Monday, November 14, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (15-11-2022)

 

பொதுக்காலம் 33ஆம் வாரம் - செவ்வாய்

முதல் வாசகம்



யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 3: 1-6, 14-22

யோவான் என்னும் எனக்கு ஆண்டவர் கூறியது:

சர்தையில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘கடவுளுடைய ஏழு ஆவிகளையும் ஏழு விண்மீன்களையும் கொண்டிருப்பவர் கூறுவது இதுவே: உன் செயல்களை நான் அறிவேன். நீ பெயர் அளவில்தான் உயிரோடு இருக்கிறாய்; உண்மையில் இறந்துவிட்டாய். எனவே விழிப்பாயிரு. உன்னில் எஞ்சியிருப்பதை உறுதிப்படுத்து. அது இறக்கும் தறுவாயில் உள்ளது. என் கடவுள் திருமுன் உன் செயல்கள் நிறைவற்றவையாய் இருக்கக் கண்டேன். நீ கற்றதையும் கேட்டதையும் நினைவில் கொள்; அவற்றைக் கடைப்பிடி; மனம் மாறு; நீ விழிப்பாயிரு. இல்லையேல் நான் திருடனைப் போல வருவேன். நான் எந்த நேரத்தில் உன்னிடம் வருவேன் என்பதை நீ அறியாய்.

ஆயினும், தங்கள் ஆடைகளைக் கறைப்படுத்திக்கொள்ளாத சிலர் சர்தையில் உள்ளனர். அவர்கள் வெண்ணாடை அணிந்து என்னுடன் நடந்து வருவார்கள். அவர்கள் அதற்குத் தகுதி பெற்றவர்களே.

வெற்றி பெற்றோர் இவ்வாறு வெண்ணாடை அணிவிக்கப்பெறுவர். வாழ்வின் நூலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கிவிட மாட்டேன். மாறாக, என் தந்தை முன்னிலையிலும் அவருடைய வானதூதர்கள் முன்னிலையிலும் அவர்களின் பெயர்களை அறிக்கையிடுவேன்.

கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.'

இலவோதிக்கேயாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘ஆமென் எனப்படுபவரும் நம்பிக்கைக்குரிய, உண்மையான சாட்சியும் கடவுளது படைப்பின் தொடக்கமும் ஆனவர் கூறுவது இதுவே: உன் செயல்களை நான் அறிவேன். நீ குளிர்ச்சியாகவும் இல்லை, சூடாகவும் இல்லை. குளிர்ச்சியாகவோ சூடாகவோ இருந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும். இவ்வாறு நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இல்லாமல் வெதுவெதுப்பாய் இருப்பதால் என் வாயிலிருந்து உன்னைக் கக்கிவிடுவேன்.

“எனக்குச் செல்வம் உண்டு, வளமை உண்டு, ஒரு குறையும் இல்லை” என நீ சொல்லிக்கொள்ளுகிறாய். ஆனால், நீ இழிந்த, இரங்கத்தக்க, வறிய, பார்வையற்ற, ஆடையற்ற நிலையில் இருக்கிறாய் என்பது உனக்குத் தெரியவில்லை. ஆகவே, நீ செல்வம் பெறும் பொருட்டு புடம்போட்ட பொன்னையும், ஆடையின்றி வெட்கி நிற்கும் உன் நிலையைப் பிறர் காணாதபடி அணிந்துகொள்ள வெண்ணாடையையும், நீ பார்வை பெறும் பொருட்டு உன் கண்களில் தடவிக்கொள்ள மருந்தையும் என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள்ளுமாறு உனக்கு அறிவுரை வழங்குகிறேன்.

நான் யார்மீது அன்பு செலுத்துகிறேனோ அவர்களைக் கடிந்து தண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே நீ ஆர்வம் கொண்டு மனம் மாறு.

இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள். நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல, வெற்றி பெறும் எவருக்குமே எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்.

கேட்கச் செவி உடையோர், திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.'

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 15: 2-3. 4. 5 (பல்லவி: திவெ 3: 21)

பல்லவி: வெற்றி பெறுவோருக்கு அரியணையில் வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்.

2
மாசற்றவராய் நடப்போரே! இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்;
3
தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். - பல்லவி
4    நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். - பல்லவி

5
தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 யோவா 4: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 1-10

அக்காலத்தில்

இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார். அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக்கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்.

இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், “சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார். அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். இதைக் கண்ட யாவரும், “பாவியிடம் தங்கப் போயிருக்கிறாரே இவர்” என்று முணுமுணுத்தனர். சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று அவரிடம் கூறினார். இயேசு அவரை நோக்கி, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்” என்று சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


கதவைத் திறப்போம்! மீட்பு அடைவோம்! 

"இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்"  இன்று நமக்கு கொடுக்கப்பட்ட இவ்வார்த்தைகள் நமக்கு எவ்வளவு ஆறுதலாக உள்ளது. நம் உள்ளம் என்ற இல்லத்தில் வந்து தங்க ஆசையாய் இருக்கும் இறைவனின் அன்பு மனதை இன்றைய இரு வாசகங்களும் நமக்கு காட்டுகின்றன. இந்த அன்பு கடவுளை நம் உள்ளத்தில் ஏற்க நாம் இதயக் கதவுகளைத் திறக்க தயாராக இருக்கிறோமா என சிந்திக்க நாம் இன்று அழைக்கப்பட்டுள்ளோம். 


கடவுள் நம் மனக்கதவைத் தட்டும் சத்தத்தை கேட்டு திறப்பதற்கு நமக்கு தேவையானது உண்மையான மனமாற்றம். இன்றைய முதல் வாசகத்தில்  கற்றவைகளையும் கேட்டவைகளையும் நினைவு கூர்ந்து  செயல்கள் அனைத்தையும் நிறைவுள்ளதாக்கி மனம் மாற வேண்டுமென சர்த்தை திருச்சபை மக்களுக்கு அறிவுரை வழங்கப்படுவதாக நாம் வாசிக்கிறோம். இவ்வார்த்தைகள் 


இன்றைய காலகட்டதிலும் நமக்கும் மிகப் பொருந்தும். ஏனெனில் நாம் கற்ற மற்றும்  கேட்ட நல்லவைகளை மறந்து தேவையற்ற வழிகளில் செல்வதால் இறைவன் அழைக்கும் ஒலியை நம்மால் கேட்க இயல்வதில்லை. எனவே நாம் மனம் மாற வேண்டும். ஏனெனில் மனமாற்றமே கடவுளைக் கண்டடையவும் அவர் தட்டும் ஒலியைக் கேட்கவும் நமக்கு வழிவகுக்கும்.மீட்பைப் பெற நமக்கு உதவும். 


இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் சக்கேயு மனம் மாறி இயேசுவுக்காய் தன் வீட்டின் கதவுகளை மட்டும் அல்ல தன் இதயக் கதவுகளைத் திறந்தார் . பணம் பதவி மோகம் போன்ற போதைகளில் மூழ்கியவராய் இருந்த சக்கேயு இயேசுவைக் காண ஆர்வம் மிகுந்தவராய் எடுத்த முயற்சி தான் அவருடைய இதயக் கதவுகளை இறைவன் தட்டுவதை உணர்த்தியது. இன்று இவ்வீட்டில் நான் தங்க வேண்டும் என்று இயேசு கூறிய வார்த்தைகளால் முழுவதும் மனம் மாறி கடவுள் அருளிய மீட்பை தனதாக்கிக் கொண்டார் சக்கேயு.


நாமும் அவரைப்போல கடவுள் நம் உள்ளக்கதவைத் தட்டும் சத்தத்தைக் கேட்க முயற்சி எடுப்போம். அவர் நம் உள்ளத்தில் வந்து தங்கிவிட்டால் நம் வாழ்வுப் பாதை மாறும்.நாமும் மீட்புக்கு சொந்தக்காரர்கள் ஆகலாம். இறைவனுக்காய் இதயத்தைத் திறக்கத் தயாரா?


 இறைவேண்டல் 

அன்பு இறைவா! எம் இதயக் கதவுகளை நீர் விடாது தட்டிக் கொண்டிருப்பதை உணர்ந்து மனம் மாறி உமக்காய் கதவுகளைத் திறந்திட எம்மை வழிநடத்தும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


† இன்றைய புனிதர் †

(நவம்பர் 15)
✠ புனிதர் ஆல்பர்டஸ் மேக்னஸ் ✠
(St. Albertus Magnus)

ஆயர், மறைவல்லுநர்:
(Bishop, and Doctor of the Church)

பிறப்பு: கி.பி. 1193
லாவீஞ்சன், பவேரியா
(Lauingen, Duchy of Bavaria)

