Monday, June 28, 2021

13th Ordinary week Tuesday & St.Peter and St Paul feast - புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழா திருநாள் திருப்பலி

  


Download PDF 


புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழா திருநாள் திருப்பலி

வருகைப் பல்லவி          

ஊனுடலில் வாழ்ந்தபோது தமது இரத்தம் சிந்தித் திரு அவையை நிறுவியவர்கள் இவர்களே. ஆண்டவரின் கிண்ணத்தில் பருகி, இறைவனின் நண்பர்களானவர்களும் இவர்களே

அருட்பணியாளர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.

எல்லோரும்: ஆமென்.

அ.ப.: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக


பாவத்துயர்ச் செயல்

அ.ப.: சகோதர, சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.

(சிறிது நேரம் அமைதி)

எல்.: எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கின்றேன், ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். (மார்பில் தட்டிக் கொண்டு)

என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால் எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும் சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.


அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

எல்.: ஆமென்


உன்னதங்களிலே (பாடல்)

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.

உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக

உம்மைப் புகழ்கின்றோம் உம்மை வாழ்த்துகின்றோம்.

உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்

உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவராகிய இறைவா வானுலக அரசரே,

எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா,

ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே,

ஆண்டவராகிய இறைவா, இறைவனின் செம்மறியே,

தந்தையின் திருமகனே - 2

உலகின் பாவங்களைப் போக்குபவரே,

எங்கள் மேல் இரக்கமாயிரும்

உலகின் பாவங்களைப் போக்குபவரே,

எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.

தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்

ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்!

நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்!

தூய ஆவியாரோடு தந்தையாகிய இறைவனின்

மாட்சியில் இருப்பவர் நீரே. ஆ..ஆ..ஆ..ஆமென் - 2


திருக்குழும மன்றாட்டு

இறைவா, திருத்தூதர்களான பேதுரு, பவுல் ஆகியோரின் வணக்கமும் புனிதமும் நிறைந்த பெருவிழாவில் எங்களுக்குப் பேரின்பம் தந்துள்ளீNர் அவர்களிடமிருந்தே உமது திரு அவை சமய வாழ்வைத் தொடக்கத்தில் பெற்றுக்கொண்டது போல அவர்களின் படிப்பினைகளை எல்லாவற்றிலும் கடைப்பிடிக்க அருள்புரிவீராக உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற, எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

எல்.: ஆமென்


முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 1-11

அந்நாள்களில் ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தினான். யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான். அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு அவன் தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான். அது புளிப்பற்ற அப்ப விழா நாள்களில் நடந்தது. அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக் காவல் செய்யுமாறு நான்கு படைவீரர் கொண்ட நான்கு குழுக்களிடம் அவன் ஒப்புவித்தான். பாஸ்கா விழாவுக்குப் பின் மக்கள் முன்பாக அவரது வழக்கை விசாரிக்கலாம் என விரும்பினான். பேதுரு இவ்வாறு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக வேண்டியது. ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு முந்தின இரவில், பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே இரு சங்கிலிகளால் கட்டப்பட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு முன் சிறையைக் காவல் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது. அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, “உடனே எழுந்திடும்” என்று கூற, சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன. வானதூதர் அவரிடம், “இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக்கொள்ளும்” என்றார். அவரும் அவ்வாறே செய்தார். தூதர் அவரிடம், “உமது மேலுடையை அணிந்துகொண்டு என்னைப் பின்தொடரும்'' என்றார். பேதுரு வானதூதரைப் பின்தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம் உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக அவர் நினைத்துக்கொண்டார். அவர்கள் முதலாம் காவல் நிலையையும், இரண்டாம் காவல் நிலையையும் கடந்து நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே வந்தபோது அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது. அவர்கள் வெளியே வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள். உடனே வானதூதர் அவரை விட்டு அகன்றார். பேதுரு தன்னுணர்வு பெற்றபோது, “ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்” என்றார்.

வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல்        திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8

பல்லவி: எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை விடுவித்தார்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;

அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;

எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -℟

3 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்;

அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்;

எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -℟

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;

அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;

அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். -℟

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.

