுளோடு பேசியதால் அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்தது. ஆனால் மோசே அதை அறியவில்லை. ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் மோசேயைப் பார்த்தபோது, அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்ததைக் கண்டு அவரை அணுகிச் செல்ல அஞ்சினர். ஆனால் மோசே அவர்களைப் கூப்பிட்டார். ஆரோனும் மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் அவரை நோக்கி வந்தனர். மோசேயும் அவர்களிடம் பேசினார். பின்னர் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அவர் அருகில் வந்தனர். அப்போது, ஆண்டவர் சீனாய் மலையில் தமக்கு அறிவித்த அனைத்தையும் அவர் அவர்களுக்குக் கட்டளையாகக் கொடுத்தார். மோசே அவர்களோடு பேசி முடித்தபின், தம் முகத்தின் மேல் ஒரு முக்காடு போட்டுக் கொண்டார். மோசே ஆண்டவரோடு உரையாடும்படி அவர் திருமுன் செல்வதுமுதல் வெளியே வருவதுவரை முக்காட்டை எடுத்து விடுவார். அங்கிருந்து வெளியே வந்து, அவருக்குக் கட்டளையிடப் பட்டவற்றை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துக் கூறுவார். இஸ்ரயேல் மக்கள் மோசேயின் முகத்தைப் பார்க்கும்போது, மோசேயின் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருக்கும். மோசே ஆண்டவரோடு பேசச் செல்லும்வரை தம் முகத்தின் மேல் மீண்டும் முக்காடு போட்டுக் கொள்வார்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி 


பதிலுரைப் பாடல்         திபா 99: 5. 6. 7. 9 

பல்லவி: நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்.


5 நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது அரியணைமுன் தாள் பணிந்து வணங்குங்கள்; அவரே தூயவர்! - பல்லவி

6 மோசேயும் ஆரோனும் அவர்தம் குருக்கள்; அவரது பெயரால் மன்றாடுவோருள் சாமுவேலும் ஒருவர்; அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினர்; அவரும் அவர்களுக்குச் செவிசாய்த்தார். - பல்லவி

7 மேகத் தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர்கள் அவருடைய ஒழுங்குமுறைகளையும் அவர் அவர்களுக்குத் தந்த நியமங்களையும் கடைப்பிடித்தார்கள். - பல்லவி

9 நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது திருமலையில் அவரைத் தொழுங்கள். ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி    யோவா 15: 15டி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


தமக்குள்ள யாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-46


அக்காலத்தில், இயேசு மக்களை நோக்கிக் கூறியது: “ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச்செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.”


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ் 


17th Ordinary Week Tuesday - பொதுக்காலம் 17ஆம் வாரம் - செவ்வாய்

 பொதுக்காலம் 17ஆம் வாரம் - செவ்வாய் 



Download pdf 

முதல் வாசகம்

ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 33: 7-11; 34: 5-9, 28


அந்நாள்களில், மோசே பாளையத்துக்கு வெளியே கூடாரத்தைத் தூக்கிச் செல்வதும் பாளையத்திற்கு வெகு தூரத்தில் கூடாரம் அடிப்பதும் வழக்கம். அதற்கு அவர் சந்திப்புக் கூடாரம் என்று பெயரிட்டார். ஆண்டவரைத் தேடும் யாவரும் பாளையத்துக்கு வெளியே உள்ள சந்திப்புக் கூடாரத்திற்குச் செல்வர். மோசே கூடாரத்துக்குச் செல்லும் போதெல்லாம் மக்கள் அனைவரும் அவரவர் கூடார நுழைவாயிலில் எழுந்து நின்று கொண்டு, அவர் கூடாரத்தில் நுழையும்வரை அவரைப் பார்த்துக் கொண்டேயிருப்பர். மோசே கூடாரத்தில் நுழைந்ததும், மேகத்தூண் இறங்கி வந்து கூடார நுழைவாயிலில் நின்று கொள்ளும். அப்போது கடவுள் மோசேயிடம் பேசுவார். கூடார நுழைவாயிலில் மேகத்தூண் நின்று கொண்டிருப்பதை மக்கள் அனைவரும் காண்பர். அப்போது அவரவர் கூடார நுழைவாயிலில் நின்று கொண்டே மக்கள் அனைவரும் வணங்கித் தொழுவர். ஒருவன் தன் நண்பனிடம் பேசுவது போலவே ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார். பின்னர் மோசே பாளையத்துக்குத் திரும்புவார். இளைஞனும் நூனின் மகனுமான யோசுவா என்ற அவருடைய உதவியாளர் கூடாரத்தை விட்டு அகலாமல் இருப்பார். ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்று கொண்டு, ‘ஆண்டவர்’ என்ற பெயரை அறிவித்தார். அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், “ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்கு உரியவர். ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்; கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்; ஆயினும், தண்டனைக்குத் தப்பவிடாமல் தந்தையரின் கொடுமையைப் பிள்ளைகள் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும், மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டித்துத் தீர்ப்பவர்” என அறிவித்தார். உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, “என் தலைவரே! நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்” என்றார். அவர் அங்கே நாற்பது பகலும் நாற்பது இரவும் ஆண்டவருடன் இருந்தார். அப்போது அவர் அப்பம் உண்ணவும் இல்லை; தண்ணீர் பருகவும் இல்லை. உடன்படிக்கையின் வார்த்தைகளான பத்துக் கட்டளைகளை அவர் பலகைகளின் மேல் எழுதினார்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி 


