Friday, September 2, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (3-09-2022)

 பொதுக்காலம் 22ஆம் வாரம் - சனி

முதல் வாசகம்



பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம்.


திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-15


சகோதரர் சகோதரிகளே,

உங்கள் பொருட்டு என்னையும் அப்பொல்லோவையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு இவற்றைக் கூறினேன். ஏனெனில், “எழுதியுள்ளதற்கு மேல் போகாதே” என்பதன் பொருளை எங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்; இறுமாப்புக் கொள்ளாதீர்கள். நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக் கொண்டவைதானே? பெற்றுக்கொண்டும் பெற்றுக் கொள்ளாததுபோல் பெருமை பாராட்டுவது ஏன்? தேவையானவற்றை எல்லாம் ஏற்கெனவே பெற்றுவிட்டீர்களோ? ஏற்கெனவே செல்வர்களாகி விட்டீர்களோ? எங்களை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் ஆட்சி செலுத்துகிறீர்களோ? நீங்கள் ஆட்சி செலுத்த முடியுமென்றால் நல்லதுதான். அப்படியானால் நாங்களும் உங்களோடு சேர்ந்து ஆட்சி செலுத்தலாமே.

கடவுளின் திருத்தூதராகிய எங்களை அவர் எல்லாருக்கும் கடையராக்கினார்; நாங்கள் மரண தண்டனை பெற்றவர்கள் போல் ஆனோம். மனிதருக்கும் வானதூதருக்கும் உலகுக்கும் காட்சிப் பொருளானோம் எனக் கருதுகிறேன்.

நாங்கள் கிறிஸ்துவின் பொருட்டு மடையர்கள்; நீங்களோ கிறிஸ்துவோடு இணைந்த அறிவாளிகள். நாங்கள் வலுவற்றவர்கள்; நீங்களோ வலிமை மிக்கவர்கள். நீங்கள் மாண்புள்ளவர்கள்; நாங்களோ மதிப்பற்றவர்கள். இந்நேரம்வரை பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம். அடிக்கப்படுகிறோம்; நாடோடிகளாய் இருக்கிறோம். எங்கள் கைகளால் பாடுபட்டு உழைக்கிறோம். பழிக்கப்படும்போது ஆசி கூறுகிறோம்; துன்புறுத்தப்படும்போது பொறுத்துக்கொள்கிறோம். அவமதிக்கப்படும்போதும் கனிவாகப் பேசுகிறோம். நாங்கள் உலகத்தின் குப்பை போல் ஆனோம். இதுவரை அனைத்திலும் கழிவுப் பொருட்கள் எனக் கருதப்பட்டுவருகிறோம்.

உங்களை வெட்கமடையச் செய்ய நான் இவற்றை எழுதவில்லை; நீங்கள் என் அன்பார்ந்த பிள்ளைகளென எண்ணி, உங்களுக்கு அறிவு புகட்டவே இவற்றை எழுதுகிறேன். கிறிஸ்துவைச் சார்ந்த உங்களுக்கு ஆசிரியர்கள் பல்லாயிரம் இருக்கலாம்; ஆனால் தந்தையர் பலர் இல்லை. நற்செய்தி வழியாக நான் உங்களைக் கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தேன்.


ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்



திபா 145: 17-18. 19-20. 21 (பல்லவி: 18)

பல்லவி: மன்றாடும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.


17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.

18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். - பல்லவி

19 அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார்.

20 ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார்; பொல்லார் அனைவரையும் அழிப்பார். - பல்லவி

21 என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல் கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக! - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?


✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-5

ஓர் ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர். பரிசேயருள் சிலர், “ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?” என்று கேட்டனர்.

அதற்கு இயேசு மறுமொழியாக, “தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா? அவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக் கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?” என்று கூறினார். மேலும் அவர்களிடம், “ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.


ஆண்டவரின் அருள்வாக்கு.

