Thursday, September 22, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (23-09-2022)

 

பொதுக்காலம் 25ஆம் வாரம் - வெள்ளி



முதல் வாசகம்

உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு.

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 3: 1-11

ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு: பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்; நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்; கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்துதலுக்கு ஒரு காலம்; இடித்தலுக்கு ஒரு காலம், கட்டுதலுக்கு ஒரு காலம்; அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம்; துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்; கற்களை எறிய ஒரு காலம், கற்களைச் சேர்க்க ஒரு காலம்; அரவணைக்க ஒரு காலம், அரவணையாதிருக்க ஒரு காலம்; தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம், இழப்பதற்கு ஒரு காலம்; காக்க ஒரு காலம். தூக்கியெறிய ஒரு காலம்; கிழிப்பதற்கு ஒரு காலம், தைப்பதற்கு ஒரு காலம்; பேசுவதற்கு ஒரு காலம், பேசாதிருப்பதற்கு ஒரு காலம்; அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம்; போருக்கு ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம்.

வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன? மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலைச் சுமையைக் கண்டேன்.

கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 144: 1a,2a-c. 3-4 (பல்லவி: 1a)

பல்லவி: என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!

1a
என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!
2a-c
என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! - பல்லவி

3
ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க அவர்கள் யார்? மானிடரை நீர் கருத்தில் கொள்ள அவர்கள் யார்?
4
மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்; அவர்களின் வாழ்நாள்கள் மறையும் நிழலுக்கு நிகரானவை. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



நீர் கடவுளின் மெசியா. மானிட மகன் பலவாறு துன்பப்பட வேண்டும்.

 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-22

அக்காலத்தில்

இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம் “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று அவர் கேட்டார்.

அவர்கள் மறு மொழியாக, “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள்.

“ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, “நீர் கடவுளின் மெசியா” என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

மேலும் இயேசு, “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” என்று சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


“என் கற்பாறையும் கோட்டையும் அவரே!”

அடைக்கலப் பாறை:


விவசாயி ஒருவர் தனது விளைநிலத்திற்கு நடுவில் குடிசை அமைத்து, அங்கு தனது மனைவி மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். வழக்கத்திற்கு மாறாக, அந்த ஆண்டு, அவருடைய நிலம் நன்றாக விளைந்திருந்தது. அதனால் அவர் அறுவடைக்காக ஆவலோடு காத்திருந்தார்.

அறுவடைக்கு முந்தைய நாள் இரவில், புயலும் மழையும் வந்து அவருடைய விளைநிலத்தைப் பாழாக்கிவிட்டுப் போயின. மறுநாள் காலையில், அவர் தன்னுடைய மகனுடன் விளைநிலத்தைப் பார்த்தார். மகனுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. அதே நேரத்தில் அவன் தன் தந்தை பாழாய்க் கிடக்கும் விளைநிலத்தைப் பார்த்து என்ன சொல்லப் போகிறாரோ? என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவர், “அடைக்கலப் பாறையான ஆண்டவரே! இந்தப் புயல் மழையிலும் எனக்கும் என் மனைவி, மகனுக்கும் எதுவும் ஆகாமல் காத்துக்கொண்டீரே! அதற்கு உமக்கு நன்றி! தொடர்ந்து எம்மை அடைக்கலப் பாறையாக இருந்து காத்துக்கொள்ளும்” என்றார். இவ்வார்த்தைகள் மகனுடைய உள்ளத்தில் இருந்த வருத்தத்தைப் போக்கி, நம்பிக்கையை ஊட்டின.

ஆம், புயல் மழையால் தன் விளைநிலமே பாழாய்ப்போயிருந்தாலும், தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் ஆண்டவர் அடைக்கலப் பாறையாக இருந்து காத்ததற்காக அந்த விவசாயி ஆண்டவருக்கு நன்றி சொன்னார். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப் பாடலில் தாவீது, ஆண்டவர் அடைக்கலப் பாறையாக இருந்து தன்னைக் காத்ததற்காக அவரைப் போற்றிப் புகழ்கின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

எதிரிகளிடமிருந்து ஆண்டவர் தன்னை காத்ததற்கு நன்றியாகத் தாவீது பாடுகின்ற நன்றிப்பாடல்தான் இன்று நான் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 144. இத்திருப்பாடலில் வருகின்ற முதல் எட்டு இறைவார்த்தையும், திருப்பாடல் 18, 1 முதல் 15 வரையுள்ள இறைவார்த்தையும் நிறையவே ஒத்துப் போகின்றன

இஸ்ரயேலின் அரசராக இருந்த தாவீதுக்கு முதலில் சவுலிடமிருந்தும், பின்னர் எதிரிகளிடமிருந்தும், அதன்பின்னர் அவருடைய சொந்த மகன் அப்சலோமிருந்தும் ஆபத்துகள் வந்த வண்ணமாய் இருந்தன. அத்தகைய வேளையில், தாவீது ஆண்டவரே தன்னுடைய அடைக்கலப் பாறை (திபா 19:14, 31:3, 42:9, 62:3, 71:3, 89:26, 92:15, 95:1) என்று ஆண்டவரிடம் தஞ்சம் அடைந்தார். ஆண்டவரும் அவரை எதிரிகளிடமிருந்தும் எல்லா வகையான ஆபத்துகளிலிருந்தும் காத்தார். அதனால்தான் தாவீது, “என் கற்பாறையும் கோட்டையும் அவரே!” என்கிறார்.

தாவீதை ஆண்டவர் எதிரிகளிடமிருந்து காத்தது போல, நம்மையும் அவர் பலவிதமான ஆபத்துகளிலிருந்து காத்திருப்பார். அதற்கு நன்றியாக நாம் அவரைப் போற்றுவோம்.

