Sunday, November 13, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (14-11-2022)

 

பொதுக்காலம் 33ஆம் வாரம் - திங்கள்

முதல் வாசகம்

நீ எந்நிலையிலிருந்து தவறி விழுந்துவிட்டாய் என்பதை நினைத்துப்பார்; மனம் மாறு.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 1: 1-4; 2: 1-5a

சகோதரர் சகோதரிகளே,

இது இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாடு. விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு கடவுள் இவ்வெளிப்பாட்டைக் கிறிஸ்துவுக்கு அருளினார். அவர் தம் வான தூதரை அனுப்பித் தம் பணியாளராகிய யோவானுக்கு அவற்றைத் தெரிவித்தார். அவர் கடவுள் அருளிய வாக்குக்கும் இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய உண்மைக்கும், ஏன், தாம் கண்டவை அனைத்துக்குமே சான்று பகர்ந்தார். இந்த இறைவாக்குகளைப் படிப்போரும் இவற்றைக் கேட்போரும் இந்நூலில் எழுதியுள்ளவற்றைக் கடைப்பிடிப்போரும் பேறுபெற்றோர். இதோ! காலம் நெருங்கி வந்துவிட்டது.

ஆசியாவில் உள்ள ஏழு திருச்சபைகளுக்கும் யோவான் எழுதுவது: இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவருமான கடவுளிடமிருந்தும், அவரது அரியணை முன் நிற்கும் ஏழு ஆவிகளிடமிருந்தும், இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

“எபேசில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘தமது வலக் கையில் ஏழு விண்மீன்களை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு, ஏழு பொன் விளக்குத் தண்டுகள் நடுவில் நடப்பவர் கூறுவது இதுவே: உன் செயல்களையும் கடின உழைப்பையும் மனவுறுதியையும் நான் அறிவேன். தீயவர்களை உன்னால் சகித்துக்கொள்ள முடியாது என்பதும், திருத்தூதர்களாய் இல்லாதிருந்தும் தங்களை அவ்வாறு திருத்தூதர்கள் என அழைத்துக் கொள்ளுகின்றவர்களை நீ சோதித்துப் பார்த்து, அவர்கள் பொய்யர்கள் என்று கண்டறிந்தாய் என்பதும் எனக்குத் தெரியும். நீ மனவுறுதி கொண்டுள்ளாய்; என் பெயரின் பொருட்டு எத்தனையோ துன்பங்களை நீ தாங்கிக் கொண்டுள்ளாய்; ஆயினும் சோர்வு அடையவில்லை என்பதும் எனக்குத் தெரியும்.

ஆனால் உன்னிடம் நான் காணும் குறை யாதெனில், முதலில் உன்னிடம் விளங்கிய அன்பு இப்போது இல்லை. ஆகையால் நீ எந்நிலையிலிருந்து தவறி விழுந்துவிட்டாய் என்பதை நினைத்துப்பார்; மனம் மாறு; முதலில் நீ செய்துவந்த செயல்களை இப்பொழுதும் செய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: திவெ 2: 7b)

பல்லவி: வாழ்வு தரும் மரத்தின் கனியை வெற்றி பெறுவோருக்கு உண்ணக் கொடுப்பேன்.

1
நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2
ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். - பல்லவி

3
அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். - பல்லவி
    ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்.
6
நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 35-43

அக்காலத்தில்

இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், “இது என்ன?” என்று வினவினார். நாசரேத்து இயேசு போய்க்கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள்.

உடனே அவர், “இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கூக்குரலிட்டார். முன்னே சென்றுகொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள். ஆனால் அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்.

இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக்கொண்டு வரும்படி ஆணையிட்டார்.

அவர் நெருங்கி வந்ததும், “நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று இயேசு கேட்டார். அதற்கு அவர், “ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றார். இயேசு அவரிடம், “பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார்.

அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


மீண்டும் பார்வை பெறுவோம்!  இயேசுவைப் பின்பற்றுவோம்! 



