Wednesday, August 4, 2021

18th Ordinary Week Wednesday - பொதுக்காலம் 18ஆம் வாரம் - புதன்

 பொதுக்காலம் 18ஆம் வாரம் - புதன்



Download pdf 

முதல் வாசகம்


விருப்பிற்குரிய நாட்டை அவர்கள் அசட்டை செய்தார்கள்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 13: 1-2, 25-33, 14: 1, 26-30, 34-35


அந்நாள்களில், ஆண்டவர் மோசேயிடம், “இஸ்ரயேல் மக்களுக்கு நான் கொடுக்கும் கானான் நாட்டை உளவு பார்க்க ஆள்களை அனுப்பு; மூதாதையர் குலம் ஒவ்வொன்றிலிருந்தும் அவர்களுள் தலைவனாயிருக்கும் ஒருவனை நீ அனுப்ப வேண்டும்” என்றார். நாற்பது நாள்கள் நாட்டை உளவு பார்த்த பின் அவர்கள் திரும்பி வந்தனர். அவர்கள் பாரான் பாலைநிலத்தில் காதேசில் இருந்த மோசேயிடமும் ஆரோனிடமும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரிடமும் வந்தனர்; அவர்களுக்கும் முழு மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் செய்தி கொண்டு வந்தனர்; நாட்டின் கனியையும் அவர்களுக்குக் காட்டினர். அவர்கள் மோசேயிடம் கூறியது: நீர் எங்களை அனுப்பிய நாட்டுக்கு நாங்கள் சென்று வந்தோம்; அதில் பாலும் தேனும் வழிந்தோடுகிறது; இதுவே அதன் கனி. ஆயினும் அந்நாட்டில் வாழும் மக்கள் வலிமை மிக்கவர்கள்; நகர்கள் அரண் சூழ்ந்தவை, மிகப் பெரியவை; அத்துடன் ஆனாக்கின் வழி மரபினரையும் நாங்கள் அங்குக் கண்டோம்; அமலேக்கியர் நெகேபு நாட்டில் வாழ்கின்றனர்; இத்தியர், எபூசியர், எமோரியர் ஆகியோர் மலைநாட்டில் வாழ்கின்றனர்; கானானியர் கடலருகிலும் யோர்தானை ஒட்டியும் வாழ்கின்றனர். காலேபு மோசே முன் மக்களை உடனே அமைதிப்படுத்தி, “நாம் உடனடியாகப் போய் நாட்டைப் பிடித்துக்கொள்வோம்; ஏனெனில் நாம் அதை எளிதில் வென்றுவிட முடியும்” என்றார். ஆனால் அவருடன் சென்றிருந்த ஆள்கள், “நாம் அம்மக்களுக்கு எதிராகப் போக முடியாது; ஏனெனில் அவர்கள் நம்மிலும் வலிமை மிக்கவர்கள்” என்றனர். இவ்வாறு அவர்கள் உளவு பார்த்து வந்த நாட்டைப் பற்றித் தவறான தகவலை இஸ்ரயேல் மக்களுக்குக் கொண்டு வந்தனர்; அவர்கள் கூறியது: உளவு பார்க்கும்படி நாங்கள் சென்றிருந்த நாடு தன் குடிமக்களையே விழுங்குவதாய் இருக்கிறது; அதில் நாங்கள் கண்ட மனிதர் அனைவரும் மிகவும் நெடிய உருவத்தினர்; அத்துடன் நெப்பிலிமில் இருந்து வருகிற ஆனாக்கின் புதல்வராகிய அரக்கரையும் கண்டோம்; எங்கள் பார்வையில் நாங்கள் வெட்டுக்கிளிகள் போன்றிருந்தோம்; அவர்களுக்கும் நாங்கள் அவ்வாறே காணப்பட்டோம். உடனே மக்கள் கூட்டமைப்பு முழுவதும் உரத்தக் குரலில் புலம்பிற்று; மக்கள் அன்றிரவு அழுதுகொண்டே இருந்தனர். மேலும் ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பினர் எதுவரை எனக்கு எதிராக முறுமுறுப்பர்? எனக்கு எதிராக முறுமுறுக்கும் இஸ்ரயேல் மக்களின் முறுமுறுப்புகளை நான் கேட்டேன். நீங்கள் அவர்களிடம் சொல்ல வேண்டியது, “ஆண்டவர் கூறுவதாவது: என் உயிர் மேல் ஆணை! என் செவிகளில் படுமாறு நீங்கள் சொன்னதையே நான் உங்களுக்குச் செய்வேன்; எனக்கெதிராக முறுமுறுத்த, இருபது வயதும் அதற்கு மேலும் எண்ணப்பட்ட மொத்தத் தொகையினரான நீங்கள் இப்பாலை நிலத்தில் பிணங்களாக விழுவீர்கள். நீங்கள் குடியிருக்கும்படி நான் வாக்களித்த நாட்டிற்குள் எப்புன்னே மகன் காலேபையும் நூன் மகன் யோசுவாவையும் தவிர ஒருவருமே வரமாட்டீர்கள். நீங்கள் நாட்டை உளவு பார்த்த நாள்களின் எண்ணிக்கைப்படி ஒரு நாளைக்கு ஒரு ஆண்டாக, நாற்பது நாள்களுக்கும் நாற்பது ஆண்டுகள் நீங்கள் குற்றப் பழியைச் சுமப்பீர்கள்; என் வெறுப்பையும் அறிந்துகொள்வீர்கள். ஆண்டவராகிய நானே பேசியுள்ளேன்; எனக்கு எதிராக ஒன்று கூடிய இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் இதை நான் கட்டாயம் செய்து முடிப்பேன்; இப்பாலை நிலத்தில் அவர்கள் முற்றிலும் அழிந்தொழிந்து அங்கேயே மடிவார்கள்” என்றார்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல்    திபா 106: 6-7ய. 13-14. 21-22. 23 

