Monday, September 5, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (6-09-2022)

 பொதுக்காலம் 23ஆம் வாரம் - செவ்வாய்

முதல் வாசகம்



சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குத் தொடரலாமா? அதுவும் நம்பிக்கை கொள்ளாத மக்கள் முன்னிலையிலா?

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 1-11

சகோதரர் சகோதரிகளே,

உங்களுள் ஒருவருக்கு மற்றொருவரோடு வழக்கு இருப்பின், தீர்ப்புக்காக இறைமக்களிடத்தில் போகாமல் நம்பிக்கை கொள்ளாதோரிடம் செல்லத் துணிவதேன்? இறைமக்கள்தான் உலகுக்குத் தீர்ப்பு அளிப்பவர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகுக்கே தீர்ப்பளிக்கப் போகும் நீங்கள் உங்களிடையே உள்ள சின்னஞ் சிறிய வழக்குகளைத் தீர்த்துக்கொள்ளத் தகுதியற்றவர்களாகி விட்டீர்களா? வானதூதர்களுக்கும் தீர்ப்பு அளிப்பது நாம்தான் என்பதும் உங்களுக்குத் தெரியாதா? அப்படியிருக்க அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் வழக்குகளை நீங்களே தீர்த்துக்கொள்ள முடியாதா? அத்தகைய வழக்குகளைத் தீர்க்கச் சபையினரால் புறக்கணிக்கப்பட்டோரை நடுவர்களாக அமர்த்துவது எப்படி?

நீங்கள் வெட்கமடையவே இதைச் சொல்கிறேன். சகோதரர் சகோதரிகளிடையே உள்ள வழக்குகளைத் தீர்க்க உங்களுள் ஞானமுள்ளவர் ஒருவர்கூட இல்லையா? சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குத் தொடரலாமா? அதுவும் நம்பிக்கை கொள்ளாத மக்கள் முன்னிலையிலா? நீங்கள் ஒருவர்மீது மற்றவர் வழக்குத் தொடருவதே உங்களுக்கு ஒரு தோல்வியாகும். உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கை நீங்கள் பொறுத்துக்கொள்ளக் கூடாதா? உங்கள் உடைமைகளை வஞ்சித்துப் பறிக்கும்போது அதை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாதா? ஆனால் நீங்களே ஒருவருக்கொருவர் தீங்கிழைக்கிறீர்கள்; வஞ்சித்துப் பறிக்கிறீர்கள்; அதுவும் சகோதரர் சகோதரிகளுக்கே இப்படிச் செய்கிறீர்கள்.

தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதீர்கள்; பரத்தைமையில் ஈடுபடுவோர், சிலைகளை வழிபடுவோர், விபசாரம் செய்வோர், தகாத பாலுறவு கொள்வோர், ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர், திருடர், பேராசையுடையோர், குடிவெறியர், பழிதூற்றுவோர், கொள்ளை அடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை. உங்களுள் சிலர் இவ்வாறுதான் இருந்தீர்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயராலும் நம் கடவுளின் ஆவியாலும் கழுவப்பட்டுத் தூயவரானீர்கள்; கடவுளுக்கு ஏற்புடையவராகவும் இருக்கிறீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a)

பல்லவி: ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.
2
இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! - பல்லவி

3
நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!
4
ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ் நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப்படுத்துவார். - பல்லவி

5
அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக!
6a
அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்;
9b
இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.

 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 12-19

அந்நாள்களில் இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார். அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே.

இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள்.

அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


----------------------------------------------------------
1 கொரிந்தியர் 6: 1-11
“உலகுக்கே தீர்ப்பளிக்கப்போகும் நீங்கள், உங்களிடையே உள்ள சின்னஞ்சிறிய வழக்குகளைத் தீர்த்துக்கொள்ளத் தகுதியவற்றவர்களாகி விட்டீர்களா?”
நிகழ்வு
ஒரு சிற்றூரில் விவசாயி ஒருவர் இருந்தார். இவர் தன்னுடைய வீட்டிற்குப் பின்னால் இருந்த தோட்டத்தில் காய்கறிகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் இவருடைய வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் இருந்தவர், வளர்த்து வந்த கோழிகள் இவருடைய தோட்டத்திற்குள் புகுந்து, செடிகளையும் காய்கறிகளையும் நாசம் செய்துவந்தன. இதைப் பார்த்து விவசாயி விழி பிதுங்கி நின்றார்.
‘பக்கத்துக்கு வீட்டுக்காரர்...! அவரிடம் இந்தப் பிரச்சனையைச் சொல்லி சண்டை பிடித்தால் அது நிரந்தரப் பகையாகிவிடும்; அதன்பிறகு மனவருத்தத்தோடுதான் அவரோடு காலம் தள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதே நேரத்தில் அவர் வளர்த்து வரும் கோழிகளை நம்முடைய தோட்டத்திற்குள் அனுமதித்தால், நமக்குத்தான் பேரிழப்பு ஏற்படும்! இதற்கு என்ன செய்வது...?” என்று விவசாயி தீவிரமாக யோசித்தார்.
அப்பொழுதுதான் இவருக்கு ஓர் அருமையான யோசனை வந்தது. அதன்படியே செய்துவிடலாம் என்று இவர் முடிவுசெய்து, அவ்வூரில் இருந்த ஒரு பலசரக்குக் கடைக்குச் சென்று, கொஞ்சம் முட்டைகளை வாங்கி, அவற்றைப் பக்கத்துக்கு வீட்டுக்காரரிடம் எடுத்துக்கொண்டு போய், “நீங்கள் வளர்த்து வரும் கோழிகள் என்னுடைய காய்கறித் தோட்டத்திற்குள் முட்டைகளை இட்டுவிட்டுச் சென்றுவிட்டன. நான் யாருடைய உடைமைக்கும் பொருளுக்கும் ஆசைப்படாதவன். அதனால்தான் நான் உங்களுடைய கோழிகள் என்னுடைய தோட்டத்தில் இட்ட முட்டைகளை உங்களிடம் கொடுத்துவிட்டுப் போகலாம் என்று வந்திருக்கின்றேன்” என்றார்.
விவசாயி கொடுத்த கோழி முட்டைகளை நன்றியுணர்வோடு பெற்றுக்கொண்ட பக்கத்து வீட்டுக்காரர், விவசாயிக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு, அதன்பிறகு தன்னுடைய கோழிகள் விவசாயியின் காய்கறித் தோட்டத்திற்குள் போகாத வண்ணம் பார்த்துக்கொண்டார்.
இந்த நிகழ்வில் வருகின்ற விவசாயி, பக்கத்து வீட்டுக்காரரின் கோழிகள் தன்னுடைய தோட்டத்திற்குள் வந்து மேய்ந்தபொழுது, அதைப் பெரிய பிரச்சனையாக்காமல், முன்மதியோடு செயல்பட்டு, அந்தப் பிரச்சனைக்கு, வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். நாமும்கூட பிறரோடு இருக்கும் வழக்குகளை முன்மதியோடும் நமக்குள்ளேயும் தீர்த்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, அதைப் பிறரிடத்தில் கொண்டு சென்று, பெரிய பிரச்சனையாக்கக்கூடாது என்பதை இந்த நிகழ்வும் இன்றைய முதல் வாசகமும் எடுத்துக்கூறுகின்றன. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
வழக்குகளைப் பிற இனத்தாரிடம் கொண்டுசென்ற மக்கள்
இன்றைய முதல் வாசகத்தில், புனித பவுல் கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்த மற்றுமொரு முக்கியமான பிரச்சனையைக் குறித்துப் பேசுகின்றார். அது என்னவெனில், தங்களுடைய ஏற்படும் வழக்குகளை தீர்த்துக்கொள்ள, இறைமக்களிடம் போகாமல், பிற இனத்தாரிடம் சென்றதாகும்.
இறைமக்கள், தங்களிடையே ஏற்படும் வழக்குகளை, சிக்கல்களை தங்களுக்குள்ளே தீர்த்துக்கொள்ளாமல், பிற இனத்தாரிடம் கொண்டுசெல்கின்றபொழுது என்ன நடக்குமெனில், முதலாவதாக, இறைமக்களுடைய சூழல், அவர்களுடைய பின்புலத்தை அறியாத பிற இனத்தார் இறைமக்களுக்கு நல்லதொரு தீர்ப்பு வழங்கமுடியாத நிலை ஏற்படும். இரண்டாவதாக, இறைமக்கள் தங்களுடைய வழக்குகளை பிற இனத்தாரிடம் கொண்டுசெல்கின்றபொழுது, பிரச்சனை மிகவும் பெரிதாகுமே ஒழிய, அது தீர்வதற்கான வழியில்லை. மூன்றாவதாக, இறைமக்கள் தங்களுடைய வழக்குகளைப் பிற இனத்தாரிடம் கொண்டு செல்கின்றபொழுது, அவர்கள் முதிர்ச்சி இல்லாதவர்கள், கிறிஸ்துவின் விழுமியங்களின்படி (மத் 5:39) நடக்கவில்லை என்பதையே காட்டும். இதனால் இறைமக்கள் தங்களிடைய ஏற்படும் வழக்குகளை தங்கள் நடுவில் இருக்கும் ஞானமுள்ளவர்களை நாடித் தீர்த்துக்கொள்ளச் சொல்கின்றார் புனித பவுல்.
