Tuesday, September 27, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-09-2022)

  பொதுக்காலம் 26ஆம் வாரம் - புதன்

முதல் வாசகம்



இறைவன் முன் மனிதர் நேர்மையாய் இருப்பதெப்படி?

யோபு நூலிலிருந்து வாசகம் 9: 1-12, 14-16

யோபு தன் நண்பர்களுக்குக் கூறிய மறுமொழி:

உண்மையில் இது இவ்வாறு என்று அறிவேன்; ஆனால், மனிதர் இறைவன் முன் நேர்மையாய் இருப்பதெப்படி? ஒருவர் அவருடன் வழக்காட விரும்பினால், ஆயிரத்தில் ஒன்றுக்கேனும் அம்மனிதரால் பதிலளிக்க முடியுமா? இறைவன் உள்ளத்தில் ஞானமுள்ளவர்; ஆற்றலில் வல்லவர்; அவர்க்கு எதிராய்த் தம்மைக் கடினப்படுத்தி, வளமுடன் வாழ்ந்தவர் யார்? அவர் மலைகளை அகற்றுவார்; அவை அதை அறியா; அவர் சீற்றத்தில் அவைகளைத் தலைகீழாக்குவார். அசைப்பார் அவர் நிலத்தை அதனிடத்தினின்று; அதிரும் அதனுடைய தூண்கள். அவர் கட்டளையிடுவார்; கதிரவன் தோன்றான்; அவர் மறைத்திடுவார் விண்மீன்களை. தாமே தனியாய் வானை விரித்தவர். ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர். வடமீன் குழுவையும், மிருகசீரிடத்தையும், கார்த்திகை விண்மீன்களையும், தென்திசை விண்மீன் குழுக்களையும் அமைத்தவர் அவரே. உணர்ந்திட இயலாப் பெருஞ்செயல்களையும், கணக்கிட முடியா அருஞ்செயல்களையும் ஆற்றுநர் அவரே.

இதோ! என் அருகே அவர் கடந்து செல்கையில் நான் பார்க்க முடியவில்லை. நழுவிச் செல்கையில் நான் உணர முடியவில்லை. இதோ! அவர் பறிப்பாரானால், அவரை மறிப்பார் யார்? யாது செய்கின்றீர் என அவரைக் கேட்பார் யார்? இப்படியிருக்க, எப்படி அவருக்குப் பதிலுரைப்பேன்? எதிர்நின்று அவரோடு எச்சொல் தொடுப்பேன்? நான் நேர்மையாக இருந்தாலும், அவருக்குப் பதிலுரைக்க இயலேன்.

என் நீதிபதியிடம் நான் இரக்கத்தையே கெஞ்சுவேன்; நான் கூப்பிட அவர் பதிலுரைப்பினும், என் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார் என்று நம்புவதற்கில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்


திபா 88: 9bc-10. 11-12. 13-14 (பல்லவி: 2a)
பல்லவி: ஆண்டவரே, என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக!

9bc
ஆண்டவரே! நாள்தோறும் உம்மை மன்றாடுகின்றேன்; உம்மை நோக்கி என் கைகளைக் கூப்புகின்றேன்.
10
இறந்தோர்க்காகவா நீர் வியத்தகு செயல்கள் செய்வீர்? கீழுலகின் ஆவிகள் எழுந்து உம்மைப் புகழுமோ? - பல்லவி
11
கல்லறையில் உமது பேரன்பு எடுத்துரைக்கப்படுமா? அழிவின் தலத்தில் உமது உண்மை அறிவிக்கப்படுமா?
12
இருட்டினில் உம் அருஞ்செயல்கள் அறியப்படுமா? மறதி உலகில் உம் நீதிநெறி உணரப்படுமா? - பல்லவி
13
ஆண்டவரே! நானோ உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; காலையில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்.
14
ஆண்டவரே! என்னை ஏன் தள்ளிவிடுகின்றீர்? உமது முகத்தை என்னிடமிருந்து ஏன் மறைக்கின்றீர்? - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

பிலி 3: 8-9 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62

அக்காலத்தில்

இயேசு சீடர்களோடு வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார்.

இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.

இயேசு மற்றொருவரை நோக்கி, “என்னைப் பின்பற்றி வாரும்” என்றார். அவர், “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்றார்.