-----------------------------


சிந்தனை
ஒய்வு நாளில் எதை செய்வது முறை. அது கடவுளுக்கு அர்ப்பணமான நாள் என்பது வேதத்தின் வாக்கு.
அவருக்கு அர்ப்பணமான நாளில் அவரோடு இருப்பது, முழு பூசை கண்டு ஒப்புக் கொடுப்பது திருச்சபையின் கட்டளை.
சாஸ்திரங்களை சம்பிரதாயங்களை கடைபிடிப்பதில் நாம் காட்டும் அக்கறை ஏன் கட்டளைகளை கடைபிடிப்பதில் காட்டுவதில்லை என்பது தான் புரியாத புதிர்.
கட்டளைகளை கடைபிடிக்க ஆயிரம் காரணங்களை சொல்லி தப்பித்துக் கொள்ளும் நாம், சம்பிரதாயங்களை காசுக்கு பெறாதவற்றிக்கு மிகவும் அழுத்தம் கொடுப்பது ஏனோ. அறியாமையா? அகந்தையா? செருக்கா? வறட்டு கௌரவமா? மாற்கு 07: 09
மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 03)
அடுத்தவரிடம் குறை கண்டுபிடிக்கும் மனது அழுக்கான மனது
ஒரு நகரில் மெத்தப் படித்த மேதாவி ஒருவர் இருந்தார். அவர் எப்போதுமே அடுத்தவரிடம் குறை கண்டுபிடிப்பதையே தன்னுடைய குலத்தொழிலாக கொண்டு வாழ்ந்துவந்தார். மக்கள் ஒன்றை எவ்வளவு நேர்த்தியாக, நிறைவாகச் செய்திருந்தாலும் அதில் அவர் குறைகண்டுபிடிப்பார். இதனால் மக்களுக்கு அவர்மீதான ஒரு வெறுப்புணர்வே இருந்தது.
ஒருநாள் அவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அகன்ற சாலை ஒன்றில் அவர் நடந்துசென்று கொண்டிருந்தார். அவருடைய முதுகில் பெரிய சுமை ஒன்று இருந்தது. அந்த சுமை எப்படிப்பட்டது, ஏன் வந்தது என்று அவருக்கு விளங்கவேயில்லை. அவர் நடக்க நடக்க அவர் முதுகில் இருந்த சுமை அவரை அழுத்தத் தொடங்கியது.
ஒருகட்டத்தில் அவர் சத்தமாகக் கத்தத் தொடங்கினார், “கடவுளே எனக்கு எதற்கு இவ்வளவு பெரிய சுமை?. இதை நான் ஏன் சுமக்கவேண்டும்? என்று கேட்டார். அதற்கு வானத்திலிருந்து கடவுள், “இந்த சுமை வேறொன்றும் இல்லை. மற்றவர்களிடம் நீ கண்டுபிடித்த குறைதான் இப்படி சுமையாக இருக்கிறது. எல்லாரும் நல்லதையே பார்த்தபோது, நீ மட்டும் குறைகளையே பார்த்தாய். ஆதலால்தான் நீ கண்டுபிடித்த குறைகளை இப்போது நீ சுமந்துகொண்டு வருகிறாய்” என்றார்.
உடனே தூக்கத்திலிருந்து அவர் விழித்தெழுந்தார்; அறிவொளி பெற்றார். அன்றிலிருந்து அவர் மக்களிடம் இருக்கும் நிறைகளை மட்டுமே கண்டார்.
பிறரிடம் குறைகாண்போரது வாழ்க்கை பரிதாபத்திற்கு உரியது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.
நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் வயல்வழியாக நடந்து சென்றுகொண்டிருக்கும்போது சீடர்கள் பசியில் கதிர்களைக் கொய்து உண்ணத் தொடங்குகிறார்கள். இதைப் பார்த்த பரிசேயர்கள் இயேசுவிடம், “உம்முடைய சீடர்கள் ஓய்வுநாள் சட்டத்தை மீறிவிட்டார்கள்” என்று குறைசொல்கிறார்கள். அதற்கு இயேசுவின் பதில்தான் நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.
