Tuesday, November 8, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (09-11-2022)

 இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு - விழா

கோவில் நேர்ந்தளிப்பு ஆண்டு நாள்

முதல் வாசகம்



நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-2, 8-9, 12


அந்நாள்களில்

ஒரு மனிதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்து கொண்டிருந்தது.

அவர் என்னிடம் உரைத்தது: “இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு பாயும் இடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.

பல வயான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

நீங்கள் கடவுளுடைய கோவில்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 9b-11, 16-17


சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் கடவுள் எழுப்பும் கட்டடம். கடவுள் எனக்கு அளித்த அருளின் படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது.

நீங்கள் கடவுளுடைய கோவில் என்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்



திபா 46: 1-2,3c. 4-5. 7-8 (பல்லவி: 4)

பல்லவி: ஆற்றின் கால்வாய்கள் ஆண்டவரின் நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.


1 கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே.

2 ஆகையால், நிலவுலகம் நிலை குலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும்,

3c எங்களுக்கு அச்சம் என்பதே இல்லை. - பல்லவி

4 ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.

5 அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. - பல்லவி

7 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண்.

8 வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 குறி 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! எனது பெயர் என்றென்றும் போற்றப்படுமாறு இக்கோவிலை நான் தெரிந்தெடுத்துத் திருநிலைப்படுத்தியுள்ளேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-22


அக்காலத்தில்

யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்; கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்.

அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு, மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், “இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்” என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள், “உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்து விடும்” என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவுகூர்ந்தார்கள்.

யூதர்கள் அவரைப் பார்த்து, “இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், “இக்கோவிலை இடித்து விடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” என்றார். அப்போது யூதர்கள், “இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பிவிடுவீரோ?” என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார்.

அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட போது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


ஆலயத்தில் இறைவனை நாடுவோம்! நம் உடலை அவர் வாழும் ஆலயமாக்குவோம்!

கடவுள் மனிதனைப் படைத்த பொழுது அவனைத் தனது உருவிலும் சாயலிலும் படைத்தார். தன்னுடைய மூச்சு காற்றை ஊதி உயிரைக் கொடுத்தார் என நாம் தொடக்க நூலில் வாசிக்கிறோம். ஆக தொடக்கம்முதலே கடவுள் மனிதனை தனக்கு இணையான ஒரு புனித நிலையில் படைத்தார். இது எதற்காக? நாம் அனைவரும் அவருடைய மறு உருவங்களாக வாழ்வதற்காக. கடவுளை நம்முள்ளே தாங்கியவர்களாய் அவரோடு கலந்தவர்களாய் வாழும் போதுதான் நாம் அவரைப் பிரதிபலிக்க முடியும். அதற்கு நம்முடல் அவருடைய ஆலயமாகத் திகழ வேண்டுமல்லவா? இன்றைய நாளில் நம் தாய்த் திருஅவையோடு இணைந்து லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு  விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இன்றைய நாள் விழாவானது நாம் ஆலயத்தில் உறைந்துள்ள இறைவனை ஆதிகமாய் நாடுவும் நம்முடைய உடலை ஒரு கோவிலாக மாற்றவும் நம்மை வலியுறுத்துகின்றது.

திருப்பாடல் ஆசிரியர் கூறுவார் அரண்மனைகளிலும் மாட மாளிகைகளிலும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் ஆண்டவரின் கோயில் முற்றத்தில் ஒருநாள் வாழ்வது மேன்மையானது என்று. கோவில் என்பது கட்டடம் தான் அங்கு நாம் இறைபிரசன்னத்தை உணரும் வரை. கோவில் மீது ஆர்வம் கொள்ளுதல் என்பது கடவுளின் மீதான ஆர்வமே.  இன்று நம்மில் பலருக்கு சந்தைகளுக்கும், திரை அரங்குகளுக்கும், பெரிய Shopping mal களுக்கும் போக ஏற்படும் ஆர்வம் ஆலயத்தின் மீது இல்லாதது கடவுளின் மேல் நமக்கு அன்பில்லை அவரை நாம் நாடவில்லை என்பதையே கூறுகிறது.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர்  இயேசு கோவிலைச் சுத்தம் செய்த நிகழ்வை வாசிக்கின்றோம். இயேசு தன் உடலை  கோவிலாகக் கருதினார். அதேபோல எருசலேம் ஆலயத்தை தன் தந்தையின் உறைவிடமாகக் கருதினார். இப்படிப்பட்ட தந்தையின் தூய ஆலயம் சந்தையாக மாற்றப்பட்டதை பார்த்து கோபம் கொண்டார். " கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார். அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு, மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், ``இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்'' என்று கூறினார்.

