Thursday, September 8, 2022

Liturgy of the Hours in Tamil - தமிழ் திருப்புகழ் மாலை

 

பொதுக்காலம் 23ஆம் வாரம் - வெள்ளி



காலைப் புகழ்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

விண்ணில் நிலையான மாட்சிமையே,
மண்ணில் வாழ்வோர் நம்பிக்கையே,
உன்னத தந்தையின் ஒரே மகனே,
கன்னியின் அருமை மகனே,

உம்வலக்கை உதவிட யாம் எழவே,
எம்முளம் நிறைந்த ஆர்வத்துடன்
உம்புகழ் பாடி நன்றியுடன்
உம்பதம் நாடிட அருள்கூர்வீர்.

கதிரவன் எழவே காரிருள் அகலுமே;
அதுபோல் எமக்கொளி உம்வருகையே;
உம்மேல் ஒளிர்ந்து உளம் நிறைத்து,
உம்மை உணர்ந்து உவப்புறச் செய்வீர்.

உம்கொடை யே எம் நம்பிக்கை,
எம்முள் ஆழ்ந்தது ஊன்றிடுக;
நம்பிக்கை அதனுடன் வளம்பெறுக
அன்பே அனைத்தினும் ஓங்கிடுக.

நேயரெம் வேண்டல் ஏற்பீர், தந்தாய்,
உயர் நிலை வீற்றிருக்கும் உம்மகனும்
அச்சம் அகற்றும் ஆவியருடன்
இச்செகம் என்றும் ஆளுகவே, ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: உமக்கெதிராக மட்டுமே நான் பாவம் செய்தேன். ஆண்டவரே எனக்கு இரங்கும்.

இறைவா என்மீது இரங்கியருளும்

திபா 51

“உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும். கடவுளது சாயலாக படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்த கொள்ளுங்கள்” (எபே 4:23-24).

கடவுளே உமது பேரன்பிற்கேற்ப எனக்கு இரங்கும்;
உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப
என் குற்றங்களைத் துடைத்தருளும்.
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி
என்னைக் கழுவியருளும்;
என் பாவம் அற்றுப்போகும்படி
என்னைத் தூய்மைப்படுத்தியருளும்.

ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்;
என் பாவம் எப்போதும்
என் மனக்கண்முன் நிற்கின்றது.
உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;
உம் பார்வையில் தீயது செய்தேன்;

எனவே உம் தீர்ப்பில் உம் நீதி வெளிப்படுகின்றது;
உம் தண்டனைத் தீர்ப்பில் உம் நேர்மை விளங்குகின்றது.
இதோ! குற்ற நிலையில்
என் வாழ்வைத் தொடங்கினேன்;
பாவத்தோடே என் அன்னை
என்னைக் கருத்தாங்கினார்.

இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே;
மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்.
ஈசோப்பினால் என்னைக் கழுவும்;
நான் தூய்மையாவேன்;
என்னைக் கழுவியருளும்;
உறை பனியிலும் வெண்மையாவேன்.

மகிழ்வொலியும் அக்களிப்பும் நான் கேட்கும்படி செய்யும்
நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக!
என் பாவங்களைப் பாராதபடி
உம் முகத்தை மறைத்துக் கொள்ளும்;
என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும்.

கடவுளே! தூயதோர் உள்ளத்தை
என்னுள்ளே படைத்தருளும்;
உறுதிதரும் ஆவியை, என்னுள்ளே புதுப்பித்தருளும்.
உமது திருமுன்னிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்;
உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்;
உம்மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்;
ஆர்வமிக்க மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
வரம்பு கடப்போருக்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்;
பாவிகள் உம்மை நோக்கித் திரும்பி வருவார்கள்.

இறைவா! எனது மீட்பின் இறைவா!
இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்;
என் நா உமது நீதியை ஏத்திப்பாடும்.
என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்;
என் வாய் உமது புகழை எடுத்துரைக்கும்.

ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க இயலாது;
நான் எரிபலி செலுத்தினாலும்
நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
இறைவா! உமக்கேற்ற பலி நொறுங்கிய உள்ளமே;
கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை
நீர் அவமதிப்பதில்லை.

சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்;
எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!
அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும்
முறையான பலிகளை விரும்புவீர்;
மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில்
பலியாகச் செலுத்தப்படும்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : உமக்கெதிராக மட்டுமே நான் பாவம் செய்தேன். ஆண்டவரே எனக்கு இரங்கும்.


மு. மொ. 2: ஆண்டவரே, எங்கள் குற்றங்களை நாங்கள் அறிகின்றோம். உமக்கெதிராக நாங்கள் பாவம் செய்தோம்.

பஞ்சத்தின்போதும் போரின்போதும் மக்களின் புலம்பல்

சிறுபாடல்
எரே 14: 17-21

காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் (மாற் 1:15)

நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு;
“என் கண்கள் இரவு பகலாகக் கண்ணீர் சொரியட்டும்;
இடைவிடாது சொரியட்டும்;
ஏனெனில் என் மக்களாம் கன்னிமகள் நொறுங்குண்டாள்;
அவளது காயம் மிகப் பெரிது.

வயல்வெளிகளுக்குச் சென்றால்,
இதோ! வாளால் மடிந்தவர்கள்!
நகரில் நுழைந்தால், இதோ! பசியால் நலிந்தவர்கள்!
இறைவாக்கினரும் குருக்களும்
தங்களுக்கு முன்பின் தெரியாத நாட்டில் அலைகின்றனர்.

