Saturday, November 12, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (13-11-2022)

 

பொதுக்காலம் 33ஆம் வாரம் - ஞாயிறு

முதல் வாசகம்

உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான்.

இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 4: 1-2a

“இதோ! சூளையைப் போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்; வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது; முற்றிலும் சுட்டெரித்துவிடும்” என்கிறார் படைகளின் ஆண்டவர்.

“ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்


திபா 98: 5-6. 7-8. 9 (பல்லவி: 9d)

பல்லவி: மக்களினங்களை ஆண்டவர் நேர்மையுடன் ஆட்சி செய்வார்.

5
யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.
6
ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். - பல்லவி

7
கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!
8
ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். - பல்லவி

9
ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். - பல்லவி

இரண்டாம் வாசகம்

உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-12

சகோதரர் சகோதரிகளே,

எங்களைப் போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே தெரியும். ஏனெனில், உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித் திரியவில்லை. எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல, மாறாக, நீங்களும் எங்களைப் போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம்.

‘உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது’ என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம். உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம்.

இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 28

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-19

அக்காலத்தில்

கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக்கொண்டிருந்தனர். இயேசு, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார்.

அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்’ என்றும், ‘காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது” என்றார்.

மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: “நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.

இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்: சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.

ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



மன உறுதியோடு வாழ்வைக் காத்துக்கொள்வோம் ! 

ஒரு பள்ளியில் கல்வி அலுவலரால் ஆய்வு நடத்தப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியரின் வழிநடத்துதலின் பேரில் மற்றெல்லா ஆசிரியர்களும் அலுவலர்களும் தங்களுடைய எல்லா வேலைகளையும் செய்து எல்லா ஏடுகளையும் மிகத் தெளிவாக வைத்திருந்தனர். ஆயினும் எல்லாருக்கும் ஒருவித கலக்கம், தயக்கம்,படபடப்பு, பயம் போன்ற உணர்வுகள் மேலோங்கி இருந்தன. அவர்களுள் ஒரு ஆசிரியர் மட்டும் மிக இயல்பாக மிகத் தெளிவாக இருந்தார். அப்போது அவரோடு ஒரு மற்றொரு ஆசிரியர் உரையாடும் போது " என்னதான் எல்லாவற்றையும் சரியாகச் செய்தாலும் ஆய்வு என்றாலே பயம் தான் " என்றார். அதற்கு அவர் "நாம் ஏன் பயப்பட வேண்டும். சரியாகச் செய்துவிட்டோம் என்ற தைரியத்தோடும் உறுதியோடும் நாம் இருப்பதை பிறர் உணர்ந்தாலே போதும் நம்மை கேள்வி கேட்க அவர்களே பயப்படுவார்கள் " என்று கூறினாராம்.


ஆம்.  இன்று நம்மில் பலரை ஆட்டிப்படைப்பது இந்த மன உறுதியற்ற நிலை.  பயம் ,பதற்றம், படபடப்பு, கலக்கம், தயக்கம் என்பவை இதன் அறிகுறிகள்.ஆனால் இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு மனஉறுதியோடு வாழ்வைக் காத்துக்கொள்ள நம்மை அழைக்கின்றார். மன உறுதி நம் வாழ்வில் எல்லா நிலைநிலைகளிலும் தேவையான ஒன்று. உலக வாழ்வில் மன உறுதி இருந்தால்தான் உலகத்தின் மாய வலைகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும். ஆன்மீக வாழ்வில் மன உறுதி இருந்தால் தான் அலகையின் சோதனைகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும். ஆனால் ஆன்மீக வாழ்வின் மன உறுதியே உலக வாழ்வில் நாம் மனஉறுதியோடு நிலைத்து நிற்க உதவும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இந்த மனஉறுதி நாம் கடவுள் மேல் கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடே.


மேலும் இயேசு எப்பொழுதெல்லாம் நாம் திகிலுறாமல் மனஉறுதியுடன் இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறார்.

