Friday, July 16, 2021

16th Ordinary Week Sunday - பொதுக்காலம் 16ஆம் வாரம் - ஞாயிறு

 

பொதுக்காலம் 16ஆம் வாரம் - ஞாயிறு

திருப்பலி முன்னுரை: 


இறையேசுவில் பிரியமானவர்களே,

இன்று ஆண்டின் பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறை சிறப்பிக்க வந்திருக்கும் இறைமக்கள் உங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இன்றைய வாசங்கள் அனைத்துமே இயேசு மக்கள் மீது கொண்ட ஆழமான பரிவைப் பற்றி பேசுகின்றன. இயேசு தன் மக்களுக்கு நேரிய நல் மேய்ப்பர்களைத் தருகின்றார். அவர்களுக்கு அமைதி மற்றும் ஒற்றுமையை அருளுகின்றார். அவர்களை ஒரே இடத்தில் கூட்டிச் சேர்க்கின்றார். இவ்வாறு இயேசு கிறிஸ்து பரிவின் மொத்த உருவாய் இருக்கின்றார்.  நாமும் சற்று நம்மையே அலசி பார்ப்போம். இக் கடினமான கொரோனா நோய்த்தொற்று காலத்தில் எவ்வாறு செயல்படுட்டோம். அடுத்தவர் மீது பரிவு கொண்டோமா?  சற்று சிந்தித்துப் பார்ப்போம். மேலும் இயேசு கிறிஸ்துவைப் போன்று நாமும் மற்றவர் மீது ஆழ்ந்த பரிவுள்ளவர்களாய் வாழ வரம் வேண்டி கல்வாரி பலியில் இணைவோம்.


வருகைப் பல்லவி திபா 53:6,8          

இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் ஆண்டவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் இருக்கின்றார்: தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன். ஆண்டவரே,

உமது பெயரைப் போற்றுவேன். ஏனெனில் அது நல்லது.


அருட்பணியாளர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.

எல்லோரும்: ஆமென்.

அ.ப.: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக


தண்ணீருக்கு ஆசி வழங்குதல்

ஆண்டவரே, ஈசோப் புல்லினால்

என்மேல் தெளிப்பீர்

நானும் தூய்மையாவேன்.

நீரே என்னைக் கழுவ

நானும் உறைபனிதனிலும் வெண்மையாவேன்.


இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கேற்ப

என்மேல் இரக்கம் கொள்வீர்.

தந்தையும் மகனும் தூய ஆவியாரும்

மாட்சியும் புகழும் ஒன்றாய்ப் பெறுக.

தொடக்கத்தில் இருந்தது போல

இன்றும் என்றும் என்றென்றும் – ஆமென்.

(அல்லது)


பாவத்துயர்ச் செயல்

அ.ப.: சகோதர, சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.

(சிறிது நேரம் அமைதி)

எல்.: எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கின்றேன், ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். (மார்பில் தட்டிக் கொண்டு)

என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால் எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும் சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.


அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

எல்.: ஆமென்


உன்னதங்களிலே (பாடல்)

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.

உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி உண்டாகுக.

புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே.

உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மாட்சிப் படுத்துகின்றோம் யாம்.

உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவராகிய இறைவனே இணையில்லாத விண்ணரசே.

ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் வல்ல தந்தை இறைவனே.

ஒரே மகனாக உதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.

ஆண்டவராகிய இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.

தந்தையினின்று என்றென்றுமாக உதித்த இறைவன் மகனே நீர்.

உலகின் பாவம் போக்குபவரே நீர் எம் மீது இரங்குவீர்.

உலகின் பாவம் போக்குபவரே எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர்.

தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, நீர் எம் மீது இரங்குவீர்.

ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்!

நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்!

தூய ஆவியோடு தந்தை இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே.

ஆமென்.


திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, நீர் உளம் கனிந்து உம் அடியார்களாகிய எங்களில் உம் அருள்கொடைகளைப் பெருகச் செய்தருளும்; இவ்வாறு நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகியவற்றால் நாங்கள் பற்றியெரிந்து உம் கட்டளைகளை விழிப்புடனும் ஆர்வத்துடனும் கடைப்பிடிக்கச் செய்தருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற, எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

எல்.: ஆமென்


முதல் வாசக முன்னுரை

இறையேசுவில் பிரியமானவர்களே

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவர் மந்தைகளை மேய்க்கக்கூடிய மேய்ப்பர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும், மேலும் அவர்கள் மந்தைகளை எவ்வாறு வழி நடத்த வேண்டும் என்றும்  இறைவாக்கினர் எரேமியா வழியாக எடுத்துரைக்கிறார். நாமும் இவ் வாசகத்திற்கு செவிமடுத்து நல்மேய்ப்பர்களாய்த் திகழ்வோம்.


