Friday, July 23, 2021

17th Ordinary Week Sunday - பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு



Download pdf 

திருப்பலி முன்னுரை: 

இறையேசுவில் பிரியமானவர்களே,

இறை இயேசுவில் அன்பிற்கினியவர்களே! இன்று ஆண்டின் பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறு வழிபாட்டினை சிறப்பிக்க வந்திருக்கும் உங்கள் அனைவரையும்  வரவேற்கிறேன். இன்றைய இறைவழிபாட்டின் வாசங்கள் அனைத்துமே அன்பின் உச்சத்தை எடுத்துரைக்கின்றது. அதாவது, அன்பின் உச்சமானது பகிர்தலில் அடங்கியுள்ளது.  இப்பகிர்வானது உளமாறவும், முழுநிறைவான தாகவும் அமைய வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வழியாக இயேசு நமக்கு கற்பிக்கிறார். "பகிர்வானது  நமது உள்ளத்திலிருந்து நமக்கு அடுத்திருப்பவரின் வாழ்வின் முழு நிறைவை நோக்கியதாக அமைய வேண்டும்". மேலும், இத்தகைய பகிர்வினை நாம் நமது குடும்பத்திலும்,

நமக்கு அடுத்திருப்பவரிடத்திலும், நமது  சமூகத்திலும் உளமார வும் முழுமையான நிறைவை நோக்கியும் நாம் செய்கிறோமா? என்று நம்மையே நாம் சற்று அலசிப் பார்ப்போம்.  மேலும், பகிர்தலில் தான் வாழ்வு அடங்கியுள்ளது என்பதனை உணர்ந்தவர்களாய்,அதற்கான வரம் வேண்டி இக்கல்வாரி பலியில் தொடர்ந்து இறைவனிடம் மன்றாடுவோம்.


வருகைப் பல்லவி   திபா 67:6-7,36 

கடவுள் தமது தூயகத்தில் உறைகின்றார்: தமது இல்லத்தில் மக்கள் ஒன்று பட்டு வாழச் செய் கின்ற கடவுளே அவர்களுக்கு வலிமையையும் மனத்திடத்தையும் அளிப்பார்.


அருட்பணியாளர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.

எல்லோரும்: ஆமென்.

அ.ப.: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக


தண்ணீருக்கு ஆசி வழங்குதல்

ஆண்டவரே, ஈசோப் புல்லினால்

என்மேல் தெளிப்பீர்

நானும் தூய்மையாவேன்.

நீரே என்னைக் கழுவ

நானும் உறைபனிதனிலும் வெண்மையாவேன்.


இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கேற்ப

என்மேல் இரக்கம் கொள்வீர்.

தந்தையும் மகனும் தூய ஆவியாரும்

மாட்சியும் புகழும் ஒன்றாய்ப் பெறுக.

தொடக்கத்தில் இருந்தது போல

இன்றும் என்றும் என்றென்றும் – ஆமென்.

(அல்லது)

பாவத்துயர்ச் செயல்

அ.ப.: சகோதர, சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.

(சிறிது நேரம் அமைதி)

எல்.: எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கின்றேன், ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். (மார்பில் தட்டிக் கொண்டு)

என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால் எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும் சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.


அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

எல்.: ஆமென்


உன்னதங்களிலே (பாடல்)

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.

உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி உண்டாகுக.

புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே.

உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மாட்சிப் படுத்துகின்றோம் யாம்.

உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவராகிய இறைவனே இணையில்லாத விண்ணரசே.

ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் வல்ல தந்தை இறைவனே.

ஒரே மகனாக உதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.

ஆண்டவராகிய இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.

தந்தையினின்று என்றென்றுமாக உதித்த இறைவன் மகனே நீர்.

உலகின் பாவம் போக்குபவரே நீர் எம் மீது இரங்குவீர்.

உலகின் பாவம் போக்குபவரே எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர்.

தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, நீர் எம் மீது இரங்குவீர்.

ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்!

நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்!

தூய ஆவியோடு தந்தை இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே.

ஆமென்.


