Monday, September 26, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (27-09-2022)

 பொதுக்காலம் 26ஆம் வாரம் - செவ்வாய்



முதல் வாசகம்

உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்?


யோபு நூலிலிருந்து வாசகம் 3: 1-4a, 11-17, 20-23

யோபு வாய் திறந்து, தாம் பிறந்த நாளைப் பழிக்கத் தொடங்கினார். யோபு கூறியது: “ஒழிக நான் பிறந்த அந்த நாளே! ஓர் ஆண் மகவு கருவுற்றதெனச் சொல்லிய அந்த இரவே! அந்த நாள் இருளாகட்டும்.

கருப்பையிலேயே நான் இறந்திருக்கலாகாதா? கருவறையினின்று வெளிப்பட்டவுடனே நான் ஒழிந்திருக்கலாகாதா? என்னை ஏந்த முழங்கால்கள் முன்வந்ததேன்? நான் பாலுண்ண முலைகள் இருந்ததேன்?

இல்லாதிருந்திருந்தால், நான் வெறுமனே கிடந்து துயில் கொண்டிருப்பேன். பாழானவைகளைத் தமக்குக் கட்டிக்கொண்ட மாநிலத்து மன்னர்களோடும் அமைச்சர்களோடும் அல்லது பொன்னை மிகுதியிருக்கக் கொண்டு, வெள்ளியால் தங்கள் இல்லங்களை நிரப்பின உயர்குடி மக்களோடும் நான் உறங்கியிருந்திருப்பேன். அல்லது முழுமை பெறாக் கருவைப் போலவும் ஒளியைக் காணாக் குழவியைப் போலவும் அழிந்திருப்பேன். அங்குத் தீயவர் தீங்கு செய்வதை நிறுத்துவர். களைப்புற்றோரும் அங்கு இளைப்பாறுவர்.

உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்? உள்ளம் கசந்தோர்க்கு உயிர் கொடுப்பானேன்? சாவுக்கு அவர்கள் ஏங்குகிறார்கள்; அதைப் புதையலினும் மேலாய்க் கருதித் தேடுகிறார்கள். ஆனால் அதுவோ வந்தபாடில்லை. கல்லறை காணின் களிப்பெய்தி அகமகிழ்வோர்க்கு, வாழ்வு வழங்கப்படுவதேன்? எவருக்கு வழி மறைக்கப்பட்டுள்ளதோ, எவரைச் சுற்றிலும் கடவுள் தடைச்சுவர் எழுப்பியுள்ளாரோ, அவருக்கு ஒளியால் என்ன பயன்?”

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 88: 1-2. 3-4. 5. 6-7 (பல்லவி: 2a)

பல்லவி: ஆண்டவரே, என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக!


1

ஆண்டவரே! என் மீட்பின் கடவுளே! பகலில் கதறுகிறேன்; இரவில் உமது முன்னிலையில் புலம்புகின்றேன்.

2

என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக! என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்! - பல்லவி

3

ஏனெனில், என் உள்ளம் துன்பத்தால் நிறைந்துள்ளது; என் உயிர் பாதாளத்தை நெருங்கிவிட்டது.

4

படுகுழிக்குள் இறங்குவோருள் ஒருவராக நானும் கணிக்கப் படுகின்றேன்; வலுவிழந்த மனிதரைப் போல் ஆனேன். - பல்லவி

5

இறந்தோருள் ஒருவராகக் கைவிடப்பட்டேன்; கொலையுண்டு கல்லறையில் கிடப்பவர்போல் ஆனேன்; அவர்களை ஒருபோதும் நீர் நினைப்பதில்லை; அவர்கள் உமது பாதுகாப்பினின்று அகற்றப்பட்டார்கள். - பல்லவி

6

ஆழமிகு படுகுழிக்குள் என்னைத் தள்ளிவிட்டீர்! காரிருள் பள்ளங்களுக்குள் என்னைக் கைவிட்டுவிட்டீர்.

7

உமது சினம் என்னை அழுத்துகின்றது; உம் அலைகள் அனைத்தும் என்னை வருத்துகின்றன. - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

இயேசு எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்தார்.


✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-56


இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு அவர்கள் வேறு ஓர் ஊருக்குச் சென்றார்கள்.


ஆண்டவரின் அருள்வாக்கு.



“என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்”


முந்நூறு டாலர்:

மிகப்பெரிய போதகர் அவர். தன்னுடைய மறைப்போதகப் பணிகளுக்கு நடுவில் ஓர் அனாதை இல்லத்தையும் அவர் நடத்தி வந்தார். அதைத் தொடர்ந்து நடத்துவதற்கு அவருக்கு முந்நூறு டாலர் தேவைப்பட்டது. அவ்வளவு பணத்திற்கு என்ன செய்வது என்று யோசித்த அவர், ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் போதிக்கச் சென்றால், அங்கு முந்நூறு டாலர் எப்படியும் கிடைக்கும் என்று நினைத்தார்.

இதைத் தொடர்ந்து அவர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று போதித்தார். அங்கிருந்த மக்களும் அவருக்கு முந்நூறு டாலருக்கு மேலாகக் கொடுத்தார்கள். அதைக் கொண்டு அவர் தான் நடத்தி வரும் அனாதை இல்லத்தை நல்ல முறையில் நடத்தலாம் என்று நிம்மதியாகத் தூங்கியபோது, அன்றிரவு கடவுள் அவருக்குக் கனவில் தோன்றி, “உன்னிடம் இருக்கும் முந்நூறு டாலரை நாளைக் காலையில் நான் சொல்லும் மனிதரிடம் கொடுத்துவிடு, அது அவருக்கு அவசரமாகத் தேவைப்படுகின்றது” என்றார். “கடவுளே! எனக்கு இந்த முந்நூறு டாலர் தேவையாய் இருக்கும்போது, நான் எப்படி இன்னொருவருக்கு அதைக் கொடுப்பது?” என்று அவர் சொன்னபோது, கடவுள் அவரிடம், “நான் சொன்னது போல் செய்யும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்தார்.

மறுநாள் காலையில் போதகர் தன்னிடமிருந்த முந்நூறு டாலரைக் எடுத்துக்கொண்டு கடவுள் தன்னிடம் சொன்ன மனிதர் இருந்த இடத்திற்குச் சென்றார். அவர் அந்த மனிதரிடம் சென்றபோது அவர் கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தார். போதகர் அவரிடம் நடந்ததையெல்லாம் எடுத்துச் சொல்லி, அவரிடம் அந்த முந்நூறு டாலரையும் கொடுத்தபோது, “இதற்காகத்தான் நான் கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தேன்” என்று அவர் கடவுளுக்கும் போதகருக்கும் நன்றி சொன்னார்.

இதற்குப் பிறகு போதகர் தான் இருந்த இடத்திற்குத் திரும்பி வந்தபோது, தன்னுடைய மேசையில் ஓர் உறை இருக்கக் கண்டார். அந்த உரையில் ஒரு காசோலை இருந்தது. அதில் முந்நூறு டாலர் என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவர் கடவுளின் அருளையும் இரக்கத்தையும் எண்ணி அவரைப் போற்றிப் புகழ்ந்தார்.

இந்த நிகழ்வில் வரும் போதகர் சார்லஸ் பர்ஜியோன். அவரிடமிருந்து முந்நூறு டாலரைப் பெற்றுக் கொண்டவர் ஜார்ஜ் முல்லர். ஆம், தாங்கள் நடத்தி வந்த அனாதை இல்லங்களை நல்லமுறையில் நடத்துவதற்குக் கடவுளிடம் பண உதவி கேட்டபோது, அவர் இவர்களுடைய வேண்டுதலைக் கேட்டு, இவர்கள் இருவருக்கும் தக்க நேரத்தில் பண உதவி அளித்தார் இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் திருப்பாடல் ஆசிரியர், “என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.