நீர் யூதாவை முற்றிலும் புறக்கணித்துவிட்டீரா?
சீயோனை உம் உள்ளம் வெறுத்துவிட்டதா?
நாங்கள் குணமாக முடியாதபடி
ஏன் எங்களை நொறுக்கினீர்?

நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்;
பயனேதும் இல்லை!
நலம் பெறும் காலத்தை எதிர்பார்த்திருந்தோம்
பேரச்சமே மிஞ்சியது!

ஆண்டவரே! எங்கள் குற்றத்தையும்
எங்கள் மூதாதையரின் தீமையையும்
நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்:
நாங்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தோம்.

உம் பெயரை முன்னிட்டு எங்களை உதறித் தள்ளாதீர்;
உம் மாட்சிமிகு அரியணையை அவமதிக்காதீர்;
நீர் எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்;
அதனை முறித்துவிடாதீர்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, எங்கள் குற்றங்களை நாங்கள் அறிகின்றோம். உமக்கெதிராக நாங்கள் பாவம் செய்தோம்.


மு. மொ. 3: ஆண்டவரே கடவுள், நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்.

ஆண்டவரின் கோவிலில் நுழைவோரின் மகிழ்ச்சிக் கீதம்

திபா 100

‘ஆண்டவர் தாம் மீட்டுக்கொண்ட அனைவரையும் வெற்றிக் கீதம் பாட அழைக்கிறார்’. (புனித அத்தனாசியார்)

அனைத்துலகோரே!
ஆண்டவரைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!

ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!
அவரே நம்மைப் படைத்தவர்!
நாம் அவர் மக்களாவோம்,
அவர் மேய்க்கும் ஆடுகளாவோம்.

நன்றியோடு அவர் தம் திருவாயில்களில் நுழையுங்கள்!
புகழ்ப்பாடலோடு அவர் தம் முற்றத்திற்கு வாருங்கள்!
அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப்
போற்றுங்கள்!

ஏனெனில் ஆண்டவர் நல்லவர்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு;
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே கடவுள், நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்.


அருள்வாக்கு

2 கொரி 12: 9ஆ-10

நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.


சிறு மறுமொழி

முதல்:ஆண்டவரே, காலையில் உமது அன்பை நான் அறியச் செய்வீராக.
எல்:ஆண்டவரே, காலையில் உமது அன்பை நான் அறியச் செய்வீராக.
முதல்:நான் நடக்கவேண்டிய பாதையை எனக்குக் காட்டியருளும்.
எல்:ஆண்டவரே, காலையில் உமது அன்பை நான் அறியச் செய்வீராக.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:ஆண்டவரே, காலையில் உமது அன்பை நான் அறியச் செய்வீராக.

செக்கரியாவின் பாடல்

மு. மொ. : ஆண்டவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.

லூக் 1: 68-79

மெசியாவையும் அவருக்கு முன் அனுப்பப்பட்டவரையும் பற்றியது.

இஸ்ரயேலின் கடவுளாகிய
ஆண்டவரைப் போற்றுவோம்
எனெனில் அவர்தம் மக்களைத்
தேடிவந்து விடுவித்தருளினார்.

தும் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர்
நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.

அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு
அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து
விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய்,
உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.

இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு
ஒளிதரவும்,
நம்முடைய கால்களை
அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.


மன்றாட்டுகள்

நமக்கு ஒரு தலைமைக் குரு இருக்கிறார்; நம்முடைய வலுவின்மையில் நமக்கு இரக்கம் காட்டுகிறார். அவர் நம்மைப் போலிருந்ததால் எல்லாவித சோதனைகளுக்கும் உள்ளானார்: ஆயினும் அவர் பாவம் செய்யவில்லை. நாம் அவரிடம் வேண்டுவோம்.

என்: ஆண்டவரே, உமது இரக்கத்தையும் பரிவன்பையும் எங்களுக்குக் காட்டியருளும்.

ஆண்டவரே, வரவிருக்கும் மாட்சியை முன்னிட்டு நீர் விருப்பத்துடன் திருச்சிலுவையை நோக்கிச் சென்றீர் — நாங்கள் உம் இறப்பில் பங்குகொண்டு, அதனால் உமது மகிழ்ச்சியிலும் பங்குகொள்ளச் செய்தருளும்.

ஆண்டவரே ‘யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வந்து பருகட்டும்’ என்று சொன்னீர் – இப்போது உம்மில் தாகம் கொண்டோர்க்கு உமது ஆவியாரை அளித்தருளும்.

எல்லா நாடுகளுக்கும் சென்று நற்செய்தியைப் போதிக்கும்படி நீர் உம் சீடர்களை அனுப்பினீர் – இன்று நற்செய்தியை அறிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஆசீர்வதியும்.

விண்ணகத் தந்தை தங்கள் மீது அக்கறை கொண்டுள்ளார் என வேதனையிலிருப்போர் உணரச் செய்தருளும் — ஏனெனில், அவர் தம் சொந்த மகனை அன்பு செய்தது போல் அவர்களையும் அன்பு செய்கிறார்.


ஆண்டவரின் இறைவேண்டல்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.


