Tuesday, November 22, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (23-11-2022)

 

பொதுக்காலம் 34ஆம் வாரம் - புதன்



முதல் வாசகம்

கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக்கொண்டிருந்தார்கள்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 15: 1-4

சகோதரர் சகோதரிகளே,

யோவான் என்னும் நான் பெரியதும் வியப்புக்குரியதுமான மற்றோர் அடையாளத்தை விண்ணகத்தில் கண்டேன்: ஏழு வானதூதர்கள் ஏழு வாதைகளைக் கொண்டிருந்தார்கள். இறுதியான அந்த வாதைகளோடு கடவுளின் சீற்றம் முற்றிலும் தணியும்.

நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றையும் கண்டேன். தொடர்ந்து, விலங்கின் மீதும் அதன் சிலை மீதும் எண்ணால் குறிக்கப்பெற்ற அந்த ஆள் மீதும் வெற்றி பெற்றவர்கள், கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஏந்திய வண்ணம் கண்ணாடிக் கடல் அருகே நின்றுகொண்டிருக்கக் கண்டேன். அவர்கள் கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக் கொண்டிருந்தார்கள்:

“கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன. மக்களினங்களின் மன்னரே, உம் வழிகள் நேரியவை, உண்மையுள்ளவை. ஆண்டவரே, உமக்கு அஞ்சாதவர் யார்? உமது பெயரைப் போற்றிப் புகழாதார் யார்? நீர் ஒருவரே தூயவர், எல்லா மக்களினங்களும் உம் திருமுன் வந்து வணங்கும். ஏனெனில் உம் நீதிச் செயல்கள் வெளிப்படையாயின.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3ab. 7-8. 9 (பல்லவி: திவெ 15: 3b)

பல்லவி: எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் வியப்புக்குரியன.

1
ஆண்டவருக்கு புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

2
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3ab
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். - பல்லவி

7
கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!
8
ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். - பல்லவி

9
ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திவெ 2: 10

அல்லேலூயா, அல்லேலூயா! இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக் கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரிகள் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.

ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


மனஉறுதியைத் தருபவர் இறைவன்!


"நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்க்கையைக் காத்துக்கொள்ளுங்கள்"


கடந்த ஆண்டில்   நாம் அனைவருமே தந்தை ஸ்டேன்சாமி அவர்களைப்பற்றிய செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தோம். தமிழ்நாட்டிலே பிறந்து வடமாநிலத்திற்குச் சென்று ஆதிவாசி மக்களுடைய நல்வாழ்வுக்காய் உழைத்துக் கொண்டிருந்த இயேசு சபை குரு அவர். மதவாத அரசு அமைப்புகளால் அவதூறான பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த  கொரோனா நோய் காலத்தில் வயது முதிர்ந்தவர் என்ற கரிசனை கூட இல்லாமல் சிறையில் அவர் அடைபட்டிருந்தாலும் அவர் மனந்தளராமல் இருந்தார்  என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இறுதியில் சிறையிலேயே தன் உயிரைத் துறந்து சாட்சியம் பகர்ந்தார். எங்கிருந்து வந்தது இந்த மனத்துணிவு அவருக்கு? நிச்சயமாக அவர் பின்பற்றும் தலைவன் இயேசுவிடமிருந்து அல்லவா?


மத்தேயு நற்செய்தியில் மலைப்பொழிவிலே "நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்" (5:6) எனவும்"நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர் .ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது "(5:10) என்று இறைமகன் இயேசு கூறியதை நாம் வாசித்திருக்கிறோம். தியானித்திருக்கிறோம். இவ்வார்த்தைகள் மூலம் நமக்கு உறுதியூட்டும் இறைவன் இன்னும் அவ்வுறுதிக்கு உரமூட்டும் விதமாக தன்னைப் பின்பற்றுவதால் துன்பத்துக்குள்ளாகும் தன் சீடருக்கு அதிகாரிகள் முன் பேச நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன் என வாக்குக்கொடுப்பதோடு நின்றுவிடாமல் தலைமுடி கூட கீழே விழாது என்று கூறி நம்பிக்கை ஊட்டுவதை இன்றைய நற்செய்தியில் நாம் காண்கிறோம்.