கிறிஸ்துவின் வழியில் நடப்பவர்கள் தங்களுடைய மகத்துவத்தை உணரவேண்டும்
புனித பவுல், கொரிந்து நகரில் இருந்தவர்கள் தங்களிடையே ஏற்படும் வழக்குகளை, தங்களுக்குள்ளே தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று சொல்வதற்கு மற்றுமொரு முக்கியமான காரணத்தை முன்மொழிகின்றார். அது என்னவெனில், ‘இறைமக்கள் உலகுக்குத் தீர்ப்பளிப்பவர்கள்’ என்பதாகும். இது குறித்து திருவெளிப்பாடு நூல் 3:21 இல் நாம் இவ்வாறு வாசிக்கின்றோம்: “நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல, வெற்றி பெறும் எவருக்குமே எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்.” ஆம், சாத்தானை வெற்றி பெறும் ஒருவர், இயேசுவோடு அவருடைய அரியணையில் வீற்றிருக்கும் பேற்றினை பெறுகின்றார். அவ்வாறெனில் அவருக்கு, இவ்வுலகிற்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரமும் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
இத்தகைய காரணங்கள், கொரிந்து நகரில் இருந்தவர்கள் தங்களுடைய வழக்குகளை பிற இனத்தாரிடம் எடுத்துச் சொல்லாமல், தங்களுக்குள்ளே தீர்த்துக்கொள்ளவும், தங்களுள்ளே ஒற்றுமையோடு வாழவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார் புனித பவுல்.
இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், பிறரோடு ஒற்றுமையோடு வாழ்கின்றோமா? அல்லது பிரச்சனையோடு வாழ்ந்து, அதைப் பெரிதாக்கிக்கொண்டிருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து காணிக்கையைச் செலுத்துங்கள்’ (மத் 5: 23-24) என்பார் இயேசு. ஆகையால், நாம் நமக்கிடையே இருக்கும் பிணக்குகளை, வழக்குகளை சுமூகமாகத் தீர்த்துக்கொண்டு, நல்லுறவோடு வாழ்ந்து இயேசுவுக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்
-----------------------------------------------------------
லூக்கா 6: 12-19
பன்னிருவரைத் தேர்தெடுத்த இயேசு
நிகழ்வு
மாமன்னர் ஒருவர் இருந்தார். இவருக்குக் குழந்தை கிடையாது. அதனால் இவர் தனக்குப் பிறகு நாட்டை ஆளுகின்ற பொறுப்பை யாரிடத்தில் கொடுப்பது என்று மிகத் தீவிரமாக யோசித்தார். கடைசியாக இவருக்கு ஒரு யோசனை வந்தது. அதன்படியே செய்யலாம் என்று இவர் முடிவுசெய்தார்.
இதைத் தொடர்ந்து இவர் தன்னிடம் பணியாற்றிய நான்கு அமைச்சர்களை அழைத்தார். அவர்களிடத்தில் ஒரு பூட்டைக்க் கொடுத்து, இப்பூட்டானது கணித முறையில் வடிவமைக்கப்பட்டிருகின்றது. இதை யார் திறக்கின்றாரோ, அவரையே நான் எனக்குப் பின் இந்த நாட்டின் மன்னராக முடிசூட்டுவேன்” என்றார்.
மாமன்னர் இவ்வாறு சொன்னதும் அந்த நான்கு அமைச்சர்களில் ஒருவரைத் தவிர்த்து மற்ற மூன்று அமைச்சர்களும், ‘பூட்டு கணித முறையில் வடிவமைக்கப்பட்டது என்பதால், இதைத் திறப்பதற்கு ஓலைச் சுவடிகளில் ஏதாவது குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும். அவற்றைப் படித்துப் பார்த்துவிட்டு, பூட்டைத் திறந்து பார்க்கலாம்’ என்று ஓலைச் சுவடிகளைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் நீண்டநேரம், ஓலைச் சுவடிகளைப் புரட்டிப் பார்த்தபொழுதும், கணித முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பூட்டைத் திறப்பதற்கான குறிப்புகள் எங்கும் குறிப்பிடப்படாததால், அவர்கள் சோர்ந்து போனார்கள்.