திருக்குழும மன்றாட்டு

உம்மை எதிர்நோக்கி இருப்போரைப் பாதுகாப்பவரான இறைவா, உம்மால் அன்றி ஆற்றல் வாய்ந்ததும் புனிதமானதும் எதுவும் இல்லை; எங்கள் மீது உமது இரக்கத்தை மேன்மேலும் பொழிவதால் உம்மை எங்கள் தலைவராகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டு நிலையானவற்றை நாங்கள் இப்போதே பற்றிக்கொள்ள நிலையற்ற இன்றைய நன்மைகளைப் பயன்படுத்தச் செய்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற, எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

எல்.: ஆமென்


முதல் வாசக முன்னுரை

இறையேசுவில் பிரியமானவர்களே

இன்றைய முதல் வாசகம் அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது ஆண்டவர் பகிர்தலை பற்றி நமக்கு எடுத்துரைக்கிறார் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்ட எல்லா மக்களும் உணவு உண்டனர் என்பதை கூறும் இவ்வாசகத்திற்கு நம்பிக்கையோடு செவிமடுப்போம்


முதல் வாசகம்

இம்மக்கள் உண்ட பின்னும் மீதி இருக்கும்.

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 4:42-44


அந்நாள்களில், பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வந்தார். எலிசா, “மக்களுக்கு உண்ணக் கொடு” என்றார். அவருடைய பணியாளன், “இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?” என்றான். அவரோ, “இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் ‘உண்ட பின்னும் மீதி இருக்கும்’ என்று ஆண்டவர் கூறுகிறார்” என்றார். அவ்வாறே அவன் அவர்களுக்குப் பரிமாற, அவர்கள் உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல்  திபா 145: 10-11. 15-16. 17-18 

பல்லவி: ஆண்டவரே, எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.


10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.

11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். ℟ 

15 எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன் தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்.

16 நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். ℟ 

17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.

18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.      ℟ 

  

இரண்டாம் வாசக முன்னுரை

இறையேசுவில் பிரியமானவர்களே

இன்றைய இரண்டாம் வாசகம் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது நாம் நமது அழைப்புக்கு ஏற்ப வாழ்வு வாழவேண்டும் என்பதை தூய பவுல் எடுத்துரைக்கிறார். ஒரே எதிர்நோக்கோடு வாழ அழைப்பு விடுக்கும் இரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்


இரண்டாம் வாசகம்


ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; ஆண்டவரும் ஒருவNர் திருமுழுக்கும் ஒன்றே.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-6


சகோதரர் சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

அனைவரும் வயிறார உண்டனர்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15


அக்காலத்தில், இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறு கரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, “இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறு மொழியாக, “இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே” என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, “இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?” என்றார். இயேசு, “மக்களை அமரச் செய்யுங்கள்” என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டியமட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், “ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்” என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், “உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


மறையுரை:

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடன் உழைப்பார்களே! 

இன்று தாய்த்திரு அவையோடு இணைந்து ஆண்டின் பொதுக்காலம் 17-ம் ஞாயிறை சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறோம.; இன்றைய இறை சிந்தனையாக நாம் எவ்வாறு இறைபணியில் பகிர்வில் இயேசுவோடு உடன் உழைப்பார்களாக மாற முடியும் என்று வாசகங்கள் அழைப்பு விடுக்கிறது. 

ஒருமுறை ஒரு சிறுவன் ஒரு சிறிய உண்டியல் பெட்டியை தூக்கிக் கொண்டு வீடு வீடாய் சென்று எங்கள் ஆலயத்தை கட்டுவதற்கு ஏதாவது நன்கொடை கொடுங்கள் என்று கேட்டான.; ஒரு வீட்டிற்கு சென்றபோது அங்கிருந்த பெண்மணி அந்த சிறுவனின் முயற்சியை கண்டு வியந்து போனாள.; ‘தம்பி இந்த கட்டிட பணிக்கு பொறுப்பாளரா?’ என்று அந்தப் பெண்மணி வினவினாள். அந்த சிறுவனோ ‘நான் இல்லை கடவுள் தான் இதற்கு பொறுப்பு’ என்று பதில் மொழி கூறினான். ‘அப்படியானால் நீ யார’; என்று கேட்டாள் அந்தப் பெண்மணி. அந்த சிறுவனோ, ‘நான் கடவுளின் வேலைக்கு உடன் உழைப்பாளர’.; என்று பதில் கூறினான் 

ஆம் அன்பிற்குரியவர்களே! இந்த நிகழ்வில் வரும் சிறுவனை போல் நாமும் இறைபணியில் உடன் உழைப்பார்களாக வாழ முற்பட வேண்டும்


