Wednesday, August 31, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (1-09-2022)

 பொதுக்காலம் 22ஆம் வாரம் - வியாழன்

முதல் வாசகம்



நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 18-23

சகோதரர் சகோதரிகளே,

எவரும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக்கொள்வோர் தாங்களே மடையராகட்டும். அப்போது அவர்கள் ஞானிகள் ஆவார்கள். இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு, “ஞானிகளைக் கடவுள் அவர்களது சூழ்ச்சியில் சிக்க வைப்பார்.” மேலும் “ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என ஆண்டவர் அறிவார்.” எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா ஆகிய அனைவரும் உங்களுக்குரியவர்களே. அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்குரியவைகளே. ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்



திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 1a)

பல்லவி: மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை.

1
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2
ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி

3
ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4ab
கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி

5
இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 19

அல்லேலூயா, அல்லேலூயா! என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.

 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-11

அக்காலத்தில்

இயேசு கெனசரேத்து ஏரிக் கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏரிக் கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகை விட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.

அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார்.

அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.

இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள்.

இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார்.

அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------

தாழ்ச்சியின் ஆழத்தில் தான் உயர்வு!


விண்ணிலே வீரியமாய் பறந்து கொண்டிருந்த விமானம், திடீரென வழிதவறிச்செல்ல ஆரம்பித்தது. விமான ஓட்டியின் அஜாக்கிரதையால் இப்படி ஒரு விபரீதம் ஏற்பட்டது. இக்கட்டான சூழ்நிலை உருவானபோதும் விமான ஓட்டிகள் எப்படியாவது நிலைமையை சரிசெய்துவிடலாம் என்று போராடினார்கள். இதைப்பற்றி அறியாத பயணிகள் கவலையின்றி நிம்மதியாக பயணத்தைத் தொடர்ந்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே விமானிகள் பயணிகளிடம் அறிவிப்பு செய்யத்தொடங்கினர். விமானம் பாதை தவறியதால் பெரிய ஆபத்து இருப்பதாகவும், பயணிகள் பாராசூட் அணிந்துகொண்டு கீழே குதித்து தங்களை காப்பாற்றிக்கொள்ளுமாறும்  அறிவிப்பு வந்தது. விமானம் முழுவதும் அச்சத்தால் நிரம்பியது. பயணிகள் அழவும் அலறவும் தொடங்கினர். செய்வதறியாது திகைப்பில் இருந்த சமயத்தில் ஒரு மனிதர் பயப்படாதீர்கள், நான் உங்களைக் காப்பாற்றுகிறேன் என்று கத்தினார். அதைக்கேட்ட அனைவரும் அந்த மனிதரை ஏளனமாக திட்டத்தொடங்கினர்.

