Sunday, September 25, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (26-09-2022)

 பொதுக்காலம் 26ஆம் வாரம் - திங்கள்



முதல் வாசகம்

ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக!


யோபு நூலிலிருந்து வாசகம் 1: 6-22

ஒரு நாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தான் அவர்கள் நடுவே வந்து நின்றான். ஆண்டவர் சாத்தானிடம், “எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம், “உலகைச் சுற்றி உலவி வருகிறேன்” என்றான்.

ஆண்டவர் சாத்தானிடம், “என் ஊழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி, தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை” என்றார்.

மறுமொழியாக, சாத்தான் ஆண்டவரிடம், “ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்? அவனையும் அவன் வீட்டாரையும், அவனுக்குரிய அனைத்தையும் நீர் சூழ்ந்து நின்று காக்கவில்லையா? அவன் கைவேலைகளுக்கு ஆசி வழங்கவில்லையா? அவன் மந்தைகளை நாட்டில் பெருகச் செய்யவில்லையா? ஆனால், உமது கையை நீட்டும்; அவனுக்குரியவற்றின்மீது கை வையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான்” என்றான்.

ஆண்டவர் சாத்தானிடம், “இதோ! அவனுக்கு உரியவையெல்லாம் உன் கையிலே; அவன்மீது மட்டும் கை வைக்காதே” என்றார். சாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான்.

ஒரு நாள் யோபின் புதல்வரும் புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு, திராட்சை இரசம் குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது தூதன் ஒருவன் யோபிடம் வந்து, “எருதுகள் உழுது கொண்டிருந்தன; கழுதைகளும் அவற்றிற்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது செபாயர் பாய்ந்து, அவற்றைக் கைப்பற்றினர். ஊழியரை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.

இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “கடவுளின் நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து, ஆடுகளையும், வேலையாள்களையும் சுட்டெரித்து விட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.

இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “கல்தேயர் மூன்று கும்பலாக வந்து ஒட்டகங்கள் மேல் பாய்ந்து அவற்றைக் கைப்பற்றிக் கொண்டனர். ஊழியர்களை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.

இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “உம் புதல்வரும், புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு, திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரெனப் பெருங்காற்று பாலை நிலத்திலிருந்து வீசி, வீட்டின் நான்கு மூலைகளிலும் தாக்கியது. வீடு இளைஞர்கள் மேல் இடிந்து விழ, அவர்களும் மடிந்துவிட்டனர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.

யோபு எழுந்தார்; தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டார்; தம் தலையை மழித்துக் கொண்டார். பின்பு தரையில் விழுந்து வணங்கி, “என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்; ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக!” என்றார். இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவும் இல்லை; கடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை.


ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்


திபா 17: 1. 2-3. 6-7 (பல்லவி: 6cd)

பல்லவி: ஆண்டவரே, உம் செவியைத் திருப்பி, என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்.


1

ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். - பல்லவி

2

உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்; உம் கண்கள் நேரியன காணட்டும்.

3

என் உள்ளத்தை ஆய்ந்தறியும்; இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்; என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்; தீமை எதையும் என்னிடம் காண மாட்டீர்; என் வாய் பிழை செய்யக் கூடாதென உறுதி கொண்டேன். - பல்லவி

6

இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்.

7

உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே! - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்.


✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 46-50


அக்காலத்தில்

தங்களுக்குள் பெரியவர் யார் என்ற விவாதம் சீடர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களின் எண்ணங்களை அறிந்து ஒரு சிறுபிள்ளையை எடுத்து, தம் அருகே நிறுத்தி, அவர்களிடம், “இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்” என்றார்.

யோவான் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, ஒருவர் உமது பெயரால் பேய் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப்பார்த்தோம்; ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்றார்.

இயேசு அவரை நோக்கி, “தடுக்க வேண்டாம்; ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்” என்றார்.


ஆண்டவரின் அருள்வாக்கு.


பொதுக் காலத்தின் இருபத்து ஆறாம் வாரம் திங்கட்கிழமை

திருப்பாடல் 17: 1, 2-3, 6-7 (6cd)

“உமது செவியைத் திருப்பி, என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்”


விண்ணப்பம் கேட்கப்பட்டது:

கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதர் அவர். சக மனிதர்களையும் அவர் மிகவும் அன்பு செய்தார். அப்படிப்பட்டவர் திடீரென நோய்வாய்ப்பட்டு, படுக்கையில் விழுந்தார். அவருடைய குடும்பம் அவருடைய வருமானத்தையே பெரிதும் நம்பியிருந்ததால், அவர் நோய்வாய்ப்பட்டு, படுக்கையில் விழுந்ததினால் மிகவும் சிரமப்பட்டது.