பதிலுரைப் பாடல் திபா 103: 6-7. 8-9. 10-11. 12-13 

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.


6 ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார்.

7 அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். - பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.

9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினம் கொள்ளுபவரல்லர். - பல்லவி

10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை.

11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. - பல்லவி

12 மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவில் உள்ளதோ, அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார்.

13 தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையே விதையாம், அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைபவர் எல்லாம் என்றென்றும் நிலைத்திருப்பர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 36-43


அக்காலத்தில், இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, “வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்” என்றனர். அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்: “நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர். எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ் 






Monday, July 26, 2021

17th Ordinary Ween Monday - பொதுக்காலம் 17ஆம் வாரம் - திங்கள்

 பொதுக்காலம் 17ஆம் வாரம் - திங்கள் 



Download pdf 

முதல் வாசகம்

இம்மக்கள் தங்களுக்காகப் பொன்னால் தெய்வங்களை உருவாக்கிப் பெரும்பாவம் செய்துவிட்டார்கள்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 15-24, 30-34


அந்நாள்களில், மோசே திரும்பி மலையிலிருந்து இறங்கி வந்தார். முன், பின் இரு புறமும் எழுதப்பட்ட உடன்படிக்கைப் பலகைகள் இரண்டும் அவர் கையில் இருந்தன. அப்பலகைகள் கடவுளால் செய்யப்பட்டவை. பலகைகள் மேல் பொறிக்கப்பட்டிருந்த எழுத்தும் கடவுள் எழுதியதே. அந்நேரத்தில் மக்கள் எழுப்பிய கூச்சலைக் கேட்ட யோசுவா மோசேயை நோக்கி, “இது பாளையத்திலிருந்து எழும் போர் முழக்கம்” என்றார். அதற்கு மோசே, “இது வெற்றி முழக்கமோ தோல்விக் குரலோ அன்று. களியாட்டம்தான் எனக்குக் கேட்கிறது” என்றார். பாளையத்தை அவர் நெருங்கி வந்தபோது கன்றுக்குட்டியையும் நடனங்களையும் கண்டார். மோசேக்குச் சினம் மூண்டது. அவர் தம் கையிலிருந்து பலகைகளை மலையடிவாரத்தில் வீசியெறிந்து உடைத்துப் போட்டார். அவர்கள் செய்து வைத்திருந்த கன்றுக்குட்டியை எடுத்து நெருப்பில் சுட்டெரித்து மிருதுவான பொடியாகு மட்டும் அதை இடித்துத் தண்ணீரில் தூவி, இஸ்ரயேல் மக்களைக் குடிக்கச் செய்தார். பின்னர் மோசே ஆரோனை நோக்கி, “இம்மக்கள் உமக்கு என்ன செய்தார்கள்? இவர்கள் மேல் பெரும் பாவம் வந்துசேரச் செய்துவிட்டீரே!” என்று கேட்டார். அதற்கு ஆரோன், “என் தலைவராகிய நீர் சினம் கொள்ள வேண்டாம். இம்மக்கள் பொல்லாதவர்கள் என்பது உமக்குத் தெரியுமே! அவர்கள் என்னை நோக்கி, ‘எங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்களைச் செய்து கொடும். எங்களை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை’ என்றனர். நானும் அவர்களிடம் ‘பொன் அணிந்திருப்பவர்கள் கழற்றித் தாருங்கள்’ என்றேன். அவர்களும் என்னிடம் தந்தனர். நான் அதனை நெருப்பில் போட, இந்தக் கன்றுக்குட்டி வெளிப்பட்டது” என்றார். மறுநாள் மோசே மக்களை நோக்கி, “நீங்கள் பெரும் பாவம் செய்து விட்டீர்கள்; இப்போது நான் மலைமேல் ஏறி ஆண்டவரிடம் செல்லப் போகிறேன். அங்கே ஒருவேளை உங்கள் பாவத்திற்காக நான் கழுவாய் செய்ய இயலும்” என்றார். அவ்வாறே மோசே ஆண்டவரிடம் திரும்பிவந்து, ‘ஐயோ, இம்மக்கள் தங்களுக்காகப் பொன்னால் தெய்வங்களை உருவாக்கிப் பெரும்பாவம் செய்துவிட்டார்கள். இப்போதும், நீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளும். இல்லையேல், நீர் எழுதிய உம் நூலிலிருந்து என் பெயரை நீக்கிவிடும்” என்றார். ஆண்டவரோ மோசேயிடம், “எவன் எனக்கு எதிராகப் பாவம் செய்தானோ, அவனையே என் நூலிலிருந்து நீக்கி விடுவேன். நீ இப்போதே புறப்பட்டுப் போ. உன்னிடம் நான் கூறியுள்ளபடி மக்களை நடத்திச் செல். இதோ என் தூதர் உன் முன்னே செல்வார். ஆயினும் நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாளில் அவர்கள் பாவத்தை அவர்கள் மேலேயே சுமத்துவேன்” என்றார்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி 


