Thursday, July 1, 2021

13th Ordinary week Saturday & St.Thomas Feast - பொதுக்காலம் 13ஆம் வாரம் - சனி - அப்போஸ்தலர் தோமா விழா


 Download pdf 

வருகைப் பல்லவி     திபா 117:28          

நீரே என் இறைவன் என நான் அறிக்கையிடுகின்றேன்; நீரே என் கடவுள் என உம்மைப் புகழ்ந்தேத்து கின்றேன். நீரே என் மீட்பரானதால் உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.

அருட்பணியாளர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.

எல்லோரும்: ஆமென்.

அ.ப.: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக

பாவத்துயர்ச் செயல்

அ.ப.: சகோதர, சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.

(சிறிது நேரம் அமைதி)

எல்.: எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கின்றேன், ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். (மார்பில் தட்டிக் கொண்டு)

என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால் எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும் சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.


அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

எல்.: ஆமென்

உன்னதங்களிலே (பாடல்)

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.

உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக

உம்மைப் புகழ்கின்றோம் உம்மை வாழ்த்துகின்றோம்.

உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்

உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவராகிய இறைவா வானுலக அரசரே,

எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா,

ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே,

ஆண்டவராகிய இறைவா, இறைவனின் செம்மறியே,

தந்தையின் திருமகனே - 2

உலகின் பாவங்களைப் போக்குபவரே,

எங்கள் மேல் இரக்கமாயிரும்

உலகின் பாவங்களைப் போக்குபவரே,

எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.

தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்

ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்!

நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்!

தூய ஆவியாரோடு தந்தையாகிய இறைவனின்

மாட்சியில் இருப்பவர் நீரே. ஆ..ஆ..ஆ..ஆமென் - 2

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, எங்கள் நாட்டுக்கு நற்செய்தியைக் கொண்டு வந்த திருத்தூதரான புனித தோமாவின் விழாவை முன்னிட்டு நாங்கள் பெருமை கொள்ள அருள்வீராக. அவரது பரிந்துரையின் ஆற்றலால் நேர்மையான இதயத்தோடு உம்மைத் தேடுகின்ற அனைவரும் இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் எனவும் கடவுள் எனவும் ஏற்று அவர் திருவடிகளில் சரணடையச் செய்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்.: ஆமென்


முதல் வாசகம்

திருத்தூதர்; பணிகள் நூலில்லிருந்து வாசகம் 10:24-35

அடுத்த நாள் அவர் செசரியா நகரைச் சென்றடைந்தார். கொர்னேலியு தம் உறவினர்களையும் நெருங்கிய நண்பர்களையும் வரவழைத்து அவருக்காகக் காத்துக்; கொண்டிருந்தார். பேதுரு உள்ளே வரவே, கொர்னேலியு அவரை எதிர்கொண்டு போய் அவர் காலில் விழுந்து வணங்கினார். பேதுரு, "எழுந்திடும்; நானும் ஒரு மனிதன்தான்" என்று கூறி அவரை எழுப்பினார். அவரோடு பேசியவாறே பேதுரு உள்ளே சென்றார். அங்குப் பலர் வந்திருப்பதைக் கண்டு அவர்களைப் பார்த்து, "ஒரு யூதன் பிற குலத்தவரிடம் செல்வதும், அவர்களோடு உறவாடுவதும் முறைகேடு என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் யாரையும் தீட்டுள்ளவர் என்றோ, தூய்மையற்றவர் என்றோ சொல்லக்கூடாது" எனக் கடவுள் எனக்குக் காட்டினார். ஆகவே நீங்கள் என்னை வரவழைத்தபோது மறுப்புக் கூறாமல் வந்தேன். இப்போது சொல்லும்; எதற்காக என்னை வரவழைத்தீர்?" என்று வினவினார். அதற்கு கொர்னேலியு கூறியது; "மூன்று நாள்களுக்குமுன் இதே நேரத்தில், அதாவது பிற்பகல் மூன்று மணிக்கு என் வீட்டில் நான் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தேன். அப்போது பளபளப்பான ஆடையணிந்த ஒருவர் என்முன் வந்து நின்றார். அவர் என்னிடம், "கொர்னேலியு, உம் வேண்டுதலைக் கடவுள் கேட்டருளினார். உம் இரக்கச் செயல்களை அவர் நினைவிற் கொண்டார். ஆகவே நீர் யோப்பாவுக்கு ஆள் அனுப்பிப் பேதுரு என்னும் பெயருடைய சீமோனை வரவழையும். அவர் தோல் பதனிடுபவராகிய சீமோன் வீட்டில் விருந்தினராகத் தங்கியிருக்கிறார். அவ்வீடு கடலோரத்தில் உள்ளது" என்றார். எனவேதான் உடனே உமக்கு ஆள் அனுப்பினேன். நீரும் இங்கு வந்தது நல்லது. ஆண்டவர் பணித்த அனைத்தையும் இப்போதும் உம் வழியாகக் கேட்பதற்கு நாங்கள் யாவரும் கடவுள் திருமுன் கூடியிருக்கிறோம்." அப்போது பேதுரு பேசத் தொடங்கி, "கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்.

வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல் திபா 117: 1. 2

பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்!  ℟ 

2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது. அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது.  ℟ 


இரண்டாம் வாசகம்


திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22


சகோதரர் சகோதரிகளே, இனி நீங்கள் அன்னியர் அல்ல் வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெறுகிறது. நீங்களும் அவரோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: புனித யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்

எல் : ஆண்டவரே, மாட்சி உமக்கே

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 24-29

பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், ஹஹஆண்டவரைக் கண்டோம்'' என்றார்கள். தோமா அவர்களிடம், ஹஹஅவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்'' என்றார். எட்டு நாள்களுக்குப் பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ஹஹஉங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், ஹஹஇதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்'' என்றார். தோமா அவரைப் பார்த்து, ஹஹநீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!'' என்றார். இயேசு அவரிடம், ஹஹநீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்றார்.    

அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்



நம்பிக்கை அறிக்கை

1. விண்ணையும் மண்ணையும் படைத்தவராம்

கடவுள் ஒருவர் இருக்கின்றார்

தந்தை, மகன், தூய ஆவியராய்

ஒன்றாய் வாழ்வோரை நம்புகிறேன்.


2. தூய ஆவியின் வல்லமையால்

இறைமகன் நமக்காய் மனிதரானார்

கன்னி மரியிடம் பிறந்தவராம்

இயேசுவை உறுதியாய் நம்புகிறேன்


3. பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்

சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார்

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்

இறப்பின் மீதே வெற்றி கொண்டார்.


4. விண்ணகம் வாழும் தந்தையிடம்

அரியணைக் கொண்டு இருக்கின்றார்

உலகம் முடியும் காலத்திலே

நடுவராய் திரும்பவும் வந்திடுவார்


5. தூய ஆவியாரை நம்புகிறேன்

பாரினில் அவர் துணை வேண்டுகிறேன ;

பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று

பரிகார வாழ்வில் நிலைத்திடுவேன்.


6. திரு அவை உரைப்பதை நம்புகிறேன்

புனிதர்கள் உறவை நம்புகிறேன்

உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை

உறுதியுடனே நம்புகிறேன் - ஆமென்


அ.ப.: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்

எல்.: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும் நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வராக.


