Wednesday, January 11, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (12-01-2023)

 

பொதுக்காலம் முதல் வாரம் - வியாழன்



முதல் வாசகம்

ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-14

சகோதரர் சகோதரிகளே,

தூய ஆவியார் கூறுவது: “இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களென்றால், பாலை நிலத்தில் சோதனை நாளன்று கிளர்ச்சியின் போது இருந்ததுபோல, உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் நாற்பது ஆண்டுகள் என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். எனவே, அத்தலைமுறையினர் மீது வெறுப்புக்கொண்டு, ‘எப்போதும் இவர்களது உள்ளம் தவறுகிறது; என் வழிகளை இவர்கள் அறியாதவர்கள்; எனவே நான் சினமுற்று, “நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்” என்று ஆணையிட்டுக் கூறினேன்’ என்றார் கடவுள்.”

அன்பர்களே, நம்பிக்கை கொள்ளாத தீய உள்ளம், வாழும் கடவுளை விட்டு விலகும். இத்தகைய தீய உள்ளம் உங்களுள் எவருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு, கடின உள்ளத்தினர் ஆகாதவாறு, ஒவ்வொரு நாளும் “இன்றே” என எண்ணி, நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள். தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த திட நம்பிக்கையை இறுதிவரை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் நாமும் கிறிஸ்துவின் பங்காளிகளாவோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 95: 6-7a. 7b-9. 10-11 (பல்லவி: 7,8 காண்க)

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாயுங்கள்.

6
வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.
7a
அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக் காக்கும் ஆடுகள். - பல்லவி

7b
இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!
8
அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9
அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். - பல்லவி

10
நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை எனக்கு வெறுப்பூட்டியதால், நான் உரைத்தது: ‘அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்; என் வழிகளை அறியாதவர்கள்'.
11
எனவே, நான் சினமுற்று, ‘நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்’ என்று ஆணையிட்டுக் கூறினேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 23

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45

ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

பிறகு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பிவிட்டார்.

ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கி வந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்துகொண்டிருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


கனிந்த உள்ளமா?

கடின உள்ளமா? நன்றி உள்ளமா?

என்னில் இருப்பது எது?


உள்ளம் பல உணர்வுகளைப் பெற்றது. அவற்றில் நல்லவற்றை பெருகச் செய்யும் போது நம் வாழ்வு செழிக்கும்.இன்றைய வாசகங்களில் நாம் மூன்று விதமான உள்ளங்களைப் பார்க்கிறோம். இவற்றை நம் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்து நம்மில் மேலோங்கி இருப்பது என ஆய்வு செய்ய நாம் அழைக்கப்படுகிறோம்.


கனிந்த உள்ளம் ......

முதல் வாசகத்தில் தந்தையாம் கடவுளின் கனிந்த உள்ளத்தைப் பார்க்கிறோம். இஸ்ரயேல் மக்களுக்கு தன் கனிந்த உள்ளத்தால் ஏராளமான கணக்கிலடங்காத நன்மைகளை அவர் செய்துள்ளார். அதே போல நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் கனிந்த உள்ளத்தைப் பார்க்கிறோம். "நீர் விரும்பினால் என்னை நலமாக்கும் " என மன்றாடிய தொழுநோயாளரின் மன்றாட்டை ஏற்று "விரும்புகிறேன் "என்று சொல்லி நலமாக்கினார் இயேசு. இது அவருடைய கனிவான உள்ளத்தை நமக்கு எடுத்தியம்புகிறது. கடவுளின் குழந்தைகளாய் இயேசுவின் சீடர்களாய் வாழ விரும்பும் நமக்கு இத்தகைய கனிவான உள்ளம் இருக்கிறதா?  நம்மை அண்டி வருவோருக்கு கடவுள் காட்டிய கனிவை நம்மால் காட்ட முடிகிறதா? சிந்திப்போம்.


கடின உள்ளம்......

இத்தகைய மனநிலைக்கு இஸ்ரயேல் மக்கள் சிறந்த உதாரணம். அவர்கள் தவறுக்கு மேல் தவறு செய்த போதும் கடவுள் அவர்களுக்கு நன்மைக்கு மேல் நன்மை செய்தார். ஆனால் அவர்களுடைய உள்ளமோ கடினமாயிற்று. பிறருடைய பார்வையில் நாம் கடின உள்ளத்தவர்களா? நமக்கு நன்மை செய்தவர்களுக்குக் கூட நாம் கடின உள்ளத்தவராய் இருந்தால், மற்றவர்களுக்கு நாம் எத்தகைய உள்ளத்தை வெளிப்படுத்தப்போகிறோம்? சிந்திப்போம். மனம்மாறுவோம்


நன்றி உள்ளம் .....

நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் தொழுநோயாளர் குணமடைந்த பின் இயேசு யாரிடமும் கூறவேண்டாம் என எச்சிரிக்கை செய்தபின்னும் மற்றவருக்கு அறிவித்து இயேசுவைப் பெருமைப்படுத்தினார். இதனால் இயேசுவைத் தேடி பலர் சென்றனர் என வாசிக்கிறோம். நன்றி நிறைந்த உள்ளம் வாழ்க்கைக்கு மிக அவசியம் என்பதை நமக்கு உணர்த்துகிறார் அவர்.


அன்புக்குரியவர்களே இம்மூவகை மனநிலைகளை நாம் சிந்திக்கும் போது கனிவான உள்ளத்தையும் நன்றி நிறைந்த உள்ளத்தையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும் எனவும் கடின உள்ளத்தை நாம் களைந்தெறிய வேண்டும் என்பதையும் கடவுள் உணர்த்துகிறார். எனவே இதற்கான வரத்தை இறைவனிடம் கேட்போம்.


 இறைவேண்டல் 

இறைவா ! கடினமான எங்கள் உள்ளத்தை அகற்றிவிட்டு உம்மை போன்ற கனிவான உள்ளத்தையும் தொழுநோயாளரிடமிருந்த நன்றி நிறைந்த உள்ளத்தையும் தருவீராக. ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...