இதற்கு நடுவில் அவருடைய பங்கைச் சேர்ந்த பக்த சபை ஒன்று, ஒரு மாலை வேளையில், அவருடைய வீட்டிற்குச் சென்று, கதவைத் தாழித்துக் கொண்டு, அவர் விரைவில் நலமடைய வேண்டுமென்றும், அவருடைய தேவைகள் நிறைவேற வேண்டும் என்றும் மன்றாடியது. பக்த சபையில் இருந்தவர்கள் தொடர்ந்து மன்றாடிக் கொண்டிருக்கும்போது, வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

உடனே வீட்டில் இருந்த ஒருவர் எழுந்து சென்று கதவைத் திறந்தபோது, அங்கே சிறுவன் ஒருவன் தன்னுடைய இரண்டு கைகளிலும் இரண்டு பெரிய பைகளைப் பிடித்துக் கொண்டு நின்றுகொண்டிருந்தான். அவன் பக்த சபையில் இருந்த ஒருவரின் மகன். அவனிடம், கதவைத் திறந்துகொண்டு வந்தவர், “யார் நீ? உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டதற்கு, “இறைவேண்டலுக்கு அப்பாவால் வரமுடியவில்லை. அதனால்தான் அவர் என்னிடம் அரிசி, பருப்பு, மளிகைச் சாமான்கள் உள்ளிட்ட பொருள்களையும், கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பி இருக்கின்றார். வாங்கிக் கொள்ளுங்கள்” என்றான். இதைக் கேட்டதும், அந்த மனிதர் கடவுள் தங்களது விண்ணப்பத்தைக் கேட்டுவிட்டார் என்று அவருக்கு நன்றி சொன்னார்.

ஆம், கடவுள் தன்னுடைய மக்கள் தன்னை நோக்கி எழுப்பும் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார். அதைத்தான் இந்த நிகழ்வும் இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலும் நமக்கு உணர்த்துகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.


திருவிவிலியப் பின்னணி:

‘மாசற்றவனின் மன்றாட்டு’ என்ற தலைப்பில் கீழ் வரும், திருப்பாடல் 17 தாவீதால் பாடப்பட்ட திருப்பாடல் ஆகும். இதில் தாவீது, ஆண்டவராகிய கடவுள் தனது வலக்கையால் எதிரிகளிடமிருந்து தன்னை விடுவிக்குமாறு மன்றாடுகின்றார். அதனை முன்னிட்டுத்தான் அவர், “இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர்; என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்” என்று நம்பிக்கையோடு மன்றாடுகின்றார்.

கடவுள் நீதிமான்கள் மன்றாடும்போது அவர்களது மன்றாட்டிற்குச் செவிசாய்க்கின்றவர் (திபா 34:17). அந்த அடிப்படையில் கடவுள் முன்னிலையில் மாசற்றவராய் நடந்த தாவீதின் விண்ணப்பத்திற்கும் அவர் செவிசாய்த்திருப்பார்.

விடுதலைப் பயண நூல் 15 ஆம் அதிகாரத்தையும், இணைச்சட்ட நூல் 38 ஆம் அதிகாரத்தையும் நிறையவே ஒத்திருக்கும் திருப்பாடல் 18, கடவுளுக்கு முன்பாக நாம் மாசற்றவர்களாக நடந்தால், அவர் நமது விண்ணப்பத்திற்குச் செவி சாய்ப்பார் என்ற அருமையான செய்தியை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அதனால் நாம் கடவுளுக்கு முன்பாக மாசற்றவர்களாய் நடந்து, அவரது ஆசியைப் பெறுவோம்.


சிந்தனைக்கு:

 இறைவேண்டலே அபலைகளாக இருக்கும் மனிதர்களுக்கு ஆற்றலின் ஊற்று

 கடவுள் நமது வேண்டுதலைக் கேட்கவில்லை எனில், அதைக் கடவுளின் திருவுளமாக ஏற்றுக்கொள்ளும் மனத்திடம் நமக்கு வேண்டும்.

 கடவுளுக்கு முன்பாக மாசற்றோராய் நடப்பது மிகவும் முக்கியம்.


இறைவாக்கு:

‘நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில், நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்’ (யாக் 4:3) என்பார் யாக்கோபு. எனவே, நாம் கடவுளுக்கு முன்பாக மாசற்றவர்களாக இருந்து, மன்றாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


“ஒரு சிறு பிள்ளையை எடுத்து...”


கடவுளைப் பற்றி ஒரு சிறுவனின் புரிதல்:

சிறுவர்களுக்கான பள்ளி அது. அந்தப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்ருந்த மாணவர்களிடம் வகுப்பு ஆசிரியர், “கடவுளைப் பற்றிய உங்களுடைய புரிதல் என்ன என்பதைப் பத்து வரிகளுக்கு மிகாமல் எழுதுங்கள்” என்றார். உடனே மாணவர்கள் கடவுளைப் பற்றிய தங்களது புரிதலை எழுதத் தொடங்கினார்கள்.