திருவிவிலியப் பின்னணி:

நோய், வறுமை, மனக்கவலை என்று மனிதர்கள் ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். இவற்றிலிருந்து மனிதர்களுக்குச் சக மனிதர்களால் விடுதலை அளிக்க முடியுமா? என்றால், நிச்சயமாக இல்லை. கடவுளால்தான் நாம் சந்திக்கும் பிரச்சனைகளிலிருந்து விடுதலை அளிக்க முடியும். இத்தகைய புரிதல் எல்லாருக்கும் இருக்குமா? என்பது கேள்விக்குறியே!

இஸ்ரயேலில் இருந்த பன்னிரு குலங்களுள் ஒன்று லேவியர் குலம். இவர்களில் ஒரு பிரிவினர் கோராகியர். இந்தக் கோராயர் பாடிய பாடல்தான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 88. பெருந்துன்பத்தில் அதிலும் குறிப்பாக, நோய்வாய்ப்பட்டிருந்த தன்னை ஆண்டவர் நலமாக்குமாறு தொடர்ந்து மன்றாடி வருகின்றார் இந்தப் பாடலைப் பாடியவர். ஆனால், ஆண்டவர் இவருடைய வேண்டுதலுக்குச் செவிசாய்க்காததால், “ஆழமிகு படுகுழிக்குள் என்னைத் தள்ளிவிட்டீர்...” என்கிறார் இவர்

கடவுள் தன்னுடைய வேண்டுதலைக் கேட்கவிட்டாலும், ஒருநாள் நிச்சயம் அவர் தன்னுடைய வேண்டுதலைக் கேட்பார் என்ற நம்பிக்கையில் திருப்பாடல் ஆசிரியர், “என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்” என்று மன்றாடுகின்றார். கடவுள் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அண்மையில் உள்ளவர் அல்லவா! அதனால் அவர் திருப்பாடல் ஆசிரியருடைய மன்றாட்டை நிச்சயம் கேட்டிருப்பார். நாமும் கடவுள் நம்முடைய வேண்டுதலை கேட்பார் என்ற நம்பிக்கையோடு அவரிடம் மன்றாடுவோம்.


சிந்தனைக்கு:

 கடவுளுக்குத் தெரியும் பிள்ளைகளாக நமக்கு எதை, எப்போது, எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று. அதனால் நாம் தளரா நம்பிக்கையோடு அவரிடம் மன்றாடுவோம்.

 இறைவேண்டலே இடர் சூழ்ந்த வாழ்க்கையில் இளைப்பாறுதல் தரும் அருமருந்து,

 வேண்டுவது நமக்கு கடமை; கொடுப்பது கடவுளின் கடமை.


இறைவாக்கு:

‘நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்’ (திபா 138:3) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் கடவுளிடம் நம்பிக்கையோடு மன்றாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்


பகைமையும் பொறுமையும்


துறவியும் இளைஞனும்:

இளைஞன் ஒருவன் தன்னுடைய ஆடுகளை ஓட்டிக்கொண்டு ஓர் அடர்ந்த காடு வழியாகச் சென்றுகொண்டிருந்தான். ஓரிடத்தில் துறவி ஒருவர் தியானம் செய்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் இளைஞன் அவரருகில் சென்று, “சுவாமி! நீங்கள் எதற்காகத் தியானம் இருக்கிறீர்கள் எனத் தெரிந்துகொள்ளலாமா?” என்றான். துறவி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இக்கேள்வியை அவன் இரண்டு மூன்று முறை கேட்டுப் பார்த்தும், அவரிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.

இதனால் அவன் பொறுமையிழந்து, “சுவாமி! உங்களுக்குக் காது சரியாகக் கேட்காதா? ‘நஎதற்காகத் தியானம் செய்கிறீர்கள்?’ என்று நான் எத்தனை முறை கேட்கிறேன். ஒருமுறையாவது பதில் சொல்ல மாட்டீர்களா?” என்று அவன் சீறியபோது, துறவி அவனிடம், “எதற்காகத் தியானம் இருக்கிறீர்கள் என்று கேட்டாய் அல்லவா! பொறுமையோடு இருக்கத்தான் தியானம் இருக்கிறேன். அதை உனக்கு உணர்த்துவதற்குத்தான் பொறுமையோடு இருந்தேன்” என்றார்.

