Tuesday, August 3, 2021

St. Eusebius of Vercelli & St. Peter Julian Eymard - வெர்செல்லி நகர்ப் புனித யுசேபியுஸ் & புனித பீட்டர் ஜூலியன் எய்மார்டு ஆகஸ்ட் 2

 ஆகஸ்ட் 2



Download pdf 

வெர்செல்லி நகர்ப் புனித யுசேபியுஸ்: ஆயர்

அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919).


திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே இறைவா, . திருமகனின் இறைத்தன்மையை நிலைநாட்டுவதில் ஆயரான புனித யுசேபியுஸ் கொண்டிருந்த மனவுறுதியை நாங்கள் பின்பற்றச் செய்தருளும்; அதனால் அவர் கற்றுத் தந்த நம்பிக்கையை நாங்கள் கடைப்பிடித்து உம் திருமகனின் வாழ்வில் பங்குபெறத் தகுதி பெறுவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


புனித பீட்டர் ஜூலியன் எய்மார்டு: அருள்பணியாளர்

புனிதர் பொது: துறவியர் (பக். 950) அல்லது அருள்நெறியாளர்கள் பொது: அருள்நெறியாளர் ஒருவர் (பக். 923).


திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம் திருமகனின் திரு உடல், திரு இரத்தம் ஆகிய மறைபொருள்கள் மீது கொண்டுள்ள வியப்புக்கு உரிய அன்பினால் புனித பீட்டர் ஜூலியனை அணிசெய்தீNர் அதனால் இத்திருவிருந்திலிருந்து அவர் பெற்ற ஆன்மீக வலிமையை நாங்களும் பெற்றிடத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.


முதல் வாசகம்


உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-5


அன்பிற்குரியவர்களே, இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்பு கொண்டு அவர் கட்டளைகளைக் கடைப் பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள் மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே. இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல் திபா 89: 1-2. 3-4. 20-21. 24,26 

பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.


1 ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.

2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. - பல்லவி

3 நீர் உரைத்தது: ‘நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:

4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.’ - பல்லவி

20 என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.

21 என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். - பல்லவி

24 என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும்.

26 ‘நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி     மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12ய


அக்காலத்தில், இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.”


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


         


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...