Friday, July 9, 2021

15th Ordinary week Sunday - பொதுக்காலம் 15ஆம் வாரம் - ஞாயிறு

 


பொதுக்காலம் 15ஆம் வாரம் - ஞாயிறு

திருப்பலி முன்னுரை: இறையேசுவில் பிரியமானவர்களே,

இன்று ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு வாரவழிபாட்டில் பங்கேற்கவந்திருக்கும், உங்கள் அனைவரையும் இயேசுகிறித்துவின் பெயரால் வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய உலகில், மக்களின் நடை, உடை, பாவனை முதலியபலவற்றில் மாற்றம் அன்றாடம் நிகழ்கிறது. ஆனால் மக்களின் மனங்களில் மாற்றம் அன்றாடம் நிகழ்கிறதா? என்று நாம் சிந்திக்கும் போது, ஆம்! நிகழ்கிறது. அப்படியானால், இங்கு எழக்கூடிய கேள்வி? அம்;மனமாற்றம் எத்தகையதாய்? எதைக்குறித்து இருக்கிறது? என்பது தான். நாம் திருவிவிலியத்தை சற்று உற்றுநோக்கினால் இதற்குரியபதில் புலப்படும். இயேசு பன்னிருதிருத்தூதர்களையும்  முப்பணிகளை ஆற்ற (அவரோடு இருக்க, நற்செய்தியை பறைசாற்ற, பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்க) அழைக்கிறார். இன்றைய நற்செய்தியல், இந்த முப்பணிகளும் நடைபெறுவதை நாம் பார்க்கிறோம். அதாவது, இயேசுவோடு சீடர்கள் இருக்கிறார்கள். நற்செய்தியை பறைசாற்றுகிறார்கள். நோய்களை குணமாக்குகிறார்கள் மேலும் பேய்களையும் ஓட்டுகிறார்கள். இந்த நிகழ்வின் மூலம் நமதுமனமும் எத்தகையதாய், எதைக்குறித்து இருக்க வேண்டும் என்று நமக்கு புலப்படுகிறது. நமது மனம் இம்முப்பணிகளை ஒத்ததாயும், இறைவனைக் குறித்தும் இருக்கவேண்டும். இதுவே, சீடத்துவவாழ்வுக்கு கொடுக்கப்பட்ட ஒப்பற்றபணி. அதைக் குறித்துதான் நமது மனமும் அன்றாடம் இருக்கவேண்டும். இதைக் குறித்தே, இயேசுவின் சீடர்கள் மனம் மாறவேண்டும் என்றசெய்தியை இன்றைய நற்செய்தி மூலம் நமக்கு எடுத்துரைக்கிறார்கள். இயேசுவின் சீடர்களான நாமும் நமது மனங்களை இறைப்பணிக்கு உகந்ததாயும், இறைவனுக்கு உரியதாயும் அன்றாடம்  செயல்படுத்துவவோம். மேலும், அதற்தானவரம் வேண்டி இக்கல்வாரிப் பலியில் இணைவோம்.


வருகைப் பல்லவி          

நான் நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; உமது மாட்சியை நீர் வெளிப்படுத்தும்போது நான் நிறைவு பெறுவேன்.


அருட்பணியாளர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.

எல்லோரும்: ஆமென்.

அ.ப.: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக


தண்ணீருக்கு ஆசி வழங்குதல்

ஆண்டவரே, ஈசோப் புல்லினால்

என்மேல் தெளிப்பீர்

நானும் தூய்மையாவேன்.

நீரே என்னைக் கழுவ

நானும் உறைபனிதனிலும் வெண்மையாவேன்.


இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கேற்ப

என்மேல் இரக்கம் கொள்வீர்.

தந்தையும் மகனும் தூய ஆவியாரும்

மாட்சியும் புகழும் ஒன்றாய்ப் பெறுக.

தொடக்கத்தில் இருந்தது போல

இன்றும் என்றும் என்றென்றும் – ஆமென்.

(அல்லது)


பாவத்துயர்ச் செயல்

அ.ப.: சகோதர, சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.

(சிறிது நேரம் அமைதி)

எல்.: எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கின்றேன், ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். (மார்பில் தட்டிக் கொண்டு)

என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால் எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும் சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.


அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

எல்.: ஆமென்


உன்னதங்களிலே (பாடல்)

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.

உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி உண்டாகுக.

புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே.

உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மாட்சிப் படுத்துகின்றோம் யாம்.

உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவராகிய இறைவனே இணையில்லாத விண்ணரசே.

ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் வல்ல தந்தை இறைவனே.

ஒரே மகனாக உதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.

ஆண்டவராகிய இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.

தந்தையினின்று என்றென்றுமாக உதித்த இறைவன் மகனே நீர்.

உலகின் பாவம் போக்குபவரே நீர் எம் மீது இரங்குவீர்.

உலகின் பாவம் போக்குபவரே எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர்.

தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, நீர் எம் மீது இரங்குவீர்.

ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்!

நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்!

தூய ஆவியோடு தந்தை இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே.

ஆமென்.