இன்றைய முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும் மிகவும் தொடர்புடையதாக இருக்கிறது. அப்பம் பகிர்ந்து உண்ணும் நிகழ்ச்சி பற்றி எல்லா நற்செய்தியாளர்கள் பேசுகின்றனர். ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில், அப்பம் பகிர்தலும,; எலிசா வாழ்வில் இடம்பெறும் அப்பம் பகிர்தலுக்கும் இடையே ஒரு நெருக்கமான உறவு இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் பகிர்தலில் இறைவனின் உடன் உழைப்பாழர் திகழ்வதை நாம் காண்கிறோம். பாலைநிலத்தில் மன்னாவை பொழிந்த இறைவனுக்கு இந்த அப்பம் பலுகுதல் மிக எளிதான ஒன்று. தன்னுடைய அற்புத வல்லமை கரத்தினால் மக்களுக்கு உணவு கொடுத்திருக்க முடியும.; ஆனால் இறைவன் தன் பகிர்தலை எலிசா இறைவாக்கினர் வழியாகவும், பாகால் சாலிசாவைச் சார்ந்த மனிதர் வழியாகவும் நிகழ்வதை பார்க்கிறோம்.

கண்டிப்பாக அந்த மனிதர் இந்த வல்ல செயல்கள் நடைபெறும் என்று நம்பி இருக்க மாட்டார.; ஆனால் ஆண்டவர் குறையுள்ளதையும் பயன்படுத்தி நிறைவாய் பகிர்ந்து கொடுக்கிறார்.  மேலும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் மக்கள் அனைவரும் உண்ட பிறகு மீதியாய் இருந்தது என்று 2அரசர்கள் 4: 44 வாசிக்கிறோம்

இன்றைய நற்செய்தி வாசகமானது (யோவான் 6:1 – 15)இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளிப்பதை பார்க்கிறோம.; கடவுள் மனிதருக்கு உணவளித்து வாழவைக்கிறார். அவர் தரும் மூன்று வகையான உணவுகள் முறையே, 

1. உடல் உணவு (யோவான்6: 1-15)

2. இறைவார்த்தை உணவு (யோவான்6:35-50)

3. நற்கருணை உணவு (யோவான்6:51-58) 

முதல் பகுதியான அப்பம் பகிர்தல் நிகழ்வு பற்றி யோவான் எழுதிய போது, அன்றைய நற்கருணை வழிபாடு சொற்களை அவர் பயன்படுத்தி இருக்க வேண்டும.; இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்வு பற்றி யோவான் வெளிப்படையாகப் பேசவில்லை. எனினும் இங்கு அதன் பிரதிபலிப்பை தெளிவாக காணலாம்.

 யோவான் நற்செய்தியாளர் இரண்டு முக்கியமான காரியங்களை இந்த பகிர்தலில் குறிப்பிடுகிறார் 

1. இயேசுவின் பரிவிரக்கம் 

2. சிறுவனின் பகிரும்; விருப்பம்


இயேசுவின் பரிவிரக்கம் 

ஒரு பழமொழி இவ்வாறு சொல்கிறது ‘இரக்கத்தின் ஆன்மா உலகை தன்னுடைய அன்பு என்னும் குறியீட்டால் அறிகிறது’. இயேசு தன் மக்களை அன்பின் லென்ஸினால் உற்று நோக்குகிறார்ஈ பரிவு கொள்கிறார். மாற்கு 5:21-43 இயேசு யாயீடைய மகளை உயிர்ப்பித்த பிறகு, அவருடைய பெற்றோரிடம் சிறுமிக்கு உணவு கொடுக்க சொல்கிறார். இயேசுவுக்கு தெரிந்திருக்கும் அந்த மகள் பசியாய் இருக்கிறாள் என்று. ஆயரில்லா ஆடுகளை பார்த்த இயேசு, நல்ல ஆயனாய் இருந்து உணவு கொடுக்க விரும்பினார.; 

அந்த மக்கள் கூட்டம் பசியாய் திரும்பி செல்வதை இயேசு விரும்பவில்லை. இயேசுவின் பரிவுமிக்க முகத்திற்கு இன்னும் மெருகூட்டும் விதமாய் அந்த சிறுவன் முன் வருகிறான.; சிறுவனின் விருப்பம் 

