Wednesday, November 9, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (10-11-2022)

 

பொதுக்காலம் 32ஆம் வாரம் - வியாழன்

முதல் வாசகம்

ஒனேசிமுவை அன்புமிக்க சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்.

திருத்தூதர் பவுல் பிலமோனுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 7-20

அன்பிற்குரியவரே,

உம் அன்பைக் குறித்து நான் பெருமகிழ்வும் ஆறுதலும் கொள்கிறேன். ஆம், சகோதரரே, உம்மால் இறைமக்களின் உள்ளம் புத்துயிர் பெற்றுள்ளது.

எனவே, நீர் செய்ய வேண்டியதை உமக்குக் கட்டளையிட, கிறிஸ்தவ உறவில், எனக்கு முழு உரிமை உண்டு என்றாலும், அன்பின் பெயரால் வேண்டுகோள் விடுக்கவே விரும்புகிறேன். கிறிஸ்து இயேசுவின் தூதுவனாக, அவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் பவுலாகிய எனக்குச் சிறையிலிருந்தபோது பிள்ளையான ஒனேசிமுக்காக உம்மிடம் வேண்டுகிறேன்.

முன்பு உமக்குப் பயனற்றவனாக இருந்த அவன், இப்பொழுது எனக்கும் உமக்கும் பயனுள்ளவன். அவனை உம்மிடம் திரும்ப அனுப்புகிறேன். அவனை அனுப்புவது என் இதயத்தையே அனுப்புவது போலாகும். நற்செய்தியின் பொருட்டுச் சிறையுற்றிருக்கும் எனக்கு, உமது பெயரால் பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக்கொள்ள விரும்பினேன். ஆனால் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் செய்யாமல், மனமாரச் செய்யவேண்டும் என்று நினைத்தே, உம்முடைய உடன்பாடின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை.

அவன் என்றும் உம்மோடு இருக்க உம்மை விட்டுச் சிறிது காலம் பிரிந்திருந்தான் போலும்! இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையை விட மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும். அவன் என் தனிப்பட்ட அன்புக்கு உரியவன். அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்கு உரியவனாகிறான்! எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக்கொள்வது போல் அவனையும் ஏற்றுக்கொள்ளும். அவன் உமக்கு ஏதாவது தீங்கு இழைத்திருந்தால் அல்லது கடன்பட்டிருந்தால் அது என் கணக்கில் இருக்கட்டும். ‘நானே அதற்கு ஈடு செய்வேன்’ எனப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன்.

நீர் உம்மையே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டும் என நான் உமக்குச் சொல்ல வேண்டியதில்லை. ஆம் சகோதரரே, ஆண்டவர் பொருட்டு எனக்கு இந்த உதவியைச் செய்யும். கிறிஸ்துவின் பெயரால் என் உள்ளம் புத்துயிர் பெறச் செய்யும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 146: 7. 8-9a. 9bc-10 (பல்லவி: 5a)

பல்லவி: யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டோர் பேறுபெற்றோர்.

அல்லது: அல்லேலூயா.

7
ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். - பல்லவி
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.
9a
ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். - பல்லவி
9bc அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.
10
சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 5

அல்லேலூயா, அல்லேலூயா! நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-25

அக்காலத்தில்

இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர். அவர் மறுமொழியாக, “இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்ல முடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது” என்றார்.

பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது: “ஒரு காலம் வரும்; அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காணமாட்டீர்கள். அவர்கள் உங்களிடம், ‘இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே!’ என்பார்கள். ஆனால் நீங்கள் போக வேண்டாம்; அவர்களைப் பின்தொடரவும் வேண்டாம். வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிட மகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்.

ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.




இறையாட்சி நம் நடுவிலே தான்! 

இறைஆட்சி என்ற பெயரிலிருந்தே அதன் பொருளை நம்மால் அறிய முடிகிறது. இறைவனால் செய்யப்படும் ஆட்சி.மனிதரின் ஆட்சிகளில் உள்ள தீமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் நமக்கெல்லாம் இறையாட்சி என்பது பெருவரமே. இறைவன் நம்மை ஆட்சி செய்தால் நாள்தோறும் மகிழ்ச்சியையும், அன்பையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சமாதானத்தையும் நம்மால் அனுபவிக்க முடியும். இத்தகைய ஆட்சி எப்போது வரும் என நாம் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.  இறையாட்சியை நாம் இறந்த பிறகுதான் பார்க்க முடியும் என பலர் எண்ணலாம். அதுதான் இல்லை. இயேசு நமக்கெல்லாம் இறையாட்சி நம் நடுவிலேதான் உள்ளது என்ற உறுதியை அளித்துள்ளார்.