முதல் வாசகம்

ஆடுகளைக் கூட்டிச் சேர்த்து, அவற்றைப் பேணிக்காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 23: 1-6


ஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு! தம் மக்களை வழிநடத்தும் மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்; அதனைத் துரத்தியடித்தீர்கள்; அதனைப் பராமரிக்கவில்லை. இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப் போகிறேன் என்கிறார் ஆண்டவர். என் மந்தையில் எஞ்சியிருக்கும் ஆடுகளை, நான் துரத்தியடித்த அனைத்து நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்த்து அவர்களுக்குரிய ஆட்டுப்பட்டிக்குக் கொண்டுவருவேன். அவையும் பல்கிப் பெருகும். அவற்றைப் பேணிக் காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறர் திகிலுறர் காணாமலும் போகா, என்கிறார் ஆண்டவர். ஆண்டவர் கூறுவது: இதோ நாள்கள் வருகின்றன. அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள ‘தளிர்’ தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். ‘யாவே சித்கேனூ’ - ஆண்டவரே நமது நீதி - என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல் திபா 23: 1-3ய. 3டி-4. 5. 6 

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.


1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.

3ய அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். ℟ 

3டி தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்;

4 சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். ℟ 

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. ℟ 

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். ℟ 


  

இரண்டாம் வாசக முன்னுரை

இறையேசுவில் பிரியமானவர்களே

இன்றைய இரண்டாம் வாசகத்தில், தூய பவுல் எபேசு நகர மக்களிடத்தில் இயேசு கிறிஸ்து அருளிய அமைதியையும், ஒற்றுமையும் பற்றி எடுத்துரைக்கிறார். மேலும் மக்கள் அனைவரும் இயேசுகிறிஸ்துவில் ஒன்று என்றும் எடுத்துரைக்கின்ற இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்



இரண்டாம் வாசகம்

இயேசுவே நமக்கு அமைதி அருள்பவர்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 13-18


சகோதரர் சகோதரிகளே, ஒரு காலத்தில் தொலையில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து, அவரது இரத்தத்தின் மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள். ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார். பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார். தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார். அவர் வந்து, தொலையில் இருந்த உங்களுக்கும், அருகிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார். அவர் வழியாகவே, இரு இனத்தவராகிய நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி  யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தனர்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34


அக்காலத்தில், திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், “நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலை நிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


மறையுரை:

இறையேசுவில் பிரியமானவர்களே

இன்றைய நாளில் நாம் பொதுக்காலம் 16-ம் ஞாயிறு கிழமையைக் கொண்டாடுகிறோம.; இந்த பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறு நமக்கு தரக்கூடிய ஓர் உன்னத அழைப்பு நாம் இறைவனோடு இருக்கவேண்டும் என்பதுதான.; நாம் ஏன் இறைவனோடு இருக்க வேண்டும்? நாம் இறைவனோடு இருந்தால் நமது வாழ்வில் என்னென்ன நடக்கும் என்பதை இன்றைய இறைவார்த்தை நமக்கு தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது. 