ஆனால், ஓலைச் சுவடிகளையோ, வேறு எந்தவொரு குறிப்பையோ பார்க்காமல், மிகவும் சாதாரண இருந்த நான்காவது அமைச்சர், பூட்டைக் கூர்ந்து கவனித்தபொழுதுதான் தெரிந்தது, அது பூட்டப்படவில்லை என்பது. உடனே அந்த நான்காவது அமைச்சர், பூட்டு பூட்டப்படாமல் திறந்தேதான் இருக்கின்றது என்பதை மாமன்னரிடம் சொன்னபொழுது, மாமன்னர் அவரை மன்னராக முடிசூட்டினார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மாமன்னர் தனக்குப் பின் நாட்டை ஆள்வதற்கு யார் தகுதியானர் என்பதை ஒரு வித்தியாசமான போட்டியின் மூலம் தேர்ந்தெடுத்தார். ஆண்டவர் இயேசு, தனக்குப் பின் தனது பணியை – இறையாட்சிப் பணியைத் – தொடர்வதற்கு யாரெல்லாம் சரியானவர்கள் என்பதை இரவெல்லாம் இறைவனிடம் வேண்டிவிட்டுத் தேர்ந்தெடுக்கின்றார். இயேசு பன்னிருவரைத் தேர்ந்தெடுத்தது நமக்கு செய்தியை எடுத்துக்கூறுகின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவேண்டலோடு எந்தவொரு செயலையும் தொடங்கும் இயேசு
நற்செய்தியில் இயேசு பன்னிருவரைத் தேர்ந்தெடுக்கின்றார். அதற்கு முன்னதாக அவர் ஒரு மலைக்குச் சென்று இரவெல்லாம் கடவுளிடம் வேண்டுவதற்குச் செலவிட்டார் என்று வாசிக்கின்றோம். ஆம், இயேசு எந்தவொரு செயலையும் இறைவேண்டலோடுதான் தொடங்கினார். இறையாட்சிப் பணியைத் தொடங்கும்பொழுது அவர் நாற்பது நாள்கள் நோன்பிருந்து மன்றாடினார் (மத் 4: 1) ஒவ்வொரு நாளும் தன்னுடைய பணியைத் தொடங்குவதற்கு முன்பாகவும் இயேசு இறைவனிடம் வேண்டினார் (மாற் 1: 35). எல்லாவற்றிற்கும் மேலாக பாடுகளைப் படுவதற்கு முன்பாகவும் இயேசு இறைவனிடம் வேண்டினார் (லூக் 22: 41). இவ்வாறு எந்தவொரு செயலையும் தொடங்குவதற்கு முன்பாக இறைவனிடம் வேண்டிய இயேசு, பன்னிருவரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாகவும் இறைவனிடம் வேண்டுகின்றார்.
இயேசு எந்தவொரு செயலையும் இறைவேண்டலோடு தொடங்கியதுபோன்று, நாமும் எந்தவொரு செயலையும் இறைவேண்டலோடு தொடங்கினோம் எனில், அது நமது மிகப்பெரிய ஆசியாக இருக்கும் என்பது உறுதி
தனக்குப் பின் தன் பணியைத் தொடர்வதாகப் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்த இயேசு
எந்தவொரு இயக்கமாக இருந்தாலும் அல்லது நிறுவனமாக இருந்தாலும் அது தொடங்கிய கையோடு முடிந்துவிடாமல் தொடர்ந்து நடைபெற இயக்கத் தோழர்கள், தொண்டர்கள், பணியாளர் கட்டாயம் இருந்தாக வேண்டும். இயேசு தன்னுடைய பணி – இறையாட்சிப் பணி - தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதற்காகப் பன்னிருவரைத் தேர்ந்தெடுக்கின்றார். இந்தப் பன்னிருவரும் இஸ்ரயேலில் இருந்த பன்னிரு குலங்களையும் அடையாளபடுத்துபவர்களாக இருந்தாலும் (மத் 19: 20) பன்னிருவரும் வெவ்வேறு குணங்களைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இது இறையாட்சிப் பணிக்கு ஒரு குறிப்பிட்ட மக்கள் போதும் என்று இல்லாமல், எல்லாரும் தேவை என்ற செய்தியை நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது.
இயேசு வெவ்வேறு குணங்களைக் கொண்ட பன்னிருவரைத் திருத்தூதர்களாகத் தேர்ந்தெடுத்து, அவர்கள்மூலம் இறையாட்சிப் பணி தொடர்ந்து நடைபெறுமாறு செய்தார். நாமும்கூட பலரையும் இயேசு கிறிஸ்துவில் ஒன்றிணைத்து, இறையாட்சிப் பணி தொடர்ந்து நடைபெறுவதற்கு முயற்சி செய்யவேண்டும்.
சிந்தனை
‘நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்’ (மத் 28: 19) என்பார் இயேசு. ஆகையால், இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாம், மற்றவரையும் அவருடைய சீடராக்கி, இறையாட்சிப் பணி தொடர்ந்து நடைபெறச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Join with us 👇

Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A

Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076

Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283

WhatsApp: https://chat.whatsapp.com/G5K3erwXGiJ4VWuBVUvCnz

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...