அவர் பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாக இருந்தார். கைதேர்ந்த விமான ஓட்டிகளாலேயே பிரச்சினையை தீர்க்க இயவில்லை. இவரால் என்ன செய்துவிட முடியும் என்று ஆளாளுக்கு பேசிக்கொண்டார்களே தவிர அந்த மனிதரின் குரலை யாரும் கேட்ட பாடில்லை. இறுதியில் அவர் அனைவரையும் அமைதிப்படுத்தி விட்டு வேகமாக விமான ஓட்டிகளின் அறைக்குச்சென்றார். சிறிது நேரத்தில் விமானம் சரியான பாதைக்கு திரும்பியது. அனைவரும் பத்திரமாக தங்கள் இடங்களுக்குத் திரும்பினர். அப்பொழுதுதான் அந்த மனிதர் அஸ்ட்ரானமி எனச்சொல்லப்படும் வானியலைக் கற்றவர் எனபது அனைவருக்கும் தெரிய வந்தது. அவர் தகுந்த நேரத்தில் செய்த உதவி பலருடைய உயிரைக்காப்பாற்றியது. யாரையும் குறைவாக எடை போடக்கூடாது என்பதையும் தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணம் தவறானது என்பதையும் பயணிகள் உணர்ந்து கொண்டனர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இதைப்போன்ற நிகழ்வை காண்கிறோம். காலம் காலமாய் மீன் பிடிக்கும் தொழில் செய்பவர்களுக்கு, கடலில் எங்கு மீன் கிடைக்கும், எந்த பருவகாலத்தில் மீன்பாடு நன்றாக இருக்கும், எந்தப் பருவத்தில் எந்த வகை மீன்களைப் பிடிக்கலாம் என்ற அறிவும் அதைவிட அனுபவமும் அதிகமாகவே இருக்கும். மீனவரான சீமோனும் தன் தொழிலில் நிச்சயம் நுணுக்கங்களை அறிந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இந்நிலையில் தான் இரவு முழுதும் பாடுபட்டும் ஒன்றும் கிடைக்காமல் உடலும் மனமும் சோர்ந்த நிலையில் வலைகளை அலசிக்கொண்டிருந்த சீமோனிடம் ஆழத்தில் வலை வீசச் சொல்கிறார் இயேசு. சீமோன் நினைத்திருந்தால் எங்களை விடவா உமக்கு அறிவும் அனுபவமும் அதிகம் என்று எண்ணிக்கொண்டு இயேசுவின் பேச்சை கேட்காமல் போயிருக்கலாம். ஆனாலும் ஒரு போதகர் சொல்கிறார் முயற்சி செய்து பார்ப்போம் என்ற பணிவுடன் அவர் மீண்டும் ஆழத்தில் வலைவீச ஏராளமான மீன்கள் கிடைத்தது. அப்போது தான் அவர் தன்னுடைய வெறுமையை உணர்ந்தார். தன்னைத் தாழ்த்தினார். தாழ்த்தியதால் இயேசுவின் பெருமையை அறிந்து அவருக்கு சொந்தமானார். 

கற்றது கையளவு. கல்லாதது உலகளவு என்ற சொல்வழக்கு நாம் அறிந்ததே. நாம் அனைவரும் அறிந்தவைகள் கொஞ்சமே. கல்லாதவை கடலளவு இருக்க,  அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு எனக்கெல்லாம் தெரியும் என்ற பெருமையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் நம்மை விட பிறரை தாழ்வாக எண்ணுகிறோம். பிறரிடமிருந்து கற்றுக்கொள்ளும் பணிவு நம்மிடம் இல்லாமலேயே போய்விடுகிறது. இந்த மனநிலையை மாற்றவே இயேசு நம்மை அழைக்கிறார். இக்கட்டான சூழ்நிலையில் அக்கறையுடன் பிறர் கூறும் ஆலோசனைகளை பணிவுடன் ஏற்றால் நமக்கு வெற்றி நிச்சயம்.

இன்றைய முதல் வாசகத்திலும் புனித பவுலின் வார்த்தைகள் மூலம் கடவுள் நமக்கு கூறும் செய்தி நாம் நமது ஞானத்தைக் குறித்து  பெருமை பாராட்டக் கூடாது என்பது தான். ஞானம் கவுளிடமிருந்துதான் வருகிறது. அந்த ஞானத்தால் நாம் அடைகின்ற பெயரும் புகழும் கடவுளுக்கே உரியது என்பதையும் நாம் உணர்ந்து வாழ அழைக்கப்படுகிறோம். எவ்வாறு சீமோன் தன் தாழ்ச்சியினால் இயேசுவைப் பின் தொடர்ந்து அவர் சொந்தமானாரோ அதைப்போல நாமும் நம் வீண் பெருமைகளைக் களைந்து கடவுள் முன் நம்மைத் தாழ்த்தி அவருக்கு உரியவர்களாவோம். அதற்கான வரத்தை அவரிடம் பணிவுடன் வேண்டுவோம்.