திருக்குழும மன்றாட்டு

இறைவா, தவறி நடப்போர் நன்னெறிக்குத் திரும்பிவர அவர்களுக்கு உமது உண்மையின் ஒளியைக் காட்டுகின்றீர்; கிறிஸ்தவ நம்பிக்கையைக் கடைப்பிடிப்போர் அனைவரும் தமது பெயருக்குப் பொருந்தாதவற்றை விலக்கவும் ஏற்றவற்றைச் செயல்படுத்தவும் செய்தருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற, எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

எல்.: ஆமென்


முதல் வாசக முன்னுரை

இறையேசுவில் பிரியமானவர்களே

இன்றைய முதல் வாசகம் ஆமோஸ் நூலிலிருந்து நமக்கு தரப்பட்டுள்ளது. இஸ்ரயேல் மக்கள் இறைவாக்கினர் ஆமோஸின் இறைவாக்கினை ஏற்க மறுத்தபோதிலும், இறைவன் தன் பக்கம் நிற்கிறார் , தனக்கு துணையாக இருக்கிறார் என்ற இறை நம்பிக்கையில் இறைவனின் வாக்கை உறைக்கிறார். நாமும் இறைவார்த்தையை எடுத்துறைக்க எத்தகைய தடைகள் வந்தாலும் இறைவாக்கினர் ஆமோஸை போன்று தைரியத்துடனும், இறை நம்பிக்கையுடனும், இறைவார்த்தையை எடுத்துறைத்து சான்றாக வாழுவோம் என்ற மனஉறுதியுடன் இன்றைய முதல் வாசகத்திற்கு செவிகொடுப்போம்


முதல் வாசகம்

என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு.

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 7: 12-15

அந்நாள்களில், பெத்தேலின் குருவாகிய அமட்சியா ஆமோசைப் பார்த்து, “காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு; அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே; ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம்” என்று சொன்னான்.

ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: “நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை; நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன். ஆடுகள் ஓட்டிக் கொண்டுபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, ‘என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு’ என்று அனுப்பினார்.”

வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல்   திபா 85:8யடி,9. 10-11. 12-13 

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்.

8யடி ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;

9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும் ℟ 

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.

11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். ℟ 

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.

13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். ℟ 

  

இரண்டாம் வாசக முன்னுரை

இறையேசுவில் பிரியமானவர்களே

இன்றைய இரண்டாம் வாசகம் புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து நமக்கு தரப்பட்டுள்ளது. தந்தையாம் இறைவன், ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் தம் ஒரே மகன் இயேசு கிறிஸ்த்து வழியாக நம்மீது பொழிந்து தமக்கு சொந்தமான பிள்ளைகளாக நம்மை மாற்றினார் என்று மீட்பின் திட்டத்தை விளக்கும் பவுலடியாரின் வார்த்தைகளுக்கு செவிகொடுப்போம்.


இரண்டாம் வாசகம்

உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-14

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக்கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார். இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந் தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். அந்த அருளை அவர் நம்மில் பெருகச் செய்து, அனைத்து ஞானத்தையும் அறிவுத் திறனையும் தந்துள்ளார். அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம். கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்கவேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள். கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப் பேற்றுக்கு உரியவரானோம். இவ்வாறு கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்துபாட வேண்டுமென அவர் விரும்பினார். நீங்களும், உங்களுக்கு மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை கொண்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டீர்கள். அந்தத் தூய ஆவியே நாம் மீட்படைந்து உரிமைப்பேறு பெறுவோம் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிறது. இவ்வாறு கடவுளது மாட்சியின் புகழ் விளங்கும்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


அல்லது 


குறுகிய வாசகம்


உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-10

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார். இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். அந்த அருளை அவர் நம்மில் பெருகச் செய்து, அனைத்து ஞானத்தையும் அறிவுத் திறனையும் தந்துள்ளார். அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம். கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்கவேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள்.

வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி     எபே 1: 18-19 

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: புனித மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்

எல் : ஆண்டவரே, மாட்சி உமக்கே


இயேசு பன்னிருவரையும் இருவர் இருவராக அனுப்பினார்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-13

அக்காலத்தில், இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள்மீது அதிகாரமும் அளித்தார். மேலும், “பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். மேலும் அவர், “நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும்பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்று அவர்களுக்குக் கூறினார். அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.

அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


மறையுரை:

இறையேசுவில் பிரியமானவர்களே

இறையழைத்தலை அணையாது பார்த்துக்கொள்வோமா?