இறுதி மன்றாட்டு

எல்லாம் வல்ல தந்தையே, எங்கள் உள்ளங்களில் உமது ஒளியை ஊடுருவச் செய்தருளும்; அதனால் உம்முடைய கட்டளைகளின் வழியில் நாங்கள் நடந்து எங்கள் தலைவரும் வழிகாட்டியுமாகிய உம்மை என்றும் பின்பற்றுவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்


பொதுக்காலம் 23ஆம் வாரம் - வெள்ளி

நண்பகல் இறைவேண்டல்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

வல்ல அரசரே, உண்மைக் கடவுளே,
எல்லாக் காலச் சுழற்சியை அமைத்தீர்,
தண்ணொளியைக் காலைப் பொழுதிற்(கு) தந்தீர்,
நண்பகல் வேளையில் வெப்பம் தந்தீர்.

பற்றி எரியும் பகைமையை அணைப்பீர்,
குற்றங் குறைகளின் வெப்பம் தணிப்பீர்,
உமது காவலை உடலுக்கு அளிப்பீர்,
எமக்கு உள்ள அமைதியை அருள்வீர்.

தந்தையே, அன்பு மிகுந்த இறைவனே,
தந்தைக்கு இணையான ஒரேதிருப் புதல்வரே,
ஆறுதல் அளிக்கும் தூயநல் ஆவியாரே,
ஆண்டாண்டு காலம் புகழ்பெற்(று) ஆள்வீர்,
ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: மானிடரின் நிந்தனைக்கு ஆளான துன்பு துயரங்களின் மனிதரை நாங்கள் கண்டோம்.

நீதிமான் அழைக்கும்போது ஆண்டவர் செவிசாய்க்கிறார்

திபா 22: 1-11

என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார். (மத் 27:46)

என் இறைவா, என் இறைவா,
ஏன் என்னைக் கைவிட்டீர்?
என்னைக் காப்பாற்றாமலும்,
நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும்
ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?
என் கடவுளே, பகலில் நான் மன்றாடுகின்றேன்;
பதில் நீர் அளிப்பதில்லை,
இரவி லும் மன்றாடுகின்றேன்;
எனக்கு அமைதி கிடைப்பதில்லை.

நீரோ, தூயவராய் விளங்குகின்றீர்;
இஸ்ரயேலின் புகழ்ச்சிக்கு உரியவராய் வீற்றிருக்கின்றீர்;
எங்கள் மூதாதையர் உம்மில் நம்பிக்கை வைத்தனர்;
அவர்கள் நம்பியதால் நீர் அவர்களை விடுவித்தீர்.
உம்மை அவர்கள் வேண்டினார்கள்;
விடுவிக்கப்பட்டார்கள்;
உமமை அவர்கள் நம்பினார்கள்; ஏமாற்றமடையவில்லை.

நானோ ஒரு புழு, மனிதனல்லன்;
மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்;
மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்.
என்னைப் பார்ப்போர் எல்லாரும்
ஏளனம் செய்கின்றனர்;
உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,
‘ஆண்டவர் மீது இவன் நம்பிக்கை வைத்தானே,
அவர் இவனை மீட்கட்டும்,
தாம் அன்பு கூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்’
என்கின்றனர்.

என்னைக் கருப்பையினின்று
வெளிக்கொணர்ந்தவர் நீரே;
என் தாயிடம் பால்குடிக்கையிலேயே
என்னைப் பாதுகாத்தவரும் நீரே!
கருப்பையிலிருந்தே உம்மைச் சார்ந்திருந்தேன்;
என் தாயின் வயிற்றில் இருந்தது முதல்
என் இறைவன் நீரே.
என்னைவிட்டுத் தொலைவில் போய்விடாதேயும்;
ஏனெனில், தொல்லை நெருங்கிவிட்டது
உதவி செய்வார் யாருமில்லை.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : மானிடரின் நிந்தனைக்கு ஆளான துன்பு துயரங்களின் மனிதரை நாங்கள் கண்டோம்.


மு. மொ. 2: அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொண்டனர்.

திபா 22: 12-22

காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன;
பாசானின் கொழுத்த எருதுகள்
என்னைச் சுற்றி நிற்கின்றன,
அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை
அகலத் திறக்கின்றார்கள்;
இரை தேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள்.

தரையில் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்;
என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின;
என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று;
உள்ளுறுப்புகளின் நடுவே அது உருகிப்போயிற்று.

என் தொண்டை ஓடுபோலக் காய்ந்தது;
என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது;
என்னைச் சாவின் புழுதியிலே போட்டு விட்டீர்.
நாய்கள் சூழ்ந்து கொள்வதுபோல்
தீமை செய்வோரின் கூட்டம்
என்னை வளைத்துக் கொண்டது;
என் கைகளையும் கால்களையும்
அவர்கள் துளைத்தார்கள்.

என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்;
என்னை அவர்கள் முறைத்துப் பார்க்கின்றார்கள்.
என் ஆடைகளைத் தங்களிடையே
பங்கிட்டுக் கொள்கின்றார்கள்;
என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றார்கள்.

நீரோ ஆண்டவரே!
என்னை விட்டுத் தொலைவில் போய்விடாதேயும்
என் வலிமையே!
எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.
வாளுக்கு இரையாகாதபடி என் உயிரைக் காத்தருளும்;
இந்த நாய்களின் வெறியினின்று
என் ஆருயிரைக் காப்பாற்றும்;
இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து
என்னைக் காப்பாற்றும்.

காட்டெருமைகளின் கொம்புகளில்
சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்.
உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்;
சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொண்டனர்.