 இறைவேண்டல்

எங்களுக்கு அனைத்தையும் அருள்பவரே இறைவா! ஞானமும் அறிவும் உம்மிடமிருந்தே வருகின்றன. ஆனால் அதைப் பெற்றுக்கொண்ட நாங்களோ வீண் பெருமை பாராட்டுவதோடு பிறரையும் குறைவாக மதிப்பிடுகிறோம். இன்று நாங்கள் உம்முன் பணிந்து அறிக்கையிடுகிறோம். தாழ்ச்சியுடன் வாழ்ந்து உமக்கு பெருமை சேர்க்கும் உமது மக்களாக வாழ எமக்கு அருள் தாரும். மேலும் கடினமாக சூழல்களில் அன்புடன் பிறர் கூறும் ஆலோசனைகளின் மூலம் உமக்கு செவி சாய்த்து வாழ்வில் முன்னேறும் வரம் தாரும். ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு

-------------------------------

“அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்”


நிகழ்வு

பதினொன்றாம் நூற்றாண்டில், காவிரிப்பூம்பட்டினத்தில் சோழ மன்னருக்கு இணையாக மிகப்பெரிய செல்வந்தராய் வாழ்ந்து வந்தவர் பட்டினத்தார். கடல் வணிகம் செய்து வந்ததால், பட்டினத்தாரிடம் அவ்வளவு செல்வம் இருந்தது. இதனால் மக்கள் இவரை இவருடைய இயற்பெயரான திருவெண்காடர் என்று அழைப்பதற்குப் பதில், பட்டினத்தார் என்றே அழைத்து வந்தனர்.

இவருக்கு ஒரு மகன் இருந்தான். ஒருநாள் அவனை இவர் கடல் வணிகத்திற்கு அனுப்பி வைத்தார். போனவன் நீண்ட நாள்களாகத் திரும்பி வரவில்லை. ‘தன் மகனுக்கு என்ன வாயிற்று?’ என்று இவர் நினைத்துக்கொண்டிருக்கும்பொழுது, ஒருநாள் அவன் திரும்பி வந்தான். ‘கடல் வணிகத்திற்குச் சென்றவன், நிறையச் சம்பாத்தித்து வந்திருப்பான்’ என்று இவர் எதிர்பார்த்தார். ஆனால், இவர் நினைத்ததற்கு மாறாக, எருவிராட்டியையும் தவிடையும் அவன் கொண்டு வந்திருந்தான்.

இதைக் கண்டு சினமுற்ற பட்டினத்தார் அவனை கடுமையாகத் திட்டித் தீர்த்தார். இதனால் அவன் மிகுந்த வருத்தத்தோடு தன் தாயிடம் சென்றான். பின்னர் அவன் ஓர் ஓலைத் துணுக்கில் ‘காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே!’ என்ற வார்த்தைகளை அவரிடம் கொடுத்துவிட்டு அப்படியே ஓடிப்போய்விட்டான். பட்டினத்தார் இவ்வார்த்தைகளைப் படித்துப் பார்த்தார். ‘காதற்ற ஊசி கடையில் விற்பனைக்கு வராது...! அப்படியானால், நாம் சேர்த்து வைத்திருக்கும் செல்வம் கடைசிவரைக்கும் வராதுதானே! என்ற உண்மையை உணர்ந்தவராய் ஞானம் பெற்றார்.

இதற்குப் பிறகு இவர் தன்னுடைய செல்வம், மனைவி எல்லாவற்றையும் துறந்து, ஒரு துறவியைப் போன்று வாழத் தொடங்கினார்.

மிகப்பெரிய செல்வந்தரான பட்டினத்தார் ஞானமடைந்ததும் எப்படி எல்லாவற்றையும் துறந்து துறவியானாரோ, அப்படி மிகுதியான மீன்பாட்டைக் கண்டதும், பேதுருவும் யாக்கோபும் யோவானும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றார்கள். லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இரவு முழுவதும் பாடுபட்டும் மீன் ஒன்றும் கிடைக்காத நிலை!

நற்செய்தியில் இயேசு கெனசரேத்து ஏரிக்கு வருகின்றனர். அங்குத் திரளான மக்கள் அவருடைய போதனையைக் கேட்க, அவரை நெருக்கிக் கொண்டிருந்ததால், அவர் சீமோன் பேதுருவின் படகில் ஏறி அமர்ந்து, மக்களுக்குப் போதிக்கின்றார். பின்னர் அவர் பேதுருவிடம், “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்கின்றார். அவரோ, “இரவு முழுவதும் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகின்றேன்” என்கின்றார்.