இயேசு சபைத்துறவியான அருட்பணி ஸ்டேன் சுவாமி பழங்குடியினரின் உரிமைக்காகப் போராடியவர். மனிதநேயத்திற்காக விருது வாங்கியவருக்கே மனிதநேயமற்ற செயல் நடக்கிறது. பீமா கோரேகான் பொய் வழக்கு கூறி, அதாவது, மாவோயிஸ்ட்டுக்கும் அவருக்கும் தொடர்பு உண்டு. அவரும் ஒரு மாவோயிஸ்ட் என்று கூறி, 8 அக்டோபர் 2020 இன்று அவரைச் சிறையில் அடைத்தனர். பார்கின்சன் என்கிற

நடுக்குவாத நோயால் அவதிப்பட்டவர். இதனால் சாதாரணமாக நடக்கமுடியாது. கை எப்போதும் நடுங்குவதால் தண்ணீர் கூட சிந்தாமல் குடிக்கமுடியாது. ‘ஸ்ட்ரா’ வைத்துதான் குடிக்கமுடியும். பலமுறை சிறையில் உடல்நடுக்கத்தால் கீழே விழுந்தார். ‘பெய்ல’; மறுக்கப்பட்டது, ‘ஸ்ட்ரா’ மறுக்கப்பட்டது, ‘மருத்துவசிகிச்சை’ மறுக்கப்பட்டது. 05 ஐPலை 2021 அன்று உடல்நலக்குறைவால் இறந்தார். ஏறக்குறைய 9 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். ஆண்டவரின் மீது நம்பிக்கைக்கொண்டவராய், இயேசுவைப் போல்

அடையாளம் இழந்தோருக்கு அடையாளம் கொடுப்பவாரய், “சிறைப்பட்ட பறவையால் சிறையிலிருந்தே பாடமுடியும்” என்று சவால் விட்டவர். இவ்வாறு இறைஅழைத்தலின் ஆழம், அகலம், உயரம் அறிந்து, சவால்களுக்கு மத்தியில் அழைப்பிற்கேற்ப வாழ்ந்துக்காட்டியவர் அருட்பணி ஸ்டேன் சுவாமி அவர்கள்.

இன்றைய வார்த்தை வழிபாடானது, இறைஅழைத்தலைப் பற்றி சிந்திக்க சிறப்பாக

அழைக்கின்றது. குறிப்பாக, முதல் வாசகம் இறைவாக்கினர் ஆமோஸின் அழைப்பையும், நற்செய்தி வாசகம் திருத்தூதர்களின் அழைப்iபுயும் மற்றும் இரண்டாம் வாசகம் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்துவின் சகோதர சகோதரிகளான வாழ்கின்ற நம் ஒவ்வொரின்

அழைப்பைப் பற்றி கூறுகின்றன. 

கி;.மு. 8-ஆம் நூற்றாண்டில் இஸ்ரயேல் நாட்டில், அநீதி தலைவிரித்தாடியது. அரசன் நேர்மையாக செயல்படவில்லை. செல்வந்தர்கள் செழிப்புற்றனர். ஏழை-எளியவர்கள் வறுமையில் வாடிவதங்கினர். இச்சூழலமைவில், அமட்சியாவுக்கு எதிராகவும், அரசனுக்கு எதிராகவும் கடவுளின் வார்த்தையைக் கூறுகின்றார் இறைவாக்கினர் ஆமோஸ். அமட்சியா சாதாரண மனிதரா? கண்டிப்பாக இல்லை. ஆமோ 7: 10 ‘அமட்சியா பெத்தேலின்

குருவாக, கடவுள் முன் பணி செய்கிறவர்’ என்று கூறுகிறது. ‘பெத்தேல’; என்றால் ‘கடவுளின் இல்லம’; என்று பொருள். கடவுளின் இல்லத்தில் பணிபுரிகிற குருவாகிய அமட்சியா, கடவுளின் சார்பாக நின்று செயல்படாமல், ‘இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம் (ஆமோ 7: 13)’ என்று கூறி அரசன் எரோபவாமுக்குச் சார்பாக பேசுகிறார். கடவுளின் சார்பாக கடவுளின் வார்த்தையைக் கூறிய ஆமோசைப் பார்த்து, “காட்சிக் காண்பவனே, இங்கிருந்து போய்விடு, யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு (ஆமோ 7:

12) என்று கண்டிக்கிறார். இருப்பினும் சவால்களுக்கு மத்தியில், நீதியின் இறைவாக்கினர் என்று அழைக்கப்படுபவரான ஆமோஸ், நீதியின்பால் தாகம் கொண்டவராக, நீதியை சமரசம் இன்றி பறைசாற்றி, நீதி வெள்ளமெனப் பொங்கி வருக, நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக (ஆமோஸ் 5:24) என்ற இறைவனின் வார்த்தைகளை அஞ்சா நெஞ்சுடன்

எடுத்துரைத்து நீதியின் சார்பான நிலைப்பாடு எடுக்கின்றார்.

