Saturday, July 31, 2021

18th Ordinary Week Sunday - பொதுக்காலம் 18ஆம் வாரம் - ஞாயிறு

பொதுக்காலம் 18ஆம் வாரம் - ஞாயிறு




திருப்பலி முன்னுரை: 

இறையேசுவில் பிரியமானவர்களே,

இறை இயேசுவில் இனியவர்களே, இன்று, ஆண்டின் பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு வழிபாட்டினை நாம் சிறப்பித்துக் கொண்டிருக்கிறோம்.  இன்றைய வாசகங்கள் நாம் கடவுளுக்கு உகந்த வாழ்வினை வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. மேலும், கடவுளுக்கு உகந்த வாழ்வென்பது அவரை நம்பி, அவரிடமே முழு சரணாகதியடைவது. நாம் சற்று நம்மையே அலசிப் பார்ப்போம். நமது துன்ப துயரங்களில், பலவீனங்களில், இக்கட்டான சூழ்நிலைகளில் நாம் எவ்வாறு செயல்பட்டோம். இறைவனையே நம்பி முழு சரணாகதியடைந்தோமா? இல்லை கடவுளுக்கு எதிராக முணுமுணுத்தோமா?  மேலும், இத்திருப்பலியில் இறைவனுக்கு உகந்த வாழ்வு வாழவும், அவரையே  நம்பி முழு சரணாகதியடையவும் அதற்கான அருள் வரங்கள் வேண்டி தொடர்ந்து மன்றாடுவோம்.


வருகைப் பல்லவி   

கடவுளே! எனக்குத் துணை யாக வாரும்; ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்; நீரே எனக்குத் துணை  நீரே என்னை விடுவிப்பவர். ஆண்டவரே! காலம் தாழ்த்தாதேயும்.


அருட்பணியாளர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.

எல்லோரும்: ஆமென்.

அ.ப.: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக


தண்ணீருக்கு ஆசி வழங்குதல்

ஆண்டவரே, ஈசோப் புல்லினால்

என்மேல் தெளிப்பீர்

நானும் தூய்மையாவேன்.

நீரே என்னைக் கழுவ

நானும் உறைபனிதனிலும் வெண்மையாவேன்.


இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கேற்ப

என்மேல் இரக்கம் கொள்வீர்.

தந்தையும் மகனும் தூய ஆவியாரும்

மாட்சியும் புகழும் ஒன்றாய்ப் பெறுக.

தொடக்கத்தில் இருந்தது போல

இன்றும் என்றும் என்றென்றும் – ஆமென்.


(அல்லது)


பாவத்துயர்ச் செயல்


அ.ப.: சகோதர, சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.

(சிறிது நேரம் அமைதி)

எல்.: எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கின்றேன், ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். (மார்பில் தட்டிக் கொண்டு)

என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால் எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும் சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.


அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

எல்.: ஆமென்


உன்னதங்களிலே (பாடல்)

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.

உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி உண்டாகுக.

புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே.

உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மாட்சிப் படுத்துகின்றோம் யாம்.

உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவராகிய இறைவனே இணையில்லாத விண்ணரசே.

ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் வல்ல தந்தை இறைவனே.

ஒரே மகனாக உதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.

ஆண்டவராகிய இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.

தந்தையினின்று என்றென்றுமாக உதித்த இறைவன் மகனே நீர்.

உலகின் பாவம் போக்குபவரே நீர் எம் மீது இரங்குவீர்.

உலகின் பாவம் போக்குபவரே எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர்.

தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, நீர் எம் மீது இரங்குவீர்.

ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்!

நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்!

தூய ஆவியோடு தந்தை இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே.

ஆமென்.


திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடும் உம் அடியார்களாகிய எங்களுடன் இருந்து உமது கனிவிரக்கத்தை என்றும் எங்கள் மீது பொழிந்தருளும்; இவ்வாறு எங்களைப் படைத்து, வழிநடத்துகிறவர் நீரே எனப் பெருமை கொள்ளும் எங்களுக்காக நீர் படைத்தவற்றைப் புதுப்பித்து, புதுப்பித்தவற்றைப் பாதுகாத்தருள்வீராக உம்மோடு. தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற, எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

எல்.: ஆமென்


முதல் வாசக முன்னுரை

இறையேசுவில் பிரியமானவர்களே

இன்றைய முதல் வாசகம் விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாலைநிலத்தில் உணவுக்காக இஸ்ரயேல் மக்கள் மோசேக்கு எதிராகவும் கடவுளுக்கு எதிராகவும் முணுமுணுப்பது இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக் கூறுகிறது. கடவுளை நம்பி சென்ற மக்கள் கடவுளுக்கு எதிராகவே முணுமுணுக்கிறார்கள். கடவுள் தம் மக்கள் மீது பரிவு கொண்டு மன்னா உணவு அளிக்கிறார் எனக் கூறும் வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.


முதல் வாசகம்


நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 16: 2-4, 12-15


அந்நாள்களில், இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் சீன் பாலை நிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர். இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, “இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும்! ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலை நிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்றனர். அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக் கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன். இஸ்ரயேல் மக்களின் முறையீடுகளை நான் கேட்டுள்ளேன். நீ அவர்களிடம், ‘மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்’ என்று சொல்” என்றார். மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப் படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது. பனிப் படலம் மறைந்தபோது பாலை நிலப்பரப்பின்மேல் மென்மையான, தட்டையான, மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது. இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி ‘மன்னா’ என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது மோசே அவர்களை நோக்கி, “ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே” என்றார்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல்  திபா 78: 3,4டிஉ. 23-24. 25,54 

பல்லவி: ஆண்டவர் அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்.


3 நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எம் மூதாதையர் எமக்கு விரித்துரைத்தவை - இவற்றை உரைப்போம்.

4டிஉ வரவிருக்கும் தலைமுறைக்கு ஆண்டவரின் புகழ்மிகு, வலிமைமிகு செயல்களையும் அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம். - பல்லவி

23 ஆயினும், மேலேயுள்ள வானங்களுக்கு அவர் கட்டளையிட்டார்; விண்ணகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார்.

24 அவர்கள் உண்பதற்காக மன்னாவை மழையெனப் பொழியச் செய்தார்; அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார். - பல்லவி

25 வானதூதரின் உணவை மானிடர் உண்டனர்; அவர்களுக்கு வேண்டியமட்டும் உணவுப் பொருளை அவர் அனுப்பினார்.

54 அவர் தமது திருநாட்டுக்கு, தமது வலக்கரத்தால் வென்ற மலைக்கு, அவர்களை அழைத்துச் சென்றார். - பல்லவி


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


  

இரண்டாம் வாசக முன்னுரை

இறையேசுவில் பிரியமானவர்களே

இன்றைய இரண்டாம் வாசகம் திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. திருத்தூதர் பவுல் தம் மக்களுக்கு அறிவுரை கூறுவதாக இன்றைய இரண்டாம் வாசகம் அமைகிறது. நாம் நமது பழைய இயல்பை அழித்து புதிய இயல்பை அறிந்து கொள்ள அழைப்பு விடுக்கும் இரண்டாம் வாசகத்திற்கு செவிமடுப்போம்.


இரண்டாம் வாசகம்


கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 17, 20-24


சகோதரர் சகோதரிகளே, நான் ஆண்டவர் பெயரால் வற்புறுத்திச் சொல்வது இதுவே: பிற இனத்தவர் வாழ்வதுபோல இனி நீங்கள் வாழக் கூடாது. அவர்கள் தங்கள் வீணான எண்ணங்களுக்கேற்ப வாழ்கிறார்கள். ஆனால் நீங்கள் கிறிஸ்துவைப் பற்றிக் கற்றறிந்தது இதுவல்ல. உண்மையில் நீங்கள் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டதும் கற்றறிந்ததும் அவரிடமுள்ள உண்மைக்கேற்பவே இருந்தது. எனவே, உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள். உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்பட வேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும்.



வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி     மத் 4: 4டி

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-35


அக்காலத்தில், இயேசுவும் அவருடைய சீடரும் திபேரியாவில் இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்குக் கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, “ரபி, எப்போது இங்கு வந்தீர்?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, “நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்” என்றார். அவர்கள் அவரை நோக்கி, “எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்” என்றார். அவர்கள், “நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டனரே! ‘அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்’ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!” என்றனர். இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல் வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது” என்றார். அவர்கள், “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்று கேட்டுக் கொண்டார்கள். இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” என்றார்.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


மறையுரை:

இறையேசுவில் பிரியமானவர்களே

ஒரு மனிதனுக்கு மூன்று விதமான பசிகள் ஏற்படுகிறதாம். 

1. உடல் பசி:  வேலை செய்கிறோம.; பரபரப்பாக இருக்கின்றோம். ஆக உடலில் பசி ஏற்படுகிறது. உணவை சாப்பிட உடல் பசி தீர்ந்து விடுகிறது. 2. அறிவுப்பசி: இப்பசி எப்படி போகும், எப்படி தீர்க்கப்படும் என்றால், நூலகத்திற்கு சென்று புத்தகங்களை வாசிக்க அறிவுப் பசி தீர்ந்து விடுகிறது. 

3. ஆன்மீக பசி: மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்மீக பசி. இப்பசியை எப்படிப் போக்குவது? எங்கு நாம் செல்ல வேண்டும?; இறைவார்த்தையை தேடினால,; ஆலயத்திற்கு சென்றால், இப்பசியை நாம் போக்கலாம். நற்கருணையை, இயேசுவை உண்கின்ற போது ஆன்மீக பசிக்கான மருந்து கிடைத்துவிடுகிறது.       

இன்று நாம் பொதுக்காலம் 18ம் ஞாயிறு சிறப்பிக்கின்றோம். 

முதலாவது இன்றைய முதல் வாசகத்தில,; இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு அப்பம் ஆகிய மன்னா என்னும் உணவை வழங்குகிறார். 

இரண்டாம் வாசகத்தில,; பவுலடியார் எபேசிய மக்களுக்கு எழுதும்போது, புதிய மனிதருக்குரிய இயல்பை அறிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும் என்று எழுதுகிறார.; 

நற்செய்தியில் இயேசு கூறுகிவார், வாழ்வுதரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்கு பசியே இராது. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்றுமே தாகம் இராது என்கிறார.; மேலே சொல்லப்பட்ட அந்த ஆன்மீக பசியைப் போக்க ஒரே வழி வாழ்வு தரும் உணவை உண்டால் மட்டுமே, அல்லது இயேசுவோடு நமது உறவை ஏற்படுத்தினால் மட்டுமே. அந்த ஆன்மீக பசியைப் போக்குகின்ற நற்கருணை வாழ்வாக முடியுமா? ஆம் இந்த நற்கருனை தான் நமது வாழ்வு. அதுதான் நமது உயிர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டு 50,000 பேர் இறந்து பதினைந்து நாட்கள் ஆன சூழலில் அங்கிருந்து அவரது மடத்தின் தலைவராக இருந்த அருட்பே பணியாளர் காலில் காயத்தோடு சீழ் வடியும் நிலையில் இளம்பெண் மருந்து உணவு வேண்டாம் நற்கருணை கொண்டு வந்தீர்களா என்று கேட்டாராம.; இந்த நற்கருணையை உட்கொண்டதும் தனது இறுதி மூச்சை விட்டார். ஆக நமது வாழ்வு நற்கருணை நமது வாழ்வு நற்கருணையில் தான் உள்ளது. 

இரண்டாவதாக புனித அகுஸ்தினார் சொல்வார் இயேசுவை, நற்கருணையை உண்பவன் இயேசு ஆகவே மாறுகிறான். இயேசு எப்படி எல்லாம் பிறரை அன்பு செய்தாரோ, பிறர் மீது இரக்கம் கொண்டாரோ நாமும் இயேசுவைப் போலவே செய்கிறோம். பிலிப்பியர் 5:2 இல் இயேசுவிடம் இருந்த மனநிலையே உங்களிடமும் இருப்பதாக. இன்னும் நாம் இயேசுவாக மாறவில்லையே என்ற எண்ணம் நம்மை சிந்திக்க அழைக்கிறது. 