காணிக்கை மீது மன்றாட்டு          

ஆண்டவரே, உமக்கு உரிய பணியை நாங்கள் புரிகின்றோம்; திருத்தூதரான புனித தோமாவின் நம்பிக்கை அறிக்கையைப் போற்றி உமக்குப் புகழ்ச்சிப் பலி செலுத்தும் நாங்கள் உம் கொடைகளை எங்களில் பாதுகாக்க உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம். எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்.: ஆமென்

நற்கருணை மன்றாட்டு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: இதயங்களை மேலே எழுப்புங்கள்

எல்.: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்

அ.ப.: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்

எல்.: அது தகுதியும் நீதியும் ஆனதே

ஆண்டவரே, தூயவரான தந்தையே,

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக

எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


என்றும் வாழும் ஆயராகிய நீர் வழியும் உண்மையும் வாழ்வுமான இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க உம் திருத்தூதரான புனித தோமாவை எங்கள் நாட்டுக்கு அனுப்பினீர்;

தூய ஆவியாரின் ஆற்றலால் கண்ணால் காணாமலேயே உம்மில் நம்பிக்கை கொள்வோரின்

பேறுபெற்ற நிலையை நாங்களும் கண்டுணரச் செய்கின்றீர்.

ஆகவே இன்றும் என்றும் வானதூதர்களின் படைகளோடு இணைந்து முழு இதயத்தோடு நாங்கள் பாடி உமக்குக் குரலெழுப்பிச் சொல்வதாவது:

எல்.: தூயவர், தூயவர், தூயவர்.

வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.

விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன. உன்னதங்களிலே ஒசன்னா!

ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.

உன்னதங்களிலே ஒசன்னா!

அ.ப.: நம்பிக்கையின் மறைபொருள்

எல்.: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.

அ.ப.:இவர் வழிகாக இவரோடு இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே

தூய ஆவியாரின் ஒன்றிப்பில் எல்லா புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே

எல்.: ஆமென்

அ.ப.:மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்

எல்.: விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,

மண்ணுலகிலும் நிறைவேறுக எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும், எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.

அ.ப.: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறில்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.

எல்.: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே

அ.ப.: ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே, “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீNர் எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திருஅவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உம் திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

எல்.: ஆமென்

அ.ப.: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக

அ.ப.: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம்

எல்.: உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எம்மேல் இரக்கம் வையும். (2)

உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எமக்கு அமைதி அருளும்.

அ.ப.: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.

எல்.: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.


திருவிருந்துப் பல்லவி யோவா 20:27   

உன் கையை இடு. ஆணிகள் இருந்த இடத்தைக் கண்டறிவாய். ஐயம் தவிர்த்து, நம்பிக்கை கொள்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, உம்முடைய ஒரே திருமகனின் திரு உடலை இவ்வருளடையாளத்தில் உண்மையாகவே உட்கொண்டுள்ளோம்; அதனால் திருத்தூதரான புனித தோமாவுடன் கிறிஸ்துவை எங்கள் ஆண்டவர் எனவும் எங்கள் கடவுள் எனவும் நம்பிக்கையால் கண்டுணரவும் அவரை எங்கள் செயல்களாலும் எங்கள் வாழ்க்கையாலும் அறிவிக்கவும் அருள்புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

நிறைவுச் சடங்கு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

சிறப்பு ஆசி

திருத்தூதரை அடித்தள மாகக் கொண்டு உறுதியாய் நிலைத்து நிற்க உங்களுக்கு அருளிய தந்தையாகிய கடவுள், திருத்தூதரான புனித தோமாவின் மாட்சிக்கு உரிய பேறு பயன்களினால்

உங்களுக்குக் கனிவுடன் ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

மிகச் சிறந்த பாதுகாவலரின் உதவியை உங்களுக்கு அளித்த திருமகனாகிய கடவுள்,

உங்கள் நிலையான வீட்டை அடையும்வரை

உங்கள் உள்ளங்களை ஒளிர்வித்து, உங்களை வழிநடத்துவாராக.

பதில்: ஆமென்.

உண்மையின் நிறைவுக்கு எல்லாரையும் அழைத்துச் செல்லும் தூய ஆவியாராகிய கடவுள்,

வழியும் உண்மையும் வாழ்வுமான இயேசுவிடம்

நம் மக்கள் அனைவரையும் கொண்டு சேர்ப்பாராக.

பதில்: ஆமென்.

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக

எல்.: ஆமென்

அ.ப.: சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று

எல்.: இறைவனுக்கு நன்றி



No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...