பார்வை என்பது என்ன?  நம் கண்முன்னே காணக்கிடக்கின்ற பொருட்கள், மனிதர்கள், காட்சிகள், நடக்கின்ற நிகழ்வுகள் ஆகியவற்றை கண்ணால் கண்டு இவைதான் என உணர்வது அல்ல பார்வை.  மாறாக பார்வை என்பது அனைத்தையும் மேலோட்டமாக அல்லாமல் ஆழமாகக் கண்டு அதன் உண்மைப் பொருள் உணர்ந்து அதில் நல்லவை எவை கெட்டவை எவை என வேர்பிரித்து அறிந்து வாழ்க்கையில் பயன்படுத்துவதுதான்.  கண் என்பது உடலுக்கு விளக்கு என்கிறார் இயேசு. கண்கள் நமக்குக் கொடுக்கப்பட்டதன் இரு நோக்கங்கள் என்னவென்றால் அனைத்திலும் கடவுளைக் காண்பது, அனைத்தையும் கடவுள் காண்பது போல் காண்பது. இந்த இரு நோக்கங்களும் நம் கண்களால் நிறைவேற்றப்படவில்லை எனில் நாம்அனைவரும் பார்வை அற்றவர்களே.

நாம் அனைவருமே இத்தகைய பார்வை உடையவர்களாக இருந்திருப்போம். அதற்கான அருள் நமக்கு கொடுக்கப்படாமலில்லை. ஆனால் நம்முடைய பலவீனங்கள், உலகத்தின் மாயக்கவர்ச்சிகள் போன்றவை நம்முடைய பார்வையிலிருந்த நல்ல நோக்கங்களை மழுங்கடித்து நம்முன்னே வெறும் கவர்ச்சிகளைக் காட்டி தீயவற்றைப் புகுத்தி நம்மை குருடர்களாக்கி விட்டது. 

நம்மிலே எத்தனை பேரின் கண்களுக்கு குறைகளும் கெட்டவைகளும் முதலில் தெரிகின்றன என்ற கேள்வியை எழுப்பினால்  நாம் அனைவருமே எனக்கு அவ்வாறுதான் தெரிகின்றது என ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆம் நாம் அனைவருமே பெற்ற பார்வையை இழந்திருக்கிறோம். மீண்டும் பார்வை பெற வேண்டிய கட்டயத்தில் இருக்கிறோம். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்வையற்றவர் இயேசுவிடம் "நான் மீண்டும் பார்வை பெற வேண்டும் " என்ற கோரிக்கையை வைக்கிறார். இருளாகிப்போன தன் வாழ்வு மீண்டும் ஒளியால் நிரம்ப வேண்டும் என்ற பேராவல் அவருக்கு இருந்ததால்தான் அத்தனைபேர் அவரை அடக்க முயற்சித்தும் கூக்குரலிட்டு தம் குரலை உயர்த்தி இயேசுவின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். அவர் விரும்பியது நடந்தது. மீண்டும் பார்வை பெற்றார். அத்தோடு நின்றுவிடவில்லை. இயேசுவைப் பின்பற்றினார். தான் பெற்ற பார்வையை தக்க வைத்துக் கொண்டார்.

அன்பு சகோதரமே, நாம் சிந்தித்த படி நாம் அனைவருமே மீண்டும் பார்வை பெற வேண்டிய கட்டாய்த்தில் இருக்கிறோம். நம்மைச் சுற்றியிருக்கும் பலவும் நாம் இயேசுவிடம் செல்லாதவாறு நம்மை அடக்கலாம். ஆனால் நாம் விடாது இயேசுவை அழைத்து அவர் கவனத்தை நம்பால் ஈர்க்க வேண்டும். அவரிடம் மீண்டும் பார்வை பெற செபிக்க வேண்டும். நம் கண்களால் அனைத்திலும் கடவுளைக் காணவும் கடவுளைப் போல அனைத்தையும் காணவும் முயற்சி செய்யும் போது நம் பார்வை விரிவடையும். இயேசுவைப் பின்பற்ற நமக்கு நன்றாய் வழியும் தெரியும். எனவே பார்வை பெற்று இயேசுவை பின்தொடர்வோம்.