ஆம், நாம் நினைத்தது உடனே நடக்கவில்லை என்றால் பொறுமை இழக்கின்றோம்; எப்படியெல்லாமோ நடந்துகொள்கின்றோம். இந்நிலையில் இந்த நிகழ்வும் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நாம் பொறுமையோடு இருக்கவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.


திருவிவிலியப் பின்னணி:

சமாரியர்களுக்கும் யூதர்களுக்குமிடையே காலங்காலமாகவே பகை இருந்தது. இதனால் யூதர்கள் எருசலேமிற்குப் போகும்போது சமாரியர்களின் ஊர்கள் வழியாகப் போகாமல், யோர்தான் ஆற்றைச் சுற்றி எருசலேமிற்குப் போவார்கள். இத்தனைக்கும் சமாரியர்களின் ஊர்கள் வழியாகப் போனால் எருசலேமிற்கு எளிதாகச் சென்றுவிடலாம் என்றாலும், சமாரியர்களின் ஊர்கள் வழியாகச் சென்றால் ‘தீட்டு’ என்று தூய்மை வாதம் பேசிய யூதர்கள் அவர்களின் ஊர்கள் வழியாகச் செல்லாமல், யோர்தான் வழியாகச் சுற்றியே சென்றார்கள்.

இயேசு மற்ற யூதர்களைப் போன்று தூய்மைவாதம் பேசிக்கொண்டிருக்காமல், தன்னுடைய சீடர்களைச் சமாரியர்களின் ஊர்கள் வழியாகவே போகச் சொல்கின்றார். அவ்வாறு போகும்போது சமாரியர்கள் தன்னுடைய சீடர்களை ஏற்றுக்கொள்ளாதபோது, அதற்காக சீடர்கள் அவர்களை அழிக்கட்டுமா? என்று கேட்கும்போது, இயேசு அவர்களைக் கடிந்துகொள்கின்றார். காரணம், இயேசு இவ்வுலகில் பகைமையை அல்ல, அமைதியை ஏற்படுத்தவே வந்தார். அதனால் தன்னை ஏற்றுக்கொள்ளாத சமாரியர்களை அவர் அழிக்காமல், பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கடைப்பிடித்து, வேறோர் வழியாக எருசலேமிற்குப் போகிறார்.

முதல் வாசகத்தில் யோபு தனக்கு ஏற்பட்ட தொடர் துன்பங்களைக் கண்டு கடவுளைச் சபிக்கவில்லை. மாறாக, அவர் தான் பிறந்த நாளையே சபிக்கின்றார் வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், யோபு தனக்கு வந்த தொடர் துன்பங்கள் நடுவிலும் பொறுமையோடு இருந்தார் என்று சொல்லலாம்.

கடவுளின் மக்களான நமக்குப் பொறுமை என்பது மிகவும் முக்கியம். அந்தப் பொறுமை நமக்கு இருந்தால், எவ்வளவு பெரிய துன்பத்தையும் அவமானத்தையும் நிராகரிப்பையும் நம்மால் தாங்கிக் கொள்ள முடியும். ஆண்டவர் இயேசுவும் தனக்கு வந்த துன்பங்களையெல்லாம் பொறுமையோடு தாங்கிக்கொண்டார். எனவே, இயேசுவைப் போன்று, யோபுவைப் போன்று நாம் துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக் கொண்டு கடவுளின் ஆசியைப் பெறுவோம்.


சிந்தனைக்கு:

 பகைமை அழிவு வழிவகுக்கும்; பொறுமை வாழ்வுக்கு வழிவகுக்கும்.

 தீமைக்குப் பதில் தீமை என்றால், இவ்வுலகில் யாரும் நிலைத்து நிற்க முடியாது.

 பிறருடைய கருத்தும் மதிப்பளிப்பது இன்றைய காலகட்டத்தில் மிக அவசியம்.


இறைவாக்கு:

‘ஆண்டவர் நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்’ (திபா 103:8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் ஆண்டவரைப் போன்று பொறுமையோடும், பிறருடைய கருத்துக்கு மதிப்புத் தருபவர்களாகவும் இருந்து, கடவுளுக்கு ஏற்றவர்களாய் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...