மூன்றாவதாக நற்கருணை நமக்கு புதிய சக்தியை, ஆற்றலை, தருகிறது கோடி அற்புதர் அந்தோனியார் பல புதுமைகளை செய்தார் ஏன் செய்து கொண்டே இருக்கிறார். அவர் என்ன மந்திரவாதியா? இல்லை நற்கருணையின் ஆற்றலால் தான் செய்து முடித்தார.; புனித அன்னை தெரேசா நோயாளிகளின் புண்களுக்கு மருந்திட்டாரோ எப்படி நற்கருணையில் பலத்தினால் தான். ஆக நமது கிறிஸ்தவ வாழ்வின் மையமே இந்த நற்கருணை தான். அதுதான் வாழ்வு. அதிலேயே தான் நமது வாழ்வும் உள்ளது. இந்த நற்கருணையோடு இணைந்திருந்தால் மட்டுமே நமக்கு வாழ்வு உண்டு எனவே நற்கருணையை மையப்படுத்தி வாழ்வை பெறுவோம். - ஆமென்


அருட்தந்தை. சில்வஸ்டர், தூத்துக்குடி மறைமாவட்டம். 

நம்பிக்கை அறிக்கை

1. விண்ணையும் மண்ணையும் படைத்தவராம்

கடவுள் ஒருவர் இருக்கின்றார்

தந்தை, மகன், தூய ஆவியராய்

ஒன்றாய் வாழ்வோரை நம்புகிறேன்.


2. தூய ஆவியின் வல்லமையால்

இறைமகன் நமக்காய் மனிதரானார்

கன்னி மரியிடம் பிறந்தவராம்

இயேசுவை உறுதியாய் நம்புகிறேன்


3. பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்

சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார்

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்

இறப்பின் மீதே வெற்றி கொண்டார்.


4. விண்ணகம் வாழும் தந்தையிடம்

அரியணைக் கொண்டு இருக்கின்றார்

உலகம் முடியும் காலத்திலே

நடுவராய் திரும்பவும் வந்திடுவார்

5. தூய ஆவியாரை நம்புகிறேன்

பாரினில் அவர் துணை வேண்டுகிறேன ;

பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று

பரிகார வாழ்வில் நிலைத்திடுவேன்.


6. திரு அவை உரைப்பதை நம்புகிறேன்

புனிதர்கள் உறவை நம்புகிறேன்

உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை

உறுதியுடனே நம்புகிறேன் - ஆமென்


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. “எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர் நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்” என்று மொழிந்த எம் அன்பு இறைவா, உம் திருச்சபையை வழிநடத்தும்; திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் நற்கருணை பிரசன்னத்திலே, உம் வாhத்தையிலே இணைந்திருந்து உம் திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்லவதற்குரிய அருள்வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வர்” என்று மொழிந்த வாழ்வின் நாயகனே, எம் தாய்திருநாட்டை ஆளுகின்ற தலைவர்கள், அதிகாரிகள் அனைவரும் உம்மக்களுக்கு வாழ்வு தருபவர்களாக மாறவும், பொதுநலத்தோடு சிந்தித்து செயல்படவும் அருள்வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


3. “எனது சதை உண்மையான உணவு, எனது இரத்தம் உண்மையான பானம்” என்று மொழிந்த எம் அன்பு இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது திருவுடல், திருஇரத்தம் என்னும் கொடைகளுக்காக நன்றி கூறுகிறோம். எங்களை ஆசிர்வதித்தருளும், உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் உமது திருமகனாம் இயேசுவின் திருவுடலாகிய நற்கருணைக்குரிய மாண்பையும், மதிப்பையும் உணர்ந்து வாழவும்;, இறைவார்த்தையாலும், நற்கருணையாலும் ஊட்டம் பெற்று உமது சாட்சிகளாக வாழ அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


