Tuesday, July 13, 2021

15th Ordinary Week Thursday - பொதுக்காலம் 15ஆம் வாரம் - வியாழன்

 பொதுக்காலம் 15ஆம் வாரம் - வியாழன்



 Download pdf 

 முதல் வாசகம்


இருக்கின்றவர் நானே’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 3: 13-20


அந்நாள்களில், மோசே கடவுளிடம், “இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, ‘அவர் பெயர் என்ன?’ என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?” என்று கேட்டார். கடவுள் மோசேயை நோக்கி, ‘இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே’ என்றார். மேலும் அவர், “நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘இருக்கின்றவர் நானே’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்” என்றார்.

கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் - என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்’ என்று சொல். இதுவே என்றென்றும் என் பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!

போ. இஸ்ரயேலின் பெரியோர்களை ஒன்றுதிரட்டி அவர்களை நோக்கி, ‘உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் - எனக்குக் காட்சியளித்து இவ்வாறு கூறினார்: உங்களையும், எகிப்தில் உங்களுக்கு நேரிட்டதையும் நான் கண்ணாலே கண்டுகொண்டேன். எகிப்தின் கொடுமையிலிருந்து கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு - பாலும், தேனும் பொழியும் நாட்டிற்கு - உங்களை நடத்திச் செல்வேன்’ என்று அறிவிப்பாய். அவர்கள் நீ சொல்வதைக் கேட்பர். நீயும் இஸ்ரயேலின் பெரியோர்களும் எகிப்திய மன்னனிடம் செல்லுங்கள். அவனை நோக்கி, ‘எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் எங்களைச் சந்தித்தார். இப்போதே நாங்கள் பாலை நிலத்தில் மூன்று நாள் வழிப்பயணம் போக இசைவு தாரும். ஏனெனில், எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிசெலுத்த வேண்டும்’ என்று சொல்லுங்கள்.

என் கைவன்மையைக் கண்டாலன்றி, எகிப்திய மன்னன் உங்களைப் போகவிடமாட்டான் என்பது எனக்குத் தெரியும். எனவே என் கையை ஓங்குவேன். நான் செய்யப்போகும் அனைத்து அருஞ்செயல்களாலும் எகிப்தியனைத் தண்டிப்பேன். அதற்குப் பின் அவன் உங்களை அனுப்பிவிடுவான்.”


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


பதிலுரைப் பாடல் திபா 105: 1,5. 8-9. 24-25. 26-27 

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார். அல்லது: அல்லேலூயா.


1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.

5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.   ℟ 

8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.

9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார்.  ℟ 

24 ஆண்டவர் தம் மக்களைப் பல்கிப் பெருகச் செய்தார்; அவர்களின் எதிரிகளைவிட அவர்களை வலிமைமிக்கவர்கள் ஆக்கினார்.

25 தம் மக்களை வெறுக்கும்படியும், தம் அடியார்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யும்படியும் அவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார்.   ℟ 

26 அவர் தம் ஊழியராகிய மோசேயையும், தாம் தேர்ந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார்.

27 அவர்கள் எகிப்தியரிடையே அவர்தம் அருஞ்செயல்களைச் செய்தனர்; காம் நாட்டில் வியத்தகு செயல்களைச் செய்து காட்டினர்.   ℟ 


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30


அக்காலத்தில், இயேசு கூறியது: “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...