பல்லவி: உம் மக்கள்மீது இரங்கும்போது ஆண்டவரே என்னை நினைவுகூரும்!


6 எங்கள் மூதாதையரின் வழிநடந்து, நாங்களும் பாவம் செய்தோம்; குற்றம் புரிந்தோம்; தீமை செய்தோம்.

7ய எங்கள் மூதாதையர் எகிப்தில் நீர் செய்த வியத்தகு செயல்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை. - பல்லவி

13 ஆயினும், அவர் செய்தவற்றை அவர்கள் விரைவிலேயே மறந்துவிட்டார்கள்; அவரது அறிவுரைக்காக அவர்கள் காத்திருக்கவில்லை.

14 பாலை நிலத்தில் அவர்கள் பெருவிருப்புக்கு இடங்கொடுத்தார்கள். பாழ்வெளியில் அவர்கள் இறைவனைச் சோதித்தார்கள். - பல்லவி

21 தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்;

22 காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். - பல்லவி

23 ஆகையால், அவர்களை அவர் அழித்து விடுவதாகக் கூறினார்; ஆனால், அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர்போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


அம்மா, உமது நம்பிக்கை பெரிது.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 21-28


அக்காலத்தில், இயேசு தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்துவந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்” என வேண்டினர். அவரோ மறுமொழியாக, “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்றார். ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, “ஐயா, எனக்கு உதவியருளும்” என்றார். அவர் மறுமொழியாக, “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார். உடனே அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்றார். இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


Tuesday, August 3, 2021

18th Ordinary Week Tuesday - பொதுக்காலம் 18ஆம் வாரம் - செவ்வாய்

 பொதுக்காலம் 18ஆம் வாரம் - செவ்வாய்



Download pdf 

முதல் வாசகம்


ஏன் என் அடியான் மோசேக்கு எதிராகப் பேச நீங்கள் அஞ்சவில்லை?

