Thursday, September 15, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (16-09-2022)

 

பொதுக்காலம் 24ஆம் வாரம் - வெள்ளி

முதல் வாசகம்



கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 12-20

சகோதரர் சகோதரிகளே,

இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருக்க, உங்களுள் சிலர் இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை எனச் சொல்வது ஏன்? இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார் எனில், கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப் படவில்லை என்றால், நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும். நாங்களும் கடவுளின் சார்பில் பொய்ச் சான்று பகர்வோர் ஆவோம். ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால் கடவுள் உயிர்த்தெழச் செய்யாத கிறிஸ்துவை, கடவுள்தான் உயிர்த்தெழச் செய்தார் என்று சான்று பகரும்போது கடவுளுக்கு எதிராகச் சான்று கூறியவர்கள் ஆவோம் அல்லவா? ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப் படுவதில்லை என்றால் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள். அப்படியானால், கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு இறந்தவர்களும் அழிவுக்குள்ளாவார்கள். கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும் விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம்.

ஆனால் இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 17: 1. 6-7. 8,15 (பல்லவி: 15b)

பல்லவி: விழித்தெழும்போது, உம் உருவம் கண்டு நிறைவு பெறுவேன் ஆண்டவரே.

1
ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். - பல்லவி

6
இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்.
7
உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே! - பல்லவி

8
உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.
15
நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.

 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-3

அக்காலத்தில்

இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்து வந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------


இயோசுவின் பெண் சீடர்கள் 

மறைப்பனிக்கு சிறு உதவி:


கடவுள்மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட கிறிஸ்டோபர் ஒருநாள் மாலை வேளையில், குடும்பத்தோடு கடவுளிடம் வேண்டும்போது, உலங்கெங்கும் மறைப்பணி செய்துகொண்டிருக்கின்ற மறைப்பணியாளர்களின் தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் என உருக்கமாக வேண்டினார்.


அவர் கடவுளிடம் வேண்டி முடித்துவிட்டு, சாப்பிடச் செல்லும்போது, அவரது மகன் அன்பு அவரிடம் வந்தான். “அப்பா! எனக்குக் கொஞ்சம் பணம் தரமுடியுமா?” என்று கேட்டான் அவன். “எதற்காக?” என்று கிறிஸ்டோபர் ஆர்வமாய்க் கேட்டபோது, அவரது மகன் அன்பு, “அப்பா! நீங்கள் சிறிதுநேரத்திற்கு, உலகெங்கும் மறைப்பணியாற்றிக் கொண்டிருக்கும் மறைப்பணியாளர்களின் தேவைகள் சந்திக்கப்படும் என்று வேண்டினீர்கள் அல்லவா! அதற்கு என்னால் இயன்ற உதவியைச் செய்யத்தான்!” என்றான். இதைக் கேட்டுக் கிறிஸ்டோபர் நெகிழ்ந்து போனார்.


மறைப்பணிக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்ற சிறுவன் அன்புவின் ஆர்வம் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசுவின் பெண் சீடர்கள் தங்களுடைய உடைமையைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்தார்கள் என்று வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.


திருவிவிலியப் பின்னணி:


பொதுவாக யூத இரபிகளுக்குப் பெண் சீடர்கள் கிடையாது; ஆனால், இயேசுவுக்குப் பெண் சீடர்கள் இருந்தார்கள் இவர்களெல்லாம் ஏதோவொரு வகையில் இயேசுவிடமிருந்து பயன்பெற்றிருந்தார்கள், அல்லது நலமடைந்திருந்தார்கள். அதற்கு நன்றியாக அவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.


இயேசுவுக்குப் பெண் சீடர்கள் இருந்ததும், அவர்கள் அவருக்குத் தங்கள் உடைமைகளைக் கொண்டு பணிவிடை புரிந்ததும் நமக்கு மூன்று முதன்மையான உண்மைகளை உணர்ந்துகின்றன. முதலாவதாக, இறையாட்சிப் பணியில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது; அங்கே எல்லாருக்கும் இடமுண்டு. இரண்டாவதாக, இயேசுவிடமிருந்து ஒருவர் பலனடைந்திருந்தால், அதற்கு அவர் இயேசுவின் பெண் சீடர்களைப் போன்று நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும்.


மூன்றாவதாக, இறையாட்சிப் பணி என்பது ஒரு கூட்டு முயற்சி. அதற்கு எல்லாருடைய ஒத்துழைப்பும் தேவை. சிலர் பணம் தரலாம்; அதைத் தர இயலாதவர்கள் தங்கள் உடல் உழைப்பைத் தரலாம். அதைவிடவும், அவர்கள் இறைப்பணிக்காகத் தங்களையே தரலாம். முதல் வாசகத்தில் பவுல் உயிர்த்த ஆண்டவரைப் பற்றி நற்செய்தி அறிவித்தது பற்றிக் கூறுகின்றார். அவரைப் போன்று நாம் ஒவ்வொருவரும் உயிர்த்த ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கவேண்டும். அவ்வாறு நற்செய்தி அறிவிக்க முடியாதவர்கள், நற்செய்தி அறிவிக்கின்றவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அது மிகவும் முக்கியம்.