இன்றைய நற்செய்தியில், இயேசு தான் தம்மோடு இருக்க தேர்ந்தெடுத்த பன்னிரு சீடர்களை பணி செய்ய அனுப்புகிறார். கடவுளின் மீட்புத்திட்டம் யூதர்களுக்கு மட்டும்தான், மெசியா யூதர்களுக்கு மட்டும்தான் என்கிற சிந்தனைகளைத் தகர்த்து, இறையாட்சியில் உரிமைக்குடிமக்கள் என்றும், அந்நியர் என்றும் வேறுபாடு இல்லை என்று உரக்க அறிவித்து, கடவுள் அருளும் மீட்பு உலகிலுள்ள அனைவருக்கும் பொதுவானது என்பதைச் செயலில் வெளிப்படுத்து சீடர்களை அனுப்புகிறார். ஒரே இடத்திலிருந்து கொண்டு 99 ஆடுகளைக் கவனிப்பதைவிட, தேடிச்சென்று காணாமல் போன ஓர் ஆட்டைக் கண்டுபிடிப்பதுதான் மேலான பணி என்று இருவர் இருவராக அனுப்புகிறார். எதற்காக இருவர் இருவராக அனுப்புகிறார்? இயேசு இருவர் இருவராக அனுப்புகிற யூதமரபைப் பின்பற்றுவதுபோல் தோன்றலாம். ஆனால் இயேசு துணையிருப்பிற்காகவும், குழுமவாழ்வுக்காகவும், ஒருவர் மற்றவருக்கு ஆறுதலாக, பக்கபலமாக, இலட்சிய தெளிவோடு தொய்வில்லாமல் தொடர்ந்து பயணிக்க, உறுதுணையாக இருந்திட இருவர் இருவராக அனுப்புகிறார். மேலும், பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்கையில் செப்புக்காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம் என்கிறார் இயேசு. ஏனெனில் பயணம் இனிமையாக அமைய சுமை குறைவாக இருக்கவேண்டும் என்றும், நற்செய்தி அறிவிப்பவரின் இருத்தலும் இயங்குதலும் தன்னை சார்ந்து இராமல், தனது திறமையை முன்நிறுத்தாமல், பற்றற்றவர்களாய் வாழ்ந்து, இறைவனின் பராமரிப்பை வெளிப்படுத்தவேண்டும் என்றும் கற்றுத்தருகிறார்.

நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி… கடவுள் நம்மை கிறிஸ்து வழியாக தேர்ந்தெடுத்துள்ளார் என்று கூறி, திருமுழுக்குப் பெற்ற நம் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்கு வழியாக நமக்கு கொடுக்கும் அழைப்பு என்று புனித பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுகிறார். மனித சமுதாயம் பிளவுகளால், வேற்றுமைகளால், ஏற்றத்தாழ்வுகளால் நிறைந்துள்ள சூழ்நிலையிலும் ஒன்றுபட்ட மக்களாக வாழ அழைக்கிறார்.


இறைஅழைத்தல் வாழ்வில் பவுலடியாரைப் போல் நம்மில் கிரேக்கர் என்றும், உரோமையர் என்றும் பாகுபாடு இல்லை என்று முழக்கமிட்டு, சாதி, இனம், மொழி என்ற உலக மதிப்பீடுகளைக் கடந்து, ஒருவர் மற்றவறோடு இணைந்து பணிபுரிகின்றோமா? அல்லது மனிதனுள் இருக்கும் கடவுளின் சாயலுக்கும், உருவத்திற்கும் மதிப்புக்கொடுக்காமல், இந்த சாதியைச் சேர்ந்தவர் தான் இந்தப் பங்கிற்கு பங்குத்தந்தையாக வேண்டும் என்றும், இந்த சாதியைச் சேர்ந்தவர் தான் இந்த மறைமாவட்ட ஆயராக வேண்டும் என்றும் சாதிக்கொரு ஆலயம், சாதிக்கொரு கல்லறை, சாதிக்கொரு சவ வண்டி என்றும் மனிதத்தைப் பிளவுப்படுத்துகின்ற சாதியே என் அரண், சாதியே என் கேடயம், சாதியே என் பாதுகாப்பு என்று சாதியவாதிகளாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறாமா? சுpல நேரங்களில் இந்த கருத்தைத் தெரிவித்ததால் நான் எந்த சாதியைச் சார்ந்தவன்

என்றுகூட நீங்கள் சிந்திக்க தொடங்கி இருப்பீர்கள். சிந்திப்போம்.


நீதியை நிதியால் விலைபேசும் நீதிபதிகள் வாழும் காலக்கட்டத்தில் நாம்

வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அருட்பணி ஸ்டேன் சுவாமிக்கு ‘பெய்ல’; கிடைக்கவில்லை நீதி . கிடைக்கவில்லை. சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதுபோன்ற நீதியின் சார்பான

சவால்களுக்கு நமது நிலைப்பாடு என்ன? என்று நமது ஆண்டவர் இயேசு கேட்கிறார். நமது பதில் என்ன? 