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 12: 1-13


அந்நாள்களில், மோசே எத்தியோப்பியப் பெண்ணை மணந்திருந்தார்; அவர் மணந்திருந்த எத்தியோப்பியப் பெண்ணை முன்னிட்டு மிரியாமும் ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசினர். அவர்கள், “ஆண்டவர் உண்மையில் மோசே வழியாக மட்டுமா பேசியுள்ளார்? அவர் எங்கள் வழியாகவும் பேசவில்லையா?” என்றனர். ஆண்டவர் இதனைக் கேட்டார். பூவுலகின் அனைத்து மாந்தரிலும் மோசே சாந்தமிகு மானிடராய்த் திகழ்ந்தார். உடனே ஆண்டவர் மோசே, ஆரோன், மிரியாம் ஆகியோரிடம், “நீங்கள் மூவரும் சந்திப்புக் கூடாரத்தருகே வாருங்கள்” என்றார். அவர்கள் மூவரும் வந்தனர். மேகத் தூண் ஒன்றில் ஆண்டவர் இறங்கி வந்து கூடார வாயிலருகே நின்று, ஆரோனையும் மிரியாமையும் அழைத்தார்; அவர்கள் இருவரும் முன் வந்தனர். அவர் கூறியது: “என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள் இறைவாக்கினன் ஒருவன் இருந்தால் ஆண்டவராகிய நான் ஒரு காட்சியின் வழியாக அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன். கனவில் அவனோடு பேசுவேன். ஆனால் என் அடியான் மோசேயோடு அப்படியல்ல் என் வீடு முழுவதிலும் அவனே நம்பிக்கைக்குரியவன்; நான் அவனோடு பேசுவது மறைபொருளாக அல்ல, நேர்முகமாகவும் தெளிவாகவும் இருக்கும். ஆண்டவர் உருவையும் அவன் காண்கிறான். பின்னர் ஏன் என் அடியான் மோசேக்கு எதிராகப் பேச நீங்கள் அஞ்சவில்லை?” மேலும் ஆண்டவரின் சினம் அவர்கள்மேல் மூண்டது; அவர் அகன்று சென்றார். கூடாரத்தின் மேலிருந்து மேகம் அகன்றதும் மிரியாமை பனி போன்ற வெண்மையான தொழுநோய் பீடித்தது. ஆரோன் மிரியாம் பக்கம் திரும்பவே அவள் தொழுநோயாளியாய் இருக்கக் கண்டார். ஆரோன் மோசேயிடம், “என் தலைவரே! அறிவீனமாக நாங்கள் செய்த பாவத்தை எங்கள்மேல் சுமத்த வேண்டாம்; தாயின் வயிற்றிலிருந்து செத்துப் பிறந்த அரைகுறைக் குழந்தை போன்று இவள் ஆகாதிருக்கட்டும்” என்றார். மோசே ஆண்டவரிடம் முறையிட்டு, “கடவுளே, இவளைக் குணமாக்க வேண்டுகிறேன்” என்றார்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல்     திபா 51: 1-2. 3-4. 10-11 

பல்லவி: கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்.


1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.

2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி

3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.

4 உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்; எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப் படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர். - பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.

11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 1: 49டி

அல்லேலூயா, அல்லேலூயா! "ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்.” அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 22-36


அக்காலத்தில், இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக்கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின் மேல் ஏறினார். பொழுது சாய்ந்த பிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக் கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது. இரவின் நான்காம் காவல் வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, “ஐயோ, பேய்” என அச்சத்தினால் அலறினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார். பேதுரு அவருக்கு மறுமொழியாக, “ஆண்டவரே, நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்றார். அவர், “வா” என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” என்றார். அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, “உண்மையாகவே நீர் இறைமகன்” என்றனர். அவர்கள் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்தார்கள். இயேசுவை யாரென்று அறிந்துணர்ந்த அவ்விடத்து மக்கள் சுற்றுப்புறமெங்கும் ஆள் அனுப்பி எல்லா நோயாளர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர். அவரது மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினர்; தொட்டவர் யாவரும் நலமடைந்தனர்.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


18th Ordinary Week Monday - பொதுக்காலம் 18ஆம் வாரம் - திங்கள்

 பொதுக்காலம் 18ஆம் வாரம் - திங்கள்



Download pdf 


முதல் வாசகம்


நான் தனியாக இம்மக்கள் அனைவரையும் கொண்டு செல்லவே முடியாது.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 11: 4டி-15


இஸ்ரயேல் மக்கள் மீண்டும் அழுது கூறியது: “நமக்கு உண்ண இறைச்சி யார் தருவார்? நாம் எகிப்தில் செலவின்றி உண்ட மீன், வெள்ளரிக் காய், கொம்மட்டிக் காய், கீரை, வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றின் நினைவு வருகிறது. ஆனால் இப்பொழுதோ நம் வலிமை குன்றிப் போயிற்று; மன்னாவைத் தவிர வேறெதுவும் நம் கண்களில் படுவதில்லையே!”


மன்னா கொத்துமல்லி விதை போன்றும் அதன் தோற்றம் முத்துப் போன்றும் இருந்தது. மக்கள் வெளியில் சென்று அதைச் சேகரித்தனர்; அரவைக் கல்லில் அரைத்தனர் அல்லது உரலில் போட்டு இடித்தனர்; பானைகளில் அதை வேக வைத்து அதில் அப்பங்கள் செய்தனர்; அதன் சுவை எண்ணெயில் செய்த அப்பங்களின் சுவையை ஒத்திருந்தது. இரவில், பாளையத்தின்மேல் பனி விழும்போது மன்னாவும் அதனுடன் விழுந்தது.