சிந்தனைக்கு:

 நம்முடைய உயிருக்கு அடைக்கலமாக இருக்கும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்வோம்.

 .கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆசிகளுக்கு அவருக்கு நன்றி செலுத்துவதே முறை

 ஆண்டவர்மீது நம்பிக்கை வைப்போருக்கு அவர் வலுவூட்டுகின்றார்.

இறைவாக்கு:

‘கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?’ (உரோ 8:31) என்பார் புனித பவுல். எனவே, கடவுள் நம் சார்பாக இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு, அவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


கொலை செய்யப்படவும் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்

மலிவு விலையில் சிலுவை:


அது ஒரு பெரிய திருத்தலம். அந்தத் திருத்தலத்திற்கு முன்பாக மெழுகுதிரிகள், புனிதர்கள் மற்றும் இயேசுவின் திருவுரும் தாங்கிய படங்கள், சிலுவைகள், மந்திரிக்கப்பட்ட கயிறுகள், முதலியவற்றை வைத்துச் சிலர் விற்றுக் கொண்டிருந்தார்கள். அது புனித வாரம் என்பதால் மக்களும் அவற்றை ஆர்வமாய் வாங்கிச் சென்றார்கள்.

இவற்றுக்கு நடுவில் ஒரு வியாபாரி தன்னுடைய வியாபாரம் அமோகமாக நடைபெற வேண்டும் என்பதற்கு, “இங்கு மலிவு விலையில் சிலுவை கிடைக்கும்” என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார். இதைத் தற்செயலாக அப்பக்கமாய் வந்த கடவுள்மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட பெரியவர் ஒருவர் கேட்டு, அதிர்ந்து போய்க் குறிப்பிட்ட அந்த வியாபாரியிடம், “சிலுவை விலை மலிவானது அல்ல; அது விலை மதிப்பில்லாதது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

ஆம், ஆண்டவர் இயேசு சிலுவையில் கொலையுண்டதால் அது மலிவானது அல்ல; விலை மதிப்பானது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியில் இயேசு, தான் சிலுவையில் அறையுண்டு கொல்லப்படவும், மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவேண்டும் என்கிறார். அவர் சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததால் அவமானத்தின் சின்னமாகக் கருதப்பட்ட சிலுவை வெற்றியின் சின்னமாக, விலைமதிக்கப் பெறாததாக ஆனது. இயேசு ஏன் சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட வேண்டும் என்பது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இறைவாக்கினர் எசாயா நூலில், கடவுளின் எண்ணங்கள் மனித எண்ணங்கள் அல்ல, மனிதரின் வழிமுறைகள் கடவுளின் வழிமுறைகள் அல்ல (எசா 55:8) என்று நாம் வாசிப்போம். இதையே சபை உரையாளர் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், அதன் ஆசிரியர் “கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது” என்பார். இது முற்றிலும் உண்மை இதைத் தெளிவுபடுத்துகின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.

இன்றைய நற்செய்தியில் இயேசு, மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள் என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, அதன்பிறகு நீங்கள் நான் யாரெனச் சொல்கிறீர்கள் என்ற கேள்வியைச் சீடரிடம் கேட்க, பேதுரு, “நீர் கடவுளின் மெசியா” என்கிறார். உடனே இயேசு, “இதை யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்று சொல்லிவிட்டுத் தனது பாடுகளையும் உயிர்ப்பையும் முன்னறிவிக்கின்றார்.

இயேசு ஏன் பாடுகள் பட வேண்டும் என்பது சீடர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்திருக்கும். அவர்களின் எண்ணமெல்லாம் மெசியாவாம் இயேசு உரோமையர்களிடமிருந்து தங்களுக்கு விடுதலை அளித்து, எருசலேமைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்வார் என்பதாகவே இருந்தது. ஆனால், இயேசு யூதர்கள் எதிர்பார்த்தது போல, அரசியல் மெசியா அல்ல, மாறாக, அவர் துன்புறும் ஊழியன். கோதுமை மணி போல் மண்ணில் விழுந்து மடிந்தால்தான், அல்லது அவர் சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டால்தான் தந்தையின் திருவுளமான உலகை மீட்க முடியும். எனவேதான் சிலுவைச் சாவுக்குத் தன்னையே கையளிக்கின்றார் இயேசு.

கடவுளின் திருவுளம் சில சமயங்களில் நமக்குப் புரியாத புதிராக இருக்கலாம். ஆனால், நாம் இயேசுவைப் போன்று கடவுளின் திருவுளத்திற்கு நம்மைக் கையளித்தால், அவரது ஆசியைப் பெறலாம். இதை நாம் நம்முடைய வாழ்க்கையில் உணர்வு செயல்படுவோம்.

சிந்தனைக்கு:

 கடவுளின் திருவுளம் நம் வழியாகச் சிறப்புறச் செய்வோம்.

 நம்முடைய விருப்பத்தின்படி நடப்பதற்கு நாம் எதையும் இழக்கத் தேவையில்லை. ஆண்டவர் விருப்பத்தின்படி நடக்கின்றபோதுதான் நாம் நிறைய இழக்க வேண்டியிருக்கும். ஆனாலும் அது இழப்பே அல்ல.

 சிலுவைகள் இன்றி சிம்மாசனம் இல்லை.

இறைவாக்கு:

‘இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை’ (உரோ 8: 18) என்பார் புனித பவுல். எனவே, நாம் இயேசுவைப் போன்று, நமது வாழ்வில் துன்பம் வாந்தாலும், கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...