Tuesday, June 29, 2021

13th Ordinary week Wednesday - பொதுக்காலம் 13 வாரம் புதன்

 


Download pdf

முதல் வாசகம்

தொடக்க நூலிலிருந்து வாசகம் 21: 5,8-20

ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தபொழுது அவருடைய வயதோ நூறு. அந்தக் குழந்தை வளர்ந்து பால் குடியும் மறந்தது. அப்படிப் பால் குடிப்பதை நிறுத்திய நாளன்று ஆபிரகாம் பெரியதொரு விருந்து அளித்தார். பின்னர் எகிப்தியளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்றெடுத்த மகன் சிரித்து விளையாடுவதைச் சாரா கண்டு, ஆபிரகாமை நோக்கி, “இந்தப் பணிப் பெண்ணையும் அவள் மகனையும் துரத்திவிடும். ஏனென்றால், பணிப் பெண்ணின் மகன் என் மகன் ஈசாக்குடன் பங்காளியாய் இருக்கக்கூடாது” என்றார். தம் மகனுக்கு எதிரான இவ்வார்த்தை ஆபிரகாமுக்கு மிகுந்த வேதனை அளித்தது. அப்போது கடவுள் ஆபிரகாமை நோக்கி, “பையனையும் பணிப் பெண்ணையும் குறித்து வேதனைப்படாதே. சாரா உனக்குச் சொல்வதை எல்லாம் அப்படியே செய். ஏனெனில் ஈசாக்கின் மூலமே உன் வழி மரபு விளங்கும். உன் பணிப் பெண்ணின் மகனும் உன் வித்தாய் இருப்பதால், அவனிடமிருந்தும் இனம் ஒன்று தோன்றச் செய்வேன” என்றார். எனவே ஆபிரகாம் காலையில் எழுந்து, அப்பத்தையும், தோற்பை நிறையத் தண்ணீரையும் எடுத்து ஆகாரிடம் கொடுத்தார்; அவற்றை அவள் தோள்மேல் வைத்து குழந்தையையும் அவளுடன் அனுப்பி வைத்தார். அவளும் புறப்பட்டுப் போய் பெயேர்செபா என்னும் பாலை நிலத்தில் அலைந்து திரிந்தாள். தோற்பையிலிருந்த தண்ணீர் தீர்ந்தபின் அவள் புதர் ஒன்றின் அடியில் குழந்தையைக் கிடத்தினாள். பின்பு அவள் முன்புறம் சென்று அம்பு எறி தூரத்தளவில் உட்கார்ந்து கொண்டாள். “குழந்தை சாவதைப் பார்க்கச் சகியேன்” என்று கூறி, முன்புறமிருந்து கொண்டே கூக்குரலிட்டு அழுதாள். அப்போது கடவுள் பையனின் அழுகுரலைக் கேட்டார். ஆண்டவரின் தூதர் வானத்தினின்று ஆகாரைக் கூப்பிட்டு, “ஆகார்! உனக்கு நிகழ்ந்தது என்ன? அஞ்சாதே. ஏனெனில், கிடத்தியிருக்கிற இடத்தினின்று பையனின் அழுகுரலை கடவுள் கேட்டருளினார். நீ எழுந்து பையனைத் தூக்கி விடு. அவனை உன் கையில் பிடித்துக்கொள். ஏனெனில், அவனிடமிருந்து பெரிய இனம் ஒன்று தோன்றச் செய்வேன்” என்றார். அப்பொழுது கடவுள் அவள் கண்களைத் திறந்துவிட, அவள் நீருள்ள கிணற்றைக் கண்டாள். அவள் அங்குச் சென்று தோற்பையை நீரால் நிரப்பிப் பையனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். கடவுளும் பையனோடு இருந்தார். அவன் வளர்ந்து பாலை நிலத்தில் குடியிருந்தான். அம்பு எய்வதில் வல்லவன் ஆனான்.

வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல்   திபா 34: 6-7. 9-10. 11-12

பல்லவி: இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.

6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்.

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.                                                                                                                             

9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்;

அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.

10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது.                                                     ℟

11 வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன்.

12 வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா?

வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா?                 


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 28-34

அக்காலத்தில் இயேசு கலிலேயாவின் மறு கரையை அடைந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள். அவர்கள், “இறைமகனே, உமக்கு இங்கு என்ன வேலை? குறித்த காலம் வருமுன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?” என்று கத்தினார்கள். அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்துகொண்டிருந்தன. பேய்கள் அவரிடம், “நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும” என்று வேண்டின. அவர் அவற்றிடம், “போங்கள்” என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது. பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் ஓடிப்போனார்கள். அவர்கள் நகருக்குள் சென்று, பேய் பிடித்தவர்களைப் பற்றிய செய்தியையும், நடந்த அனைத்தையுமே அறிவித்தார்கள். உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர் கொண்டு வந்து, அவரைக் கண்டு, தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கின்ற செபம்:


இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு தேவரீர் செய்துவரும் சகல உபகாரங்களையும், சொல்லமுடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிறோம்.

நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து இப்போதும் எப்போதும் உம்முடைய திருஇருதய நிழலில் இளைப்பாறச் செய்தருளும்.

தவறி எங்களில் எவரேனும் உமது இருதயத்தை நோகச்செய்திருந்தால் அவர் குற்றத்திற்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திருஇருதயத்தை பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும்.

இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருந்தாப்பியர்களுக்கு ஊன்றுகோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்கு, தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள் அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டிலும் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக.

இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே! சிறுபிள்ளைகளை எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே. இந்த விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும், தெய்வ பயத்தையும் வளரச்செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்க மன்றாடுகிறோம். திவ்விய இயேசுவே! முறை முறையாய் உமது திருச்சிநேகத்தில் ஜீவித்து, மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாறக் கிருபை புரிந்தருளும். - ஆமென்

இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.

இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.

இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.


மகிமை மறைபொருள்கள், (புதன்)

1.இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, உயிருள்ள விசுவாசததுடன் வாழ செபிப்போமாக!

2.இயேசுவின் விண்ணேற்றத்தைத் தியானித்து, நம்பிக்கையுடன் விண்ளக வாழ்வைத் தேடும் வரம் கேட்போமாக!

3. தூய ஆவியாரின் வருகையைத் தியானித்து, நாம் அனைவரும் ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற செபிப்போமாக!

4. இறையன்னையின் விண்ணேற்பைத் தியானித்து, நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற செபிப்போமாக !

5. இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றதைத் தியானித்து, நம் அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள செபிப்போமாக !


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...