8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். -℟


இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 17-18

அன்பிற்குரியவரே, நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார். நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 16: 18

அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: புனித மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்

எல் : ஆண்டவரே, மாட்சி உமக்கே

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19

அக்காலத்தில் இயேசு பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள். “ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார். அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


நம்பிக்கை அறிக்கை

1. விண்ணையும் மண்ணையும் படைத்தவராம்

கடவுள் ஒருவர் இருக்கின்றார்

தந்தை, மகன், தூய ஆவியராய்

ஒன்றாய் வாழ்வோரை நம்புகிறேன்.


2. தூய ஆவியின் வல்லமையால்

இறைமகன் நமக்காய் மனிதரானார்

கன்னி மரியிடம் பிறந்தவராம்

இயேசுவை உறுதியாய் நம்புகிறேன்


3. பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்

சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார்

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்

இறப்பின் மீதே வெற்றி கொண்டார்.


4. விண்ணகம் வாழும் தந்தையிடம்

அரியணைக் கொண்டு இருக்கின்றார்

உலகம் முடியும் காலத்திலே

நடுவராய் திரும்பவும் வந்திடுவார்


5. தூய ஆவியாரை நம்புகிறேன்

பாரினில் அவர் துணை வேண்டுகிறேன ;

பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று

பரிகார வாழ்வில் நிலைத்திடுவேன்.


6. திரு அவை உரைப்பதை நம்புகிறேன்

புனிதர்கள் உறவை நம்புகிறேன்

உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை

உறுதியுடனே நம்புகிறேன் - ஆமென்

அ.ப.: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்

எல்.: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும் நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வராக.


காணிக்கை மீது மன்றாட்டு          

ஆண்டவரே, நாங்கள் உமது திருப்பெயருக்கு ஒப்புக்கொடுக்கும் பலிப்பொருளோடு திருத்தூதர்களின் மன்றாட்டும் இணைந்து உம்மிடம் எழுவதாக் அவர்களின் வேண்டலால் நாங்கள் இறைப்பற்றுடன் இப்பலியை ஒப்புக்கொடுக்கச் செய்வீராக. எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்.: ஆமென்


நற்கருணை மன்றாட்டு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: இதயங்களை மேலே எழுப்புங்கள்

எல்.: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்

அ.ப.: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்

எல்.: அது தகுதியும் நீதியும் ஆனதே

ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் உமது திருவுளப்படி, திருத்தூதர்களான புனித பேதுருவும் புனித பவுலும் எங்களை மகிழ்விக்கின்றனர்: பேதுரு நம்பிக்கையை அறிக்கையிடுவதில் முதன்மையானவராகத் திகழ்ந்து,

இஸ்ரயேலில் எஞ்சினோரைக் கொண்டு தொடக்கத் திரு அவையை ஏற்படுத்தினார்; பவுல் அந்நம்பிக்கையை உய்த்துணர்ந்து தெளிவாகப் போதித்து அழைக்கப்பட்ட பிற இனத்தாருக்கு

ஆசிரியராகவும் போதகராகவும் விளங்கினார்.

இவ்வாறு வெவ்வேறு முறையில் கிறிஸ்துவின் ஒரே குடும்பத்தை உருவாக்கிய அவர்கள் ஒன்றாக வெற்றி வாகை சூடி, உலகம் எங்கும் வணக்கம் பெறுகின்றார்கள்.

ஆகவே புனிதர், வானதூதர் அனைவரோடும் சேர்ந்து

நாங்கள் உம்மைப் புகழ்ந்தேத்தி முடிவின்றிச் சொல்வதாவது:

எல்.: தூயவர், தூயவர், தூயவர்.

வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.

விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.

உன்னதங்களிலே ஒசன்னா!

ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.

உன்னதங்களிலே ஒசன்னா!


அ.ப.: நம்பிக்கையின் மறைபொருள்

எல்.: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.

அ.ப.:இவர் வழிகாக இவரோடு இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே

தூய ஆவியாரின் ஒன்றிப்பில் எல்லா புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே

எல்.: ஆமென்

அ.ப.:மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்

எல்.: விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே,

உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக

உமது ஆட்சி வருக

உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,

மண்ணுலகிலும் நிறைவேறுக

எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.

எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை

நாங்கள் மன்னிப்பது போல,

எங்கள் குற்றங்களை மன்னியும்,

எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்

தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.

அ.ப.: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து எங்கள் வாழ்நாளி்ல் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறில்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.

எல்.: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே

அ.ப.: ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீNர் எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திருஅவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உம் திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

எல்.: ஆமென்

அ.ப.: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக

அ.ப.: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம்

எல்.: உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எம்மேல் இரக்கம் வையும். (2)

உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எமக்கு அமைதி அருளும்.

அ.ப.: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.

எல்.: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.

திருவிருந்துப் பல்லவி    மத் 16:16,18 

பேதுரு இயேசுவிடம், "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் " என்று உரைத்தார். அதற்கு இயேசு, "நீ பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டு வேன்" என்று மறுமொழி

கூறினார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இத்திரு உணவால் நாங்கள் ஊட்டம் பெற்றுள்ளோம்; அதனால் அப்பம் பிடு வதிலும் திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நிலைத்து நின்று, உமது அன்பால் உறுதி பெற்று ஒரே இதயமும் ஒரே ஆன்மாவும் கொண்டவர்களாய் உமது திரு அவையில் வாழ்வோமாக எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

நிறைவுச் சடங்கு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: புனித பேதுருவின் மீட்பு அளிக்கும் நம்பிக்கை அறிக்கையில் உங்களை நிலைநிறுத்தி,

அதன் வழியாக, திரு அவையின் உறுதியான நம்பிக்கையில் உங்களை நிறுவிய எல்லாம் வல்ல இறைவன், உங்களுக்கு ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

அ.ப.: புனித பவுலின் அயராப் போதனையால் உங்களுக்கு அறிவுரை தந்த இறைவன், அவரது எடுத்துக்காட்டால்

நங்களும் பிற சகோதரர் சகோதரிகளைக் கிறிஸ்துவிடம் அழைத்து வர உங்களுக்கு என்றும் அறிவுறுத்துவாராக.

பதில்: ஆமென்.

அ.ப.: புனித பேதுரு சிலுவையாலும் புனித பவுல் வாளாலும் பரிசாகப் பெற்ற அந்த விண்ணக வாழ்வுக்கு, பேதுரு தமது தலைமைத்துவத்தாலும்

பவுல் தமது போதனையாலும் இவ்விருவரும் தமது பரிந்துரையாலும் நம்மை மகிழ்வுடன் அழைத்துச் செல்வார்களாக.

பதில்: ஆமென்.

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், ழூ தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக

எல்.: ஆமென்

அ.ப.: சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று

எல்.: இறைவனுக்கு நன்றி


கிறிஸ்துவின் ஆன்மாவே

கிறிஸ்துவின் ஆன்மாவே,

என்னைப் புனிதமாக்கும்.

கிறிஸ்துவின் திரு உடலே,

என்னை மீட்டருளும்.

கிறிஸ்துவின் திருஇரத்தமே,

எனக்கு எழுச்சியூட்டும்.

கிறிஸ்துவின் விலாவின் தண்ணீரே

என்னைக் கழுவிடுமே.


கிறிஸ்துவின் பாடுகளே

என்னைத் தேற்றிடுமே

ஓ ! நல்ல இயேசுவே

எனக்குச் செவிசாயும்

உம் திருக்காயங்களுள்

என்னை மறைத்தருளும்

உம்மிடமிருந்து என்னைப்

பிரிய விடாதேயும்


தீயப் பகைவரிடமிருந்து

என்னைக் காத்தருளும்

எனது இறப்பின் வேளையில்

என்னை அழைத்தருளும்

உம்மிடம் வர எனக்குக்

கட்டளையிட்டருளும்

புனிதர்களோடு எக்காலமும்

உம்மைப் புகழச் செய்யும் -ஆமென்


நிலையான புகழுக்குரிய தூய இறை நன்மைக்கே,

எல்லா காலமும், தொழுகையும் புகழும் போற்றியும் மாட்சிமையும் உண்டாகக் கடவது.


