Wednesday, September 28, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (30-09-2022)

 

பொதுக்காலம் 26ஆம் வாரம் - வெள்ளி



முதல் வாசகம்

காலைப்பொழுதுக்குக் கட்டளையிட்டதுண்டா? கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா?

யோபு நூலிலிருந்து வாசகம் 38: 1, 12-21; 40: 3-4

ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்:

உன் வாழ்நாளில் காலைப்பொழுதுக்குக் கட்டளையிட்டதுண்டா? வைகறையைத் தன் இடமறிய வைத்ததுண்டா? இவ்வாறு, அது வையக விளிம்பைத் தொட்டிழுத்து, பொல்லாதவரை அதனுள்ளிருந்து உதறித் தள்ளுமே! முத்திரையால் களிமண் உருப்பெறுவதுபோல் மண்ணகம் வண்ணம் ஏற்றிய ஆடையாயிற்று. அப்போது, கொடியவரிடமிருந்து ஒளி பறிக்கப்படும்; அடிக்க ஓங்கிய கை முறிக்கப்படும்.

கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா? ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ? சாவின் வாயில்கள் உனக்குக் காட்டப்பட்டனவோ? இருள் உலகின் கதவுகளைக் கண்டதுண்டோ நீ? அவனியின் பரப்பை நீ ஆய்ந்தறிந்ததுண்டா? அறிவிப்பாய் அதிலுள்ள அனைத்தையும் அறிந்திருந்தால்!

ஒளி உறைவிடத்திற்கு வழி எதுவோ! இருள் இருக்கும் இருப்பிடம் எங்கேயோ? அதன் எல்லைக்கு அதனை அழைத்துப் போவாயோ? அதன் உறைவிடத்திற்கு நேர்வழி அறிவாயோ! ஆம், அறிவாய்; அன்றே நீ பிறந்தவனன்றோ! ஆமாம்; ஆண்டுகளும் உனக்கு அதிகமன்றோ!

யோபு ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி: இதோ! எளியேன் யான் இயம்புதற்குண்டோ? என் வாயைக் கையால் பொத்திக் கொள்வேன். ஒருமுறை பேசினேன்; மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்; இனிப் பேசவே மாட்டேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 139: 1-3. 7-8. 9-10. 13-14ab (பல்லவி: 24b)

பல்லவி: இறைவா! என்றும் உள்ள வழியில் என்னை நடத்துவீர்.

1
ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!
2
நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.
3
நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. - பல்லவி

7
உமது ஆற்றலை விட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்?
8
நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்! - பல்லவி

9
நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,
10
அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக்கொள்ளும். - பல்லவி

13
ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே!
14ab
அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 95: 8b, 7b

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.

 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16

அக்காலத்தில்

இயேசு கூறியது: “கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால், அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து, மனம் மாறியிருப்பர். எனினும் தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும். கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய்.

உங்களுக்குச் செவிசாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


“என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும்”

அவர் காட்டும் பாதையில் நான் நடப்பேன்:


பிரேசிலுக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றவர் ஆர். எஸ்,ஜோன்ஸ் இவர் பிரேசிலில் நற்செய்தி அறிவித்துக்கொண்டிருக்கையில் இவரது உடல்நிலை சரியில்லாமல் போகவே, இவர் தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்துவிட்டார். அங்கு இவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர், இவர் மீண்டுமாகப் பிரேசிலுக்குப் போகக்கூடாது. அப்படிப் போனால் இவரது உடல் நலனை அது வெகுவாகப் பாதிக்கும் என்று எச்சரித்தார். இதனால் இவர் தன்னுடைய சொந்த நாட்டிலேயே இருக்க வேண்டியதாயிற்று.

இதற்கு நடுவில் இவர் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டபோது, இவருக்கு நன்கு அறிமுகமான பிபி மெக்கன்னி இவரிடம், “மருத்துவர் உங்களை பிரேசிலுக்குப் போகக்கூடாது என்று சொல்லிவிட்டார். அப்படியானால் உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?” என்று கேட்க, “கடவுள் என்னை எங்கே செல்ல வேண்டும் வழி நடத்துகின்றாரோ, அங்கே நான் செல்வேன்” என்று சிரித்துக் கொண்ட சொன்னார் இவர்.