மு. மொ. 3: பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் ஆண்டவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.

திபா 22: 23-31

ஆண்டவருக்கு அஞ்சுவோரே, அவரைப் புகழுங்கள்;
யாக்கோபின் மரபினரே,
அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்;
இஸ்ரயேல் மரபினரே,
அனைவரும் அவரைப் பணியுங்கள்.

எனெனில், எளியோரின் சிறுமையை
அவர் அற்பமாக எண்ணவில்லை;
அதைக் கவனியாமல் இருந்து விடவில்லை;
தமது முகத்தை அவர்களுக்கு மறைக்கவுமில்லை;
தம்மை நோக்கி மன்றாடுகையில்
அவர் அவர்களுக்குச் செவிசாய்த்தார்.

மாபெரும் சபையில் நான் செலுத்தும் புகழ்
உம்மிடமிருந்து எழுவதாக!
உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில்
என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்;
ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வாராக!
அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக!

மண்ணுலகின் கடையல்லைவரை உள்ளோர்
அனைவரும் இதை உணர்ந்து
ஆண்டவர் பக்கம் திரும்புவர்
மக்களினங்களின் குடும்பத்தார் அனைவரும்
அவர் திருமுன் விழுந்து பணிவர்.
ஏனெனில் ஆண்டவருடையது அரசு;
பிற இனத்தார்மீதும் அவர் ஆட்சி புரிகின்றார்.
மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்;
புழுதிக்குள் இறங்குவோர் யாவரும்
தம் உயிரைக் காத்துக் கொள்ளாதோரும்
அவரை வணங்குவர்.

வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்;
இனிவரும் தலைமுறையினருக்கு
ஆண்டவரைப் பற்றி அறிவிக்கப்படும்.
அவரது நீதியை அவர்கள் அறிவிப்பார்கள்.
‘இதை அவரே செய்தார்’ என
இனிப் பிறக்கும் மக்களுக்கும் எடுத்துரைப்பார்கள்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் ஆண்டவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.


அருள்வாக்கு

உரோ 3: 21-22அ

இப்பொழுதோ கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் செயலுக்கும் திருச்சட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது வெளியாக்கப்பட்டுள்ளன. திருச்சட்டமும் இறைவாக்குகளும் இதற்குச் சான்று பகர்கின்றன. இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் வழியாகக் கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்; நம்பிக்கை கொள்வோர் அனைவரையுமே அவர் ஏற்புடையவராக்குகிறார்.


முதல்:ஆண்டவருடைய நியமங்களெல்லாம் நேர்மையானவை; அவை இதயத்திற்கு இன்பம் தருபவை.
எல்:ஆண்டவருடைய திருச்சட்டம் தெளிவானது: அது பார்வைக்கு வெளிச்சம் தருவது.

இறுதி மன்றாட்டு

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உலகம் முழுவதும் இருளில் மூழ்கியிருந்த நேரத்தில் நீர் எங்கள் மீட்புக்காக மாசற்ற பலிப்பொருளாகத் திருச்சிலுவையில் உயர்த்தப்பட்டீர்; நிலைவாழ்வை இந்த மணி நேரத்தில் நாங்கள் அடைவதற்குத் தேவையான ஒளியை எங்களுக்கு அருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்


பொதுக்காலம் 23ஆம் வாரம் - வெள்ளி

மாலைப் புகழ்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

அனைத்தையும் அழகுடன் அமைத்தவரே,
மனிதனை மாண்புடன் படைத்தவரே,
விலங்குகள் ஊர்வன போன்றவற்றை
நிலத்தினின்(று) உருப்பெறப் பணித்தீரே.

படைத்தவை அனைத்தையும் மனிதனுக்கு
ஆளும்படி அதிகாரம் அளித்தீரே;
அனைத்தும் தத்தம் இயல்பின்படி
அவனுக்கு அடங்கிடச் செய்தீரே.

தீயவை சிந்தையிலும் செயலிலும்
தோயவி டா தெம்மைக் காத்தருள்வீர்
மாசுகள் எதுவும் அணுகாது
ஆசையை அடக்க அருளைத் தருவீர்.

விண்ணில் எம் பரிசாய் மகிழ்ச்சி யையும்
மண்ணில் உம் அரு ளையும்எமக் களிப்பீர்
உறுதியாய் மொழிந்த அமைதிலயைத் தந்து
முறிப்பீர், பிணக்கின் தளைக ளையே.

நேயரெம் வேண்டல் ஏற்பீர், தந்தாய்
உயர் நிலை வீற்றிருக்கும் உம்மகனும்
அச்சம் அகற்றும் ஆவியருடன்
இச்செகம் என்றும் ஆளுகவே. ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: ஆண்டவர் உயர்ந்தவர்; தேவர்கள் அனைவரையும் விட நம்மீது அதிகாரம் கொண்டவர்.

மகத்தான செயல்களைச் செய்கிற இறைவனுக்குப் புகழ்

திபா 135: 1-12

“நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழி மரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர். தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள், எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மையிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி” (1 பேது 2:9).

ஆண்டவரின் பெயரைப் புகழுங்கள்;
ஆண்டவரின் ஊழியரே! அவரைப் போற்றுங்கள்!
ஆண்டவரின் கோவிலுள் நிற்பவர்களே!
நம் கடவுளின் கோவில் முற்றங்களில் உள்ளவர்களே!
ஆண்டவரைப் புகழுங்கள்!