இந்த நாள் புனிதர் ஜூன் 29

புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல்

“நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என உலகிற்கு உரைத்த புனித பேதுரு மற்றும் “ஆண்டவர் இயேசுவின் துணை கொண்டு எதுவும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” என வாழ்ந்து காட்டிய புனித பவுல் ஆகியோரின் விழாவை தான் இந்த வாரம் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்

புனித பேதுரு

புனித பேதுரு அல்லது இராயப்பர் இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய பன்னிரு திருத்தூதர்களில் முதன்மையானவர.; இவரின் இயற்பெயர் சீமோன.; இவரை சீடராக அழைத்த இயேசு, பேதுரு என்னும் சிறப்புப் பெயரை வழங்கினார.; அதற்கு பாறை என்பது பொருள். இவர் கலிலேய மீனவர். இவரையே இயேசு கத்தோலிக்கத் திருஅவையின் முதல் தலைவராக தெரிந்துகொண்டார். “மானிடமகனை மக்கள் யார் என்று சொல்கிறார்கள்?” என்ற இயேசுவின் கேள்விக்கு புனித பேதுரு, மறுமொழியாக “நீர் மெசியா” என எடுத்துரைத்தார.; கத்தோலிக்க திருஅவை புனித பேதுரு முதல் திருத்தந்தை என அழைக்க ஒரு சில காரணங்களை கொடுக்கிறது.

பன்னிரு திருத்தூதர்களில் முதன்மையான இடம்  பேதுருவுக்கு அளிக்கப்பட்டது

இயேசு பேதுருவிற்க்கு அளித்த சிறப்பு பணி 

பன்னிரு திருத்தூதர் பேதுரு ஆற்றிய தனிப்பட்ட பணி

பாதுகாவல்: மீனவர்கள் 

புனித பவுல்

சவுல் என்ற இயற்பெயரை தாங்கி கிறிஸ்தவர்களுக்கு எதிராக பல வன்முறைகளை செய்து பின்பு மனம் மாறி பவுல் என பெயரை பெற்று வாழ்ந்தவர். இவர் ஓர் ரோமானிய குடிமகன். யூத மதத்தை பின்பற்றி பின் இயேசுவை விசுவாசித்து கிறிஸ்தவர் ஆனார.; தமஸ்கில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்த சென்றபோது ஆண்டவர் குறுக்கிட்டு அவர் வாழ்வில் புதுமையை உணர வைத்தார.; அப்போது அவரது கண்பார்வை மங்கியது. மூன்று நாள்கள் இவர் கண்பார்வை இல்லாமலும், புசியாமலும், குடியாமலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்பு ஆண்டவர் அனனியாவை அனுப்பி அவருக்குப் பார்வை கிடைக்கும்படி செய்தார.; எழுந்திருந்து திருமுழுக்குப் பெற்று, உணவு உண்டும் இறைவனுக்காக பணியாற்ற பயணப்பட்டார். புதிய ஏற்பாட்டில் உள்ள 27 புத்தகங்களில் 14 படைப்புகள் இவர் எழுதியது என கூறப்படுகிறது. இவர் எழுதிய திருமுகம்களில் ‘கிறிஸ்துவில’; என்ற சொல் ஏறக்குறைய 50 முறை இடம்பெறுகிறது. இவரது ஆன்மீக வாழ்வையும் பணி வாழ்வையும் “எல்லோருக்கும் எல்லாமும் ஆனேன்” என குறிப்பிடுகிறார்.

பாதுகாவல்: இறைப்பணியாளர்கள். 

செபம்:

எல்லாவற்றையும் படைத்தாலும் இறைவா! புனித பேதுரு மற்றும் பவுலை பெருமைப்படுத்த இந்த நாளினை கொடுத்தமைக்கு நன்றி. அவர்கள் எவ்வாறு திருச்சபையின் வளர்ச்சிக்காக தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்களோ, அது போல நாங்களும் திருச்சபையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல உதவிடவும், புனிதர்கள் வழியில் புனிதராய் பயணிக்கவும் அருள்தாரும் -ஆமென்.

சகோ. அந்தோணி மதன், தூத்துக்குடி மறைமாவட்டம்


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...