இறையழைத்தல் என்பது பதவியில் இல்லை மாறாக இவ்வுலக அடையாளத்தைக்

கடந்து வாழ்வதில் இருக்கிறது. இருப்பதைத் துறப்பது துறவு என்பதைவிட, இல்லாததையும் துறப்பதுதான் துறவின் சிறப்பு. எதைத் துறக்கவேண்டும்? வாழ்வை அல்ல. மாறாக, செய்யும் செயலின் பலனைத் துறப்பது. இதைத்தான் இயேசு தம் சீடர்களுக்கு, ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள், எங்கள் கடமையைத்தான் செய்தோம’; (லூக் 17:10) என்றுக்கூற கற்றுத்தருகிறார். உண்மையான பலி என்பது தன் சுயத்தை, சுயநலத்தை, சுயநயத்தை தியாகம் செய்து, காணிக்கையாக கொடுப்பதுதான். புனிதர்கள் அன்னை தெரசா, மாக்சி மில்லியன் கோல்பே, பீட்டர் தமியான் ஆகியோர் ஆமோஸைப் போன்று, இயேசுவின் சீடர்களைப் போன்று, கடவுளின் பொருட்டு, கடவுளின் சாயலான சகமனிதருக்கு தன்னையே கையளிப்பதில் முன்னோடிகளாக திகழ்ந்து, தங்கள் வாழ்வினால் எண்ணெய் ஊற்றி இறையழைத்தல் என்னும் விளக்கு அணையாமல்

பார்த்துக்கொண்டவர்கள். 

நமது சமுதாயத்தில் இறையழைத்தல் என்னும் விளக்கு அணையாமல் ஒளிர்ந்து சுடர்விடுகிறதா? அல்லது ஒளியேற்ற யாருமில்லாமல் இருக்கிறதா? அல்லது மங்கிய ஒளிவீசி அணையக்கூடிய நிலையில் உள்ளதா? அறுவடையோ மிகுதி, வேலையாட்களோ குறைவு (மத் 9:37) என்று இயேசு அன்று கூறிய வார்த்தைகள் இன்றளவும் உண்மையாக இருக்கிறதா? சிந்திப்போம். ஆண்டவரே! பேசும். உம் அடியான் கேட்கிறேன் என்ற சாமுவேலின் பதிலை இன்றைய ஊடக காலாச்சார இளைஞர்களும், இளம்பெண்களும் சொல்வது என்பது மிகச் சவாலானதாக உள்ளது. இறையழைத்தலுக்கு ‘ஆம்’ என்பதும்

‘இல்லை’ என்பதும் அவரவர் தனியுரிமை. இருப்பினும், பெற்றோரும், ஞானப்பெற்றோரும்,

உறவினர்களும் இளையோருக்கு துணைநிற்க வேண்டும். அழைத்தவர் கைவிடமாட்டார். 1பேதுரு 5:7 உங்கள் கவலையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனென்றால் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார். தி.பா. 55:22 ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு. அவர் உனக்கு ஆதரவளிப்பார். எனவே அழைத்தல் வாழ்வில் சந்திக்கும் சவால்களுக்கு மத்தியில் கவலைப்படாமல் ஆண்டவரை இறுகப் பற்றிக் கொள்வோம். அன்று சோர்ந்து போகாதே இஸ்ரயேலே! தளர்ந்து போகாதே யாக்கோபே! என்று கூறிய அன்பின் கடவுள் நம்மை ஆற்றுப்படுத்துவார். பணிவிடை பெறுபவர்களாய் அல்லாமல் பணிவிடை புரிபவர்களாய் வாழ்ந்து இறையழைத்தலை அணையாது பார்த்துக்

கொள்வோம்.

அருட்தந்தை. எழில் நிலவன் செ , தூத்துக்குடி மறைமாவட்டம்


நம்பிக்கை அறிக்கை

1. விண்ணையும் மண்ணையும் படைத்தவராம்

கடவுள் ஒருவர் இருக்கின்றார்

தந்தை, மகன், தூய ஆவியராய்

ஒன்றாய் வாழ்வோரை நம்புகிறேன்.


2. தூய ஆவியின் வல்லமையால்

இறைமகன் நமக்காய் மனிதரானார்

கன்னி மரியிடம் பிறந்தவராம்

இயேசுவை உறுதியாய் நம்புகிறேன்


3. பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்

சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார்

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்

இறப்பின் மீதே வெற்றி கொண்டார்.


4. விண்ணகம் வாழும் தந்தையிடம்

அரியணைக் கொண்டு இருக்கின்றார்

உலகம் முடியும் காலத்திலே

நடுவராய் திரும்பவும் வந்திடுவார்

5. தூய ஆவியாரை நம்புகிறேன்

பாரினில் அவர் துணை வேண்டுகிறேன ;

பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று

பரிகார வாழ்வில் நிலைத்திடுவேன்.


6. திரு அவை உரைப்பதை நம்புகிறேன்

புனிதர்கள் உறவை நம்புகிறேன்

உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை

உறுதியுடனே நம்புகிறேன் - ஆமென்


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. பரம்பொருளே! எம் இறைவா! திருச்சபையை

ஆளும் தலைவர் திருத்தந்தை, கர்தினால்கள்,

ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள்

மற்றும் பொதுநிலையினர் உமது இறையரசுப்

பணியைச் செவ்வனே ஆற்றிடப் போதுமான

ஆற்றல்களையும், நல் ஆரோக்கியத்தையும்

அவர்கள் மீது பொழிந்திட வரம் வேண்டி இறiவா உம்மை மன்றாடுகின்றோம்.