பேதுரும் அவருடன் இருந்தவர்களும் மீன்பிடிப்பதையே தங்களுடைய தொழிலாகக் கொண்டவர்கள் (யோவா 21: 2-3) அப்படிப்பட்டவர்களுக்கே மீன் ஒன்றும் கிடைக்கவில்லை என்பது, மனிதர்களின் இயலாமையை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. அதேநேரத்தில் பேதுரு இயேசுவின் வார்த்தைகளை நம்பி வலைவீசியதும், மிகுதியான மீன் கிடைப்பது, ஆண்டவரால் இயலாதது ஒன்றுமில்லை (லூக் 1: 37) என்ற உண்மையை நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது.

பலநேரங்களில் நாம் நம்முடைய ஆற்றலால் எதையும் செய்துவிடலாம் என்று நினைக்கின்றோம். உண்மையில் நமது ஆற்றலால் மட்டும் எதையும் செய்ய முடியாது. புனித பவுல் சொல்வது போன்று, நமக்கு வலுவூட்டுகின்றவரின் துணைகொண்டு மட்டுமே நம்மால் எதையும் செய்ய முடியும் (பிலி 4: 13)

ஆண்டவரின் வல்லமையை உணர்ந்து, அவரைப் பின்தொடர்ந்தல்

இயேசு தன்னிடம் சொன்னதுபோன்று பேதுரு கடலில் வலையை வீச, மிகுதியான மீன்பாடு கிடைத்ததைப் பார்த்துவிட்டு, அவர் தன்னுடைய தகுதியற்ற நிலையை உணர்ந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னைவிட்டுப் போய்விடும்” என்கின்றார். அப்பொழுதுதான் இயேசு பேதுருவிடம், ‘இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்கின்றார்.

இயேசு பேதுவையும் யாக்கோபையும் யோவானையும் முன்னதாகவே தன்னுடைய பணிக்காக அழைத்திருந்தார் (மத் 4: 19). அவர்களோ தங்களுடைய அழைப்பின் மேன்மையை உணராமல், வழக்கம் போல் மீன்பிடித் தொழிலைச் செய்து வந்தனர். இந்நிலையில் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு, மலைத்துப் போய், அவர்கள் இயேசு சாதாரணமானவர் கிடையாது; ஆண்டவர் என உணர்ந்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்கின்றார்கள்.

ஆம், நம்மை அழைப்பது சாதாரணமாணவர் கிடையாது. இறைமகன். ஆகையால், நாம் அவருடைய அழைப்பின் மேன்மையை உணர்ந்து, அவரைப் பின்தொடர்ந்து செல்வோம்


சிந்தனை

‘என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு, என்னைப் பின்பற்றட்டும்’ (மத் 16: 25) என்பார் இயேசு. எனவே, நாம் தன்னலத்தைத் துறந்து, சிலுவையைத் தூக்கிக்கொண்டு இயேசுவைப் பின்தொடர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

-----------------------

 “இவ்வுலக ஞானம் கடவுள்முன் மடமையாய் உள்ளது”


பெரியவரின் அறியாமை!

ஒருநாள் காலை வேளையில், ஒரு பெரிய ஆற்றங்கரையில் அமர்ந்துகொண்டு, சிறுவன் ஒருவன் தனியாக மீன் பிடித்துக்கொண்டிருந்தான். சிறிதுநேரம் கழித்து, அவன் அருகில் ஒரு பெரியவர் வந்து அமர்ந்தார். அவரும் சிறுவனைப் போன்று ஆற்றில் உற்சாகமாக மீன்பிடிக்கத் தொடங்கினார். 