இன்றைய முதல் வாசகத்தில,; நல்ல மேய்ப்பர்களை நியமிப்பதாக கடவுள் இறைவாக்கு உறைக்கிறார.; ஏனெனில் இஸ்ரேலிலிருந்த மேய்ப்பர்கள் ஆடுகளை ஒன்றாக்கவில்லை. ஆடுகளின் வாழ்வின் வளர்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆடுகளை திகில்லுர,  அச்சமுற செய்த மேய்ப்பர்களுக்கு எதிராக கண்டனக் குரல் இன்று பதிவு செய்யப்படுகிறது. இங்கு மேய்ப்பர்களுக்கு சார்பாக எடுத்துரைக்கின்ற எரேமியா துன்புறும் ஊழியனாக அறியப்படுகிறார். அவர் சுட்டிக்காட்டுவது குருக்கள் ஆண்டவர் எங்கே என்று கேட்கவில்லை. திருச்சட்டம் போதிப்போர் இறைவனை அறியவில்லை. ஆட்சியாளர்கள் அமைதியை ஏற்படுத்தாமல் கலகம் புரிந்தனர.; இறைவார்த்தையை இறைவாக்கினர்கள் உரைக்காமல் பயனற்றவை பேசி இவ்வாறு செய்திருக்கின்றனரே என்று சுட்டிக்காட்டி இவற்றிற்காக இறைவன் இவர்களோடு வழக்காட போவதாக முன்னுறைக்கிறார்.  இறைவனோடு இல்லாத ஆயர்கள். இறைவனோடு இல்லாத திருச்சட்டம் போதிப்போர.; இறைவனோடு இல்லாத ஆட்சியாளர். இறைவனோடு இல்லாத இறைவாக்கினர்கள். இவர்களுடைய வாழ்வு பயனற்றது. இறைவனின் பார்வையில் வீணானது. நாம் பரிசுத்தத்தோடு இறைவனோடு இருக்க வேண்டும.; அந்த பரிசுத்தம் நீதியினால், அன்பினால், இரக்கத்தினால் எழப்படப்பட வேண்டும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில,; தொலைவு, அருகாமை, பகைமை, ஒன்றுபடுதல், படைத்தல,; அழித்தல,; என்று பல முரன்களை புனித பவுல் முன்வைக்கிறார். நாம் எவற்றிற்கு தொலைவில் இருக்க வேண்டுமோ, அவற்றை எல்லாம் தொலைவில் இருக்க வேண்டும். எவற்றுக்கெல்லாம் அருகில் இருக்க வேண்டுமோ, அவர்கள் எல்லாம் அருகில் இருக்க வேண்டும.; அதில்தான் நாம் இறைவனோடு இருக்க முடியும். அதில்தான் நாம் சிலவற்றிலிலிருந்து இருந்து வெற்றி அடைய முடியும். இன்னும் அதிகமாக எவற்றின் மேல் நாம் பகைக்கொள்ள வேண்டும். எவற்றின் மேல் நாம் பகைக்கொள்ள வேண்டுமோ அவற்றின் மேல் அன்பில் ஒன்றாக வேண்டுமோ அவற்றை ஒன்றாக வேண்டும.; அதனை கண்டு உணரும்  போதுதான் நாம் இறைவனது அருகில் வருவோம். எதையெல்லாம் நம்மிடமிருந்து இறைவனை தொலைவு படுகின்றதோ, அவற்றையெல்லாம் தொலைத்து விட வேண்டும். எதையெல்லாம் இறைவனுக்கு அருகில் நம்மை எடுத்து வருகின்றதோ, அவற்றுக்கு நாம் அருகில் செல்ல வேண்டும.; எவையெல்லாம் இறைவனோடு இணைவதற்கு பகையாக எதிராக இருக்கிறதோ, அந்த பிணக்குகளை, பிளவுகளை, கூறுகளை, நாம் விலக்க வேண்டும். இறைவனின் அன்பில் நீதியில் ஒன்றுபட வேண்டும். அப்படி செய்கின்ற பொழுது இயேசு விரும்பிய இறையாட்சியை நாம் படைத்து காண்பிக்க முடியும்.

இன்றைய நற்செய்தி பகுதியில,;  ஆண்டவர் இயேசு தெளிவாகச் சொல்கிறார். இவ்வளவு நாட்கள் தனிமையாக இருந்து மக்களின் வாழ்வில் நலன்களில் பங்கு பங்கெடுத்த சீடர்களுக்கு ஓய்வு தேவை உணவு தேவை என்பதை அறிந்து அவர்களை ஓய்வெடுக்க சொல்கிறார.; உண்ன சொல்கிறார.; ஏனெனில் தனிமையில் அவர்கள் இறைவனோடு இருக்க வேண்டும.; அவர்கள் செல்லக்கூடிய அந்தப் பாலை நிலம் என்பது அவர்களுக்கு விடுதலைப் பயண அனுபவத்தை மனதில் கொண்டு வரும். கடந்த நாட்களில் இறைவன் எவ்வாறு இந்த மக்களை வழி நடத்தினார். இறைவனது உடனிருப்பை முழுமையாக கொடுத்து, பாலை நிலம் முழுவதும் உடன் பயணித்தரே இன்றும் அவரது உடனிருப்பு நமக்குத் தேவை என்பதை உணரவேண்டும் என்பதற்காக தனிமையை ஆண்டவர் கொடுக்கின்றார். இந்த தனிமையின் நிமித்தமாக அவர்கள் பயணித்த போது அவர்களை கண்ட பல மக்கள் மீது ஆண்டவர் இயேசு பரிவு கொள்கின்றார். ஏனெனில் யாரெல்லாம் இறைவனோடு இருக்க புறப்படுகிறார்களோ, இறைவனோடு இருக்க வருகிறார்களோ, அவர்கள் மீது இறைவனது பரிவும், இரக்கமும் கிடைக்கும.; என்பதை இயேசு தெளிவாக சுட்டிக் காட்டுகிறார். நாம் நமது வாழ்வில் யாரோடு இருக்கிறோம?; நாம் நமது வாழ்வில் எவற்றையெல்லாம் விடுக்க வேண்டுமோ, நாம் நமது வாழ்வில் எவற்றையெல்லாம் அளிக்க வேண்டும.; நாம் நமது வாழ்வில் எவற்றுக்கெல்லாம் படைக்க வேண்டுமோ, அவை எல்லாம் இறைவனின் உடன் இருத்தலில் இருக்கின்றபொழுது நாம் நிச்சயமாக பலம் நிறைந்தவர்களாக மாறமுடியும.; அப்படி நடக்கின்ற பொழுது இனி வாழ்பவன் நான் அல்ல எண்ணில் வாழ்பவர் ஆண்டவர் இயேசு கூறிய புனித பவுலைப் போல நாமும் சொல்லி இறைவனின் இருத்தலால் இன்புற்று இருப்போம் இறையாட்சியை மண்ணில் படைப்போம்.