போர்கள் எழும் போதும், இயற்கை சீற்றங்களின் போதும், போலி இறைவாக்கினர்களின் தப்பித போதனைகளைக் கேட்கும் போதும், நம்மை பிறர் இயேசுவின் பொருட்டு துன்புறுத்தப்படும் போதும் நாம் திகிலடையக் கூடாது என்று இயேசு கூறுகிறார். இத்தகைய சூழ்நிலைகளை எல்லாம் நாம் எதிர்கொண்டுதான் இருக்கிறோம். 


குறிப்பாக  சில இடங்களில்  கிறிஸ்தவ சமயத்தினர் பலர் இயேசுவின் பெயரால் துன்புறுத்தப்படுவதையும் உரிமைகள் மறுக்கப்படுவதையும் நாம் காண்கிறோம். கேள்வியுறுகிறோம். ஏன் நாளை நமக்குக் கூட இதே நிலை ஏற்படலாம்.  அத்தகைய தருணங்களில் மன உறுதியோடும் நம்பிக்கையோடும் நாம் இயேசுவுக்கு சான்று பகர்ந்தால் நமக்கு நிலைவாழ்வு நிச்சயம்.


ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் மேல் நீதியின் கதிரவன் எழுவான் என்கிறது முதல் வாசகம்.மானிட மகனுக்கு சான்று பகரும் போது தலைமுடி கூட கீழே விழாது என்கிறது நற்செய்தி வாசகம். இந்த இறைவார்த்தைகளை எல்லாம் நம் உள்ளத்தில் இருத்துவோம். மன உறுதியை வளர்த்துக்கோள்வோம். நிலைவாழ்வை காத்துக்கொள்வோம்.


 இறைவேண்டல் 

அன்பு தந்தையே இறைவா ! நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் மன உறுதியோடு வாழ்ந்து வாழ்வைக் காத்துக்கொள்ள

வரமருளும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்





† இன்றைய புனிதர் †
(நவம்பர் 13)

✠ புனிதர் ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்கா ✠
(St. Stanislaus Kostka)

இயேசு சபை குரு மாணவர்:
(Jesuit Novice)

பிறப்பு: அக்டோபர் 28, 1550
ரோஸ்ட்கோவோ, போலந்து
(Rostkowo, Poland)

இறப்பு: ஆகஸ்ட் 15, 1568 (வயது 17)
ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள்
(Rome, Papal States)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: அக்டோபர் 19, 1605
திருத்தந்தை ஐந்தாம் பவுல்
(Pope Paul V)

புனிதர் பட்டம்: டிசம்பர் 31, 1726
திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
(Pope Benedict XIII)

பாதுகாவல்:
போலந்து, இயேசு சபை குரு மாணவர்கள், உடைக்கப்பட்ட எலும்புகளுக்கு எதிராக, இறுதி அருட்சாதனங்கள்

புனிதர் ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்கா, “இயேசு சபையைச்” (Society of Jesus) சேர்ந்த ஒரு “போலிஷ் குரு மாணவர்” (Polish novice) ஆவார். தமது பதினேழாம் பிறந்த தினத்தன்று ரோம் நகரிலுள்ள இயேசுசபையில் இணைந்த இவர், தமது மரணம் பற்றி, தாம் இறப்பதற்கு சில நாட்களுக்குமுன்னர் முன்னறிவித்ததாக கூறப்படுகிறது.