கடவுள் அளித்த வாழ்வு அனைவருக்கும் சமம். அவர் அனைவரையும் சமமாகப் பார்க்கிறார். ஏற்றுக்கொள்கிறார். ஏற்றத்தாழ்வுகள் நம்மிடம் இருக்கக்கூடாது என்ற நற்செய்தியை தன் நல்வாழ்வால் போதித்து நீதிக்கும் நேர்மைக்கும் உண்மைக்கும் குரல் கொடுத்த இயேசுவின் மனஉறுதி சிலுவையில் நிலைநிறுத்தப்பட்டது.

இயேசுவின் இறப்புக்குப்பின் துவண்டு கிடந்த சீடர்களுக்கு மன உறுதியைத் தந்த இயேசு அவர்கள் அதிகாரிகள் முன் பேசுவதற்கு நாவன்மையைத்தந்தார். தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த பின்னும் அவர்கள் பின்வாங்கவில்லை.தலைவனுக்கே இக்கதியா என்று தொடக்கத்தில் அஞ்சினாலும், தலைவனின் வழியைத் துணிவுடன் தழுவினர் திருத்தூததர்கள். புனிதர்களான பேதுரு,பவுல் மற்ற திருத்தூதர்கள் அனைவரும் இதற்குச் சிறந்த உதாரணங்கள். இன்னும் நம் கண்முன்னால் இயேசுவின் பொருட்டும் அவர் விட்டுச்சென்ற நீதி, உண்மை,அன்பு,சமத்துவம்,சகோதரத்துவம் போன்ற விழுமியங்களின் பொருட்டும் மனஉறுதி காப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவராக நாம் இருக்கிறோமா?

என சிந்திக்க வேண்டியது நம் கடமை.


பல வேளைகளில் நாம் மன உறுதி இழந்தவர்களாய் இருக்கிறோம். இதனாலேயே சவால்களைச் சந்திப்பதற்குப் பதிலாக விட்டு விலகிச்செல்லும் மனிதர்களாய் நாம் மாறுகிறோம். அதிகாரிகள் அல்லது பதவியில் இருப்பவர்கள் முன் எவ்வாறு பேச வேண்டும் என்று ஒத்திகை எடுப்பவர்களாய் இருக்கிறோம். மற்றவருடைய அல்லது சமூக தேவைகளுக்காக அல்லாவிட்டாலும் நம்முடைய சொந்தத் தேவைகளுக்காக,நமக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காக கூட நம்மால் மனஉறுதியுடன் நின்று போராட இயலவில்லை. இது நாம் இயேசுவை பின்பற்றாத நிலையைத் தான் குறிக்கிறது. மனஉறுதியுடன் வாழாததால் நம் வாழ்வில் பலவற்றை நாம் இழக்கிறோம்.


இத்தகைய மனநிலையை அகற்றி இயேசு தரும் மனஉறுதியுடன் வாழமுயற்சிப்போம்.அவ்வாறு வாழும்போது துன்பங்கள் ஏற்படினும் நம்மால் துணிந்து நின்று வெல்லமுடியும். ஏனெனில் நமக்குள் இருந்து கிறிஸ்து செயல்படுவார். அதற்கான இறையருள் வேண்டுவோம்.


 இறைவேண்டல்

உறுதிதரும் தெய்வமே!

மன உறுதியை இழந்த மனிதர்களாய் வாழாமல், சவால்களின் சமயங்களில் நீர் தரும் ஞானத்தோடும் நாவன்மையோடும் தீமையை வென்றிட அருள் தாரும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்

♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...