4. “வாழும் தந்தை என்னை அனுப்பினார் நானும் அவரால் வாழ்கிறேன் அதுபோல் என்னை உன்போரும் என்னால் வாழ்வர்” என்று மொழிந்தவரே எம்பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர், இளையோர் பல்வேறு குழுப்பொறுப்பாளர்கள்; அனைவரும் உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள,; அனுப்பப்பட்டவர்கள் என்பதனை உணர்ந்தவர்களாக, படிப்பிலும் நல்லொழுக்கத்திலும், விசுவாசத்திலும் உதவிபுரிபவர்களாகவும் தங்கள் பணிகளிலே பொறுப்பு மிக்கவர்களாகவும் சிறந்திட அருள்வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


5. அன்பின் உணவாக வருபவரே எம் இறைவா! இவ்வுலகில் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் பசி, பட்டினி, பஞ்சசம் என வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கும் மக்கள் மேல் இரக்கம் கொண்டு அவர்களுக்கு அன்றாட உணவைத் தந்து உயிரளிக்க வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகிறோம்...


6. இதை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் என்று தம்மையே வழங்கியவரே எம் இறைவா! உமது திரு உடலையும் திரு இரத்தத்தையும் அன்றாடம் சுவைக்க ஆர்வத்தினை தாரும். தவறாமல், முழு ஈடுபாடோடு, நம்பிக்கையுடன் திருப்பலியில் பங்கெடுக்கும் வரத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



அ.ப.: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்

எல்.: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும் நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வராக.


காணிக்கை மீது மன்றாட்டு          

ஆண்டவரே, இக்காணிக்கைகளைக் கனிவுடன் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: இந்த ஆன்மீகப் பலியின் காணிக்கையை ஏற்று எங்களை உமக்கு நிலையான கொடையாக மாற்றுவீராக எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்.: ஆமென்


நற்கருணை மன்றாட்டு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: இதயங்களை மேலே எழுப்புங்கள்

எல்.: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்

அ.ப.: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்

எல்.: அது தகுதியும் நீதியும் ஆனதே


ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


உம் வார்த்தையான அவர் வழியாக அனைத்தையும் படைத்தீர். அவரையே மீட்பராகவும் ஈடேற்றுபவராகவும் எங்களுக்கு அனுப்பினீர். அவர் தூய ஆவியால் உடலெடுத்து, கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். அவர் உமது திருவுளத்தை நிறைவேற்றி, புனித மக்களை உமக்குப் பெற்றுத் தரத் தம் கைகளை விரித்துப் பாடுபட்டார். இவ்வாறு அவர் சாவை வென்று உயிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆகவே வானதூதரோடும் புனிதர் அனைவரோடும் சேர்ந்து,

நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்துரைத்து

ஒரே குரலாய்ச் சொல்வதாவது:

எல்.: தூயவர், தூயவர், தூயவர்.

வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.

விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன. உன்னதங்களிலே ஒசன்னா!

ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.

உன்னதங்களிலே ஒசன்னா!


அ.ப.: நம்பிக்கையின் மறைபொருள்

எல்.: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.


அ.ப.:இவர் வழிகாக இவரோடு இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே

தூய ஆவியாரின் ஒன்றிப்பில் எல்லா புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே

எல்.: ஆமென்

அ.ப.:மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்

எல்.: விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,

மண்ணுலகிலும் நிறைவேறுக எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும், எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.


அ.ப.: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறில்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.

எல்.: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே


அ.ப.: ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே, “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீNர் எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திருஅவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உம் திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

எல்.: ஆமென்


அ.ப.: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக

அ.ப.: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம்

எல்.: உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எம்மேல் இரக்கம் வையும். (2)

உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எமக்கு அமைதி அருளும்.


அ.ப.: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.

எல்.: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.