கதிர்களைக் கொய்து தின்னுதல் என்பது குற்றம் கிடையாது (இச 23:24-25). ஆனால் சீடர்கள் கதிர்களைக் கொய்து, கசக்குதால்தான் மிகப்பெரிய குற்றமாக பரிசேயர்களுடைய கண்களுக்குத் தெரிகிறது. அதனால்தான் அவர்கள் இயேசுவின் சீடர்கள் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதாக குறைகூறுகிறார்கள், குற்றம் சாட்டுகிறார்கள்.
பரிசேயர்களின் குற்றச்சாட்டுக்கு இயேசு, அவர்கள் ஏற்றுக்கொண்ட மறைநூலிலிருந்தே விளக்கம் தருகிறார். தாவீதும், அவருடைய சகாக்களும் பசியாய் இருந்தபோது குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அர்ப்பண அப்பங்களை உண்ணுகிறார்கள் (1 சாமு 21:1-6) என்ற இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி ஆண்டவர் இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளும் மானிட மகனுகுக் கட்டுப்பட்டதே” என்கிறார். மேலும் மத்தேயு நற்செய்தி 9:13ல் “பலிகளை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்” என்று சொல்லி இக்கருத்துக்கு இன்னும் வலுவூட்டுகிறார்.
பல நேரங்களில் நாம் சட்டத்தைக் கடைபிடிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு இரக்கமே இல்லாமல் நடந்துகொள்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. சட்டங்களும், சம்பிரதாயங்களும் யாருக்காக? மனிதர்களுக்குத் தானே. மனிதர்களுக்கு முக்கியத்துவம் தராமல், சட்டத்தைத் தூக்கிப் பிடித்தல் எந்தவிதத்தில் நியாயம்?.
சில ஆண்டுகளுக்கு முன்பாக உத்தரப் பிரதேசம் மாநிலம் தாதரி நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் மாட்டு மாமிசம் சாப்பிட்டார்கள் என்று கூறி முகமது அக்லாக் என்பவரும் அவருடைய மகனும் கொல்லப்பட்டார்கள். ஒரு மாட்டை கொன்று சாப்பிட்டதற்காக இரண்டு உயிர்களைக் கொன்ற இந்த நிகழ்வு உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது எதைக் காட்டுகிறது?. மனிதர்களைவிட சம்பிரதாயங்களும், அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சாதியமும் அல்லவா பெரிது என்று காட்டுகிறது. மனிதர்கள் இல்லாமல், சட்டமும், சம்பிரதாயங்களும் வீணிலும், வீண்.
எனவே சட்டங்களை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்காமல், அந்த சட்டங்கள் குறித்துக் காட்டும் மானுட நேயத்தை நம்மில் வளர்ப்போம்.
அதைவிடவும் பிறரிடம் குறை கண்டுபிடிக்கும் எண்ணத்தை அடியோடு தவிர்ப்போம். “அன்பு குறைந்திருக்கும்போது குற்றங்கள் பெரிதாகத் தெரிகின்றன” என்பார் கார்லைல் என்ற அறிஞர். ஆம், நம்மிடத்தில் அன்பு குறைந்தால் பிறரிடம் இருக்கும் குறைகள் பெரிதாகத் தெரியும். மாறாக நம்மிடம் அன்பு பெருகினால், குற்றம் காணும் மனப்பான்மை குறையும்.
ஆகவே, குறைகாணும் போக்கைத் தவிர்ப்போம். சட்டங்களைக் கண்டு, மானுட நேயம் காப்போம். அதன்வழியாக் இறையருள் நிறைவாய் பெறுவோம். –
- Fr. Maria Antonyraj, Palayamkottai.