இந்த இயேசுவின் செயல்பாடு தந்தையின் இல்லத்தின் மீது அவர் கொண்டிருந்த அளவற்ற அன்பைச் சுட்டிக்காட்டுகின்றது.

இயேசுவின் இந்த செயல்பாடு "உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்து விடும்'' என்ற வார்த்தையை உண்மையாக்குகின்றது 

 பல நேரங்களில் நமக்கு கேள்வி எழலாம். இறை மகனாகிய இயேசு கோபப்படலாமா? என்று. கோபம் என்பது ஒரு உன்னதமான உணர்வு. அது தகுந்த நேரத்தில், சரியான காரணத்திற்காக வெளிப்படுத்தப்படும் போது நல்ல மாற்றத்தையும், சரியான தீர்வையும் தருகின்றது. அன்று ஆலயத்தில் இயேசுவால் வெளிப்படுத்தப்பட்ட கோபம் இன்றும் நம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கொணர்வதை நாம் உணரலாம்.

குறிப்பாக நமது உடலாகிய ஆலயத்தை நாம் எவ்வாறு பேண வேண்டும் என சிந்திக்க வைக்கிறது. இங்கு நாம் உடல் எனக் குறிப்பிடுவது "உடல், மனம்,ஆன்மா" மூன்றையும் சேர்த்துத்தான். பல வேளைகளில் நமது உடல் மனம் ஆன்மைவை நாமும் தூய்மையற்ற சந்தைகளாக மாற்றிவிடுகிறோம். 

இயற்கை உணவுகளைத் தவிர்த்து கேடான உணவுகளை உண்ணுதல், இயற்கையாக கடவுள் தந்த அழகை பிறரோடு ஒப்பிட்டுப் பார்த்து அழகுபடுத்த பல செயற்கையான சாதனங்களை வாங்கிப் பயன்படுத்துதல் போன்றவை உடலை தூய்மையற்ற சந்தை ஆக்குகின்றன.

உலகம் சார்ந்த எண்ணங்கள், இச்சைகள், பிறரையும் நம்மையும் பற்றிய தாழ்வான, தவறான கருத்துக்கள், போட்டி மனப்பான்மை, பொறாமை போன்றவை நம் மனத்தை தூய்மையற்ற சந்தையாக்குகின்றன. 

இறைவனை நாடாமை,சோதனைக்கு உட்படுதல், பாவ வாழ்வு போன்றவை நம் ஆன்மைவை சந்தையாக்குகின்றன. 

இயேசுவின் அன்பு என்னும் சாட்டையால் இவற்றை அடித்துத் துரத்தும் போது நம் உடல் மனம் ஆன்மா முழுவதும் தூய்மையாகி கடவுள் வந்து தங்கும் இல்லமாக நாம் மாற முடியும்.

இவ்வாறு கடவுளின் ஆலயமாக நாம் மாறும் போது நற்சுகம் நம் உடலை நிரப்பும். நற்சிந்தனை நம் மனத்தை நிரப்பும். இறையருள் நம் ஆன்மாவை நிரப்பும். நம் வாழ்வும் கடலோடு  கலந்த ஆற்று நீர் பாயும் இடமெல்லாம் வளம் தருவது போல,கடவுளோடு கலக்கப்பட்டு பலன் தரும்.

கிறிஸ்துவே திருஅவையின் தலை. தலையாகிய கிறிஸ்துவோடு இணைக்கப்பட வேண்டிய உடல் நாமெல்லோருமே. இதனை உணர்ந்தவர்களாய் இறைவன் வாழும் கோவிலாக நம்மை மாற்ற நம்மிடம் இருக்கும் தேவையற்றவை அனைத்தையும் அகற்ற முயலுவோம். அதற்காக இறைவனிடம் வரம் கேட்போம்.

இறைவேண்டல்

எங்கள் ஒவ்வொருவரினுள்ளும் வாசம் செய்யும் இறைவா! தகுதியற்ற எங்களை உமது உறைவிடமாகத் தேர்ந்துள்ளீர். உமது அன்பினாலும் இரக்கத்தாலும் எங்களிடமுள்ள தேவையற்ற அனைத்தையும் அகற்றித் தூய்மையாக்கும். இதனால் நாங்கள் நீர் குடியிருக்கும் உயிருள்ள ஆலயங்களாகத் திகழ்வோமாக. ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️




No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...