இறப்பு: நவம்பர் 15, 1280
கொலோன், தூய ரோமப் பேரரசு
(Cologne, Holy Roman Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: கி.பி. 1622
திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி
(Pope Gregory XV)

புனிதர் பட்டம்: கி.பி. 1931
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
(Pope Pius XI)

முக்கிய திருத்தலங்கள்:
புனித ஆண்ட்ரூஸ் தேவாலயம், கொலோன், ஜெர்மனி
(St. Andrew's Church, Cologne, Germany)

நினைவுத் திருவிழா: நவம்பர் 15

பாதுகாவல்:
சின்சினாட்டி (Cincinnati), ஓஹியோ (Ohio), உலக இளையோர் நாள், இயற்கை அறிவியல், மருத்துவ தொழில்நுட்ப வல்லுனர்கள், தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள், மாணவர்கள்

“புனிதர் பெரிய ஆல்பர்ட்” (Saint Albert the Great) என்றும், “புனிதர் ஆல்பர்டஸ் மேக்னஸ்” (St. Albertus Magnus) என்றும், “புனிதர் கொலோனின் ஆல்பெர்ட்” (St. Albert of Cologne) என்றும் அழைக்கப்படும் இவர், ஒரு கத்தோலிக்க புனிதர் ஆவார். இவர் “ஜெர்மனிய டொமினிக்கன் சபைத் துறவியும்” (German Dominican friar) ஆயரும் ஆவார். இவர் தம் வாழ்நாளில் 'அகற்பொது முனைவர்' என்றும் 'புலவாண்மை முனைவர்' என்றும் பாராட்டப்பட்டவர். வாழ்நாள் இறுதியில் தன்பெயருக்கு முன் புனித என்பது மட்டுமன்றி பெரியவர் என்ற பெருமையையும் பெற்றவர்.

“ஜேம்ஸ் ஏ. வீஷிபிள்” (James A. Weisheipl) மற்றும் “ஜோச்சிம் ஆர்.சோடர்” (Joachim R. Söder) போன்ற அறிஞர்கள், இவரை ஜெர்மனியின் “மத்தியகாலத்தின்” (Middle Ages) மாபெரும் தத்துவஞானியாகவும், இறையியலாளராகவும் புகழ்கின்றனர். கத்தோலிக்கத் திருச்சபை இவரை “திருச்சபை (மறையியல்) முனைவராக” தகைமையீந்து பெருமதிப்பு தந்தது. இதுபோல திருச்சபையின் தகைமை பெற்றவர் 36 பேரே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலக அளவில் மாபெரும் மேதையாக அறியப்பட்ட இவரின் ஆர்வம் அறிவியல், மெய்யியல், இறையியல் என பரந்து விரிந்ததாய் இருந்தது. “ஆர்சனிக்” (Arsenic) என்ற இரசாயன தனிமத்தை கண்டுபிடித்தவர் இவரேயாவார். அத்துடன் “சில்வர் நைட்ரேட்” (Silver nitrate) உள்ளிட்ட ஒளியுணர் கனிம கலவையையும் ஆராய்ந்தவர் இவரே.

கிறிஸ்தவ நம்பிக்கை பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல என்றும், இவ்வுலகப் படைப்பானது, இறைவனால் எழுதப்பட்ட ஒரு புத்தகமாக நோக்கப்பட்டு, வெவ்வேறு அறிவியல்களால் அதனதன் வகையில் வாசிக்கப்பட்டு புரிந்துகொள்ளப்பட முடியும் என்பதனை இப்புனிதர் வெளிப்படுத்துகிறார். அரிஸ்டாட்டில் குறித்த இப்புனிதரின் எழுத்துக்கள் மெய்யியல் மற்றும் இறையியல் எனும் அறிவியல்களுக்கிடையேயான வேறுபாடுகளைக் காட்டுகின்றது.

வாழ்க்கை வரலாறு:
ஆல்பெர்ட், கி.பி. 1280ம் ஆண்டில் மரித்தபோது இவருக்கு 80 வயது எனக் கூறப்படுவதால், இவர் கி.பி. 1200க்கு முன்பே பிறந்துள்ளார். ஒன்றுக்கும் மேற்பட்ட தக்க சான்றுகளின்படி, இறக்கும்போது 87 வயது முடிந்திருந்ததாக அறியப்படுவதால், இவர் கி.பி. 1193ல் பிறந்ததாகப் பொதுவாக ஏற்கப்படுகிறது. ஆல்பெர்ட், (தற்போது, “பவரியா” (Bavaria) எனப்படும்) “லாவீஞ்சனில்” (Lauingen) பிறந்திருக்கலாம். ஏனெனில் இவர் தன்னை “லாவீஞ்சனின்” ஆல்பெர்ட் என அழைத்துக்கொண்டார். அல்லது அது வெறுமனே அவர் குடும்பப் பெயராகவும் இருக்கலாம்.