அருட்தந்தை. சவரி , தூத்துக்குடி மறைமாவட்டம்


நம்பிக்கை அறிக்கை

1. விண்ணையும் மண்ணையும் படைத்தவராம்

கடவுள் ஒருவர் இருக்கின்றார்

தந்தை, மகன், தூய ஆவியராய்

ஒன்றாய் வாழ்வோரை நம்புகிறேன்.


2. தூய ஆவியின் வல்லமையால்

இறைமகன் நமக்காய் மனிதரானார்

கன்னி மரியிடம் பிறந்தவராம்

இயேசுவை உறுதியாய் நம்புகிறேன்


3. பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்

சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார்

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்

இறப்பின் மீதே வெற்றி கொண்டார்.


4. விண்ணகம் வாழும் தந்தையிடம்

அரியணைக் கொண்டு இருக்கின்றார்

உலகம் முடியும் காலத்திலே

நடுவராய் திரும்பவும் வந்திடுவார்

5. தூய ஆவியாரை நம்புகிறேன்

பாரினில் அவர் துணை வேண்டுகிறேன ;

பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று

பரிகார வாழ்வில் நிலைத்திடுவேன்.


6. திரு அவை உரைப்பதை நம்புகிறேன்

புனிதர்கள் உறவை நம்புகிறேன்

உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை

உறுதியுடனே நம்புகிறேன் - ஆமென்


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. இறையாட்சியின் திறவுகோலே இறைவா, உம் வழித் தோன்றலாகிய திருத்தந்தை, ஆயர்கள், கர்தினால்கள், குருக்கள், இருபால் துறவியர், பொதுநிலையினர் யாவரும், உம்முன் தூயோராய் அணிவகுக்க வேண்டும் என்னும் நோக்கத்தை மனதில் கொண்டு முன்மாதிரியாக வாழ்ந்து வளரும் சமுதாயத்தினரை இயேசு கிறிஸ்துவின் வழியில் நடத்திட அருள்வேண்டி உம்மை மன்றாடுகிறோம்.


2. ஒப்பற்ற நாயகனே எம் இறைவா! இன்றைய நவீன உலகில் பணம், பொருள், ஆடம்பரம் என்ற உலகக் காரியங்களில் நாங்கள் எங்களையே அடிமையாக்கிக் கொள்ளாதவாறு கிறிஸ்துவே எனக்கு ஒப்பற்றச் செல்வம். அதுவே எனது ஆதாயம் என்னும் திருதூதர் பவுலின் வார்த்தைகளை வாழ்வாக்க வேண்டுமென்று இறைவா உமமை மன்றாடுகின்றோம்.


3. தலைவராக பணிப்பவராம் இறைவா இந்த உலகின் ஒவ்வொரு நாட்டிலும் தலைமைப் பணியாற்றும் ஒவ்வொருவரையும் உமது அன்பினால் நிறைத்து, உமக்கு உகந்தவர்களாய் இறையாசைக் கட்டியெழுப்பும் தெளிந்த மனதை அவர்களில் உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. அனைவருக்கும் மீட்பராகிய எம் இறைவாட நாங்கள் நற்செயல் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாகப் படைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து எம் இளையோர் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் நற்செயல்கள் புரிவதில் நாளுக்கு நாள் வளர வேண்டுமென்று இறiவா உம்மை மன்றாடுகிறோம்.