இயேசு நினைத்திருந்தால,; எதுவுமே இல்லாமல் ஒரே வார்த்தையால் உலகத்தைப் படைத்தது போல் உணவை கொடுத்திருக்க முடியும். ஆனால் இறை திட்டமானது பிறரையும் பங்கெடுக்க வைப்பது. உடன் உழைப்பாளாராய் வாழ அழைப்பது. இயேசுவைப் பிலிப்பிடம,; ‘நீங்களே உணவு கொடுங்கள’; என்றார். ஆனால் பிலிப்பு தன்னுடைய அறிவு கணக்கை மட்டும் நம்பி எப்படி இவ்வளவு பேருக்கு உணவு கொடுக்க முடியும் என்றார். ஏனென்றால் அவரிடம் தேவையான உணவு வாங்க போதுமான பணமில்லை. 

அடுத்ததாக அந்திரேயா, இயேசுவிடம் இங்கே ஒரு சிறுவன் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வைத்திருக்கிறார் என்றார். ஆனால் இயேசு இதை பலுகிப்பெருகச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையினால் சொல்லவில்லை. அறிவுபூர்வமான கணக்குகள், திறமைகள் இயேசுவின் அற்புதத்திற்கு முன்பாக தவிடுபொடியானது. இறுதியாக அந்த சிறுவன் முன் வந்து தன்னிடம் இருப்பதை இயேசுவுக்கு கொடுக்கிறான். ஒருவேளை இயேசுவின் இந்த பகிர்வில் நானும் ஒரு கருவியாய், உடன் உழைப்பாளராய் இருக்க மாட்டேனா என்று அவர் நினைத்திருக்கலாம.; 

இயேசு சிறுவனின் குறைவான அப்பத்தையும், மீன்களையும் நிறைவுள்ளதாய் மாற்றி அனைவரையும் தன்னுடைய பந்தியில் அமரச் செய்கிறார். 

1 கொரிந்தியர் 3: 9 புனித பவுலடியார் சொல்கிறார், “நாம் அனைவரும் கடவுளின் உடன் உழைப்பாளர்கள்” 

கடவுள் நம்மை இதற்காகவே படைத்து தேர்ந்தெடுத்து உயர்த்துகிறார். சுhதாரணமாக இருக்கக்கூடிய நம் ஒவ்வொருவரையும் அவருடைய பகிர்வின் பணியிலே ஈடுபட அழைக்கிறார். 

கேரளாவில் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட போது நிறைய பேர் உணவு பொட்டலங்கள் உடை மற்றும் பொருட்கள் கொடுத்து உதவி செய்தார்கள். ஒரு சிறுவன் தான் படிக்கின்ற சமயத்திலே தனக்குத் தின்பத்திற்காக தரும் காசை சேர்த்து ஒரு உண்டியல் வைத்திருந்தான். இந்த நிகழ்வை கேட்டவுடன் நானும் ஏதாவது என் பங்கிற்கு கொடுப்பேன் என்று சொல்லி அதை அப்படியே கேரள மாநில முதல்வரிடம் ஒப்படைத்தான். 

பிரியமானவர்களே! இன்று நம்மிடம் எது இருந்தாலும் சரி பணமோ, பொருளோ, திறமையோ, படிப்போ, எல்லாவற்றையும் பிறரோடு பகிர்ந்து இயேசுவின் பணியில் உடன் உழைப்பாளர்களாக மாறுவோம.; சின்னஞ்சிறிய என் சகோதர சகோதரிகளுக்கு எல்லாம் செய்ததை எனக்கே செய்தீர்கள் என்று விவிலியம் சொல்கிறது. நாமும் இறைவனின் பங்காளர்களாக, உறவினர்கயாக, உடன் உழைப்பாளர்களாக வாழும் வரத்தை வேண்டி அதற்காக முயற்சி எடுப்போம் 

இறையாசீர் என்றும் உங்களோடு இருப்பதாக!


நம்பிக்கை அறிக்கை

1. விண்ணையும் மண்ணையும் படைத்தவராம்

கடவுள் ஒருவர் இருக்கின்றார்

தந்தை, மகன், தூய ஆவியராய்

ஒன்றாய் வாழ்வோரை நம்புகிறேன்.


2. தூய ஆவியின் வல்லமையால்

இறைமகன் நமக்காய் மனிதரானார்

கன்னி மரியிடம் பிறந்தவராம்

இயேசுவை உறுதியாய் நம்புகிறேன்


3. பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்

சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார்

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்

இறப்பின் மீதே வெற்றி கொண்டார்.