பதிலுரைப் பாடல்     திபா 106: 19-20. 21-22. 23 

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்! அல்லது: அல்லேலூயா.


19 இஸ்ரயேலர் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியைச் செய்துகொண்டனர்; வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்;

20 தங்கள் ‘மாட்சி’க்குப் பதிலாக, புல் தின்னும் காளையின் உருவத்தைச் செய்து கொண்டனர்;  ℟

21 தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்;

22 காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர்.      ℟

23 ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்; ஆனால், அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர்போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார்.℟


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி     யாக் 1: 18

அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


கடுகு விதை வளர்ந்து வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35


அக்காலத்தில், இயேசு மக்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்." அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: “பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்." இவற்றை எல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. “நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்” என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ் 


Friday, July 23, 2021

17th Ordinary Week Sunday - பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு



Download pdf 

திருப்பலி முன்னுரை: 

இறையேசுவில் பிரியமானவர்களே,

இறை இயேசுவில் அன்பிற்கினியவர்களே! இன்று ஆண்டின் பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறு வழிபாட்டினை சிறப்பிக்க வந்திருக்கும் உங்கள் அனைவரையும்  வரவேற்கிறேன். இன்றைய இறைவழிபாட்டின் வாசங்கள் அனைத்துமே அன்பின் உச்சத்தை எடுத்துரைக்கின்றது. அதாவது, அன்பின் உச்சமானது பகிர்தலில் அடங்கியுள்ளது.  இப்பகிர்வானது உளமாறவும், முழுநிறைவான தாகவும் அமைய வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வழியாக இயேசு நமக்கு கற்பிக்கிறார். "பகிர்வானது  நமது உள்ளத்திலிருந்து நமக்கு அடுத்திருப்பவரின் வாழ்வின் முழு நிறைவை நோக்கியதாக அமைய வேண்டும்". மேலும், இத்தகைய பகிர்வினை நாம் நமது குடும்பத்திலும்,

நமக்கு அடுத்திருப்பவரிடத்திலும், நமது  சமூகத்திலும் உளமார வும் முழுமையான நிறைவை நோக்கியும் நாம் செய்கிறோமா? என்று நம்மையே நாம் சற்று அலசிப் பார்ப்போம்.  மேலும், பகிர்தலில் தான் வாழ்வு அடங்கியுள்ளது என்பதனை உணர்ந்தவர்களாய்,அதற்கான வரம் வேண்டி இக்கல்வாரி பலியில் தொடர்ந்து இறைவனிடம் மன்றாடுவோம்.


வருகைப் பல்லவி   திபா 67:6-7,36 

கடவுள் தமது தூயகத்தில் உறைகின்றார்: தமது இல்லத்தில் மக்கள் ஒன்று பட்டு வாழச் செய் கின்ற கடவுளே அவர்களுக்கு வலிமையையும் மனத்திடத்தையும் அளிப்பார்.


அருட்பணியாளர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.

எல்லோரும்: ஆமென்.

அ.ப.: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக


தண்ணீருக்கு ஆசி வழங்குதல்

ஆண்டவரே, ஈசோப் புல்லினால்

என்மேல் தெளிப்பீர்

நானும் தூய்மையாவேன்.

நீரே என்னைக் கழுவ

நானும் உறைபனிதனிலும் வெண்மையாவேன்.


இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கேற்ப

என்மேல் இரக்கம் கொள்வீர்.

தந்தையும் மகனும் தூய ஆவியாரும்

மாட்சியும் புகழும் ஒன்றாய்ப் பெறுக.