 இறைவன் நேரடியாக வந்து நம்மையெல்லாம் ஆட்சி செய்யப் போவதில்லை. பின் இறையாட்சியை நம் நடுவில்  உணர்வதெப்படி?இறைவனின் சாயலாய் படைக்கப்பட்ட நாமெல்லோரும் அவருடைய குணங்களை நமதாக்கி வாழும் போதெல்லாம் இறையாட்சி நம் நடுவிலே உணரப்படுகிறது .நம்மிடையே நிறுவப்படுகிறது. 

ஆம் நாம் அன்போடு பழகும் போது இறையாட்சியை நிறுவுகிறோம். மன்னிக்கும் போது இறையாட்சியை செயல்படுத்துகிறோம். அனைவரையும் மதித்து சமமாக நடத்தும் போது இறையாட்சியை செயல்படுத்துகிறோம். இருப்பதை பிறரோடு பகிரும் போது இறையாட்சியை ஊக்குவிக்கிறோம். மகிழ்ச்சியோடு வாழ்ந்து அம்மகிழ்ச்சியை பிறரோடும் பகிரும் போது இறையாட்சியைத் தேடி அலைய வேண்டியதில்லை. அதற்காக காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. 


இதற்கு மாறான பகை உணர்வு, பகிரா மனம், ஏற்றத்தாழ்வு காணுதல், எப்போதும் சோகம் போன்ற பண்புகள் நம்மிடையே இருந்தால் இறையாட்சியை நம் நடுவே உணர இயலாது. அதை அமைக்கும் பணியாளர்களாய் நம்மால் வாழவும் இயலாது. இச்சிந்தனைகளைக் கருத்தில் கொண்டு இறையாட்சியை அமைக்க புறப்படுவோம். செபிப்போம். இறையாட்சி நம் நடுவிலேதான்!

 இறைவேண்டல் 

எம்மை ஆளும் இறைவா! உமது ஆட்சியை நாங்கள் எம் நடுவிலே உணர்ந்து அதை பிறரும் உணரச் செய்யும் இறைமனிதர்களாய் வாழ வரமருளும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


† இன்றைய புனிதர் †


✠ புனிதர் முதலாம் லியோ ✠
(St. Leo the Great)


45ம் திருத்தந்தை/ மறைவல்லுனர்:
(45th Pope/ Doctor of the Church)

பிறப்பு: கி.பி. சுமார் 400
டஸ்கனி, மேற்கத்திய ரோமப்பேரரசு
(Tuscany, Western Roman Empire)

இறப்பு: நவம்பர் 10, 461
ரோம் நகரம், மேற்கத்திய ரோமப்பேரரசு
(Rome, Western Roman Empire)

நினைவுத் திருவிழா: நவம்பர் 10

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)

திருத்தந்தை முதலாம் லியோ (Pope Leo I) கத்தோலிக்க திருச்சபையின் 45ம் திருத்தந்தையாக கி.பி. 440ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 29ம் நாளிலிருந்து கி.பி. 461ம் ஆண்டு, நவம்பர் மாதம், 10ம் நாள் வரை ஆட்சி செய்தார். திருச்சபை வரலாற்றிலேயே முதன்முதலாக "பெரிய"/ "மகா" (Great) என்னும் அடைமொழி பெற்ற முதல் திருத்தந்தை இவரேயாவார்.

முதலாம் லியோ கி.பி. சுமார் 400ம் ஆண்டில் இத்தாலிய உயர்குடியைச் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்தார். "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏடு அவர் பிறந்த இடமாக இத்தாலியின் “டஸ்கனி” (Tuscany) பிரதேசத்தைக் குறிக்கிறது.

வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகள்:
திருத்தந்தை முதலாம் லியோவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளுள் மிகவும் பெயர்பெற்றதாகக் கருதப்படுவது, அவர் கி.பி. 452ம் ஆண்டில் வடக்கிலிருந்து இத்தாலியை நோக்கிப் படையெடுத்துவந்த “அட்டிலா” என்னும் “ஹுண்” (Attila the Hun) இனப் போர்த்தலைவரை சந்தித்து அப்படையெடுப்பு நிகழாமல் தடுத்து, இத்தாலியைப் பாதுகாத்தது ஆகும்.