வேறொருவரும், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றார். இயேசு அவரை நோக்கி, “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

திருப்பாடல் 88: 9bc-10, 11-12, 13-14 (2a)

“ஆண்டவரே! நாள்தோறும் உம்மை மன்றாடுகின்றேன்”

வேண்டுதல் கேட்கப்பட ஒரு நிபந்தனை:

மக்கள்மீது மிகுந்த அன்புகொண்ட அரசர் ஒருவர் இருந்தார். அவர் தன்னுடைய நாட்டில் இருந்த ஏழை எளியவர்களுக்கென ஓர் அடுக்குமாடிக் கட்டடத்தைக் கட்டித் தந்தார். தவிர, அங்கிருந்தவர்களிடம், “உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள். அதைச் செய்து தருவதற்கு என்னுடைய பணியாளர்கள் இருக்கின்றார்கள்” என்றார் அவர். இதனால் ஏழை எளிய மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அடுக்குமாடிக் கட்டடத்தில் பெரியவர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒருசில பொருள்கள் தேவைப்பட்டன. அதையெல்லாம் அவர் ஒரு கடிததத்தில் எழுதி, அரசருக்கு அனுப்பி வைத்தார். அரசரிடம் தான் கேட்ட பொருள்கள் விரைவில் தனக்கு வந்து சேரும் என்று அவர் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார். ஆனால், அவர் கேட்ட பொருள்கள் அவரிடம் வந்து சேரவே இல்லை.

இதனால் பொறுமையிழந்த அவர் அரசரைப் பார்த்து தன்னுடைய கடிதத்திற்குப் பதில் என்ன ஆயிற்று? என்று கேட்டுவரச் சென்றார். பெரியவர் அரண்மனைக்குச் சென்றபோது அரசர் அரண்மனையில்தான் இருந்தார். அவரிடம் தான் வந்த நோக்கத்தைப் பெரியவர் சொன்னதும், அரசர் தனது பணியாளர்களை அழைத்து, “இவர் கேட்டிருந்த பொருள்களை இன்னும் கொடுக்க வில்லையா?” என்று கேட்டதற்கு, பணியாளர்களில் ஒருவர், “இவர் கேட்டிருந்த பொருள்களையெல்லாம் இவரிடம் கொடுப்பதற்கு நான் இவரது வீட்டிற்குச் சென்றிருந்தபோது, இவர் வீட்டில் இல்லை. அதனால்தான் பொருள்களைத் திருப்பிக் கொண்டு வந்துவிட்டேன்” என்றார். இதற்குப் பெரியவரால் பதில் சொல்ல முடியவில்லை.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற அரசரைப் போன்று கடவுளும் தன்னிடம் கேட்பவர்களுக்குக் கொடுக்கத் தயாராகவே இருக்கின்றார். நாம்தான் பெரியவரைப் போன்று அதைப் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியாய் இல்லாமல் இருக்கின்றோம். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் திருப்பாடல் ஆசிரியர், “ஆண்டவரே! நாள்தோறும் உம்மை மன்றாடுகிறேன்” என்கிறார். திருப்பாடல் ஆசிரியரின் மன்றாட்டை ஆண்டவர் கேட்டாரா? இல்லையா? என்பன குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

தன்னுடைய உள்ளம் முழுவதும் துன்பம் நிறைந்த ஒருவரால் பாடப்பட்டதுதான் இன்று நாம் பதிலுரைப்பாடலாப் பாடக்கேட்ட திருப்பாடல் 88. நேற்றைய நாளில் இத்திருப்பாடலின் முதற்பகுதியைப் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்டிருப்போம். இன்றைய நாளில் அதன் இரண்டாவது பகுதியைப் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்டிருக்கின்றோம்.

வாழ்க்கை முழுவதும் பெரிதும் துன்பப்பட்ட திருப்பாடல் ஆசிரியர் கடவுளிடம் தன்னுடைய துன்பத்தை போக்கத் தொடர்ந்து மன்றாடுகின்றார். அப்படியிருந்தும் கடவுள் அவரது வேண்டுதலைக் கேட்காததால், “ஆண்டவரே! என்னை ஏன் தள்ளிவிடுகின்றீர்?” என்று வேதனையோது பாடுகின்றார். ஆனாலும், “ஆண்டவரே! நாள்தோறும் உம்மை மன்றாடுகின்றேன்” என்று ஆண்டவரிடம் அவர் மன்றாடத் தவறவில்லை.

நாமும் கடவுளிடம் மன்றாடி அது கிடைக்காமல் இருக்கலாம். அதற்கு நாம் மனம் தளர்ந்து விடாமல், அவரிடம் தொடர்ந்து மன்றாடி, அவரது ஆசியைப் பெறுவோம்.

சிந்தனைக்கு:

 கடவுளிடம் மன்றாடியதெல்லாம் கிடைத்துவிட்டால், அவரிடம் மன்றாடுவதர்கான தேவையே இருக்காது.
 கடவுள் பேச நாம் கேட்பதும் அதன்படி நடப்பதும்தான் உண்மையான இறைவேண்டல்
 இறைவேன்டலைப் போன்று நமக்கு ஆற்றல் அளிப்பது இவ்வுலகில் வேறு எதுவுமில்லை.

இறைவாக்கு:

‘எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இறைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்’ (1 தெச (1 தெச 5: 16,17) என்பார் புனித பவுல் எனவே, நாம் கடவுளிடம் இடைவிடாது மன்றாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

“திரும்பிப் பார்ப்பவர் எவரும்...”