ஆண்டவரைப் புகழுங்கள்;
ஏனெனில் அவர் நல்லவர்.
அவரது பெயரைப் போற்றிப் பாடுங்கள்;
ஏனெனில் அவர் இனியவர்.

யாக்கோபை ஆண்டவர்
தமக்கென்று தேர்ந்துகொண்டார்;
இஸ்ரயேலைத் தனிச்சொத்தாகத் தெரிந்தெடுத்தார்.
ஆண்டவர் மேன்மைமிக்கவர் என்பதை அறிவேன்;
நம் தலைவர் எல்லாத் தெய்வங்களுக்கும் மேலானவர்
என்பதும் எனக்குத் தெரியும்.

விண்ணிலும் மண்ணிலும் கடல்களிலும்
அனைத்து ஆழ்பகுதிகளிலும்
தாம் விரும்பும் யாவற்றையும் ஆண்டவர் செய்கின்றார்.
பூவுலகின் கடையெல்லைகளிலிருந்து.
மேகங்களை அவர் எழச் செய்கின்றார்
மழை பெய்யும்படி மின்னலை உண்டாக்குகின்றார்;
காற்றைத் தம் கிடங்குகளிலிருந்து
வெளிவரச் செய்கின்றார்.

எகிப்தியரின் தலைப்பேறுகளை அவர் தாக்கினார்;
மனிதர், கால்நடைகளின் தலைப்பேறுகளை
அவர் அழித்தார்.
எகிப்து நாடே! உன் நடுவில் பார்வோனையும்
அவனுடைய எல்லா ஊழியர்களையும் தண்டிக்குமாறு,
அடையாளங்களையும் அருஞ்செயல்களையும்
அவர் நிகழச்செய்தார்.

பல்வேறு இனத்தவரை அவர் தாக்கினார்;
வலிமை வாய்ந்த மன்னர்களை அவர் கொன்றார்.
எமோரியரின் மன்னனாகிய சீகோனையும்
பாசானின் மன்னனாகிய ஓகையும்
கானானின் எல்லா அரசுகளையும் அழித்தார்;
அவர்கள் நாட்டைத் தம் மக்களாகிய
இஸ்ரயேலருக்கு உரிமைச் சொத்தாக,
சொந்த உடைமையாகக் கொடுத்தார்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவர் உயர்ந்தவர்; தேவர்கள் அனைவரையும் விட நம்மீது அதிகாரம் கொண்டவர்.


மு. மொ. 2: இஸ்ரயேல் குடும்பத்தாரே, ஆண்டவரைப் போற்றுங்கள், அவர்தம் பெயருக்குப் புகழ் பாடுங்கள்; ஏனெனில், அவர் அன்புள்ளவர்.

திபா 135: 13-21

ஆண்டவரே! உமது பெயர் என்றுமுள்ளது;
ஆண்டவரே! உம்மைப்பற்றிய நினைவு
தலைமுறை தலைமுறையாக நீடித்திருக்கும்.
ஆண்டவர் தம் மக்களை நீதியுடன் தீர்ப்பிடுவார்;
தம் அடியாருக்கு அவர் இரக்கம் காட்டுவார்.

வேற்றினத்தார் வழிபடும் சிலைகள்
வெறும் வெள்ளியும் பொன்னுமே;
அவை மனிதரின் கையால் செய்யப்பட்டவையே!
அவற்றுக்கு வாய்கள் உண்டு;
ஆனால் அவை பேசுவதில்லை;
கண்கள் உண்டு; ஆனால் அவை காண்பதில்லை;

காதுகள் உண்டு; ஆனால் அவை கேட்பதில்லை;
வாய்கள் உண்டு; ஆனால் அவை மூச்சுவிடுவதில்லை.
அவற்றைச் செய்துவைப்பவரும்
அவற்றில் நம்பிக்கை வைக்கும் யாவரும்
அவற்றைப் போலவே இருப்பர்.

இஸ்ரயேல் குடும்பத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள்!
ஆரோன் குடும்பத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள்!
லேவி குடும்பத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள்!
அவருக்கு அஞ்சி நடப்போரே! அவரைப் போற்றுங்கள்

எருசலேமைத் தம் உறைவிடமாகக் கொண்டிருக்கும்
ஆண்டவர் போற்றப்படுவாராக!
சீயோனிலிருக்கும் ஆண்டவர் போற்றப்படுவாராக!

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : இஸ்ரயேல் குடும்பத்தாரே, ஆண்டவரைப் போற்றுங்கள், அவர்தம் பெயருக்குப் புகழ் பாடுங்கள்; ஏனெனில், அவர் அன்புள்ளவர்.


மு. மொ. 3: ஆண்டவரே, எல்லா மக்களினங்களும் உம் திருமுன் வந்து உம்மை வணங்கும்.

போற்றுதல் பாடல்

சிறுபாடல்
திவெ 15: 3-4

கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே,
உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன.
மக்களினங்களின் மன்னரே,
உம் வழிகள் நேரியவை, உண்மையுள்ளவை.

ஆண்டவரே, உமக்கு அஞ்சாதவர் யார்?
உமது பெயரைப் போற்றிப் புகழாதார் யார்?
நீர் ஒருவரே தூயவர்,
எல்லா மக்களினங்களும் உம் திருமுன் வந்து வணங்கும்.
ஏனெனில், உம் நீதிச் செயல்கள் வெளிப்படையாயின.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, எல்லா மக்களினங்களும் உம் திருமுன் வந்து உம்மை வணங்கும்.