 இறைவேண்டல் 

ஒளியாம் இறைவா நாங்கள் மீண்டும் பார்வை பெற்று உம் திருமகன் இயேசுவை பின்பற்ற வரமருளும் ஆமென்


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்



† இன்றைய புனிதர் †
(நவம்பர் 14)

✠ புனிதர் ஜோசஃப் பிக்னடெல்லி ✠
(St. Joseph Pignatelli)

இயேசு சபையை புதுப்பித்தவர்:
(Restorer of the Society of Jesus)

பிறப்பு: டிசம்பர் 27, 1737
ஸரகோஸா, ஸ்பெயின்
(Zaragoza, Spain)

இறப்பு: நவம்பர் 15, 1811 (வயது 73)
ரோம், முதலாவது ஃபிரெஞ்ச் பேரரசு
(Rome, First French Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை - இயேசு சபை
(Roman Catholic Church - Society of Jesus)

முக்திபேறு பட்டம்: மே 21, 1933
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
(Pope Pius XI)

புனிதர் பட்டம்: மே 12, 1954
திருத்தந்தை பனிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)

முக்கிய திருத்தலம்:
"கேஸு" ஆலயம்; பியஸ்ஸா டெல் கெஸ், ரோம், இத்தாலி
(Church of the Gesù; Piazza del Ges, Rome, Italy)

நினைவுத் திருநாள்: நவம்பர் 14

புனிதர் ஜோசஃப் மேரி பிக்னடெல்லி, ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஸ்பேனிஷ் குருவும், இயேசு சபைச் சமூகம் ஒடுக்கப்பட்டதன் பின்னர், “சார்டினியாவில்” (Sardinia) இயேசு சபையினர் நாடுகடத்தலின்போது அச்சபையினரின் அதிகாரபூர்வமற்ற தலைவராக செயல்பட்டவருமாவார். இயேசு சபையை மீட்டு புதுப்பித்ததன் காரணமாக, அவர் இயேசு சபை சமூகத்தின் இரண்டாம் நிறுவனராக கருதப்பட்டார்.

பிக்னடெல்லி, ஸ்பெய்ன் நாட்டின், “ஸரகோஸா” (Zaragoza) மாநிலத்தின் “நியோபோலிடன்” (Neapolitan) வம்சாவளியின் உன்னத பரம்பரையில் பிறந்தவராவார். அவர் தமது ஆரம்பக் கல்வியை தமது சகோதரர் “நிக்கோலசுடன்” (Nicolás) இணைந்து இயேசு சபை பள்ளியில் பயின்றார். அங்கே அவருக்கு காச நோயும் பிளேக் என்னும் நோய்த்தொற்றும் ஏற்பட்டது. இதன் காரணமாக இவர் தமது வாழ்நாள் முழுதும் துன்புற்றார்.

கி.பி. 1753ம் ஆண்டு, மே மாதம், 8ம் தேதி, தமது பதினைந்தாம் வயதில், “டர்ரகொனா” (Tarragona) எனும் இடத்திலுள்ள இயேசு சபையில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இணைந்த இவர், தமது கத்தோலிக்க இறையியல் கல்வியை பூர்த்தி செய்து குருத்துவ அருட்பொழிவு பெற்றார். பின்னர் “ஸரகோஸா” (College of Zaragoza) கல்லூரியில் கற்பிக்கும் பணியிலமர்த்தப்பட்டார்.