இவ்வார்த்தைகளைக் கேட்டதும், பிபி மெக்கன்னி, “Wherever He leads I will go” என்ற அற்புதமான பாடலை இயற்றினார். அது பின்னாளில் மிகவும் பிரபலமானது.

ஆம், மிகப்பெரிய நற்செய்திப் பணியாளரான ஆர்.எஸ். ஜோன்ஸ், கடவுள் தன்னை எங்கே செல்ல வேண்டும் என்று வழிநடத்துகின்றாரோ, அங்கே செல்வேன் என்று சொன்னது, அவர் ஆண்டவருடைய வழிநடத்துதலில் படி நடந்தார் என்பதற்கு மிகப்பெரிய சான்றாக இருக்கின்றது. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் தாவீது, “இறைவா! என்றும் உள்ள வழியில் என்னை நடத்துவீர்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இன்று பலர், அரசியல் தலைவர்களும் திரைப்பட நடிகர்களும் தங்களை நல்லமுறையில் வழிநடத்துவார்கள் என்று அவர்களுக்குப் பின்னால் சென்று கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் அவர்களால் தங்களைப் பின்தொடர்பவர்களை நல்லமுறையில் வழிநடத்த முடியுமா? என்பது கேள்விக்குறியே! ஆனால், ஆண்டவர் இயேசுவால் நம்மை நல்லமுறையில் வழிநடத்த முடியும். ஏனெனில், அவர் வழியும் உண்மையும் வாழ்வுமாய் இருக்கின்றார் (யோவா 14:6).

இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடலில் அதன் ஆசிரியர் தாவீது, “என்றுமுள்ள வழியில் என்னை நடத்தியருளும்” என்கிறார். தாவீது இவ்வாறு சொல்லக் காரணம், ஆண்டவர் அவரை ஆய்ந்து அறிந்திருந்தார் என்பதால்தான். கடவுள் தாவீதை மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரையும் ஆய்ந்து அறிந்திருக்கின்றார். அதனால் அவருடைய கையில் நம்மை ஒப்புக்கொடுத்து, அவரது வழியில் நடந்தால் ஆசியைப் பெறுவோம் என்பது உறுதி.

சிந்தனைக்கு:

 பார்வையற்றோரால் மற்றவருக்கு வழிகாட்ட முடியாது. இவ்வுலகில் உள்ள பல தலைர்கள் அப்படித்தான் இருக்கின்றார்கள்.

 ஆண்டவரே உண்மை என்பதால், அவர் நம்மை உண்மையின் பாதையில் வழிநடத்துவார்.

 ஆண்டவரின் வழியில் நடப்போர் இடறி விழுவதில்லை

இறைவாக்கு:

‘என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! (திபா 119:105) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் நமது காலடிக்கு ஒளியான ஆண்டவருடைய வார்த்தையின்படி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


கடவுளையே புறக்கணிப்பவர்கள்

எது பெரிய பாவம்?:


அமெரிக்காவைச் சேர்ந்த பன்முகக் கலைஞர் ஜார்ஜ் பெர்னாட்சா. ஒருமுறை செய்தியாளர் ஒருவர் அவரிடம், “உலகிலேயே மிகப்பெரிய பாவம் எது?” என்று கேட்டார். உடனே ஜார்ஜ் பெர்னாட்சா தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார்.

அவர் தீவிரமாக யோசிப்பதைப் பார்த்த செய்தியாளர், “உலகிலேயே மிகப்பெரிய பாவம் வெறுப்பா?” என்றார். “இல்லை” என்று அவர் சொன்னதும், “விபசாரமா?” என்று செய்தியாளர் கேட்டார். அதற்கும் அவர், “இல்லை” என்றதும், “அப்படியானால் மன்னிக்க மனமின்மையா?” என்று செய்தியாளர் ஒவ்வொன்றாகக் கேட்டுக்கொண்டே வந்தார்.