அருள்வாக்கு

யாக் 1: 2-4

என் சகோதர சகோதரிகளே, பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டிருங்கள் உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் மனவுறுதி நிறைவான செயல்களால் விளங்கட்டும் அப்பொழுது எக்குறையுமின்றி முற்றும் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.


சிறு மறுமொழி

முதல்:கிறிஸ்து நம்மை அன்பு செய்து, தம் இரத்தத்தால் நம் பாவங்களைக் கழுவினார்.
எல்:கிறிஸ்து நம்மை அன்பு செய்து, தம் இரத்தத்தால் நம் பாவங்களைக் கழுவினார்.
முதல்:நாம் கடவுளுக்கு ஊழியம் செய்ய நம்மை அரச குருக்களின் கூட்டத்தினர் ஆக்கினார்.
எல்:கிறிஸ்து நம்மை அன்பு செய்து, தம் இரத்தத்தால் நம் பாவங்களைக் கழுவினார்.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:கிறிஸ்து நம்மை அன்பு செய்து, தம் இரத்தத்தால் நம் பாவங்களைக் கழுவினார்.

கன்னிமரியாவின் பாடல்

மு. மொ. : ஆண்டவர் தம்ஊழியர்களாகிய நமக்கு உதவும் பொருட்டு வந்தார். இவ்வாறு தம் இரக்கத்தை நினைவு கூர்ந்தார்.

லூக் 1: 47-55

என் ஆன்மா ஆண்டவரில் களிகூருகின்றது.

ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.

ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக்
கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

ஏனெனில் வல்லவராம் கடவுள்
எக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கிஎறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே
அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு நினைவில்கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவர் தம்ஊழியர்களாகிய நமக்கு உதவும் பொருட்டு வந்தார். இவ்வாறு தம் இரக்கத்தை நினைவு கூர்ந்தார்.


மன்றாட்டுகள்

தந்தையே, நாங்கள் கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக மன்னிப்புப் பெறவேண்டுமென்று அவர் இறைவேண்டல் செய்தார். நீர் அவரை ஏற்றுக் கொண்டதுபோல, அவர் பாவிகள் அனைவருக்காகவும் செய்த வேண்டுதல்களையும் ஏற்றுக்கொள்ளும்.

எல்: தந்தையே, உமது கரங்களில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்.

தன்னுடைய அன்பு சீடர் வழியாக, இயேசு மரியாவை எங்களுக்கு அன்னையாகக் கொடுத்தார் – அவரோடு சேர்ந்து, அவருடைய எல்லாப் பிள்ளைகளுக்காகவும் நாங்கள் உம்மிடம் வேண்டுகிறோம்.

‘என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்’ என்றார் உம் மகன் — தந்தையே அவரோடு ஒன்றித்து கடுந்துயரில் உம்மை நோக்கிக் கூவி அழைப்போருக்குச் செவிசாய்த்தருளும்.

‘தாகமாயிருக்கிறேன்’ என்ற கூக்குரலை நாங்கள் கேட்க அருள்புரியும் — சின்னஞ்சிறிய எங்கள் சகோதரர் சகோதரிகளிலும் நாங்கள் உம் மகனைக் கண்டு கொள்ளத் துணைசெய்யும்.

தம்முடன் இறக்கும் நிலையில் இருந்தக் கள்வனிடம் இயேசு, “நீர் இன்று என்னேடு பேரின்பவீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் செல்லுகிறேன்", என்றார் — தந்தையே, இவ்விரவு இறப்பவர்களும் இவ்வார்த்தைகளைக் கேட்கச் செய்தருளும்.

திருச்சிலுவை அடையாளத்தைப் பெற்று எங்களுக்கு முன் சென்றவர்களுக்காக வேண்டுகிறோம் – ‘எல்லாம் நிறைவேறிற்று’ என்ற கிறிஸ்துவின் குரலொலி படைப்பனைத்திலும் எதிரொலிக்கும்போது, இவர்களும் அவரோடு வல்லமையுடன் உயிர்த்தெழுவார்களாக.


ஆண்டவரின் இறைவேண்டல்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.


இறுதி மன்றாட்டு

தூய தந்தையாகிய ஆண்டவரே! உம் மகன் இயேசு கிறிஸ்துவே எங்கள் மீட்புக்கு விலையாக இருக்க வேண்டுமென்று நீர் திருவுளமானீர்; நாங்கள் அவருடைய பாடுகளில் பங்கேற்று, அவரது உயிர்ப்பின் ஆற்றலினால் உறுதி பெற்று வாழ எங்களுக்கு அருள் புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்


பொதுக்காலம் 23ஆம் வாரம் - வெள்ளி

இரவு இறைவேண்டல்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

பாரினை எல்லாம் படைத்தாள் இறைவா,
காரிருள் புகஉம் கழலினைத் தொழுதோம்;
பேரருள் புரிந்து எம்மீது) இரங்கிக்
கோரிடும் எம்மைக் காத்தருள் வீரே.

கனவிலும் எமதுளம் உம்மையே நாடுக,
நினைவிலாத் துயிலிலும் உமமையே உணர்க;
நனிசேர் புதுநாள் புலரும் போதும்
இனியவும் புகழை இசைத்தேத் திடுக.

இன்பமார் வாழ்வை எமக்களித் திடுக
அன்பனல் எமக்குள் கனன்றிடச் செய்க
துன்பமும் துயரமும் தரும்கார் இருளை
உன்பெரும் ஒளியில் சுடர்போக் கிடுக.

