முதல் வாசகம்
தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15
அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்க கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள் முன் தரை மட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, ``என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம்மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டு வருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்'' என்றார். ``நீ சொன்னபடியே செய்'' என்று அவர்கள் பதில் அளித்தார்கள். அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, ``விரைவாக மூன்று மரக்கால் நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு'' என்றார். ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடிச் சென்று, ஒரு நல்ல இளங்கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான். பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும் பொழுது அவர்கள் அருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். பின்பு அவர்கள் அவரை நோக்கி, `` உன் மனைவி சாரா எங்கே?'' என்று கேட்க, அவர், ``அதோ கூடாரத்தில் இருக்கிறாள்'' என்று பதில் கூறினார். அப்பொழுது ஆண்டவர், ``நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்'' என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆபிரகாமும் சாராவும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தனர். சாராவுக்கு மாதவிடாய் நின்று போயிருந்தது. எனவே, சாரா தமக்குள் சிரித்து, ``நானோ கிழவி; என் தலைவரோ வயது முதிர்ந்தவர். எனக்கா இன்பம்?'' என்றாள். அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, `` `நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க, எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா' என்று சொல்லி சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்? ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ! இளவேனிற் காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நான் உன்னிடம் மீண்டும் வருவேன். அப்பொழுது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்'' என்று சொன்னார். சாராவோ, ``நான் சிரிக்கவில்லை'' என்று சொல்லி மறுத்தார். ஏனெனில் அச்சம் அவரை ஆட்கொண்டது. அதற்கு ஆண்டவர், ``இல்லை, நீ சிரித்தாய்'' என்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
லூக் 1: 47. 48-49. 50,53. 54-55
பல்லவி: ஆண்டவர் தம் இரக்கத்தை என்றும் நினைவில் கொண்டுள்ளார்.
47 ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. -பல்லவி
48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர். -பல்லவி
50 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
53 பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். -பல்லவி
54-55 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும்
அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். -பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.
மத்தேயு 8:5-17
பொதுக்காலம் 12 வாரம் சனி
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-17
அக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். ``ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்'' என்றார். இயேசு அவரிடம், ``நான் வந்து அவனைக் குணமாக்குவேன்'' என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, ``ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் `செல்க' என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் `வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து `இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்'' என்றார். இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்'' என்றார். பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, ``நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்'' என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான். இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார். பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு, `அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மரியாளின் மாசற்ற இதயம்
பொதுக்காலம் 12ஆம் வாரம்
28.06.2024 - சனிக் கிழமை
பிறப்பில் எல்லோருடைய இதயமும் தூய்மையானது தான். வாழ்க்கை நகர்கின்ற போது இதயம் மாசுபடிந்ததாக மாறிவிடுகிறது. என் இதயம் கறை படிந்ததற்கு என்னை குறை சொல்வதா! என்னை சூழ்ந்து இருப்பவர்களை குறை சொல்வதா! காலத்தினுடைய மாற்றங்களை குறை சொல்வதா! யாரை குறை சொல்வது?
வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்று போல் இருப்பதில்லை. சிலருக்கு வாழ்க்கை கசப்பையும், சிலருக்கு வாழ்க்கை இனிமையும், சிலருக்கு வாழ்க்கை பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறது. இயற்கை எல்லோருக்கும் சமமாக தான் இருக்கிறது.
இயற்கையை ஒருபோதும் குறை சொல்ல முடியாது. ஆனால், இயற்கையை நாம் மாசுபடுத்துகின்ற போது இயற்கை அதன் விளைவுகளை நம்மீது திணிக்க தான் செய்யும்.
நம்முடைய உடல் கடவுள் வாழக்கூடிய ஆலயமாக தூய்மையானதாக இருக்க வேண்டும். ஆனால், அந்த தூய்மையை நாம் வெளியிலிருந்து ஏற்றுக் கொள்ளக்கூடிய அல்லது நமக்குள் எழக்கூடிய தவறான சிந்தனைகளால், நம்முடைய நடத்தைகளால் மாசுப்படுத்தி விடுகிறோம்.
இன்று அன்னை மரியாவினுடைய மாசற்ற இதய விழாவை நினைவு கூறுகிறோம். அன்னை மரியாவும் எல்லோரும் வாழ்ந்த அதே சமூகத்தில் தான் வாழ்ந்தார் எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட வாழ்க்கை சூழல் தான் அவருக்கும் கொடுக்கப்பட்டது ஆனால் அவரால் மட்டும் எப்படி தூய்மை நிறைந்த இதயத்தோடு வாழ முடிந்தது?
கடவுள் ஆள் பார்த்து செயல்படுவதில்லை எல்லோர் மேலும் அருளை பொழிகிறார். பொழியப்பட்ட அருளை உள்ளத்தில் இருத்தி தியானித்தால் வாழ்வு நலமானதாக மாறும்.
அன்னை மரியாள் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த எல்லா நிகழ்வுகளையும் இதயத்தில் இருத்தி சிந்தித்தார். வாழ்க்கையினுடைய புரியாத புதிர் தொடங்கி தன் மகனின் இறப்பு, இறப்பிற்குப் பின் வாழ்க்கை என எல்லாவற்றிலும் நடந்த நினைவுகள் அவரை காயப்படுத்தியது, ஆனால் அவர் கலங்கவில்லை.
கடவுள் என்னை ஏமாற்றி விட்டார் என்று சொல்லி கடவுளுக்கு எதிராக திரும்பவும் இல்லை. கடவுள் கொடுத்தார் கடவுள் எடுத்துக் கொண்டார் என்ற மனநிலை அன்னை மரியாவிடம் இருந்ததனால் எல்லா சூழ்நிலைகளிலும் அவருடைய இதயம் தூய்மையை இழக்காமல் இருந்தது.
பல வியாகுலங்களை தாங்கிய போதிலும் அந்த இதயம் மாசுபடாமல் இருந்தது.
வரலாற்றுப் பின்னணி
1917 ஆம் ஆண்டு மரியன்னை பாத்திமாவில் காட்சி கொடுத்த பிறகு, இந்த பக்தி முயற்சி சிறப்பாக வளர்ந்தது. 1917 ஜூன் 13 ஆம் தேதி புதன் கிழமை காட்சியில், மரியன்னையின் தூய இதயம் முட்களால் ஊடுருவப்பட்டு இருப்பதை லூசியா கண்டார்.
1944ல் திருத்தந்தை 12ம் பயஸ் மரியாளின் மாசற்ற இதய விழாவை திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைத்து, ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடுமாறு அறிவித்தார். 1969இல் திருத்தந்தை 6ஆம் பவுல், இயேசுவின் தூய இதய பெருவிழாவுக்கு அடுத்த நாளில் மரியாளின் மாசற்ற இதயத்தை நினைவுகூரும் வகையில் இந்த திருநாளை மாற்றி அமைத்தார்.
மாசற்ற இதய படத்தின் விளக்கம்
எரியும் நெருப்பு - இயேசுவின், மக்களின் மீதான அன்பு
ஊடுருவிய வாள் - 7 வியாகுலங்கள்
மலர் - அன்னையின் தூய்மை
இதயம் - தாய்க்குரிய அன்பு