Wednesday, July 28, 2021

Saints Martha, Maria, Elazar - புனிதர்கள் மார்த்தா, மரியா, இலாசர்

புனிதர்கள் மார்த்தா, மரியா, இலாசர் 



Download pdf 

வருகைப் பல்லவி     லூக் 10:38 


இயேசு ஒர் ஊருக்குள் நுழைந்தார். அங்கே மார்த்தா எனும் பெயர் கொண்ட பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார்.


அருட்பணியாளர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.

எல்லோரும்: ஆமென்.

அ.ப.: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக


பாவத்துயர்ச் செயல்

அ.ப.: சகோதர, சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.

(சிறிது நேரம் அமைதி)

எல்.: எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கின்றேன், ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். (மார்பில் தட்டிக் கொண்டு)

என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால் எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும் சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.


அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

எல்.: ஆமென்


திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, புனித மார்த்தாவின் இல்லத்தில் உம்முடைய திருமகன் விருந்தினராக இருக்கத் திருவுளம் கொண்டார்; அப்புனிதரின் பரிந்துரையால், எங்கள் சகோதரர் சகோதரிகளில் நாங்கள் கிறிஸ்துவுக்கு உண்மையுடன் பணி புரிந்து விண்ணக வீட்டில் உம்மால் வரவேற்கப்படும் தகுதி பெற அருள் புரிவீராக உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்.: ஆமென்



முதல் வாசகம்


நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-16


அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.


அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் எனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார் எனவும் அறிந்து கொள்கிறோம். தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கின்றோம். இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம். கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல்          திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8. 9-10 

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.


1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி

3 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.

8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.

10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 8: 12டி 

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 19-27


அக்காலத்தில், சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்” என்றார். இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார். மார்த்தா அவரிடம், “இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்” என்றார். இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாக மாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார். மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


அல்லது


மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42


அக்காலத்தில், இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார். ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


அ.ப.: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்

எல்.: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும் நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வராக.


காணிக்கை மீது மன்றாட்டு          

ஆண்டவரே, புனித மார்த்தாவில் விளங்கிய உம் வியத்தகு படிப்பினைகளைப் போற்றி மாண்புக்கு உரிய உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: அவருடைய அன்புப் பணி உமக்கு உகந்ததாய் இருந்தது போல கடமை உணர்வுடைய எங்கள் ஊழியமும் . உமக்கு ஏற்புடையதாய் இருப்பதாக எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்.: ஆமென்


நற்கருணை மன்றாட்டு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: இதயங்களை மேலே எழுப்புங்கள்

எல்.: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்

அ.ப.: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்

எல்.: அது தகுதியும் நீதியும் ஆனதே


ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


உம் வார்த்தையான அவர் வழியாக அனைத்தையும் படைத்தீர். அவரையே மீட்பராகவும் ஈடேற்றுபவராகவும் எங்களுக்கு அனுப்பினீர். அவர் தூய ஆவியால் உடலெடுத்து, கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். அவர் உமது திருவுளத்தை நிறைவேற்றி, புனித மக்களை உமக்குப் பெற்றுத் தரத் தம் கைகளை விரித்துப் பாடுபட்டார். இவ்வாறு அவர் சாவை வென்று உயிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆகவே வானதூதரோடும் புனிதர் அனைவரோடும் சேர்ந்து,

நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்துரைத்து

ஒரே குரலாய்ச் சொல்வதாவது:

எல்.: தூயவர், தூயவர், தூயவர்.

வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.

விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன. உன்னதங்களிலே ஒசன்னா!

ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.

உன்னதங்களிலே ஒசன்னா!


அ.ப.: நம்பிக்கையின் மறைபொருள்

எல்.: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.


அ.ப.:இவர் வழிகாக இவரோடு இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே

தூய ஆவியாரின் ஒன்றிப்பில் எல்லா புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே

எல்.: ஆமென்

அ.ப.:மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்

எல்.: விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,

மண்ணுலகிலும் நிறைவேறுக எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும், எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.


அ.ப.: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறில்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.

எல்.: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே


அ.ப.: ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே, “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீNர் எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திருஅவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உம் திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

எல்.: ஆமென்

அ.ப.: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக

அ.ப.: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம்

எல்.: உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எம்மேல் இரக்கம் வையும். (2)

உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எமக்கு அமைதி அருளும்.


அ.ப.: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.

எல்.: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.


திருவிருந்துப் பல்லவி    யோவா 11:27 

மார்த்தா இயேசுவிடம், "நீரே மெசியா, வாழும் கடவுளின் மகன். உலகிற்கு வந்தவர், என்று கூறினார்.



திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் வணக்கத்துடன் உட்கொண்ட உம் ஒரே திருமகனின் உடலும் இரத்தமும் அம்ச்சியுற்றவை அனைத்திலிருந்தும் எங்களை விடுவிப்பதாக் புனித மார்த்தாவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, மண்ணுலகில் உண்மையான பிறரன்பில் நாங்கள் வளரவும் விண்ணுலகில் உமது முடிவில்லாக் காட்சியைக் கண்டு மகிழவும் அருள்வீராக. எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்


நிறைவுச் சடங்கு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக

எல்.: ஆமென்

அ.ப.: சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று

எல்.: இறைவனுக்கு நன்றி


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...