Saturday, November 5, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (06-11-2022)

 

பொதுக்காலம் 32ஆம் வாரம் - ஞாயிறு

முதல் வாசகம்



நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்.

மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-2, 9-14

அந்நாள்களில்

சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைதுசெய்யப் பட்டார்கள்; சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப் படுத்தப்பட்டார்கள்.

அவர்களுள் ஒருவர் மற்றவர்களின் சார்பில், “நீ எங்களிடமிருந்து கேட்டறிய விரும்புவது என்ன? எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களை மீறுவதை விட நாங்கள் இறக்கத் துணிந்திருக்கிறோம்” என்றார்.

தாம் இறுதி மூச்சு விடும் வேளையில், “நீ ஒரு பேயன். நீ எங்களை இம்மை வாழ்வினின்று அகற்றிவிடுகிறாய். ஆனால் நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்; ஏனெனில் நாங்கள் இறப்பது அவருடைய கட்டளைகளின் பொருட்டே” என்று கூறினார்.

அவருக்குப் பிறகு மூன்றாமவரை அவர்கள் கொடுமைப் படுத்தினார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உடனடியாகத் தம் நாக்கையும் கைகளையும் அவர் துணிவுடன் நீட்டினார்; “நான் இவற்றை விண்ணக இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டேன்; அவருடைய சட்டங்களுக்காக நான் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அவரிடமிருந்து மீண்டும் இவற்றைப் பெற்றுக்கொள்வேன் என நம்புகிறேன்” என்று பெருமிதத்தோடு கூறினார். அவர் தம் துன்பங்களைப் பொருட்படுத்தவில்லை. எனவே மன்னனும் அவனோடு இருந்தவர்களும் இந்த இளைஞரின் எழுச்சியைக் கண்டு வியந்தார்கள்.

அவரும் இறந்தபின் நான்காமவரையும் அவர்கள் அவ்வண்ணமே துன்புறுத்திக் கொடுமைப்படுத்தினார்கள். அவர் இறக்கும் தறுவாயில், “கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்னும் நம்பிக்கை எனக்கு இருப்பதால், மனிதர் கையால் இறக்க விரும்புகிறேன். ஆனால் நீ வாழ்வு பெற உயிர்த்தெழ மாட்டாய்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 17: 1. 5-6. 8,15 (பல்லவி: 15b)

பல்லவி: விழித்தெழும்போது, ஆண்டவரே உம் உருவம் கண்டு நிறைவடைவேன்.

1
ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். - பல்லவி

5
என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது; என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை.
6
இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும். - பல்லவி

8
உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.
15
நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். - பல்லவி

இரண்டாம் வாசகம்

நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை ஆண்டவர் உறுதிப்படுத்துவாராக!

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 16- 3: 5

சகோதரர் சகோதரிகளே,

நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக!

சகோதரர் சகோதரிகளே, இறுதியாக எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள். ஆண்டவருடைய வார்த்தை உங்களிடையே விரைந்து பரவிப் புகழ் பெற்றது. அதுபோல அது எங்கும் பரவிப் புகழ் பெறவும், தீயோர், பொல்லாதவர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படவும் வேண்டுங்கள்; ஏனெனில் நம்பிக்கை எல்லாரிடமும் இல்லை. ஆனால் ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காத்தருள்வார். நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டதை நீங்கள் செய்கிறீர்கள்; இனியும் செய்வீர்கள் என்னும் உறுதியான நம்பிக்கையை ஆண்டவர் எங்களுக்குத் தருகிறார். கடவுளின் அன்பையும், கிறிஸ்துவின் மன உறுதியையும் அடைய ஆண்டவர் உங்கள் உள்ளங்களைத் தூண்டுவாராக!

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திவெ 1: 5-6 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 27-38

அக்காலத்தில்

உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, “போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார். இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம் சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.

அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?” என்று கேட்டனர்.

அதற்கு இயேசு சதுசேயரிடம், “இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்துகொள்வதில்லை. இனி அவர்கள் சாக முடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.

இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’ என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 34-38

அக்காலத்தில்

உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயரிடம் இயேசு கூறியது: “இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. இனி அவர்கள் சாக முடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.

இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’ என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே.”

ஆண்டவரின் அருள்வாக்கு.




நாம் இறப்பின் மக்களா?  வாழும் கடவுளின் மக்களா? 

நவம்பர் மாதம் முழுதும் ஆன்மாக்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட மாதம் என்பதை நாம் அறிவோம். நமது திருஅவை  இறந்த அனைவரும் இறுதி தீர்வையின் போது உயிரோடு எழுப்படுவர்; இறைவனின் இரக்கத்திற்கு ஏற்ப நிலைவாழ்வையும் பெறுவர் என்பதை நம்புகிறது. அதை தம் மக்களுக்கு கற்பிக்கவும் செய்கிறது. இந்நம்பிக்கையில் தாம் நாமும் வளர்ந்து கொண்டிருக்கிறோம். 