---------------------------------------


திருப்பாடல் 145: 17-18, 19-20, 21 (18)

“மன்றாடும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்”


சிறுவனின் இறைவேண்டல்:

ஆறாம் வகுப்பு படித்த சிறுவன் ஜோவிற்கு அவனுடைய தாத்தாதான் வீட்டுப் பாடங்களை எல்லாம் சொல்லிக் கொடுப்பார். ஓய்வுபெற்ற ஆசிரியரான அவர் சொல்லிக்கொடுக்கும் பாடங்களையெல்லாம் அவன் மிக எளிதாகப் புரிந்துகொண்டு, செய்து முடிப்பான். 

ஒருநாள் அவர் ஜோவிற்கு வீட்டுப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும்போது, அவனுடைய கவனம் பாடத்தில் இல்லாமல் எங்கோ இருந்தது. “ஜோ! உனக்கு என்ன ஆயிற்று? உன்னுடைய கவனம் பாடத்தில் இல்லாமல், எங்கோ இருப்பது மாதிரித் தெரிகின்றதே!” என்று ஜோவின் தாத்தா கேட்டதற்கு, “நான் வைத்திருந்த பொம்மையைக் காணவில்லை; அது எங்கே போனது என்றுதான் தெரியவில்லை. அதனால்தான் என்னால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை” என்று சொன்ன ஜோ, “எதற்கும் நான் கடவுளிடம் வேண்டுகிறேன். அவர் தொலைந்துபோன என்னுடைய பொம்மையைத் தேடித் தருவார்” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய அறைக்குச் சென்று வேண்டத் தொடங்கினான். 

மறுநாள் காலையில் ஜோ பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது, அவனுடைய தாத்தா, “ஜோ! தொலைந்து போன உன்னுடைய பொம்மையை ஆண்டவர் கண்டுபிடித்துத் தந்துவிட்டாரா?” என்று கேட்தற்கு அவன், “தொலைந்து போன பொம்மையைத் திருப்பித் தருவதாக அவர் சொல்லவில்லை. புதியதொரு பொம்மையைத் தரப்போவதாகச் சொன்னார்” என்று சொல்லிவிட்டுப் பள்ளிக்குச் சென்றான். 

அன்று மாலை அவன் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்தபோது, வெளிநாட்டிலிருந்து வந்திருந்த அவனுடைய மாமா அவனுக்கு ஒரு பொம்மையை வாங்கி வந்திருந்தார் அதைப் பார்த்தும் அவன், “கடவுள் என்னிடத்தில் சொன்னது போன்றே ஒரு பொம்மையை எனக்குத் தந்துவிட்டார்” என்று அதைத் தன் தாத்தாவிடம் காட்டி, மகிழ்ந்தான். 

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற சிறுவன் ஜோவின் மன்றாட்டிற்கு ஆண்டவர் செவிசாய்த்தார். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் தாவீது, “மன்றாடும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம். 


திருவிவிலியப் பின்னணி:

நூற்று ஐம்பது திருப்பாடலில் தாவீது பாடிய திருப்பாடல் மொத்தம் 73. இதில் அவர் பாடிய கடைசித் திருப்பாடல்தான், இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 145. இத்திருப்பாடல் ஒரு புகழ்ப்பாடலாக அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. 

தாவீது இஸ்ரேலின் அரசராக இருந்தார். அவர் அனைத்துலகின் அரசராம் ஆண்டவரைப் போற்றிப் புகழ்வது மாதிரியாக இருக்கின்றது திருப்பாடல் 145. “என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்த்து ஏத்துவேன்” என்ற வரிகளோடு இத்திருப்பாடலைத் தொடங்கும் தாவீது, எதற்காக ஆண்டவரைப் புகழ்ந்து பாடவேண்டும் என்பதற்கான காரணங்களை வரிசைப்படுத்திக் கொண்டே போகின்றார். அப்படி அவர் வரிசைப்படுத்திக் கொண்டே போகும்போதுதான், “தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் உள்ளார்” என்கிறார். 

தாவீது சொல்வது போல், ஆண்டவர் தம் அடியார்கள் எழுப்புகின்ற வேண்டுதலுக்குச் செவிசாய்க்கின்றார். அதனால் நாம் அவரைப் புகழ்ந்து பாடுவோம். 