5. அன்பின் இயேசுவே என்னையும் இறைவாக்கினராக நீர் அழைத்திருக்கின்றீர் என்பதே எனக்கு வியப்பாகவும் மலைப்பாகவும் இருக்கிறது. ஆயினும் உம் அழைப்பை ஏற்கிறேன். நன்றி கூறுகிறேன். என் பணிகளும் என் இறைவாக்காக அமையட்டும் உலகைப் பற்றிக்கொள்ளாமல் உமமையே பற்றி வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


5. எங்கள் குடும்பங்களில் அரசராய் வீற்றிருக்கும் எம் இறைவாட எங்கள் பங்கிலும், எம் குடுமயங்களிலும் உள்ள எங்கள் அனைவரின் உள்ளத்திலும் ஆவியானவரின் அருளும் இயேசுவின் பேராய் மாறிய அடிப்படைத் தேவையான அரப்பணிப்பாவாழ்வு அதன் மூலம் உம் அன்பின் ஒளியாய் சுடர் விட்டுப் பணியாளராய் திக் பந்தியது பான் ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


7. நிலை வாழ்வு அளித்திடும் எம் இறைவா உம் குடும்பங்களில் கிறிஸ்துவில் மரித்த விசுவாசிகள் மற்றும் தொற்று நோயால் மரித்த அனைவரும் நித்திய இளைப்பாற்றி அடையவும் துமானதாக திருக்கூட்டத்தில் அவர்களை இணைத்திடவும் அருள்புரியமென்று உம்மை மன்றாடுகிறோம்.


அ.ப.: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்

எல்.: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும் நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வராக.


காணிக்கை மீது மன்றாட்டு          

இறைவா, பழைய ஏற்பாட்டுப் பல்வேறு பலிகள் உம் திருமகனின் நிறைவான ஒரே பலியில் முழுமை பெறச் செய்தீர்; ஆபேலின் காணிக்கைகள் மீது ஆசி வழங்கிப் புனிதப்படுத்தியது போல, உமது மாட்சியின் மேன்மைக்காக இறைப்பற்றுள்ள உம் அடியார்கள் ஒவ்வொருவரும் செலுத்தும் பலியை ஏற்று, அது அனைவரின் மீட்புக்கும் பயன்படச் செய்தருள்வீராக. எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்.: ஆமென்


நற்கருணை மன்றாட்டு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: இதயங்களை மேலே எழுப்புங்கள்

எல்.: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்

அ.ப.: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்

எல்.: அது தகுதியும் நீதியும் ஆனதே


ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


உம் வார்த்தையான அவர் வழியாக அனைத்தையும் படைத்தீர். அவரையே மீட்பராகவும் ஈடேற்றுபவராகவும் எங்களுக்கு அனுப்பினீர். அவர் தூய ஆவியால் உடலெடுத்து, கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். அவர் உமது திருவுளத்தை நிறைவேற்றி, புனித மக்களை உமக்குப் பெற்றுத் தரத் தம் கைகளை விரித்துப் பாடுபட்டார். இவ்வாறு அவர் சாவை வென்று உயிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆகவே வானதூதரோடும் புனிதர் அனைவரோடும் சேர்ந்து,

நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்துரைத்து

ஒரே குரலாய்ச் சொல்வதாவது:

எல்.: தூயவர், தூயவர், தூயவர்.

வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.

விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன. உன்னதங்களிலே ஒசன்னா!

ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.

உன்னதங்களிலே ஒசன்னா!


அ.ப.: நம்பிக்கையின் மறைபொருள்

எல்.: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.


அ.ப.:இவர் வழிகாக இவரோடு இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே

தூய ஆவியாரின் ஒன்றிப்பில் எல்லா புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே

எல்.: ஆமென்

அ.ப.:மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்

எல்.: விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,

மண்ணுலகிலும் நிறைவேறுக எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும், எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.


அ.ப.: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறில்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.

எல்.: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே


அ.ப.: ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே, “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீNர் எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திருஅவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உம் திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

எல்.: ஆமென்


அ.ப.: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக

அ.ப.: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம்

எல்.: உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எம்மேல் இரக்கம் வையும். (2)

உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எமக்கு அமைதி அருளும்.


அ.ப.: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.

எல்.: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.