இதே நம்பிக்கை யூதர்களிடமும் இருந்தது. ஆனால் அவர்களில் ஒரு பிரிவினரான சதுசேயர்களுக்கு இந்நம்பிக்கை இல்லாமல் போயிற்று. சதுசேயர்களின் இந்த அவநம்பிக்கை  அடிப்படை நம்பிக்கையான "நம் கடவுள் வாழும் கடவுள். வாழ்வோரின் கடவுள் " என்பதற்கே எதிர்மறையானது . அதை உணர இயலாத மக்கள் இயேசுவை தங்கள் பிடியில் சிக்க வைக்க பல கேள்விகளை எழுப்புகிறார்கள்.   அவர்கள் பயன்படுத்திய கேள்விகளும் உதாரணங்களும் திருமணத்தைப் பற்றியதாக இருந்தது.

ஆம். உயிர்த்தெழுதல் என்ற உயர்வான நம்பிக்கையை விளக்க திருமணம் போன்ற அற்ப விஷயங்களைப் பயன்படுத்தியது சதுசேயர்கள் மேலுலகு சார்ந்த வாழும் கடவுளின் மக்களாக வாழாமல் இவ்வுலகத்தின் இறப்பின் மக்களாக வாழ்ந்துள்ளனர் என்பதை ஆணித்தரமாக விளக்குகின்றது அல்லவா.

நம்முடைய வாழ்வில் நாம் உயிருள்ள மக்களாக, வாழ்வோரின் கூட்டத்தில் ஒருவராக, வாழும் கடவுளின் மக்களாக இருக்கிறோமா என சிந்திக்க வேண்டும். இன்றைய நற்செய்த வாசகத்தில் கடவுளைப் பொறுத்தவரை அனைவரும் உயிருள்ளவர்களே என இயேசு கூறுகிறார்.இவ்வார்த்தைள் நமகக்கு பொருந்துமா என நம்மை ஆய்வு செய்வது நம் கடமை. ஏனெனில் நாம் மண்ணில் வாழும் போதும் சரி விண்ணக வாழ்விற்காய் உயிர்த்தெழும் போது சரி உயிருள்ளவர்களாக இருக்கவே அழைக்கப்பட்டுள்ளோம்.

1.இன்றைய முதல் வாசகத்தில் காணும் சகோதர்களைப் போல இறக்கும் தருவாயிலும் துன்பத்தின் உச்ச கட்டத்திலும் நம்பிக்கையைத் தளரவிடாமலும், கடவுளின் கட்டளைகளின்று விலகாமலும் இருந்தால் நாம் நிச்சயம் உயிருள்ளவர்களாக வாழும் கடவுளின் பிள்ளைகளாக இருக்க முடியும்.

2. பதிலுரைப்பாடலிலே தியானிப்பதைப்போல விழித்தெழும் போது கடவுளின் செயல்களைக் குறித்து நன்றி உணர்வும் நிறைவும் நம்மிடம் இருந்தால் நாம் நிச்சயம் உயிருள்ளவர்களாக வாழும் கடவுளின் பிள்ளைகளாக வாழ முடியும்.

3.இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் சொன்னதைப்போல நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் நாம் நிச்சயமாக உயிருள்ளவர்களாக வாழும் கடவுளின் பிள்ளைகளாக வாழமுடியும். நமக்கு உயிர்த்தெழுதலும் நிலைவாழ்வும் நிச்சயம்.

எனவே இன்றைய இறைவார்த்தைகளின் ஒளியில் வாழும் கடவுளின் பிள்ளைகளாக வாழ முயற்சி செய்வோம். இவ்வுலகின் அற்ப விஷயங்களைத் தூக்கிஎறிவோம்.

இறைவேண்டல் 

வாழும் கடவுளே!வாழ்வோரின் கடவுளே! நாங்கள் மண்ணுலகின் அற்ப விஷயங்களைக் கடந்து உயிருள்ளவர்களாக வாழும் கடவுளாகிய உம் மக்களாக வாழ வரமருளும். ஆமென்



அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்





† இன்றைய புனிதர் †
✠ நோப்லாக் நகரின் புனிதர் லியோனார்ட் ✠
(St. Leonard of Noblac)


நோப்லேக் துறவுமட மடாதிபதி:
(Abbot of Noblac)

பிறப்பு: மே 19
ஃபிரான்ஸ் (France)

இறப்பு: கி.பி. 559
லிமோகெஸ் ஃபிரான்ஸ்
(Limoges, France)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglican Church)

பாதுகாவல்:
அரசியல் கைதிகள், சிறையிலடைக்கப்பட்ட மக்கள், யுத்த கைதிகள், சிறைப்பிடிக்கப்பட்டவர்கள், உழைக்கும் பெண்கள், அதேபோல் உழைக்கும் குதிரைகள்

நினைவுத் திருநாள்: நவம்பர் 6

நோப்லாக் நகரின் புனிதர் லியோனார்ட், ஒரு “ஃபிராங்கிஷ்” (Frankish) புனிதரும், ஃபிரான்ஸ் நாட்டிலுள்ள “நோப்லாக்” (Noblac) எனும் இடத்திற்கும், அங்கேயுள்ள துறவு மடத்திற்கும் நெருக்கமானவராவார்.