எல்லா வீடுகளிலும் இருந்த மக்களும் தம்தம் கூடார வாயிலில் இருந்து அழும் குரலை மோசே கேட்டார்; ஆண்டவரின் சினம் கொழுந்து விட்டெரிந்தது; மோசேக்கும் அது பிடிக்கவில்லை. மோசே ஆண்டவரிடம் கூறியது: “உம் அடியானுக்கு ஏன் இந்தக் கேடு? நீர் எனக்குக் கருணை காட்டாமல் இம்மக்களின் எல்லாப் பளுவையும் என்மேல் சுமத்தியது ஏன்? இம்மக்களையெல்லாம் நானா கருத்தரித்தேன்? நானா இவர்களைப் பெற்றெடுத்தேன்? ‘பாலுண்ணும் குழந்தையை ஏந்திச் செல்பவள் போன்று இவர்களை மார்போடு ஏந்தி, அவர்கள் மூதாதையருக்கு நான் வாக்களித்திருந்த நாட்டுக்குக் கொண்டு செல்’ என்று நீர் சொல்வானேன்? இம்மக்கள் அனைவருக்கும் கொடுக்கவேண்டிய இறைச்சிக்கு நான் எங்கு போவேன்? அவர்கள் எனக்கு முன் அழுது, ‘உண்ண எங்களுக்கு இறைச்சி தாரும்’ என்றும் கேட்கிறார்களே! நான் தனியாக இம்மக்கள் அனைவரையும் கொண்டு செல்லவே முடியாது; இது எனக்கு மிகப்பெரும் பளு. இப்படியே எனக்குச் செய்வீரானால் உடனே என்னைக் கொன்றுவிடும்; உம் பார்வையில் எனக்குத் தயை கிடைத்தால் இந்தக் கொடுமையை நான் காணாதிருக்கட்டும்.”


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல்  திபா 81: 11-12. 13-14. 15-16 

பல்லவி: நமது வலிமையாகிய கடவுளை மகிழ்ந்து பாடுங்கள்.


11 என் மக்கள் என் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; இஸ்ரயேலர் எனக்குப் பணியவில்லை.

12 எனவே, அவர்கள் தங்கள் எண்ணங்களின்படியே நடக்குமாறு, அவர்களின் கடின இதயங்களிடமும் அவர்களை விட்டுவிட்டேன். - பல்லவி

13 என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்.

14 நான் விரைவில் அவர்கள் எதிரிகளை அடக்குவேன், என் கை அவர்களின் பகைவருக்கு எதிராகத் திரும்பும். - பல்லவி

15 ஆண்டவரை வெறுப்போர் அவர்முன் கூனிக்குறுகுவர்; அவர்களது தண்டனைக் காலம் என்றென்றுமாய் இருக்கும்.

16 ஆனால், உங்களுக்கு நயமான கோதுமையை உணவாகக் கொடுப்பேன்; உங்களுக்கு மலைத் தேனால் நிறைவளிப்பேன். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி    மத் 4: 4டி

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


இயேசு அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 13-21


அக்காலத்தில், திருமுழுக்கு யோவான் கொலையுண்டதைக் கேள்வியுற்ற இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவு கொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார். மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்” என்றனர். இயேசு அவர்களிடம், “அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார். ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, “எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை” என்றார்கள். அவர், “அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்” என்றார். மக்களைப் புல் தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்; அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலாக உணவு உண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


St. Eusebius of Vercelli & St. Peter Julian Eymard - வெர்செல்லி நகர்ப் புனித யுசேபியுஸ் & புனித பீட்டர் ஜூலியன் எய்மார்டு ஆகஸ்ட் 2

 ஆகஸ்ட் 2



Download pdf 

வெர்செல்லி நகர்ப் புனித யுசேபியுஸ்: ஆயர்

அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919).


திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே இறைவா, . திருமகனின் இறைத்தன்மையை நிலைநாட்டுவதில் ஆயரான புனித யுசேபியுஸ் கொண்டிருந்த மனவுறுதியை நாங்கள் பின்பற்றச் செய்தருளும்; அதனால் அவர் கற்றுத் தந்த நம்பிக்கையை நாங்கள் கடைப்பிடித்து உம் திருமகனின் வாழ்வில் பங்குபெறத் தகுதி பெறுவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


புனித பீட்டர் ஜூலியன் எய்மார்டு: அருள்பணியாளர்

புனிதர் பொது: துறவியர் (பக். 950) அல்லது அருள்நெறியாளர்கள் பொது: அருள்நெறியாளர் ஒருவர் (பக். 923).


திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம் திருமகனின் திரு உடல், திரு இரத்தம் ஆகிய மறைபொருள்கள் மீது கொண்டுள்ள வியப்புக்கு உரிய அன்பினால் புனித பீட்டர் ஜூலியனை அணிசெய்தீNர் அதனால் இத்திருவிருந்திலிருந்து அவர் பெற்ற ஆன்மீக வலிமையை நாங்களும் பெற்றிடத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.