தொடக்கத்தில் இருந்தது போல

இன்றும் என்றும் என்றென்றும் – ஆமென்.

(அல்லது)

பாவத்துயர்ச் செயல்

அ.ப.: சகோதர, சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.

(சிறிது நேரம் அமைதி)

எல்.: எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கின்றேன், ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். (மார்பில் தட்டிக் கொண்டு)

என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால் எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும் சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.


அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

எல்.: ஆமென்


உன்னதங்களிலே (பாடல்)

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.

உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி உண்டாகுக.

புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே.

உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மாட்சிப் படுத்துகின்றோம் யாம்.

உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவராகிய இறைவனே இணையில்லாத விண்ணரசே.

ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் வல்ல தந்தை இறைவனே.

ஒரே மகனாக உதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.

ஆண்டவராகிய இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.

தந்தையினின்று என்றென்றுமாக உதித்த இறைவன் மகனே நீர்.

உலகின் பாவம் போக்குபவரே நீர் எம் மீது இரங்குவீர்.

உலகின் பாவம் போக்குபவரே எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர்.

தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, நீர் எம் மீது இரங்குவீர்.

ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்!

நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்!

தூய ஆவியோடு தந்தை இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே.

ஆமென்.


திருக்குழும மன்றாட்டு

உம்மை எதிர்நோக்கி இருப்போரைப் பாதுகாப்பவரான இறைவா, உம்மால் அன்றி ஆற்றல் வாய்ந்ததும் புனிதமானதும் எதுவும் இல்லை; எங்கள் மீது உமது இரக்கத்தை மேன்மேலும் பொழிவதால் உம்மை எங்கள் தலைவராகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டு நிலையானவற்றை நாங்கள் இப்போதே பற்றிக்கொள்ள நிலையற்ற இன்றைய நன்மைகளைப் பயன்படுத்தச் செய்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற, எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

எல்.: ஆமென்


முதல் வாசக முன்னுரை

இறையேசுவில் பிரியமானவர்களே

இன்றைய முதல் வாசகம் அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது ஆண்டவர் பகிர்தலை பற்றி நமக்கு எடுத்துரைக்கிறார் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்ட எல்லா மக்களும் உணவு உண்டனர் என்பதை கூறும் இவ்வாசகத்திற்கு நம்பிக்கையோடு செவிமடுப்போம்


முதல் வாசகம்

இம்மக்கள் உண்ட பின்னும் மீதி இருக்கும்.

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 4:42-44


அந்நாள்களில், பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வந்தார். எலிசா, “மக்களுக்கு உண்ணக் கொடு” என்றார். அவருடைய பணியாளன், “இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?” என்றான். அவரோ, “இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் ‘உண்ட பின்னும் மீதி இருக்கும்’ என்று ஆண்டவர் கூறுகிறார்” என்றார். அவ்வாறே அவன் அவர்களுக்குப் பரிமாற, அவர்கள் உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல்  திபா 145: 10-11. 15-16. 17-18 

பல்லவி: ஆண்டவரே, எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.


10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.

11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். ℟ 

15 எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன் தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்.

16 நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். ℟ 

17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.

18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.      ℟ 

  

இரண்டாம் வாசக முன்னுரை

இறையேசுவில் பிரியமானவர்களே

இன்றைய இரண்டாம் வாசகம் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது நாம் நமது அழைப்புக்கு ஏற்ப வாழ்வு வாழவேண்டும் என்பதை தூய பவுல் எடுத்துரைக்கிறார். ஒரே எதிர்நோக்கோடு வாழ அழைப்பு விடுக்கும் இரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்


இரண்டாம் வாசகம்


ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; ஆண்டவரும் ஒருவNர் திருமுழுக்கும் ஒன்றே.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-6


சகோதரர் சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

அனைவரும் வயிறார உண்டனர்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15


அக்காலத்தில், இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறு கரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, “இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறு மொழியாக, “இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே” என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, “இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?” என்றார். இயேசு, “மக்களை அமரச் செய்யுங்கள்” என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டியமட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், “ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்” என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், “உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


மறையுரை:

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடன் உழைப்பார்களே! 

இன்று தாய்த்திரு அவையோடு இணைந்து ஆண்டின் பொதுக்காலம் 17-ம் ஞாயிறை சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறோம.; இன்றைய இறை சிந்தனையாக நாம் எவ்வாறு இறைபணியில் பகிர்வில் இயேசுவோடு உடன் உழைப்பார்களாக மாற முடியும் என்று வாசகங்கள் அழைப்பு விடுக்கிறது. 