2. என் அன்புத் தந்தையே! இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் மனித நேயமிக்க நல்லாட்சிப் புரிந்து இறைமக்கள் அனைவரையும் சமத்துவத்துடனும் அன்புடனும் வழி நடத்திடவும், தொற்றுநோயிலிருந்து மக்களைக் காக்கும்

எல்லாப் பணிகளிலும் சிறப்பாகச் செயல்படுத்தவும் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


3. உன்னதரே! எம் இறைவா! மனிதர்களாகிய

நாங்கள் உணர்வற்று உறங்கும்போது தம் இதயத்தை இயக்குபவராகிய எம் இறைவா உம்

மீது நம்பிக்கைக் கொண்டு வாழும்போது உம்

திருமகன் படகில் உறங்கிக் கொண்டிருக்கும்

போதும் மக்களை மீட்கிறவராகச் செயல் பட்டுக்

கடலின் இறைச்சலைக் கடிந்து அமைதிப்படுத்திய

நிகழ்வு நாளும் எங்களுக்கு உற்சாகத்தைத் தர

வரம் வேண்டி இறைவா உம்மை

மன்றாடுகின்றோம்.


4. எல்லாம் வல்லவரான தந்தையே இறைவா!

திடத்துடன் வாழவும், வாழும் திருச்சபையாக

வாழவும், இந்தத் தொற்றுநோயை

வெற்றிக்கொள்ளவும் யோபுவின் துன்பங்களை

நாங்களும் படித்துணர்ந்து, சோதனைகளில்

துவண்டுப் போகமால் ஆழ்ந்த நம்பிக்கையில்

வாழ்ந்த யோபுவைப் போன்று எமது திருச்சபை

வாழ்ந்திட வரம் வேண்டி இறைவா உம்மை

மன்றாடுகின்றோம்.

அ.ப.: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்

எல்.: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும் நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வராக.


காணிக்கை மீது மன்றாட்டு திபா 83:4-5          

ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடும் திரு அவையின் காணிக்கைகளைக் கண்ணோக்கியருளும்; உம் நம்பிக்கையாளர் புனிதத்தில் வளர உதவும் உணவாக இவற்றை மாற்றியருள்வீராக. எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்.: ஆமென்


நற்கருணை மன்றாட்டு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: இதயங்களை மேலே எழுப்புங்கள்

எல்.: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்

அ.ப.: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்

எல்.: அது தகுதியும் நீதியும் ஆனதே

ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

உம் வார்த்தையான அவர் வழியாக அனைத்தையும் படைத்தீர். அவரையே மீட்பராகவும் ஈடேற்றுபவராகவும் எங்களுக்கு அனுப்பினீர். அவர் தூய ஆவியால் உடலெடுத்து, கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். அவர் உமது திருவுளத்தை நிறைவேற்றி, புனித மக்களை உமக்குப் பெற்றுத் தரத் தம் கைகளை விரித்துப் பாடுபட்டார். இவ்வாறு அவர் சாவை வென்று உயிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆகவே வானதூதரோடும் புனிதர் அனைவரோடும் சேர்ந்து,

நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்துரைத்து

ஒரே குரலாய்ச் சொல்வதாவது:

எல்.: தூயவர், தூயவர், தூயவர்.

வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.

விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன. உன்னதங்களிலே ஒசன்னா!

ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.

உன்னதங்களிலே ஒசன்னா!

அ.ப.: நம்பிக்கையின் மறைபொருள்

எல்.: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.

அ.ப.:இவர் வழிகாக இவரோடு இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே

தூய ஆவியாரின் ஒன்றிப்பில் எல்லா புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே

எல்.: ஆமென்

அ.ப.:மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்

எல்.: விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,

மண்ணுலகிலும் நிறைவேறுக எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும், எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.

அ.ப.: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறில்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.

எல்.: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே

அ.ப.: ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே, “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீNர் எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திருஅவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உம் திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

எல்.: ஆமென்

அ.ப.: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக

அ.ப.: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம்

எல்.: உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எம்மேல் இரக்கம் வையும். (2)

உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எமக்கு அமைதி அருளும்.

அ.ப.: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.

எல்.: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.


திருவிருந்துப் பல்லவி யோவா 6:56

படைகளின் ஆண்டவரே, என் அரசரே, என் கடவுளே, உம் பீடங்களில் அடைக்கலான் குருவி தனக்கு வீடும் சிட்டுக்குருவி தன் குஞ்சுகளை வைக்கக் கூடும் கண்டுள்ளன. உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

அல்லது

எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்பவர் என்னோடு இணைந்திருப்பார்; நானும் அவரோடு இணைந்திருப்பேன்,

என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம்முடைய அருள்கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு இம்மறைநிகழ்வுகளில் நாங்கள் அடிக்கடி பங்கேற்பதால் அவற்றின் மீட்பு அளிக்கும் பயன் எங்களில் வளரச் செய்வீராக. எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்