திருவிருந்துப் பல்லவி      திபா 110:4-5 

இரக்கமும் அருளும் உடைய ஆண்டவர், தம் வியத்தகு செயல்களை நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளித்தார்.


அல்லது

திவெ 3:20

இதோ! நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன்; யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் அவரோடு உள்ளே சென்று அவரோடு உணவு அருந்து வேன்; அவரும் என்னோடு உணவு அருந்துவார், என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வுகளால் நீர் நிறைவு செய்த உம் மக்களுடன் கனிவாய்த் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: பழைய நிலையிலிருந்து வாழ்வின் புதிய நிலைக்கு நாங்கள் கடந்து செல்லச் செய்வீராக எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்


நிறைவுச் சடங்கு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக

எல்.: ஆமென்

அ.ப.: சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று

எல்.: இறைவனுக்கு நன்றி


இந்த வார புனிதர்

புனித மகதலா மரியா 


இவர் கலிலேயா நாட்டைச் சேர்ந்தவர். இயேசுவின் சீடர்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இயேசு பாடுகள்பட்டு, மரித்து, உயிர்தெழும்வரை மரியா அவரோடு உடனிருந்தார். உயிர்த்த இயேசுவை முதன்முதலில் கண்டவர். இவரிடமிருந்துதான் இயேசு ஏழு பேய்களை ஓட்டினார். தான் செய்த பாவங்களின் பரிகாரமாய் ஆண்டவரின் பாதங்களை கழுவிய மரியா இவர்தான். இறந்து அடக்கம் செய்யப்பட்ட ஆண்டவரின் கல்லறை, வெறுமனே இருப்பதை முதன்முதலில் பார்த்து, இயேசுவின் சீடர்களிடம் அறிவித்தவரும் இவரேதான். இயேசுவை காணவில்லையே என்று ஆதங்கப்பட்டு, கண்ணீர் விட்டு அழுது, இயேசுவை பற்றிக்கொண்டவர் இவர். 


மரியா ஓர் பெரும்பாவி என்று மக்களால் ஒதுக்கிவைக்கப்பட்டபோது, தன் நிலையை உணர்ந்து அழுது, ஓடிச்சென்று இயேசுவிடம் சென்றார். தன் பாவங்களின் பரிகாரமாய் செய்த செயலினால் இயேசுவின் ஆழ்மனதில் இடம்பிடித்தார். அன்னை மரியாளுக்குபிறகு, இயேசுவின் அருகில் எப்போதும் அவருக்காக வாழ்ந்தவர். “என்னை இப்படி பற்றிக்கொள்ளாதே" என்று ஆண்டவரே கூறும் அளவுக்கு, அவர் மேல் அன்புகொண்டவர். இயேசுவைப்பற்றி கொள்வதில் அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் அன்றிலிருந்து இன்றுவரை திகழ்கிறார். 


செபம்:

அதிசயம் செய்பவரே எம் இறைவா! பாஸ்கா மகிழ்ச்சியின் முதல் நற்செய்தியை நீர் மரியா மகதலாவிற்கு தந்து எம்மை மகிழ்ச்சிபடுத்தினீர். நாங்களும் மரியாவைப்போல இயேசுவைப்பற்றி கொண்டு, உம் நற்செய்தியை இவ்வுலகில் பரப்ப, தேவையான திடம் தந்து காத்திடுமாறு உம்மை மன்றாடுகின்றோம்.


கிறிஸ்துவின் ஆன்மாவே

கிறிஸ்துவின் ஆன்மாவே,

என்னைப் புனிதமாக்கும்.

கிறிஸ்துவின் திரு உடலே,

என்னை மீட்டருளும்.

கிறிஸ்துவின் திருஇரத்தமே,

எனக்கு எழுச்சியூட்டும்.

கிறிஸ்துவின் விலாவின் தண்ணீரே

என்னைக் கழுவிடுமே.


கிறிஸ்துவின் பாடுகளே

என்னைத் தேற்றிடுமே

ஓ ! நல்ல இயேசுவே

எனக்குச் செவிசாயும்

உம் திருக்காயங்களுள்

என்னை மறைத்தருளும்

உம்மிடமிருந்து என்னைப்

பிரிய விடாதேயும்


தீயப் பகைவரிடமிருந்து

என்னைக் காத்தருளும்

எனது இறப்பின் வேளையில்

என்னை அழைத்தருளும்

உம்மிடம் வர எனக்குக்

கட்டளையிட்டருளும்

புனிதர்களோடு எக்காலமும்

உம்மைப் புகழச் செய்யும் -ஆமென்



No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...