ஒருமுறை ஒரு சிறுவன் ஒரு சிறிய உண்டியல் பெட்டியை தூக்கிக் கொண்டு வீடு வீடாய் சென்று எங்கள் ஆலயத்தை கட்டுவதற்கு ஏதாவது நன்கொடை கொடுங்கள் என்று கேட்டான.; ஒரு வீட்டிற்கு சென்றபோது அங்கிருந்த பெண்மணி அந்த சிறுவனின் முயற்சியை கண்டு வியந்து போனாள.; ‘தம்பி இந்த கட்டிட பணிக்கு பொறுப்பாளரா?’ என்று அந்தப் பெண்மணி வினவினாள். அந்த சிறுவனோ ‘நான் இல்லை கடவுள் தான் இதற்கு பொறுப்பு’ என்று பதில் மொழி கூறினான். ‘அப்படியானால் நீ யார’; என்று கேட்டாள் அந்தப் பெண்மணி. அந்த சிறுவனோ, ‘நான் கடவுளின் வேலைக்கு உடன் உழைப்பாளர’.; என்று பதில் கூறினான் 

ஆம் அன்பிற்குரியவர்களே! இந்த நிகழ்வில் வரும் சிறுவனை போல் நாமும் இறைபணியில் உடன் உழைப்பார்களாக வாழ முற்பட வேண்டும்


இன்றைய முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும் மிகவும் தொடர்புடையதாக இருக்கிறது. அப்பம் பகிர்ந்து உண்ணும் நிகழ்ச்சி பற்றி எல்லா நற்செய்தியாளர்கள் பேசுகின்றனர். ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில், அப்பம் பகிர்தலும,; எலிசா வாழ்வில் இடம்பெறும் அப்பம் பகிர்தலுக்கும் இடையே ஒரு நெருக்கமான உறவு இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் பகிர்தலில் இறைவனின் உடன் உழைப்பாழர் திகழ்வதை நாம் காண்கிறோம். பாலைநிலத்தில் மன்னாவை பொழிந்த இறைவனுக்கு இந்த அப்பம் பலுகுதல் மிக எளிதான ஒன்று. தன்னுடைய அற்புத வல்லமை கரத்தினால் மக்களுக்கு உணவு கொடுத்திருக்க முடியும.; ஆனால் இறைவன் தன் பகிர்தலை எலிசா இறைவாக்கினர் வழியாகவும், பாகால் சாலிசாவைச் சார்ந்த மனிதர் வழியாகவும் நிகழ்வதை பார்க்கிறோம்.

கண்டிப்பாக அந்த மனிதர் இந்த வல்ல செயல்கள் நடைபெறும் என்று நம்பி இருக்க மாட்டார.; ஆனால் ஆண்டவர் குறையுள்ளதையும் பயன்படுத்தி நிறைவாய் பகிர்ந்து கொடுக்கிறார்.  மேலும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் மக்கள் அனைவரும் உண்ட பிறகு மீதியாய் இருந்தது என்று 2அரசர்கள் 4: 44 வாசிக்கிறோம்

இன்றைய நற்செய்தி வாசகமானது (யோவான் 6:1 – 15)இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளிப்பதை பார்க்கிறோம.; கடவுள் மனிதருக்கு உணவளித்து வாழவைக்கிறார். அவர் தரும் மூன்று வகையான உணவுகள் முறையே, 

1. உடல் உணவு (யோவான்6: 1-15)

2. இறைவார்த்தை உணவு (யோவான்6:35-50)

3. நற்கருணை உணவு (யோவான்6:51-58) 

முதல் பகுதியான அப்பம் பகிர்தல் நிகழ்வு பற்றி யோவான் எழுதிய போது, அன்றைய நற்கருணை வழிபாடு சொற்களை அவர் பயன்படுத்தி இருக்க வேண்டும.; இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்வு பற்றி யோவான் வெளிப்படையாகப் பேசவில்லை. எனினும் இங்கு அதன் பிரதிபலிப்பை தெளிவாக காணலாம்.

 யோவான் நற்செய்தியாளர் இரண்டு முக்கியமான காரியங்களை இந்த பகிர்தலில் குறிப்பிடுகிறார் 

1. இயேசுவின் பரிவிரக்கம் 

2. சிறுவனின் பகிரும்; விருப்பம்


இயேசுவின் பரிவிரக்கம் 

ஒரு பழமொழி இவ்வாறு சொல்கிறது ‘இரக்கத்தின் ஆன்மா உலகை தன்னுடைய அன்பு என்னும் குறியீட்டால் அறிகிறது’. இயேசு தன் மக்களை அன்பின் லென்ஸினால் உற்று நோக்குகிறார்ஈ பரிவு கொள்கிறார். மாற்கு 5:21-43 இயேசு யாயீடைய மகளை உயிர்ப்பித்த பிறகு, அவருடைய பெற்றோரிடம் சிறுமிக்கு உணவு கொடுக்க சொல்கிறார். இயேசுவுக்கு தெரிந்திருக்கும் அந்த மகள் பசியாய் இருக்கிறாள் என்று. ஆயரில்லா ஆடுகளை பார்த்த இயேசு, நல்ல ஆயனாய் இருந்து உணவு கொடுக்க விரும்பினார.; 