ஆல்பர்ட், பெரும்பாலும் “பதுவை” (University of Padua) பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். “ருடொல்ஃப் டி நொவமகியா” (Rudolph de Novamagia) எனும் சரித்திர ஆசிரியரின் கூற்றின்படி, பிற்காலத்தில், ஆல்பர்ட்டுக்கு அர்ச்சிஷ்ட கன்னி மரியாள் திருக்காட்சியளித்ததாக கூறப்படுகிறது. அன்னையின் உந்துதல் மற்றும் திருவுளப்படி, ஆல்பர்ட், கி.பி. 1223 அல்லது 1229ம் ஆண்டில் டொமினிக்கன் (Dominican Order) சபையின் உறுப்பினராகி, “போலோக்னா” (Bologna) மற்றும் பிற இடங்களில் இறையியல் கற்றார்.

இறையியலில் மாபெரும் தேர்ச்சி பெற்ற இவர், பாரீசில் தன் படிப்பை முடித்தபின் “கொலோனில்” (Cologne) கல்வி கற்பிக்கும் பணியைத் துவக்கினார். இவர், கற்பிப்பதற்கும் எழுதுவதற்கும் என திரும்பினார். இவர், “ரீகன்ஸ்பர்க்” (Regensburg), “ஃப்ரேய்பர்க்” (Freiburg), “ஸ்ட்ராஸ்பௌர்க்” (Strasbourg) மற்றும் “ஹில்ட்ஷெய்ம்” (Hildesheim) ஆகிய இடங்களிலுள்ள பல பல்கலை கழகங்களில் இறையியல் பேராசிரியராக பணிபுரிந்தார். இவரது வகுப்புகள் மிகவும் சிறந்த முறையில் இருந்ததால், மிக அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் இவரது வகுப்புகளுக்கு வந்தனர். இதனால், இவரது பாடங்களை வகுப்புகளில் நடத்த முடியாமல், திறந்த வெளிகளில் நடத்தினார்.

கி.பி. 1254ம் ஆண்டு, ஆல்பர்ட் டொமினிக்கன் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். பெரும் கவனிப்பு மற்றும் செயல்திறனுடன் அலுவலக கடமைகளை நிறைவேற்றினார்.

கி.பி. 1260ம் ஆண்டில், திருத்தந்தை “நான்காம் அலெக்சாண்டர்” (Pope Alexander IV) இவரை ஜெர்மனியின் “பவரியாவிலுள்ள” (Bavaria) “ரீகன்ஸ்பர்க்” (Regensburg) ஆயராக நியமித்தார். மூன்று வருடங்களின் பின்னர், அவர் அந்த பதவியிலிருந்து விலகினார். 1263ம் ஆண்டு, இவரை ஆயர் பதவியிலிருந்து விலக அனுமதித்த திருத்தந்தை “நான்காம் அர்பன்” (Pope Urban IV), இவரை ஜெர்மன் மொழி பேசும் நாடுகளில் “எட்டாவது சிலுவைப் போரை” (Eighth Crusade) போதிக்குமாறு கூறினார்.

கி.பி. 1278ம் ஆண்டு, இவரது உடல் ஆரோக்கியம் சீர்குலைந்து போன பிறகு, கி.பி. 1280ம் ஆண்டு, நவம்பர் மாதம், 15ம் நாள், ஆல்பர்ட், மரித்துப்போனார்.

கி.பி. 1931ம் ஆண்டு, திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் (Pope Pius XI), இவரை புனிதராகவும், மறைவல்லுனராகவும் உயர்த்தினார். 1941ம் ஆண்டு, திருத்தந்தை “பன்னிரண்டாம் பயஸ்” (Pope Pius XII), இவரை இயற்கை சார்ந்த அறிவியல் விஞ்ஞானிகளின் பாதுகாவலராக அறிவித்தார்.

நன்றி : திரு.புஷ்பராஜா


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...