சிந்தனைக்கு:

ஆண்டவர் நன்மைகளின் ஊற்றாய் இருப்பதால்தான் அவர் நம்முடைய மன்றாட்டிற்குச் செவி சாய்க்கின்றார். 

இறைவேண்டல் இன்றி எதுவும் செய்ய முடியாது. 

இறைவேண்டல் செய்யாத மனிதர் கூரையில்லாத வீட்டிற்குச் சமமானவர். 


இறைவாக்கு:

‘ஆண்டவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்’ (திபா 105: 2) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நமது வேண்டுதலைக் கேட்கும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம். 


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

----------------------------

“ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்”


நடுநிலைமை:

ஒரு கல்லூரில் பேசச் சென்றிருந்த பேச்சாளர் ஒருவர் தனக்கு முன்பு அமர்ந்திருந்த மாணவர்களிடம், “கயிற்றில் நடக்கும் வித்தைக்காரரால் எப்படிக் கீழே விழாமல் நடக்க முடிகின்றது? அவரது வெற்றிக்கான காரணம் என்ன?” என்று கேட்டார். 

உடனே ஒரு மாணவர் எழுந்து, “கவனம்” என்றார். இன்னொரு மாணவர், “விழிப்புணர்வு” என்றார். வேறொரு மாணவர், “பயிற்சி” என்றார். இப்படி ஒவ்வொரு மாணவரும் சொன்னதைக் கேட்டுக்கொண்டே வந்த பேச்சாளர் அவர்களிடம், “நீங்கள் சொல்கின்ற எல்லாமும் முக்கியம்தான்; ஆனால், இவை அனைத்தையும் விட நடு நிலைமை மிகவும் முக்கியம். ஏனெனில், இடப்பக்கமோ, வலப்பக்கமோ அவர் சாய்ந்துவிட்டால் கீழே விழுந்துவிடுவார்” என்றார். 

தொடர்ந்து அவர் அவர்களிடம், “இரவு – பகல், அன்பு – வெறுப்பு, நட்பு – பகை என்று இருக்கும் சூழலில், எந்தப் பக்கம் சாய்ந்தாலும் வீழ்ந்துவிடுவீர்கள். அதனால் நடுநிலையோடு நடங்கள்” என்றார். 

இன்றைக்குப் பலர் ஒருதலைப்பட்சமாக நடப்பதைப் பார்க்க முடிகின்றது. இந்நிலையில் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நடுநிலையோடு நடக்க அழைகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம். 


திருவிவிலியப் பின்னணி:

கொரிந்து நகரில், ‘நான் பவுலைச் சார்ந்துள்ளேன்’, ‘நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்’, ‘நான் கேபாவைச் சார்ந்துள்ளேன்’ என்று மக்கள் பிளவுபட்டுக் கிடந்தார்கள். இதை அறிந்த அறிந்த பவுல் அவர்களிடம், “ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்” என்கிறார். பவுல் கூறிய இந்த அறிவுரை கொரிந்த நகர மக்கள் நடுவில் ஓரளவாவது மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கும். 

நற்செய்தியில், ஓய்வுநாளில் இயேசுவின் சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்டதைப் பார்த்த பரிசேயர்கள் சிலர், “ஓய்வுநாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?” என்கிறார்கள். அப்போது இயேசு அவர்களுக்குத் தாவீதின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைப் பதிலாகத் தருகின்றார் (1 சாமு 21: 1-6). இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில்,, பின்னாளில் இஸ்ரயேலின் அரசரான தாவீது தன்னோடு இருந்தவர்களோடு குருக்கள் மட்டுமே உண்ணும் அர்ப்பண அப்பங்களை உண்டதைப் பற்றி எந்தவொரு சலசலப்போ, அல்லது எந்தவொரு விவாதமோ ஏற்படவில்லை. ஆனால், சீடர்கள் சாதாரணமானவர்கள் என்பதால் அவர்கள் ஓய்வு நாளில் கதிர்களைக் கொய்து உண்டதால் பரிசேயர்கள் அதை விவாதப் பொருளாக்குகின்றார்கள். என்பதைத்தான். 

அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறுசெய்தால் அதைக் கண்டும் காணாமலும் இருப்பதும், சாதாரண மனிதர்கள் ஒரு சிறு தவறு செய்தால் அதைப் பெரிது படுத்துவதைத்தான் இயேசு கடுமையாகச் சாடுகின்றார். நாமும் இத்தகைய தவற்றினைச் செய்திருக்கலாம். இனிமேலும் அதைச் செய்யாமல் நடுநிலைமையோடு வாழக் கற்றுக் கொள்வோம். 


சிந்தனைக்கு:

சட்டம் ஒரு சிலந்தி வலை. இதில் சிறு பூச்சிகள் சிக்கிக் கொள்கின்றன. பெரிய வண்டுகளோ வலையைக் கிழித்துவிடுகின்றன – கவிகோ அப்துல் இரகுமான்.

சமநீதியையே ஆண்டவர் விரும்பும் நீதி. 

ஒவ்வொருவருக்குள்ளும் ஆண்டவர் இருக்கின்றார். அதனால் அவரை இழிவு படுத்தும்போது ஆண்டவரையே இழிவுபடுத்துகின்றோம். 


இறைவாக்கு:

‘மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள்’ (யாக் 2:1) என்பார் புனித யாக்கோபு.. எனவே, நாம் பாரபட்சமின்றி எல்லாரையும் அன்பு செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

-----------------------------


செய்யக் கூடாதது

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் நோன்பு இருப்பதில்லை - அதாவது, நோன்பின்போது உண்கிறார்கள் - என்று இயேசுவிடம் புகார் அளிக்கப்பட்டது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஓய்வு நாளில் கதிர்களைக் கொய்து உண்கிறார்கள் சீடர்கள். இயேசுவின் சீடர்களுக்கும் உணவுக்கும் உள்ள இந்தத் தொடர்பை யாராவது ஆராய்ச்சி செய்தால் நலம். அப்பம் பிட்கும் நிகழ்விலும், 'போதகரே, அவர்களை அனுப்பிவிடும். உணவு உண்ணும் நேரம் ஆயிற்று' என்கின்றனர்.

வயல்களில் கதிர்களைக் கொய்து திண்ணுதல் என்பது இன்றும் கிராமங்களில் நடக்கின்ற ஒன்று. வழிப்பயணத்தில் ஒன்று அல்லது இரு கைகள் பறித்தல் சரி. அதற்கு மேலாக, அல்லது சேமிக்கும் அல்லது விற்கும் நோக்கத்துடன் பறிப்பது தவறு என்பதை இயேசுவின் சமகாலத்து வழக்கமாகவும் இருந்தது.

ஓய்வுநாள் சட்டத்தை முன்னிட்டு, ஒருவர் தன் கையை எந்த அளவு உயரத்துக்குத் தூக்கலாம் என்ற விதிமுறையை பரிசேயர்கள் உருவாக்கி வைத்திருந்தனர். அதன் பின்புலத்தில்தான் இயேசுவின் சீடர்கள் செய்த செயலைக் கடிந்துகொள்கின்றனர்.

இயேசுவோ, சட்டத்தையும் தாண்டி அவர்களின் பசியை - அடிப்படையான மனித உணர்வை - முன்மொழிந்து அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார். மேலும், அத்தகைய சூழலில் தாவீது செய்த செயலையும் சுட்டிக்காட்டுகின்றார்.

மேலும், இந்த நிகழ்வு வழியாக மானிட மகன் ஓய்வுநாள் சட்டத்தையும் கடந்தவர் என முன்மொழிகின்றார்.


இந்த நிகழ்வை எப்படிப் புரிந்துகொள்வது?