அந்த மக்கள் கூட்டம் பசியாய் திரும்பி செல்வதை இயேசு விரும்பவில்லை. இயேசுவின் பரிவுமிக்க முகத்திற்கு இன்னும் மெருகூட்டும் விதமாய் அந்த சிறுவன் முன் வருகிறான.; சிறுவனின் விருப்பம் 

இயேசு நினைத்திருந்தால,; எதுவுமே இல்லாமல் ஒரே வார்த்தையால் உலகத்தைப் படைத்தது போல் உணவை கொடுத்திருக்க முடியும். ஆனால் இறை திட்டமானது பிறரையும் பங்கெடுக்க வைப்பது. உடன் உழைப்பாளாராய் வாழ அழைப்பது. இயேசுவைப் பிலிப்பிடம,; ‘நீங்களே உணவு கொடுங்கள’; என்றார். ஆனால் பிலிப்பு தன்னுடைய அறிவு கணக்கை மட்டும் நம்பி எப்படி இவ்வளவு பேருக்கு உணவு கொடுக்க முடியும் என்றார். ஏனென்றால் அவரிடம் தேவையான உணவு வாங்க போதுமான பணமில்லை. 

அடுத்ததாக அந்திரேயா, இயேசுவிடம் இங்கே ஒரு சிறுவன் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வைத்திருக்கிறார் என்றார். ஆனால் இயேசு இதை பலுகிப்பெருகச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையினால் சொல்லவில்லை. அறிவுபூர்வமான கணக்குகள், திறமைகள் இயேசுவின் அற்புதத்திற்கு முன்பாக தவிடுபொடியானது. இறுதியாக அந்த சிறுவன் முன் வந்து தன்னிடம் இருப்பதை இயேசுவுக்கு கொடுக்கிறான். ஒருவேளை இயேசுவின் இந்த பகிர்வில் நானும் ஒரு கருவியாய், உடன் உழைப்பாளராய் இருக்க மாட்டேனா என்று அவர் நினைத்திருக்கலாம.; 

இயேசு சிறுவனின் குறைவான அப்பத்தையும், மீன்களையும் நிறைவுள்ளதாய் மாற்றி அனைவரையும் தன்னுடைய பந்தியில் அமரச் செய்கிறார். 

1 கொரிந்தியர் 3: 9 புனித பவுலடியார் சொல்கிறார், “நாம் அனைவரும் கடவுளின் உடன் உழைப்பாளர்கள்” 

கடவுள் நம்மை இதற்காகவே படைத்து தேர்ந்தெடுத்து உயர்த்துகிறார். சுhதாரணமாக இருக்கக்கூடிய நம் ஒவ்வொருவரையும் அவருடைய பகிர்வின் பணியிலே ஈடுபட அழைக்கிறார். 

கேரளாவில் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட போது நிறைய பேர் உணவு பொட்டலங்கள் உடை மற்றும் பொருட்கள் கொடுத்து உதவி செய்தார்கள். ஒரு சிறுவன் தான் படிக்கின்ற சமயத்திலே தனக்குத் தின்பத்திற்காக தரும் காசை சேர்த்து ஒரு உண்டியல் வைத்திருந்தான். இந்த நிகழ்வை கேட்டவுடன் நானும் ஏதாவது என் பங்கிற்கு கொடுப்பேன் என்று சொல்லி அதை அப்படியே கேரள மாநில முதல்வரிடம் ஒப்படைத்தான். 

பிரியமானவர்களே! இன்று நம்மிடம் எது இருந்தாலும் சரி பணமோ, பொருளோ, திறமையோ, படிப்போ, எல்லாவற்றையும் பிறரோடு பகிர்ந்து இயேசுவின் பணியில் உடன் உழைப்பாளர்களாக மாறுவோம.; சின்னஞ்சிறிய என் சகோதர சகோதரிகளுக்கு எல்லாம் செய்ததை எனக்கே செய்தீர்கள் என்று விவிலியம் சொல்கிறது. நாமும் இறைவனின் பங்காளர்களாக, உறவினர்கயாக, உடன் உழைப்பாளர்களாக வாழும் வரத்தை வேண்டி அதற்காக முயற்சி எடுப்போம் 

இறையாசீர் என்றும் உங்களோடு இருப்பதாக!