4. விண்ணகம் வாழும் தந்தையிடம்

அரியணைக் கொண்டு இருக்கின்றார்

உலகம் முடியும் காலத்திலே

நடுவராய் திரும்பவும் வந்திடுவார்


5. தூய ஆவியாரை நம்புகிறேன்

பாரினில் அவர் துணை வேண்டுகிறேன ;

பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று

பரிகார வாழ்வில் நிலைத்திடுவேன்.


6. திரு அவை உரைப்பதை நம்புகிறேன்

புனிதர்கள் உறவை நம்புகிறேன்

உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை

உறுதியுடனே நம்புகிறேன் - ஆமென்


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. உலகெல்லாம் சென்று படைப்பிற்கு நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் என்று கூறி நற்செய்திப் பணி செய்ய நீர் தேர்ந்தெடுத்த திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரும் உமது வல்லமையோடு திருச்சபை செழித்து வளர உழைக்கும் அருள் தர வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.


2. நற்செயல்களின் மூலம் மக்களை தம்மோடு அணைத்தவரே எம் இறைவா! இந்நாட்டை ஆளும் தலைவர்கள் ஏதேச்சாரப் போக்கு மற்றும் அதிகார போக்கைக் கைவிட்டு தனக்குரிய கடமைகளை தவறாமல் செய்து நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.


3. இறைவாக்கு உரைக்க அழைப்பவரே எம் இறைவா மறைப்போதக நாடுகளில் நற்செய்திப் பணி செய்து வரும் எம் சகோதர சகோதரிகளை பாதுகாத்து வழிநடத்தவும் இளைஞர் இளம்பெண்கள் அதிகமாக இறை பணியில் ஆர்வம் கொண்டு தேவ அழைத்தலை உணர்ந்து கொள்ளும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.


4. இரக்கத்தின் இறைவா எம் பகுதி வாழ் மக்களை ஆசீர்வதியும் மக்களின் வாழ்வு ஏற்றம் பெறவும் குடும்பத் தேவைகள் இறைவனால் சந்திக்கப்படவும் பொருளாதாரம் மேம்படவும் நாங்கள் சந்திக்கும் மனிதர்கள் வழியாக உமது திருவுளம் அறிந்து செயல்படவும் வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் அன்பு செய்யவும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.


அ.ப.: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்

எல்.: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும் நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வராக.


காணிக்கை மீது மன்றாட்டு          

ஆண்டவரே, நீர்தாமே வாரி வழங்கிய கொடைகளிலிருந்து நாங்கள் கொண்டுவரும் இக்காணிக்கைகளை ஏற்றருளும்; அதனால் உமது அருளின் ஆற்றலால் செயல்படும் இப்புனிதமிக்க மறைநிகழ்வுகள் இவ்வுலகில் எங்கள் வாழ்வைப் புனிதப்படுத்தி நிலையான பேரின்பத்துக்கு இட்டுச் செல்வனவாக. எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்.: ஆமென்


நற்கருணை மன்றாட்டு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: இதயங்களை மேலே எழுப்புங்கள்

எல்.: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்

அ.ப.: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்

எல்.: அது தகுதியும் நீதியும் ஆனதே


ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


உம் வார்த்தையான அவர் வழியாக அனைத்தையும் படைத்தீர். அவரையே மீட்பராகவும் ஈடேற்றுபவராகவும் எங்களுக்கு அனுப்பினீர். அவர் தூய ஆவியால் உடலெடுத்து, கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். அவர் உமது திருவுளத்தை நிறைவேற்றி, புனித மக்களை உமக்குப் பெற்றுத் தரத் தம் கைகளை விரித்துப் பாடுபட்டார். இவ்வாறு அவர் சாவை வென்று உயிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆகவே வானதூதரோடும் புனிதர் அனைவரோடும் சேர்ந்து,

நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்துரைத்து

ஒரே குரலாய்ச் சொல்வதாவது:

எல்.: தூயவர், தூயவர், தூயவர்.

வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.

விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன. உன்னதங்களிலே ஒசன்னா!

ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.

உன்னதங்களிலே ஒசன்னா!


அ.ப.: நம்பிக்கையின் மறைபொருள்

எல்.: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.