நேரம் கடந்துபோனது இருவரும் பலவற்றையும் குறித்துப் பேசிக்கொண்டார்கள். மாலை வேளையில், தொலைவில் ஒரு சிறு கப்பல் வருவதைப் பார்த்து, சிறுவன் அதை நோக்கிக் கையசைத்தான். அப்போது பெரியவர் அவனிடம், “தொலைவில் வரும் கப்பலைப் நோக்கிக் கையசைக்கின்றாயே! அது இங்கு வரும் என்று நினைக்கிறாயா?” என்றார்.   “ஆம். அது இங்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கின்றது” என்று சொல்லிக்கொண்டு தொடர்ந்து மீன்பிடிக்கத் தொடங்கினான் அவன். 

“எங்கோ இருக்கும் கப்பல் இங்கு வரும் என்று சொல்கின்றாய். உண்மையில் நீ ஒரு சரியான முட்டாள்” என்று பெரியவர் சிறுவனைக் கரித்துக் கொட்டத் தொடங்கினார். சிறுவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். சிறிது நேரம் கழித்துத் தொலைவில் இருந்த கப்பல் அருகில் வந்தது. அதைப் பெரியவர் வியப்போடு பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கப்பலில் இருந்த ஒருவர் சிறுவனை உள்ளே ஏற்றினார். அவன் கப்பலில் ஏறியபிறகு, பெரியவரைப் பார்த்து, “நான் ஒன்றும் முட்டாள் இல்லை. இந்தக் கப்பல் இங்கு வரும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில், இந்தக் கப்பலின் தளபதி என்னுடைய தந்தை” என்றான். இதைக் கேட்டதும் பெரியவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. 

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற பெரியவரைப் போன்று  ஒருசிலர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என நினைத்துக்கொண்டு, முடிவில் அவமானப்படுவதுண்டு. இன்றைய இறைவார்த்தை, “இவ்வுலக ஞானம் கடவுளுக்கு முன் மடமையாய் உள்ளது” என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம். 


திருவிவிலியப் பின்னணி:

கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்த ஒருசிலர், ‘நான் பவுலைச் சார்ந்துள்ளேன்’, ‘நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்’, ‘நான் கேபாவைச் சார்ந்துள்ளேன்’ என்று சொல்லிக்கொண்டு, அதன் நிமித்தம் பிளவுபட்டு இருந்தார்கள்; தங்களையே ஞானிகளாகக் கருதிக்கொண்டார்கள். அப்போதுதான் பவுல் அவர்களிடம், “இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது” என்கிறார். தன்னுடைய கூற்றை எண்பிக்க அவர் பழைய ஏற்பாட்டிலிருந்து மேற்கோள் காட்டுகின்றார் (யோபு 5:13; திபா 94:11).

இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது என்பதற்குச் சான்றாய் இருப்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகம். மீன்பிடிப்பதில் கைதேர்ந்தவர் பேதுரு. ஆனாலும் அவர் இரவு முழுவதும் பாடுபட்டும் மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. அப்போதுதான் இயேசு அவரிடம், “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்கிறார். இயேசு இவ்வாறு சொன்னபோது, ‘சாதாரண தச்சரின் மகனான இவருக்கு மீன்பிடிப்பதைப் பற்றி என்ன தெரியும்?’ என்று பேதுரு நினைக்கவில்லை. மாறாக, அவர் இயேசு சொன்னது போன்று செய்கின்றார். அதனால் மிகுதியான மீன்கிடைக்கின்றது. 

இங்கு நாம் கருத்தில் கொண்ட செய்தி, மனித ஞானத்தை மட்டுமே நாம் நம்பிக்கைக் கொண்டிருந்தால் அது தோல்வியில்தான் முடியும். எப்போது நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவரது வார்த்தையின்படி நடக்கின்றோமோ அப்போது நமக்கு வெற்றிக்கு மேல் வெற்றி குவியும். 


சிந்தனைக்கு:

மனிதரால் ஒன்றும் முடியாது; ஆண்டவரால் எல்லாம் முடியும். 

எனக்கு ஒன்றும் தெரியாது என்பதை அறிவதே ஞானம் 

ஆண்டவருக்குக் கீழ்ப்படிவோர் ஒருபோதும் ஏமாற்றம் அடைவதில்லை. 