கி.பி. 1766ம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்துக்கு ஸரகோஸா ஆளுநர் பொறுப்பாக்கப்பட்டார். இதனால் ஆத்திரமுற்ற பொதுமக்கள், ஆளுநரின் மாளிகையை தீயிட்டு கொளுத்த முற்பட்டனர். மக்களை வசப்படுத்தியிருந்த பிக்னடெல்லியின் முயற்சியால் பேரிடர் தவிர்க்கப்பட்டது. ஸ்பெயின் அரசர் “மூன்றாம் சார்லஸ்” (King Charles III of Spain) அனுப்பிய நன்றி நவிலல் கடிதத்தையும் மீறி கலகமூட்டியதாகவும், தூண்டியதாகவும், இயேசு சபையினர் குற்றம் சாட்டப்பட்டனர். மேற்சொன்ன குற்றச்சாட்டினை பிக்னடெல்லி மறுத்ததால் அவரும் இயேசு சபையினரும் கி.பி. 1767ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 4ம் தேதி, ஸரகோஸாவை விட்டு வெளியேற ஆணை பிறப்பிக்கப்பட்டது.

பிக்னடெல்லியும், இயேசு சபையின் மற்றுமொரு அங்கத்தினரான - அவரது சகோதரர் நிக்கொலசும் இயேசு சபையை விட்டு விலகுவதானால் ஸரகோஸா நகரிலேயே இருக்க அனுமதிப்பதாக அரசனுடைய கையாளும், இயேசு சபையினரை வெளியேற்றுவதை ஊக்குவிப்பவருமான "அராண்டா" பிரபு (The Count of Aranda) கூறினார். ஆனால், தமது நோயையும் பொருட்படுத்தாத பிக்னடெல்லியும் அவரது சகோதரர் நிக்கொலசும் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தனர்.

நாடு கடத்தல் :
ஸரகோஸா'விலிருந்து நாடு கடத்தப்பட்ட இயேசு சபையினர் இத்தாலியிலுள்ள "ஸிவிட்டவெச்சியா" (Civitavecchia) என்னுமிடத்தில் இறங்க திருத்தந்தை பதின்மூன்றாம் கிளமென்ட் (Pope Clement XIII) அனுமதி வழங்க மறுத்ததால், அவர்கள் கடல்வழியாக "கோர்ஸிகன் குடியரசுக்கு" (Corsican Republic) பயணித்தனர்.

கி.பி. 1770ல் ஃபிரான்ஸ், கோர்ஸிக்கா (Corsica) நாட்டை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டபோது, இயேசு சபையினர் ஜெனோவா (Genoa) சென்று தங்க அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், கி.பி. 1773ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், இயேசு சபையினர் முழு சமுதாயத்தையும் திருத்தந்தை “பதினான்காம் கிளமென்ட்” (Pope Clement XIV) அவர்களால் நசுக்கி கலைக்கப்பட்டது. பிக்னடெல்லி சகோதரர்கள் இருவரும் வடக்கு இத்தாலியின் பிராந்தியமான “எமிலியா-ரொமாக்னாவின்” (Emilia-Romagna) தலைநகரான “பொலோக்னாவில்” (Bologna) தஞ்சம் பெற அனுமதிக்கப்பட்டனர். அங்கே ஓய்வு பெற அனுமதிக்கப்பட்ட அவர்கள், தமது கிறிஸ்தவ ஊழியங்களில் ஈடுபடக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டனர்.

சில வருடங்களின் பின்னர், புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த திருத்தந்தை ஆறாம் பயஸ், (Pope Pius VI) வாழும் முன்னாள் இயேசு சபையினரை ரஷிய பேரரசிலுள்ள இயேசு சபையினருடன் சந்தித்து உரையாட அனுமதி வழங்கினார்.

முன்பொருமுறை, கி.பி. 1768ம் ஆண்டு, பிக்னடெல்லியையும் மற்றுமுள்ள இயேசு சபையினரையும் பலாத்காரமாக நாடு கடத்திய "அராண்டா பிரபுவான” (The Count of Aranda) “ஃபெர்டினான்ட்” (Ferdinand), இம்முறை தமது பூமியான, இத்தாலிய பிராந்தியமான “பார்மாவில்” (Parma) அவர்கள் நிரந்தரமாக தங்கிக்கொண்டு, இயேசுசபையை மறுநிர்மாணம் செய்துகொள்ள அனுமதித்தான். கி.பி. 1793ம் ஆண்டு, ரஷியப் பேரரசி “இரண்டாம் கேதரனின்” (Empress Catherine II of Russia) அனுமதியுடன், ரஷியாவின் சில இயேசுசபை தந்தையருடன், வேறு சில இயேசுசபையினருடன் இணைந்து, புதிய சபை நடைமுறை செய்யப்பட்டது.

