Friday, July 23, 2021

16th Ordinary Week Saturday - பொதுக்காலம் 16ஆம் வாரம் - சனி

 பொதுக்காலம் 16ஆம் வாரம் - சனி 



Download pdf 

முதல் வாசகம்


ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 24: 3-8


அந்நாள்களில், மோசே மக்களிடம் வந்து ஆண்டவர் சொன்ன அனைத்து வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அறிவித்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக, “ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்” என்று விடையளித்தனர். மோசே ஆண்டவரின் வாக்குகள் அனைத்தையும் எழுதி வைத்தார். அதிகாலையில் அவர் எழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தையும், இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களுக்காகப் பன்னிரண்டு தூண்களையும் எழுப்பினார். அவர் இஸ்ரயேல் மக்களின் இளைஞர்களை அனுப்பி வைக்க, அவர்களும் ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தினர். மாடுகளை நல்லுறவுப் பலிகளாகவும் ஆண்டவருக்குப் பலியிட்டனர். மோசே இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துக் கலங்களில் விட்டு வைத்தார். மறு பாதியைப் பலிபீடத்தின் மேல் தெளித்தார். அவர் உடன்படிக்கையின் ஏட்டை எடுத்து மக்கள் காதுகளில் கேட்கும்படி வாசித்தார். அவர்கள், “ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந்திருப்போம்” என்றனர். அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து, “இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ” என்றார்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி 



பதிலுரைப் பாடல் திபா 50: 1-2. 5-6. 14-15 

பல்லவி: கடவுளுக்கு நன்றிப் பலி செலுத்துங்கள்.


1 தெய்வங்களுக்கெல்லாம் இறைவனாம் ஆண்டவர் பேசினார்; கதிரவன் எழும் முனையினின்று மறையும் முனைவரை பரந்துள்ள உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார்.

2 எழிலின் நிறைவாம் சீயோனினின்று, ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள்.  ℟

5 ‘பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்றுகூட்டுங்கள்.’

6 வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்!℟

14 கடவுளுக்கு நன்றிப் பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்.

15 துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்; உங்களைக் காத்திடுவேன்; அப்போது, நீங்கள் என்னை மேன்மைப் படுத்துவீர்கள்.   ℟


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யாக் 1: 21டி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


அறுவடை வரை, இரண்டையும் வளர விடுங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-30


அக்காலத்தில், இயேசு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் காணப்பட்டன. நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இது பகைவனுடைய வேலை’ என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?’ என்று கேட்டார்கள். அவர், ‘வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக் கூடும். அறுவடை வரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்று கூறுவேன்’ என்றார்.”


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ் 


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...