திருவிருந்துப் பல்லவி    சா.ஞா. 16:20 

ஆண்டவரே, எல்லா ,னிமையும் பல்சுவையும் கொண்ட உணவை வானத்திலிருந்து எங்களுக்கு அளித்தீர்.


அல்லது


யோவான் 6:35 வாழ்வு தரும் உணவு நானே, என்கிறார் ஆண்டவர். என்னிடம் வருபவருக்குப் பசியே இராது என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணகக் கொடையால் புதுப்பிக்கப்பெற்ற நாங்கள் உமது முடிவில்லா உதவியையும் உடனிருப்பையும் பெற்றுக்கொள்ளச் செய்தருளும்; எங்களை என்றும் கனிவுடன் காக்கத் தவறாத நீர் நிலையான மீட்புக்கு எங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்குவீராக எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்


நிறைவுச் சடங்கு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக

எல்.: ஆமென்

அ.ப.: சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று

எல்.: இறைவனுக்கு நன்றி


இந்த வார புனிதர்


புனித ஜான் மரிய வியான்னி ளுவ. துழாn ஆயசல ஏயைnநெல

மறைப்பணியாளர்


பிறப்பு : 8 மே 1786

இறப்பு  : 4 ஆகஸ்டு 1859, ஆர்ஸ், பிரான்ஸ்

குருப்பட்டம்: 1815

புனிதர்பட்டம்: 1925, திருத்தந்தை 11 ஆம் பயஸ்

பங்குதந்தையர்களின் பாதுகாவலர், 1929 


மரிய வியான்னி தன்னுடைய மறைபரப்பு பணியில் பலவிதமான இடர்பாடுகளை சந்தித்தார். பெல்லேய என்ற மறைமாவட்டத்தில் இருந்த ஆர்ஸ்  என்ற கிராமத்தில் பல ஆண்டுகள் மறைப்பணியை ஆற்றினார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை, தன்னுடைய எளிய மறையுரையினாலும், செபத்தாலும் ஈர்த்தார். பாவிகள் மனந்திரும்ப இடைவிடாமல் செபித்தார். உலகின் பல பகுதிகளிலிருந்தும் இறையடியார்கள் இவரின் மறையுரையைக் கேட்கவும், பாவமன்னிப்பு பெறவும் வந்து குவிந்தனர். பங்குத்தந்தையர்கள் அனைவரும் புனிதர்களாக வாழ வேண்டுமென்பதில் இவர் அக்கறை காட்டி வந்தார். இவர் ஞானத்திலும், அறிவிலும் சிறந்து விளங்கினார். 


இவர் சிறு வயதிலேயே குருப்பட்டம் பெற்றார். கடுந்தவம், செபம், அயராத உழைப்பு இவைகளில் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார். இதனால் தன் பங்குமக்களிடையே நிலவிய அநீதிகளை எளிதாக நீக்கினார். அம்மக்களுக்காக இடைவிடாமல் இறைவேண்டல் செய்தார். திருப்பலி முடிந்தவுடன், ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் பாவமன்னிப்பு தொட்டியில் அமர்ந்து, பாவமன்னிப்பு வழங்குவார். தனது ஓய்வு நேரத்திற்கென்று வெகு குறைந்த நேரமே ஒதுக்கினார். பல கட்டிடங்களையும், ஆலயங்களையும் கட்டி எழுப்புவதைவிட, ஆன்மாக்களின் இதயங்களை கட்டி எழுப்புங்கள். அப்போது விண்ணுலகில் இடம் கிடைக்கும் என்று இப்புனிதர் அடிக்கடி கூறிவந்தார். 


செபம்:


அன்பான ஆண்டவரே! புனித ஜான் மரிய வியான்னிக்கு மனவுறுதியையும், வல்லமையும், இரக்கமும் அளித்து வழிநடத்தினீர். உம் வல்லமையால் அவர் மறைப்பரப்பு பணியை சிறப்பாக ஆற்றினார். நாங்களும் அவரது முன்மாதிரியை பின்பற்றி, உம் மக்களை பாவ வாழ்விலிருந்து மீட்பதற்கு தேவையான அருளை நீர் தந்தருள் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...