அந்த வகுப்பில் இருந்த டோனி டட்டன் என்ற எட்டு வயது மாணவன் இவ்வாறு எழுதினான்: “கடவுள் பெரியவர்களைப் படைப்பதில்லை; சிறியவர்களைத்தான் படைக்கிறார். ஏனெனில், சின்னச் சின்ன அங்கங்களைப் படைப்பது அவருக்கு வசதியாக இருக்கும் அல்லவா. அதனால்தான்! சிறுவர்களுக்கு நடை பயிற்றுவிக்கும் பொறுப்பையும் அவர்களுக்குப் பேசக் கற்றுக்கொடுக்கின்ற பொறுப்பையும் கடவுள் அதன் பெற்றோரிடம் ஒப்படைத்து விடுகிறார். ஏனெனில், கடவுளுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை.

குழந்தைகளின் பெற்றோரால் அவர்களோடு எல்லா இடங்களுக்கும் செல்ல முடியாது .ஆனால், கடவுளால் அவர்களோடு எல்லா இடங்களுக்கும் செல்ல முடியும். அதனால் கடவுளை நம்பாத குழந்தைகள் தனியாகத்தான் செல்ல வேண்டியிருக்கும்.”

இது நடந்தது அமெரிக்காவில்! கடவுள்மீது நம்பிக்கை வைத்திருந்தால், அவர் எப்போதும் கூடவே வருவார் என்று சிறுவன் டோனி டட்டன் சொன்ன வார்த்தைகள்தான் எத்துணை உன்னதமானவை. ஆம், சிறுபிள்ளைகள் எப்போதும் குணத்தாலும் எண்ணத்தாலும் உயர்ந்தவர்கள்தான். அதனால்தான் இன்றைய நற்செய்தியில் தன்னுடைய சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, அவர்கள் நடுவில் ஒரு சிறு பிள்ளையை நிறுத்தி, அவர்களுக்குப் ‘பாடம்’ கற்பிக்கின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.


திருவிவிலியப் பின்னணி:

இயேசுவோடு மூன்று ஆண்டுகாலம் உடனிருந்து, அவருடைய போதனையைக் கேட்ட அவருடைய சீடர்கள் அவரைப் போன்று கனிவோடும் மனத்தாழ்மையோடும் இருந்திருக்கவேண்டும் (மத் 11: 29); ஆனால், அவர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்கள். இப்படி அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதற்கு, இயேசு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரைத் தன்னோடு மலைக்குக் கூட்டிச் சென்றதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.

இயேசு தன் சீடர்களின் எண்ணங்களை அறிந்தவராய், ஒரு சிறு பிள்ளையை எடுத்து, தம் அருகே நிறுத்தி, அவர்களிடம், “இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்... உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்” என்கிறார்.

இயேசு வாழ்ந்த காலத்திலும் சரி, இன்றும் சரி சிறுபிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் ஏராளம். தவிர, அவர்கள் இரண்டாம் தரக் குடிகளாகவே நடத்தப்படுகின்றார்கள். மாசின்மைக்கும் தூய்மைக்கும் தாழ்ச்சிக்கும் கடவுளையே நம்பி இருப்பதற்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் இந்தச் சிறு பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் கண்டிக்கப்பட வேண்டும். இயேசுவும் அதைக் கண்டிக்கின்றார். இன்றைய நற்செய்தியில் அவர் தம் சீடர்கள், சிறு பிள்ளளைப் போன்று தம்மைத் தாழ்த்திக் கொண்டால் மட்டுமே பெரியவர் ஆக முடியும் என்கிறார்.

முதல் வாசகத்தில் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்த யோபுவைப் பற்றி வாசிக்கின்றோம். இவர் தனக்குத் தொடர்ந்து துன்பங்கள் வந்தாலும், ஆண்டவரைச் சபியாமல், அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்கின்றார். இவ்வாறு அவர் ஆண்டவரின் உண்மையான அடியாராக வாழ்கின்றார். நாமும் சிறு பிள்ளைகளைப் போன்று, யோபுவைப் போன்று ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, தாழ்ச்சியோடு வாழவேண்டு. அதையே ஆண்டவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றார்.


சிந்தனைக்கு:

 இயேசுவின் சீடர்கள் அவரைத் தங்கள் வாழ்வால் பிரதிபலிக்க வேண்டும்.

 இடர்களும் இன்னல்களும் வந்தாலும் ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருக்கவேண்டும்.

 ஆண்டவர் விண்ணகத்திலும் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்திலும் குடிகொண்டிருக்கின்றார்.


இறைவாக்கு:

‘ஆண்டவருக்கு முன் உங்களைத் தாழ்த்துங்கள்; அவர் உங்களை உயர்த்துவார்’ (யாக் 4:10) என்பார் யாக்கோபு. எனவே, நாம் ஆண்டவருக்கு முன்பாக நம்மையே தாழ்த்திக்கொண்டு, அவருக்கு உகந்தவர்களாய் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...