Friday, September 23, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (24-09-2022)

 பொதுக்காலம் 25ஆம் வாரம் - சனி

முதல் வாசகம்



கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 11: 9- 12: 8


இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடன் இருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்; கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள். மனக் கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள்; குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியவையே. ஆகையால், உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே.

“வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே” என்று நீ சொல்லக் கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்ளத்திலே நினை. அதாவது, கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும், வீட்டுக் காவலர் நடுக்கங்கொள்ள, வலியோர் தளர்வுறுமுன்னும், அரைப்போர் மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர் ஒளி இழந்து போகுமுன்னும், தெருச் சந்தடி கேளாவண்ணம் கதவுகள் அடைத்துக் கொள்ள, சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர் அனைவரும் ஓய்ந்து போகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

மேட்டைக் கண்டு அச்சங்கொண்டு தெருவில் நடப்பதை நினைத்துத் திகில் கொள்ளுமுன்னும், வாதுமை மரம் பூப்பூக்குமுன்னும், வெட்டுக்கிளியைப் போல நடை தட்டுத்தடுமாற, ஆசையெல்லாம் அற்றுப்போகுமுன்னும், உற்றார் வீதியில் அழுது புலம்ப நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை; வெள்ளிக் கயிறு அறுந்து, பொன் விளக்கு கீழே விழுந்து உடைவதற்கு முன்னும், குளத்தருகில் குடம் உடைந்து நொறுங்க, கிணற்றருகில் உருளை உடைந்து விழுமுன்னும், மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பு முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்புமுன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

வீண், முற்றிலும் வீண் என்கிறார் சபைஉரையாளர்; எல்லாமே வீண்.


ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்



திபா 90: 3-4. 5-6. 12-13. 14,17 (பல்லவி: 1)

பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

3

மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; ‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.

4

ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. - பல்லவி

5

வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;

6

அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். - பல்லவி

12

எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.

13

ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். - பல்லவி

14

காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.

17

எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


2 திமொ 1: 10

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 43b-45


அக்காலத்தில்

இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம், “நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்” என்றார்.

அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.


ஆண்டவரின் அருள்வாக்கு.


திருப்பாடல் 90: 3-4, 5-6, 12-13, 14, 17 (1)

“நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்”

வெற்றிக்கு என்ன செய்வது?


தன் முன்னேற்றப் பேச்சாளர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், “நான் எந்தவொரு செயலைச் செய்தாலும், அதில் எனக்குத் தோல்வியே மிஞ்சுகின்றது. நான் செய்யும் செயலில் எனக்கு வெற்றி கிடைக்க நான் என்ன செய்வது?” என்று எழுதப்பட்டிருந்தது.

தன் முன்னேற்றப் பேச்சாளர் தனக்கு வந்த அந்தக் கடிதத்திலிருந்த அஞ்சல் தலையை கிழித்தெடுத்து, அதை ஓர் உறைக்குள் போட்டு, கூடவே இப்படியொரு குறிப்பினையும் எழுதி அனுப்பி வைத்தார்: “இந்த அஞ்சல்தலை அதன் இலக்கினை அடையும்வரை உறையை அப்படியே பற்றிக் கொண்டிருக்கின்றது. நீயும் உன் இலக்கினை அடையும் வரை அஞ்சலைத் தலையைப் போன்று உன் இலக்கினை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால், உனக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.”

வெற்றியை அடைவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வில் வரும் தன் முன்னேற்றப் பேச்சாளர் தரும் விளக்கம் மிகவும் அற்புதமானது. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் மோசே, “நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.


திருவிவிலியப் பின்னணி:

மனிதர்களாகிய நாம் எவ்வளவோ செயல்களைச் செய்கின்றோம். அவை எல்லாவற்றிலும் நமக்கு வெற்றி கிடைத்துவிடுகின்றதா? என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நம்மால் எல்லாவற்றிலும் வெற்றி பெற முடியாததற்குக் காரணம், இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 90 இல் மோசே சொல்வதுபோல், நாம் அனைவரும் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பானவர்கள். இப்படிச் சாதாரண மனிதர்களாக, வறியவர்களாக இருப்பதாலேயே நம்மால் எல்லாவற்றிலும் வெற்றி பெற முடிவதில்லை.

அதே நேரத்தில் நாம் ஆண்டவரைப் பற்றிக்கொண்டு வாழ்ந்தோமெனில், நம்மால் எதிலும் வெற்றி பெற முடியும். அதனால்தான் மோசே, இத்திருப்பாடலின் இறுதியில், “நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்” என்று மன்றாடுகின்றார். மோசே, ஆண்டவரைப் பற்றிக்கொண்டால் மட்டுமே எதிரிகளிடமிருந்து வெற்றியைப் பெற முடியும் என்று உறுதியாக நம்பியிருந்தார். நாமும் ஆண்டவரை உறுதியாகப் பற்றிக் கொண்டால், நமக்கு எதிலும் வெற்றியே!


சிந்தனைக்கு:

 ஆண்டவரால் எல்லாம் கூடும். அதனால் நாம் அவற்றைப் பற்றிக் கொண்டு வாழ்வோம்.

