Monday, July 26, 2021

17th Ordinary Ween Monday - பொதுக்காலம் 17ஆம் வாரம் - திங்கள்

 பொதுக்காலம் 17ஆம் வாரம் - திங்கள் 



Download pdf 

முதல் வாசகம்

இம்மக்கள் தங்களுக்காகப் பொன்னால் தெய்வங்களை உருவாக்கிப் பெரும்பாவம் செய்துவிட்டார்கள்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 15-24, 30-34


அந்நாள்களில், மோசே திரும்பி மலையிலிருந்து இறங்கி வந்தார். முன், பின் இரு புறமும் எழுதப்பட்ட உடன்படிக்கைப் பலகைகள் இரண்டும் அவர் கையில் இருந்தன. அப்பலகைகள் கடவுளால் செய்யப்பட்டவை. பலகைகள் மேல் பொறிக்கப்பட்டிருந்த எழுத்தும் கடவுள் எழுதியதே. அந்நேரத்தில் மக்கள் எழுப்பிய கூச்சலைக் கேட்ட யோசுவா மோசேயை நோக்கி, “இது பாளையத்திலிருந்து எழும் போர் முழக்கம்” என்றார். அதற்கு மோசே, “இது வெற்றி முழக்கமோ தோல்விக் குரலோ அன்று. களியாட்டம்தான் எனக்குக் கேட்கிறது” என்றார். பாளையத்தை அவர் நெருங்கி வந்தபோது கன்றுக்குட்டியையும் நடனங்களையும் கண்டார். மோசேக்குச் சினம் மூண்டது. அவர் தம் கையிலிருந்து பலகைகளை மலையடிவாரத்தில் வீசியெறிந்து உடைத்துப் போட்டார். அவர்கள் செய்து வைத்திருந்த கன்றுக்குட்டியை எடுத்து நெருப்பில் சுட்டெரித்து மிருதுவான பொடியாகு மட்டும் அதை இடித்துத் தண்ணீரில் தூவி, இஸ்ரயேல் மக்களைக் குடிக்கச் செய்தார். பின்னர் மோசே ஆரோனை நோக்கி, “இம்மக்கள் உமக்கு என்ன செய்தார்கள்? இவர்கள் மேல் பெரும் பாவம் வந்துசேரச் செய்துவிட்டீரே!” என்று கேட்டார். அதற்கு ஆரோன், “என் தலைவராகிய நீர் சினம் கொள்ள வேண்டாம். இம்மக்கள் பொல்லாதவர்கள் என்பது உமக்குத் தெரியுமே! அவர்கள் என்னை நோக்கி, ‘எங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்களைச் செய்து கொடும். எங்களை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை’ என்றனர். நானும் அவர்களிடம் ‘பொன் அணிந்திருப்பவர்கள் கழற்றித் தாருங்கள்’ என்றேன். அவர்களும் என்னிடம் தந்தனர். நான் அதனை நெருப்பில் போட, இந்தக் கன்றுக்குட்டி வெளிப்பட்டது” என்றார். மறுநாள் மோசே மக்களை நோக்கி, “நீங்கள் பெரும் பாவம் செய்து விட்டீர்கள்; இப்போது நான் மலைமேல் ஏறி ஆண்டவரிடம் செல்லப் போகிறேன். அங்கே ஒருவேளை உங்கள் பாவத்திற்காக நான் கழுவாய் செய்ய இயலும்” என்றார். அவ்வாறே மோசே ஆண்டவரிடம் திரும்பிவந்து, ‘ஐயோ, இம்மக்கள் தங்களுக்காகப் பொன்னால் தெய்வங்களை உருவாக்கிப் பெரும்பாவம் செய்துவிட்டார்கள். இப்போதும், நீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளும். இல்லையேல், நீர் எழுதிய உம் நூலிலிருந்து என் பெயரை நீக்கிவிடும்” என்றார். ஆண்டவரோ மோசேயிடம், “எவன் எனக்கு எதிராகப் பாவம் செய்தானோ, அவனையே என் நூலிலிருந்து நீக்கி விடுவேன். நீ இப்போதே புறப்பட்டுப் போ. உன்னிடம் நான் கூறியுள்ளபடி மக்களை நடத்திச் செல். இதோ என் தூதர் உன் முன்னே செல்வார். ஆயினும் நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாளில் அவர்கள் பாவத்தை அவர்கள் மேலேயே சுமத்துவேன்” என்றார்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி 


பதிலுரைப் பாடல்     திபா 106: 19-20. 21-22. 23 

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்! அல்லது: அல்லேலூயா.


19 இஸ்ரயேலர் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியைச் செய்துகொண்டனர்; வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்;

20 தங்கள் ‘மாட்சி’க்குப் பதிலாக, புல் தின்னும் காளையின் உருவத்தைச் செய்து கொண்டனர்;  ℟

21 தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்;

22 காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர்.      ℟

23 ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்; ஆனால், அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர்போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார்.℟


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி     யாக் 1: 18

அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


கடுகு விதை வளர்ந்து வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35


அக்காலத்தில், இயேசு மக்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்." அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: “பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்." இவற்றை எல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. “நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்” என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ் 


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...