மேலும், திருத்தந்தை லியோ திருச்சபையின் முக்கிய பொதுச்சங்கங்களுள் ஒன்றாகிய “கால்செடோன் பொதுச்சங்கத்தில்” (கி.பி. 451) (Council of Chalcedon) நிகழ்ந்த விவாதங்களுக்கு அடிப்படையான கருத்துக்கோப்புகளை வழங்கியது ஆகும். இச்சங்கமானது இயேசு கிறிஸ்து யார் என்பது பற்றி விவாதித்தது. இயேசு உண்மையிலேயே கடவுளாகவும் உண்மையிலேயே மனிதராகவும் உள்ளார் என்றும், இயேசுவின் மனித இயல்பும் இறை இயல்பும் ஒரே தெய்விக தன்மையில் குழப்பமோ பிளவோ இன்றி இணைந்துள்ளன என்றும் வரையறுத்தது.

வாழ்க்கையின் முதற்கட்டம்:
"திருத்தந்தையர் வரலாறு" (Liber Pontificalis) என்னும் பண்டைய ஏடு தரும் தகவல்படி, திருத்தந்தை லியோ, இத்தாலியின் “டஸ்கனி” (Tuscany) பிரதேசத்தில் பிறந்தார். கி.பி. 431ம் ஆண்டில் அவர் திருத்தொண்டர் (Deacon) பணியை திருத்தந்தை “முதலாம் செலஸ்டின்” (Pope Celestine I) ஆட்சியின்கீழ் தொடங்கியிருந்தார். அப்போது அலெக்சாந்திரியா நகர் மறைமுதல்வர் சிரில் (Cyril of Alexandria), பாலத்தீனத்தின்மீது “யூவனல்” (Juvenal of Jerusalem) என்பவர் ஆட்சியதிகாரம் தமக்கு உண்டு என்றதை உரோமைத் திருச்சபை கண்டிக்கவேண்டும் என்று கேட்டு லியோவுக்கு (அல்லது திருத்தந்தை முதலாம் செலஸ்டினுக்கு) கடிதம் எழுதினார். இதிலிருந்து லியோ ஒரு முக்கிய பதவியில் இருந்தார் எனத் தெரிகிறது.

ஏறக்குறைய அச்சமயத்தில் “ஜான் காசியன்” (John Cassian) என்பவர் “நெஸ்டோரியஸ்” (Nestorius) என்பவரின் திரிபுக்கொள்கையைக் கண்டித்து எழுதிய நூலை லியோவுக்கு அர்ப்பணித்தார். அத்தகைய நூலை எழுதும்படி லியோ, காசியனிடம் கேட்டிருந்தார்.

மேலும், ரோமப் பேரரசரே லியோவின் உதவியை நாடிவந்தார். ரோமைப் பேரரசின் பகுதியாக இருந்த “கால்” (Gaul) பிரதேசத்தில் இரு மேலதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்துமோதலைத் தீர்த்துவைக்க லியோ அனுப்பப்பட்டார்.

இவ்வாறு “கால்” (Gaul) பகுதிக்கு அரசு சார்பாக லியோ தூது சென்ற சமயத்தில் திருத்தந்தை “மூன்றாம் சிக்ஸ்டஸ்” (Pope Sixtus III), கி.பி. 440ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 11ம் நாள் உயிர்நீத்தார். அவருக்குப் பின்னர், செப்டம்பர் மாதம், 29ம் நாள், திருத்தந்தையாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரே முதலாம் லியோ.

லியோவின் திருத்தந்தைப் பணிக்காலம் கத்தோலிக்க திருச்சபையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக உரோமைத் திருச்சபையின் மைய அதிகாரம் பேரளவாக உறுதிப்படுத்தப்பட்டது.

இயேசு கிறிஸ்து பற்றிய போதனை:
திருத்தந்தை வழங்கிய போதனைகள் பெரும்பாலும் இயேசு கிறிஸ்துவின் இயல்பு பற்றியும், இயேசு கொணர்ந்த மீட்புப் பற்றியும் அமைந்தன. அவர் அளித்த மறையுரைகள், அவர் எழுதிய மடல்கள் போன்றவற்றில் இந்தப் போதனை அடங்கியுள்ளது.