நம்பிக்கை அறிக்கை

1. விண்ணையும் மண்ணையும் படைத்தவராம்

கடவுள் ஒருவர் இருக்கின்றார்

தந்தை, மகன், தூய ஆவியராய்

ஒன்றாய் வாழ்வோரை நம்புகிறேன்.


2. தூய ஆவியின் வல்லமையால்

இறைமகன் நமக்காய் மனிதரானார்

கன்னி மரியிடம் பிறந்தவராம்

இயேசுவை உறுதியாய் நம்புகிறேன்


3. பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்

சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார்

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்

இறப்பின் மீதே வெற்றி கொண்டார்.


4. விண்ணகம் வாழும் தந்தையிடம்

அரியணைக் கொண்டு இருக்கின்றார்

உலகம் முடியும் காலத்திலே

நடுவராய் திரும்பவும் வந்திடுவார்


5. தூய ஆவியாரை நம்புகிறேன்

பாரினில் அவர் துணை வேண்டுகிறேன ;

பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று

பரிகார வாழ்வில் நிலைத்திடுவேன்.


6. திரு அவை உரைப்பதை நம்புகிறேன்

புனிதர்கள் உறவை நம்புகிறேன்

உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை

உறுதியுடனே நம்புகிறேன் - ஆமென்


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. உலகெல்லாம் சென்று படைப்பிற்கு நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் என்று கூறி நற்செய்திப் பணி செய்ய நீர் தேர்ந்தெடுத்த திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரும் உமது வல்லமையோடு திருச்சபை செழித்து வளர உழைக்கும் அருள் தர வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.


2. நற்செயல்களின் மூலம் மக்களை தம்மோடு அணைத்தவரே எம் இறைவா! இந்நாட்டை ஆளும் தலைவர்கள் ஏதேச்சாரப் போக்கு மற்றும் அதிகார போக்கைக் கைவிட்டு தனக்குரிய கடமைகளை தவறாமல் செய்து நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.


3. இறைவாக்கு உரைக்க அழைப்பவரே எம் இறைவா மறைப்போதக நாடுகளில் நற்செய்திப் பணி செய்து வரும் எம் சகோதர சகோதரிகளை பாதுகாத்து வழிநடத்தவும் இளைஞர் இளம்பெண்கள் அதிகமாக இறை பணியில் ஆர்வம் கொண்டு தேவ அழைத்தலை உணர்ந்து கொள்ளும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.


4. இரக்கத்தின் இறைவா எம் பகுதி வாழ் மக்களை ஆசீர்வதியும் மக்களின் வாழ்வு ஏற்றம் பெறவும் குடும்பத் தேவைகள் இறைவனால் சந்திக்கப்படவும் பொருளாதாரம் மேம்படவும் நாங்கள் சந்திக்கும் மனிதர்கள் வழியாக உமது திருவுளம் அறிந்து செயல்படவும் வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் அன்பு செய்யவும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.


அ.ப.: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்

எல்.: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும் நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வராக.


காணிக்கை மீது மன்றாட்டு          

ஆண்டவரே, நீர்தாமே வாரி வழங்கிய கொடைகளிலிருந்து நாங்கள் கொண்டுவரும் இக்காணிக்கைகளை ஏற்றருளும்; அதனால் உமது அருளின் ஆற்றலால் செயல்படும் இப்புனிதமிக்க மறைநிகழ்வுகள் இவ்வுலகில் எங்கள் வாழ்வைப் புனிதப்படுத்தி நிலையான பேரின்பத்துக்கு இட்டுச் செல்வனவாக. எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்.: ஆமென்


நற்கருணை மன்றாட்டு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: இதயங்களை மேலே எழுப்புங்கள்

எல்.: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்

அ.ப.: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்

எல்.: அது தகுதியும் நீதியும் ஆனதே


ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


உம் வார்த்தையான அவர் வழியாக அனைத்தையும் படைத்தீர். அவரையே மீட்பராகவும் ஈடேற்றுபவராகவும் எங்களுக்கு அனுப்பினீர். அவர் தூய ஆவியால் உடலெடுத்து, கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். அவர் உமது திருவுளத்தை நிறைவேற்றி, புனித மக்களை உமக்குப் பெற்றுத் தரத் தம் கைகளை விரித்துப் பாடுபட்டார். இவ்வாறு அவர் சாவை வென்று உயிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆகவே வானதூதரோடும் புனிதர் அனைவரோடும் சேர்ந்து,

நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்துரைத்து

ஒரே குரலாய்ச் சொல்வதாவது:

எல்.: தூயவர், தூயவர், தூயவர்.

வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.

விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன. உன்னதங்களிலே ஒசன்னா!

ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.

உன்னதங்களிலே ஒசன்னா!


அ.ப.: நம்பிக்கையின் மறைபொருள்

எல்.: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.


அ.ப.:இவர் வழிகாக இவரோடு இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே

தூய ஆவியாரின் ஒன்றிப்பில் எல்லா புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே

எல்.: ஆமென்

அ.ப.:மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்

எல்.: விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,

மண்ணுலகிலும் நிறைவேறுக எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும், எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.


அ.ப.: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறில்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.

எல்.: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே


அ.ப.: ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே, “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீNர் எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திருஅவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உம் திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

எல்.: ஆமென்


அ.ப.: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக

அ.ப.: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம்

எல்.: உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எம்மேல் இரக்கம் வையும். (2)

உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எமக்கு அமைதி அருளும்.


அ.ப.: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.

எல்.: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.


திருவிருந்துப் பல்லவி      திபா 102:2 

என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!


அல்லது


மத் 5:7-8 இரக்கமுடையோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்; தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர்;

ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனுடைய பாடுகளின் நிலையான நினைவாகிய இத்திரு உணவை உட்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு சொல்லற்கரிய அன்பினால் அவரே எங்களுக்கு அளித்துள்ள இக்கொடை எங்கள் மீட்புக்குப் பயன்பட அருள்வீராக எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்


நிறைவுச் சடங்கு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக

எல்.: ஆமென்

அ.ப.: சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று

எல்.: இறைவனுக்கு நன்றி


இந்த வார புனிதர் ஜூலை 29

புனித மார்த்தா 

பிறப்பு : பெத்தானியா

இவர் மரியா, லாசர் இவர்களின் உடன்பிறந்தவர். இவர் ஆண்டவரின் மேல் அளவுகடந்த அன்பும், பாசமும் கொண்டவர். இதனால் ஆண்டவரை தன் வீட்டிற்கு வரவழைத்து, அவருக்கு பணிவிடையும் புரிந்தார். இலாசர் இறந்த வேளையில், ஆண்டவர் இயேசு அங்கு இல்லாமல் போனதை எண்ணி கலங்கினார். இதையறிந்த இயேசு விரைந்து மார்த்தாவின் இல்லத்தை அடைந்தார். அப்போது மார்த்தா ஆண்டவரிடம் "நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார்", என்று முறையிட்டார். ஆண்டவர் ஒருவரே மெசியா, இறைமகன் என்பதை முழுமையாக நம்பினார். இயேசு மார்த்தாவின் நம்பிக்கையை பார்த்து, அவர் தன் சகோதரனின் இறப்பினால் அடைந்த துயரைக்கண்டு மன்றாட்டை ஏற்று, சகோதரர் இலாசரை உயிர்த்தெழ செய்தார். 

செபம்:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! உம் திருமகன் இயேசு, புனித மார்த்தாவின் வீட்டில் விருந்தினராக தங்கியிருக்கத் திருவுளமானார். அவருடைய வேண்டுதலால் நாங்கள் எங்கள் சகோதர, சகோதரிகளில் கிறிஸ்துவைக் கண்டு, அவர்களுக்கு உண்மையுடன் பணிபுரியவும், உமது விண்ணக வீட்டில் எங்களை கொண்டுவந்து சேர்க்கவும் அருள்புரிவீராக. இவற்றையெல்லாம் எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


கிறிஸ்துவின் ஆன்மாவே

கிறிஸ்துவின் ஆன்மாவே,

என்னைப் புனிதமாக்கும்.

கிறிஸ்துவின் திரு உடலே,

என்னை மீட்டருளும்.

கிறிஸ்துவின் திருஇரத்தமே,

எனக்கு எழுச்சியூட்டும்.

கிறிஸ்துவின் விலாவின் தண்ணீரே

என்னைக் கழுவிடுமே.


கிறிஸ்துவின் பாடுகளே

என்னைத் தேற்றிடுமே

ஓ ! நல்ல இயேசுவே

எனக்குச் செவிசாயும்

உம் திருக்காயங்களுள்

என்னை மறைத்தருளும்

உம்மிடமிருந்து என்னைப்

பிரிய விடாதேயும்


தீயப் பகைவரிடமிருந்து

என்னைக் காத்தருளும்

எனது இறப்பின் வேளையில்

என்னை அழைத்தருளும்

உம்மிடம் வர எனக்குக்

கட்டளையிட்டருளும்

புனிதர்களோடு எக்காலமும்

உம்மைப் புகழச் செய்யும் -ஆமென்


Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...