நிறைவுச் சடங்கு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக

எல்.: ஆமென்

அ.ப.: சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று

எல்.: இறைவனுக்கு நன்றி


இந்த வார புனிதர் ஜூலை 14

புனித கமில்லஸ் தெ லெல்லிஸ் குரு


பிறப்பு :1550 : ஷீட்டி, அப்ருட்சி

இறப்பு :1614 : உரோம்

பாதுகாவல்: மருத்துவர்களின் பாதுகாவலர்

இவர் தன்னுடைய குழந்தை பருவத்தில் தாயை இழந்தார். தந்தை இவரைவிட்டு அகன்று போனார். இதனால் யாரும் கவனிப்பாரற்று, ஆதரவற்றிருந்தார். இளமையிலேயே சூதாட்டத்திற்கு அடிமையானார். 17 வயதில் துருக்கியருடன் போரிட வெனிஸ் நகரிலிருந்த படைப்பிரிவில் சேர்ந்தார். அங்கு அவரின் காலில் புண் ஏற்பட்டு , ஆறாமல் இருந்தது. இதனால் உரோமையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கேயும் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மருத்துவமனையில் நடைபெற்ற திருப்பலியில் பங்கெடுக்க ஒரு நாள் சென்றார். அப்போது கப்புச்சின் சபை குரு ஆற்றிய மறையுரை இவரை மறுமனிதனாக்கியது. 

அதன்பின் தானும் ஓர் குருவாக வேண்டுமென்று விருப்பம் கொண்டு, ஓரளவு புண் குணமடைந்த உடன் கப்புச்சின் துறவற சபை ஒன்றை நாடி தன் விருப்பத்தை தெரிவித்தார். அங்கு அவரின் விருப்பம் நிறைவேற்றப்பட்டாலும் புண் முழுமையாக குணமாகாததால் வெளியே அனுப்பப்பட்டார். மீண்டும் சென்று குருத்துவ பயிற்சிகள் அனைத்தையும் பெற்று, தனது 34 ஆம் வயதில் குருவானார். அதன்பிறகு ஒரு சபையை நிறுவினார். அச்சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து, நோயாளிகளுக்குக்கென்று தன்னையே தியாகம் செய்தார். நோயாளிகளை தேடிச் சென்று பணிபுரிந்தார். பல தொற்று நோய் கொண்ட மக்களுக்கு பணியாற்றினார். இதனால் அச்சபையில் இருந்த குருக்களும் , தொற்று நோயால் தாக்கப்பட்டு இறந்தனர். மருத்துவமனைகளைக் கட்டி, நோயாளிக்கு தொண்டாற்றுவதே இச்சபையின் பணியாக இருந்தது. இறுதியாக தனது 64ஆம் வயதில் இவரும் நோயால் தாக்கப்பட்டு இறந்தார். 

செபம்:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! நோயுற்றோர் மீது தனியன்பு கொண்டு கமில்லஸ் பணிபுரிந்தார். அவருடைய பரிந்துரையால் எங்கள் சகோதர சகோதரிகளில் உம்மை அன்பு செய்து, எங்கள் இறப்பு வேளையில் நம்பிக்கையோடு உம் திருமுன் வந்து சேர அருள்புரியும்.


கிறிஸ்துவின் ஆன்மாவே


கிறிஸ்துவின் ஆன்மாவே,

என்னைப் புனிதமாக்கும்.

கிறிஸ்துவின் திரு உடலே,

என்னை மீட்டருளும்.

கிறிஸ்துவின் திருஇரத்தமே,

எனக்கு எழுச்சியூட்டும்.

கிறிஸ்துவின் விலாவின் தண்ணீரே

என்னைக் கழுவிடுமே.


கிறிஸ்துவின் பாடுகளே

என்னைத் தேற்றிடுமே

ஓ ! நல்ல இயேசுவே

எனக்குச் செவிசாயும்

உம் திருக்காயங்களுள்

என்னை மறைத்தருளும்

உம்மிடமிருந்து என்னைப்

பிரிய விடாதேயும்


தீயப் பகைவரிடமிருந்து

என்னைக் காத்தருளும்

எனது இறப்பின் வேளையில்

என்னை அழைத்தருளும்

உம்மிடம் வர எனக்குக்

கட்டளையிட்டருளும்

புனிதர்களோடு எக்காலமும்

உம்மைப் புகழச் செய்யும் -ஆமென்


ஃபேஸ்புக் செய்திகள்


ஏசாயா தீர்க்க தரிசி மூலம் இறைவன் உரைத்த கத்தோலிக்க  ஆலயம் 

நண்பர்களே பிரிவினை வாதிகள் நம்முடைய  ஆலயங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆண்டவர் இயேசுவின் திருச்சுருபங்களையும்  மற்றும் . ஆண்டவர் இயேசுவின்  மீட்புபணிக்காக தங்களது உயிரை தந்து இரத்த சாட்சிகளாய் நமக்கெல்லாம் நம்பிக்கையாளராகவும் வழிகாட்டிகளாகவும் விளங்கும்   மரியன்னை மற்றும் திருத்தூதர்கள் புனிதர்களின் திருச்சுருபங்களையும் விக்ரகம் என்று தப்பறையான வாதங்களை விதைத்து கத்தோலிக்கமக்களை குழப்பி  ஆதாயம் தேடுகிறார்கள் 

ஏசாயா தீர்க்க தரிசி உரைத்தவாறு. விவிலியடிப்படையில் தான் நம்முடைய ஆலய திருப்பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன

எசாயா - 56 : 4 ஆண்டவர் கூறுவது இதுவே: என் ஓய்வுநாளைக் கடைப்பிடித்து, நான் விரும்புகின்றவற்றையே தேர்ந்து கொண்டு, என் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் அண்ணகர்களுக்கு, 5 என் இல்லத்தில் (ஆலயத்தில்), என் சுற்றுச்சுவர்களுக்குள் நினைவுச்சின்னம் (திருச்சுருபம்) ஒன்றினை எழுப்புவேன்; புதல்வர் புதல்வியரைவிடச் சிறந்ததொரு பெயரை வழங்குவேன்; ஒருபோதும் அழியாத என்றுமுள பெயரை அவர்களுக்குச் சூட்டுவேன் .

ஆண்டவர் இயேசு சொன்ன   அண்ணகர்கள் 

மத்தேயு - மத்  19 10 அவருடைய சீடர்கள் அவரை நோக்கி, “கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்து கொள்ளாதிருப்பதே நல்லது” என்றார்கள். 

மத்தேயு - மத்  19 11 அதற்கு அவர், “அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது. 

மத்தேயு - மத்  19 12 சிலர் பிறவியிலேயே மண உறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின்பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றார். 

இறையாட்சியின் பொருட்டு காமத்தை அடக்கி  அண்ணகர்கள் போன்ற நிலைமைக்கு தங்களை உட்படுத்தி யார் ஒருவர் ஊழியம் செய்கிறாரோ  விண்ணரசு அவர்களுக்கு அவர்களே புனிதர்கள்

எபிரேயர் - எபி  13 7 உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச்சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப்போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள்.

யாக்கோபு - யாக்  5 :10 அன்பர்களே, நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைபிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள்.               

கத்தோலிக்க ஆலயங்களில் உள்ள திரு உருவங்கள் நமது விசுவாசத்தை ஆழப்படுத்த உதவுமே தவிர நம்மை கெடுப்பபவை இல்லை .

நமது அன்பான மூதாதையர் படங்கள் நம் வீடுகளில் வைத்துள்ளது போலவே   விண்ணகத்தை பிரதிபலிக்கும் விதமாக நம் கத்தோலிக்க ஆலயங்களில் நாம் வைத்துள்ள விண்ணில் உள்ள  வான தூதர் மற்றும் புனிதர்கள் திரு உருவங்கள்   

நமது மூதாதையர்களான புனிதர்கள் அனைத்து விதங்களிலும் கடவுளுக்காக வெறுமையாக்கி இரத்தம் சிந்தி நமக்கு இறை நம்பிக்கை வளர காரணமானவர்கள்.

வார்த்தைக்கு வார்த்தை சிலை வழிபாடு என்று ஊளையிடும் பெந்தகோஸ்து  மத்ததை சார்ந்தவர்கள் தங்கள் மூதாதையர் படங்களை தங்கள் வீடுகளில் வைத்திருக்க மாட்டார்கள் ???

தமது கத்தோலிக்க ஆலயங்கள் அனைத்தும் ஆண்டவர் இயேசுவின் விண்ணக அரசின் மண்ணக வீடான ஆண்டவர் இயேசுவால் உருவாக்கபட்ட கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடமான சூபுனித பேதுரு சதுக்கத்தோடு இணைக்கபட்டவை .

மரியன்னையாலும் திருத்தூதர்களாலும் மறைசாட்சிகளாலும் உருவாக்கபட்டவை . கத்தோலிக்க அன்பர்களே தனிமனிதன் தனது சுய லாபத்திற்காக உருவாக்கும் பிரிவினைவாதிகளின் செபகூட்டங்களுக்கு ஏன் செல்லவேண்டும் ???

அற்புதம் பொங்கி வழியும் நமது கத்தோலிக்க ஆலயங்கள் செல்வோம் நல்ல பாவசங்கீர்தனம் செய்து சூதிவ்ய நற்கருணை உட்கொள்ளுங்கள் 

நமது உடலை தூய ஆவியானவர் தங்கும் ஆலயமாக மாற்றுவோம்

கத்தோலிக்க ஆலயம்  செல்லுங்கள் அற்புதங்களை அள்ளி செல்லுங்கள் கிறிஸ்தவ வாழ்வு என்பது போராட்டமான வாழ்வு போராடி வெற்றி கொள்வோம் ஜெபமாலை செய்வோம் 

குறிப்பாக பெந்தகோஸ்து  பிரிவினைவாதிகளிடம் சற்று விலகியே இருங்கள் ஏமாந்த கத்தோலிக்க விசுவாசிகளை தனது சுய லாபத்திற்காக மூளை சலவை செய்து தனது அமைப்பிற்கு இழுத்து செல்லும் கொட்டிலில் ஆடு திருடும் ஓநாய் போல வருவான் மக்களை கொள்ளையடித்துள தின்னும் ஓநாய் கூட்டம்  கள்ளதீர்ககதரிசிகள் பதில் சொல்லும் காலம் வரும் 


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...