கி.பி. 1797ம் ஆண்டு, ஜூலை மாதம், 6ம் தேதி, பிக்னடெல்லி தமது மத சத்திய பிரமாணங்களை புதுப்பித்துக் கொண்டார். இயேசு சபையினர் தமது வழக்கமான சமய சடங்குகளை நடத்தத் தொடங்கினர். கி.பி. 1799ம் ஆண்டு, இத்தாலிய பிராந்தியமான “பார்மாவின்” (Parma) நகரான “கொலோர்னோவிலுள்ள” (Colorno) புதிய புகுமுக பயிற்சியாளர் (New Novitiate) மடத்தின் புதிய தலைவராக (Master of Novices), திருத்தந்தையின் அனுமதியுடன் நியமிக்கப்பட்டார். கி.பி. 1802ம் ஆண்டு, “பார்மாவின் பிரபு” (Duke of Parma) மரணமடைந்ததும், அம்மாநிலம் ஃபிரான்சுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. கி.பி. 1800ம் ஆண்டு, திருத்தந்தை ஏழாம் பயஸ் (Pope Pius VII), இத்தாலிய பிராந்தியத்தின் இயேசுசபை தலைவராக (Provincial Superior of the Jesuits) இவரை நியமித்தார். இத்தாலியின் தன்னாட்சிப் பகுதியும், “மத்தியதரைக் கடலிலுள்ள” (Mediterranean Sea) பெரும் தீவுமான “சிசிலியில்” (Sicily) பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. பிக்னடெல்லி, “ரோம்” (Rome), “டிவோலி” (Tivoli), மற்றும் “ஒர்வியேட்டோ” (Orvieto) ஆகிய நகரங்களில் கல்லூரிகளை நிறுவினார். இயேசுசபை தந்தையர் படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

திருத்தந்தை “ஏழாம் பயசின்” (Pope Pius VII) நாடு கடத்தலின்போதும், ஃபிரான்ஸ் நாடு திருத்தந்தையர் மாநிலங்களை (French occupation of the Papal States) கைப்பற்றியபோதும், விழிப்புடைமைக்கு பெரும்பாலும் காரணமாக இருந்த பிக்னடெல்லியின் தலைமையின் கீழே இயேசு சபையினர் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக இருந்தனர்.

மரணமும் புனிதர் பட்டமும்:

ரோம் நகரம், ஃபிரான்ஸின் ஆக்கிரமிப்பில் இருந்தபோது, காச நோயின் தீவிரத்தால் ஏற்பட்ட குருதிப் போக்கு பிக்னடெல்லியின் மரணத்துக்கு காரணமாய் அமைந்தது. கி.பி. 1811ம் ஆண்டு, நவம்பர் மாதம், 15ம் நாள், ஜோசஃப் மேரி பிக்னடெல்லி மரித்தார். அன்னாரது பூவுடல், ரோமிலுள்ள இயேசு சபையின் தேவாலய பலிபீடத்தின் கீழே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கி.பி. 1933ம் ஆண்டு, மே மாதம், 21ம் தேதி, திருத்தந்தை பதினோராம் பயஸ் (Pope Pius XI), இவருக்கு முக்திபேறு பட்டமளித்தார்.
கி.பி. 1954ம் ஆண்டு, ஜூன் மாதம், 12ம் தேதி, திருத்தந்தை பனிரெண்டாம் பயஸ் (Pope Pius XII) அவருக்கு புனிதர் பட்டமளித்தார்.

♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...