“நீங்கள் சொன்ன எதுவுமே இல்லை. ஆனால், நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் விட மிகப்பெரிய பாவம் கண்டுகொள்ளாமை” என்று தெளிவாகப் பதிலளித்தார் ஜார்ஜ் பெர்னாட்சா.

ஆம், கண்டுகொள்ளாமையே மிகப்பெரிய பாவம். இன்றைய நற்செய்தியில் இயேசு மக்கள் தன்னைக் கண்டுகொள்ளாமல், தன்னைப் புறக்கணித்ததற்காக அவர்களைக் கடுமையாகச் சாடுவதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

திருவிவிலியம் வரலாற்றில் அல்லது இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த யாவற்றையும் தொகுத்து வைத்திருக்கும் ஒரு வரலாற்று ஏடு அல்ல. மாறாக, அது தூய ஆவியாரின் தூண்டுதலால் எழுதப்பட்ட ஒரு நம்பிக்கை ஏடு. இதில் இயேசுவின் வாழ்வில் நடந்த எல்லாமும் இடம்பெற்றிருக்கும் எனச் சொல்ல முடியாது. அவர் வேறு பல வல்ல செயல்களைச் செய்தார். அவையெல்லாம் திருவிவிலியத்தில் இடம் பெறவில்லை (யோவா 20:30). இந்தப் பின்னணியில் நாம் இன்றைய இறைவார்த்தையை அணுகினால் மிகச் சிறப்பாக இருக்கும்.

நற்செய்தியில் இயேசு கொராசின், பெத்சாய்தா ஆகிய இரு நகர்களைக் கடுமையாகச் சாடுவதைப் பற்றி வாசிக்கின்றோம். இயேசு இந்த இரு நகர்களில் கடவுளின் வார்த்தையை அறிவித்துப் பல வல்ல செயல்களைச் செய்திருந்தார். அதையெல்லாம் அவர்கள் கண்டும், கேட்டும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்கள். இயேசுவின் விருப்பமெல்லாம் ஒவ்வொருவரும் மிகுந்த கனி தரவேண்டும் என்பதையே ஆகும் (யோவா 15:8) இந்த இரண்டு நகர்களிலும் இருந்தவர்கள் இயேசுவின் போதனையைக் கேட்டும் அவரது வல்ல செயல்களைக் கண்டும் கனிதராமல் இருந்ததால் இயேசு அவர்களைச் சாடுகின்றார்.

இன்றைய முதல் வாசகம் ஆண்டவருக்கும் யோபுக்கும் இடையே நடக்கும் முதல் உரையாடலைப் பதிவு செய்கின்றது. யோபு நேர்மையாய் நடந்தாலும் ஆண்டவரைப் பற்றிச் சரியான புரிதல் இல்லாமல் பேசுகின்றார் இறுதியில் அவர், “என் வாயைக் கையால் பொத்திக் கொள்வேன்” என்று தன் தவற்றை உணர்ந்து பேசுகின்றார்.

கடவுளைப் பற்றி அறிவது இன்றியமையாதது; அதைவிடவும் அவரது போதனையின் படி நடப்பது. நாம் கடவுளை முழுமையாக அறிந்து, அவரது போதனையின் படி நடந்து, மிகுந்த கனிதருவோம்.

சிந்தனைக்கு:

 ஆண்டவரைப் பற்றி அறிவதும் அவரது வழியில் நடப்பதும் நம்மை வாழ்வுக்கு இட்டுச் செல்லும்.

 ஆண்டவரைப் பற்றிய அறியாமையே அழிவுக்குக் காரணம்.

 இறைவார்த்தையைக் கேட்பதும் அதன்படி நடப்பதும் மிகவும் அவசியம்.

இறைவாக்கு:

‘உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்’ (மத் 5:16) என்பார் இயேசு. எனவே, நம் கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்து, உலகிற்கு ஒளியாய் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...