முதல் வாசகம்


உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-5


அன்பிற்குரியவர்களே, இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்பு கொண்டு அவர் கட்டளைகளைக் கடைப் பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள் மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே. இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல் திபா 89: 1-2. 3-4. 20-21. 24,26 

பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.


1 ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.

2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. - பல்லவி

3 நீர் உரைத்தது: ‘நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:

4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.’ - பல்லவி

20 என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.

21 என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். - பல்லவி

24 என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும்.

26 ‘நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி     மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12ய


அக்காலத்தில், இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.”


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


         


Monday, August 2, 2021

St. Alphonse Maria Ligori - புனித அல்போன்ஸ் மரிய லிகோரி: ஆயர், மறைவல்லுநர் - நினைவு - ஆகஸ்ட் 1

 ஆகஸ்ட் 1

புனித அல்போன்ஸ் மரிய லிகோரி: ஆயர், மறைவல்லுநர் - நினைவு


Download pdf 

அருள் நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919) அல்லது மறைவல்லுநர்கள் பொது (பக். 932).


திருக்குழும மன்றாட்டு

இறைவா, நற்பண்புகளுக்குப் புதிய எடுத்துக்காட்டுகளாகப் பலரைத் திரு அவையில் தோன்றச் செய்கின்றீர்; மக்களின் நலனுக்காக உழைப்பதில் ஆயரான புனித அல்போன்ஸ் மரியாவிடம் விளங்கிய ஆர்வத்தை நாங்கள் பின்பற்றவும் அதனால் அவருக்குக் கிடைத்த பரிசை விண்ணகத்தில் நாங்களும் பெற்றுக்கொள்ளவும் அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற, எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

எல்.: ஆமென்


காணிக்கை மீது மன்றாட்டு

ஆண்டவரே, இத்திருப்பலியை நிறைவேற்றவும் அதன் வழியாகத் தம்மையே புனிதப் பலிப்பொருளாக உமக்கு ஒப்புக்கொடுக்கவும் புனித அல்போன்ஸ் மரியாவுக்கு வரம் அளித்தீNர் அதனால் எங்கள் இதயங்கள் தூய ஆவியாராகிய விண்ணகத் தீயால் பற்றியெரியக் கனிவுடன் அருள்வீராக. எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்.: ஆமென்


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, மாண்புமிக்க இம்மறைபொருளின் நம்பிக்கைக்கு உரிய பணியாளராகவும் போதகராகவும் புனித அல்போன்ஸ் மரியாவைத் தந்தருளினீNர் இத்திருவிருந்தில் உம்முடைய நம்பிக்கையாளர் அடிக்கடி பங்குகொள்ளவும் அதனால் முடிவின்றி உம்மைப் போற்றிப் புகழவும் அருள்வீராக. எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்

எல்.: ஆமென்


முதல் வாசகம்


பாவம், சாவு என்பவற்றுக்கு உள்ளாக்கும் சட்டத்தினின்று தூய ஆவியின் சட்டம் என்னை விடுவித்துவிட்டது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 1-4


சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது. ஏனெனில், கிறிஸ்து இயேசுவோடு இணைந்து இருப்போருக்கு வாழ்வு தரும் தூய ஆவியின் சட்டம் பாவம், சாவு என்பவற்றுக்கு உள்ளாக்கும் சட்டத்தினின்று என்னை விடுவித்துவிட்டது. ஊனியல்பின் காரணமாய் வலுவற்றிருந்த திருச்சட்டம் செய்ய முடியாத ஒன்றைக் கடவுள் செய்தார். அதாவது, ஊனியல்பு கொண்ட மனிதரைப் போன்றவராய்த் தம் சொந்த மகனை அனுப்பி மனிதரிடமுள்ள பாவத்திற்கு முடிவு கட்டினார். ஊனியல்புக்கேற்ப நடவாமல், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப நடக்கும் நாம் திருச்சட்டத்தின் நெறிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவ்வாறு செய்தார்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல்  திபா 119: 9-10. 11-12. 13-14 

பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.


9 இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ?

10 முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலகவிடாதேயும். - பல்லவி

11 உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.

12 ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும். - பல்லவி

13 உம் வாயினின்று வரும் நீதித்தீர்ப்புகளை எல்லாம் என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.

14 பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவது போல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி    மத் 5: 16

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-19


அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுது தான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.”


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


         


Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...