இவருடைய தந்தை “ஜான் கோஸ்ட்கா” (Jan Kostka) போலந்து அரசின் அதிகார சபை அங்கத்தினர் ஆவார். தாயார், “மல்கோர்ஸட்டா க்ரிஸ்கா” (Małgorzata Kryska) ஆவார். தமது பெற்றோரின் ஏழு குழந்தைகளில் இவர் இரண்டாவது குழந்தை ஆவார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் “வியென்னா” (Vienna) நாட்டில் தொடங்கப்பட்ட “இயேசு சபை கல்லூரியில்” (Jesuit college) கல்வி பயில்வதற்காக கி.பி. 1564ம் ஆண்டு இவர் தமது சகோதரருடன் அனுப்பப்பட்டார். அப்போது அவரின் வயது 14. தமது அன்பான பாங்கு மட்டுமல்லாது, உற்சாக குணம் மற்றும் மத ஈடுபாடு ஆகியவற்றால் தமது மூன்றாண்டு கால மாணவ பருவத்தில், பிற மாணவர்களின் கவனத்தைக் கவரக் கூடியவராக திகழ்ந்தார்.

தனது இளம்வயதிலேயே இயேசு தன்னுடன் உரையாடுவதை உணர்ந்தார். இயேசு தன்னை துறவற வாழ்வை வாழ அழைப்பதாக உணர்ந்ததால் துறவற இல்லம் ஒன்றை நாடி சென்றார். இயேசுவின் குரலுக்கு மட்டுமே ஸ்தனிஸ்லாஸ் செவிமடுத்தார்.

இவர் 14ம் வயதில் முதன்முறையாக பெற்ற திருக்காட்சியில், பிச்சைக்காரனைப்போல் உடை உடுத்தி, வியன்னாவை விட்டு, ஆக்ஸ்பூர்க் வருமாறு கூறிய குரலைக் கேட்டார். அக்குரல் கூறியதை செய்ததன் பேரில் “டில்லிங்கன்” (Dillingen) வந்து சேர்ந்தார் ஸ்தனிஸ்லாஸ். ஒரு மாதகாலம் அங்கேயே தங்கியிருந்த அவர், அங்கிருந்து ரோமில் உள்ள இயேசு சபையின் “தூய அந்திரேயா” (Novitiate of Saint Andrew) புகுமுக துறவு மடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பயண களைப்பால் நலிந்திருந்த அவரை, அச்சபையின் தலைவராக இருந்த “தூய ஃபிரான்சிஸ் போர்ஜியா” (Saint Francis Borgia) மடத்தில் சேர்த்துக்கொள்ள நீண்ட நாட்கள் தாமதித்தார். பின்னர் அவர், ஸ்தனிஸ்லாசை அவரது 17ம் பிறந்த நாளன்று தன் சபையில் நவத்துறவகத்தில் சேர்த்தார்.

ஸ்தனிஸ்லாஸ் மிகக் குறைந்த நாட்களிலேயே புகுமுக குரு மாணவர்களாலும், குருக்களாலும் கவரப்பட்டார். அன்பு செய்யப்பட்டார். இவர் எப்போதும் மகிழ்ச்சியானவராகவும், உடனடியாக எதையும் எதிர்பாராமல் தேவையில் இருப்போருக்கு குறிப்பறிந்து உதவி செய்பவராகவும் இருந்தார். இவருக்கு மிக அருமையான எதிர்காலம் இருக்கும் என்று உடன் இருந்தவர்கள் அனைவரும் அவ்வப்போது கூறி வந்தனர். ஆனால் அனைத்தும் அதற்கு எதிர்மாறாக நடைபெற்றது.

தூய “லாரன்சின்” (Saint Lawrence) நினைவுத் திருநாள் மாலையில் (ஆகஸ்ட் 10), கடுமையான காய்ச்சலால் தாக்குண்டார். தமது மரணம் சமீபித்திருப்பதாகவும், அது என்று நிகழும் என்றும், முன்னறிவித்தார். அவரைத் தாக்கிய காய்ச்சலை குணப்படுத்தமுடியாமல் அவர் முன்னறிவித்த நாளிலேயே (ஆகஸ்ட் 15) இறந்து போனார். இவர் இறப்பதற்கு முந்தின நாள், நாளை நான் இறந்துவிடுவேன் என்பதை தன்னுடன் இருந்தவர்களை நோக்கி கூறினார். அவர் சொன்னவாறே இறைவனடி சேர்ந்தார்.

♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...