சிந்தனைக்கு:

 ஊர் ஊராகச் சென்று நற்செய்தி அறிவிக்க முடியாவிட்டால், இருக்கும் இடத்தில் நற்செய்தியாக வாழலாம்.

 கடவுளின் வார்த்தையை அவரை அறியாதவர்களுக்கு அறிவிப்பது திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவருடைய கடமை.

 ஆண்டவருக்குக் கொடுப்போருக்கு, ஆண்டவர் மிகுதியாகக் கொடுப்பார்.


இறைவாக்கு:


‘முக மலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்’ (2 கொரி 9:7) என்பார் புனித பவுல். எனவே, நாம் கடவுளின் பணிக்கென முக மலர்ச்சியோடு கொடுத்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.





 நற்செயல்களுக்குத் துணை செய்வோமா?


கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் சிலர் வகுப்புகள் முடிவடைந்ததும் கும்பலாக அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள்.அடிக்கடி இவர்களை ஒன்றாகக் காணலாம். எனவே நாளடைவில் இவர்களின் இந்த ஒன்றிப்பு அருகில் வசிப்பவர்களுக்கு எரிச்சலூட்டியது. ஒருமுறை இந்த மாணவர்கள் எல்லாருமாக சேர்ந்து குடிசைகளில் வாழும் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிக் கொண்டிருந்தனர். குழந்தைகளை உற்சாகமூட்டி மகிழ்ந்து கொண்டிருந்த கல்லூரிமாணவர்களைப் பார்த்த பலர் ,இவர்கள் ஒன்றாக இருப்பது பொழுது போக்கிற்காக அல்ல நல்ல பணிகள் செய்வதற்காக என்பதை உணர்ந்து, தங்களின் எண்ணத்தை மாற்றிக்கொண்டனர். அக்கல்லூரி மாணவர்களைப் பாராட்டினர். 


அன்புக்குரியவர்களே குழுவாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். வெறும் பொழுது போக்கிற்காக சிலர் கூடுவர். வேலையின் நிமித்தம் குழுவாகச் சேர்வர். நல்ல செயல்திட்டங்கள் தீட்ட சிலர் குழுவாக அமர்வர். பிறரின் வாழ்வைக் கெடுக்கவும் பலர் ஒன்று கூடுவர். இப்படி பல காரணங்கள் உண்டு.


இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இப்படி ஒரு குழு கொடுக்கப்ட்டுள்ளது. இயேசு ஊரெங்கும் சென்று இறையரசைப் பற்றிய போதனைகளைப் பரப்பி வந்தார். வல்ல செயல்கள் செய்தார். நோய்நொடிகளைக் குணமாக்கினார்.


இவற்றையெல்லாம் செய்ய அவர் தனியாகச் செல்லவில்லை. அவரோடு பன்னிரு தூததர்களும் ஒருசில பெண்களும் சென்றதாக நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.எல்லாம் வல்ல இறைவனின் மகன் இயேசு எதற்காக இவ்வாறு பலரை தன்னுடன் அழைத்துச் சென்றார் என்ற கேள்வி எழலாம். தன்னுடைய சீடர்களை தன்னுடைய பணியைத் தொடர தயாரிக்கவும் , யூத சமுதாயத்தில் இரண்டாம் தர மக்களாகக் கருதப்பட்ட பெண்களை நற்செயல் புரிய துணை செய்பவர்களாகவும் பிறருக்குக் காட்டவே அவர் அனைவரையும் அழைத்துக்கொண்டு குழுவாகச் செல்கிறார். இயேசுவோடு நற்காரியத்திற்காகச் சென்ற தூதர்களும் பெண்களும் இயேசுவைப்போல அருஞ்செயல்கள் புரிபவர்களாகும் இறையரசின் வித்துக்களாகவும் உருவெடுக்கத் தொடங்கினர்.


நாமும் பல்வேறு வகைகளில் நமது நண்பர்கள் ,உறவினர்களுடன் ஒன்று கூடுகிறோம். அவ்வேளைகளில் நாம் இணைந்து நல்ல காரியங்கள் புரிவதைப்பற்றி சிந்திக்கிறோமா? அல்லது யாராவது பிறரன்புப் பணிகள் செய்யச் செல்லும் போது அவர்களுக்குத் துணை புரிகிறோமா? என சிந்திப்போம். பிறரன்புப் பணிகளைச் செய்ய ஒருவருக்கு ஒருவர் துணைநின்று இறையரசை உருவாக்குபவர்களாக மாற இறையருள் வேண்டுவோம்.


 இறைவேண்டல்

அன்பு இயேசுவே 

இறையாட்சிப் பணியில் உமக்குத் துணைசெய்த திருத்தூததர்களையும் பெண்களையும் போல நாங்களும் ஒருருக்கொருவர் துணைநின்று இறையரசைக் கட்டி எழுப்ப வரம் தாரும். ஆமென்.


அருட்பணி.குழந்தைஇயேசு பாபு


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️



Join with us 👇


Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A

Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076

Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283

WhatsApp: https://chat.whatsapp.com/G5K3erwXGiJ4VWuBVUvCnz

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...