அ.ப.:இவர் வழிகாக இவரோடு இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே

தூய ஆவியாரின் ஒன்றிப்பில் எல்லா புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே

எல்.: ஆமென்

அ.ப.:மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்

எல்.: விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,

மண்ணுலகிலும் நிறைவேறுக எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும், எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.


அ.ப.: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறில்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.

எல்.: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே


அ.ப.: ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே, “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீNர் எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திருஅவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உம் திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

எல்.: ஆமென்


அ.ப.: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக

அ.ப.: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம்

எல்.: உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எம்மேல் இரக்கம் வையும். (2)

உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எமக்கு அமைதி அருளும்.


அ.ப.: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.

எல்.: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.


திருவிருந்துப் பல்லவி      திபா 102:2 

என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!


அல்லது


மத் 5:7-8 இரக்கமுடையோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்; தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர்;

ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனுடைய பாடுகளின் நிலையான நினைவாகிய இத்திரு உணவை உட்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு சொல்லற்கரிய அன்பினால் அவரே எங்களுக்கு அளித்துள்ள இக்கொடை எங்கள் மீட்புக்குப் பயன்பட அருள்வீராக எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்


நிறைவுச் சடங்கு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக

எல்.: ஆமென்

அ.ப.: சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று

எல்.: இறைவனுக்கு நன்றி


இந்த வார புனிதர் ஜூலை 29

புனித மார்த்தா 

பிறப்பு : பெத்தானியா

இவர் மரியா, லாசர் இவர்களின் உடன்பிறந்தவர். இவர் ஆண்டவரின் மேல் அளவுகடந்த அன்பும், பாசமும் கொண்டவர். இதனால் ஆண்டவரை தன் வீட்டிற்கு வரவழைத்து, அவருக்கு பணிவிடையும் புரிந்தார். இலாசர் இறந்த வேளையில், ஆண்டவர் இயேசு அங்கு இல்லாமல் போனதை எண்ணி கலங்கினார். இதையறிந்த இயேசு விரைந்து மார்த்தாவின் இல்லத்தை அடைந்தார். அப்போது மார்த்தா ஆண்டவரிடம் "நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார்", என்று முறையிட்டார். ஆண்டவர் ஒருவரே மெசியா, இறைமகன் என்பதை முழுமையாக நம்பினார். இயேசு மார்த்தாவின் நம்பிக்கையை பார்த்து, அவர் தன் சகோதரனின் இறப்பினால் அடைந்த துயரைக்கண்டு மன்றாட்டை ஏற்று, சகோதரர் இலாசரை உயிர்த்தெழ செய்தார். 

செபம்:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! உம் திருமகன் இயேசு, புனித மார்த்தாவின் வீட்டில் விருந்தினராக தங்கியிருக்கத் திருவுளமானார். அவருடைய வேண்டுதலால் நாங்கள் எங்கள் சகோதர, சகோதரிகளில் கிறிஸ்துவைக் கண்டு, அவர்களுக்கு உண்மையுடன் பணிபுரியவும், உமது விண்ணக வீட்டில் எங்களை கொண்டுவந்து சேர்க்கவும் அருள்புரிவீராக. இவற்றையெல்லாம் எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


கிறிஸ்துவின் ஆன்மாவே

கிறிஸ்துவின் ஆன்மாவே,

என்னைப் புனிதமாக்கும்.

கிறிஸ்துவின் திரு உடலே,

என்னை மீட்டருளும்.

கிறிஸ்துவின் திருஇரத்தமே,

எனக்கு எழுச்சியூட்டும்.

கிறிஸ்துவின் விலாவின் தண்ணீரே

என்னைக் கழுவிடுமே.


கிறிஸ்துவின் பாடுகளே

என்னைத் தேற்றிடுமே

ஓ ! நல்ல இயேசுவே

எனக்குச் செவிசாயும்

உம் திருக்காயங்களுள்

என்னை மறைத்தருளும்

உம்மிடமிருந்து என்னைப்

பிரிய விடாதேயும்


தீயப் பகைவரிடமிருந்து

என்னைக் காத்தருளும்

எனது இறப்பின் வேளையில்

என்னை அழைத்தருளும்

உம்மிடம் வர எனக்குக்

கட்டளையிட்டருளும்

புனிதர்களோடு எக்காலமும்

உம்மைப் புகழச் செய்யும் -ஆமென்


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...