பாரம்பரிய சுயசரிதம்:
இவர், “மெரோவிஞ்சியன்” (Merovingian) வம்சத்தை தோற்றுவித்த (Founder of the Merovingian dynasty) அரசன் “முதலாம் க்லோவிஸ்” (Clovis I) என்பவரது அரசவையில் உயர்ந்த பதவியில் இருந்தார். இவரும் அரசன் “முதலாம் க்லோவிஸும்” "ரெய்ம்ஸ்" (Bishop of Reims) ஆயரான "புனிதர் ரெமிஜியுஸ்" (Saint Remigius) அவர்களால் கி.பி. 496ம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு தினத்தன்று கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டனர். பின்னர் இவர், தண்டனை பெற்று சிறையிலிருந்த, மன்னிப்பு பேர பொருத்தமான சிறைக் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரத்தை அரசன் முதலாம் க்லோவிஸிடமிருந்து கேட்டு வாங்கினார். அரசன் அளித்த பிரபுக்களுக்கான சிறப்புச் சலுகைகளை தாழ்மையுடன் மறுத்தார். இவரது புனிதத் தன்மையை அறிந்த அரசர், இவரது வேண்டுகோளுக்கு இணங்கி, சிறைப்பட்டோரை விடுவித்தார்.

இவ்வித சலுகை, அக்காலத்தில் தூயவரான ஆயர்களுக்கும் இவரைப் போன்றவர்களுக்குமே அளிக்கப்பட்டிருந்தது. கைதிகள் தங்கள் பாவங்களின் தோஷத்தை கண்டு உணரச் செய்தார். அவர்கள் தங்கள் பாவங்களுக்காக துயரப்பட்டு, தவம் செய்து, வாழ்வை திருத்தியமைக்க உதவி செய்தார்.

பின் இவர் "ரெய்ம்ஸ்" ஆயர் "புனித ரெமிஜியுஸின்" சீடரானார். சிறிது காலம் வேதம் போதித்தார். இவர் அரண்மனைக்குத் திரும்பி வரவேண்டுமென்று அரசர் நச்சரித்துக் கொண்டிருந்தமையால், “புனிதர் மெஸ்மின்” (Saint Mesmin) மற்றும் “புனிதர் லீ” (Saint Lie) ஆகியோரது வழிகாட்டுதலின்படி, "ஒர்லியன்ஸ்" (Orléans) என்ற இடத்திற்கருகே இருந்த "மைஸி" (Micy) எனும் இடத்திலிருந்த ஒரு மடத்திற்குப் போய் அங்கு துறவறம் பெற்றுக்கொண்டார். பின்னர், “லிமௌசின்” (Limousin) காடுகளுக்குப் போய், அங்கே வாழ்ந்தார். அங்கே, அவரைப் பின்பற்றுபவர்கள் பலர் கூடினர். இவரது செப வல்லமையால் “ஃபிராங்க்ஸ்” அரசி (Queen of the Franks) ஒரு ஆண்குழந்தையை பாதுகாப்பாக ஈன்றதாக கூறப்படுகிறது. அதன் பிரதியுபகாரமாக, “நோபிலாக்” (Noblac) எனுமிடத்தில் அரசு நிலம் லியோனார்டுக்கு கொடுக்கப்பட்டது.

பின் ஒரு சிற்றாலயத்தை அமைத்து, அங்கு வாழ்ந்து வந்தார். இலைகளும் கனிகளுமே இவரது உணவு. தனிமையில் மறைவான வாழ்வு நடத்தினாலும், அருகில் இருந்த கோயிலுக்குச் சென்று மறையுரைகள் நிகழ்த்துவார்.

போர்க்கைதிகள் மீதும், சிறைப்பட்டோர் மீதும் அதிக இரக்கம் காண்பித்தார். தம்மால் இயன்ற அளவு ஆன்ம சரீர உதவிகளை அவர்களுக்குச் செய்தார்.

சுமார் கி.பி. 559ம் ஆண்டு மரித்த இவரது நினைவுத் திருநாள் நவம்பர் ஆறாம் நாள் கொண்டாடப்படுகின்றது.

நன்றி : திரு.புஷ்பராஜா


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...