இறைவா, எல்லாம் வல்ல தந்தாய்
மகன்வழி யாய்எமக் கிவை அருள்வாய்
ஒருபொருள் தந்தை மகன் தூய ஆவியார்
தரைதனில் ஆட்சியும் மாட்சியும் பெறுக. ஆமென்.

அல்லது

கிறிஸ்துவே ஒளியும் பகலும் நீரே
இரவின் இருளை ஈந்தீர் எனினும்
மறுமையில் நீரே ஒளியென விளங்க
தரையிலும் பேரொளி விளக்கா வீரே.

தூயவரே, ஆண்டவரே, துயிலுறு இரவிதில்
நேயமாய் எம்மைக் காத்திட வேண்டுவோம்;
எமதிளைப் பாற்றி உம்மிலே ஆகுக.
அமைதி மிகுந்த இரவினைத் தருக.

உடலின் கண்கள் உறங்கி மூடினும்
உளத்தின் கண்கள் விழித்துமை நோக்குக
உம்மை அன்பு செய்தோம் எனவே
எம்மை ஆற்ற லுடன்காத் தருள்க.

காவல் நீரே கருணைக்கண் ணோக்கிப்
பேயின் சோதனை நின்றெமைக் காப்பீர்;
செந்நீர் சிந்தி மீட்டவும் மக்களை
இன்னல் நீக்கிக் காத்தருள் வீரே.

எம்மை அன்பு செய்யும் கிறிஸ்துவே.
உம்முடன் தந்தையும் ஆவி யாரும்
இம்மையில் மறுமையில் இடையறா தென்றும்
உண்மை மாட்சியும் புகழும் பெறுக. ஆமென்.

அல்லது

போயது பொழுது புகுந்தது இரவு;
தூயரே உமது பொன்னடி தொழுவோம்;
நேயமாய் எல்லா ஏதமும் நீக்கி,
நேயரெமை ஆண்டு காத்தருள் வீரே.

கனவுகள் துயில்வழி காணுதல் வேண்டாம்
கனவிருள் பூதமும் கண்ணுறல் வேண்டாம்
சினமுறு பகைவர் முரணெலாம் வெல்வாய்
ஈனமும் உடலில் சேர்ந்திடாதருள்வாய்.

முதல்வரே தந்தாய் அருள் புரி வீரே
புதல்வரே கிறிஸ்துவே அருள்புரி வீரே
கதிரொளி வெல்லும் ஆவி யாரே
பதம் பணிந்து போற்றிடு வோமே. ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: என் ஆண்டவரே, என் கடவுளே! பகலில் கதறுகிறேன்; இரவில் உம் முன்னிலையில் புலம்புகிறேன்.

கடும் பிணியில் இருக்கும் மனிதனின் இறைவேண்டல்

திபா 88

”இது உங்களுடைய நேரம்: இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது” (லூக் 22.53)

ஆண்டவரே! என் மீட்பின் இறைவா!
பகலில் நான் கதறுகிறேன்;
இரவில் உமது முன்னிலையில் புலம்புகின்றேன்.
என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக!
என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்!

ஏனெனில் என் உள்ளம் துன்பத்தால் நிறைந்துள்ளது;
என் உயிர் பாதாளத்தை நெருங்கிவிட்டது.
படுகுழிக்குள் இறங்குவோருள் ஒருவராக
நானும் கணிக்கப்படுகின்றேன்;
வலுவற்ற மனிதர்போல் ஆனேன்.

இறந்தோருள் ஒருவராகக் கைவிடப்பட்டேன்;
கொலையுண்டு கல்லறையில் கிடப்பவர்போல் ஆனேன்;
அவர்களை நீர் ஒருபோதும் நினைப்பதில்லை;
அவர்கள் உமது பாதுகாப்பினின்று அகற்றப்பட்டார்கள்.

ஆழமிகு படுகுழிக்குள் என்னைத் தள்ளிவிட்டீர்.
காரிருள் பள்ளங்களுக்குள் என்னைக் கைவிட்டுவிட்டீர்.
உமது சினம் என்னை அழுத்துகின்றது;
உம் அலைகள் அனைத்தாலும் என்னை மூழ்கடிக்கின்றீர்.

எனக்கு அறிமுகமானவர்களை
என்னைவிட்டு விலகச் சொய்தீர்;
அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்;
நான் வெளியேற இயலாவண்ணம் அடைபட்டுள்ளேன்.
துயரத்தினால் என் கண் மங்கிப்போயிற்று;

ஆண்டவரே! நாள்தோறும் உம்மை மன்றாடுகின்றேன்;
உம்மை நோக்கி என் கைகளைக் கூப்புகின்றேன்.
இறந்தோர்க்காகவா நீர் வியத்தகு செயல்கள் செய்வீர்?
கீழுலகின் ஆவிகள் எழுந்து உம்மைப் புகழுமோ?

கல்லறையில் உமது பேரன்பு எடுத்துரைக்கப்படுமா?
பாதாளத்தில் உமது சொல்லுறுதி அறிவிக்கப்படுமா?
இருட்டினில் உம் அருஞ்செயல்கள் அறியப்படுமா?
மறதி உலகில் உம் நீதிநெறி உணரப்படுமா?