சீசரும் அவரது வீரர்களும்:

பல நாடுகள்மீது படையெடுத்துச் சென்று அவற்றைத் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தவர் உரோமையை ஆண்ட ஜூலியஸ் சீசர். இவர் நாடுகளைக் கைப்பற்றச் செல்லும்போது ஒவ்வொரு முறையும் வித்தியாசமான திட்டத்தை வகுத்துச் செயல்படுவார்.

ஒருமுறை இவர் இங்கிலாந்தின்மீது படையெடுப்பதற்காகத் தன் நாட்டு வீரர்களோடு அந்நாட்டின் கடற்கரையில் கப்பலில் போய் இறங்கினார். இவர் கரையில் இறங்கியதும், தன்னுடைய அதிகாரிகளிடம் பயணத்திற்குப் பயன்படுத்திய கப்பல்களையெல்லாம் தீயிட்டுக் கொளுத்தச் சொன்னார். இதைப் பார்த்துவிட்டு ஜூலியஸ் சீசருக்கு நெருக்கமாக இருந்த ஒருசில அதிகாரிகள், “நீங்கள் ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று இவரிடம் கேட்டதற்கு, “கப்பல்களை தீயிட்டுக் கொளுத்தாவிட்டால் தப்பிப்பதற்கு வழி இருக்கின்றது என்று வீரர்கள் பின்வாங்கக்கூடும். அதனால்தான் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தச் சொன்னேன்” என்று தைரியமாகப் பதில் கூறினார்.

ஆம், ஜூலியஸ் சீசரைப் பொறுத்தவரையில், தன்னுடைய வீரர்கள் முன் வைத்த காலை ஒருபோதும் பின் வைக்கக்கூடாது என்பதே ஆகும். வீரர்களே பின் வாங்கக் கூடாது என்றால், இயேசுவைப் பின்தொடர்பவர்கள் பின் வாங்கலாமா?. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை இயேசுவின் சீடர்கள் எப்படி இருக்கவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

கலிலேயாவில் தன்னுடைய பணிகளை முடித்துக் கொண்டு எருசலேம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இயேசுவைப் பலரும் பின்தொடர விரும்பினார்கள். அவர்களில் ஒருவர் இயேசுவிடம், “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்தொடர்வேன்” என்கிறார். இயேசு அவரிடம், தன்னைப் பின்தொடர்வதில் இருக்கும் துன்பங்களையும் சவால்களையும் பற்றிச் சொல்கின்றபோது, அவர் இயேசுவைப் பின்தொடர்வதை விட்டுவிடுகின்றார்.

இன்னொருவரிடம் இயேசுவே, “என்னைப் பின்பற்றி வா” என்று சொல்கிறபோது அவர், “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்” என்கிறார். இவருக்குத் தன்னுடைய குடும்பமே பெரிதாகப்பட்டது. தவிர, இஸ்ரயேலின் இறந்தோரை அடக்கம் செய்ய ஆள்கள் இருந்தார்கள். அப்படியிருந்தும் இவர் இயேசுவுக்கு முக்கியத்துவம் தராமல், குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, இயேசுவைப் பின் தொடராமல் போகின்றார்.

மூன்றாவது மனிதர் இயேசுவிடம், “... என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்கிறார். இவர் வீட்டிற்குச் சென்றால், மனது மாறிவிடலாம் என்பதால், இயேசு இவரிடம், “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்கிறார். இயேசுவைப் பொறுத்தளவில் தன்னைப் தொடர்பவர் வேறு யாருக்கும் அல்ல, தனக்கு மட்டுமே முன்னுரிமை தரவேண்டும், முன் வைத்த காலைப் பின் வைக்கக் கூடாது.

முதல் வாசகம் பல்வேறு துன்பங்கள் நடுவிலும் யோபு, “இறைவன் உள்ளத்தில் ஞானமுள்ளவர்; ஆற்றலில் வல்லவர்” என அவர்மீது நம்பிக்கை வைத்து, அவரில் உறுதியாய் இருப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். கடவுளின் வழி நடப்பவருக்குத் துன்பங்கள் வருவதைத் தவிர்க்க முடியாது. அப்படியிருந்தும் அவர்கள் தங்கள் நம்பிக்கையில் யோபுவைப் போன்று உறுதியாக இருக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் அவரது அன்புச் சீடர்களாக, மக்களாக இருக்க முயும்.

சிந்தனைக்கு:

 சீடத்துவ வாழ்வில் சிலுவைகள் நிறைய உண்டு. அதனை நாம் தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

 இறையாட்சிக்காக இழப்பது இழப்பே அல்ல, அது ஒரு வரம்.

 இயேசுவை முன்னிலைப் படுத்தாது, தன்னை முன்னிலைப் படுத்தும் யாரும் இயேசுவின் சீடராக இருக்க முடியாது.

இறைவாக்கு:

‘நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம்.’ (எபி 12:2) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். எனவே, இயேசுவைப் பின்தொடரும் நாம் அவர்மீது நமது கண்களைப் பதிய வைத்து, அவர் வழி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...