எல்லா விதிமுறைகளோடும் நாம் சமரசம் செய்துகொள்ள இயலுமா? எந்த அளவுக்குச் சமரசம் செய்துகொள்ளலாம்?

இன்றைய முதல் வாசகத்தில், பவுல் நல்ல தந்தையாக தன் திருஅவைக்கு அறிவுரை வழங்குகின்றார். பாவம் பவுல்! தன் குழுமத்தாரைக் கடிந்துகொள்ளவும் விரும்புகின்றார். அதே வேளையில் அவர்களின் நொறுங்குநிலை கண்டு வருந்தவும் செய்கின்றார்.


இறுதியில், தன்னை ஒரு தந்தை என முன்மொழிகின்றார்.

பரிசேயர்கள் தன் சீடர்களைச் சட்டம் கொண்டு கடிந்துகொள்ள முயன்றபோது, இயேசு நல்தந்தையாக அவர்களைக் காத்துக்கொள்கின்றார்.

அருள்திரு யேசு கருணாநிதி, மதுரை உயர்மறைமாவட்டம்

-----------------------------


 சட்டமா? மனித நேயமா?

பிராமணர் ஒருவர் அவசரமான ஒரு வேலைக்காக வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார். வேலையின் நினைவாகவே சென்று கொண்டிருந்த அவர் எதிரே மீன்கள் விற்றுக்கொண்டு வரும் ஒரு வயதான பெண்மணியின் மீது மோதினார். அவர் கூடையில் இருந்த மீன்களெல்லாம் சிதறி கீழே விழுந்தன. அதைக்கண்ட அந்த பிராமணர் மிகவும் வருந்தி அப்பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டதோடு சிதறிய மீன்களை எடுத்து கூடையில் போடவும் உதவினார். அவ்வழியே வந்த மற்றொரு பிராமணர் இதைக்கண்டு பிராமண விதிகளை மீறீ அசுத்தமானவற்றை தொடுகிறீரே என்று குற்றம் சாட்டினார். அதைக்கேட்டு கொஞ்சமும் வருந்தாத முதல் பிராமணர் , இந்த மீன்கள் சிதறி விழ தான்தான் காரணமென்றும், தன் தவறை சரி செய்யாமலும் இப்பெண்ணுக்கு உதவாமலும் சென்றால் நல்ல மனிதனாக இருக்க முடியாது என்றும் கூறிவிட்டு தன் வழி தொடர்ந்தார்.

சட்டங்களும் விதிகளும் மனித மாண்பை மனித வாழ்வை நெறிப்படுத்துவதற்காக மட்டுமே. மனிதநேயத்தை காக்காத எந்த ஒரு சட்டமும் வீணே. நாம் வாழ்கின்ற சமூகத்தில் நாம் கடைபிடிப்பதற்காக நமக்குத் தரப்பட்டுள்ள சட்டங்கள் எல்லாம் மனிதநேயத்தை மதிப்பதற்காகவே எழுதப்பட்டுள்ளன. நம்முடைய அரசியல் சட்டங்கள், திருஅவை சட்டங்கள், அனைத்துமே மனிதநேயத்தை காப்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நாம் காண்பது என்ன?. 

சில நிமிடங்கள் தாமதமாக கடையை மூடியதற்காக, ஊரடங்கு  விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி மனிதநேயத்தை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் தந்தையையும் மகனையும் காவல் நிலையத்தில் அடித்தே கொன்ற சமூகத்தில் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அவ்வாறெனில் மனித நேயம் எங்கே போனது?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் சீடர்கள் ஓய்வுநாளில் வயலிலே கதிர்களைக் கொய்து உண்டு ஓய்வுநாள் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டனர். பரிசேயர்களுடைய கண்களுக்கு சீடர்களின் தவறு தெரிந்ததே தவிர அவர்களுடைய பசி தெரியவில்லை. உணவு என்பது மனிதனுடைய அடிப்படைத்தேவை . அதைக்கூட நிறைவேற்றிக்கொள்ள இயலாத அளவிற்கு மனித நேயமில்லா சட்டங்களை இயற்றி வைத்திருக்கும் பரிசேயரைக் கடிந்து கொள்ளும் இயேசு அவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக அவர்கள் உயர்வாக மதித்த தாவீது அரசர் செய்த செயலை மேற்கோள் காட்டுகிறார். இயேசுவின் சில வல்ல செயல்களும் ஓய்வு நாளில் நடந்தேறியதை நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோம். 