ஆண்டவரே! நானோ உம்மை நோக்கிக் கதறுகின்றேன்;
காலையில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்.
ஆண்டவரே! என்னை ஏன் தள்ளிவிடுகின்றீர்?
என்னிடமிருந்து உமது முகத்தை ஏன் மறைக்கின்றீர்?

இளமைமுதல் நான்
துன்புற்று மடியும் நிலையில் உள்ளேன்;
உம்மால் வந்த பெருந்திகிலால் தளர்ந்துபோனேன்.
உமது வெஞ்சினம் என்னை மூழ்கடிக்கின்றது;
உம் அச்சந்தரும் தாக்குதல்கள் என்னை அழிக்கின்றன.

அவை நாள் முழுவதும் வெள்ளப்பெருக்கென
என்னைச் சூழ்ந்து கொண்டன;
அவை எப்பக்கமும் என்ன வளைத்துக்கொண்டன.
என் அன்பரையும் தோழரையும்
என்னைவிட்டு அகற்றினீர்;
இருளே என் நண்பன்!

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : என் ஆண்டவரே, என் கடவுளே! பகலில் கதறுகிறேன்; இரவில் உம் முன்னிலையில் புலம்புகிறேன்.


அருள்வாக்கு

1 தெச 14: 9ஆ

ஆண்டவரே! நீர் எங்கள் நடுவில் உள்ளீர்; உமது பெயராலேயே நாங்கள் அழைக்கப்படுகிறோம்; எங்களைக் கைவிட்டு விடாதேயும்.


சிறு மறுமொழி

முதல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
முதல்:உண்மையின் ஆண்டவராகிய கடவுளே, எம்மை மீட்டவர் நீரே.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.

சிமியோன் பாடல்

மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.

லூக் 2: 29-32

கிறிஸ்துவே உலகின் ஒளியும் இஸ்ரயேலின் மாட்சியுமாயிருக்கிறார்.

ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை
இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.

எனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு
நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
என் கண்கள் கண்டுகொண்டன.

இம்மீட்பே பிற இனத்தாருக்கு
வெளிப்பாடு அருளும் ஒளி;
இதுவே உம் மக்களாகிய இஸ்ரையேலுக்குப் பெருமை.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.


இறுதி மன்றாட்டு

எல்லாம் வல்ல கடவுளே! இறந்து, கல்லறையில் புதைக்கப்பட்ட உம் ஒரே மகனோடு நாங்கள் நம்பிக்கையினால் ஒன்றிணைய எங்களுக்கு உமதருளைத் தந்தருளும். இதனால் நாங்கள் அவரோடு புதிய வாழ்வுக்கு உயிர்த்தெழுவோமாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


ஆசியுரை

ஆண்டவர் நமக்கு ஓர் அமைதியான இரவையும் நிறைவான முடிவையும் தந்தருள்வாராக. ஆமென்.


தூய மரியாவுக்குப் பாடல்

வாழ்க அரசியே, தயைமிகு அன்னையே
வாழ்வே, இனிமையே, தஞ்சமே வாழ்க.

தாயகம் இழந்த ஏவையின் மக்கள்
தாயே என்றுமைக் கூவி அழைத்தோம்.

கண்ணீர்க் கணவாய் நின்றும்மை நோக்கிக்
கதறியே அழுதோம், பெருமூச்செறிந்தோம்.

அதலால் எமக்காய்ப் பரிந்துரைப் பவரே
அன்புடன் எம்மைக் கடைக்கண் பாரீர்.

உம்திரு வயிற்றின் கனியாம் இயேசுவே
இம்மை வாழ்வின் இறுதியில் காட்டுவீர்.

கருணையின் உருவே தாய்மையின் கனிவே
இனிமையின் அன்னை மரியா போற்றி! ஆமென்.

அல்லது

மண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே
விண்ணகம் செல்லத் திறந்த வாயிலே
தண் கடல் மீதொளிர் விண்மீன் நீரே

வீழ்ச்சி நின்றெழ முயன்றிடும் மக்களை
ஆட்சி செய்து அவர்க்குதவிடுவீர்.

இயற்கை வியப்புற இறைவனை ஈன்றீர்
ஈன்ற பின்னரும் கன்னியாய் நின்றீர்

வானவன் கபிரியேல் வாழ்த்துரை ஏற்றீர்
ஈனப் பாவிகள் எமக்கு இரங்குவீர். ஆமென்.

அல்லது

வானகம் ஆளும் அரசியே வாழ்க
வானவர் அனைவரின் தலைவியே வாழ்க
எஸ்ஸேயின் வேரே உலகில் பேரொளி
உதயம் ஆகிய வாயிலே வாழ்க.

மாட்சி மிகுந்த கன்னியே மகிழ்க.
ஆட்சி தகைமையின் தாயே மகிழ்க.
எழில்மிகு நாயகி இயேசுவை வேண்டி
பொழிந்திடும் அருளை விடைபெறும் எம்மேல். ஆமென்

அல்லது

கடவுளின் அன்னையே கன்னி மரியே
அடைக்கலம் நீரென அணுகி வந்தோம்;
கடைக்கண் பார்த்து எம்தேவையில் எல்லாம்
எடுத்தெறி யாமல் எம்வேண்டல் ஏற்பீர்

இடுக்கண் இடர்கள் அனைத்திலும் இருந்து
இடைவிடாது எம்மைக் காத்திடு வீரே
பெண்களுக் குள் நீர் பேறுபெற் றீரே!
விண்ணக மாட்சியில் விளங்கும் தாயே. ஆமென்.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...