இறைவாக்கு:

‘...ஏனெனில், ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்’ (மத் 11:25) என்பார் இயேசு. எனவே, நாம் கடவுளின் ஞானம் நமக்குக் கிடைக்க, சிறு பிள்ளைகளாய் மாறி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

-----------------------------------------

“ஆண்டவரின் மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்?”


மழுங்கடிக்கப்படும் மனச்சாட்சி:

சேவியரா ஹோலந்தர் (Xeviera Hollander) என்பவர் எழுதிய ஒரு முக்கியமான நூல் ‘The Happy Hooker’. இந்தச் சேவியரா ஹோலந்தர் ஒரு விலைமகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை இந்த நூலில் பதிவு செய்யும் இவர், முதன்முறையாக இத்தொழிலில் ஈடுபட்டபோதுதான் தனக்குக் குற்ற உணர்ச்சியாக இருந்தது என்றும், காலப்போக்கில் அது முற்றிலுமாக மறைந்துவிட்டது என்றும் கூறுகின்றார். தவிர, விபச்சாரத் தொழிலுக்கு யாரும் விரும்பி வருவதில்லை என்ற கருத்திற்கு மாறாக இவர், அத்தொழிலுக்குத் தான் விரும்பி வந்ததாகவும், அதில் மகிழ்ச்சி காண்பதாகும் குறிப்பிடுகின்றார். 

இப்படி எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இல்லாமல் விபசாரத்தில் ஈடுபட்ட இவர், கோயில் மணியோசையைக் கேட்க நேர்ந்தால், அது தன்னுடைய மனச்சாட்சி வெகுவாக உலுக்கும் என்றும் குறிப்பிடுகின்றார். 

சேவியரா ஹோலந்தரின் வாழ்க்கையை நாம் தீர்ப்பிடுவதற்கு இல்லை. ஆனால், பலர் இன்றைக்குத் தங்கள் மனச்சாட்சியை மழுங்கடித்து, பாவத்திற்கு மேல் பாவம் செய்துகொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில், இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், “கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவரே ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர்” என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம். 


திருவிவிலியப் பின்னணி:

தாவீது மன்னரால் உடன்படிக்கைப் பேழை எருசலேம் திருநகருக்குக் கொண்டு வரப்பட்ட பின்னணியில் பாடப்பட்டதுதான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 24. 

இத்திருப்பாடலுக்கும் திருப்பாடல் 15 க்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஏனெனில், இரண்டு திருப்பாடல்களுமே ஆண்டவருடைய இல்லத்திற்கு, அவரது மலைக்கு யாரெல்லாம் செல்ல முடியும் என்ற சிந்தனையைத் தருகின்றன. ஆண்டவர் தூயவர் (லேவி 19:2) அதனால் அவரை அணுகிச் செல்லும் யாவரும், தூயவராய், மாசற்றவராய் வாழ்வது  மிகவும் முக்கியமானது.

கறைபடாத கைகளை உடையவரும் மாசற்ற மனம் கொண்டவரும், பொய்த் தெய்வங்களை வழிபடாதவரும், வஞ்சக நெஞ்சத்தோடு ஆணையிட்டுக் கூறாதவரும் மட்டுமே ஆண்டவரின் மலையில் ஏறத் தகுதியுடையவர் என்று கூறும் இத்திருப்பாடல், நாம் அத்தகையதோராய் வாழ அழைக்கின்றது. 


சிந்தனைக்கு:

தன்னுடைய உள்ளத்தில் ஆண்டவர் குடிகொண்டிருக்கின்றார் என்பதை உணரும் ஒருவர் அவருக்கு எதிராகச் செயல்படமாட்டார். 

குற்றத்தை உணராமையே மிகப்பெரிய குற்றம். 

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போருக்கு மிகுந்த ஆசி உண்டு. 


இறைவாக்கு:

‘இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது’ (திவெ 21:3) என்கிறது திருவெளிப்பாடு நூல். எனவே, கடவுளின் உறைவிடம் நம் நடுவில் இருக்க, நாம் கடவுளைப் போன்று தூயோராய் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம். 

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Join with us 👇

Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A

Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076

Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...