திருத்தந்தைக்கு உரிய அதிகாரப் பொறுப்பு:
திருத்தந்தை லியோ தம் பணியைப் பற்றி விவரிக்கும்போது, தாம் “தூய பேதுருவின்” (St. Peter) வாரிசில் வருவதைச் சுட்டிக்காட்டினார். அதற்கு முந்திய திருத்தந்தையர் தாம் புனித பேதுருவின் பணிப்பொறுப்பில் வாரிசுகள் என்றும், பேதுரு உரோமையில் பணிசெய்து, மறைச்சாட்சியாக உயிர்துறந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டிருப்பதால் உரோமைத் திருப்பீடம் தனி அதிகாரம் கொண்டது என்று மட்டுமே போதித்திருந்தனர்.

திருத்தந்தை லியோ, தாம் பதவி ஏற்ற ஐந்தாம் ஆண்டு நிகழ்வின் போது ஆற்றிய மறையுரையில் கீழ்வருமாறு கூறினார்:
"நிலையாக இருக்கின்ற பாறையான இயேசு, பாறையான பேதுருவுக்கு வழங்கிய நிலையான தன்மையைப் பேதுரு தம் வழிவருவோருக்கு வழங்கினார்."

அதிலிருந்து திருத்தந்தையர் தம்மை புனித பேதுருவின் வழித்தோன்றல்களாக மட்டுமன்றி, தாம் பிற ஆயர்கள் மேலும், நம்பிக்கைகொண்டோர் மேலும் அதிகாரம் கொண்டவர்கள் என்பதை வலியுறுத்தத் தொடங்கினர்.

திருத்தந்தை லியோ, இத்தாலி நாட்டு ஆயர்கள் தம் அதிகாரத்துக்கு உட்பட்டவர்கள் என்பதை எடுத்துரைத்தார். மிலான் மற்றும் வட இத்தாலியின் பிற பகுதிகளில் அருட்பணி ஒழுங்காக நடைபெறவும், தவறுகள் திருத்தப்படவும், கருத்து வேறுபாடுகள் அகற்றப்படவும் அவர் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.

ஸ்பெயின் நாட்டில் தோன்றிய “பிரிசிலிய கொள்கை” (Priscillianism), மனித உடல் தீமையானது என்று கூறியதை லியோ கண்டித்து, அக்கொள்கையை மறுப்பதற்கான வழிமுறைகளைக் காட்டினார்.

அதுபோலவே, வடக்கு ஆப்பிரிக்க திருச்சபையிலும் சர்ச்சைகள் ஏற்பட்டபோது அவற்றிற்குத் தீர்வுகாண ஆயர்கள் திருத்தந்தை லியோவை அணுகினர்.

ஃபிரான்ஸ் நாட்டின் தென்பகுதி தமது ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதே என்று “ஹிலரி” (Hilary) என்னும் ஆயர் கூறியபோது, திருத்தந்தை லியோ அக்கருத்தை ஏற்க மறுத்ததோடு, ஹிலரி தமது மறைமாவட்ட எல்லைகளுக்குள் மட்டுமே அதிகாரம் கொண்டவர் என்றும் வலியுறுத்தினார்.

மறைமாவட்டங்களின் ஆயர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அந்தந்த மறைமாவட்டத்தின் குருக்கள், இறைமக்களைச் சார்ந்தது என்று லியோ கூறினார். "அனைவருக்கும் பணி புரிய அழைக்கப்பட்டவர் அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என்றொரு கொள்கையை அவர் முன்வைத்தார்.

இறப்பு:
திருத்தந்தை லியோ கி.பி. 461ம் ஆண்டு, நவம்பர் மாதம், 10ம் நாள் இறந்தார். அவருடைய உடல் ரோம் நகரிலுள்ள, புனித பேதுரு பெருங்கோவிலின் உள்முற்றத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கி.பி. 688ம் ஆண்டில், கோவிலுக்கு உள்ளே அடக்கம் செய்யப்பட்டது. கல்லறை மீது சிறப்பான விதத்தில் ஒரு பீடமும் நிறுவப்பட்டது.

மறைவல்லுநர் பட்டம்:
கி.பி. 1754ம் ஆண்டில், திருத்தந்தை லியோவுக்கு “திருச்சபையின் மறைவல்லுநர்” (Doctor of the Church) என்னும் பட்டம் வழங்கப்பட்டது. திருச்சபையின் போதனையைத் தெளிவாகவும் விளக்கமாகவும் பல மறையுரைகள், நூல்கள், விளக்கவுரைகள் வழியாக அளித்து, திருச்சபையை மிகத் திறமையாக வழிநடத்திச் சென்றதால் அவருக்கு "பெரிய"/ "மகா" (Great) என்னும் அடைமொழி கொடுத்து அழைப்பது வழக்கம்.

♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...