 நமது வலுவின்மையை உணர்ந்து, ஆண்டவரின் வல்லமையில் நம்பிக்கை கொண்டு வாழ்வோம்.

 ஆண்டவரே நம் ஆற்றல் என்பதால் ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவோம்.


இறைவாக்கு:

‘எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு’ (பிலி 4:13) என்பார் புனித பவுல். எனவே, நாம் நமது வலிமையையும் ஆற்றலுமான ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.



“உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே”

இளமையில் கல்:


ஒருநாள் பங்குப் பணியாளரைப் பார்க்க ஒருவர் தன் மகனுடன் வந்தார். அவர் பங்குப் பணியாளரிடம், “என் மகன் இவனுக்கு இப்போது ஆறு வயது ஆகின்றது. இந்த வயதில் இவனுக்கு மறைக்கல்வி கற்றுக் கொடுக்கவேண்டிய அவசியம் என்ன? இவன் வளர்ந்து பெரியவனாகி, அவனே மறைக்கல்வி கற்றுக் கொள்ளட்டுமே!” என்றார்.

பங்குப் பணியாளர் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் அந்த மனிதரிடம், “இல்லத்திற்கு பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு என்னோடு உங்களால் வர முடியுமா?” என்றார். “வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டு, முன்னால் சென்ற பங்குப் பணியாளரைப் பின் தொடர்ந்தார் அவர்.

இல்லத்திற்குப் பின்னால் ஒரு சிறிய தோட்டம் இருந்தது. அதில் வெறும் களைகள் மட்டுமே மண்டிக் கிடந்தன. அதைப் பார்த்துவிட்டு வந்திருந்த மனிதர், “வெறும் களைகள் மட்டுமே இங்கு உள்ளன. இது எப்படித் தோட்டமாகும்?” என்றார். “நீங்கள் சொல்வது மிகச் சரி” என்று அவரிடம் பேசத் தொடங்கிய பங்குப் பணியாளர், “அதுவாகவே வளரட்டும் என்று தோட்டத்தை அப்படியே விட்டுவிட்டேன். அதனால்தான் வெறும் களைகள் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன. இப்போது நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகிறேன். சிறு வயதில் எதற்கு மறைக்கல்வி என்று கேட்டீர்களே! சிறுவயதிலேயே மறைக்கல்வியைக் கற்றுத் தராவிட்டால், உங்களுடைய மகனுடைய உள்ளத்தில் களைகள் மட்டுமே எஞ்சியிருக்கும்” என்றார். வந்தவர் எதுவும் பேசாமல் திரும்பிப் போய்விட்டார்.

ஆம், சிறுவயதிலேயே ஆண்டவரைப் பற்றி அறிந்து கொள்வதும், அவரை உள்ளத்தில் நினைப்பதும் மிகவும் இன்றியமையாதவை. அதை இந்த நிகழ்வும் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.


திருவிவிலியப் பின்னணி:

இன்று ஒருசிலர் நான் உழைக்கிறேன், சம்பாதிக்கிறேன், மகிழ்ச்சியாக இருக்கின்றேன். இதில் எதற்குக் கடவுளை நினைக்கவேண்டும், அவரை வழிபட வேண்டும்? என்றெல்லாம் பேசிக்கொண்டு திரிகிறார்கள். கடவுளை எதற்கு நாம் நினைக்கவேண்டும், அவரை எதற்கு நாம் வழிபட வேண்டும் என்றால், அவரே நம்மைப் படைத்தவர். அதைவிடவும் நாம் அவருக்கு உரியவர்கள்.

சபை உரையாளர் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், “உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே” என்கிறது. தொடர்ந்து, “உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை” என்று மும்முறை சொல்கிறது. எனில், நம்மைப் படைத்தவரை மறவாமல், அவரை உள்ளத்தில் நினைப்பது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது.

இன்றைய நற்செய்தி வாசகம், கடவுளை நம் உள்ளத்தில் நினைத்துப் பார்ப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணத்தைச் சொல்கிறது. அது என்னவெனில், இயேசு கிறிஸ்து நமக்காகப் பாடுகள் பட்டார், நமக்கு மீட்பினைக் கொண்டு வந்தார். என்பதாகும். இத்தகு காரணங்களால் நாம் கடவுளை மறந்துவிடாமல், அவரை நமது உள்ளத்தில் நினைத்துப் பார்த்து, அவரது வழியில் நடக்கவேண்டும்.


சிந்தனைக்கு:

 கடவுளை மறப்பதும் இறப்பதும் ஒன்றே

 இளமையில் கல்லாமல், முதுமையில் கற்றுக்கொள்வது என்பது காற்றைக் கையில் பிடிப்பது போன்று அவ்வளவு கடினமானது.

 நமது உயிருக்கு அடைக்கலமான ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்.


இறைவாக்கு:

‘உம் நியமங்களை நான் எந்நாளும் மறவேன்; ஏனெனில், அவற்றைக் கொண்டு என்னைப் பிழைக்க வைத்தீர்’ (திபா 119: 93) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நமக்கு வாழ்வளிக்கும் ஆண்டவரின் கட்டளைகளை நமது மனத்தில் நிறுத்தி, அதன்படி வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...