சட்டங்கள் மனிதருக்காக.  மனிதர் சட்டங்களுக்காக என்ற கருத்தை இயேசு தெள்ளத்தெளிவாக அதிகாரப்பூர்வமாக கூறுகிறார். 

இன்றைய முதல் வாசகத்திலும் திருத்தூதர் பவுல் "எழுதியுள்ளதற்கு மேல் போகாதே " என்ற வார்த்தைகளை மேற்கோள் காட்டி சட்டத்தை தூக்கிப்பிடித்தால் மட்டும் போதாது மாறாக மனித நேயம் கொண்டவர்களாய் ஒருவரை ஒருவர் ஆதரித்து வாழவேண்டும் என்று நமக்கு அழைப்பு விடுக்கிறார்.பாராபட்சம்  பார்க்காமலும், பிறரை எதிர்க்காமலும், இறுமாப்பு கொள்ளாமலும் நாம் வாழ வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்துகிறார்.

இன்று திருஅவை நினைவு கூறும் அன்னை தெரசா மனித நேயத்தொண்டிற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறார். துன்புறும் மனிதர்களில் துன்புறும் இயேசுவைக்கண்டார். மனித நேயத்தோடு அவர்களுக்காக பணிபுரிய தன்னுடைய துறவற சபையின் சட்டங்களையும் விதிகளையும் மீற அவர் தயங்கவில்லை. மனித நேய தொண்டாற்றவே புதிய சபையை நிறுவிய அவர் அன்பு விதியை ஆதாரமாகக் கொண்டு கல்கத்தா நகர வீதிகளிலே யாருமின்றி அனாதையாய் கிடந்த ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் இயேசுவின் பெயரால் பணிவிடை புரிந்தார்.கருவுற்றால் ஒரு குழந்தைக்குத்தாய், கருணையுற்றால் உலகிற்கே தாய் என்ற வாக்கிற்கிணங்க இன்று உலகமே அவரை அன்னை என்ற அடைமொழியுடன் அன்போடு அழைப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

இன்று நம் மத்தியிலும் இயேசுவைப் போல அன்னைத்தெரசாவைப் போல விதிகளுக்கும் சட்டங்களுக்கும் அப்பாற்பட்ட மனித நேயத்தொண்டாற்றும் பலரை காண்கிறோம். அவர்களில் ஒருவராக வாழ முயற்சி செய்வோமா? . சட்டங்களை மதிக்கவும் மனித நேயம் காக்கவும் அத்தகைய சட்டங்கள் மனித நேயத்திற்கு எதிரானால் அதை தைரியமாக எதிர்க்கவும் வேண்டிய அருளை இறைவனிடம் வேண்டுவோம்.


 இறைவேண்டல்

கருணையின் உறைவிடமே இறைவா!

மனித மாண்பை, மனித நேயத்தை காக்கும் கடமையை எங்களுக்கு உம் மகன் இயேசுவின் மூலம் அளித்துள்ளீர். நாங்கள் அதை உணர்ந்தவர்களாய்,  வெறும் சட்டங்களுக்கும் விதிகளுக்கும் கட்டுப்படாமல் மனித நேயத்தோடு தேவையில் இருப்பவர்களுக்கு உதவும் வரம் தாரும்.  ஆமென்.


அருட்பணி.குழந்தைஇயேசு பாபு


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Join with us 👇

Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A

Facebookhttps://www.facebook.com/Catholic-Voice-108151311955076

Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283

WhatsApp: https://chat.whatsapp.com/G5K3erwXGiJ4VWuBVUvCnz

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...